யார் இந்த களப்பிரர்கள்? வரலாறு -பாகம் 04 -களப்பிரர் ஆட்சி இருண்ட காலமா?.
களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் விளைந்தவை யாவை? அமைதி கெட்டது; கலகங்கள் தோன்றின; மக்கள் வாழ்க்கை சீர்குலைந்தது; தமிழ் மரபு நூல்கள் அழிந்தன போன்ற குற்றச்சாட்டுகளே களப்பிரர் ஆட்சியைப் பற்றிக் கூறப்படுகின்றன. சைவத்தில் நாட்டம் கொண்டவரே இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். களப்பிரரால் தமிழ்க் கழகம் அழியவில்லை. ஏற்கெனவே கழகக் காலம் முடிந்து, கழகமருவிய காலம் தொடங்கியிருந்தது. களப்பிரர் வேற்று மொழியினர்; சமண, சாக்கிய சமயங்களைப் பின்பற்றியவர்கள்; அவர்கள் தமிழகத்தில் ஆளுமை பெற்ற போது இச்சமயங்கள் சாய்காலுடன் இருந்தன. ஆகவே, அவர்களின் தொடக்ககால ஆக்கம் அச்சமயங்களின் கொள்ளிட மொழிகளாய் விளங்கிய பாலி, பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய மொழிகளுக்கே பயன்பட்டது. இது வரலாற்றுப் போக்கில் வளர்ந்த புதிய இயலேயன்றிக் களப்பிரரால் விளைந்த கேடு எனில் முற்றும் பொருந்தாது. ஆயின், பின்னர் வந்த பல்லவர் காலத்தில் சமற்கிருதம் ஆக்கம் பெற்றதேன்?

களப்பிரர் ஆட்சியில் சமணர்கள் தமிழைப் பேணிக் காத்தனர். தமிழில் பல அரிய இலக்கண, இலக்கிய நூல்கள் இவர்களால் எழுதப்பெற்றன. ஏற்கெனவே கி.பி. 470இல் வச்சிரநந்தி என்பான் அமைத்த திரமிளசங்கம் சமண சமய வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று இத்தகைய நூல்கள் வெளிவர உதவியது. நாலடியார் போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நுல்களும், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களும் சமண சாக்கிய சமயச் சார்புடைய நூல்களே. இவை கழகம் மருவிய காலத்தில் தோன்றியவையே. ஆகவே, களப்பிரர் ஆட்சியால் தமிழகத்தில் புதிய பொலிவு ஏற்பட்டது, மொழி வளர்ச்சியேற்பட்டது என்பதையே உணரமுடிகிறது.


ஆனால், களப்பிரர் தமிழகத்தில் இருண்ட காலத்தை ஏற்படுத்தி விட்டனர் எனப் பலரும் புலம்புகின்றனர். அவ்வாறே எழுதியும் நம்பவைத்து விட்டனர். இவர்களின் புலம்பலுக்கும் காரணம் இல்லாமலில்லை, களப்பிரர் வருகையால், தமிழகத்தில் கால்கொண்டிருந்த வருணாசிரம தருமம் ஆட்டங்கண்டது; பார்ப்பனியம் நசிந்து போயிற்று. சமணமும், புத்தமும் இவற்றை ஒழிக்கவே வீறிட்டெழுந்த சமயங்களென்பதையும், களப்பிரர் இச்சமய வீரர்களென்பதையும் மனத்திற்கொண்டு நோக்கினால் உண்மை ஒளி தெரியும்.

இந்திய வரலாற்றில் எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் பார்ப்பனியம் செழித்துக் காணப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அங்கெல்லாம் பொற்காலம் எனப் போற்றப்படுவதையும், பார்ப்பனியத்திற்கு மாறாகத் தோன்றும் ஆட்சி, அல்லது மாறாகத் திளைக்கும் கருத்துச்சுடர் நிலவும் போதெல்லாம் இருண்ட காலம் என இழித்துரைக்கப்படுவதையும் காண்கிறோம். உலக வரலாற்றிலேயே சிறந்த இடத்தைப் பெறுவது அசோகர் காலம்.

இந்திய வரலாற்றில் புத்தம் தலைசிறந்து விளங்கியதும் அசோகர் காலமே. ஆனால், இதனைப் பொற்காலம் எனப் போற்றினரா? இல்லை. ஆரியம் செழித்து, மிளிர்ந்த குப்தர் காலத்தையே பொற்காலம் என்கின்றனர். மௌரியர் காலத்தில் புத்தக் கலைகளும், அறிவியல் நூல்களும் ஏராளமாய்த் தோன்றின; உலக நாடுகளிலெல்லாம் பரவின;

உலக நாடுகளிலிருந்து பல்வேறு பண்பாடுகள் இந்தியாவிற்குள் நுழைந்தன. ஆயினும், இதனைப் பொற்காலம் என்றனரில்லை. இதைப் போலவே புத்தம் புகழ்பெற்ற குசானர் காலமும், வர்த்தனர் காலமும் பொற்காலமாகவில்லை, இவை யாவும் ஆரியரின் வருணாசிரம தருமத்திற்கும் வேள்வி முறைக்கும் மாறாகச் செயல்பட்ட ஆட்சியமைப்புகள்.

தமிழகத்திலும் ஆரியத்திற்கு ஏற்றமளித்த பல்லவர் ஆட்சிக் காலத்தையும், சோழர் ஆட்சியின் ஒரு பகுதியையும் பொற்காலம் என்றனர். ஆகவே, சமணமும் புத்தமும் தழைக்கவும், வருணாசிர தர்மம் ஒழியவும் பாடுபட்ட களப்பிரர் ஆட்சிக் காலத்தை இருண்ட காலம் என்று அழைப்பதைக் கண்டு வியப்படையத் தேவையில்லை. ஆரியம் சிறந்தோங்கி நின்ற காலங்களையே இந்திய வரலாற்றில் பொற்காலம் என்பர். இது கண்மூடித்தனமாகக் கையாளப்படும் பொது நெறி.

(நூல்: தமிழக வரலாற்று வரிசை _ 9, தாய்நில வரலாறு- _ 1)


பேரா.முனைவர் கோ.தங்கவேலு

Comments