காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!
காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!
காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர்.
காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...
காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை
கல்யாணம் என்பது எதுவரை?
கழுத்தினில் தாலி விழும் வரை
பெண்ணுக்கு இளமை எது வரை?
பிள்ளைகள் பிறந்து வரும் வரை
கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது? என்ற கேள்வியே காதலை எடைபோடவல்ல சிறந்த வழியாகும்.
இன்றைய காதல்,
“எனக்காக தாஜ்மகால் கட்டுகிறேன் என்றான்
ஒரு தாலி மட்டும் கட்டு என்றேன்
ஷாஜகானைக் காணவில்லை! “
என்றொரு புதுக்கவிதை உண்டு.
இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறது.
உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும். இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு இதுதான் காதல் என்று நம்பும் அப்பாவிகளாக உள்ளனர். இவர்கள் வள்ளுவரின்,
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (-குறள் எண்:1289)
என்ற குறளின் நயம் உணராதவர்கள்.
சங்கப் பாடல் ஒன்று:
தலைவனுடன் தலைவியை உடன்போக்கில் அனுப்புகிறாள் தோழி அப்போது அவனிடம் கூறும் அறிவுரையாக இப் பாடல் இடம்பெற்றுள்ளது.
தலைவனே மலைப்பகுதியில் மேயும் மரையா (மலை ஆடு) அம்மலையில் தமக்குத் தேவையில்லாத பல செடிகொடிகள் இருந்தாலும் தனக்குத் தேவையான இலைகளைத் தேடிவிரும்பி உண்டு அங்கே தங்கும். அதுபோல நீ இவள் (தலைவி) மீது அன்புடையவனாக இருப்பாயாக. இவள் இப்போது இளமைத்தன்மையுடையவளாக உனக்கு எல்லா இன்பங்களும் தரும் தகுதியுடையவளாக இருக்கிறாள். அதனால் இவள் மீது நீ இப்போது அன்புடனிருப்பது அரிய பெரிய செயலல்ல!
அவள் குழந்தைகள் பெற்ற பின்னரும், அவளிடம் ஏதும் குறைகளிருப்பினும் அந்த மரையா போல அதனை மறந்து அவளிடம் உள்ள நிறைகளைத் தேடி அவளிடம் அன்பு செலுத்துபவனாக நீ இருக்கவேண்டும். அவளை மறக்கவோ வெறுக்கவோ நீ காரணம் தேடாமல், அவளை இன்னும் அதிகமாக விரும்புவதற்குக் காரணம் தேடு. ஏனென்றால் இவளுக்கு இனி நீதான் எல்லாமே. இவளுக்கென்று இனி யாரும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள் என்பதே தலைவனுக்குத் தோழி சொன்ன அறிவுரை. பாடல் இதோ..
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வாளிமதி யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.
குறுந்தொகை -115
கபிலர்.
(தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாக” என்று அவனுக்குக் கூறியது.)
அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, குளிர்ந்த நறுமணம் உடைய மலைப் பக்கத்தில் தளர்ந்த நடையையுடைய மரையா, இலைகளை விரும்பி உண்டு, உறங்கும் நல்ல மலை நாட்டையுடைய தலைவனே, பிறர் தாம் விரும்பிய பெரிய நன்மை யொன்றை ஒருவர் நமக்குச் செய்தால், அவ்வாறு செய்தவரைப் போற்றாதாரும் இவ்வுலகில் உள்ளாரோ? யாவரும் போற்றுவர். அது போல, இவள் சிறிதளவு நன்மையை, உடையளாக இருந்தாலும், இத்தலைவி குழந்தை பெற்றவளாக இருக்கும் காலத்திலும்,
அவளோடு அன்புடையவனாக நீ இவளைப் பாதுகாக்கவேண்டும். இவள் உன்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாதவள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
நிறைவாக..
உடல் சார்ந்த காதல் போதை தரும்,
உள்ளம் சார்ந்த காதலே இன்பம் தரும்.
உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.
உண்மையான காதல் உடல் அழகைப் பார்க்காது, உள்ளத்தின் அழகையே இரசிக்கும். தலைவா நீ தலைவியின் குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டும் பார்த்து இவளிடம் பெற்ற இன்பங்களை மனதில் நினைத்து நன்றியோடு முதுமைப்பருவத்திலும் அன்புடையவனாக இருப்பாயாக என்ற தோழியின் அறிவுரை காதலின் எடையை அளக்கும் சரியான அளவுகோலாக உள்ளது.
நாமும் நம் வாழ்க்கைத் துணையின் மீது முதுமைப் பருவத்திலும் அன்புடையவர்களாக இருந்து காதலின் எடையை அறிந்துகொள்வோம்.
அன்பை மட்டும் கடனாகக் கொடுங்கள் அதுதான் வட்டியோடு திரும்பக் கிடைக்கும் என்றொரு பொன்மொழி உண்டு நாம் நம் வாழ்க்கைத்துணையிடம் தரும் அன்பு நமக்கு இருமடங்காகக் கிடைக்கும் என்பதே இப்பாடல் நமக்களிக்கும் அறிவுரை.
Comments
Post a Comment