மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல்-01.


பிரபஞ்சத்தின் தோற்றம் (முடிவு)

பிரபஞ்சத்தின் முடிவு

சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் தோற்றம் இன்றைய நிலை தொடர்பாக பார்த்தோம். இது வரை

பிரபஞசத்தின் தோற்றத்தை அணுக்கள் மற்றும் மூலக்கூறு ரீதியாக ஆராய்ந்தோம். பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கு பெரு வெடிப்பு கோட்பாடு பிரதானமாக இருப்பதைப் போன்று இப்படித்தான் அதன் அழிவும் இருக்கும் என நிர்ணயிக்கும் உறுதியான ஒரு கோட்பாடு பிரபஞ்சத்தின் முடிவுக்கு கிடையாது. பிரபஞ்சத்தில் உள்ள சடமும் சக்தியும் ஒன்றுடன் ஒன்று தாக்கமுற்ற வண்ணம் புதிது புதிதாக உருமாறி விரிவடைந்து கொண்டே வரும் நிலையில் அதன் முடிவுக்கும் இவை ஏதோ ஒரு வகையில் நிலை மாற்றமைடைந்து பல எதிர்வு கூறல்களுக்கு வழி சமைக்கின்றன.

இது வரை வானியல் அறிஞர்களால் இணங் காணப்பட்ட பிரபஞ்ச முடிவுக் கோட்பாடுகளை ஒழுங்கு படுத்தினால் அவை இவ்வாறு அமையும் -

1.பாரிய உறைவு - big freeze
2.பாரிய உடைவு - big crunch
3.பாரிய உதறல் - big rip
4.வெற்றிட அதீத ஸ்திரத்தன்மை - vacum metastability
5.வெப்ப இறப்பு - heat death

பிரபஞ்சத்தின் அழிவு அதில் செறிந்துள்ள சடப்பொருளின் அடர்த்தி வேறுபாடு குறித்தே அடையாளப் படுத்தப் படுகின்றது. மேலே கூறப்பட்ட அழிவு வகைகளில் ஐன்ஸ்டீன் உட்பட பெரும்பாலான அறிவியலாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டது பாரிய உறைவு எனும் குளிரினால் பிரபஞ்சம் உறைந்து போய் அழிவைச் சந்திக்கும் என்பதே ஆகும்.இவ்வகை அழிவே மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் நிகழக்கூடியது அதாவது இன்றிலிருந்து 10 இன் 14ம் அடுக்கும் அதற்கு பிந்தியதுமான காலம் கழிந்த பின்னர் ஏற்படக் கூடியது. இக்காலப் பகுதியில் நட்சத்திரங்களில் காணப்படும் எரிபொருள் யாவும் எரிந்து தீர்ந்து போய் விடும் எனவும் பிரபஞ்சம் இருளடையும் எனவும் கூறப்படுகின்றது. 10 இன் 34ம் அடுக்கு காலம் வரை இது தொடரும். இதன் பின்னர் ஹாவ்கிங் கதிர்வீச்சு வீதப்படி கருந்துளைகளும் காலக்ஸிகளும் ஆவியாகத் தொடங்கும். இதன் விளைவாக லெப்டோன் மற்றும் போட்டோன் ஆகிய நிறையற்ற துணிக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ள சடப் பொருளாக பிரபஞ்சத்தில் காணப்படும்.

மேலும் எலெக்ரோன்கள் போட்டோன்களாக நிலை மாறுவதால் கதிர்வீச்சு மிகவும் வீழ்ச்சி அடைந்து சடப் பொருட்கள் யாவும் உறைந்து போகும்.

பாரிய உறைவில் பிரபஞ்சத்தின் பொருள் முழுவதும் சிக்க முன்னரே அதாவது இன்றிலிருந்து 100 பில்லியன் வருடங்களுக்கு பின்னர் பாரிய உடைவு எனும் அழிவை பிரபஞ்சம் எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகின்றது. இதன் போது ஊசலாடும் பிரபஞ்சம் எனும் பதம் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது அதிகரிக்கும் வேகத்தில்(ஆர்முடுகலில்) பிரபஞ்சம் விரிவடைய காரணமாக உள்ள டார்க் எனெர்ஜி எனும் கருஞ்சக்தி ஒரு கட்டத்தில் நின்று மறு பக்கம் திரும்பும் எனவும் இதனால் பிரபஞ்சம் சுருங்கி சடப்பொருள் உடைவு ஏற்படும் எனவும் இதன் அடர்த்தி அதிகமாகி வெப்பம் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது. அவதான ரீதியான இக்கருதுகோளை பல அறிவியலாளர்கள் ஏற்பதில்லை எனவும் பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்குக் வகையில் இதன் விரிவு மேலும் தொடரும் எனவும் உறுதியான ஆதாரங்களுடன் பாரிய உடைவு கருதுகோளை அவர்கள் மறுத்து வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


அடுத்ததாக பாரிய உதறல் கருதுகோளை நோக்குவோம். இன்றிலிருந்து 20 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் இது நிகழும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதன் போது டார்க் எனெர்ஜி எனும் கரும் சக்தி உக்கிரமடைந்து பேய் சக்தி எனப் பொருள்படும் பாண்டம் எனெர்ஜியாக மாறி பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் ஈர்ப்பு விசையினின்றும் விலகி உதறப் படுகின்றன.

அதாவது காலக்ஸிகள்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் என்பன ஈர்ப்பு விசையை இழந்து ஒன்றிலிருந்து இன்னொன்று விலகி எறியப்படும். மேலும் எல்லையில்லாமல் இச்சக்தி விரிவடையும் எனக் கூறப்படுகின்றது. இக்கடத்தில் இலத்திரன்கள் அணுக்களை விட்டு விலக்கப்பட்டு ஈர்ப்பு விசை தனியாக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.


பிக் ரிப் எனப்படும் பாரிய உதறல் நிகழ்வதால் பிரபஞ்சத்தின் அடர்த்தி எல்லையில்லாமல் வீழ்ச்சியடைந்து ஒரு கட்டத்தில் வெற்றிட அதீத ஸ்திரத் தன்மை ஏற்படுகின்றது. இதன் போது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் ஒளியின் வேகத்துக்கு சமனாகும் எனவும் சடப்பொருட்கள் யாவும் அழிவைச் சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இறுதியாக வெப்ப இறப்பை நோக்குவோம். இன்றிலிருந்து 10 இன் 150 ஆம் அடுக்கு காலத்தின் பின்னர் நிகழும் என எதிர்பார்க்கப்படும் வெப்ப இறப்பு பிரபஞ்சத்திலுள்ள சடப் பொருள் யாவும் தீர்ந்து வெப்ப இயக்க சக்தி மட்டுமே எஞ்சி நிற்பதாகும். பெரும்பாலான அறிவியலாளர்களால் இறுதியாக நிகழக்கூடிய அழிவு இதுவென எற்கப்படுகின்றது. பௌதிக இயக்க சக்தி யாவும் தீர்ந்து போன இந்நிலையில் வெப்பம் அதிக அளவான என்ட்ரோபி எனும் கட்டத்தை அடைந்து நிற்கும். இந்நிகழ்வு பற்றி வெப்பவியலின் முதன்மையான விஞ்ஞானியான லோர்ட் கெல்வின் என அழைக்கப்படும் வில்லியன் தொம்சன் முதலில் கருத்து உரைத்திருந்தார்.

இதுவரை பிரபஞ்சத்தின் அழிவு நிகழக்கூடிய சாத்தியங்களை அலசினோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பம் பற்றி ஆராய்வோம்.

தொடரும்

00000000000000000000000000000

சூரிய குடும்பம் 1

நட்சத்திர பயணங்கள் தொடரில் இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மூலக்கூறு ரீதியாக விரிவாக ஆராய்ந்தோம்.


இறுதியாக சென்ற தொடரில் பிரபஞ்சத்தின் முடிவு பற்றி எமது பார்வையை தந்திருந்தோம். இத்தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி (Milky way)அண்டத்தின் உள்ளே உள்ள சூரிய குடும்பம் பற்றிய விபரங்களை பகிர்ந்து கொள்வோம்.

வட்ட உருளை எனும் (Disk) ஆகவும் உருளை எனப்படும் (sphere) ஆகவும் இரு பரிமாணங்களில் ஆராயப்படும் பால்வெளி அண்டம் 75 000 ஒளி வருடங்கள் நீளமான விட்டம் உடையது. கிட்டத்தட்ட 200 பில்லியன் நட்சத்திரங்களை உள்ளடக்கிய இப் பால்வெளி அண்டம் பிரபஞ்சத்தில் உள்ள ஏனைய அண்டங்களுடன் ஒப்பிடுகையில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தது.

மேலும் நமது பால்வெளி அண்டத்தின் மத்தியில் விசேச நிறையுடைய மிகப் பெரிய கருந்துளை ஒன்று காணப்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். பிரபஞ்சத்தின் தூசு எனப்படும் அடர்ந்த வாயுப் படலத்தில் இருந்து 4.6 பில்லியன் வருடங்களுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது. சில நூறு ஆண்டுகளுக்கு முன் நமது சூரியனே பிரபஞ்சத்தின் மையம் என கருதப்பட்ட போதும் ஹபிள் போன்ற நவீன தொலைகாட்டிகளின் புகைப் படங்கள் மூலம் தெளிவாக்கப் படுவது என்னவென்றால் பால்வெளி அண்டத்தின் மையத்தில் இருந்து அண்ணளவாக 27 200 ஒளிவருடங்கள் தூரத்தில் அதன் கரையிலேயே அமைந்திருக்கிறது என்பதாகும்.


சூரிய குடும்பத்தில் சூரியனுடன் ஒன்பது கிரகங்கல் காணப்பட்டாலும் அவற்றில் மிகப் பெரியதும் நடுநாயகமானதும் சூரியனே ஆகும். பால்வெளி அண்டத்தைப் போலவே சூரியனும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண நட்சத்திரமே ஆகும். சூரியனைப் பற்றிய முக்கியமான அறிவியல் தகவல்கள் பினவருமாறு:

1.பூமியில் இருந்தான தூரம் - 1.00 AU(Astronomical unit) or (1.495979 * 10 இன் வலு 8) Km
2.பூமியில் இருந்து நோக்கும் போது தெரியும் சராசரி கோண விட்டம் - 0.53 பாகை
3.தன்னைத் தானே சுற்ற எடுக்கும் நேரம் - 25.38 நாட்கள்
4.விட்டம் - (6.9599 * 10 இன் வலு 5) Km
5.நிறை - (1.989 * 10 இன் வலு 30) Kg
6.சராசரி அடர்த்தி - 1.409 g/cm3
7.மேற் பரப்பில் தப்பு வேகம் - 617.7 km/S
8.ஓளிச்சக்தி - (3.826 * 10 இன் வலு 26) j/S
9.மேற்பரப்பு வெப்பம் - 5800 K(கெல்வின்)
10.மைய வெப்பம் - (15 * 10 இன் வலு 6) K
11.நட்சத்திர வகை - G2V
12.பார்வைத் திறன் - 4.83


சூரியனில் அடங்கியுள்ள வாயுக்களின் வீதம் வருமாறு :

Hydrogen - 73.46%
Helium - 24.85%
Oxygen - 0.77%
Carbon - 0.29%
Iron - 0.16%
Neon - 0.12%
Nitrogen - 0.09%
Silicon - 0.07%
Magnesium- 0.05%
Sulfur - 0.04%

சூரியனைச் சுற்றியுள்ள வெளிப்பகுதி மூன்று படலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை வருமாறு:

1.போட்டோ ஸ்பியர் (photosphere)
2.குரோமோ ஸ்பியர் (chromosphere)
3..கொரோனா(corona)


சூரியனின் கண்ணுக்குத் தெரியும் மேற்பரப்பு photosphere எனப்படுகின்றது. சூரியனை ஒரு டென்னிஸ் பந்தாக கருதினால் அதைச் சுற்றிக் காணப்படும் திசுப் பேப்பரை விட அடர்த்தி குறைந்தது இப்படை என கணிக்கப் பட்டுள்ளது. இதன் தடிப்பம் 500 Km இலும் குறைந்தது ஆகும். மேலும் இதன் வெப்பநிலை 5800 K(கெல்வின்) ஆகும். போட்டோ ஸ்பியருக்கு கீழே காணப்படும் பகுதியில் இருந்து அதிகளவு போட்டோன்கள் (ஒளிக்கதிர்கள்) வெளியான போதும் இதன் வாயுப்படை அதில் பெரும்பகுதியை தடுத்து விடுகின்றது. மேலும் பூமியின் வளி மண்டலத்தின் அடர்த்தியுடன் ஒப்பிடுகையில் போட்டோ ஸ்பியரின் அடர்த்தி 3400 மடங்கு குறைந்தது எனவும் கூறப்படுகின்றது. வருங்காலத்தில் மிக உறுதியான உலோகத்தினால் ஆக்கப்படும் விண்கலமொன்று சூரியனின் இப்படையில் (7 * 10 இன் 4 0ஆம் வலு) Km வரை அதாவது மையத்தை நோக்கி 10 வீதம் வரை உள்ளே செல்ல முடியும் என விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றது.

அடுத்த படலம் இதற்கு மேலே அமைந்துள்ள குரோமோ ஸ்பியர் ஆகும். இது போட்டோ ஸ்பியரை விட அடர்த்தி குறைந்தது. வெறும் கண்களால் பார்க்க முடியாத ஒளிப் படலமான இது சூரிய கிரகணத்தின் போது மறைக்கப்பட்ட சூரியனின் எல்லை வட்டத்தில் மிகுந்த பிரகாசமாக நாவல் நிற கோட்டை அடுத்து தென்படும். நாவல் என்பது சூரிய ஒளியிலுள்ள சிவப்பு,நீலம்,வயலெட் ஆகியவற்றின் கலவை ஆகும். குரோமோ ஸ்பியர் ஆனது அதன் நிற மாலை காரணமாக வானியலாளர்களால் விரும்பி ஆராயப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. நாம் சுவாசிக்கும் வாயுவை விட குரோமோ ஸ்பியர் (10 இன் வலு 8) மடங்கு அடர்த்தி குறைவானது.

இறுதியாக கொரோனா(corona) பற்றி நோக்குவோம். சூரியனின் மையத்தில் இருந்து மிகப்பெரிய பரப்பளவுடைய குரோமோ ஸ்பியருக்கு மேலாகவும் உள்ளேயிருந்து படர்ந்துள்ள பகுதி கொரோனா படலம் எனப்படுகின்றது.கிரேக்க நாகரிக மக்களால் கிரவுன் என அழைக்கப்பட்ட ஓளி அலைகளை உள்ளடக்கியுள்ள இப்பகுதி சூரியனில் இருந்து பூமிக்கான தூரத்தின் 10 வீதத்தை உடையது என்பதுடன் 20 சூரிய விட்ட ஆரையைக் கொண்டது. மையத்தில் இருந்து புறப்படும் கொரோனோ இன் ஒளிக்கதிர்களின் சராசரி வெப்ப நிலை 1 மில்லியன் கெல்வின் அதாவது போட்டோ ஸ்பியரை விட பல நூறு மடங்கு அதிகமானது. அதிகளவான இந்த வித்தியாசம் பல விஞ்ஞானிகளை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இது பற்றி மேலும் ஆராய்வதற்காக நாசா விண்வெளி ஆய்வு மையம் SOHO எனப்படும் செய்மதியை ஏவியுள்ளமை குறிப்பிடத் தக்கது. மேலும் இச்செய்மதி சூரியனின் வெளிப்படலமான போட்டோ ஸ்பியர் பற்றி தீவிரமாக ஆராய்ந்து பல தகவல்களை வழங்கி வருகின்றது.

சூரியனில் எவ்வகையான செயற்பாடு நிகழ்கின்றது என்பது குறித்து இப்போது நோக்குவோம். சூரியனில் நிகழும் முக்கிய கருத்தாக்கமானது ஐதரசனின் உட்கரு பிளவுற்று ஹீலியம் அணுக்களாக மாறுவதே ஆகும். எனினும் மேலும் சில தாக்கங்களும் நிகழ்கின்றன என விஞ்ஞானிகள் கருதக் காரணம் சூரியனின் மையப் பகுதியிலிருந்து வெளியாகும் சிறியளவான நியூட்ரினோக்களே ஆகும். சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் சேர்ன் நகரில் மேற் கொள்ளப்பட்ட கடவுள் துணிக்கை குறித்த ஆராய்ச்சியின் போது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கண்டு பிடிப்பாக ஓளியை விட நியூட்ரினோக்கள் வேகம் கூடியவை என அறிவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கது.

சூரியனைப் போலவே ஏனைய நட்சத்திரங்களிலும் மேலே அவதானித்த மூன்று படைகளும் காணப்படும் என்ற போதும் கருத்தாக்கங்கள் வித்தியாசப் படலாம் என்பது வானியலாளர்களின் கருத்து. இதுவரை சூரியனைப் பற்றிய மேலோட்டமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டோம். எதிர்வரும் தொடரில் கிரகங்களைப் பற்றிப் பார்ப்போம்.

தொடரும்

000000000000000000000000000000

சூரிய குடும்பம் 2 (சந்திரன்)


நட்சட்த்திரப் பயணங்கள் தொடரில் இதுவரை பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அழிவு பற்றி விரிவாக எமது பார்வையைத் தந்திருந்தோம்.

இறுதியாக சென்ற தொடரில் நமது பூமி அமைந்திருக்கும் பால்வெளி அண்டம் மற்றும் அதன் கரையில் அமைந்திருக்கும் சூரிய குடும்பம் பற்றிய விளக்கத்துடன் சூரியனைப் பற்றியும் மூன்று படலங்களாக வகுத்து ஆராய்ந்திருந்தோம். சூரிய குடும்பம் 2 எனும் இத்தொடரில் வானில் சூரியனுக்கு அடுத்து ஓளி கூடிய பொருளாகத் தென்படும் பூமியின் உபகோளான சந்திரனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

பூமியின் ஒரே ஒரு துணைக் கோளான சந்திரன் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது மிகப் பெரிய துணைக் கோளாகும். இது சூரியனில் இருந்து மிக அதிக தொலைவிலுள்ள ஒன்பதாவது கிரகமான புளூட்டோவை விட பெரியது என்பது குறிப்பிடத் தக்கது. சூரிய குடும்பத்தின் ஏனைய கிரகங்களை விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் உள்ளது. இதனால் தான் விண்ணில் மனிதனின் காலடி பட்ட ஒரே இடமாக சந்திரன் விளங்குகின்றது எனலாம். மேலும் விண்வெளி ஆராய்ச்சி செய்து வரும் உலகின் பல வல்லரசு நாடுகள் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பல செய்மதிகளை ஏவி சந்திரனைப் பற்றி ஆராய்ந்துள்ளன. சற்று முன்னே பார்த்தால் 1957 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் பூமி மற்றும் சந்திரனை மையமாகக் கொண்ட விண்வெளிப் போட்டி தொடங்கியது.

இவ்வாண்டில் ரஷ்யா, விண்வெளியில் வலம் வந்த முதலாவது செய்மதியான ஸ்புட்னிக் ஐ அனுப்பி பூமி மற்றும் விண்வெளி பற்றிய மனிதனின் தேடலுக்கு வித்திட்டது. இதன் பின்னர் சந்திரனை நோக்கி ஆளில்லா விண்கலங்களையும் 1958ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது உயிரினமாக லைகா எனும் நாயையும் ரஷ்யா விண்ணுக்கு அனுப்பி விண்வெளி ஓட்டத்தில் முன்னிலை வகித்தது.


மேலும் ரஷ்ய விண்வெளி வீரர் யூரி ககாரின் 1961ம் ஆண்டு விண்ணுக்குச் சென்ற முதலாவது மனிதராகவும் பின்னர் 1963 இல் ரஷ்ய வீராங்கணை வலென்டினா விலாடிமிரோவ்னா டெரெஷ்கோவா விண்ணுக்குச்ச் சென்ற முதலாவது வீராங்கணையாகவும் புகழ் பெற்றனர்.


பதிலடியாக அமெரிக்கா ரஷ்யாவுக்கு இணையாக 1960 ஆம் ஆண்டு முதல் சந்திரனை நோக்கிய தனது ஆளில்லா விண்கலங்களை செலுத்தி வந்தது. இதன் பின்னர் விண்வெளி ஆய்வின் முக்கிய மைல்கல்லாக விளங்கும் சாதனையை அமெரிக்கா நிகழ்த்தியது. அதாவது 1969 ஆம் ஆன்டு ஜூலை மாதம் அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் மூவர் பயணித்த அப்பொலோ 11 விண்கலம் சந்திரனில் தரை இறங்கியதுடன் இவ்வீரர்களில் இருவர் நீல் ஆம்ஸ்ட்ரோங் மற்றும் எட்வின் அல்ட்ரின் ஆகியோர் சந்திரனில் கால் பதித்து நடமாடினர். இதைத் தொடர்ந்து 1969 முதல் 1972 வரை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம் சந்திரனை நோக்கி 6 தடவை அப்பொலோ விண்கலங்களைச் செலுத்தி சந்திரனைத் தீவிரமாக ஆராய்ந்தது. இதன் போது மொத்தமாக 12 விண்வெளி வீரர்கள் சந்திரத் தரையில் தரையிறங்கி அதன் மேற்பரப்பில் அவதானங்களை மேற்கொண்டு புகைப்படங்கள் எடுத்ததுடன் விஞ்ஞான உபகரணங்களைப் பயன்படுத்தி 382 கிலோ எடையுடைய கற்கள் மற்றும் மண்ணையும் சேகரித்து வந்தனர்.

இனி சந்திரனின் இயல்புகள் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -

1.உபகோளின் பருமன் நிலை - சூரிய குடும்பத்தில் 5 ஆவது மிகப் பெரிய துணைக் கோள்
2.சந்திரனின் சராசரி விட்டம் - 1737.10 Km
3.துருவ விட்டம் - 1735.7 Km
4.கிடை விட்டம் - 1738.14 Km
5.மேற்பரப்பின் பரப்பளவு - (3.793 * 10 இன் வலு 7) Km2
6.கனவளவு - (2.1958 * 10 இன் வலு 10) Km3
7.நிறை - (7.3477 * 10 இன் வலு 22) Kg
8.சராசரி அடர்த்தி - 3.3464 g/cm3
9.கிடை அச்சில் மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 1.622 m/s2
10.தப்பு வேகம் - 2.38 Km/s
11.கிடை அச்சில் சுழற்சி வேகம் - 4.627 M/s
12.பூமியை ஒரு தடவை சுற்றி வர எடுக்கும் நேரம் - 27.321582 நாட்கள்
13.சராசரி சுற்றுப் பாதை வேகம் - 1.022 Km/s
14.மேற்பரப்பு அழுத்தம் - (10 இன் -7 ஆம் அடுக்கு) Pa(பாஸ்கல்)
15. பூமிக்கும் நிலவுக்குமான சராசரித் தூரம் - 384,403 Km

கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குச் சமான சந்திர மாதம் 28 நாட்களை உள்ளடக்கியது. சந்திரனில் சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் பகுதி சாய்வாக ஒரு நாளைக்கு ஒரு தடவை வீதம் வேறுபடுவதால் அதில் கலைகள் உண்டாகின்றன். சந்திரன் பூமியைச் சுற்றி வருவதே இதற்குக் காரணமாகும். இதன் விளைவாக முதல் 14 நாட்கள் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளரும் கலையாகவும் (வளர்பிறை) இறுதி 14 நாட்கள் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேயும் கலையாகவும் (தேய்பிறை) சந்திரன் தென்படுகின்றது.


மேலும் சந்திரனின் மேற் பரப்பை சாதாரண விண்வெளித் தொலைகாட்டி மூலம் ஒளி பெருக்கி அவதானித்தாலே அதில் பாரிய குழிகள் காணப்படுவதை அடையாளங் காணலாம். இக்குழிகளே வெறுங் கண்ணால் முழு நிலவை அவதானிக்கும் போது கறைகளாக தென்படுவன.

4.6 தொடக்கம் 3.9 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் சந்திரத் தரையில் வீழ்ந்த லட்சக் கணக்கான விண் கற்களாலேயே இக்குழிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் சந்திரனில் வளி மண்டலம் இல்லாத காரணத்தாலும் பூமியை விட ஆறில் ஒரு பங்கு ஈர்ப்பு சக்தியே உடையதாலும் இக்குழிகள் சேதமடையாமல் இலட்சக் கணக்கான ஆண்டுகளாக அப்படியே இருக்கின்றன. இன்னும் சில விஞ்ஞானிகள் சந்திரன் தோன்றிய புதிதில் அதில் உயிருடன் காணப்பட்ட பல எரிமலைகளின் செயற்பாடு காரணமாக இக் குழிகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றனர். இவர்களின் கூற்றுப் படி சந்திரன் தோன்றிய புதிதில் 4.45 பில்லியன் வருடங்களுக்கு முதலில் மிகப்பெரிய பரப்பளவுடைய எரிமலைக் குழம்புக் கடல் (magma) சந்திர மேற்பரப்பில் காணப்பட்டது என்பதாகும்.


சூரிய குடும்பம் தோன்றி 30-50 மில்லியன் வருடங்களுக்குப் பின்னர் அதாவது 4.527 பில்லியன் வருடங்களுக்குப் பின்னர் பூமியின் மேற்பரப்பில் இருந்து பிரிந்து சென்ற பகுதியே நிலவு எனக் கருதப்படுகின்றது. சூரிய குடும்பம் தோன்றிய புதிதில் ஈர்ப்பு விசை ஒழுங்குக்கு உட்படாத காரணத்தால் பூமியுடனும் ஏனைய கிரகங்களுடனும் மிக அதிகளவில் விண்கற்கள் மற்றும் வால்வெள்ளிகள் மோதி வந்தன. கிட்டத்தட்ட செவ்வாய்க் கிரகத்தின் பருமனுக்கு ஒப்பான விண் பொருள் ஒன்று பூமியுடன் மோதியதால் பிளவுற்ற பாகமே சந்திரன் என்பதே பெருமளவில் வானியலாளர்களால் ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்து. மேலும் பூமியில் மிகப் பெரிய பரப்பளவுடைய தரைப் பகுதியான பசுபிக் சமுத்திரம் உருவானதற்கும் பூமியிலிருந்து பிரிந்து போன சந்திரனே காரணம் எனவும் ஒரு சாரார் நம்புகின்றனர்.

பூரண சந்திரன் ஒளிரும் போது பூமியில் tidal waves எனப்படும் கடலலைகள் மேலே எழும்பி கொந்தளிப்பாக காணப்படுவதற்கும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் உடலில் பாலுணர்வு மேலோங்கி காணப்படுவதற்கும் மக்களின் மனநிலை பாதிப்புற்று காணப்படுவதற்கும் சந்திரனின் ஈர்ப்பு சக்தி காரணமாகின்றது என உளவியலாளர்களும் புவியியலாளர்களும் கருதுகின்றனர்.

சமீப காலத்தில் சந்திரனைக் குறித்த ஆய்வுகள் அதில் தண்ணீர் உள்ளதா உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் காணப்படுகின்றதா மேலும் அதன் பூமிக்கு புலப்படாத மறு பக்கத்தில் என்ன மர்மங்கள் உள்ளன ஆகிய ஆய்வுகள் குறித்த விரிவான ஆய்வுகள் அமெரிக்காவைத் தவிர ஐரோப்பா,சீனா,ரஷ்யா,ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளாலும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

இதிலும் குறிப்பாக நட்சத்திரங்களைப் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டிருந்த 2020 ஆம் ஆண்டுக்கான சந்திர பயணம் தவிர்க்க முடியாத காரணங்களால் 2010 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் இடை நிறுத்தப் பட்டமை குறிப்பிடத் தக்கது. இதே கட்டத்தில் இன்னொரு பக்கம் சீனாவும் ஜப்பானும் இணைந்து 2015 தொடக்கம் 2035 வரையிலான காலப் பகுதியில் சந்திரனில் வீரர்கள் தங்கி திறம்பட விண்ணாய்வுகளை மேற்கொள்ள வசதியாக விண் பாசறை அமைக்க திட்டமிட்டுள்ளன என்பதும் முக்கியமான தகவலாகும்.

சந்திரன் மீது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த சுருக்கமான விபரங்களைஇங்கு காண்க.

(நன்றி விக்கிபீடியா)

000000000000000000000000000000000

சூரிய குடும்பம் 3 (பூமி)


நட்சத்திரப் பயணங்கள் என்ற எமது பிரபஞ்சம் பற்றிய அறிவியல் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். சென்ற தொடரில் எமது பூமியின் உபகோளான சந்திரன் பற்றி பார்த்தோம்.

இத்தொடரினைப் படித்து வாசகர் ஒருவர் பூமியின் சுழற்சியைக் கொண்டு எவ்வாறு நேரம் மற்றும் மாதங்கள் கணிக்கப் படுகின்றன எனும் வினாவினை எழுப்பியிருந்தார். இத் தொடரில் அதற்கான விடையையும் பூமி பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வோம்.


சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும் (Terrestrial Planets) மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது. சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது. எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் 'புளூ பிளானெட்' என பூமி அழைக்கப் படுகின்றது. புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.


பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன. நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் -

1.பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் - 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்
3.சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் - 29.783 Km/s
4.பூமியின் சராசரி ஆரை - 6371 Km
5..துருவ ஆரை - 6356.8 Km
6.சுற்றளவு (கிடை அச்சில்) - 40 075.02 Km
7.நீள் கோள மேற்பரப்பளவு - 510 072 000 Km2
8.கனவளவு - 1.0832073 * 10 இன் வலு 12 Km3
9.நிறை - 5.9736 * 10 இன் வலு 24 Kg
10.சராசரி அடர்த்தி - 5.5153 g/cm3
11.மையத்திலிருந்து ஈர்ப்பு விசை - 9.780327 m/s2 அல்லது 0.99732 g
12.தப்பு வேகம் - 11.186 Km/s
13.சாய் கோணம் - 23.439281 பாகை
14.எதிரொளி திறன் - 0.367
15.மேற்பரப்பு வெப்பம் - 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)
16.வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் - 101.3 Pa
17. துணைக் கோள் - 1 (சந்திரன்)

பூமியானது தன் அச்சில் சுழலும் மற்றும் சூரியனையும் சுற்றி வரும் தன்மைகளைக் கொண்டு காலம் கணிக்கப் படுகின்றது. பூமி தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் சராசரியாக 24 மணித்தியாலங்கள் அல்லது ஒரு நாளாகவும் சூரியனை ஒருமுறை சுற்றி வர எடுக்கும் காலம் 365 1/4 நாட்கள் அல்லது ஒரு வருடமாகவும் கணிக்கப் படுகின்றது. இதில் சூரியனை சுற்றி வர எடுக்கும் காலத்தில் ஒரு நாளின் கால் பங்கை நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணிப்பிட்டு நான்காவது ஆண்டில் பெப்ரவரி மாதம் 29ம் திகதியாக சேர்க்கப்படுகின்றது. இதனையே நாம் லீப் வருடம் என்கிறோம். பண்டைய காலத்தில் சந்திரனின் பிறைகளை அடிப்படையாகக் கொண்டு மாதங்கள் கணிப்பிடப்பட்ட போதும் தற்போது அந் நடை முறை பின்பற்றப் படுவதில்லை. ஓரு மாதத்துக்கு மிக அண்மையாக அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை வளர்பிறை 14 நாட்களும் பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை தேய்பிறை 14 நாட்களும் மொத்தமாக 28 நாட்களே சந்திர மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் சராசரியாக சந்திரன் ஒருமுறை பூமியைச் சுற்றி சூரியனையும் சுற்றி வரும் வீதத்துடன் ஒப்பிடுகையில் முதல் பௌர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரை 29.53 சராசரியாக 30 நாட்கள் எடுப்பதாக வானியலாளர்கள் கணித்துள்ளனர். இது சைனோடிக் மாதம் எனப்படுகின்றது.

பூமியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து 23.4 பாகை செங்குத்தாக விலகி சாய்ந்திருப்பதால் பருவ நிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் படுவதே இதற்குக் காரணமாகும். வட துருவம் சூரியனை நோக்கி உள்ள போது வடவரைக் கோளத்தில் கோடை காலமும் சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர் காலமும் ஏற்படுகின்றது. இதே போன்றே தென் துருவத்திலும் எதிரிடையாக காலநிலை வேறுபாடுகள் ஏற்படுகின்றன. துருவப்பகுதிகளின் உச்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் வருடத்தின் ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாதம் இரவு என பருவங்கள் நிகழ்கின்றன. புவியின் சாய்வு காரணமாக சிறிது ஒழுங்கற்ற இயக்கம் நிகழ்வதாக வானியலாளர்கள் கருதுகின்றனர். பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு காரணமாக துருவ நகர்வுகள் நிகழ்கின்றன. இது சாண்ட்லேர் தள்ளாட்டம் எனப் படுகின்றது. மேலும் சூரியன் பூமிக்கிடையிலான தூரமும் மிகச்சிறியளவில் அதிகமாகிக் கொண்டு வருவதாகவும் இவர்கள் கூறுகின்றனர்.


பூமியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியில் மிக உயர்ந்த இடமாக வட இந்தியாவின் இமய மலைத் தொடரில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரமும் (8048 m) மிகத் தாழ்ந்த இடமாக பசுபிக் பெருங்கடலிலுள்ள மரியானா ஆழியும் (10 911.4 m or 11 Km) காணப்படுகின்றன. பூமியில் உள்ள நிலப் பரப்பு 7 கண்டங்களாகவும் 5 சமுத்திரங்களாகவும் வகுக்கப் பட்டுள்ளது. சமுத்திரங்களில் அடங்கியுள்ள நீரில் 97.5% வீதம் உப்பு நீராகவும் 2.5% வீதம் தூய நீராகவும் தூய நீரில் 68.7% வீதம் பனிக்கடிகளாகவும் காணப்படுகின்றன.


பூமியின் வளி மண்டலத்தை எடுத்துக் கொள்வோம். வளி மண்டலத்தின் மேற்பகுதி ஓசோன் படலத்தால் சூழப் பட்டிருப்பதால் பிரபஞ்ச பின்புலக் கதிர்கள் மற்றும் சூரியனிடமிருந்து வரும் அல்ட்ரா வயலெட் எனப் படும் புற ஊதாக் கதிர்கள் தடுக்கப் படுகின்றன. இதனால் உயிர் வாழ்க்கைக்கு உகந்த சூழல் பூமியில் நிகழ ஏதுவாகின்றது. புவி மேற் பரப்பில் சராசரி வளி மண்டல அழுத்தம் 8.5 Km வரை 101.325 Kpa ஆகக் காணப்படுகின்றது. பூமியில் தாவர வளர்ச்சிக்கு ஏதுவான சூரிய ஒளி மூலம் நிகழும் பச்சை வீடு விளைவு எனும் ஒளிப்பெருக்கம் 2.7 பில்லியம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது. தற்போது வளி மண்டலத்தில் காணப்படும் வாயுக்களின் வீதத்தைப் பார்த்தால் அதிகளவாக நைட்ரஜன் 78% வீதமும் ஆக்ஸிஜன் 21% வீதமும் மிகச்சிறியளவில் நீராவி மற்றும் காபனீரொட்சைட்டு வாயுக்களும் காணப்படுகின்றன.


இதுவரை பூமி பற்றிய பௌதிக மற்றும் விண்ணியல் தகவல்களைச் சுருக்கமாகப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கிரகமான புதனைப் பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

சூரிய குடும்பம் 4 (புதன்)


நட்சத்திரப் பயணங்கள் எனும் நம் அறிவியற் தொடரில் தற்போது சூரிய குடும்பம் பற்றி ஆராய்ந்து வருகிறோம். இன்றைய தொடரில் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள கோளான புதனைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம். சூரிய குடும்பத்தில் புளூட்டோவை கிரகமாக ஏற்றுக் கொள்ளாவிட்டால் புதனே மிகச் சிறிய கோளாகும். புதன் சூரியனைச் சுற்றிச் மிக ஒடுக்கமான நீள் வட்டப் பாதையினூடாகச் சுற்றி வருகின்றது. பூமியைப் போலன்றி புதனுக்கு துணைக் கோள்கள் கிடையாது. எனினும் பூமியின் சந்திரனை ஒத்த இயல்புகள் புதனிலும் காணப்படுகின்றன. சந்திரனைப் போலவே புதனுக்கும் வளி மண்டலம் கிடையாது. மேலும் புதனின் தரை மேற்பரப்பில் சந்திரனைப் போலவே பாரிய குழிகள் காணப்படுகின்றன. மேலும் புதனின் உட்பகுதியில் பெருமளவு இரும்பு மூலகம் காணப்படுகின்றது.


புதன் கிரகமே சூரிய குடும்பத்தில் சூரியனை மிக வேகமாக சுற்றி வரும் கிரகமாகும். இதன் காரணமாகவே ரோமானியர்களின் வேகத்துக்குரிய கடவுளான மெர்கியூரி இன் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது. சூரியனுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய புள்ளியாகக் தென்படும் புதனுக்கு ஈர்ப்பு விசை மிகக்குறைவு. இதனால் வளி மண்டலத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் இயல்பு இதற்கில்லை. மேலும் இது சூரியனைச் சுற்றி சுற்று வட்டப் பாதையில் 50 Km/s வேகத்தில் மிகத் துரிதமாகப் பயணித்த போதும் தன்னைத் தானே சுற்றும் வேகம் மிகக் குறைவு. இந்த வேகத்தில் இது சூரியனைச் சுற்றி வர 87.969 புவி நாட்களை எடுக்கின்றது. புதன் தன்னைத் தானே ஒரு முறை சுற்ற 59 புவி நாட்களை எடுக்கிறது. இது பூமியை விட 59 மடங்கு அதிகமாகும்.


புதன் சூரியனை இரு முறை சுற்றி வர எடுக்கும் நேரத்தில் தன்னைத் தானே மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. இதனால் ஒரு பகல் பொழுது கழிய அதாவது புதனில் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு திரும்பவும் சூரியன் வர 176 புவி நாட்களை எடுக்கின்றது. இது அதன் ஒரு பகல் பொழுது அதன் ஒரு வருடத்தின் இரு மடங்காக இருப்பதற்குக் காரணமாகின்றது.

பூமியிலிருந்து நோக்கும் போது வானத்தில் புதனைக் காண்பது மிக அரிதான ஒன்றாகும். சிலவேளைகளில் நள்ளிரவு பகுதிகளில் வானத்தில் புதன் தென்படும். சூரியனுக்கு மிக அண்மையில் புதன் இருப்பதால் அதன் பிரகாசம் புதனை மங்கச் செய்து விடுகின்றது. மேலும் மற்றைய கிரகங்களை விட ஒரு புறத்தில் (பகல்) மிக அதிக சூடும் மறு புறத்தில் (இரவு) மிக அதிக குளிரும் காணப்படும் கிரகமாகப் புதன் விளங்குகின்றது. அதாவது புதனில் சூரியனை நோக்கிய பகுதியில் வெப்பநிலை 800 பாகை பரனைட்டும் எதிர்ப்புறத்தில் -(மைனஸ்) 300 பாகை பரனைட்டும் ஆகக் காணப்படுகின்றது.

புதனைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இப்போது பார்ப்போம் -

1.சூரியனிலிருந்து சராசரி தூரம் - 0.387 AU
2.சூரியனைச் சுற்றி வர எடுக்கும் காலம் -- 87.969 புவி நாட்கள்
3.பூமி சார்பாக சுற்றுக் காலம் - 87 நாட்கள் 23.3 மணி
4.சராசரி சுற்று வேகம் - 47.8725 Km/S
5.சாய்வு - 7.004 பாகை
6.விட்டம் - 4879.4 Km
7.மேற்பரப்பளவு - 7.5 * 10 இன் வலு 7 Km2
8.திணிவு - 3.302 * 10 இன் வலு 23 Kg
9.அடர்த்தி - 5.427 g/cm3
10.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 2.78 M/S2
11.தன்னைத் தானே சுழல எடுக்கும் காலம் - 58 நாள் 15.5088 மணி
12.தப்பு வேகம் - 4.25 Km/s
13.பகலில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 623 K
14.இரவில் சராசரி மேற்பரப்பு வெப்ப நிலை - 103 K
புதனின் சூழலில் காணப்படும் மூலகங்களின் சதவீதம் -
பொட்டாசியம் - 31.7%
சோடியம் - 24.9%
ஒட்சிசன் அணு - 9.5%
ஆர்கன் - 7%
ஹீலியம் - 5.9%
ஒட்சிசன் மூலக்கூறு 5.6%
நைதரசன் - 5.2%
காபனீரொட்சைட்டு - 3.6%
நீர் - 3.4%
ஐதரசன் - 3.2%

புதனானது மிக வளைந்த நீள் வட்டப் பாதையை உடைய கோளாகும். சூரியனுக்கு மிக அருகில் 47 மில்லியன் கிலோ மீற்றர் தூரம் வரையும் சூரியனுக்குச் சேய்மையில் 70 மில்லியன் கிலோ மிற்றரும் இது சுற்று வட்டப் பாதையில் வருகின்றது. மேலும் கடினமான பாறைகளுடன் கூடிய இதன் தரை மேற்பரப்பில் சூரிய குடும்பம் தோன்றிய புதிதிலிருந்து இலட்சக் கணக்கான விண் கற்களும் வால் வெள்ளிகளும் மோதி வருவதால் மிக அதிகமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரிய குழிகள் இதன் மேற்பரப்பில் காணப்படுகின்றன. சூரியனுக்கு மிக அண்மையில் இருப்பதால் புதனைப் பற்றி மிகக் குறைவாகவே ஆராயப்பட்டு வந்துள்ளது எனலாம்.

1974-1975 வருடங்களில் புதனின் மேற்பரப்பைப் படம் பிடிப்பதற்காக மாரினர் 10 எனும் செய்மதியும் சமீபத்தில் 2008 ஆம் ஆண்டு ஜனவரியில் ஏவப்பட்ட மெசெஞ்சர் செய்மதியும் புதனை ஆராய்ந்தன. இதில் 2009 இல் புதனை நெருங்கிய மெசெஞ்சர் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்று வட்டப் பாதைக்குள் புகுந்து அதன் செயற்கைக் கோளாய் மாறி இன்று வரை புகைப் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வருகின்றமை குறிப்பிடத் தக்கது.


இது வரை புதன் கிரகம் பற்றிய சுருக்கமான தகவல்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பம் பற்றிய பகுதியில் காதலர்களின் கிரகமான வெள்ளி பற்றிய தகவல்களை பார்ப்போம்.

சூரிய குடும்பம் 5 (வெள்ளி)


இதுவரை சூரிய குடும்பத்தில் சூரியன்,பூமியின் துணைக்கோள் சந்திரன் மற்றும் தரை மேற்பரப்பை உடைய கிரகங்களான பூமி, புதன் ஆகிய அங்கத்தவர்களைப் பற்றிப் பார்த்தோம். இன்றைய தொடரில் வானில் சந்திரனுக்கு அடுத்து பிரகாசமாக அதிகாலை மற்றும் அந்தி மாலை ஆகிய இரு வேளைகளிலும் ஒரு நட்சத்திரம் போல் தென்படும் வீனஸ் எனப்படும் வெள்ளியைப் பற்றி பார்ப்போம். பொதுப்படையாக வீனஸ் என்பது ரோமானியார்களின் அன்பு,காதல் மற்றும் அழகுக்கான பெண் தெய்வத்தின் பெயராகும்.

ஹபிள் தொலைக் காட்டியால் படம் பிடிக்கப் பட்டுள்ள வெள்ளியின் ஒரு பகுதி

வெள்ளிக் கிரகத்தின் இன்னொரு பெயரான சுக்கிரன் என்பது இந்து சமயத்தில் நவக்கிரகங்களில் அதிர்ஷ்டத்துக்கு அதிபதியாகவும் அசுர குருவாகவும் விளங்கும் கோள் அல்லது தேவராகும். இன்னொரு விதத்தில் வெள்ளியில் காணப்படும் வரண்ட பள்ளத்தாக்குகளாலும் பல உயிருள்ள எரிமலைகளாலும் அது நரகம் அல்லது அசுரர்களின் நிலம் என ஒரு சாராரால் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி பருமனிலும் இன்னும் சில அம்சங்களிலும் பூமிக்கு சராசரியாக சமனாக இருப்பதால் பூமியின் தங்கைக் கிரகம் என அழைக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து புதனுக்கு அடுத்து 2வது இடத்தில் இது அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தின் பெரும்பாலான கிரகங்களைப் போலன்றி வெள்ளி வலமிருந்து இடமாகவே எதிர்ப்பக்கமாக தனது அச்சில் சுழலுகின்றது. வெள்ளிக் கிரகமே தனது சுற்று வட்டப் பாதையில் பூமிக்கு மிக அண்மையில் வந்து செல்லும் கிரகமாகும். இது சூரியனிடமிருந்து சராசரியாக 108 200 000 Km தூரத்தில் சுற்றி வருகிறது.


வெள்ளி தனது அச்சில் மிக மெதுவாக சுற்றி வரும் கிரகமாகும். இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 224.7 புவி நாட்களையும் தனது அச்சில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வர 243 நாட்களையும் எடுக்கிறது. வெள்ளியின் எடை பூமியின் எடையின் 4/5 பங்காகும். அதன் ஈர்ப்பு விசை புவியை விட சிறிது குறைவு. பூமியில் 100 பவுண்ட் எடையுடைய ஒரு பொருள் வெள்ளியில் 91 பவுண்டுகளாகும். மேலும் வெள்ளியின் அடர்த்தியும் புவியை விட சிறிதே குறைவாகும். வெள்ளியின் வளி மண்டலத்தின் தன்மை காரணமாக அது சூரிய குடும்பத்தில் வேறு எந்த கிரகத்தையும் விட மிக அதிக வெப்பமுள்ள கிரகமாக விளங்குகின்றது. வெள்ளியின் மேற்பரப்பு வளி மண்டல அடுக்கின் வெப்ப நிலை 55 F(13 C) ஆகவும் தரை மேற்பரப்பின் வெப்பநிலை 870 F(465 C) ஆகவும் காணப்படுகின்றது. இக்கிரகத்தின் அதீத வெப்பநிலை காரணமாக இக்கிரகத்தின் உள்ளே தண்ணீர் காணப்படின் அது முழுதும் ஆவியாகி விடும் சூழ்நிலையே நிலவுகின்றது. இதன் காரணமாக பூமியில் காணப்படும் உயிரினங்கள் இங்கே வாழ முடியாது. எனினும் வேறு ஏதும் உயிர்கள் இங்கு காணப்படுகிறதா என விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தவும் முடியவில்லை. இனி வெள்ளி பற்றிய சுருக்கமான இயல்புகளைப் பார்ப்போம்.

1.சூரியனிலிருந்து சராசரித் தூரம் - 0.72333199 AU
2.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் - 224.701 நாட்கள்
3.தன்னைத் தானே தனதச்சில் ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 243.0187 நாட்கள்
4.பூமி சார்பாக சுற்றுக் காலம் - 583.92 நாட்கள்
5.சராசரி சுற்று வேகம் - 35.0214 Km/s
6.துணைக் கோள் - இல்லை
7.மையத்தினூடாக விட்டம் - 12103.6 Km
8.மேற்பரப்பளவு - (4.60 * 10 இன் வலு 8) Km2
9.திணிவு - (4.869 * 10 இன் வலு 24) Kg
10.சராசரி அடர்த்தி - 5.24 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு விசை - 8.87 m/s2
12அச்சின் சாய்வு - 2.64 பாகை
13.தப்பு வேகம் - 10.36 Km/s
14.மேற்பரப்பு வெப்ப நிலை - தாழ்வு 228K இடை 737 K உயர் 773 K
15.வளியமுக்கம் - 9321.9 Kpa

வெள்ளியின் வளி மண்டலத்தில் உள்ள வாயுக்களின் வீதங்கள் - 
1.கார்பனீரொட்சைட்டு - 96%
2.நைட்ரஜன் - 3%
3.சல்பர் ஒக்ஸைட் - 0.015%
4.நீராவி - 0.002%
5.ஹீலியம் - 0.0012%
6.நியோன் - 0.0007%

வெள்ளிக் கிரகத்தின் வயது புவியின் வயதுக்கு அண்ணளவிற் சமனாகும். இரண்டு கிரகங்களும் ஒரே நேரத்திலேயே சூரியனிடமிருந்து தோன்றின என்றும் ஒரு சிலரால் கருதப்படுகின்றது. வெள்ளியின் வளி மண்டலத்தைப் பார்த்தால் மிக அதிகளவாக காபனீரொட்சைட்டு (96%) காணப்படுகின்றது. இதனால் சூரிய குடும்பத்திலேயே மிகப் பாரமான வளி மண்டலத்தையுடைய கிரகமாக வெள்ளி விளங்குகின்றது. பூமியைப் போலவே வெள்ளியிலும் பச்சை வீட்டு விளைவு எனும் தாக்கம் நிகழ்கின்றது. ஆனால் இத்தாக்கம் தாவரங்களில் அல்லாது வளி மண்டலத்தில் நிகழ்கிறது. அதாவது காபனீரொட்சைட்டும், சல்பூரிக் அசிட்டும் இணைந்து சூரிய ஒளியை சிறைப் பிடிப்பதுடன் அதை வெளியேறாமலும் செய்து விடுகின்றன. இதனாலேயே வெள்ளியின் சுற்றாடல் மிக வெப்பமாகக் காணப்படுகின்றது.

மேலும் வெள்ளியின் வளியமுக்கமும் பூமியை விட 90 மடங்கு அதிகம் (9321 Kpa) என்பதுடன் வெள்ளியின் பூமத்திய ரேகைக்கு மேலாக கிழக்கிலிருந்து மேற்காக 362 Km/h வேகத்தில் தொடர்ச்சியாகக் காற்று வீசி வருகின்றது.

வெள்ளியின் தரையியல்பைப் பார்ப்போம். பூமியைப் போலவே வெள்ளியிலும் மலைகள்,மைதானங்கள்,பள்ளத்தாக்குகள், மற்றும் சமவெளிகள் என்பன காணப்படுகின்றன. தரை மேற்பரப்பில் 65% வீதம் சம்வெளிகளாகும். 35% வீதம் மலைகள் காணப்படுகின்றன. மேலும் ஆயிரக்கணக்கான எரிமலைகளும் வரண்ட நிலங்களும் காணப்படுகின்றன. வெள்ளியின் மிக உயர்ந்த மலை மாக்ஸ்வெல் இமய மலையை விடப் பெரிது என்பதுடன் இதன் உயரம் 11.3 Km ஆகும். வெள்ளியில் சந்திரன் மற்றும் செவ்வாயை விடக் குறைவாகவே குழிகள் காணப்படுகின்றன. மேலும் இதன் தரை மேற் பரப்பின் வயது 1 பில்லியன் வருடங்களை விடக் குறைவாகும். பூமியில் காணப்படாத அரிதான மூலகங்கள் சில வெள்ளியின் உட்பகுதியிலிருந்து எரிமலைச் செயற்பாட்டின் மூலம் அதன் தரை மேற்பரப்புக்குத் தள்ளப் பட்டு வருகின்றமை அவதானிக்கப் பட்டுள்ளது.


வானியல் விஞ்ஞானிகள் ரேடியோ வானியல்,செய்மதிகள், மற்றும் ரேடார் ஆகிய தொழிநுட்பங்களைப் பிரயோகித்து கடந்த 50 வருடங்களாக வெள்ளியின் தரையியல்பை ஆராய்ந்து வருகின்றனர். வெள்ளிக் கிரகமே விண்கலம் ஒன்றின் மூலம் முதன் முறையாக ஆராயப்பட்ட கிரகமாகும். நாசாவின் ஆளில்லா விண்கலமான 'மரீனர் 2' 12 மாதங்களாகக் கிட்டத்தட்ட 34 760 Km தூரம் பயணித்து வெள்ளியை அண்மித்து அதன் மேற்பரப்பு வெப்ப நிலை குறித்து ஆராய்ந்தது. அதன் பின் 1966ம் ஆண்டு இரு ரஷ்ஷிய ஆளில்லா விண்கலங்கள் வெனேரா 2 மற்றும் வெனேரா 3 என்பன வெள்ளியை அண்மித்து அது குறித்து ஆராய்ந்தன. இதையடுத்து மேலும் சில விண்கலங்கள் உதாரணமாக நாசாவின் மரீனர் 10 மற்றும் ரஷ்யாவின் வெனேரா 7,9,10 என்பன வெள்ளிக்கு அனுப்பப் பட்டன.


சமீபத்தில் வெள்ளி குறித்து ஆராய்ந்த விண்கலங்களில் நாசாவின் மகெல்லன் மற்றும் ஐரோப்பிய விண் ஆய்வுக் கழகத்தின் வீனஸ் எக்ஸ்பிரெஸ் கலமும் முக்கியமானவை. வெள்ளிக் கிரகத்துக்கு அனுப்பபட்ட மற்று அனுப்பப் படவுள்ள விண்கலங்கள் பற்றிய தகவல்களை அறிய விக்கிபீடியாவின் இத் தளத்துக்குச் சென்று நம் வாசகர்கள் பார்வையிட முடியும் -



http://www.4tamilmedia.com/knowledge/essays/4078-star-journey-11-solar-system-5-venus










Comments