சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்?-கட்டுரை.



சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன..

பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்?
உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்?

பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது.
தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்…

ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..?

சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று,

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது.

(தலைவியை இயல்பாக ஓரிடத்தல் தலைவன் பார்தலுக்கு இயற்கைப் புணர்ச்சி என்று பெயர்.)

“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை
கான யானை அணங்கி யாஅங்கு
இளையள், முளைவாள் எயிற்றள்
வளையுடைக் கையள் - எம் அணங்கியோளே“

(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)

சிறிய வெண்மையான பாம்பின் குட்டியானது, காட்டு யானையை வருத்தியது போல இளமையுடையவளும், மூங்கில் முளை போன்ற ஒளியுடைய பற்களைக் கொண்டவளும், வளையைக் கையில் அணிந்த ஒருத்தி என்னை வருந்தச் செய்தாள் என்று தலைவன் பாங்கனிடம் கூறுகிறான்.

பாம்பு தோற்றத்தால் அழகிய கோடுகளை உடையதாயினும் செயலால் மிகவும் கொடியது.

பெண் அழகிய தோற்றம் உடையவளாயினும் உயிரைக் கொல்லும் உணர்வுகளைத் தூண்டக்கூடியவள்.

பாம்பு தன் பற்களில் கொண்ட விசத்தன்மையால் அடுத்தவரைத் துன்புறுத்தும்.

பெண் சிரிப்பு என்னும் முறுவல் குறிப்பால் காண்போர் நெஞ்சை வருத்தும் இயல்பினள்.

பாம்பின் குட்டி தீண்டினால் உடலெங்கும் விசம் பரவும்.

பெண்னைப் பார்த்தல், அவள் உடல் தீண்டுதல் ஆகியவற்றால் ஆணின் உடலில் பல மாற்றங்கள் நிகழும். அதனால் பெண்வழிச் சேரலில் ஆண் தன் வாழ்க்கையைத் தொலைக் நேரிடும்.

இவ்வாறு பாம்புக்கும், பெண்ணுக்கும் பல ஒற்றுமைகளைக் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

ஆண் மீது பெண்ணுக்கும், பெண் மீது ஆணுக்கும் இருக்கும் ஈர்ப்பே மனித இனம் வளர்ச்சி பெறக் காரணமாகிறது.

இந்த ஈர்ப்பு மனித இனம் மட்டுமன்றி உயிர்கள் யாவற்றுக்கும் பொதுவானது.

காதல் - அன்பு - ஈர்ப்பு ஆகியவை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாகும்.

இந்த வேதியியல் மாற்றங்களால் ஆணும் பெண்ணும் தன் வாழ்வியல் நெறிகளில் பிறழ்ந்துவிடக்கூடாது என்று பல வழிகளில் நம்முன்னோர் அறிவுறுத்தினர்.

அவ்வடிப்படையில் பெண் மீது கொண்ட ஈடுபாட்டால் ஆண் தன் வாழ்கையைத் தொலைத்துவிடக்கூடாது என்று அறிவுறுத்தவே..

சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று அறிறுத்தினர்.

சீறும் பாம்பு யாரைப் பார்த்துச் சீறினாலும்
தன்னைப் பார்த்துச் சீறுவதாகவே நம்ப வேண்டும்!

சிரிக்கும் பெண் தன்னைப் பார்த்துச் சிரித்தாலும்
ஒரு நொடிப் பொழுது யோசிக்க வேண்டும்……

ஏனென்றால் பாம்பு கடித்தால் உயிர் உடனே போய்விடும்!

பெண் மீது கொண்ட காதலால் உயிர் அடிக்கடி போய்வரும்!

Comments