கயமூழ்கு மகளிர் கண்கள்-இலக்கிய ரசம்.



தலைவன் தன்னைவிட பரத்தையரையே பெரிதும் விரும்புகிறான். இதைத் தோழிக்குத் தெரியக்கூடாது என்று மனதுக்குள்ளே மறைக்கிறாள் தலைவி.

தலைவனோடு ஊடல்கொள்ள தலைவிக்கு இது போலப் பல காரணங்கள் இருந்தாலும், அவற்றைத் தன் மனதில் கொள்ளாமல் தோழி வாயிலாக வந்தமை ஏற்றுத் தலைவனின் தவறை மறந்தாள் மறைத்தாள்.

உப்பங்கழியில் நெய்தல் மலர்கள் மலர்ந்துள்ளன. அம்மலர்களின் காம்பு இலைகளுக்கு மேல் உயரமாக வளர்ந்துள்ளது. அலைபெருக்கெடுத்து வரும்போதெல்லாம், நெய்தல் மலர்கள் நீருள் மறைந்து மறைந்து தோன்றுகின்றன. இக்காட்சி, குளத்திலே குளிக்கும் போது நீருள் மூழ்கி மூழ்கி எழும் பெண்களின் கண்களைப் போலவே காட்சியளிக்கின்றன.

கண்களல்லாத நெய்தல் மலரானது, மகளிர் கண்கள் போலக் காட்சி தருகிறது. கண்கள் போலத் தெரியவேண்டிய தலைவிக்குப் பதிலாக இங்கு தலைவனுக்கு பரத்தையரே கண்கள் போலக் காட்சியளிக்கின்றனர்.

கொடியிலும் இல்லாமல், பறித்துச் சூடுவார்தலையிலும் இல்லாமல், காற்றுப்புகாத செப்பில் அடைத்துவைக்கப்பட்டுக் கிடக்கும் மலர் போலத் தலைவியின் தோற்றம் இருந்தது.கொடிய காட்டில் உயர்ந்த மரத்தில் மலர்ந்த மலர் ஒருவரும் சூடாது வாடும். ஆனால் இங்கு கூறப்பட்ட மலர், ஒருவர் சூடுவதற்காகவே பறிக்கப்பட்டு, காற்றுப் புகாமலும், மணம் எங்கும் செல்லாமலும், செப்பில் அடைக்கப்பட்ட மலரே குறிப்பிடப்படுகிறது.

யாயா கியளே மாஅ யோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சா யினளே
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீ னிருங்கழி யோத மல்குதொறும்
கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணந் துறைவன் கொடுமை
நம்மு னாணிக் கரப்பா டும்மே.

குறுந்தொகை 9. கயமனார்.

மருதம் - தோழி கூற்று நீருள் மூழ்கி எழும் மகளிரின் கண்கள் போலவே நெய்தல் மலர் நீருள் தோன்றியது என்ற உவமை எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது.
கயம் (நீர் நிலை) என்ற உவமையே இப்புலவர்பெயர் பெறக் காரணமாக இருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது.

என்னதான் தமக்குள் மனக்குறை இருந்தாலும் தன் உயிர்த்தோழிக்குக் கூடத் தெரியக்கூடாது எனத் தலைவி மறைப்பது இன்றைய மகளிரும் கற்றுக் கொள்ளவேண்டிய வாழக்கைப் பாடமாக இருக்கிறது.

தலைமக்களுக்குள் இருக்கும ஊடலை (கோபம்)த் தீர்க்கும் வாயிலாகத் தோழி திகழ்ந்தாள் என்ற சங்ககால வழக்கம் இப்பாடல்வழியே புலனாகிறது.

முனைவர் இரா.குணசீலன் 



Comments