இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில் தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது. அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் .
நேசமுடன் கோமகன்
0000000000000000000000000000
நாகரிகத்தின் தொடர்ச்சி , சிந்தனையோட்டங்களின் தொடர்ச்சி ஆகியன மொழியை மட்டும் சார்ந்தது அல்ல, மொழியுடன் பின்னிப்பிணைந்து இருக்கும் அதன் சொந்த வரிவடிவத்தையும் சார்ந்தது. ஒன்றாய் இருந்தத் தமிழ் , மூன்றாய் நான்காய், ஐந்தாய் , இன்று திராவிட மொழிக் குடும்பமாய் மாறியதற்கு காரணம் வெவ்வேறு காலக் கட்டங்களில் தமிழ் வழக்குகளாக இருந்த தெலுங்கு , கன்னடம், மலையாளம் ஆகியன தங்களுக்கு என்று புதிய வரி வடிவங்களை ஏற்றுக்கொண்டமைதான். சிந்து சமவெளி வரி வடிவங்கள் தமிழுக்கானவை என்றக் கருத்தும் உண்டு. இந்தக் கருத்தை ஒட்டி, கைபர் போலன் கணவாய் வழி வந்த காட்டுமிராண்டி படையெடுப்புகள் , பேச்சு மொழியை மட்டும் விட்டுவைத்து விட்டு , பயன் பாட்டு வரிவடிவத்தை மாற்றி இருந்து இருக்கும் என்பதையும் முன் வைக்கலாம்.
சில மாதங்களுக்கு முன்னர், துருக்கியத் தோழி ஒருவரிடம் , நவீன துருக்கியின் தந்தை முஸ்தபா கமால் அத்தாதுர்க்கைப் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டு இருக்கையில், அந்த தோழி சொன்னது, 'அத்தாதுர்க் அற்புதமான தலைவர், ஆனால் ஒரு விதத்தில் துருக்கிய வரலாற்றில் கரும்புள்ளி அவர் ... அற்புதமான துருக்கிய கடந்த காலத்தை எங்களிடம் இருந்து ஒட்டு மொத்தமாகத் துண்டித்து விட்டார்"
அந்தத் துருக்கியத் தோழி அப்படி சொன்னதற்கான காரணம் , 1928 ஆம் ஆண்டு , அத்தாதுர்க் , அரேபிய வரி வடிவத்தில் அமைந்து இருந்த துருக்கிய மொழி, இனி லத்தீன் வரி வடிவத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் என அறிவித்ததுதான். பழைய வரி வடிவம் தடை செய்யப்பட்டது. ஓட்டோமான் துருக்கியர்களின் மேல் நூற்றாண்டுகளாக கடுங்கோபம் கொண்டிருந்த மேற்கத்திய உலகம், மேற்கத்திய மோகம் கொண்ட , அத்தாதுர்க்கைக் கொண்டு தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது என்பது துருக்கியத் தோழியின் கருத்தாக இருந்தது. இன்றைய துருக்கியத் தலைமுறைக்கு , ஓட்டோமான் துருக்கிய பண்பாட்டு ஆக்கங்களை அதன் உண்மையான வடிவில் வாசிக்கத் தெரியாது.மொழி மாற்றத்தில் தொலைந்தவைகளை விட வரிவடிவ மாற்றத்தில் தொலைந்தவைகள் தாம் ஏராளம்.
பாரசீகம் இஸ்லாமைத் தழுவிய பொழுது, அரேபிய வரி வடிவத்தையும் தழுவிக் கொண்டது. உலகப் போர்களுக்குப் பின்னர் ஈரானில் லத்தீன் வரி வடிவத்திற்கு மாறிக்கொள்ளலாம் என கருத்தாக்கங்கள் எழுந்த பொழுது எல்லாம், இஸ்லாமிய அடையாளம் பாதிக்கப்படுமோ என்று அஞ்சி மாற்றப்படவில்லை. உயிர் எழுத்துகளுக்கான சரியான வடிவங்கள் இல்லை என்ற குறைபாடு இருந்த பொழுதிலும் , இன்றைய தலைமுறை கடந்த காலத்துடன் எப்பொழுதும் தொடர்பில் இருக்கின்றது என்ற மகிழ்ச்சி பாரசீக மக்களுக்கு உண்டு. லத்தீன் வரி வடிவம் இன்றி சொந்த கிரேக்க வரி வடிவத்துடன் கிரீஸ் ஐரோப்பாவுடன் தான் இருக்கின்றது.
நூறாண்டுகளுக்கு முன்னர், வரி வடிவத்தை மாற்றுவதும் , இன்றையக் காலக் கட்டத்தில் மாற்றச் சொல்லுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அன்று கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு மிக மிகக்குறைவு. ஐரோப்பாவிற்கு நெருக்கமாக மாறவேண்டும் என்ற நிலையின் அடிப்படையில் துருக்கியில் அன்று அந்த முடிவு எடுக்கப்பட்டது. மெல்லத் தமிழினிச் சாகும் என்றக் கூற்றைப் பொய்ப்பிக்க திராவிட இயக்கங்கள், அதைத் தொடர்ந்து இளையராஜா, தமிழ்த் தொலைக் காட்சி ஊடகங்கள் தொடர்ந்து மறுமலர்ச்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. யுனிகோட் சாத்தியத்திற்குப் பின்னர் கன்னித் தமிழ் கணினித் தமிழாகவும் உருவெடுத்து உள்ளது.
சிலர் மலாய் மொழியை உதாரணம் காட்டுகின்றார்கள். இன்று லத்தீன் வரிவடிவங்களில் எழுதினாலும் அரேபிய வரி வடிவமும் புழக்கத்தில் உண்டு. மலாய் மொழி எடுப்பார் கைப்பிள்ளையாக , தொடர்ந்து வரி வடிவங்களை மாற்றிக் கொண்டே இருந்ததன் மூலம் பல வரலாற்றுச் சுவடுகளைத் தொலைத்ததுதான் மிச்சம். அதில் தொலைந்துப் போனது மலாய் தீபகற்ப வரலாறு மட்டுமல்ல, தென்னிந்திய சோழர் வரலாறுகளும் தொடர்ந்த வரிவடிவ மாற்ற சுனாமிகளால் காணாமல் போனது.
இந்தோனேசியாவைப் பொறுத்த மட்டில், அது பலவேறு தேசிய இனக்குழுக்களை உள்ளடக்கிய பெரும் தீவுக் கூட்டம் அதனை ஒருங்கிணைக்க 'திணிக்கப்பட்ட மொழி' ஒன்றையும் கடன் வாங்கிய லத்தீன் வரி வடிவமும் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
இந்தியை இந்தியாவின் தேசிய மொழியாக்கி , லத்தின் வரி வடிவத்தை அதிகாரப் பூர்வம் ஆக்குதல் போன்றது ஒடுக்குதல் ஆகும் அது.
தமிழ்ப் பேசும் சமூகம் ஆங்கில மோகம் கொண்டு அலைந்துத் தமிழைத் தொலைக்கின்றது என்பதே பொய்யான வாதம். அப்படி தொலைப்பது உண்மை என்றால் எல்லா நாளிதழ்களும் வார இதழ்களும் தங்களது இணைய வடிவங்களைத் தமிழில் உருவாக்கி இருந்திராது.
லத்தீன் வரிவடிவத்தில் ஒரு பிரச்சினை இருக்கின்றது. ஜெயமோகன் என்பதை Jayamokan என்று எழுதலாம். ஐரோப்பிய மொழிகளில் J என்பதற்கு ஜெ எனவும் யெ எனவும் உச்சரிப்பு உண்டு. சில சமயங்களில் உச்சரிக்கவும் படாது. வருங்காலத் தலைமுறை Jayamokan என்ற பெயரைப் படிக்கையில் J வை உச்சரிக்காமல் விட்டு விட்டு ஆயா மூக்கன் அதன் பின்னர் ஆய் மூக்கன் எனவும் மாறிவிட வாய்ப்பு உண்டு.
காந்தி மற்றவர்களுக்கு போதிக்கும் முன்னர் சுயப் பரிசோதனை செய்து கொள்வாராம். இந்து ஞான மரபு கூட அதைத் தான் சொல்லுகின்றது எனப்படித்ததும் நினைவுக்கு வருகின்றது. எழுத்துரு கட்டுரையாசிரியர் காந்தியத்தில் நம்பிக்கைக் கொண்டவர் என்றும் இந்து ஞான மரபை பரப்புபவர் என்ற வகையில் அவரே தனது அடுத்தப் புதினத்தை லத்தீன் வரி வடிவத்தில் வெளியிடலாம்.
அந்த 'எழுத்துரு' கட்டுரை ஆசிரியர் விவாத எண்ணங்களை விதைக்கின்றார் என சிலர் பூசி மெழுகிக் கொண்டு இருப்பதால், நாம் விவாத நோக்கில் பார்த்தோம் என்றாலும், இன்னும் இருபது வருடங்களில் சீன மொழி தான் உலக மொழியாகப் போகின்றது. தமிழை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்திருந்தால் அந்தக் கட்டுரையாசிரியர் சீன வரி வடிவங்களைத் தான் முன் மொழிந்து இருக்க வேண்டும்.
ஸ்னொவ்டன் அவர்களின் கலகத்திற்குப்பின்னர் மென் பொருள் என்றாலே ஐயப்பட வேண்டி இருக்கின்றது. ஒரு வேளை அந்தக் கட்டுரையாசிரியருக்கு தமிழ்த் தட்டச்சு மென்பொருள்கள் மேல் சந்தேகம் வந்து இருக்கலாம். எதற்கு சின்ன எலி பெரிய எலிக்கு தனித்தனி பொந்துகள் , ஒரேப் பொந்தாக , தனித் தனி மென்பொருள் தேவையின்றி லத்தீன் வரி வடிவம் இருந்தால் Thamiz Vazhka எனச் சொல்லிவிடலாம் எனக் கருதி எழுதி இருப்பதாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
லத்தீன் வரி வடிவம், தமிழைத் தொடர்ந்து மற்ற மொழிகளுக்கும் பின்பற்றப்படுமானால் ஒரு பயன் இருக்கின்றது. மலையாளம் , சேரலத்து தமிழ் வழக்காக மீண்டும் தமிழுடன் சேரும். பின்னர் தொடர்ந்து துளு, கன்னடம் தெலுங்கு என இந்த வரி வடிவ மாற்றத்தால் தமிழுடன் சேர்ந்து தமிழ் செழுமையுறும் என கட்டுரையாசிரியர் நினைத்து இருந்து இருக்கலாம் என நாமும் நம் பங்கிற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டிவிடுவோம்.
குரூர அரசியல் நகைச்சுவையாக நீண்ட நாட்களுக்கு முன்னர் , நண்பர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. தமிழர்களை ஒடுக்க வன்முறையைக் கையில் எடுத்தற்குப் பதிலாக , தமிழுக்கு சமமான அந்தஸ்து உண்டு , ஆனால் தமிழ் சிங்கள வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என உடன்படிக்கை செய்து கொண்டிருந்தால் ஈழத்தமிழர்கள் மலையாளிகளைப் போல தனிச் சமூகமாக மாறி இருந்து இருப்பார்கள். ஆனால் நம்பூதிரிகளைப் போல சிங்களவர்கள் புத்திசாலிகள் இல்லை என நண்பர் சொன்னார்.
சரி முடிவாக, அடுத்தத் தலைமுறைக்கு தமிழைக் கொண்டுச் செல்லவேண்டும் என்றால், தமிழைப்படியுங்கள் , இணைப்பு மொழியாக ஆங்கிலம் / ஐரோப்பிய மொழிகளைப் படியுங்கள். இவற்றுடன் சீன வரி வடிவத்தையும் கற்றுக் கொள்ள மறவாதீர். எதிர்காலத்தில் இழப்பின்றி வரலாற்றை வரிமாற்றம் செய்யப் பயன்படும். சித்திர எழுத்து வரி வடிவம் தமிழுக்குப் புதிதல்ல .. 'சிந்துசமவெளி'யில் இருந்த தமிழுக்கும் சித்திர எழுத்துதான்.
எழுத்தாக்கம் வினையூக்கி at 7:47 AM
Comments
Post a Comment