வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்!-பத்தி.
செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும்.

நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற கழிவு நீரானது விரயமாகாத வண்ணம் கிணற்றடிக்கு அருகாக ஒரு சிறிய வீட்டுத் தோட்டத்தினை வைத்திருப்பார்கள் எம்மவர்கள். இது இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கிணறு உள்ள வீடுகளில் பொதுவான ஓர் விடயமாகவும் இருக்கும். இந்த வீட்டுத் தோட்டத்தில் வாழை, கத்தரி,வெண்டிக்காய்,பயற்றங்காய், பூசணிக்காய், மரவள்ளி, பச்சைமிளகாய், பசளிக் கீரை ஆகியவற்றினை அதிகளவில் பயிரிடுவார்கள். வாழை மரம் குலை தள்ளியவுடன் பறவைகள் கொத்திடாதவாறு அடிக்கடி பார்த்துப் பார்த்து வாழையினைப் பரமாரிப்பார்கள்.

வாழைக் குலையானது இயற்கையாகவே பழுக்கும் வரை காத்திருந்து வெட்டுவார்கள் அதிகளவானோர். ஆனால் இன்னும் சிலரோ, செயற்கையான உர வகைகளை இட்டு வாழைக் குலையினைப் பழுக்கச் செய்வார்கள். சுகாதாரப் பரிசோகர்களிடம் அகப்பட்டுக் கொள்ள நேரிடும் என்பதால் செயற்கையான முறையில் வாழைக் குலையினைப் பழுக்க வைக்க அதிகளவானோர் விரும்புவதில்லை. இயற்கையான முறையில் பழுக்க வைப்பது தொடர்பில் இரண்டு முறைகளைக் கையாள்வார்கள்.ஒன்று வாழைக் குலையானது முற்றி உண்பதற்கு ஏற்ற பருவத்தினை அடைந்ததும், உடனடியாக நிலத்தில் ஓர் கிடங்கினை வெட்டி, அந்தக் கிடங்கினுள் வாழைக் குலையினை போட்டு, வாழை மடல் போன்றவற்றால் சுற்றி மூடி விடுவார்கள்.பின்னர் கிடங்கின் ஓரத்தில் சாம்பிராணிக் குச்சிகள் சிலவற்றினை கொழுத்தி விடுவார்கள்.

இவ்வாறு சாம்பிராணிக் குச்சிகள் கொளுத்துவதற்கான காரணம், வாழைக் குலையானது பழுத்து வரும் வேளையில் வாழைப் பழத்துடன் சேர்ந்து கம கம என்ற சாம்பிராணித்துகள் வாசமும் மூக்கினைக் கவரும் வண்ணம் இருப்பதற்காகவே. ஊர்களில், கிராமங்களில் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து கலியாண வீடுகள் நடை பெறுகின்றது என்றால்; கலியாணத்திற்கு நான்கு, ஐந்து நாட்களுக்கு முன்பதாக வாழைத் தோட்டத்திற்குச் சென்று உழவு இயந்திரத்திலோ அல்லது லாண்ட் மாஸ்டரிலோ வாழைக் குலையினை ஏற்றி வந்து இவ்வாறான முறையில் பழுக்க வைப்பார்கள். இதே போல இன்னோர் முறை பெரிய இரும்புத் தகரத்தினுள் அல்லது சுத்தம் செய்யப்பட்ட மண்ணெண்ணெய் பரலினுள் வாழைக் குலையினைப் போட்டு வாழை மடல் போன்றவற்றால் மூடி வைத்து சாம்பிராணித்துகள் இட்டுப் பழுக்க வைப்பார்கள்.


முன்பு எல்லாம் கலியாண வீடுகள் நிகழப் போகின்றது என்றால் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட்டங்கள் தொடங்கி விடும். 2004ம் ஆண்டு வரை அதிகளவான திருமணங்கள் வட கிழக்கில் வீட்டுப் பந்தலில் தான் நடை பெற்றன. வீட்டு முற்றத்துப் பந்தலில் திருமணம் நிகழ்வதாயின்; பெண்கள் கூட்டத்தினர் திருமணப் பந்திக்குத் தேவையான பலகாரங்களை மும்முரமாகச் சுட்டுக் கொண்டிருப்பார்கள்.ஆண்கள் கூட்டத்தினர் கல கலப்புடன், சந்தோசக் களையில் வெளி அலங்கார வேலைகளைச் செய்யத் தொடங்கிடுவார்கள்.லான்ட் மாஸ்டர் இல்லையென்றால் உழவு இயந்திரத்தில் சென்று வாழைக் குலை, வாசலிலே நடுவதற்கு தேவையான வாழை மரம், மற்றும் சோடணைப் பொருட்களைப் பெற்று வருவதற்கு இளைஞர் கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு செல்லும். இன்றளவில் நகர மயமாக்கலின் விளைவினால் திருமண மண்டபங்களில் திருமண விழாக்கள் இடம் பெறுவதால் இந்தக் கல கலப்பெல்லாம் எம்மை விட்டுப் பறந்தோடிப் போய் விட்டது.

வாழைக் குலையினை ஏன் மூடி வைத்து பழுக்க வைக்கிறார்கள் என்பதற்கான விஞ்ஞான ரீதியிலான விளக்கம் எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டங்கள் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளலாம்.
ஒரு வேளை வெய்யில் படாம மூடி வைத்தால் வாழைக் குலை பழுத்திடும் என்பதாலோ என நினைக்கிறேன். சரியாக தெரியவில்லை.

மீண்டும் மற்றுமோர் பதிவினூடாக ஈழவயலினூடே உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை,
உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்வது;
நேசமுடன்,

செ.நிரூபன்.Comments