பண்டைய தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. போரில் இறந்த வீரனுக்கு மட்டுமல்லாது, தன் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிக்கும் கூட நடுகற்கள் நடப்பட்ட செய்தி வியப்பை தருகின்றது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே இருப்பது கண்டறிப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நடுகல் வரலாறு:
பண்டைய தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் நடுகல் பற்றிய செய்திகள் விரவிக் கிடப்பதை காண முடிகின்றது.
திருக்குறளில்,
“என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்”
என போரில் இறந்த பகைவர் கல்லாகி நின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
சேரமான் பெருமாள் நாயனார்,
பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் - என்று குறிப்பிடுகின்றார்.
அகநானூற்றில்,
நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி
அதர் தோறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
என்றும்,
தொல்காப்பியத்தில் உருவம் மற்றும் எழுத்துக்கள் பற்றி குறிப்பிடவில்லை. நடுகல் குறித்தும் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.
காட்சி, கால் கோல், நீர்ப்படை நடுதல், பெரும்படை, வாழ்த்தல் எனப்படுகின்றது.
குறிப்பிட்ட இனத்தார் என்றில்லாமல் பல்வேறு சாதியினருக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. அவ்வாறே பல்வேறு சாதிமக்களும் தற்போதும் நடுகற்களை வழிபட்டு வருகின்றனர். இன்றைக்கு கிராமங்களில் வேடியப்பன், மொசவேடியப்பன், நெண்டி வேடியப்பன், கிருஷ்ணாரப்பன், சாணாரப்பன், கருப்புராயன் என்ற பெயர்களில் நடுகற்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். அய்யனார், மதுரைவீரன், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்ற சிறு தெய்வங்களும் நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆகும்.
பெண்களுக்கு நடுகல்:
ஆண்களுக்கு மட்டும் என்றில்லாமல் கன்னிகா பரமேஸ்வரி, இரேணுகா தேவி, வஞ்சியம்மன் போன்றோர் பதிவிரதைகளாக இருந்து நடுகல் ஆகியுள்ளனர்.
தலைப்பலி:
தெருப்போரில் பங்கு கொண்ட வீரர்கள் நடுகல் ஆனது போலவே, துர்க்கையம்மன் முன்பு தலையை தானே பலிதந்த வீரர்களும் நடுகற்களாக, நவ கண்ட சிற்பங்களாக ஆயினர்.
நடுகற்கள் ஏற்படுத்த முதன்மையான காரணம் வீரன் சொர்க்கம் செல்வான் என்ற நம்பிக்கையின் பேரிலும் ஏற்படுத்தப்பட்டது. போரில் மாண்ட வீரர்களை, தேவகன்னியர் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிற்பங்கள் நடுகல்லில் இருப்பதைக் காண முடிகின்றது.
நடுகல் பற்றிய தெளிவான செய்திகள் சங்க இலக்கியங்களில் விரவிக் காணப்படுகின்றன. பல்வேறு புலவர் பெருமக்கள் நடுகற்கள் குறித்து பல்வேறு செய்திகளை தந்துள்ளனர். தமிழகத்தில் கண்டறிப்பட்டுள்ள நடுகற்கள் பல்வற்றிலும் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே வட்டெழுத்து முழுமையான வரி வடிவத்தையும் பெற்றதால் 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடுகற்கள் அதிக அளவில் நடப்பட்டிருக்கலாம்.
அகம், புறம், மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் காணப்படும் குறிப்பு கி.மு.4-5ஆம் நூற்றாண்டிகுரிய பொருங்கற்படைச் சின்னங்கள் மெல்ல மெல்ல தன் நிலையில் இருந்து மாறி வீரக்கற்களாக (நடுகல்) உருமாரின என்பதை மிகச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது. இதன் மூலம் சங்க இலக்கியம் பல நூற்றாண்டு கால தமிழரின் வாழ்வியல் நிலையை பதிவு செய்கின்றது.
பெரும்பாலான நடுகற்கள் தொருப்பூசலில் (ஆநிறை கவர்தல்) உயிர்விட்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்க்கும் போது பண்டைய தமிழ்மக்கள் வாழ்க்கை கால்நடை வளர்ப்பு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யப் பயன்பட்டிருப்பதை நோக்க வேண்டியுள்ளது.
சதிக்கல்:
தெருப்போரில் இறந்துபட்ட வீரனின் மனைவியும், கணவன் இறந்தபின் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு தானும் உயிர்விட்டு நடுக்கல்லாய் மாறியதும், கணவன் உயிர்விட்ட உடனே தானும் தீ பாய்ந்து உயிர் விட்டதும் இவர்களுக்கு உறவினர்கள் நடுகல் எடுத்து வணங்கியது பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகின்றது. இவை சதிக்கல் என்றும் வழங்கப்படுகின்றது.
கால்நடைகளை கவரவும், தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்தவும், பெண்ணின் மானத்தைக் காக்கவும், விலங்குகளிடமிருந்து ஊர்மக்களை காக்கவும், தம் அரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தன் கணவனுடன் உயிர் விட்ட மகளிரை போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டன.
போரில் இறந்தவருக்கு நினைவு கற்கள் எடுக்காவிட்டால். தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் என பயந்தனர். எனவே, நீர்நிலைகள், மரத்தடி, இறந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்பினர். தற்போதும் ஒரு சிலர் எழுப்புகின்றனர்.
மனிதர்களுக்கு மட்டுமில்லாது விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடன் இறந்த அல்லது தன் உயிரைக் காக்க இறந்த குதிரை, நாய், யானை, கோழி போன்ற விலங்குகளுக்கு நடுகல் பல இடங்களில் எழுப்பட்டுள்ளதை நன்றி உணர்வின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் குதிரைக்காக எடுக்கப்பட்ட நடுகல் இவ்வாசிரியரால் கண்டறிப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினர். அதற்கேற்ப சடங்குகள் செய்யவும் வழிபடவும் முற்பட்டனர். உலகெங்கும் இப்பழக்கம் உருவாயிற்று. இறந்தவன் ஆன்மா நடுக்கல்லில் வருவதாக நம்பிக்கை ஏற்பட்டது. தொடக்க காலத்தில் நடுகற்களில் எழுத்தோ, உருவமோ இல்லை. தொல்காப்பியர் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடவில்லை. நடுகல்லை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே நீண்டகாலமாக இருப்பதை புறம் 263 பாடலில்,
“தொழுது போகவே கொடுங்கானம் மழை பெய்தலான் குளிரும் என்பான் வண்டு மேம்படுதலாகிய காரியம் கூறினான்,
என கூறப்படுகின்றது. இன்றும் பல ஊர்களில் மழைக்காக வேண்டி நடுக்கற்களுக்கு விழா எடுப்பதை பார்க்கமுடிகின்றது.
வீரர்களுடைய நடுகற்கள் வழிபாடு பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்கள் தோன்ற காரணமாயிற்று.
நடுக்கல் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகளாக சங்ககாலம் முதல் தற்காலம் வரை கீழ்க்கண்ட செய்திகள் பதிவு செய்யப்படுகின்றது.
1. அரசர்களுக்காகவும், நாட்டுக்காகவும் உயிர்விடுதல்.
2. சிற்றரசர்கள் பற்றிய செய்தி
3. சமூக நிலை (சதி, உடன் கட்டை, களப்பலி)
4. மொழி வளர்ச்சி (வட்டெழுத்து மாற்றம்) (வட்டார வழக்கு சொற்கள்)
5. ஓயாத பூசல்கள்
6. கால்நடைகளே பண்டைய மக்களின் செல்வம்
7. காடுகளை அழித்து நாடு செய்தல் (காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்)
8. நன்றி மறவாமை (நாய், கோழி, குதிரை போன்றவற்றிற்கு நடுகல் அமைத்து வழிபாடு)
9. பண்டைய தமிழ்மக்களின் இரும்பின் பயன்(ஆயுதங்கள் உடைய நடுகற்கள்)
10.நம்பிக்கைகள் (படையல் வைத்து வழிபாடு)
மேற்கோள் நூல்கள்:
1) புறநானூறு
2) அகநானூறு
3) தொல்லியல் முனைவர். க.ராஜன்
4) இந்தியத் தொல்லியல் வரலாறு - அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
5) திருக்குறள்
6) தினத்தந்தி நாளிதழ்
ஆ.நந்திவர்மன், தொல்லியல் ஆய்வாளர் மற்றும் தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழனி.
Comments
Post a Comment