துப்பாக்கி விழுங்கிய நரிகள்-கவிதை.மக்களின்
உணர்வுகளையும்
உரிமைகளையும்
உயிர்களையும்
பாராளுமன்றத்தில்
குழிதோண்டி புதைத்த பயத்தினால்
பாராளுமன்ற உறுப்பினர்
இம்முறை ஊருக்கு வரும்போது
துப்பாக்கி விழுங்கிய நரிகளை
கூட்டி வந்தார்

அவரது நரிகள்
அமெரிக்க இராணுவம் போல
ஊரெல்லாம் ஓடின

முதலில் ஒரு எருமைமாடு
நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது
நரிகள்
தாமரை மலர்களால் தேய்த்து
எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின

வாய்பார்த்திருந்த கழுதையையும்
நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின

ஊர்நாய்களுக்கு
குறிஞ்சியின் உரியை கற்றுக் கொடுத்தன

ஆடுகளுடன் கட்டிப்பிடித்தவாறு
பகல்தூக்கம் போட்டன
மாடுகளுக்கு
புண்ணாக்கு ஊட்டி விட்டன
ரௌடிக் காளைகளுக்கு
மதநீர் கொடுத்தன

நரிகளை எதிர்த்து நின்ற
சேவல்களையும் கோழிகளையும்
இறுதிப்போரில் உயிர்கொன்ற அனுபவத்தினால்
மின்னலென கொல்லல் கதை
சாம்பலாகி முடிந்தாயிற்று

நரியின் குள்ளமாய வலையில்
இன்னுமொருமுறை
ஊர் இடுப்புமுறிந்து விழுந்த போது
பாராளுமன்ற உறுப்பினர்
காரிலிருந்து சிரித்தவாறு இறங்கினார்.

நன்றி : ஈழக்கவி எதுவரைக்காக


http://eathuvarai.net/?p=1023

Comments