17. மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்?
அப்படியானால்...சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?... அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.
தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன் காலத்துக்குப் பின்னாலும், உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின் சாரத்தை பெற்ற சங்கரர்... வைஷ்ணவர்களால் ‘ப்ரசன்ன பௌத்தர்’ என்றே அழைக்கப்பட்டார்.
அதாவது புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார். இதேபோல் ஆதி சங்கரரின் சிஷ்யர்களும்... ப்ரஸன்ன பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்கரரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பௌத்தர்கள். சங்கரரை போலவே ஊர் ஊராக சுற்றினார்கள்.
வாழ்வே பொய் எதையும் நம்பாதே. சந்நியாசம் பெறு...! என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.
‘தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே’... என சொல்லித்தான் அவர்கள் சந்நியாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி (பெண்) இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறுத்தேன் என்பது தான் இந்த மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டு சங்கரரை பரப்புவதற்காக நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.
“நமது குருநாதர் புத்தரிடமிருந்த சர்வம் சூன்யம் என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்துப் பொய் என சொன்னார்.
அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை பரப்ப... நாமும் புத்தரைப் பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே”... என ஆலோசித்தனர். என்ன யுக்தி?...
இந்தத் தொடரின் முற்பகுதியில் புத்தரைப் பற்றி எழுதிய அத்தியாயங்களில் நான் ஒன்றை குறிப்பிட்டேனே ஞாபகம் இருக்கிறதா?...
“இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே... இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்து தான் பெற்றார்கள்” என இத்தொடரில் 4-ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர். அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்... புத்தர் விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.
ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள் திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்துக் கொத்தாய் நடந்தனர். தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில் ஒரு மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். கிழக்குப் பக்கமாக மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை நிர்மாணித்தார்கள்.
மேற்குப் பக்கமாய் அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் தொடங்கப்பட்டது மடம். வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில் சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மாணித்தனர். இவ்வாறு... சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தமலர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள் இந்த 4 மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க... இம்மடங்களில் எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும் ஞான மார்க்கத்தின்படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது. கோவில்களுக்கும் மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மங்கள் கூடாது.
சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில் சமையல் செய்யக்கூடாது. பிச்சை எடுத்து சாப்பிடும் சந்நியாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக சமையல்?...
சமையல் இல்லையென்றால்... அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே பூஜை எப்படி நடக்கும்? பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்... “Shankara Muths are only for proclamation of Advydam” அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத கொள்கையை பறைசாற்றி... உலககெங்கும் பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல...
இப்போது நீங்கள் கேட்கலாம் மடங்களுக்கான நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?..
தொடரும்
000000000000000000000000000000
18 சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?
ஆதிசங்கரர் போதித்தபடி தான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?
இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.
அதிலே சொல்லப்பட்டவற்றின் உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை. அந்த முறையில்... சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?... என்பதை பார்க்கக் கடவோம்.
ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என கொண்டு பார்த்தால், சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள் என எவ்வித போக்குவரத்து தகவலமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் இந்தியா முழுமையும் சுற்றியிருக்க முடியுமா? என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது
இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக் கொண்டது போல் எத்தனை சிறு சிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள் கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச் சின்ன சாலைகளைக் கடந்து அந்த கிராமத்துக்குள் செல்வதற்கு...விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது? கால விரயம் ஆகிறது?
அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத- ஞானம் வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வியாக்யானங்கள் பாஷ்யங்கள் செய்திருக்கிறார்.
இவ்வளவையும் மூலநூல்கள் பார்த்து படித்து உணர்ந்து தெளிந்து பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும். இந்த பெருங்காரியத்தோடு ஊரெங்கும் சுற்றி கால் நடையாகவே சுற்றி... அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கிறார்.
கால தேவனின் குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து... இன்று இந்தியா என்று சொல்கிறோமே இவ்வளவு பெரிய நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்.
ஊர் ஊராக போய் உடனே மடம் நிர்மாணிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில்... தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத்... கிழக்கே பூரி, மேற்கே துவாரகா என திக்குக்கு ஒன்றாய்... எக்கச்சக்க தொலைவுகளை இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.
அடுத்ததாக...சங்கரர் முக்தியடைந்த அந்த புண்ணிய பூமி எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை. ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களையும் தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.
அப்படியானால்... சங்கரர் முக்திபெற்ற பிறகு. அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக... அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக... சிஷ்யர்கள், சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?.
சரி... சங்கரரே என் இறப்பும் ஒரு பொய்தான். அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை கெடுத்து விடாதீர்கள் என்று சிஷ்யர்களிடம் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியிருப்பின் சங்கரர் முக்தி பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா? அதுவும் தேடலில் காணக் கிடைக்கவில்லையே. இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள்.
இன்னொரு பக்கம் சங்கரர்... சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.
தெய்வ சாட்சியா? ஆமாம். கடந்த அத்தியாயத்துக்கு, முதல் அத்தியாயத்தில் தான்... மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய ஸ்லோகத்தை சொல்லியிருந்தேன். அதாவது... சந்நியாசிகளின் நற்சம்பந்தம் பெற்று அதன்மூலம் உலகியல் பற்றை ஒழித்து... மோகத்தை துறந்து... அதன் அடிப்படையில் சித்தம் சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.
இதைச் சொன்ன சங்கரர்... விக்ரஹ வழிபாட்டை வலியுறுத்திய ஆகமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது... மனசு சுத்தமானாதான் மோட்சமே தவிர... அப்படி, இப்படி, என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம். இப்படிப்பட்ட சங்கரர்... தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை நடத்தியிருப்பாரா...?
அதிலும் ‘அகம் ப்ரம்மம்’ என்று சொன்ன சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளைக் கவனியுங்கள்.]
தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி வழிபாடு... கிழக்கே உள்ள பூரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை, வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில் சில வழிபாடு... மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக 4 மடங்களிலும் விக்ரக வழிபாடு... மூர்த்தி உபாஸனை.
அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு... சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால் இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா?
இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம். ‘சங்கரர்தான் மடங்களை ஸ்தாபித்தார்.அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்’ என்று. சபாஷ். இந்த பதில்தான் முதல் கேள்விக்கு பதில். அதாவது... சங்கரர் போதித்தபடி தான் மடங்கள் நடக்கின்றதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் கிடைத்து விட்டதே.
அடுத்ததாக 4 மடங்கள் தானா காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே? இந்த கேள்வி காதில் கேட்கிறது எங்களைப் போன்றவர்களுக்கு. அது கும்பகோண மடம்தான்.
தொடரும்
00000000000000000000000000000
19.ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்...? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா?
இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இங்கிருந்து சுமார் 100. கிலோமீட்டர் கடந்து... தண்மையான துங்கா நதியின் மத்திய கருநாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில் தான் சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம் எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட இம் மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.
மடத்துக்கு உள்ளே சந்நியாசிகள் அமர்ந்திருக்க... அங்கேயும் சில பிராமணர்கள், பல நாள்கள் வெளியே சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.
அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு. இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம். மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான் சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும்.
அதேபோல, அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான் அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ, தீட்சையோ பெற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டிருந்தது.
அந்த எல்லையை விட்டு மடாதிபதிகளும் வெளியே போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில் மடாதிபதி என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.
மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால் மடத்துக்குப் பொறுப்பானவர் அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில் மூத்தவர்கள் மடாதிபதி என அழைக்கப்படுவார்.
அவருக்கு அடுத்தது சந்யாசகாலம் பெற்றவர். அடுத்த மடாதிபதியாக வருவார். இதுதான் மடாதிபதி என்பதன் பொருள்.
மாறாக மடத்துக்கு வருவாய் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக்கொண்டு நிருவாகம் செய்பவர் அல்ல அதாவது... அந்த காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள்.
சந்யாசம் வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள். அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர் மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint becomes seer இந்த சின்ன விளக்கத்துக்குப் பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக வீற்றிருந்தார் மடத்தில். அவரைப் பார்த்து தரிசித்து வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திபட்டுக் கொண்டவாறே சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.
அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியைச் சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய...“நில்லுங்கள்” என்றது மடத்துக்காரரின் குரல் நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள் கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்க மாட்டார். போய்விடுங்கள். ”“ஏன்...?” கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.
“ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். உங்கள் சம்பந்தம் வேண்டாம். உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான லவுகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார். பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிக்க்ஷாந்திக்காக வந்தால் அப்போது இப்பழக்கங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்” என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.
ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கர மடங்களில் ஆரம்ப காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம் பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்து போனார்கள்.
இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.
“ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியது தானே...?”“இல்லை உங்களுக்கு அனுமதி இல்லை?”“அனுமதி இல்லையா? ஏன்?”
இக்கேள்விக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.
மடங்களுக்கென்று ஓர் எல்லை நிருணயிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல் படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.
அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ்ப் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.
“நீங்கள் தமிழ்நாட்டுப் பூர்வீக பிராமணர்கள்தானே...”“ஆமாம்... அதற்கென்ன?...”“நீங்கள் சிறீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள் அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை.” என்றனர் மடத்துக்காரர்கள்.
“தென்தேசம் முழுதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக் குட்பட்டதுதானே... நாங்களும் தென்தேசக் காரர்கள்தானே?.”
“பூகோள எல்லை கிடக்கட்டும் ... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி, பின்பற்றும் சாஸ்திர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள் இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை...”
கருநாடக மண்ணில் ‘தமிழர்கள்’ முதன்முதலாக அனுமதி மறுக்கப்படாதது. இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்.
தொடரும்
0000000000000000000000000
20. காஞ்சி மடமா? கும்பகோண மடமா?
சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்... காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள்.
மறுபடியும் மடத்தின் வாசல். “நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்)
இங்கே உங்களுக்கு ஆசி பெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்கியம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு, தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.”
“நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப் பட்டவர்கள்தானே... நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?” என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.
இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்... திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்று வட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.
அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ் வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.
“நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்லவேண்டும். மட காரியங்களில் நாம் பங்கு பெறவேண்டும்” குடுமியை முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்து விட்டார் ஓர் இளைஞர்.
“பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்” என்றார் இன்னொருத்தர். இப்படி பல கருத்துகள் எதிரொலித்துக் கொண்டிருந்த போது தான்... ஒரே ஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.
“நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேத ஞானம் விருத்தியானவர்கள். நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக் கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து, இறைத்தொண்டும் ஏழைகளுக்குத் தொண்டும் செய்யலாமே...”
இந்த யோசனையை எல்லோர்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் அருகிலேயே சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.
தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு - சங்ஙகர மடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர். இம்மடத்துக்கு சோழ மண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.
கோயில்கள் நகரம், சிற்பக் கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ் பெற்ற காஞ்சீபுரம் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாகக் கருதப்பட்டது.அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சீ, பூரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரே நகரம் காஞ்சிதான்.
அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள், சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மானித்தனர்.
கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது, சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.
மடத்திலிருந்த சந்நியாசிகள் பிக்ஷாந்திக்காகவும்... உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள், ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்குச் சென்றுவர காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீசத் தொடங்கியது.
அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயகர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான். அறமும், பக்தி நெறியும், ஆன்மீகக் கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள் வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.
அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதே மடத்தை நம் ராஜ்ஜியத்தில் அமையுங்கள்.எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும் தழைக்கவேண்டும் என நாயக்க மன்னன் ஆசைப்பட, ஆணையிடப்பட்டது.
உதயமானது கும்பகோண மடம் இன்றையிலிருந்து சுமார் நானூறு - அய்ந்நூறு ஆண்டுகளுக்குமுன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.
காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை, கும்பகோண காமகோடி மடம்தான் அது.
எனவேதான், கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மானித்தார் என சிலர் சொல்லி வருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...?
தொடரும்
00000000000000000000000000000
21.ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது.
நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.
கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு... கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாகப் பார்த்துவிடலாம்.
பெண்களை உள்ளே அனுமதிக்காத, ‘எல்லைகளை’ கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும், மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒரு பகுதி. ராமநாதபுர சமுத்திரக் கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் என எங்கும் மடாதிபதி போகமாட்டார்.
ஆனால்... இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம். அதாவது,‘எல்லை தாண்டிய பக்தியோடு இங்கே வரலாம்.
இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?
“பரமாத்மனே யேர் ரக்தஹவிரக்தோ அபரமாத்மநீ”...என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன.
அதாவது, கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்தப் பொருள் மீதோ ஆசைவைப்பவன் பக்தன் கிடையாது.
இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்... பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத... லௌதீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.
இப்போதெல்லாம் சின்னச் சின்ன தெருமுனைக் கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் ‘பக்த கோடிகளே’ என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நம்மில் ‘பக்தர்கள்’ எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள்(!) கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இவர்களில் ஒருவர்கூட சூத்திரர் கிடையாது காரணம்?
“அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது...” என்று ஸ்மிருதி வகுத்த விதி அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.
இப்படிப்பட்ட சீதோஷண நிலையில் மன்னர்களின் ஆதரவோடு ‘சிறப்பாக’ நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் சிறீசந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள் அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.
அப்போத மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன). இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின்
பக்தர்கள் ஆனார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகா பெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும், பல தேசத் தலைவர்களும் மகா பெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள்.
இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன.
‘நாங்கள்தான் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்’ என அவர்களும்... இல்லை இல்லை நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப் பட்டவர்கள்’ என்றும் பல வாதங்கள், பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க... இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.
மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சென்ற நூற்றாண்டின் முற்பகுதி... பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றதாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்ததாலும் மகா பெரியவரின் ப்ராபகண்டா பெருகியது.
அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியாரின் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்ப்ரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு, தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.
“கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.
இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகா பெரியவர் ‘தேசாந்திரம்’ எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும் போது... ‘கும்பகோணம் மடாதிபதி வருகை...’ என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.
இதற்கெல்லாம் பிறகுதான் நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள்.நாம் பிரதான ராஜஸ்தானியர் மதராசுக்கு அருகில், பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்’ என முடிவெடுக்கப்பட்டது. கும்பகோண மடம் மறுபடியும்... காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?
சரி... மகாபெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு, சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா?
தொடரும்
0000000000000000000000000000
பகுதி – 22 பெரியாருக்கு பதிலடி .ஆரிய சமாஜம்.
மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்கியத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன், அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது. இதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகா பெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகிறேன்.
என் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புஸ்தகங்களும் அடங்கும்.என்னுடைய தகப்பனார்...தாததேசிக தாத்தாச்சாரியார் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும் போதே என் சின்னச்சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக் தளும்பும் அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.
நான் வளர்ந்த நாள்களில் சேட்டைகள் செய்து கொண்டிருக்கும் போது சொந்தக்காரர்கள் பலர் அது சொல்லுது... இது சொல்லுது... என பேச வைத்துக் கொண்டிருக்க... என் தந்தையார் என்னைக் கொஞ்சும் போதும் வேத மந்திரங்களைத் தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம் பண்ணினால் கோபிக்கும் போதும், வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம். இப்படியாக எனக்குத் தெரியாமலேயே... வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.
கற்கும் வயது வந்ததும் என்னுடைய தகப்பானாரே எனக்கு வேதங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான்... அவருடைய மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளை காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவது தான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில் எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.
பதினைந்து வயது முதலான நாள்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான்... நாட்டில் ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது.
அதென்ன ஆரிய சமாஜம் தயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்ததது.
அந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா...?
“வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாகப் பயன்ப டுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புஸ்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது. தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப் பிடித்து வைத்துள்ளனர்.
எனவே, வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லோரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணர வேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்.” என்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ் நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்தக் கருத்துரு.
பத்திரிகைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை சவுகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர். இந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.
பிராமண சபை, என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ.ராமசாமி நாயக்கரும் பிராமணர்களை... பிராமணீயத்தைக் கடுமையாக விமர்சித்து வந்தார்.
எனவே நாங்கள் ‘பிராமண சபை’யை ஆரம்பித்து சனாதன தர்மத்தைப் பாதுகாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.
ஊர், ஊராக கிராமம் கிராமமாக ஜில்லா முழுவதும் செல்வோம். ஒருநாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாகக் கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் ராமசாமி நாயக்கருக்குப் பதிலடி கொடுத்து வந்த வேளையிலே ஒரு சுவராஜ்யம்.
பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர்... வேதங்கள் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங்களை யெல்லாம் எடுத்து எழுதி ராமசாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்து விடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி வெங்கட்ராமய்யர், எம்.கே. வைத்யநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.
அப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ‘ஆரிய தர்மம்’ என்னும் ஒரு பத்திரிகைகூட வெளிவந்தது. அதிலே என்னுடைய சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபால தேசிகாச்சாரியார் ‘எடிட்டர்’ ஆகவும் இருக்கிறார். அதோடு ‘ஜாதி தத்வ நிரூபணம்’ எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.
இப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிகைகளில் எழுதிக் கொண்டும் இருந்த போது... அடிக்கடி சென்னை சென்றும் வருவேன். நான் இப்பிரச்சாரங்களில் மிகத் தீவிரமாக இருக்கும் விஷயத்தை கேள்விப்பட்ட கும்பகோண மடத்தின் சங்காராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னைப் பற்றி சிலரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களிடமே என்னை அவர் கூப்பிட்டு அனுப்ப...
என் இளமைப் பருவத்தின் ஒரு காலைவேளையில் கும்பகோணம் சங்கர மடத்துக்குப் போனேன். தாத்தாச்சாரீ... வாரும்.. உட்காரும்... என அழைத்து தன் அருகிலேயே என்னை உட்கார வைத்தார்.
தொடரும்
நன்றி : http://thathachariyar.blogspot.fr/2010/11/22.html
Comments
Post a Comment