பட்ட மரமும் பாகல் கொடியும்- நீதிக்கதை


கொல்லைப்புறத்து வீட்டுத் தோட்டம் புதுப்பொலிவுடன் பூத்துக் குலுங்கியது.அருகிருந்த கிணற்றுநீரை அள்ளிப் பருகிய கத்தரி, தக்காளி, வெண்டி, பச்சைமிளகாய் வகைக் காய்கறிச் செடிகொடிகள் யாவும், சுத்தமான பச்சையாடை கட்டிய சுந்தரிகளாய்ச் சுடர்ந்து மிளிர்ந்தன.

பலவண்ணப் பூக்களும், பச்சையிளம் பிஞ்சுகளும், காலமறிந்து பழுக்கக் காத்திருக்கும் காய்களும் தாங்கிய தாவரங்கள் தத்தமது தாய்மையைப் பறைசாற்றியபடி!

தேன் தேடும் வண்டுகளும், மகரந்தமணி பூசும் வண்ணத்துப் பூச்சிகளும், பழம் தின்னும் பசுங்கிளிகளும், காக்கை குருவிகளும் அத்தோட்டத்தின் காலைநேர அழைப்பில்லா விருந்தாளிகள்!

கவனிப்பாரற்றுக் கிடந்த பின்வளவைக் காய்கறிக் களஞ்சியமாக்கியவன், இன்று தோட்டத்தின் வடகிழக்கு மூலையில் ஒருகணம் துயர்தோயத் தரித்து நிற்பதைக்கண்ட கத்தரிச் செடிக்கு காரணம் புரியவில்லை.

கூடநின்ற தக்காளிச் செடியொன்று குறிப்பறிந்து கூறியது – ‘ஓரிரு மாதங்களுக்கு முன்னொருநாள் – தெருக்கோடியில் தேடுவாரற்றுக் கிடந்த பால்மறவாப் பாலகன் போல் – பாகற் செடியொன்று அநாதரவாய் அவ்விடத்தே துளிர்த்து நின்றதைப் பார்த்திருந்தாயல்லவா?

அருமை பெருமையாய் வந்துமுளைத்த பாகற் செடியைச் சுற்றி, இவன் பாத்தி கட்டினான்; பசளையிட்டான்; வரம்புகீறி, நீர் வந்துசெல்ல வகைசெய்தான்.

செடியாய் நின்ற பாகல், பின்னொருகால் கொடியாய் வளருமென்றெண்ணினான். வெட்டிச் சரித்து, வேலியோரம் காய்ந்துலர்ந்து கிடந்த முள்முருங்கைத் தண்டொன்றை, பாகலுக்கருகே பக்க துணையாய் மண்ணில் குத்திப் பதித்து வைத்தான். இன்று நடப்பதென்ன, பார்த்தாயா?’

சருகான பாகற் கொடியோடு, அதன் உரத்தையும் உதிரத்தையும் உறிஞ்சிச் சுகித்து, மூச்செறிந்து வளர்ந்த முள்முருங்கையையும் பிடுங்கித் தூர வீசிக்கொண்டிருந்தான், அவன்.

குழப்பத்துடன் கூர்ந்துநோக்கிய கத்தரியைப் பார்த்து, தக்காளி தொடர்ந்து சொன்னது –

பற்றிப் படரவென்று பாகற் கொடியருகே பட்டமரம் நட்டு வைச்சான்பட்டமரம் துளிர்த்ததனால், பாவம் பாகற்கொடி செத்துப்போச்சு!

———————–
‘தூறல்’ – ஏப்ரல் / ஜூன் 2013

Comments