நானும்... எனக்கும், நீயும்... உனக்கும்-பத்தி.





என்ரை வீட்டுக்கிச்சின் ஜன்னலை முறுக்கி விட்டா முன்வீட்டு முற்றத்திலே நடக்கிறது எல்லாம் அப்படியே தெரியும். இப்ப நல்ல வெயில் காலம் முன்வீட்டு மனுசி வெளியிலே வந்து பூக்கண்டுகளுக்குள்ளே புல்லுப்புடுங்கும், மரங்களை வெட்டும், சாடிகளை மாற்றும, கொத்தும். புரட்டும் வெயில் வந்தா மனசி சும்மா இருக்க மாட்டாது.

அதிகாலை வேலைக்குப் வீடு திரும்ப எப்படியும் ஒரு எட்டு மணியாகும். தோட்டத்திலே நிண்ட மனுசி எனக்கு கையைக் காட்டியது. என்ன இவ்வளவு வேளைக்குத் தொடங்கிவிட்டாய்.... கிறேற்ரா, என்று பக்கத்தில் போய் விசாரித்த போது.... இந்த வீக்கன் என்ரை மகன் தன்ரை ஆளோடு வாறான் அது தான் கொஞ்சம் வடிவா இருக்க வேண்டும்.... நல்ல வெய்யில்........தானே, வேளைக்கே தொடங்கி விட்டேன் என்றா. அது இது என்று கதைத்து விட்டு நானும் வந்து விட்டேன்.

வீக்கன் முடிஞ்சு வேலையால் வந்த போது மனுசி தோட்டத்திலே நிண்டதைக் கண்ட நான் கிட்டப்போய் என்னவாம் மகனும் மருகளும் என்றேன். என்ன... மருமகளா.... என்று வியப்போடு கேட்டாள்.... ஓ உன்ரை மகனின் காதலி... உனக்கு மருமகள் தானே என்ற போது, மனுசி ஒரு மாதிரி சிரித்தபடி உனக்கெல்லாம் தெரியும் என்றெல்லே நினைத்திருந்தேன். உன்ரை மனுசிக்கு இது தெரியும். சிலவேளை அவ சொல்லியிருக்கலாம், எண்டும் நினைத்திருந்தேன்...

வாழ்க்கையில் சில மாற்றங்கள் நாங்கள் எதிர்பாராமலேயே நடந்து வீடுகின்றது. சில மாறுதல்கள் சத்தம் சலாரில்லாமல் நுழைந்து விடுகின்றது. சில நிகழ்வுகள் ஏன் எதற்கென்றே தெரிவதில்லை. அவன் இன்னொரு பொடியனோடு சேர்ந்து குடும்பமாயல்லவா இருக்கிறான். மூக்கை உயர்த்தி கண்ணை விழித்த போது, என்ன யோசிக்கிறாய்... விசித்திரமாய் இருக்கா.......?

முதலிலே அவன் வந்து சொன்ன போது எனக்கும் விசித்திரமாகவும் விசராகவும் கூட இருந்தது. ஆனால் என்ன செய்வது என் பிள்ளை தானே..... ஏற்றுக்கொள்ளத் தானே வேண்டும். இதிலே இரு, இந்தக் கோப்பியைக் குடி, என்ற படி ஒரு பெரிய குடையின் கீழிருந்த கதிரையைக் காட்டி தானும் வந்து அமர்ந்து கொண்டாள்.

இது பற்றி அவன் வந்து சொன்ன போது அவனது சகோதரர்கள் எதுவிதமான எதிர்ப்பையோ அல்லது எதுவிதமான மாற்றுக் கருத்துக்களையோ சொல்லவில்லை. மாறாக மிகச்சாதரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். தாயான என்னால் ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் இருந்தது. ஆனால் இவனுக்கென்ன இப்படி ஒரு ஆசை... இப்படியான வாழ்வை இவன் ஏன் தேர்ந்தெடுத்தான் என்று யோசித்து, யோசித்து இந்த தன்னினச்சேர்க்கை சம்பந்தமானவர்கள் பற்றி தேடி வாசிக்க வெளிக்கிட்ட போது உண்மையிலே எனக்கு அனுதாபமும் இரக்கமும், கவலையும் தான் வந்தது.

இந்த தன்னினச் சேர்க்கை என்பது ஏதோ இன்று நேற்று எற்பட்ட ஒன்றல்ல. இந்த உறவானது மனிதன் தோன்றிய காலங்களிலிருந்தே தொடர்ந்து வந்து தான் கொண்டிருக்கு. இது மனித இனத்துக்கு மட்டுமல்ல, விலங்கினங்கள் பறவையினங்கள் மற்றும் சகல ஜீவராசிகளிலும் இந்த உறவு முறையிருக்கு என்று அறிந்த போது ஆச்சரியமாகத் தான் இருந்தது.

இந்த உலகத்துக்கு புதிதாய் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதை எந்த இனத்திலோ எந்த மதத்திலோ அல்லது எந்த நிலையிலோ... எந்த அடையாளத்துடனோ வளர்தெடுக்கலாம். ஆனால் அது உற்பத்தியான வேளையில் இந்த ஒருபாலுறவுக்கான உணர்வுகள் ஏற்பட்டிருந்தால் அது எங்கே.... என்ன?, எப்படி வளர்ந்தாலும் அதை யாராலும் உடனே மாற்ற முடியாது என்பது தான் உண்மை.

இது ஒரு உளவியல் காரணி என்பதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தாயானவள் கற்பமாயிருக்கும் காலகட்டங்களில் ஏற்படுகின்ற மனத்தாங்கல்களினாலும் அந்தப்பாரத்தினாலும் கோர்மோன்களில் எற்படும் மாற்றத்தினாலும் அந்தக்குழந்தை இந்த விருப்பத்துக்கு வருகின்றது.

என்ன நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன் ஒன்றும் பேசாமல் இருக்கின்றாய்.... ஏதாவது சொல் என்றாள்.

இல்லை... இல்லை நீ சொல்வது சுவாரீசியமாகவும் புதிதாகவும் இருக்கிறது. அது தான் கேட்டுக்கொண்ருக்கிறேன்.

கிட்டத்தட்ட ஒரு இருபத்தெட்டு இருபத்தொன்பது வருடத்துக்கு முன்னர் நான் இங்கே அகதியாய் வந்த போது எங்களுக்குப் பொறுப்பாயிருந்த அகதிகள் சங்கம் ஒருநாள் எங்கள் எல்லோரையும் கூட்டி ஒரு முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியது. அதிலே நாங்கள் எப்படி வெளியே திரிய வேண்டும் என்றும், பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கம் சொன்ன போது எமக்கு வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.

இப்ப நீ என்ன சொல்ல வருகிறாய்.... கொஞ்சம் தெளிவாய் சொல் என்ற போது எனக்குச் சிரிப்பு வந்தது. இல்லை... பொடியங்களான நாங்கள் வெளியிலே திரியும் போது கைகோத்துக் கொண்டு திரிவதும், கட்டிப்பிடிச்சுக் கொண்டு திரிவதும, நிக்கிற போது தோளின் மேல் சாய்ந்து நிற்பது மிகச் சாதாரணம். ஆனால் இங்கே அதுக்கு வேறு மாதிரி அர்த்தங்களாம் என்று விளக்கம் தரப்பட்ட போது ஆச்சரியத்தோடு சிரிப்பாயும் இருந்தது.

எங்கடை நாட்டிலே நண்பர்கள் மத்தியில் இது வெறும் சகசம். இவர்கள் இப்படிச் சொன்னதன் பின்னர் அதிலிருந்து விடுபடுவதற்கு கொஞ்சம் காலமும், கஸ்ரமாயும் இருந்தது.

ஒரு புது வாழ்வியலைத் தேடி வந்த உங்களுக்கு எத்தனை உளவியல் சிக்கல்கள், என்றபடி கிறேற்ராவும் சிரித்துக் கொண்டாள்.

முன்பிருந்த நிலையல்ல இப்போது... பொதுவாக நாங்கள் கட்டிக்காத்த புனிதங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் எல்லாம் தவிடுபொடியாய் தகர்ந்து விழுந்து கொண்டிருக்கும் காலம்.

இன்று சர்வதேச அரங்கிலே இது ஒரு சாதரண விசயமாகி விட்டது. இன்று உலகம் முளுவதும் இந்த தன்பால் உறவுபற்றிய உரிமைக்குரல்கள் சகல தரப்புக்களிலிருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சமூக ஆர்வலர்களின் அழுத்தங்களால் சிறிது சிறிதாக உரிமைகள் வென்றெடுக்கப்படுகின்றன.

உனக்குத் தெரியும் தானே, இந்த மேற்குலகச் சமூகம் சுதந்திரமான கட்டுப்பாடற்ற இந்த ஆண்-ஆண் உறவையும், பெண்-பெண் உறவையும் விரும்புகின்றது. இந்த உலகமயமாக்கல் என்ற மூலம் இந்தப் பாழாய் போன நிலையை உருவாக்கி இப்ப இருக்கும் இந்த இறுக்கமான குடும்ப உறவை தகர்த்தெறிய முயற்சிக்கின்றது. இது முதலாளித்துவத்தின் முக்கிய கூறு.

கொஞ்சம் சலித்தவளாய் தன் கைகள் இரண்டையும் பின் தலையிலே இறுக்கப்பிடித்து கால்களை நீட்டி தன்னைச்சரித்துக் கொண்டாள்.

மனம் விட்டு யாருடனாவது கதைக்க வேண்டும் என்ற ஒரு ஆவலில் கதைப்பது போல் அவ இருந்ததை என்னால் உணர முடிந்தது.

மீண்டும் கொஞ்சம் நிமிர்ந்த படி இப்ப எங்கடை நாட்டிலோ அல்லது வேறு முஸ்லீம் நாடுகளிலோ இது ஒரு தண்டனைக்குரிய ஒரு குற்றமாக இதை வைத்திருக்கின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால் இந்த ஆசிய நாடுகளிலும், முஸ்லீம் நாடுகளிலும் இந்தச் தன்னினச்சேர்க்கை அப்போயிருந்தே இருந்து கொண்டு தான் இருக்கு. எப்போ அங்கே இந்தப் பிரிட்டிஸ்காரர்கள் போனார்களோ சட்டங்களைப் போட்டார்களே அன்றிலிருந்து இன்று வரையிலும் அது தண்டனைக் குற்றமாக இருக்கு. ஆனால் பிரிட்டனோ அல்லது மற்ற ஜரோப்பிய நாடுகளோ இங்கே இந்தச் சட்டங்களை நீக்கி விட்டு இந்த ஒருசார்பால் உறவுக்காரர்கள் இன்று சட்டரீதியாவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற அளவிற்கு ஊக்கி வைத்துள்ளார்கள்.

இன்று பொதுவாக அரசியல்வாதிகள், வைத்தியர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், நீதவான்கள் என்று அதிஉயர்நிலையில் இருப்பவர்களும், இதற்கு அடிமையாய் இருக்கின்றார்கள் என்பது பெரிய மறுக்க முடியாத உண்மை. இவர்களையெல்லாம் ஏன் இப்படி நடந்து கொள்ளுகிறீர்கள் என்பது அவர்களுக்கு கூட தெரியாமல் இருக்கு என்று சில ஆய்வுகள் கூறுகின்றது. அதாவது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் சாதரண காதலைப் போன்றது தான் ஒரு ஆண் இன்னொரு ஆணை நேசிப்பது, அதே போல் ஒரு பெண் இன்னொரு பெண்ணை நேசிப்பது.

இதை நாம் விளங்கிக் கொள்வதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் கொஞ்சம் கஸ்ரம் தான்.

கிறேற்றா கதைத்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு விரிவுரையைக் கேட்பது போல நானும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

ம்...ம்... யோசியாமல் இதைச் சாப்பிடு... உன்னோடு இது பற்றிக் கதைக்க ஏதோ பெரிய பாரம் ஒன்று இறங்குவது போல் உணருகிறேன். இவனுடைய சகோதரர்கள் இவனை ஏற்றுக் கொண்டது போல் என்னால் உண்மையாக முளுமையாக அவனை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வேதனையும் குற்றவுணர்வும் என் மனவடியில் எங்கேயோ தாண்டுபோயிருந்து, இப்படியானவர்களுக்கு வரும் நோய்கள் பற்றிய பயம் என்னைப் பெரிதும் பாதித்திருந்தது. அந்தக் கவலையெல்லாவற்றையும் ஒருவருடனும் கதைக்க முடியாமலும் பகிர்ந்து கொள்ள முடியாமலும் எனக்குள்ளேயே பூட்டிவைத்திருந்தேன். ஆனால் இப்போது அவனை நான் முளுமையாக ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்று மனம் குதூகலிக்கிறது, என்று அவள் சொல்லி ஆனந்தப்பட்டதை என்னால் கண்டு கொள்ள முடிந்தது.

உங்கடை நாட்டிலே இந்த நிலைகள் என்னமாதிரி.....? ஏதாவது சொல்லேன் அறிய விருப்பமாயுள்ளேன் என்றாள்.

எனக்கு உடனே சிரிப்புத்தான் வந்தது. ஏன் சிரிக்கிறேன் எண்டு பிறகு சொல்லுகிறேன் கிறேற்ரா.... பொதுவாக எங்கடை நாட்டிலேயும் இங்கேயும் சரி, எம்மவர் மத்தியில் சாதரணமான இந்த ஆண் பெண் செக்ஸ் விடையங்கள் பற்றிக் கதைப்பதே பாவம், என்றும,; குற்றம், என்றும் இவையெல்லாம் தடைசெய்யப்பட்டவை என்றும் இருக்கும் போது இந்தச்தன்னினச் செயற்கையாளர்கள் பற்றிக் கதைப்பதென்பது நினைக்க முடியாத ஒன்று என்று தான் நினைக்கிறேன்.

திருமணபந்தத்தில் இணைந்;தும் இதில் நாட்டம் கொண்டு இரகசியமாக இதில் ஈடுபாடுடைய பல ஆண்களை எனக்குத் தெரியும.; சின்னவயதில் எத்தனையோ பேரால் நான் கூட வற்புறுத்தபபட்டிருக்கிறேன். ஆனால் அதை யாரிடம் முறையிடவோ அதைப்பற்றிப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலை தான் அங்கே. ஏன் என்றால் இது ஒரு அவமானச் செயலாகவே இன்றும் இருக்கு.

மனுசி வியப்பாக என்னைப் பார்க்க எனக்கு மீண்டும் சிரிப்பு வந்தது.

அங்கே ஆண் ஆண் பற்றிய உறவு போல் பெண் பெண் பற்றிய உறவுக்காரர்கள் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் பெரிய பள்ளிக்கூட விடுதிகளிலும் வேறு பெண்கள் தனித்து வாழும் இடங்களிலும் இது இருப்பதாய் அறிந்து கொண்டேன்.

என்னையொன்றும் கேளாமலேயே மனுசி கோப்பியை எடுத்து எனது கோப்பையில் நிரப்பிபடியே இது மறைமுகமாக இருந்தாலும் இதை ஏற்றுக் கொள்வார்களா...? எனக் கேட்டபடி தனக்கும் கோப்பியை நிரப்பினாள்.

எனக்கு மீண்டும் சிரிப்பு பொத்தென்று வந்தது. சிரித்துக் கொண்டே இருக்க என்ன ஒன்றும் சொல்லாமல் நெடுக சிரிக்கிறாய் எனக்கும் சொன்னால் நானும் சிரிப்பேனல்ல என்றபடி தானும் சிரித்தாள்.

இல்லை சாதாரண இளம் பருவத்திலே வரும் இயற்கையான ஆண் பெண் காதலையே இன்னும் ஏற்றுக் கொள்ளாத எமது சமூகம் இதையா.... ஏற்றுக் கொள்ளப் பொகிறது.

ஒரு பதினாறு பதினேழு வயதிலே காதல் கொண்டால் முளைச்சு மூன்று இலை விடலே அதிலே இவருக்கு ஒரு காதலா என்று கிண்டல் செய்வார்கள். ஒரு இருவது வயதிலே காதல் கொண்டால் படிக்கிற வயசிலே அவனுக்கு என்ன காதல் வேண்டிக்கிடக்கு என்பார்கள். பிறகு அதைத் தாண்டி கொஞ்சம் வயது வந்து காதல் கொண்டால் ஒரு வேலை வெட்டியில்லை கண்டறியாத காதலும் கத்தரிக்காயும் என்பார்கள். இப்படி இப்படி ஏதோ சொல்லி சொல்லி கிண்டல் பண்ணுவார்களே ஒழிய அதை ஏற்றுக் கொள்ள பெரிய கஸ்ரங்களைச் சந்திக்க நேரிடும். இது தான் எங்கடை யதார்த்தம்.

நீ ஏன் சிரித்தாய் என்பது இப்போது புரிகிறது என்று கிறேறடராவும் சேர்ந்து சிரிச்சா...

இப்ப நாடு போற போக்கிலே இந்த உலகமயமாக்கல் என்ற பேரிலே திணிக்கப்படுகின்ற அரசியல் பொருளாதார கலாச்சார நெருக்கடிகளினாலும், போருக்குப் பின்னர் எனது மண்ணில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினாலும் இன்ரநெற்... ரீவி... போன்ற வருகைகளின் பாதிப்புக்களினாலும் எமது மண்ணிலும் இது பற்றிய சிந்தனைகள் விதைக்கப்படலாம்.

ஏற்கனவே அங்கே உல்லாசப் பிரயாணிகள் என்ற பேரிலே வந்து போகின்ற வெளிநாட்டவர்களால் வறுமைப்பட்ட பல குழந்தைகள், சிறார்கள் இளைஞர்கள் இந்தப் பாலியலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது உலகம் அறிந்த விடையம். இனிவரும் காலங்களில் அந்நியநாட்டுச் செலவாணிகளுக்காக இவையெல்லாம் ஊக்கிவிகப்படலாம்.

நாடு பற்றிய நினைவுகள் தோன்றிய போது போர்க்காலத்தில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் பற்றியும் சரணடைந்த இளம் ஆண்போராளிகள் கூட கொல்லப்படுவதற்கு முன்னர் எப்படியெல்லாம் பாலியல் முறையில் துன்பப்படுத்தப்பட்டிருப்பார்களோ என்ற எண்ணம் என் மனவெளியில் வந்து போனது.

என்ன திடீரெனச் சோர்ந்து போனாய் வேலைக்களைப்பா நீயும் படுக்க வேண்டும் தானே நீ போய் படு ...போவதற்கு முன்னர் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்று பெரும்பாலனவர்களுக்கு இது பற்றிய அறிவோ அவர்களைப் புரிந்து கொள்ளும் மனோபக்குவமோ எம்மில் பலருக்கு இல்லை. மாறாக மற்றவர்களின் அந்தரங்களுக்குள்ளேயே நுழைந்து கிண்டலும் கேலியும் செய்பவர்களாகவே பொதுவாக எல்லோரும் இருக்கிறோம்.

இவர்கள் அன்பைத் தேடும் உறவுகள். இப்படியானவர்களை வெறுக்கக் கூடாது தான், இவர்களும் ஏற்றக் கொள்ளப்பட வேண்டியவர்கள் தான்... என்னுடைய குழந்தைகளோ அல்லது நெருங்கிய எனது உறவினர்களோ இப்படி இவளைப் போல் நானும் ஏற்றுக் கொள்வேனா... என்ற கேள்வியோடும்... ஏதோ புதிதாய் ஒரு பத்தகத்தைப் படித்தது போன்ற மனநிலையோடு எழுந்து வந்தேன். வெயில் வெளியே கொழுத்திக் கொண்டிருந்தது.

















  

Comments