நான் எனது பாடப்புத்தகத்தில் படித்தது நினைவிற்கு வருகிறது. அதாவது களப்பிரர்கள் காலம் தமிழகத்திற்கு இருண்ட காலம். அவர்கள் காலத்தில் தமிழகத்தில் களவு, சூது, மது போன்ற தீய பழக்கங்களுக்கு தமிழர்கள் அடிமையாகினர், அவற்றிலிருந்து தமிழர்களைக் காக்கவும், களையவுமே அந்த கால கட்டத்தில் தமிழில் ஏராளமான நன்னெறி நூல்களும், பக்தி இலக்கியங்களும் தோன்றின என்று படித்தேன். அதையும் அப்படியே நம்பி விட்டேன். பிறகுதான் அவை அனைத்தும் மாற்றி எழுதப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட வரலாறு என்பதை புரிந்து கொண்டேன்.
அதாவது இருண்ட காலம் என்றால், தீய காலம் அல்ல, அது சிலர்களால் குறிப்பாக வேத மதத்தை (இந்து மதம்) சேர்ந்தவர்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு அது பற்றிய எந்த தகவல்களும் கிடைக்கப் பெறாத இருண்ட காலம் என அறிந்து கொண்டேன், நம் தமிழக வரலாற்றை புரட்டிப் பார்த்தால் கி.பி மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாவது நூற்றாண்டு வரை தமிழகத்தில் யார் ஆண்டது, எப்படிப்பட்ட ஆட்சி என அவர்கள் பற்றிய தகவல்கள் பல திட்டமிட்டு அழிக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் விட்டது.
அவர்கள் அப்படி என்ன தான் செய்தார்கள், ஏன் அவர்கள் காலம் இருண்ட காலமாக எந்த தகவலும் கிடைக்கப்பெறாமல் உள்ளது என்பதை தேடிய போது பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிடைத்தன. அவற்றை இனி பாப்போம்.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர், அவர்கள் பற்றிய வரலாற்று குறிப்புகளை தேடிப்பார்த்தால் நேரடியாக சில பக்கங்களைக் கூட காண இயலாது அத்தனையும் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது, களப்பிரர்கள் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய காவிரிப்பட்டினத்தையே (பூம்புகார்) தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர்.
அவர்களின் ஆட்சி மொழி பாலி மொழி மற்றும் கிரந்த மொழி ஆகும், இக்காலகட்டத்தில் தான் பல சமண நூல்கள் பாலி மற்றும் சமண கிரந்த மொழியில் வெளிவந்தமையால் தமிழைக் காக்கும் பொருட்டு தமிழில் பல இலக்கியங்களும் நூல்களும் தோன்றின என்று கூறுகின்றனர். திருக்குறள் மற்றும் சீவக சிந்தாமணி போன்ற நூல்கள் இக்கால கட்டத்தில் தான் தோன்றின. ஆனால் களப்பிரர்கள் இந்நூல்களை ஆதரித்தனர் என்பதற்கான எந்த ஆதராமும் இல்லை.
அவர்கள் சமண சமையத்தைச் சார்ந்தவர்கள் என்று பலர் கூறுகின்றனர் அதற்க்கு ஆதாரமாக குமரியில் உள்ள சிதறால் மலை மற்றும் உளுந்தூர்ப் பேட்டையில் உள்ள அப்பாண்டநாதர் கோயில் ஆகிய சமண குடைவரைக் கோயில்கள் இவர்கள் காலத்தில் தோன்றியது என சிலர் கூறுகின்றனர். மாறாக கிடைத்துள்ள சில களப்பிரர்கள் பற்றிய தகவல்களும் புத்த மதத்தைச் சார்ந்த நூல்களில் மட்டுமே கிடைக்கப் பெறுவதால், அவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றும் கூறுகின்றனர். ஒன்று மட்டும் தெளிவாக விளங்குகிறது அவர்கள் பார்ப்பணர்களை ஆதரிக்கவில்லை, அதாவது களப்பிரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலம் மற்றும் பொன் தானங்களை தடுத்து நிறுத்தினார்கள். அக்காலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு (அதாவது ஆரியர்கள்- புரிதலுக்கு மட்டும் இச்சொல், மற்றபடி நான் இங்கு ஆரிய- திராவிடம் பற்றி பேசவில்லை) எடைக்கு எடை தங்கம், நிலம், மற்றும் தானியங்கள் போன்றவை தானங்கங்களாக வழங்கப்பட்டன. இவற்றை களப்பிரர்கள் தடுத்து நிறுத்தினர் என்பதற்கு மட்டும் சில ஆதாரங்கள் உள்ளன. இரண்டாம் விக்கிரமாதித்தன் நேரூர்கொடை வினைய ஆதித்தனின் அரிகரகொடை செப்பேட்டில் இந்தத் தகவல்கள் எழுதப் பட்டு இருக்கின்றன. மேலும் இவர்கள் காலம் கி.பி.300 முதல் கி.பி.600 என்பன போன்ற சில தகவல்கள் இதிலிருந்தே யூகிக்கப்படுகிறது. அவர்கள் காலத்தில் சமயங்களுக்கு எந்தவித முக்கியத்துவத்தையும் வழங்கவில்லை.
மேலும் அவர்களின் அரசர்களைப் பற்றியும் குறிப்புகள் எழுதி வைக்கவில்லை. அப்படி எழுதி வைத்திருந்தாலும் அவை அழிக்கப் பட்டுவிட்டன என்றே கூறலாம். எப்படி தேடினாலும் இரண்டு பெயர்கள் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது. கள்வர் கோமான்- புல்லி என்பவரால் அவர்கள் ஆட்சி தொடங்கியது என்றும், கி.பி. 442ல் ஆட்சி செய்தவன் கோச்சேந்தன் கூற்றன் என்பன ஆகும்.
பிறகு இறுதியாக களப்பிரர்கள் சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அது நடந்தது அவர்களின் இறுதிக் காலத்தில்தான். களப்பிரர்கள் பாண்டியன் கொடுங்கன் பாண்டியனாலும் , சிம்ஹவிஷ்ணு பல்லவனாலும் மற்றும் சாளுக்கியர்களாலும் கிபி 7 நூற்றாண்டில் தோற்கடிக்கப்பட்டனர் என்பது கூட பாண்டியர்களின் செப்பெடுகளிளிருந்தே கிடைக்கப் பெறுகிறது.
குறிப்பிட்ட இக்காலத்தில் மட்டும் பார்ப்பனார்களின் செல்வாக்கு அறவே இன்றிக் காணப்பட்டதால் அக்காலம் தமிழகத்தில் இருண்ட காலம் என சைவ ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்டது என இக்கால நவீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
களப்பிரர்களின் இருண்டகால தேடல் தொடரும்...
நன்றி: இரவின் புன்நகைக்காக வெற்றிவேல்
Comments
Post a Comment