மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல்.


வணக்கம் வாசகர்களே  !!

ஒரு சிறு அறிவியல் தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எங்கள் மனமானது இரவில் தெளிவான நீல வானில் தெரியும் பௌர்ணமி நிலவையும் , அதன் தொடர்ச்சியான நட்சதிரங்களையும் பர்த்து பல கற்பனைகளையும் மேற்கொள்ளும் . ஏன் இவைகளையெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாதா ?? என்றுகூட சில வேளைகளில் எமது மனம் நினைக்கத் தோன்றும் . எமது பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கோ அதற்கும் அப்பால் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளிக்கும் மனிதன் பயணம் செய்யமுடியுமா ?? என்ற அறிவியல் கேள்விக்கு இந்த தொடர் விடையளிக்கும் என்றே நினைக்கின்றேன் . வழமை போல் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் நாடி நிற்கின்றேன் .

நேசமுடன் கோமகன்.

0000000000000000000000000000000


சூரியனை சுற்றி ஒன்பது கிரகங்கள் வலம் வருவது எமக்கு தெரிந்த விடயம். ஆனால் இன்று நாம் வாழும் பூமியானது ஒரு காலத்தில் பிரபஞ்சத்தின் மையமாக கருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரியும்?

இன்றைக்கு ஏறக்குறைய 2000 வருடத்திற்கு முன்னர் எழுந்த கோட்பாடு இது. ஆரம்ப காலத்தில் எந்தவித நவீன தொலைநோக்கிகளும் கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் எந்தவித செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படாத நிலையிலும், பூமிக்கு அப்பால் என்ன இருக்கும்? எத்தனை கிரகங்கள் இருக்கும் என்ற ஊகங்கள் பரவலாக கிளம்பலாயின.

உலகத்தின் மிகப்பிரசித்தமான தத்துவவியலாளரான அரிஸ்ட்டோட்டில் வாழ்ந்த காலம் அது. அவரது கொள்கைகளும், கண்டுபிடிப்புக்களும் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தும் கணித சூத்திரங்களாக இருந்தன.

,'எப்பிசைக்கில்ஸ்' எனப்படும் வட்ட ஒழுக்களினூடே சுமார் 55 வளையங்களில் அக்காலத்தில் அறியப்பட்டிருந்த 6 கிரகங்களும் சூரியனும் வலம் வருவதாக அரிஸ்ட்டோட்டில் கருதினார்.


6 கிரகங்களும் சூரியனும் பூமியை சுற்றி வலம் வரும் ஒழுங்கானது பின்வருமாறு

1. சந்திரன்
2.புதன்
3.வெள்ளி
4.சூரியன்
5.செவ்வாய்
6.வியாழன்
7.சனி

விண்ணில் தெரியும் பொருட்கள் பூமியை சுற்றி வலம் வருகின்றனவா? அல்லது பூமி அவற்றை சுற்றி வலம் வருகிறதா என்பதனை அக்காலத்தில் அறிவது கடினமான காரியமாக இருந்தது.

பரலக்ஸ் எனப்படும் அசையும் பொருட்களில் ஏற்படும் தடுமாற்றம் பூமியில் இருந்து அவதானிக்கும் போது விளங்கினால், பூமியே விண் பொருட்களை சுற்றி வருவதும், தன்னை தானே சுற்றுவதும், தெளிவாக நிரூபிக்கப்படும். ஆனால் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களின் அசைவில் ஏற்படும் தடுமாற்றம் மிகச்சிறியதாக இருப்பதானால் இதை நிரூபிக்க வழியில்லை. கிரகங்களின் இயக்கத்தை கொள்கையளவில் வரையறுப்பது அக்காலத்தில் கடினமான காரியமாக இருந்தது.

வானத்தில் நிலையாக நிற்கும் நட்சத்திரங்களுடன் கிழக்குத்திசையில் பயணிக்கும் கிரகங்களின் இயக்கம், அவற்றின் வேகம் என்பன கேத்திரகணித ரீதியில் சமச்சீரானவையாக (Uniform motion) கணிக்கப்பட்டன.

கிரகம் என்ற சொல், 'வேண்டரர்' (Wanderer) என்ற கிரேக்க பதத்தில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் அதிசயிக்கத்தக்க பொருள் என்பதாகும்.

இக்கிரகங்களின் இயக்கத்தினை நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் வானவியல் கருவிகள் எதன் துணைகொண்டுமல்லாது கணித ரீதியாக மட்டுமே ஆராய்ந்து, இப்படியான தகவல்களை அளித்த அக்காலத்து மாமேதைகளான தொலமியும், அரிஸ்ட்டோட்டிலும் மெச்சத்தக்கவர்கள்தானே.

அரிஸ்டோடில்

அக்காலத்தில் இந்த வானவியல் கோட்பாடுகளை மையமாக கொண்டு வரையப்பட்ட கணித சூத்திரங்கள்தான், இன்றைய நவீன வானவியலின் வளர்ச்சிக்கும் அடிப்படை என்பது உங்களில் எத்தனை பேருக்கு நம்ப முடிகிறது.

தொடரும்

0000000000000000000000000000000

02 நவீன வானவியலின் பிறப்பு


உயிர் வர்க்கங்களில் மிக உயர்ந்தவனான மனிதன் தன்னைப் பற்றியும் சுற்றியுள்ள சூழல் பற்றியும் தனக்கிருக்கும் பகுத்தறிவைப்

பயன்படுத்தி எப்போதும் ஆராய்ந்த வண்ணமே இருக்கிறான். பரிணாமத்தின் ஏறு படிகளை வழிநடத்திச் செல்பவன் அவனே.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் பூமியின் அருங்கொடையான மனிதனின் அறிவு வளர்ச்சியில் முதற்படியில் நிற்பது வான்வெளி தொடர்பான அவனது வேட்கையே எனலாம்.உலகில் பண்டைய நாகரீகங்கள் தோற்றம் பெற்றதிலிருந்து இன்று வரை அண்டவெளி தொடர்பான அறிவு பல பரிணாமங்களைக் கடந்து விருத்தியாகி வருகிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள் பற்றி விரிவாக அறிவதற்கு ஆய்வுகூடத்தில் அணுவைப் பிளந்து புரோட்டோன் கற்றைகளை மோதவிட்டு சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பத்தை உருவாக்கும் பரிசோதனைகளில் எல்லாம் இன்று ஈடுபட்டு வரும் நாம் ஒரு காலத்தில் பூமியே பிரபஞ்சத்தின் மையம் என நம்பிக் கொண்டிருந்தோம் என்றால் அது ஆச்சரியமாகவில்லை?

முற்காலத்தில் வானியல் என்பது, வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய விண் பொருட்களின் இயக்கங்களைக் கூர்ந்து நோக்குவதையும், எதிர்வு கூறலையும் உள்ளடக்கியிருந்தது. நாகரிகங்கள் வளர்ச்சியடைந்தபோது, சிறப்பாக, மெசொப்பொத்தேமியா, கிரீஸ், எகிப்து, பாரசீகம், மாயா, இந்தியா, சீனா ஆகிய இடங்களிலும், இஸ்லாமிய உலகிலும் பிரபஞ்சத்தின் இயல்புகள் பற்றிய எண்ணக்கருக்கள் உருவாகத் தொடங்கியிருந்தன.

சில குறிப்பிடத்தக்க வானியல் கண்டுபிடிப்புக்கள், தொலைநோக்கிகள் பயன்பாட்டுக்கு வர முன்னரே நிகழ்த்தப்பட்டன. எடுத்துக் காட்டாக சூரியப் பாதையின் சரிவு, கிமு 1000 ஆண்டுக் காலத்திலேயே சீனரால் கணக்கிடப்பட்டு இருந்தது.

சந்திர கிரகணங்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் திரும்பத் திரும்ப நடைபெறுவதைக் கால்டியர் அறிந்து இருந்தனர். கிமு இரண்டாம் நூற்றாண்டில் சந்திரனின் அளவையும், பூமியில் இருந்து அதன் தூரத்தையும் ஹிப்பார்க்கஸ் மதிப்பீடு செய்திருந்தார்.

கி.பி இன் 1473ம் ஆண்டு முதன்முதலில் போலந்து நாட்டைச் சேர்ந்த நிக்காலஸ் கோப்பர்நிக்கஸ், சூரிய மண்டலத்துக்கான, சூரியனை மையமாகக் கொண்ட மாதிரி ஒன்றை முன்மொழியும் வரை புவிமையக் கோட்பாடே உலகம் முழுதும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. பின்னர் வந்த கலிலியோ கலிலி, ஜொகான்னஸ் கெப்ளர் ஆகியோர், இவரது முடிவுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்தியும், விரிவாக்கியும் மேம்படுத்தினர்.


கோள்களின் இயக்கம் தொடர்பான பரிசோதனைகளையும் அவற்றின் முடிவுகளையும் தொலைக்காட்டி மூலம் அவதானித்து கணித முறையில் பகுப்பாய்வு செய்வதை தொடக்கிவைத்ததன் மூலம், நவீன வானியலின் பிறப்புக்கு வித்திட்டவர் என்ற வகையில் அறிஞர் குழாமில் கலீலியோவுக்கு உயர்ந்த இடம் உண்டு.

ஆயினும் சூரிய மண்டலம் பற்றிய கருத்துகளால் வத்திக்கனின் கத்தோலிக்க தேவாலயத்தால் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் அடைக்கப்பட்ட கலிலியோவின் இறுதிக்காலத்தில் அவரது கண்கள் குருடாகி விட்டன. அறிவியல் வளர்ச்சி உன்னத இடத்திலிருக்கும் இன்றைய 21ம் நூற்றாண்டிலேயே அதாவது 1992 ம் வருடம் கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து அவரைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடரும்

000000000000000000000000

பிரபஞ்சத்தின் தோற்றம் - பகுதி 1 

நமது கண்ணுக்கு தெரியும் பிரதான வான் பொருட்களான சூரியன் மற்றும் கிரகங்கள் என்பனவற்றின் மையம் பூமி அல்ல சூரியனே என்ற முடிவுக்கு வந்து சுமார் நானூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதன் பிண்ணனியில் சென்ற தொடரில் நவீன வானவியல் எவ்வாறு தோற்றம் பெற்றது என வரலாற்றுக் குறிப்புக்களுடன் ஆராய்ந்தோம். இத்தொடரில் பிரபஞ்சம் எவ்வாறு தோற்றம் பெற்றது? என்பதைப் பற்றி அலசுவோம். பிரபஞ்சத்துக்கு ஆரம்பமும் இல்லை; முடிவும் இல்லை அது மெய்யாக வரையறைக்கு உட்படாதது என்ற கருத்துக்கள் முன்பு நிலவி வந்தன. ஆயினும் 21ம் நூற்றாண்டில் அறிஞர்களால் விவாதிக்கப் பட்டு வரும் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய கருதுகோள்களில் ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் ஊகித்த "பெரு வெடிப்புக் கோட்பாடு" (Big Bang Theory) அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிளால் நிரூபணமாகி 20 ஆம் நூற்றாண்டிலே உலக விஞ்ஞானிகள் பலரால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பிரபஞ்சத்தின் அடிப்படை விதிகள் மிக எளிமையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என இந்த நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார். பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் முக்கியமான கொள்கைகள் இரண்டு.

அதில் முதலாவது ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை. 
அடுத்தது குவாண்டம் கொள்கை. 

அல்பேர்ட் ஐன்ஸ்டீன்:

இப்பிரபஞ்சத்தில் காணப்படும் பொருளானது வெளியினை வளைக்கும் தன்மை கொண்டது என்பதே ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவம். அதே போல் இயற்கையின் அடிப்படைக் கூறுகளான ஒளி,இடம்,காலம் போன்றவை தொடர்ந்து பிரிக்கக் கூடியவை அல்ல என்பதே குவாண்டம் கொள்கை.

இவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பெருவெடிப்புக் கொள்கை சொல்வது என்னவென்றால் இப்பிரபஞ்சத்தில் உள்ள பொருள் மற்றும் சக்தி இரண்டும் இணைந்து இறுகி நம்மால் கற்பனை செய்து கொள்ள முடியாத அளவு அடர்த்தியுடன் சில மில்லி மீட்டர்கள் விட்டமே உடைய ஒரு பந்தாக சூரியனை விட பல பில்லியன் மடங்கு வெப்பத்துடன் ஆதியில் இருந்தது என்பதாகும். சுமார் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்னமும் கண்டறியப்படாத ஏதோ ஒரு காரணத்தால் இப்பந்து வெடித்துச் சிதறியதில் முதல் அணுக்களான ஐதரசன்,ஹீலியம் உட்பட இன்றுள்ள காலக்ஸிகள்,கருந்துளைகள், குவாசர்கள்,நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தும் தோற்றம் பெற்றன. மேலும் இத்தொகுதிகள் யாவும் அழிந்தும் சிதைந்தும் வேறொன்றாக மாறியும் எல்லையற்ற காலப் பெருவெளியில் மேலும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

தற்போது கண்ணால் அவதானிக்கக் கூடிய பிரபஞ்ச வெளியை அடைக்கும் பொருள்,சக்தி என்பவற்றில் 70 வீதம் கரும் சக்தியும், 25 வீதம் கரும்பொருளும், 4 வீதம் காலக்ஸிகளுக்கிடையில் சிதறிக் கிடக்கும் ஐதரசன்,ஹீலியம் வாயுக்களும், 0.5 வீதம் நட்சத்திரங்களும்,0.3 வீதம் நியூட்ரினோக்களும்,0.03 வீதம் கடின மூலகங்களும் அடங்கியிருக்கின்றன.


பிரபஞ்சத்தின் கட்டமைப்பு சடப்பொருள் மற்றும் சக்தி வீதங்கள்

இதில் கரும்பொருள் என்பது அது வெளியிடும் கதிரியக்கத்தின் மூலம் வானியல் உபகரணங்களால் அவதானிக்க முடியாத ஆனால் அண்டவெளியிலுள்ள விண் பொருட்களைத் தள்ளும் ஈர்ப்பு விசையால் இணங்காணப்படும் சடப்பொருளாகும். கரும் சக்தி என்பது பிரபஞ்சத்தின் விரிவை ஒவ்வொரு கணமும் துரிதப்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்புக் கொள்ள முடியாத சக்தியாகும்.

இவற்றுடன் பிரபஞ்சத்தில் உள்ள காலக்ஸிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் யாவும் பெருவெடிப்பின் பின்னர் படிப்படியாக எப்படித் தோற்றம் பெற்றன என்பதை இப்போது பார்ப்போம்.

பெருவெடிப்பு ஏற்பட்ட முதலாவது செக்கனில் ஏற்பட்ட மூலக்கூற்று நிலையிலான மாற்றங்களை பிரபஞ்சவியலாளர்கள் ஆறு பகுதிகளாகப் பிரித்து விளக்கியுள்ளனர். இதில் முதலாவது ப்ளாங் இப்போ எனப்படுகிறது. இது பெரு வெடிப்பு ஏற்பட்டு 10 இன் -43ம் அடுக்கு செக்கனின் பின்னர் நிகழ்ந்த மாற்றங்களைக் குறிப்பது. இதன்போதே விண்வெளியிலுள்ள நான்கு அடிப்படை விசைகளான மின்காந்தவிசை, நுண்ணிய அணு விசை, கடின அணு விசை,ஈர்ப்பு விசை என்பன தோற்றம் பெற்றன.

அடுத்தது கிராண்ட் யுனிfபிக்கேஷன் இப்போவாகும். பெருவெடிப்பு நிகழ்ந்து 10 இன் -43 ம் அடுக்கிற்கும் 10 இன் -36 ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட செக்கனில் நிகழ்ந்த மாற்றத்தை இது குறிக்கிறது. இக்காலப் பகுதியிலிருந்தே விரியத் தொடங்கிய பிரபஞ்சம் குளிரத் தொடங்கியது.

மேலும் கடின அணு விசையும் நுண்ணிய அணு விசையும் இணைந்து ஹிக்ஸ் போசொன் எனப்படும் நிறையுடைய அடிப்படைத் துணிக்கையை இந்த குறுகிய காலத்திலேயே உருவாக்கியது. கடவுள் துணிக்கை என்று கருதப்படும் அணுக்கருவின் உள்ளே இருக்கும் ஆறு மூலத் துணிக்கைகளில் ஒன்றான ஹிக்ஸ் போசொன் பிக்பாங் கொள்கையை நிரூபிப்பதற்காக தற்போது ஜெனீவாவிலுள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் பரிசோதிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

அடுத்த கட்டமான 10 இன் -36ம் அடுக்கிற்கும் 10 இன் -32ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த மாற்றங்களை இன்fப்ளேசனரி இப்போ எனவும் 10 இன் -12ம் அடுக்கு செக்கன் வரையான பகுதியை எலெக்ட்ரோ வீக் இப்போ எனவும் அழைப்பர்.

இன்fப்ளேசனரி இப்போவின் போதே இன்று விண்வெளியியலாளர்கள் தலையைச் சுற்ற வைத்துக் கொண்டிருக்கும் டார்க் எனெர்ஜி எனப்படும் கரும் சக்தி பிரபஞ்ச விரிவாக்கத்தைத் துரிதப்படுத்த தொடங்கியது. மேலும் எலெக்ட்ரோ வீக் இப்போவின் போது வெப்பநிலை 10 இன் 28ம் அடுக்கு கெல்வின் வரை குறைவடைந்ததால் கதிரியக்கம் ஆரம்பமாகி அணுக்களின் அடிப்படைத் துணிக்கைகளான குவார்க்குகள்,எலெக்ட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் உருவாகத் தொடங்கின.

மேலும் தற்போது பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் பின்புலக் கதிர்வீச்சு இதன் போதே உருவானது. இக் கதிர் வீச்சே பிரபஞ்சத்தின் தோற்றத்துக்குக் காரணமாக பெரு வெடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்கலாம் என இன்று விஞ்ஞானிகள் கருதக் காரணமாகும்.

இறுதியாக கருதப்படும் இரு பகுதிகள் குவார்க் இப்போ மற்றும் ஹட்ரொன் இப்போ என்பவை ஆகும். பெருவெடிப்பின் பின்னர் நாம் பார்த்த பகுதிகளில் இன்னமும் சடப்பொருளான அணுக்கருக்கள் உருவாகவில்லை. 10 இன் -12ம் அடுக்கிற்கும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் இடைப்பட்ட குவார்க் இப்போவின் போதே நான்கு அடிப்படை விசைகளும் பிரிக்கப்பட்டு தனியாக்கப்படுகின்றன.

இதனால் குவார்க்குகள் வலுப்பெற்று புரோட்டன் எனும் அணுக்கருவை உருவாக்கும் நிலைக்குத் தள்ளப் படுகின்றன. ஆனால் வெப்பநிலை மிக மிக அதிகமாக இருந்ததால் இக்கருத்தாக்கம் சாத்தியமாகவில்லை. அடுத்து வரும் 10 இன் -6ம் அடுக்கிற்கும் 1 செக்கனுக்கும் இடைப்பட்ட ஹெட்ரோன் இப்போ காலப்பகுதியிலேயே நிறையுடைய சடப்பொருள் உருவாகிறது.

அதாவது குவார்க்-குளுவோன் பிளாஸ்மா மூலம் வெப்பநிலை வீழ்ச்சியடைந்த பின்னர் ஹட்ரோன்கள் என அழைக்கப்படும் அணுக்கருவை ஆக்கும் நேர்த் துணிக்கையான புரோட்டன்களும், நடுநிலைத் துணிக்கையான நியூட்ரோன்களும் தோற்றம் பெறுகின்றன. இதன்மூலம் பல மில்லியன் நட்சத்திரங்களின் தொகுதியான காலக்ஸிகள் அதாவது அண்டங்கள் முதல் நாம் வாழும் பூமி போன்ற கிரகங்கள் வரை உருவாக வழி ஏற்பட்டது.

தொடரும்

000000000000000000000000000000

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 02


பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி - 2 (பெருவெடிப்பின் ஒரு செக்கனுக்கு பின்)
முந்தைய தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி அலசுகையில் பிக் பாங் எனும் பெரு வெடிப்பு நிகழ்ந்த முதலாவது செக்கனில் நிகழ்ந்த மாற்றங்களை கருக்கள் மற்றும் துணிக்கை ரீதியாக ஆராய்ந்து தகவல்களை வெளியிட்டிருந்தோம். இந்த அடிப்படையில் இறுதியாக பெரு வெடிப்பின் முதல் செக்கனின் பின் குவார்க் குளுவோன் சக்தி திடர் குளுமையடைவதன் மூலம் கருவின் உள்ளே உள்ள புரோட்டன் மற்றும் நியூட்ரோன் துணிக்கைகளை உள்ளடக்கிய ஹெட்ரோன் கூட்டு உருவாகி பிரபஞ்ச வெளியில் நியூட்ரினோக்கள் சுதந்திரமாக நடமாட வழி ஏற்பட்டது.

இதை அடுத்து பெரு வெடிப்பின் 1-10 செக்கனுக்கு இடையில் லெப்டோன் இப்போ நிகழ்கின்றது. பிரபஞ்சத்தில் அதிக பட்சமாக காணப்படும் ஹெட்ரோன்களும், இதன் எதிர்த் துணிக்கையான ஆண்டிஹெட்ரோன்களும் தமக்கிடையே தாக்கமுற்று ஒன்றை இன்னொன்று அழித்த பின்னர் லெப்டோன்கள் உருவாகின்றன. இவை பிரபஞ்சத்தின் அதிக பட்ச நிறையை தமதாக்கி விடும். அடுத்த கட்டமாக லெப்டோன்களும் அண்டிலெப்டோன்களும் தாக்கமுற்று ஒன்றையொன்று அழித்த பின் மிகச்சிறிய லெப்டோன்களே எஞ்சி நிற்கும்.

இக்கட்டத்தின் பின்னர் அதாவது 10 செக்கனுக்கும் 380 000 வருடங்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே மிக நீண்ட தாக்கம் நடைபெறுகிறது. இக் காலப்பகுதி போட்டோன் இப்போ எனப்படுகின்றது. அதாவது துணிக்கை என்று கருதமுடியாத எனினும் துணிக்கையின் இயல்பும்,மின்காந்த அலைகளின் இயல்பும் சேர்ந்த போட்டோன் எனும் நிறையற்ற ஒளிக்கற்றை போன்ற பொருள் அணுக்கருவுடனும் புரோட்டன் மற்றும் எலெக்ட்ரோனுடனும் தாக்கமுற்று பிரபஞ்ச உற்பத்தியை நிகழ்த்துகின்றன.

முதல் 10 செக்கனுக்கு பின்னர் நிகழும் போட்டோன் இப்போவின் போதே பிரபஞ்சத்தின் வெப்ப நிலை நன்கு வீழ்ச்சியடைந்து நியூக்ளி எனப்படும் அணுக்கருக்கள் உற்பத்தியாகின்றன. பெருவெடிப்பின் 3-20 இடைப்பட்ட நிமிடங்களில் நிகழும் இந்த கருத்தாக்கம், பிரபஞ்ச வெளியில் உள்ள சடப்பொருளின் அடர்த்தி,வெப்பநிலை என்பன மேலும் வீழ்ச்சியடையும் வரை நிகழும். இது 17 நிமிடங்களில் நிறைவுறும். அதன் பின் பிரபஞ்ச வெளியில் ஹீலியம்4 அணுக்களும் அதை விட 3 மடங்கு அதிகமாக ஐதரசன் அணுக்களுமே அதிக பட்சமாக நிரம்பியிருக்கும்.

பிரபஞ்ச தோற்றத்தின் காலகட்டங்கள்:

பெருவெடிப்பின் 70 000 வருடங்களுக்குப் பின்னர் அணுக் கருக்களின் அடர்த்தியும்,போட்டோன் கதிரியக்கமும் சமப்படும். இந்நிலையில் ஈர்ப்பு விசை மற்றும் சடப்பொருளின் அழுத்தம் என்பவற்றின் போட்டி காரணமாக நிகழும் மிகச்சிறிய அணுக் கட்டமைப்புக்களின் உற்பத்தி வீழ்ச்சியடையும். இது ஜீன்ஸ் லெந்த் எனப்படுகின்றது.

அடுத்ததாக பெருவெடிப்பின் 377 000 வருடங்களுக்கு பின்னர் பிரபஞ்சத்தின் அடர்த்தி வீழ்ச்சியடைவதால் ஐதரசன் அணுக்களும் ஹீலியம் அணுக்களும் உருவாகின்றன. மேலும் பிரபஞ்சம் குளிர்வடைந்து எலெக்ரோன்கள் யாவும் கருவுடன் இணைந்து நடுநிலையான அணுக்கள் உண்டாகின்றன.ஆரம்பத்தில் ஐதரசன்,மற்றும் ஹீலியம்4 அணுக்கள் உண்டாக எடுத்த நேரத்தை விட இது வேகமாக நிகழ்வதுடன் மறு இணைப்பு அல்லது ரீகம்பினேசன் எனவும் இது அழைக்கப்படுகின்றது.

அணுக் கருக்கள் நடு நிலையாக்கப் பட்டதால் போட்டோன்கள் சுதந்திரமாக வெளியில் பயணஞ் செய்யும் வாய்ப்பும் உருவாகின்றது. இதனால் சடப்பொருளுக்கும் அலைகளுக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி பிரபஞ்சம் வெளி,ஊடகம்,பொருள் மற்றும் அலை என்பன இணைந்த ஒன்றாக மாற்றமடைகின்றது.

இன்னும் எஞ்சியிருக்கும் கட்டங்களாக, பிரபஞ்சத்தின் இருண்ட யுகம், கட்டமைப்பின் தோற்றம், மறு அயனாக்கம், நட்சத்திரங்களின் தோற்றம்,அண்டங்களின் தோற்றம்,அண்டங்களின் கூட்டு,கிளஷ்டர்ஸ்,சுப்பர் கிளஷ்டர்ஸ் என்பவற்றின் தோற்றம்,சூரிய குடும்பத்தின் தோற்றம் மற்றும் 13.7 பில்லியன் வருடம் கழித்து இன்றைய நிலை என்பன பற்றி அடுத்த தொடரில் ஆராயப்படும்.

தொடரும்

00000000000000000000000000000000

பிரபஞ்சத்தின் தோற்றம் பகுதி 03

Infant Galaxy : ஹபிள் தொலைக்காட்டியால் எடுக்கப்பட்ட புகைப்படம்

பிரபசஞ்சத்தின் தோற்றம் 3 - இன்றைய நிலை
நம் நட்சத்திர பயணங்கள் தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் தொடர்பாக இரு பகுதிகள் ஏற்கனவே பார்வையிட்டோம். இதில் பிரபஞ்சத்தின் தோற்றம் பெருவெடிப்பு நிகழ்ந்து 1 செக்கனுக்குள் மற்றும் 1 செக்கனுக்கு பின்னர் என இரு பகுதிகளாக அலசினோம். இத்தொடரில் பெருவெடிப்பின் பின்னர் இன்றைய நிலைவரை நிகழ்ந்த மூலக்கூறு ரீதியான மாற்றங்களை பார்ப்போம்.

முதலாவதாக பிரபஞ்சத்தின் அடிப்படைத் துகள்கள் பரிணாமமடைந்து உருவாகும் திணிவுடைய துணிக்கைகள்,பின்புலக் கதிர், மூலக்கூறுகள் என்பன பிரிக்க முடியாது ஒரு கலவையாக காணப்பட்ட காலத்தை எடுத்துக் கொள்வோம். இக் காலப்பகுதியில் என்ன என்றே இணங்கான முடியாத திண்மமாக பிரபஞ்சம் இருந்ததாகவும் இது இருண்ட யுகம் எனவும் வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர். போட்டோன்கள் அணுக்களுடன் இணைந்து பாய்மமாக காணப்பட்டதால் பிரபஞ்சம் நம் கண்ணால் காணும் ஒளியின்றி இருண்டிருந்தது என்பதே இவர்களின் கூற்று.

பெருவெடிப்பின் 150-800 மில்லியன் ஆண்டுகளில் நிலவிய இக்காலத்தில் போட்டோன்கள் எலெக்ரோன் மற்றும் புரோட்டன்களுடன் இணைந்து
போட்டோன்-பர்யோன் பாய்மமாக சடப்பொருள் திகழ்ந்ததாக கருதப்படுகின்றது. பர்யோனிக் சடம் எனும் இப்பொருள் அயன்களுடன் கூடி உருவாகும் ஐனைசைட் பிளாஸ்மா ரீகம்பினேஸன் நிகழும் போது இலத்திரன்களை கவர்ந்து நடுநிலையாக்கப் பட்ட பின் ஒளியை உண்டாக்கும் போட்டோன்களை வெளிவிடும். பிரபஞ்சத்தை அளவிட உதவும் CMB வரைபடம் இந்த போட்டோன்களாலேயே சாத்தியமாகின்றது.

WMAP

பெருவெடிப்பின் 480 மில்லியன் வருடங்கள் கழிந்த நிலையில் இருண்ட யுகத்தின் பின்னர் உருவானதாக கருதப்படும் சூரியனை விட பல்லாயிரம் மடங்கு ஒளியுடைய UDFY-38135539 எனும் குவாசர் ஜனவரி 2011 அவதானிக்கப்பட்ட போது 13 பில்லியன் வயது உடையது எனும் செய்தி பகிரப்பட்டது.

இருண்ட யுகத்தின் போது மறுஅயனாக்க காலத்தில் பிரபஞ்சத்தின் சிறிய கட்டமைப்பு முதல் மிகப் பெரிய காலக்ஸிகள்,குவாசர்கள்,
கருந்துளைகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன உருவாகின்றன. இதற்கு முன்னர் பிரபஞ்சத்தை கணிப்பிட நுண்கணிதத்தின்
காஸ்மொலொஜிக்கல் நேர்கோட்டு தொடர்கள் முறையை பின்பற்றும் பெட்ருபேசன் தியரி மூலம் விளக்கங்கள் பெறப்பட்டது.

அடுத்ததாக மறு அயனாக்க காலத்தை மேலும் அலசுவோம். பெருவெடிப்பின் 150 மில்லியன் தொடக்கம் 1 பில்லியன் இடையிலான இக் காலத்தில் பிரபஞ்சத்தில் அதிக பொருள் பிளாஸ்மா எனும் செறிவு கூடிய திண்மமாக இருந்தது. ஈர்ப்பு விசையின் இடையீட்டு தாக்கங்களால் நட்சத்திரங்களும் அவற்றை விட ஒளியில் செறிந்த குவாசர்களும் இக்காலத்தில் தோன்றுகின்றன. இதன்போது 21cm மட்டுமே விட்டமுடைய கதிர்வீச்சு வெளியில் பரவுகின்றது.

மறு அயனாக்கத்தின் போது பெருவெடிப்பின் போது கூடவே தோன்றிய இலகுவான மூலகங்களான ஐதரசன்,ஹீலியம்,லித்திய ஆகியன அடர்த்தி கூடிய மூலகங்களாக மாறி பிரபஞ்ச தோற்றத்தின் ஆதியில் தோன்றிய முதல் பாப்புலேசன் 3 வகை நட்சத்திரங்கள் தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக பிரபஞ்சத்தில் அதிக கூடிய கொள்ளளவை எடுக்கும் சடப் பொருள் தமக்கிடையே மோதலுற்று காலக்ஸிகள் உருவாகின்றன. இதன்போது பாப்புலேசன் 2 மற்றும் 3 வகை நட்சத்திரங்கள் தோற்றமுறுகின்றன. வானியல் அறிஞர்களால் மிக அதிகளவான அதாவது 12.7 பில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ள CFHQS 1641-3755 எனும் குவாசர் அவதானிக்கப் பட்டுள்ளது. நாம் தற்போது காணும் அதன் தோற்றம் பிரபஞ்சம் உருவாகி இன்றிலிருந்து 7% வீதம் கடந்த பழையது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட கலிபோர்னியாவில் உள்ள கெக் 2 தொலைகாட்டி மற்றும் ஹபிள் விண் தொலைக்காட்டியும் மிக மிக பழைய அண்டங்களை அதாவது காலக்ஸிகளை இணங்கண்டுள்ளன. இவற்றில் சில பிரபஞ்சம் தோன்றி 500 மில்லியன் வருடங்கள் கழித்து உருவானவை. மேலும் சில பிரபஞ்சம் தோன்றி தற்போதைய நிலையிலிருந்து 5 வீதம் கழித்து உருவானவை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி படிக்கும் அணுவரிசை பிரபஞ்சவியல் இன் ஆராய்ச்சி முடிவுகளின் படி நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வெளி அண்டம் அண்ணளவாக 8.8 பில்லியன் வருடங்கள் பழையது.

பிரபஞ்ச வெளியில் அடர்ந்துள்ள சடப்பொருள், ஈர்ப்பு விசை மற்றும் மூலக்கூற்று ரீதியான கருத்தாக்கங்கள் மூலம் நட்சத்திரங்கள் மற்றும் குவாசர்கள்,காலக்ஸிகளாக மாற்றமடைகின்றது எனப் பார்த்தோம். இவை மேலும் ஈர்ப்புவிசை காரணமாக ஈர்க்கப்பட்டு அண்டங்களின் கூட்டு, மற்றும் விசேட அண்டங்களில் கூட்டு (கிளஸ்டர்ஸ்,சுப்பர் கிளஸ்டர்ஸ்) என்பன தோன்றுகின்றன.

அடுத்த கட்டமாக நமது சூரிய குடும்பத்துக்கு வருவோம். பிக்பாங் நிகழ்ந்து சரியாக 8 பில்லியன் வருடம் கழித்து சூரிய குடும்பம் உருவானதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். காலங்கடந்த தலைமுறை நட்சத்திரமான நமது சூரியன் அதைப் போன்ற ஏனைய தலைமுறை நட்சத்திரங்களின் சிதைவுகளில் இருந்து 4.56 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

இறுதியாக பிரஞ்சத்தின் இன்றைய வயது சம்பந்தமாக அலசுவோம். பெருவெடிப்பு நிகழ்ந்ததிலிருந்து இன்று வரை விரிவடையும் வேகம் ஆர்முடுகிக் கொண்டு அதாவது அதிகரித்து கொண்டு வரும் பிரபஞ்சம் அண்ணளவாக 13.75 பில்லியன் வருடங்கள் பழையது ஆகும். இன்று பரிணாமமடைந்து வரும் பிரஞ்சத்தில் தற்போது காணப்படும் மிகப் பெரிய பொருள் சுப்பர்கிளஸ்டர்ஸ் எனும் விசேட அண்டங்களின் கூட்டு ஆகும். தற்போது விரிவடைந்து வரும் பிரபஞ்சம் அக வெளியில் வேறு பொருள் நுழைவதை தடுப்பதுடன் புதிதாக ஈர்ப்பு விசையுடைய பொருட்கள் உண்டாவதையும் நிறுத்துகின்றது. பிரபஞ்சத்தின் தோற்றம் தற்போதைய நிலை பற்றி இதுவரை ஆராய்ந்தோம், அடுத்த தொடரில் பிரபஞ்சம் அழிவடைவது என்ன என்ன விதங்களில் சாத்தியம் என்பதை அலசுவோம்.

தொடரும்



Comments

  1. நல்லதொரு தொடர்... விரிவாக... விளக்கமாக... நன்றி... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் .

      Delete

Post a Comment