முதலில் தோன்றியது நீரா? நிலமா?--இலக்கிய ரசம்.பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.

நெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.

நிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.

நிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில், தலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன! அவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன! தலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன! என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,

இது மற்று எவனோ-தோழி! முது நீர்ப்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல்
இணர் வீழ் புன்னை எக்கர் நீழல்
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்
கண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்
கேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்
மணப்பின் மாண்நலம் எய்தி
தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே?

குறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)

காட்சிக் கலப்பினால் கண்களும், கேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன. 

காண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.

பாடல் வழி அறியாலகும் செய்திகள்:

1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.

2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது? என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.

முனைவர் இரா.குணசீலன்Comments