கடந்த பதிவில் களப்பிரர்கள் பற்றியும், காணாமல் போன மூன்று நூற்றாண்டுகள் பற்றியும் பேசினோம். வரலாற்று ஆசிரியர்களால் இந்த களப்பிரர்கள் என்பவர்கள் யார் என்பது பற்றி பல்வேறு அனுமானங்களும், கருத்துகளும் வழங்கி வருகிறது. அவை பற்றி நாம் இந்தப் பதிவில் மிகவும் விரிவாக தேடலாம்.
களப்பிரர்கள் என்பவர்கள் தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்கள். அவர்கள் தான் பிறகு ஒன்று சேர்ந்து படை திரட்டி தமிழகத்தைக் கைப்பற்றி முன்னூறு வருடங்கள் ஆண்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள்.
ஆனால் இங்கு நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் தொண்டை நாடு என்பது பல்லவர்கள் ஆண்ட பகுதி. அதாவது தற்போதைய காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்று சென்னையை உள்ளடக்கிய பகுதி. களப்பிரர்கள் காலத்தில் பல்லவர்களும் செழிப்பாகவே இருந்தனர், அதனால் தொண்டை மண்டலத்தின் காட்டுப் பகுதியில் இருந்து களப்பிரர்கள் எழுச்சியடைந்தனர் என்ற கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
களப்பிரர்கள் என்பவர்கள் கலப்பை கொண்டு உழுத விவசாயப் பெருகுடி மக்கள். கலப்பையை கொண்டு உழுவதால் கலமர் என்ற பெயர் களமர் என்றாகி களப்பர் என்று மறுவி பின்னர் களப்பறையர் என மாறியது. களப்பரையர் என்ற பெயர் தான் பிறகு களப்பிரர் என்று மருவியது என்றும் கூறுகின்றனர். தம்முடைய சொந்த நிலத்தில் பயிர் செய்யும் வேளாளர்களை உழுதுண்பர், ஏரின்வளனர், வெள்ளாளர், கரலர், கலமர் என்ற பெயர்களில் அழைத்தனர்.
ஆனால், இந்தக் கருத்தும் ஏற்றுக்கொள்வது போல இல்லை. ஏனெனில் விவசாயக் குடி மக்கள் படை திரட்டி ஆட்சியைக் கைப்பற்றினர் என்பதற்கு சொல்லிக்கொள்ளும் படி ஆதாரங்கள் ஏதும் அறியும் படி இல்லை.
களப்பிரர்கள் என்ற களப்பாளர்கள் பண்டைய தமிழ்க் குடிகளைச் சேர்ந்த சைவ மரபைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
களப்பிரர்கள் சமண மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. அதாவது புதுக்கோட்டை சித்தன்ன வாசல் குகைக் கோயில், குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் களப்பிரர்கள் காலத்திய சமண குகைக் கோயில்களே என்பதற்கு பலமான ஆதாரங்கள் உள்ளன. களப்பிரர்களின் மதம் சமணம் தான், அவர்களின் ஆதரவும் சமண மதத்திற்கே இருந்தது. மாறாக அவர்கள் சைவ மரபைச் சார்ந்தவர்கள் என்பதை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள இயலாது. அவர்கள் ஆரியர்களை (அய்யர்கள்) ஆதரிக்காமல் இருந்த காரணத்திலிருந்து களப்பிரர்களுக்கும் சைவ மரபிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம்.
அக்காலத்தில் ஆரியர்களுக்கு அவர்கள் எடைக்கு எடை பொன், நிலம் ஆகியவை தானங்களாக வழங்கப்படும் நிலை இருந்தது. இவை அனைத்தையும் களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். அதனாலேயே சைவ ஆராய்ச்சியாளர்கள் இக்காலத்தை இருண்ட காலம் என அவர்கள் அழைக்கின்றனர். சைவத்தையும், ஆரியர்களையும் எதிர்த்த இவர்கள் சைவ மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதை ஏற்க்கவே இயலாது...
கர்னாடக மாநிலத்தைச் சார்ந்த நந்தி மலையில் வாழ்ந்த முரட்டுக் குடியைச் சேர்ந்த மக்கள் தான் இந்த களப்பிரர்கள் என்று சிலர் கூறுகின்றனர். இவர்கள் அந்த மலைப்பகுதிகளில் வாழ்ந்த கள்வர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
மைசூரில் கிடைக்கப்பட்ட ஒரு கல்வெட்டு களப்பிரர்கள் பற்றியும் அவர்கள் கர்நாடகத்தின் மலைக் காட்டுப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் அதில் உள்ளதாக கூறுகின்றனர்.
சோழ நாட்டில் களப்பாள் என்ற இனக்குழுவினர் தான் இந்த களப்பிரர்கள் என்ற வாதமும் ஆராய்ச்சியாளர்களிடையே உள்ளது.
இது வெறும் வாதமாக மட்டுமே உள்ளதே தவிர எந்த ஆவணங்களும் அப்படிக் கூறவில்லை.
களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை கைப்பற்றி மூன்று நூற்றாண்டுகள் ஆண்டனர் என்றும் கூறுகின்றனர்.
சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளுக்குப் பிறகு (அதாவது கி.பி.300- கி.பி.600) தென்னகம் முழுவதும் தமிழே வழங்கப் பெற்றது. கி.பி 800க்குப் பிறகுதான் கன்னட மொழியே தோன்றியது. அதிலும் அவர்கள் கன்னட நாட்டிலிருந்து வந்தனர் என்ற கருத்தால் அவர்களும் தமிழர்களே என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் காலம், அவர்கள் வரலாறு என அனைத்தும் அழிக்கப்பட்டு தமிழகத்திலிருந்தே அவர்கள் விரட்டப் பட்டதற்கு கண்டிப்பாக காரணம் ஏதேனும் இருந்தே தான் ஆக வேண்டும்.
களப்பிரர்கள் புதுக்கோட்டைப் பகுதியை ஆண்ட முத்தரையர் என்ற கருத்தும் வழங்கி வருகிறது.
களப்பிரர்கள் அழிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் விரட்டப்பட்ட பின் எஞ்சியவர்கள் தான் இந்த முத்தரையர் என்று தான் அனைவரும் நம்புகின்றனர். மாறாக முத்தரையர் தான் இந்த களப்பிரர்கள் என்ற கருத்து செயலற்று, களப்பிரர் தான் முத்தரையர் என்ற கருத்து ஓங்கி விடுகிறது.
மேற்கூறிய இடங்களில் ஏதாவது ஒன்றிலிருந்து தான் களப்பிரர்கள் தமிழகத்தை கைப்பற்றியிருப்பனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். அதிலும் களப்பிரர்கள் என்பவர்கள் கர்நாடகத்தின் வட பகுதியிலிருந்தே வந்தவர்கள் என்றே பலர் நம்புகின்றனர். சிலர் களப்பிரர்கள் தமிழ் அல்லாத நாட்டிலிருந்து வந்து தமிழகத்தை ஆண்டனர் என்றும் குறிப்பிடுவர்.
எது எப்படியோ, களபிறர்கள் முன்னூறு வருடம் தமிழகத்தை ஆண்டுள்ளனர். பிறகு அவர்கள் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டதன் காரணம் என்ன? அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் ஏற்ப்பட்ட பிரச்சனைதான் என்ன?
களப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கியம் பலமாக வளர்ச்சியடைந்ததாக கூறுகிறார்களே, உண்மையில் என்ன தான் நடந்திருக்கும்?
கறுப்பு வண்ணத்தில் உள்ளவை அனைத்தும் தேடல் மற்றும் வரலாற்றுக் குறிப்புகள்.
நீல நிறத்தில் உள்ளவை அனைத்தும் எனது அறிவிற்கு உட்பட்ட எனது தேடலின் கருத்துகள்.
தொடரும்
நன்றி : இரவின் புன்னகைகாக வெற்றிவேல்
Comments
Post a Comment