Skip to main content

தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்-பத்தி.

நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன.
பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது.

மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது.
அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..?

நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை.

நம் மனம் தடுமாறும்போது..நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..?
நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா?
என்பது தானே. அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கிறார்கள்!

மனத் தடுமாற்றத்தின் போது அருகே ஒருவர் இருந்து கொஞ்சம் காதுகொடுத்து அவர்களின் மனதைத் திடப்படுத்தினால்போதும்.ஆனால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இருக்கிறதா?

தொழில்நுட்ப வளர்ச்சி....தொலைவிலிருக்கும் மனிதர்களையும்
எதிரில் பார்த்துப் பேசத் துணைநிற்கிறது..ஆனால்..
அருகிலிருக்கும் மனிதர்களையோ மறக்கச்செய்துவிட்டது.

அதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் இப்போதெல்லாம் மனஅழுத்தம் வந்துவிட்டது. அதனால் தற்கொலைகள் அதிகரித்துவருகின்றன. உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் கடிதம் எழுதும் வழக்கம் இருந்தது என்று சொன்னால் இன்றைய தலைமுறையினர் நம்பமாட்டார்கள்.அந்த அளவுக்கு காலம் மாறிப்போச்சு..


உனக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படியிருக்க? என்ன ஆச்சு என்று உரிமையுடன் பேச.. காதுகொடுத்துக்கேட்க.. இன்று இங்கு, யாருக்கும் நேரமில்லை..


" வீட்டுக்கு விருந்தினர் வருகை 
மனம்விட்டுப் பேச
வராமலா போகும் விளம்பர இடைவெளி "

என்றொரு துளிப்பா உண்டு.

மனித நாகரீக வளர்ச்சிக்குக் காரணமான அறிவியல் வளர்ச்சியே உறவுகளிடையே பெரிய இடைவெளி ஏற்படவும் காரணம் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.

அறிவுரை சொல்ல ஆயிரம் பேர் இங்குண்டு
காது கொடுத்துக் கேட்க இங்கு எத்தனைபேர் உண்டு..?

சங்கப்பாடல் ஒன்று..


"இடிக்கும் கேளிர் நும்குறை யாக
நிறுத்தல் ஆற்றினோ நன்றுமன் தில்ல
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கின்
கையில் ஊமன் கண்ணில் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற்கு அரிதே".

குறுந்தொகை (வெள்ளிவீதியார்.)

தலைவன் தன் தோழனிடம் சொல்கிறான்...............

என்னை இடித்துரைக்கும் நண்பா! இதனை நின் செயலாகக் கொண்டு நிறைவேற்றுதல் வேண்டும். அதுவே சிறந்தது. கதிரவன் காயும் வெப்பமான பாறையில் கைஇல்லாத ஊமன் கண்ணினால் காக்கும் வெண்ணெய்த்திரள் வெப்பத்தால் உருகிப் பரவுவதுபோல, என்மனத்துப் பரவியுள்ள இந்நோய் பொறுத்தற்கு அரியது.

வெப்பத்தால் பாறையில் வைக்கப்பட்ட வெண்ணெய் உருகுவதை ஊமையானவன் பார்க்கத்தான் முடியும், அதனை எடுத்து வேறொரு இடத்தில் வைக்கநினைத்தாலும் அவனுக்குக் கையில்லை. வாய்பேசமுடியாததால், அவன் பிறரைத் துணைக்கு அழைத்தலும் இயலாது. தன் கண் எதிரிலிலேயே அந்த வெண்ணெய் பாழாவதைப் பார்த்து வருந்துதல் ஒன்றே அவனால் முடியும்.

அதுபோலத் தான் தலைவிமீதுகொண்ட அளவுகடந்த ஆசையை அடக்கிக்கொள்ளும் ஆற்றலும், பிறரிடம் வெளியிடும் துணிவும் தன்னிடம் இல்லை எனத் தலைவன் தோழனிடம் கூறினான்.

தோழன், தலைவனின் மெலிவைப் கண்களால் பார்க்கிறான், வேறு எந்த உதவியும் செய்யவில்லை. கை, கால், கண்கள் பெற்றிருந்தும் தனக்கு இவன் உதவவில்லையே என்ற ஏமாற்றம் தலைவனுக்கு இருக்கிறது என்பது இப்பாடலின் பொருளாகும்.

சங்க இலக்கியத்தில் புகழ்பெற்ற இப்பாடலை அப்படியே இன்றைய வாழ்வுக்குப் பொருத்திப் பார்க்கலாம் .................

சங்ககாலத் தலைவனுக்கு இந்தப்பாடலில் உள்ளதுபோல இன்றைய சராசரி மனிதர்களுக்கும் தற்கொலை செய்துகொள்ள ஏதோ ஒரு காரணம் உள்ளது. அது சிறிய காரணமாகவே இருந்தாலும் அவர்களுக்கு அப்போது அதுதான் மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. அதனால் நாம் ஒவ்வொருவரும் தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல் உடையவர்கள் என்பதை உணர்வோம்..

மனிதர்களுக்கு மனத்தடுமாற்றத்தின்போது தேவையானது அறிவுரைகளல்ல - அன்பான செவிமடுத்தல் என்ற புரிதலே போதுமானது .

Comments

Popular posts from this blog

வேங்கையின் மைந்தன்-புதினம் - பாகம் 3- 31. காதல் வெறி; கடமை வெறி!

மகிந்தர் ஏற்படுத்திவிட்டுச் சென்ற குழப்பத்தால் ரோகிணிக்கு அன்றைய இரவுப்பொழுது நீண்டதொரு நெடும்பகலாக உறக்கமின்றிக் கழிந்தது. கொடும்பாளூர்ப் பஞ்சணையின்மீது, கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் துடிக்கும் புழுவாய்த் துடித்தாள். நல்ல வேளையாகக் கீழ்வானம் வெளுத்தது. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். வானவிளிம்பிலிருந்து கொண்டு
இளங்கோவின் முகம் புன்னகை புரிவதுபோல் அவள் கண்களுக்கு ஒரு தோற்றம். கதிரொளி கனியக்கனிய, அவள் மனத்திலிருந்து மகிந்தர் மறைந்த அந்த இடத்தில் இளங்கோ குடியேறிக் கொண்டான். நடுப்பகலில் தொடங்கி, மாலைப்பொழுது வரையில் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டாள் ரோகிணி. மித்திரையின் கைகள் வலி எடுத்துவிட்டன. ரோகிணிக்கு அவள் பொட்டிட்டாள், மையெழுதினாள்; பூச்சூட்டி விட்டாள். செஞ்சாந்து பூசினாள், கூந்தலில் நறுமண மேற்றினாள்.
“இளவரசியார் மணமேடைக்குச் செல்லும்போது இப்படித்தான் இருப்பார்கள். நான்தான் அன்றைக்கும் அலங்கரித்துவிடுவேன்!’’ என்றாள் மித்திரை.
“திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணமே எனக்குத் திருமயில் குன்றத்தில்தான் பிறந்தது. இன்றும் நாம் அங்குதான் போகப்போகிறோம்.’’
ஆதித்த பிராட்டிய…

வேங்கையின் மைந்தன்-புதினம்- பாகம் 3- 11- கடமை வெறியர்.

ரோகிணியின் நீண்ட நெடுநேர மௌனத்தை அறிந்தபோது தான் அருள்மொழிக்கு அவளுடைய அச்சம் தெரிந்தது. ஆறுதல் அளிக்க முயன்று அச்சத்தைக் கொடுத்து விட்டதற்காக ஒரு கணம் தன் உதடுகளைக் கடித்துக் கொண்டாள் அருள்மொழி. இரவு நேரத்தில் இதயத்தின் கதவுகள் எப்படியெல்லாமோ திறந்துகொண்டு ரகசியங்களையெல்லாம் வெளியில் வாரிக்கொட்டிவிடுகின்றன.
“வீணாக உன்னைக் கலங்க வைத்துவிட்டேன் ரோகிணி! பெரிய வேளார் செய்திருக்கும் காரியம் என்னை அளவுக்கு மீறிப் புண்படுத்தியிருக்கிறது. அதனால் ஏதேதோ பேசிவிட்டேன்’’ என்று மன்னிப்புக் கோரும் குரலில் கூறினாள்.
“இளவரசரும் அவருடைய தந்தையாரைப் போலத்தானே அக்கா நடந்து கொள்வார்?’’
“இல்லவே இல்லை! என்று கூறி நகைத்தாள் அருள்மொழி.
“இளவரசர் இப்போது சிறைக்குள்ளே என்ன நினைத்துக் காண்டிருப்பார், தெரியுமா? சிறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு வந்து ரோகிணியைப் பார்க்க வேண்டுமென்று துடித்துக் கொண்டிருப்பார். தம்முடைய பிடிவாதத்திற்காகப் பிராயச்சித்தம் செய்வது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருப்பார். அவருடைய உடல் அங்கேயும் மனம் இங்கேயும் தான் இருக்கும்.’’
இப்படிச் சொல்லிவரும் வேளையில் அருள்மொழியின் குரல் தழுதழுத்ததை ரோகிண…

தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்-கட்டுரை.

காலம் என்னும் பாதையில் கவிதை என்னும் ஊர்தி பன்னெடுங்காலமாகவே ஊர்ந்து வந்துகொண்டிருக்கிறது. மரபுக்கவிதை என்னும் பெயர் கடந்து புதுக்கவிதை என்னும் பெயர் பெற்று நாளை ஏதோ ஒரு பெயர் தாங்கி ஊர்ந்துகொண்டுதான் இருக்கும்.பழந்தமிழர்கள் வெண்பா, ஆசிரியம், வஞ்சி, கலி, பரி என பல பாவடிவங்களைக் கையாண்டனர்.இவ்வாறு மாறிய வடிவங்கள் புதுக்கவிதையாக மாறிய சூழலை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.
புதுக்கவிதைக்கான இலக்கணம்:
புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை, ‘விருந்து’ எனப் பெயரிட்டு வரவேற்றார் தொல்காப்பியர்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்று உரைத்தார் நன்னூலார்
இலக்கணச் செங்கோல் யாப்புச் சிம்மாசனம் எதுகைப் பல்லக்கு தனிமொழிச் சேனை பண்டித பவனி இவை எதுவுமில்லாத கருத்துக்கள் தம்மைத் தாமே ஆளக் கற்றுக்கொண்ட புதிய மக்களாட்சி முறையே புதுக்கவிதை
எனப் புதுக்கவிதைக்கான இலக்கணத்தை எடுத்துரைப்பார் கவிஞர் மு.மேத்தா.
புதுக்கவிதையின் தோற்றம் :
புதுக்கவிதையின் தோற்றத்துக்கு உரைநடையின் செல்வாக்கு, மரபுக்கவிதையின் செறிவின்மை, அச்சு இயந்திரம் தோன்றியமை, மக்களின் மொழிநடையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியன அடிப்படைக் கா…