வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.
எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே!
ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்?
நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார்.
நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா!
நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா!
நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும் போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா!
ஓர் இடத்தைவிட்டுப் பிரிகிற போதும், நட்பைவிட்டு நகருகிற போதும், நெருங்கியவர்கள் தளர்கிற போதும் ஏற்படும் இழப்பு என்னும் வெற்றிடம் ”இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று திரு. இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறுகிறார்.
ஒவ்வொரு பருவம் முடிகிற போதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை நம் இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது
பாளையாம் பருவம் செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் பருவம் செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளுமிவ் வயதும் இன்னே
மேல்வரு மூப்புமாகி
நாளும் நாம் சாகின்றோமால்
நமக்கு நாம் அழாததென்னே
நிலைமை இப்படியிருக்க வாழ்க்கையிம் எதார்த்தத்தை உணராது அளவுக்கு அதிகமாக செல்வம் சேர்ப்பதிலேயே வாழ்க்கையின் பாதி காலத்தைத் தொலைத்து விடுகிறோம். மீதி பாதியை சேர்த்த செல்வத்தை எப்படி பாதுகாப்பது என்பதிலேயே போய்விடுகிறது.
தனது பிஞ்சு குழந்தைகளின் மழலைப் பேச்சு கேட்காமல், தனது மனைவியிடம் அன்பு பகிராமல், சேர்த்த செல்வத்தை வறுமையில் வாடும் சமுதாயத்திற்கு பகிராமல், போட்டி, பொறாமையோடு வாழ்க்கையை வியாபாரமாய் ஆக்கி விட்டு கடைசியில் எந்த சுகமும் அனுபவிக்காமல் இறந்து போவதில் என்ன பயன்! அதற்கு பிறந்த உடனையே இறந்திருக்கலாமே!
எனவே ஒவ்வொரு நாளும் இறக்கும் நாம், பேராசை தவிர்த்து இருப்பதை வைத்து நிறைவான ஒரு வாழ்க்கையை வாழ கற்றுக் கொண்டு ஒவ்வொரு நிமிடமும் ரசித்து நம்மோடே இருக்கும், வாழ்க்கையிம் இலக்கு நோக்கி பயணித்தாலும் பாதையெல்லாம் பரவி கிடக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து நமது குடும்பத்திற்கும் சுற்றத்தார்க்கும் பயனுள்ள வகையில் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.
Comments
Post a Comment