இந்து மதம் எங்கே போகிறது?- மெய்யியல் -பாகம் - 36 - 42.


36 கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா?


கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

என்னது? பெண்கள் மாநாடா? அதுவும் வேதத்திலா? என்ன சொல்கிறீர்கள்? என்ற உங்கள் பிரமிப்பு புரிகிறது.அந்த ஸ்த்ரீ சம்ஸாதத்துக்குள் நாம் நுழைவதற்குமுன் பொதுவான சபாவைப் பற்றி பார்த்து விடுவோம்.

ரிக் வேதத்தில் வருகின்ற ஸ்லோகங்கள் இவை.“நஸா சபாயத்து நபாது செய்ஹநஸா சபாயத்து விபாது செய்ஹ”

அதாவது... எதையுமே எந்த விஷயத்தையுமே கூடிப்பேசி, விவாதித்து இந்த முடிவெடுத்தால் நல்லது, கெட்டதுகள் என்னென்ன ஏற்படும் என்பதை பலரின் கருத்துக்கு விட்டு பெரும்பாலும் என்ன சொல்கிறார்களோ? அதை முடிவாகக் கருதவேண்டும்.”

- இன்று நமது பார்லிமென்ட் (Parliament) நடைமுறையில் உள்ள தத்துவத்தை ரிக் வேதச் சிந்தனை யாளர்கள் ரீங்காரமிட்டுள்ளார்கள்.சரி... சபாவில் குழப்பம் குளறுபடி வந்தால்?

“சங்க சத்வம்சம்ப சுத்வம்சம்போ மனாம்ஸி ஜானதாம்”ஒரே பாதையில் நடங்கள், ஒரே வழியில் சிந்தியுங்கள். ஒன்றாகப் பேசி முடிவெடுங்கள். (Walk United, Think United, Talk United) என ஒற்றுமையாக வலியுறுத்தி ‘சபா’வை ஸ்திரப்படுத்தச் சொல்கிறது ரிக் வேதம்.

அதாவது... வேத காலத்தில் சமூக கட்டமைப்புக்குள் கட்டுப்பட்டு வளர்ந்த மக்களின் பிரச்சினை களை தீர்த்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் சபா. இந்த சபாவில் சிந்தனை சக்தி மிகுந்த ரிஷிகள் அமர்ந்திருப்பார்கள். அந்தந்த குழுமத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாகக் கூடி தத்தமது எண்ணங்களை எடுத்துரைப்பார்கள்.

இறுதியாக ரிஷிகள் இதற்கொரு முடிவு சொல்வார்கள். சரி... இங்கு பெண்களைப் பற்றியே எங்கும் சொல்லக் காணோமே. பிறகு, பெண்கள் எப்படி வருவார்கள்?

உங்கள் கேள்விக்கு... இன்னொரு வேத ஸ்லோகம் விடை சொல்கிறது...

‘தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனேஸி...’அதாவது நீ எங்கு சென்றாலும்... யாரைப் பார்க்கச் சென்றாலும்... ஏன் கடவுளையே பார்க்கச் சென்றாலும் உன் மனைவியை பத்தினியை உடன் கூட்டிப்போ.

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொன்ன வேதம்... கால வளர்ச்சியில் இதனை சொல்கிறது என நாம் எடுத்துக் கொள்ளலாம். (ஏனென்றால், வேதங்கள் திடுதிப்பென திடீரென்று ஒரே பொழுதில் உண்டாக்கப்பட்டவை அல்ல...)இதன்படி ஒவ்வொருத்தரும் சபாவுக்கு வரும்போது தன் மனைவியை கூட்டிவர ஆரம்பித்தான். அப்படி வரும்போதுதான் பெண்கள் சபாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

அப்போது வெளியுலக பிரச்சினைகள் அவர்கள் காதிலும் விழுந்தது. கணவனின் கட்டளைகளாகலேயே நிரம்பிப் போயிருந்த காதுகளில் சமூகப் பிரச்சினைகள் வந்து விழுந்தன.

வாயில்படி தாண்டியிராத பெண்களின் வாயிலிருந்து பொதுக் கருத்துகள் புறப்பட ஆரம்பித்தன.பிரச்சினைகளைப் பற்றி பெண்கள் பேசிய பேச்சுகளை கேட்ட ஆண்கள் அசந்து போய்விட்டனர். எப்படி இவர்களுக்கு இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது? என வியந்தனர்.

இந்தக் காட்சியை“அபிப்ராவந்த்தா சமனே இவயோஷாஹதகல்யாண்யஹ ஸ்மயமானாஹா அக்னிம்...”என்று வேத ஸ்லோகம் சொல்கிறது.
“எல்லாம் கூடியிருக்கிற இடத்திலே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமா? அங்கே வெளிச்சத்துக்காக வளர்க்கப்பட்டிருக்கும் அக்னியைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு சிரித்தபடியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.”

இதைப் பார்த்துதான்... அழைத்து வந்த ஆண்கள் வியப்படைந்து போய்விட்டார்கள். அவர்களின் வியப்புக்கு வேதம் விளக்கம் சொல்கிறது கவனியுங்கள்.“°த்ரீநாம் த்விகனம் ஆஹாரம் புத்தீஸ் சாபி சதுர் குணம்”அதாவது வீட்டில் ஆண்கள் சாப்பிட்டு மிச்சம் வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள்.

இதையெல்லாம் பெண்கள்தான் சாப்பிடுவாள். அதனால், அந்த ஆண் சாப்பிட்ட சாப்பாட்டைவிட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகவே அவள் ஆஹாரம் புசிப்பாள். இரண்டு மடங்கு உணவு அதிகமாக உண்ணும் பெண்... ஆணைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவைப் பெற்றிருப்பாள்.

இவ்வாறு ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாய் ‘புத்தி’ பெற்ற பெண்கள் வேத மந்த்ரங்களையும் இயற்றினார்கள். அத்யயனம் செய்தார்கள் என்பது வேதமே ஒப்புக்கொள்ளும் அளப்பரிய உண்மை.“அபகேஸ்ம ஸ்த்ரியோமந்த்ர கிருத ஆசுஹீப்ரா கல்பேது நாரீனாம்பௌஞ்ச்சீ பந்தது இஷ்யரேஅத்யாபனந்த வேதானாம்...”பெண்கள் வேதமந்த்ரங்களையும் இயற்றியுள்ளார்கள்.

பெண்கள் இயற்றிய வேத மந்த்ரங்களை பெண்களே அத்யயனம் அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள்.குறிப்பாக ஆத்ரேய கோத்ரத்துப் பெண்கள் இதில் சிறப்பாக விளங்கினார்கள். ஆத்ரேய கோத்ரம் என்றால் ஆத்ரேயர் என்ற ரிஷியின் வழிவந்தவர்கள் என்று பொருள்.

கோத்ரம் என்றால் என்ன? ஒன்றும் பெரிய அர்த்தம் இல்லை.வேத காலங்களில் மாடுகளை குழு குழுவாக கட்டி வைத்திருப்பார்கள். ஒரு ரிஷியின் குழுவினர் மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து கட்டி வைத்திருப்பார்கள்.‘கோ’களை அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.

இப்படியாக ஆத்ரேய கோத்ர பெண்கள் அறிவில் மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். இப்படிப்பட்ட பெண்கள்தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது பெண்களுக்காக மட்டும் கூட்டங்களை கூட்டினர். இதுதான் பெண்களின் மாநாடு... ஒருநாள் இந்த மாநாட்டில்...?

தொடரும்

0000000000000000000000000000000

37 மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது. கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

ஸ்திரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள் செய்து... வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.

கார்க்தி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது.

இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம் ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம் அளிக்கும் ஒரு துன்பம்... வலி உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’ என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம்.

அவள் தீட்டு, அவளை விலக்கிவையுங்கள், அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது ஏற்கெனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள் - அறியாமையால் ஆண்கள் தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

பார்ப்பதற்கு முன்...மீண்டும் ஸ்திரீ ஸம்ஸாதம்.... பெண்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கலாக மிதந்து கொண்டிருக்கிறது. அந்த வேளையில் திடுமென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே வந்திறங்குகிறான் இந்திரன்.

இந்திரன்? ஆம் தேவர்களின் அரசன். சர்வ சந்தோஷங்களையும் அனுபவித்து அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது. செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறி போயிருந்தான்.

புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப் பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின் முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல, அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம் அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு!

ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்...!குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம். உச்ச பட்ச தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்றுகூட சொல்லலாம். இக்குற்றத்தை செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர

சரி.. என்ன செய்தால் இந்த குற்றம் வரும்? ப்ராமணனை கொலை செய்வது தான் ப்ரமஹத்தி குற்றம். பிரம்மம் - பிராமணன்; ஹத்தி கொலை அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரமஹத்தி.

இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன் செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன் என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே. அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரமஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான். அதாவது அவர்கள் இவ்வளவு ப்ரமஹத்திகள்.

சரி., நாம் இந்திரன் விவாவதத்துக்கு வருவோம் ப்ரம்ஹாத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான். காஸ்யபன் என்றொரு முனிவர். அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் மதத்தவர்கள். அதாவது அசுரர்கள். திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்கைள் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிதிக்கு பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனை என்னும் பெண்ணை மணமுடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும் அசுரப் பெண்ணாகிய ரஸனைக்கு பிறந்தவன் விஸ்வரூபன். இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன் - விஸ்வரூபனின் தலையையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணன் கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ?

பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் கத்திப் பார்த்தான் அலைந்தான் - திரிந்தான்.

கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரமஹத்தி கொடுத்து விடுதலை பெறலாம் என நினைத்தான்.முதலில் பூமா தேவியை போய் பார்த்து அழுதான் இந்திரன். என்னயென்று கேட்டாள் பூமாதேவி.

இதுபோல் நான் ப்ரமஹத்தி தோஷத்திற்கு ஆளாகிவிட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான் எடுத்துக்கொண்டு எனக்கு அருளவேண்டும் என்றான் இந்திரன்.

எல்லா தோஷத்தையும் நானே எடுத்துக்கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். அதனால் நீ கேட்கிறாய் என்பதற்காக ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு என்கிறாள் பூமாதேவி.

அதன்படி.... இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறு பகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான்.

அதுதான், தானியங்கள் விவசாய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலைவனங்களாகவும் மாறிபோய் விட்டன. தோஷத்தை வாங்கிக் கொண்டதற்கு பரிகாரமாக பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.

விருட்சங்ளே... என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சினான். அப்படியானால், எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம் தா என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன் உடனே தன் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

அதுதான் மரங்களில் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ‘ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை வைத்திருந்த இந்திரன் கடைசியாக ஸ்தரீ சம்ஸாதம். அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசித்தான். அங்கே?

(தொடரும்)

0000000000000000000000000000000000

38 இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.

பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்...

மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.
இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது

பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்... மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை எங்கே கொண்டுபோய் கொட்டுவது என யோசித்தான்.

யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரீ ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி பிரவேசித்தான் என்பதை சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம் இன்றி... வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப்போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான் இந்திரன். அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.

‘எனது ப்ரம்மஹத்திதோஷத்தில் ஒரு பங்கு இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயைகூர்ந்து ஏற்றுக்கொண்டால் பழையபடி இந்திரனாகிவிடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான் இந்திரன்.

“எங்களுக்கென்ன தருவாய்?”

“கேட்டதை தருகிறேன்...”“அப்படியானால்... நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும் வரை எங்கள் புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு...’- என வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள்.

மனிதனை தவிர மற்ற விலங்குகளில்... கர்ப்பம் தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது. மனிதர்களில்தான் பிரசவத்துக்கு முன்புவரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது.

இந்திரனும், பிரசவத்துக்கு குறிப்பிட்ட காலம் முன்புவரை பெண்கள் தங்கள் புருஷனோடு தேகஸம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான்.

கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும் வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான்.இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.

இந்த இடத்தில்தான் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்கவேண்டும். தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா?

அந்த தோஷம்தான் பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக் கதை.

அதனால்தான் அந்த மூன்று நாள்களை பகிஷ்டை என்றே சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டார்கள். அதாவது... வெளியில் வை... விலக்கி வை... ஒதுக்கி வை என்று இதற்கு அர்த்தம்.

பிராமணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி கொலைக் குற்றத்தை தங்களுக்குள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதனால் அவள் தோஷம் பிடித்தவள் என்றது வேதம்.

அதாவது... இயற்கை பெண்ணின் உடலில் நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சி... அது ஒரு கற்பனைக் கதையோடு தொடர்புபடுத்தி அந்த நாள்களில் பெண்களை ஒதுக்கி வைத்து துன்புறுத்தி இருக்கிறது வேதம் வகுத்த விதி.

ஒரு பக்கம் இப்படி பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்...

இன்னொரு பக்கம் அழகிப் போட்டியே நடத்தியிருக்கின்ற தென்றால் பாருங்களேன். அதாவது இன்று மிஸ் வேர்ல்டு என்று சொல்வதைப்போல ‘மிஸ் வேதா’ என்று வேண்டுமானால் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்.அந்த அளவுக்குப் பெண்களை அழகுப் பதுமைகளாக முன்மொழிந்து வழிமொழிகிறது. வேதகாலம் எப்படி? இப்படித்தான்.

“யதாஷனவ யோஹாஹாஸ்வர்ணம் க்ரணியம் பேசலம்விப்ரதீ ரூபானி ஆஸ்தி...”

வேதகால விதிகளில் பெண்கள் எப்படி நடந்து வந்தார்கள் தெரியுமா?முழுக்க முழுக்க தங்க நகைகள், ஆபரணங்கள் அணிந்து... மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பதுபோல நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி ஜொலிக்கிற தென்றால்... ஜலத்தில் துளியளவில் நெய் பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ... அதேபோல, தங்க ஆபரணங்களை தாங்கி வரும் பெண்ணும் ஜொலிக்கிறாள் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.

இந்த அழகு மட்டும்தானா? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா? “சுப்ராஹா கன்யாஹா யுவதயஹாசுபேஷசஹா கர்மகிருதஹாசுகிர்தாஹா வீர்யாபதிஹி...”பெண்ணானவள் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம்.

அடுத்தவர்களை கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை ஏற்படுத்தக் கூடியவள். எக்கச்சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள். எப்போதும் துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.

எதிர்காலத்தைப்பற்றி கவலை கொண்டு அதற்கேற்றவாறு வாழ்க்கையை நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம்விட உடல், உள்ளம் இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குத்தான்.என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது அந்த ஸ்லோகம்.

சரி சரி... தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்... வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும்போது பெண்களை எப்படி நடத்தியது? ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம். சோம யாகம். கிட்டத்தட்ட நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லாரும் இக்கால நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன்.

யாகம் நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதைக் கண்டு ஒரு கணம் யோசித்தார்கள். ‘அம்மா... நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது, முகத்தை மூடிக்கோங்கோ...’ என பெருங்குரலில் ஆணையிட்டனர்.

உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலை தலைப்பை எடுத்து ‘காதுகளோடு முகத்தை மூடிக்கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்...?

யாகங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது. விழுந்திட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது.

அதற்காகத்தான். சில வருடங்களுக்கு முன் திருச்சூரில் நடந்த நிகழ்வு இது. வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால் காட்ட முடியும்.

ஆனால்...இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்த யாகம்... வேத காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால நிகழ்வைச் சொன்னேன்.

வேதகால பெண்களின் தேக லட்சணம் யாக லட்சணம் எல்லாம் பார்த்தோம்... அன்று கல்யாணம் எப்படி? முதல் மணமகள் யார்?

தொடரும்

000000000000000000000000000000

39 விவாஹம் என்றால் தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம்.

பெண்களின் இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம், எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா?

வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

அடுத்து... நாம் பார்க்கப் போவது பெண்களின் வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.

வேதத்தில் சில இடங்களில் விவாஹம் என்றும் பாணிக்ரஹணம் என்றும் குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது.

முதலில்... விவாஹம் என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்வோம். ஏனென்றால், இன்று வரையும் திருமணப் பத்திரிகைகளுக்கு ‘விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை’ என பெயரிட்டு அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை. அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை.

இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.

சரி... நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். ‘முதலில் நீ போய் பெண்ணை பார்த்துவிட்டு வா’ என்று.

“ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய வரேபி வராதுகாசுப்ர தீததா ஆஸ்மா சுமிந்த்ராஉபயம் ஜீஹோஷதீ...” என போகும் இந்த வேத மந்த்ரம்...

தரகர் எப்படி பெண் பார்க்க செல்லவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்கச் செல்லவேண்டும்.

இல்லையென்றால், மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைக்காரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல் இருந்து விடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து வைத்திருக்கிறது வேதம்

அவர் பார்த்து பேசிவிட்டு வந்தபின் அடுத்தது பெண்ணும், பையனும் பார்த்துக் கொள்கிறார்கள். பரஸ்பர பார்வை பரிவர்த்தனம், பிறகு கை பிடிக்கிறார்கள். அதாவது Mutual Meeting. அதாவது பாணிக்ரஹணம். எங்கே பார்த்துக் கொள்கிறார்கள்? மணமேடையில்?

அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்...

தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீதீர்க்கமாயு க்ரேனோவதாம்...

ஏ... பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன் சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம் செய்துகொள்வாயாக.

நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்...“க்ருப்ணாபிதே சுப்ரஜா அஸ்த்வயாமயாபத்ய ஜலதஷ்டிம் யதாஸஹா” நீ கிழவியான பிறகு கூட உனக்கு இவன் தான் துணை என்கிறது வேதம். பொதுவாக திருமணம் இப்படி நடந்திருக்கிறது.

வேதத்தின் முதல் மணமகள் யார்? அவளது திருமணம் எப்படி நடந்தது?

ரிக் வேதத்தின் 10-ஆவது மண்டலத்தில் முதல் திருமணம்பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.சூர்யா என்கிற உஷஸ் என்பவள் சோமராஜனை காதலிக்கிறாள். அதாவது சந்திரனை காதலிக்கிறாள். அவனையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால், இதை தன் அப்பனிடம் எப்படிச் சொல்வது என்று தவித்துக் கொண்டிருக்கிறாள்.

இந்த நிலையில்தான் சூர்யாவின் தந்தை அவளுக்கு திருமண ஏற்பாடுகளை ஆரம்பித்து விட்டான். எப்படி? உலகெங்கும் உள்ள ராஜாக்களுக்கு அழைப்பு விடுக்கிறான். அவர்களுக்கு ஒரு பந்தயம்.

அதாவது சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ராஜாக்கள் தங்களது ரதங்களோடு வந்துவிடவேண்டும். அங்கே அனைத்து ராஜாக்களுக்கும் ரதப் பந்தயம் நடக்கும். குறிப்பிட்ட தூரத்திலுள்ள இலக்கை எந்த ராஜாவின் ரதம் முதலில் அடைகிறதோ அவருக்கு சூர்யா மணப்பெண்ணாக கிடைப்பாள்.

இப்படியாக... அனைத்து ராஜாக்களும் அந்த பந்தயத்துக்கு அழைக்கப் பட்டிருந்தார்கள். சூர்யாவை அடைந்தே தீருவது என்ற ஆசையோடு ஒவ்வொரு ராஜாவும் தங்கள் ரதங்களோடு வந்திருந்தனர்.

அந்த இடமே வண்ண மயமாக இருந்தது. பல தேசத்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதங்கள் அலங்காரமாய் அணிவகுத்திருந்தன. அந்தக் கூட்டத்தில் சூர்யாவை காதலித்துக் கொண்டிருக்கிற சோமராஜாவும் தன் ரதத்தோடு வந்திருந்தார்.

சூர்யாவுக்கும் பதற்றம் பரவிக் கிடந்தது. நமது நாயகன் பந்தயத்தில் முந்தி வந்து நம்மை கைப்பிடிப்பானா? என்ற எதிர்பார்ப்புடன் இருந்தாள் சூர்யா.

பந்தயம் ஆரம்பித்தது. ராஜமுரசு அறையப்பட்டதும் அனைத்து ரதங்களும் தயாராயின. சூர்யாவை பரிசுப் பொருளாக அடையவேண்டும் என்ற ஆசையில் ராஜாக்கள் தங்கள் ரதங்களில் கட்டப்பட்டிருந்த குதிரைகளை முடுக்க ஆரம்பித்தனர்.

இவர்களுக்கிடையே அஸ்வதி ராஜாவும் அழகான சூர்யாமேல் ஆசைப்பட்டான். ஏன் அவன் ஆசைப்படக் கூடாது என்கிறீர்களா? அவன் ரதத்தில் கட்டப்பட்டிருந்தவை குதிரைகள் அல்ல, கழுதைகள்.

குதிரைகள் ரதங்களோடு தனது கழுதை ரதத்தையும் வேகமாக செலுத்தினான் அஸ்வதி ராஜா.சூர்யா... தன் அரண்மனை மாடத்திலிருந்து இந்தப் பந்தயத்தை உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். தன் சோமராஜா முந்தவேண்டும் என்று அவள் தியானித்துக் கொண்டிருக்க...யாருமே எதிர்பாராத வகையில்..--

தொடரும்

0000000000000000000000000000000

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 40

திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.
பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும்.

சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.

திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.
சூர்யாவை பரிசாக பெறுவதற்காக நடந்த அந்த ரதப் பந்தயத்திலே.. யாருமே எதிர்பாரத வகையிலே....பல குதிரை ரதங்களை பின்னால் தள்ளிவிட்டு வெகு வேகமாக முன்னேறியது கழுதைகள் பூட்டப்பட்ட ரதம்?

ஆமாம். பல குதிரை ராஜாக்களை தோற்கடித்து அஸ்வதி ராஜா முதலிடத்திலேயே வந்துவிட்டான். பந்தயக்களமே ஸ்தம்பித்துவிட்டது. இவ்வளவு குதிரை பூட்டிய ரதங்களை எப்படி கழுதை பூட்டிய ரதம் முந்தி வந்தது என எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். அதே நேரம் பத்தயத்தை பார்த்துக்கொண்டே இருந்த சூர்யா, அஸ்வதி ராஜாவின் வெற்றியைப் பார்த்து திகைத்து விட்டாள். அவள் பிரேமித்த சோமராஜா தோற்றுப்போனதால், அவனை கைப்பிடிக்க முடியாததென்று அவளுக்கு உறுதியாக பட்டுவிட்டது.

அடுத்த க்ஷணத்திலிருந்தே அஸ்வதி ராஜாவுக்கு சூர்யாவை திருமணம் செய்ய ஏற்பாடுகள் மளமளவென ஆரம்பித்தன. தான் பிரேமித்த சோமராஜா தன் கைகழுவி போய்விட்டானே என சூர்யாவின் கண்கள் சமுத்திரமாகின. கன்னப் பிரதேசங்கள் உப்பளமாயின.

இந்த நிலையில், அஸ்வதி ராஜா ஜெயித்தது போலவே மறுபடியும் யாரும் எதிர் பார்க்காத ஒரு காரியம் சம்பவித்து, அஸ்வதி ராஜாவே சூர்யாவை அழைத்தான். தேவீ சோமராஜா மீதான உள் பிரேமை எனக்குத் தெரியும். பந்தயத்தில் கலந்துகொள்ளத்தான் நான் வந்தேன். நானே எதிர்பார்க்காமல் உனது மணாளன் ஆகிவிட்டேன்.

இப்போதும் ஒன்றும் ஆகிவிடவில்லை. நீ உன் இஷ்டப்படி சோமராஜாவையே திருமணம் செய்துகொள். எனக்கு இதில் பூரண இஷ்டம் என யாருமே எதிர்பாராத வகையில் சூர்யா சோமராஜாவை ஜோடி சேர்த்து வைத்தான் அஸ்வதி ராஜா. இப்படித்தான் வேதத்தின் முதல் திருமணமே மிக கோலாகலமாக நடந்தது வேதப்படி பெண்களை திருமணம் செய்து கொடுக்கும்போது சீதனம் ரொம்ப முக்கியமானது.

இனி அவளுக்கு எதை செய்யப்போகிறாய். அதனால் மொத்தமாக அவளுக்கு செய்ய வேண்டியதை செய்துவிடு என்கிறது வேதம்.அதனால், பெண்ணுக்காக ஆபரணங்கள் வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் என பல விலை மதிப்பற்ற பொருள்களை பெண்ணுடன் சேர்த்து அனுப்புவார்கள்.

சீதனம் எவ்வளவு இருக்கும் என்பதை யூகிப்பதற்காக ஒரு வேத மந்த்ரம் பாருங்கள்

‘ஏ கந்தர்வாஹா அப்சரஸ்ய தேவிஹிஏஷீ விருஷ்ஹேசு ஆஷதே ஷிவாஸ்தே’

ஏ, தேவதையே கந்தவர்களே எங்கள் பெண்ணை திருமணம் செய்து அனுப்புகிறோம். அவளுக்காக சீதனங்களை வண்டி வண்டியாக அனுப்புகிறோம். அவை அனைத்தும் அவளோடு பத்திரமாக போய்ச்சேரவேண்டும். எல்லாமே விலை மதிப்பற்ற பொருட்கள் என்பதால் பேய்கள், பிசாசுகள் அவற்றை அண்டாமல் அபகரித்துச் சென்றுவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வேண்டுகிறது அந்த வேத மந்த்ரம்

சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? இன்னாரு புதிய சீதனத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது வேதம். அதன் பெயர் அனுதேயி. அனுதேயி என்றால் என்ன பொருள்? அதன் பயன் என்ன? நீங்கள் கேட்பது புரிகிறது. அனுதேயி என்றால் ஜடப் பொருள் அல்ல. அது இயங்கும் உயிர் பொருள். மணப்பெண் மணமுடித்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது கூடவே இந்த உயிர்ப் பொருளும் செல்லும். அவள் சொன்ன வேலைகளைச் செய்யும். அப்படி என்ன சீதனம் அது என யோசிக்கிறீர்களா?

அதாவது அனுதேயி என்றால் பின் தொடர்ந்து வந்து சொன்னதை செய்பவர். அதாவது இங்கே இன்னொரு பெண் . ஆமாம். பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது. முதல் மணமகளான சூரியாவுக்கு இதுபோல ரைபி என்னும் பெண்ணை சீதனமாகக் கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். மணப்பெண்ணோடு தோழி என்ற பெயரில் அனுப்பி வைக்கப்படும். இந்த சீதனப் பெண் தொடர்ந்து மணப் பெண்ணின் புகுந்த வீட்டில்தான் இருக்கவேண்டுமா? அவளுக்கென்று தனி வாழ்க்கை அமையாதா?

அதாவது அவளுக்குத் திருமணம் நடக்காதா? என்றெல்லாம் அந்த சீதனப் பெண் அனுதேயியை மையமாக வைத்து நாம் கவலைகளை கேள்விகளாக எழுப்பினால்.... அதற்கு வேதம் பதில் சொல்கிறது. என்ன சொல்வது? அவளைப்பற்றி ஏன் யோசிக்கிறீர்கள்? இதெல்லாம் திருமணம் முடிந்த பிறகு நடக்கும் சமாச்சாரங்கள்.

இங்கே இன்னொரு முக்கியமான திருமணத்துக்கு முதல் நாள் நடக்கக்கூடிய ஒரு விஷயத்தை விலாவாரியாகச் சொல்லவேண்டும்.அந்த விஷயத்துக்குப் போவதற்கு முன் விசேஷமாய்

இந்த மந்த்ரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“மாதா முத்ராணாம் துஹிதா பசூனாம்ஸ்வஸ் ஆதித்யானாம் அமிர்த ஸ்யனா பிஹிப்ரனுபோகம் சிதுஹே ஜனாயோமாகா பனாகாம் அதிது வசிஷ்ட்

நான் உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன். ஏன் திருமணம் என்னும் புனிதமான விஷயத்தை இப்படி ரத்தக் களறியாக்குகிறீர்கள்”

பாவம் அவையெல்லாம். அவற்றை ஏன் கொன்று குவிக்கிறீர்கள்?. அவற்றை நாம் தாயாக எண்ணி புனிதமாக வழிபட வேண்டும். அதைவிட்டுவிட்டு அவற்றின்மேல் வாள் வைப்பதா?

நிறுத்துங்கள். திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின் போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்

தொடரும்

000000000000000000000000

41 கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள்.

திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம் தான். மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் மது வர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

பக்கத்தில் ஒரு கிரகத்தில் திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகிறது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

“என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?” “உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம் ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள் பாவம்... இன்று கன்றுக் குட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடயாதே... (அதாவது மடமடன்னு கேட்கிறது)” என்கிறான் மற்றவன்.

இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங்களிலே கன்றுக்குட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள்.

ஆனால்.. இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்... ‘மது வர்க்க’த்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.

அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே?

இதேபோல... ‘கௌஹு...கௌஹு என சொல்லிக்கொண்டே இன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகிறார்கள். கல்யாண தினத்தன்று... கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தை சொல்கிறார்கள்.

அந்த நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள்...மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.

இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல... மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தாத மந்த்ரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசம் தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?இதற்கான மேலும் சில மந்த்ர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம்.

இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவள் புருஷன் வீட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.

“பரித்வா கிர்வனோ க்ரஹஇமாபவந்து விஷ்வதஹாவ்ருத்தாயும் அனிவ்ருத்தயாஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா?

......அடியே... உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம்.

அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால்... இவையெல்லாம் ஒருநாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.ஆனால்... என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக்கென்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்... மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும்.

அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.இப்படியாக பெண்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளித்தரும் வேதம்... திருமணத்துக்குப் பிறகு அவளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது என்பதற்கு அகஸ்தியர் மூலமாக ஒரு கதையை சொல்லியிருக்கிறது.

அகஸ்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அவர் லோபாமுத்ரை என்னும் மங்கையை பார்த்ததும் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவருக்குள் உயரமாக உதித்தது ஆசை. நேராக அந்தப் பெண்ணின் தந்தையிடமே போனார் அகஸ்திய முனி. ‘உன் பெண்ணை பார்த்தேனப்பா... அவளையே கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேனப்பா’... எனக்கூற...தந்தையோ, அகஸ்திய முனியை கொஞ்ச நேரம் பார்த்தார். ‘என் பெண்ணிடமே கேட்டு, அவளுக்கு இஷ்டமா, இல்லையா என தெரிந்துகொள்ளப்பா...’ என சொல்லிவிட்டார்.

இப்படியே இந்த உருவத்திலேயே போனால் லோபாமுத்ரை நம்மை ஏற்றுக்கொள்வாளா? தன்னையே ஒருதடவை பார்த்துக் கொண்டார் அகஸ்தியர். கடைசியில் தன் குள்ள உருவத்திலிருந்து சில மந்த்ரங்களைச் சொல்லி தன்னை அழகனாக மாற்றிக் கொண்டார் அகஸ்தியர்.

லோபாமுத்ரையிடம் போனார் பேசினார். அகஸ்தியரின் வாளிப்பிலும், வார்த்தைகளிலும் மயங்கிய லோபாமுத்ரா அவர் கழுத்தில் மாலையைப் போட்டாள். தன் மணாளனாக்கிக் கொண்டாள்.அகஸ்தியருக்கு சந்தோஷம். மறுபடியும் லோபாவின் அப்பாவிடம் ஓடினார். ‘உன் பெண்ணை கல்யாணம் செய்துவிட்டேன் பார்’ என்றார்.கல்யாணம் ஆன பிறகுதான்... தன் கணவன் அகஸ்தியரின் நிஜ உருவத்தை தரிசித்தாள் லோபாமுத்ரை.... பிறகு...?

தொடரும்

000000000000000000000000000

42 உடலுறவு சமயத்தில் தேவதைகளே உதவுங்கள்.

லோபாமுத்ரை திருமணத்துக்குப் பிறகுதான் தன் கணவன் அகத்திய முனியின் சுய ரூபத்தையே தெரிந்து கொண்டாள். குள்ள ரூபம், தாடியும் மீசையுமாய் ரோமக் காடாய் முகம்.இப்படிப்பட்ட ஒருத்தர்... அழகானவர் போல் நம்மை ஏமாற்றி விட்டாரே என லோபாமுத்ரைக்குள் அழுகையும் ஆத்திரமும் பொங்கின. ஆனால்.. ஸ்த்ரி தர்மப்படி புருஷனுக்கு பணிவிடைகள் செய்வதுதானே பத்தினியின் கடமை.அதன்படி.. தன் புருஷன் அகத்தியனுக்கு பணிவிடைகள் செய்வதையே வேலையாகக் கொண்டு பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள் லோபா.

காலை எழுந்தவுடன் ஸ்நானம் செய்வது... பிறகு மந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவது பிறகு ஆகாரம் புசிப்பது... மறுபடியும் தியானம்... மந்த்ரம்... பிறகு இரவு நெடுநேரம் தீப ஒளியில் ஏதேனும் மந்த்ரங்கள் இயற்றிக் கொண்டே இருப்பது... பிறகு தூங்கிக் கொண்டே இருப்பது... பிறகு தூங்கி விடுவது இதுதான் அகத்தியனின் வாழ்க்கை முறை.வேண்டி விரும்பி திருமணம் செய்து கொண்டவளைப் பற்றி அகத்தியன் சிந்திக்கவே இல்லை லோபாவும் தன் புருஷன் தன்னையும் கவனிப்பான் என காத்திருந்தாள் கைங்கர்யம் செய்தபடியே.

இப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்க.. மந்த்ரங்கள், சிஷ்யர்கள், கமண்டலம்.. என வாழ்ந்த அகத்தியனுக்கு ஒரு நாள்தான்... ‘இதுவரை லோபாவைப் பற்றி நாம் சிந்திக்கவே இல்லையே... அவளை ஒரு வேலைக்காரியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டேனே தவிர...ஒரு புருஷனாக பத்தினிக்கு தரவேண்டிய சுகங்களை, அந்தஸ்தை நாம் தரவே இல்லையே.. பேரழகியை திருமணம் செய்து கொண்டு பாராமல் விட்டு விட்டோமே...’ என அகத்தியனுக்குள் அடுக்கடுக்காய் எண்ணங்கள் உதித்தன.

லோபா முத்திரையின் லோக வாழ்வைப் பற்றி அகத்தியன் நினைத்துப் பார்த்தது... கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பார்களே அதுபோல ஏனென்றால்... இருவருக்கும் 80 வருடங்கள் ஓடிப்போய் விட்டன.அழகு ஆட்சி செய்த லோபாவின் மேலே காலம் தன் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டது. அழகான அவளது முகத்திலும், சருமத்திலும் காலதேவன் தன் விளக்கத்தை சுருக்கங்களாக எழுதினான். கருகருவென்ற அவளது வசீகரமான கேஸத்திலே வெள்ளையடித்து விட்டான்.லோபாமுத்ரை என்ற பேரழகியின் மீதே காலதேவன் தன் முத்திரையை பதித்துவிட்ட போது... அகத்தியர் எப்படியிருப்பார்?நரை கூடி கிழப்பருவம் எய்தி விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோபாமுத்ரை பற்றிய நினைவு வர... அவளிடம் ஓடிப்போனார் அகத்தியர்.‘தேவி... அம்மா நான்தான் உன் ஆம்படையான் வந்திருக்கேன் என அவளது தோளைத் தொட லோபாமுத்ரை தன் புருஷனிடம் இப்போது தான் வாய் திறந்தாள்.

“உன்னாலே என் ஜென்மாவே பாழாய் போச்சு. என் அழகு வீணாப்போச்சு இப்போது வந்திருக்கிறீரே என்ன பிரயோஜனம்?... இது நியாயமா?...” என பொங்கியழுதாள் லோபாமுத்ரை.“நான் பண்ணிய மந்த்ரங்கள் எல்லாம் உனக்காகத்தானே தேவி”... என அகத்தியன் சமாதானம் சொல்ல... “மந்த்ரங்களுடனா நான் குடித்தனம் நடத்த முடியும்?... என் மணாளன் நீயா?... மந்த்ரங்களா?... என பதில் பேசுகிறாள் லோபாமுத்ரை.

அகத்தியமுனி அப்படியே நிற்கிறார்... இந்தக் காட்சியை அகஸ்தியரின் சிஷ்யர்கள் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் வழியே தான் இந்த வேதக்கதையே வெளியே வருகிறது.அதாவது... பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகங்களை கொடுக்காவிட்டால் அது மகாபாவம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தக்கதை.

சரி... திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா.

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.

“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...”...

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்... அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

.இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது...வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...

“ஸ்வாமீ... நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை... நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே...”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்,

“விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசதுஆசிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது...”

 இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம்.

நன்றி :http://thathachariyar.blogspot.fr/2010/12/blog-post.html








Comments