நீராடல் குறித்த சங்ககாலக் குறிப்புகள்-கட்டுரை.



நீராடல் :

உடல் தூய்மைக்கு உதவும் இன்றியமையாத நற்பழக்கம் ‘நீராடல்’. ‘கூழானாலும் குளித்துக் குடி’ எனும் மூதுரை நீராடலின் இன்றியமையாமையை வலியுறுத்தும். அதிலும் ஆறு, கடல் அருவிகளில் நீராடல் என்பது இயற்கையோடு ஒன்றிய நீராடல் எனலாம். மேனாடுகளில் வெப்பக் குளியல் (Sun Bath). ஆவிக்குளியல் (Steam Bath), மூலிகைக் குளியல் (Herbal Bath) என்று பல்வேறு வகைக் குளியல்கள் நலவாழ்வு நோக்கில் உருவானவை. எண்ணெய் நீராடல், அருவி நீராடல், கடல் நீராடல் ஆகியவை இரத்த ஓட்டத்திற்குப் பெரிதும் உதவுகின்றன என்னும் உண்மையை அறிவியலார் இன்று உணர்ந்து வருகின்றனர். இந்த நற்பழக்கம் பழந்தமிழர் வாழ்வில் இயல்பாகவே இணைந்திருப்பதைப் பின்வரும் சங்க இலக்கியச் சான்றுகள் புலப்படுத்தும்.

நதி நீராடல்:

வைகை நதியில் புதுப்புனல் ஆடிய மகளிர் கூந்தலுக்கு அகில் புகையூட்டி ஈரம் புலர்த்தினர். பல்வகைப் பொருட்களைக் கொண்டு நீராடிய மகளிர் உடலில் வீசிய மணம் நாற்காத தூரம் வீசியதாம் ‘எருமண்’ கொண்டு கூந்தலின் அழுக்கைப் போக்கினர். நதி நீராடல் பற்றிய பல்வகைக் குறிப்புகளைப் பரிபாடல் அழகுற விளக்குகின்றது.

எண்ணெய் நீராடல்:

எண்ணெய் நீராடல் சங்க காலம் முதலே நிலவி வருவதை நற்றிணைச் செய்தி உறுதிப்படுத்தும். மகப்பேறுற்ற மகளிர் வெண்கடுகை அப்பி எண்ணெய் தேய்த்து நீராடுவர் என்பதை நற்றிணை குறிப்பிடுகின்றது. அக்கால மகளிர் நிறைய எண்ணெயினைத் தலையில் பெய்து, குளிர்ந்த மணமுள்ள சந்தனத்தைப் பூசி முழுகுவர். பின் ஈரம் புலர, வயிரம் பாய்ந்த அகிலின் புகையை ஊட்டி, விரலால் குழலை அளைந்து சிக்கு விடுவித்தனர். வேறு சில மகளிர் எண்ணெய் முழுக்கின்போது அரப்புப் பொடியிட்டுத் தேய்த்துக் குளிப்பர். பல்வேறு மணப்பொருட்களை நீராடும்போது பயன்படுத்தினர். இதுவே பிற்காலத்து ‘வாசனைத் தைலங்கள்’ சேர்ந்த ‘தைல முழுக்கிற்குத்’ தூண்டுதலாக அமைந்தது.

கடல் நீராடல்:

கடல் நீராடல் என்பது ஒரு விளையாட்டாகவே அக்காலத்தில் நிலவியது. கடல் நீராடும் பரதவ மகளிர் பனை நுங்கின் நீரையும், கருப்பஞ்சாற்றையும் கலந்து பருகிக் கடலில் பாய்ந்து நீராடுவாராம். விளையாட்டுக் காலங்களில் உடல் சோர்வடையாமல் இருக்க இக்காலத்தும் விளையாட்டு வீரர்கள் தேன் குளுகோஸ் அருந்துவதைக் காணலாம். இப்பழக்கத்தினை நினைவூட்டுவது போல் அக்காலப் பரதவ மகளிர் கடல் நீராடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

காதல் நோய் தீர கான்யாறு நீராடல்:

மரம் செடி கொடிகள் நிரம்பிய காட்டின்கண் மழை பெய்தமையால் பெருகிவரும் கான்யாற்று நீரில் குளித்தால் அது பல்வேறு மருந்துச் செடிகளின் சேர்க்கை உடையதாதலால் அது பிணி போக்கும் தன்மை உடையது என்பதை அக்கால மக்கள் நம்பினர். தலைமகன் ஒருவன் தலைவியைப் பிரிந்து செல்ல அதன் காரணமாகத் தலைவி வாடி நடுக்கமுற்றிருந்தாள். இதனைக் கண்ட நற்றாய் தோழியிடம் “ஆகாயத்தில் மிக உயர்ந்த பெரிய மலைப் பக்கத்தில் மிக்க இடியோசையுடைய மேகம் பெய்யத் தொடங்கி நள்ளிரவில் மிக்க மழை பொழிந்ததினாலே கற்கள் நிரம்பிய காட்டின்கண் ஓடும்யாற்றிலே மரங்கள் காய்ந்த சருகுகளோடு கழித்தனவாகிய முகிழ்ந்த பூங்கொத்துக்களையும் அடித்துக் கொண்டு வருகின்ற புதிய இனிய நீரானது இவளுக்குற்ற நோயைத் தீர்க்கும் அருமருந்தாகும். அதனைக் குளிர்ச்சி பெறப் பருகி அங்குள்ள காட்சிகளைக் கண்ணால் நோக்கி ஆடப்பெற்றால் இவள் மெய்யின் நடுக்கம் தீரும்” என்கிறாள்.

இதிலிருந்து பலவகை நோய்க்குக் குறிப்பாக, ‘மெய்யின் நடுக்கம்’ போன்றவற்றுக்குக் ‘கான்யாற்று நீராடல்’, அக்காலத்து அருமருந்தாக அமைந்திருந்ததை அறியலாம். இன்றும் நரம்புத் தொடர்பான நோய்களுக்குக் குற்றாலம் போன்ற கான்யாற்று அருவிகளில் குளிக்கும் பழக்கம் அருமருந்தாகக் கருதப்படுவது ஈண்டு ஒப்பு குறிப்பிடும் “நீராடும் மருத்துவ நெறி”க்கு ஏற்ப அமையும் சங்க காலக் ‘கான்யாற்று நீராடல்’ பழக்கம் அரிய மருத்துவப் பயனுடையது.

கூந்தலின் மணப் பொருட்களைப் பூசுதல்:

பழந்தமிழ் மகளிர் கூந்தலைப் போற்றிய திறம் பெரிதும் வியப்புக்குரியதாகும். ‘கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா? என்பது பற்றிய அரிய விவாதம் இலக்கியத்தில் உண்டு. மகளிர் கூந்தல் மணம் செயற்கையே என்பது சங்கப் பாடல்கள் தரும் கருத்தாகும். சங்க இலக்கியப் பாடல்கள் பல கூந்தல் பாதுகாப்புப் பற்றிய பல குறிப்புகளைத் தருகின்றன. இடைப்பெண்டிர், பாலையும் வெண்ணையையும் தலையில் தடவிக் கொண்டனர். அகிலின் நெய்யைக் கலந்து பல காலம் தலைக்குத் தேய்த்து வந்தால் முடி கருமை நிறம் கொண்டதாக விளங்கும். எண்ணெய் தடவி வருவதால் நீண்ட முடி, சுருள் முடியாக மாறும். விறலியரின் கூந்தல் பாதிரி மணம் கமழும். மகளிர் மங்கள நீராடிய பின் புகையூட்டி உலர்த்தி, மயிர்ச் சந்தனம் பூசி மணம் கமழும் கூந்தலுடன் விளங்கிய காட்சியை அகநானூறு விளக்கும்.

கூந்தலுக்கென மதுரை நகர மகளிர் பயன்படுத்திய மணப்பொருட்களைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது. வையை நதியில் நீராடிய மகளிர் குங்குமச் சேறு, அகிற் சாந்து, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றைச் சாத்தம்மியிலிட்டுத் தீ நிறம் பெற அரைத்துக் கூந்தலுக்குப் பூசி நீராடினர். நீல நிறக் கூந்தலில் பத்து வகையான துவர்களைத் தேய்த்து நீராடினர். நீராடிய பின் வெட்டி வேராலும், விலாமிச்சை வேராலும் தொடுத்த பன்மலர் இலையை அணிவர். ‘நாறிருங் கூந்தல்’, அம்மென் கூந்தல்’, ‘அறல் போற் கூந்தல்’ எனப் பலவகையாகக் கூந்தலைப் போற்றும் புலவர்களின் உட்கருத்து, அக்கால மகளிர் கூந்தலைப் பாதுகாத்த முறைகளை எதிரொலிப்பதாகும்.

விளையாட்டுகள்:

கட்டுடல், திண்தோள் போன்ற உடல் அழகைக் குறிக்கும் சொற்கள் சத்துணவால் மட்டும் அமைவதில்லை. உடம்பின் சதை, எலும்பு போன்றவற்றை ஒழுங்குபடுத்தி அழகூட்டும் விளையாட்டுகளாலும் அமைகின்றன. விளையாட்டுகள் என்பவை பொழுது போக்கிற்காக மட்டுமல்ல; உடல் பயிற்சிக்காகவும். ஏற்படுத்தப்பட்டவை ஆகும். பழந்தமிழர் வாழ்வில் விளையாட்டு என்பது அன்றாட வாழ்வோடு பிணைந்து விட்ட பழக்கமாக விளங்கி வந்துள்ளது. மகளிரும், ஆடவரும் அவரவர் உடல் அமைப்புக்கேற்றவாறு விளையாட்டுக்களை மேற்கொண்டு பொழுதை இனிமையாகக் கழித்ததுடன் உடம்பையும் ஒழுங்கு முறையாக வளர்த்துக் கொண்டனர்.

மகளிர் விளையாட்டு:

‘ஓர் ஆயம்’ எனப்படும் விளையாட்டைச் சிறுமியர் ஆடினர். பூந்தாதுக்களைக் கொண்டு பாளை செய்து ஆடுதலே ‘ஓர் ஆயம்’ எனப்பட்டது. நெய்தல் நில மகளிர் உப்பங்கழிக்கு அருகில் மலர்களைப் பறித்து விளையாடினர். கடல் அலையின்கண் நீராடி மகிழ்ந்தனர். பனை நாரினாலே திரித்த கயிற்றை மரக்கிளையில் பிணித்துத் தொங்கிவிட்டு ஊஞ்சலில் ஆடினர். கைப்பந்தும் கால்பந்தும் ஆடினர். வரிப்பந்து ஆடினர். நூலால் வரிந்து பனையப்பட்ட பந்தை எறிந்தும் அடித்தும் விளையாடினர். குறிஞ்சி நில மகளிர் சுனையில் நீராடினர். மலை அருவிகளில் விளையாடினர்.

ஆடவர் விளையாட்டு:

பாலை நிலச் சிறுவர் நெல்லிக்காய்களை வட்டாகக் கொண்டு பாண்டி ஆடினர். தேர் உருட்டி விளையாடினர். செல்வச் சிறுவர் பெரிய மணிகள் பதித்த சிறிய தேரில் இருக்க, சேடியர் அத்தேரை இழுத்துச் சென்றனர். ஏழைச் சிறுவர் பனங்குரும்பையை கொடியாற்கட்டி இழுத்து விளையாடினர். மதுரை மாநகரில் ஞாயிறு மறைந்த பின்பு முதல் சாமத்தில் வீரர் சிலர் போர்ப் பயிற்சி கொண்ட யானையைத் தம்மைத் தொடர்ந்து வந்து பிடிக்கும் படி ஏவி அது தொடர்ந்த போது, அதன் போக்கைத் தடுக்கத் தம் மடியிலிருந்த கப்பணங்களைத் தரையில் சிதறி விட்டனர். பரதவர் முழுமதி நாளில் மகளிருடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.


(நன்றி: மூலிகை மணி)



Comments