லான்ட்மாஸ்ரர் என்றால் என்னென்டு தெரியாதோ???லான்ட்ஐ மாஸ்ரர் பண்றதுதான் லான்ட்மாஸ்ரர்
விவசாயம் செய்வதற்கு ஏற்ற நிலமாக நிலத்தைத் தயார்படுத்துறதுக்குப் உபயோகிக்கிற ஒரு இயந்திரம் லான்மாஸ்ரர் (நான் சொல்றது சரிதானே). ரக்ரரால உழுறது போல இதாலயும் உழுறவை. அந்த உழுவை இயந்திரத்துக்குப் பின்னால ஒரு பெரிய பெட்டியிருக்கு அதில ஒரு 10-15 ஆக்கள் பயணம் செய்யலாம். அநேகமாக கோயில் போன்ற கொஞ்சம் தூரப் பயணங்களுக்குப் போறாக்கள் லான்மாஸ்ரரில் போறவை.
நான் வல்லிபுரக்கோயிலுக்கும் செல்வச்சந்நிதி கோயிலுக்கும் லான்மாஸ்ரரில் போயிருக்கிறன். அம்மம்மான்ர வீடு றோட்டுக்கரைல இருக்கு அங்கால முழுவதும் எங்கட தோட்டம்....வல்லிபுரத் திருவிழா நேரம் அந்த றோட்டுக்கரைல நிண்டால் யார் யார் கோயிலுக்குப் பொங்க போயினம் என்டு தெரியும். பெரிய அண்டா, குண்டா, அகப்பை, பாய் மிச்ச தட்டு முட்டுச் சாமான் எல்லாத்தையும் நடுவில வைச்சிட்டு கரைத்தட்டில நிறையப்பேரிருந்து போவினம் கோயிலுக்கு.
லான்மாஸ்ரரில் கனதூரம் போகேலாது பேய் நோ நோகும். ஆனால் குடும்பமாப் பொங்கப் போறவை அப்பிடித்தான் போறவை. காத்துக்கு விழுந்திடுவம் என்று அநேகமா சின்னப்பிள்ளையளை தட்டில இருக்க விட மாட்டினம். நடுவில வயசுபோனாக்கள் காலை நீட்டி கஞ்சி வடிச்சுக்கொண்டிருப்பினம் அவையளோட இருக்கேலாது தட்டிலயும் இருக்கேலாது சில சின்னப்பிள்ளையள் அழுது அடம்பிடிச்சு டிரைவர் பக்கமா இருக்கிற கரைத்தட்டில இடம்பிடிச்சிடுவினம்...அதில பிடிமாதிரி ஒன்டு இருக்கு அதைப்பிடிச்சுக் கொண்டு இருந்தால் விழமாட்டம் என்டு பெருசுகளைச் சமாளிக்கலாம். கோயிலால வரேக்க பானை எல்லாம் கரி பிடிச்சு இருக்கும் அப்ப இன்னும் இடம் காணாமல் போகும் அப்பவும் பாதிக்கப்படுறது சின்னப்பிள்ளையள்தான். கொடுமை கொடுமை.
உண்மைாய இந்த வாகனம் விவசாயம் செய்யிறாக்கள் வெங்காயம் , புகையிலை ஏற்றி இறக்கப் பயன்படுத்தும் நோக்கில வாங்குவினம் பிறகு அது கோயிலுக்கும் இடம்பெயர்ந்து போறதுக்கும் பாம்பு கடிச்சாக்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகவும் பயன்ட்டுக்கொண்டிருக்கும். வாடகை லான்மாஸ்ரர்களில் அழகான ஓவியங்கள் எல்லாம் கீறி நல்ல கலர்புல்ல வச்சிருப்பினம்.
லான்மாஸ்ரரும் மண்ணெண்ணெயிலதான் ஒடுறதென்று நினைக்கிறன்.
சிநேகிதி ஈழத்துமுற்றதுக்காகநன்றி : http://eelamlife.blo...og-post_17.html
Comments
Post a Comment