வானத்தில் பறக்கும் வடமராட்சி வேலிகள்!-பத்தி.யாழ்ப்பாண சாம்ராஜ்ஜியத்தின் மிக முக்கிய கட்டமைப்பு பிரதேசங்களாகக் காணப்பட்ட இடங்களில் வடமராட்சியும் ஒன்றாகும். பல வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டுள்ள இப் பிரதேசமானது இன்றும் அதன் பெயரைக் கேட்டாலே அகில உலகெங்கும் வாழ்வோரும் விழி நிமிர்த்திப் பார்க்கும் வண்ணம் தன்னகத்தே சிறப்பினைக் கொண்டுள்ளது.இங்கே பருவக் காற்றானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீச ஆரம்பித்தாலே போதும். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் கொண்டாட்டம் தான் அதிலும் தைமாதம் தொடங்கினாலே போதும் இலங்கை வான்படை உலங்குவானூர்திகளே எமது வான்பரப்புக்குள் உள் நுழைய அஞ்சுவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? இங்கு பட்டக் காலம் ஆரம்பித்து விடும். சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதற்கு இறங்கி விடுவார்கள். 


இங்கு விடப்படும் பட்டங்களின வகைகளின் பெயரைக் கேட்டால் உங்களுக்குச் சில வேளை சிரிப்பு வரலாம். உதாரணத்திற்கு பிராந்து/ பிராந்தன் (பருந்து), கொக்கு, வௌவால், பாராத்தை,படலம்/ படலன், வட்டாக்கொடி,தாட்டான்,பாம்புப் பட்டம்/ பாம்பன் பட்டம், மீன் பட்டம், மணிக் கூட்டுப் பட்டம், பெட்டிப் பட்டம், சாணை, எட்டு மூலைப் பட்டம், ஆள் பட்டம், என பட்டங்களின் வகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

அது மட்டமல்ல பட்டத்திற்கு பயன்படும் நூல் வகைகளும் பலவாறு வித்தியாசப்படும். உதாரணத்திற்கு தையல் நூலில் இருந்து தங்கூசி நூல்,நைலோன் நூல்,கொர்லோன் நூல்/ ஈர்க்குப் பிரி இழை, என பல்வேறு பட்ட நூல்களைப்பயன்படுத்துவார்கள். தென்னோலை ஈர்க்கில் இருந்தும் மூங்கில், கமுகு (பாக்கு மரம்) மற்றும் பனை மட்டை போன்றவற்றிலிருந்தும் எடுக்கப்படும் பொருட்களே பட்டம் கட்டுமானத்திற்குப் பயன்படுகிறது.

அத்துடன் பயன்படுத்தும் அத்தனை துண்டங்களிலும் அளவுப் பிரமாணம் இருக்க வேண்டும். பட்டங்கள் கட்டுவதும் கிட்டத்தட்ட விமானப் பொறியியல் போல மிக நுணுக்கமாக கட்ட வேண்டியிருக்கும். இவையெல்லாம் பட்டம் பற்றிய செய் முறைகள் மட்டுமே. அதற்கான பொருட்களைப் பெறுவதானால் அது பெரும் பாடாகும். ஈர்க்குத் தேவையானால் களவாகத் தான் தென்னை மரங்களில் ஏறி ஓலை வெட்ட வேண்டும். எத்தனை நாளைக்குத் தான் வீட்டு விளக்குமாறில் இருந்து களவாக முறித்துத் தப்புவது.


மூங்கில் வெட்டுவதானால் பொலிஸ் அனுமதி வேண்டும். அதை களவாக வெட்டுவதற்காக வீட்டுக்காரனை ஏமாற்றி போதாத குறைக்கு பொலிசையும் ஏமாற்றி கொண்டு வந்து பிளந்து காய வைத்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதை விட மிகவும் சிரமமானது கமுகம் தடி பெறுவது. அதற்காக ஒரு பாக்கு மரத்தை வெட்ட வேண்டியிருக்கும். ஆனால் வெட்டப் பட்ட மரத்தை காய வைத்து எடுப்பதென்றால் அடுத்த தைப்பொங்கல் வந்துவிடும். அதனால் ஒரு பெரும் திட்டத்தை கையாளுவோம். திருவெம்பாவைக் காலங்களில் யாருடைய வேலிகளில் கமுகம் தடி இருக்கிறதோ அவரது வீட்டின் முன்னால் காலை 3 மணிக்கே எமது சங்கூதல், சேமக்கலம் அடித்தல் ஆரம்பமாகும்.

ஆனால் அவர்கள் எழும்பி விட்டுப் படுத்துவிடுவார்கள். மீண்டும் ஒரு 4 மணி போல வந்து அடிப்போம்.ஆனால் இம் முறை ஆட்களை திசை திருப்புவதற்காக வேறு சங்கும் வேறு சேமக்கலமும் அடிப்போம். இது 3 நாள் தொடரும் 4 ம் நாள் 3 மணிக்கு ஊத மாட்டோம் அந்த அன்று அவர்கள் வேலி வெறிச்சோடிவிடும். எம்மைக் கேட்டால் நாங்கள் இன்று உங்கள் வீட்டுப் பக்கம் வரவில்லை என்போம். அதன் பின் 4 மணிக்கு ஊதுபவர்கள் யாரேன தேடுதல் ஆரம்பமாகும். அந்த நாளன்று பிற்பகல் அவர்களது வேலி வானத்தில் நிற்கும். ஹே...ஹே..

இப்போது அநேக வீடுகள் மதில்களாகி விட்டதால் அதிகளவானோர் பனை மட்டைகளையே நாடுகின்றோம். இந்த இரவு நேரத்தில் கூட விசைத் தடிகளை (விண் கூவுதல்) ஏந்திக் கொண்டு காது கிழிக்கும் ஓசையுடன் மட்டுமல்லாது மின் குமிழ்களையும் தாங்கிக் கொண்டு பட்டங்கள் வானை அலங்கரித்திருக்கிறது. எனது பட்டத்தையும் கண்காணிக்க வேண்டும் அதனால் சென்று வருகிறேன் நண்பர்களே.

நன்றி : http://www.eelavayal.com/2011/12/blog-post_27.html

Comments