Skip to main content

கொட்டாவி விட்ட காக்கை!-இலக்கிய ரசம்.அஃறிணை உயிரினங்களை அதிகமாக உற்றுநோக்குபவர்கள் கவிஞர்கள் தான் என்பது என் கருத்து. இதோ ஒரு கவிஞனின் ஒப்பீட்டைப் பாருங்களேன்..

அழகியதொரு கடற்கரைச் சோலை..
ஆங்கே வலிமையான காற்று வீசுகிறது..
அதனால்..

கண்டல் மரத்திலிருந்து பசுமையான காய்கள் நேராகக் கீழிருக்கும் நீர்நிலையில் வளர்ந்திருக்கும் ஆம்பல் மலர்களின் மீது வீழ்கின்றன...

அதனால் ஆம்பலின் அரும்பு சாய்ந்து சிறிய வெண்ணிறக் காக்கை கொட்டாவி விட்டது போல வெண்ணிறமாய் மலர்ந்து நிற்கும்.

என்கிறார்....

இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

பாடல் இதுதான்..


கானற் கண்டல் கழன்று உகு பைங்காய்
நீர் நிற இருங்கழி உட்பட வீழந்தென
உறுகால் தூக்க தூங்கி ஆம்பல்
சிறு வெண் காக்கை ஆவித்தன்ன
வெளிய விரியும் துறைவ! என்றும்
அளிய பெரிய கேண்மை நும்போல்
சால்பு எதிர் கொண்ட செம்மையோரும்
தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ? தேய்கமா தெளிவே!

நற்றிணை – 345
நம்பிகுட்டுவனார்

கூற்று – தெளிவிடை விலங்கியது

சூழல்...

பிரிவிடை ஆற்றாது வருந்திய தலைவியிடம் தலைவன் “விரைவில் மணம் புரிவேன்“ என்று அவள் மனதைத் தெளிவிக்க வருகிறான்.

அப்போது தோழி தலைவனிடம்..
தலைவ! நீ தலைவியைத் தெளிவுறுத்தியது போதும்!
விரைவில் மணம் முடிக்கும் வழியைப் பார் என்கிறாள்.

தலைவனின் மனம் நோகமாலும், தலைவியின் சூழ்நிலையையும் தோழி எடுத்தியம்பும் பாங்கு பாராட்டுதலுக்குரியது.

தோழியின் உரையாடல் நுட்பம்.

தலைவா..
நீ அருளுடையவன்!
பெரிய நட்புடையவன்!
சான்றோர் ஒத்த பண்படையவன்!
உன் பிரிவால் வாடும் தலைவிக்கு உடனடித்தேவை உனது ஆறுதல் மொழியல்ல..
நீ விரைந்து அவளை மணமுடிக்கவேண்டும்! என்பதே..
அதை நீ முதலில் உணர்வாயாக என்கிறாள்.

பாடல் வழியே..

ஆம்பலின் அரும்பு அவிழ்தலை வெண்காக்கை கொட்டாவி விட்டதுபோல என்று பாடிய புலவரின் உவமை நயம் மிகவும் நுட்பமுடையதாகவுள்ளது.
“தெளிவிடை விலங்கியது“ என்னும் அகத்துறை அழகாக விளக்கப்பட்டுள்ளது.

தலைமக்கள் மீது மிகுந்த அன்புடைய தோழி இருவருக்கும் ஏற்பட்ட மனப்போராட்டத்தைப் போக்கி நல்லதொரு திருமண வாழ்க்கைக்கு ஆற்றுப்படுத்தும் பாங்கு நட்பின் சிறந்த அடையாளமாக உள்ளது.

தலைமக்களின் காதலை அலர் (புறம்பேசும்) தூற்றும் ஊர்மக்களின் பழிமொழியால் நாணம் கருதி அமைதிகாக்கும் தலைவி தற்போது வாய்விட்டுப் புலம்புகிறாள் என்னும் அகவாழ்வியலை...

பருவம் அல்லாத காலத்து ஆம்பல் சூழல் காரணமாக
வருந்தி மலரும் என்ற உள்ளுறை வழியே புலவர்
புலப்படுத்திய பாங்கு உளம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

தமிழ்ச் சொல் அறிவோம்:

உகுதல் – உதிர்தல்
ஆவித்தல் – கொட்டாவி விடுதல்
தேய்க – தீர்க
நீடின்று – நெடுங்காலம் 

நன்றி : http://www.gunathamizh.com/2011/11/blog-post_15.html

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…