பாகம் நாலு -அரச பாரம்.
உச்சிவானில் ஏறி நின்று உலகத்தின் தலைமீது உருகிய தீக்குழம்பை சூரியன் வாரி ஊற்றிக் கொண்டிருந்தான். எங்கும் அனல் மூட்டம் எங்கும் கனல் கொந்தளிப்பு. எந்தக்கணத்திலும் எரிந்து சாம்பலாகிவிடலாம் என்று அஞ்சத்தக்க அத்தனை உக்கிரமான கோர வெயில். அந்த வேளையில் வேர்க்க விறுவிறுக்க வீரமாப்பாணன் தன் நண்பனைத் தேடி சோழியர்புரம் வருகின்றான். ஒருவாறு சங்கிலியைத் தேடிப்பிடித்து மூச்சிரைக்க அவன் முன் வந்து நிற்கின்றான்.
“என்னடா மாப்பாணா! நீ இன்னும் அரண்மனை செல்லவில்லையா? ஏன் இந்தப்பதற்றம், என்ன நடந்தது?” “அது… வந்து அரசர் உன்னை உடனடியாக அழைத்து வரக்கூறினார்.” “என்னையா?... ஏன் என்ன அவசரம்?” “உன் மனதைத்திடப்படுத்திக்கொள், அரண்மனையில் ஒரு சோக நிகழ்வு இடம்பெற்றுவிட்டது.” சங்கிலி பதைபதைப்புடன் “என்ன?... சோக நிகழ்வா?.. என்னடா கூறுகிறாய். விளக்கமாகத்தான் கூறேன்.” “உன் அண்ணன் பண்டாரத்தை பகைவர்கள் சூழ்ச்சியால் கொன்றுவிட்டார்கள்.” “ஐயோ! என்ன கொடுமையிது, சற்று இரு நான் வடிவழகியிடம் கூறிவிட்டு வருகின்றேன்.” கிளம்பினான். அவனை மறித்த மாப்பாணன் “அவளிடம் பிறகு சொல்லிக்கொள்ளலாம். நீ முதலில் அரண்மனைக்கு வா” நண்பன் துரிதப்படுத்தினான். நல்லூர்க்கோட்டையிலே அரசனின் பிரதான மண்டபத்தில் சிம்மாசனத்தில் மன்னன் பரராஜசகரன் வீற்றிருந்தான். அவனுக்கு இருமருங்கிலும் முதன் மந்திரி தனிநாயகமுதலி, அவைக்களத்துப்புலவர் அரசகேசரி, மந்திரிகளான அப்பாமுதலி, முத்துலிங்கமுதலி, அடியார்க்கு நல்லான் அத்துடன் யாழ் கோட்டைத்தளபதி இமையானன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். சபையோ எந்தவித ஆரவாரமும் இன்றி சோகமயமாக சங்கிலியின் வருகைக்காக காத்திருந்தது. அப்பொழுது கோபம் கண்களில் கொப்பளிக்க ஆவேசமாக சங்கிலி அரசசபைக்குள் நுழைகின்றான். கூடவே வீரமாப்பாணனும் “மந்திரிகளே! பண்டாரம் கொல்லப்பட்டு விட்டானா? என் அண்ணனைக் கொண்டவர்களைப் பிடித்துவிட்டீர்களா? நான் இல்லாதபோது என்ன நடந்தது? விரிவாகச் சொல்லுங்கள்” என சபையே அதிரும்படி ஆவேசமாகக் கத்தினான்.
அவனைநோக்கிய முதன் மந்திரி தனிநாயக முதலி “சங்கிலி அவசரப்பாடாதே! நம் தளபதி இமையாணன் உடனடியாக கேட்டைக்குள் வைத்தே அப்பாதகனை கைது செய்துவிட்டார். ஆனால் அவன் வெறும் அம்புதான். எய்தவர்கள் வன்னியர்கள். இளவரசர் தனது அரச பணிளை முடித்துக்கொண்டு நந்தவனத்தில் இளைப்பாறிக்கொண்டிருந்த போது மிகவும் கோழைத்தனமாக இக்கொலையை அவன் புரிந்திருக்கின்றான்.” “இதைக்கேட்ட சங்கிலி சீறி எழுந்து தன்வாளை உறையிலிருந்து உருவினான். அதைக்கண்ட அவைக்களத்துப்புலவர் அரசகேசரி “சங்கிலி நீ ஆத்திரப்பட்டு பிரையோசனமில்லை. விசாரணை ஒழுங்காக நடக்கின்றது. நிச்சயம் இக்கொலையின் சூத்திரதாரிகள் கைதுசெய்யப்படுவார்கள்” எனக்கூறி அவனை இருக்கையில் இருத்தினார்.
இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அரசன் பரராஜசேகரன் தன் சோகத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு “புலவர் பெருமான் கூறுவது முற்றிலும் உண்மை. சங்கிலி நீ அவசரப்படாதே! விசாரணை நடக்கின்றது. இளவரசரைக் கொன்றது துரோகம் என்றாலும் நெறிமுறையில் இருந்து நாம் சற்றேனும் தவறலாகாது தண்டிக்கவேண்டும்” என்றார். இதைக்கேட்ட சங்கிலி தந்தையைப் பார்த்து “அரசே! இந்தக் கொலைகாரனைத் தண்டிப்பதோடு நாம் நின்றுவிடக்கூடாது. இவனை ஏவிய வன்னியருக்கும் நாம் தக்க பாடம் புகட்ட வேண்டும்” எனக்கூறினான்.
அந்தவேளை கண்டி மாநகருக்கு அவ்வரசனின் வேண்டுகோளின் பேரில் ராணிக்கு சிகிச்சை செய்வதற்காக சென்றிருந்த சங்கிலியின் இன்னொரு அண்ணன் பரநிருபசிங்கன் அரசசபைக்குள் நுழைகின்றான். அப்போது அரசனைத்தவிர எல்லோரும் எழுந்து வணக்கம் தெரிவிக்கின்றனர். தமையனைக்கண்ட சங்கிலி கண்களில் இருந்து நீர்வழிய “அண்ணா! எமது தமையனார் நயவஞ்சகரால் கொல்லப்பட்டார்” என்று கூறினான். “தெரியும் தம்பி. வரும்போது எல்லாவற்றையும் கேள்விப்பட்டேன். இனிப்பேசிப்பயன் என்ன? அந்தக் கொலைகாரன் எங்கே?” என வினவினான். அவனை இடைமறித்த சங்கிலி “அண்ணா உண்மைக் கொலைகாரன் அவனல்ல, அவனை ஏவியவர் வன்னியர். அவர்கள் மீது நாம் போர் தொடுத்து வென்று எம் அண்ணன் ஆத்மாவைச் சாந்திப்படுத்த வேண்டும். அரசரின் உடல் பலவீனம் காரணமாக அரசபொறுப்புக்களை இதுவரை பண்டாரம் கவனித்துக்கொண்டான். இப்போது அந்தப்பதவிகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். போருக்கான சகல ஏற்பாடுகளையும் நானும் தளபதியவர்களும் கவனித்துக் கொள்கின்றோம்” என்று கூறினான்.
“தம்பி! வரும்வழியில் பண்டாரத்தின் கொலைச்செய்தியை கேட்டதில் இருந்து என் மனம்குழப்பமடைந்து காணப்படுகின்றது. எனக்கு அரசவாழ்க்கையே வெறுக்கின்றது. ஆன்ம ஈடேற்றத்துக்கு வேண்டிய வழியையே என் மனம் நாடுகின்றது. ஆகவே இவ் அரசபாரத்தை நான் தாங்கவில்லை. நீயே இதற்கு என்னைவிடப் பொருத்தமானவன். ஆதலால் நீயே இனி அரசபொறுப்பை ஏற்றுக்கொள்.” என்றான் பரநிருபசிங்கன்.
“அண்ணா! இதுமுறையா? தமையன் இருக்க நான் எப்படி அரசுக் கட்டில் ஏறமுடியும். இது தவறு” எனச் சங்கிலி சுட்டிக்காட்டினான். இடைமறித்த அரசகேசரி “இளவரசே! அண்ணன் சொல்வதைக்கேட்டு அரசை ஏற்றுக்கொள்வது குற்றமல்ல, உங்களுக்கு நாங்கள் அனைவரும் எங்கள் பூரண ஆதரவைத்தருவோம்” எனக்கூறினார். இதைக்கேட்ட அரசன் “என் புதல்வர்களின் விருப்பம் எதுவோ அதன்படி எல்லாம் நடக்கட்டும், எனக்கோ வயதாகிவிட்டது. ஆகவே நிச்சயம் ஒருவர் அரசுப்பொறுப்பை ஏற்றுத்தான் ஆகவேண்டும். சங்கிலி! நீ உன் அண்ணன் விருப்பப்படியே அரசுப்பொறுப்பை பெற்றுக்கொள். யாழ்ப்பாணத்தரசரின் புகழும், வீரமும் குறையாத வகையில் பரிபாலிப்பது உன் கடன்” எனக் கூறிமுடித்தார்.
இதைக்கேட்ட மந்திரிகளும் அவையோரும் ஒருமித்த குரலில் “யாழ்ப்பாணத்தரசன் சங்கிலி வாழ்க!” என ஜய கோஷமிட்டனர். சங்கிலியை நோக்கிவந்த பரநிருபசிங்கன் “தம்பி எல்லோரும் வியக்கும் படி நல்லாட்சி புரி. வன்னியர் மீதான படையெடுப்பை கொஞ்சம் தாமதப்படுத்து. போரெனில் இருபக்கமும் அழிவுகள் நிறையவே ஏற்படும். நீ அரசேற்ற கையுடன் பல இளம் பெண்களை விதவைகள் ஆக்காதே! இது எங்கள் குலத்திற்குத் தான் அவமானம்” எனக்கூறிச்சென்றான். அவை கலைந்ததும் தனித்துவிடப்பட்ட சங்கிலியும் வீரமாப்பாணனும் பெரும்பாரம் தலைமீது இறங்கியதால் பிரமை பிடித்துப்போய் நின்றார்கள். “அரசே! இனி உங்களுடன் ஊர் சுற்ற முடியாது” என நகைச்சுவையுடன் மாப்பாணன் கூறினான். “அதிருக்கட்டும் இந்த புதியபதவியை வடிவழகி அறிந்தால் பெரிதும் சந்தோஷப்படுவாள். அவளைக்காணச் செல்லவேண்டும்” என நினைத்தான் சங்கிலி. ஆனால் அதற்கு மாறாக பெரிய ராஜாங்க சுமை அவன் தலையில் விழுந்தது. அந்தச் செய்தியுடன் ஒற்றர் படைத்தலைவன் சங்கிலியைச் சந்திக்க வந்துகொண்டிருந்தார்.
தொடரும்
000000000000000000000000000000
பாகம் ஐந்து - மதம் மாற்றம்.
செந்தணல் கொட்டும் நட்ட நடுப்பகல் எங்கும் ஒருவித வாட்டத்தன்மை விரவியிருந்தது. சூரிய வெளியெங்கும் கானல் பறிந்து கட்புல வேதனையளித்தது. வீசும் காற்றின் வெம்மையும் கானலும் காட்சிகளில் கனலும் தெறித்துக்கொண்டிருந்தது.
இவ்வேளையில் தனது அன்றைய அரசியல் அலுவல்களை முடித்துக்கொண்டு நந்தவனத்தில் ஆறுதலாக இருந்த சங்கிலியிடம் வாயிற்காப்பாளன் வந்து “அரசருக்கு வணக்கம்! தங்களைக் காண்பதற்காக ஒற்றர் படைத்தலைவர் மன்னாரில் இருந்து வந்திருக்கின்றார்” என்று கூறினான். “சரி வரச்சொல்!” என்று கூறிய சங்கிலி, என்ன விடயமாக வந்திருப்பான் எனச் சிந்தித்தான். அதற்குள் உள்வந்த ஒற்றர் படைத்தலைவன் “வணக்கம் அரசே!” என்றான். “ஆகட்டும்! பல்லவராஜா, என்ன விஷயமாக இங்கு வந்தாய்?” “மன்னா! நம் இந்து மதத்திற்கு அழிவு வரப்போகின்றது. மன்னாரில் பறங்கிகள் பலரை இந்து மதத்திலிருந்து தமது அற்ப சலுகைகளுக்காக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுகிறார்கள்” எனக் கூறினான். இச்செய்தி கேட்ட சங்கிலி மிகவும் கொதித்தெழுந்தான். ஏனெனில் மன்னார் அப்பொழுது யாழ்ப்பாணத்திற்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது.
0000000000000000000000000000
கி.பி 1505 இல் போர்த்துக்கேயர் இலங்கையில் காலித்துறைமுகத்தை வந்தடைந்தனர். அப்பொழுது தென்னிலங்கையை தர்மபராக்கிரமபாகு மன்னன் கோட்டைக்காடு எனும் நகரத்தில் இருந்து ஆண்டுவந்தான். போர்த்துக்கேயர் கொழும்பிலே ஒரு கோட்டையைக் கட்டி அரசாண்டு வந்தனர். கி.பி 1520 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமது ஆதிக்கத்தைப் பரப்பிய போர்த்துக்கேயர் தமது மதத்தையும் பரப்பத்தொடங்கினர். இதற்காக சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகன் தர்மபாலனைக் கிறிஸ்தவன் ஆக்குவதற்காக புவனேகபாகுவை தற்செயலாகக் சுட்டது போல் சுட்டு அவன் மகனுக்கு அடைக்கலம் கொடுத்து அவனைக் கிறிஸ்தவன் ஆக்கிஅ வன் மூலமாக இலங்கையில் தமது மதத்தை பரப்புவதில் தீவிரமாக முனைந்திருந்தனர். பறங்கிகள் மெல்ல மெல்ல அனேக இடங்களைக் கவர்ந்து தமதாக்கி தம்மர செலுத்தினர். 1543 இல் மன்னாருக்கு ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரை அனுப்பி அங்குள்ள பலரைக் கிறிஸ்தவர்கள் ஆக்கினர்.
நல்லூர் அரசவையில் தன் அருகில் நின்ற தனது மெய்க்காவலனும் நண்பனுமாகிய வீரமாப்பாணனையும் தளபதி இமையாணனையும் நோக்கிய சங்கிலி “நாம் உடனடியாக மன்னார் சென்றே ஆகவேண்டும்” எனக் கூறினான். “நானும் அவ்வாறு தான் நினைத்திருக்கின்றேன். உங்கள் உத்தரவு கிடைத்தால் நாம் இங்கிருந்து இப்பபொழுதே புறப்படலாம்” என தளபதி கூறினான். இதைக்கேட்ட சங்கிலி உடனடியாக பயணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறி பயணத்திற்கு சித்தமானான். அதன்படி விரைவாக மன்னார் சென்றடைந்து அங்குள்ள அரச மாளிகையில் தங்கினான். அத்துடன் போர்த்துக்கேய கிறிஸ்தவ மதகுருவை தம்மை வந்து சந்திக்கும்படி தளபதியிடம் ஒரு ஓலையைக் கொடுத்தனுப்பினான்.
யாழ்ப்பாணத்து மாளிகைகள் போலவே விசேடமாக அமைக்கப்பட்ட அரச மாளிகையின் சபா மண்டபத்தில் அடுத்தநாள் கிறிஸ்தவ குருவை சங்கிலி சந்தித்தான். “ஒரு மனிதனின் சொந்த விருப்பத்திற்கு மாறாக அவர்களை ஒரு மதத்தில் இருந்து இன்னோர் மதத்திற்கு மாற்றுவது மிகவும் கொடிய பிழையாகும் மதமானது தாய் போன்றது . இரு பெண்களை பெற்ற தாயாகக் கருத முடியாது. தாயென்பவள் ஒருவர் தான். அந்தப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயைப்போன்றது தான் மதமும். அதைக் கேவலப்படுத்தக் கூடாது. உங்கள் மதம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைப்போல எங்கள் மதமும் எங்களுக்கு முக்கியம். இனிமேல் இது போன்ற காரியங்களைச் செய்யாதீர்கள்” என ஆவேசமாகக் அக்குருவபை; பார்த்து சங்கிலி கூறினான்.
சங்கிலியது ஆவேசப்பேச்சுக்களால் அடியோடு பயந்துவிட்ட குரு இனி தாம் அவ்வாறு செய்யவில்லை என சத்தியம் செய்து மன்னார் பிரதேசத்தில் இந்ந்து மீண்டார். இதன் பின் அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிய அனைவரையும் தண்டித்து யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் சங்கிலி.
இதன்பின் சிறிது காலப்பகுதியில் மீண்டும் தூத்துக்குடியில் இருந்து ஒரு குருவானவர் வந்த மன்னாரில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறார் எனக் கேள்விப்பட்ட சங்கிலி கோபாவேசம் கொண்டு சிறுபடையுடன் மீண்டும் மன்னார் சென்றான். அங்கு எவ்வளவு தேடியும் அந்தக்குருவை காணமுடியவில்லை. இதனால் அவ்விடத்து மக்களைச் சந்திப்பதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்தான்.
“மகாஜனங்களே! நூன் எனது மதத்தைக் காப்பாற்ற எவ்வளவோ முயற்சிகளை எடுத்தேன். நீங்கள் அதற்கு ஒன்றுக்குமே இசையவில்லை. எடுப்பார் கைப்பிள்ளை போல எல்லோர் பக்கமும் தாவுகிறீர்கள். என் சொல்லைக்கேட்டு உங்கள் மதத்தை அழியாமல் கப்பாற்றுங்கள். இல்லையேல் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிவரும். என்ற சங்கிலி மன்னாரில் சிறிது காலம் தங்கி, அங்கு இடம்பெறும் நிகழ்வுகளை அவதானித்து வந்தான். அரசசபையில் ஒருநாள் தளபதியுடன் மன்னார் நிலைமைகளை பற்றிக் கலந்தாலோசித்தபோது இமையானண் கூறினான் “மதம் மாறியவர்களில் சிலபேர் போர்த்துக்கேயரின் உதவியுடன், அவர்கள் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் எங்களையே எதிர்த்துப்பேசுகிறார்கள். பறங்கிகளுடன் இணைந்து தாமும் மதத்தைப்பரப்புகிறார்கள்” என்று சலிப்படைந்தான்.
இதைக்கேட்ட சங்கிலி இனியும்தாமதிப்பதில் பயனில்லை என்று கருதியதால் நாட்டு நன்மைக்காக, மதத்தின் நன்மைக்காக தனக்கு சிறிதும் விருப்பமில்லாத காரியமொன்றைச் செய்தான். “எதிர்க்கும் ஒவ்வொரு தலையையும் சீவுங்கள்” எனக் கட்டளையிட்டான். இதனைக்கேட்ட வீரமாப்பாணனும் இமையாணனும் திகைப்படைந்தனர். வேறு வழியின்றி தம்முடன் அழைத்துவந்த படைக்கு அரசனின் கட்டளையைத் தெரிவித்தனர். இதனால் மன்னாரிலே அன்று நிந்தம் புரிந்த அறுநூறு பேருக்கு கொலைத்தண்டனை வழங்கப்பட்டது. இதனால் மன்னார் வாசிகள் பயந்து அரசனது சொல்லைக் கேட்டு ஒழுகி நடந்தார்கள். அறுநூறு பேர் கொலையுண்டதை அறிந்த பறங்கிக் குருவானவர், இனித்தனது கருத்துக்கள் மன்னார் மக்களிடையே எடுபடாது என்ற காரணத்தால் தனது தலை பிழைத்ததே பெரும் புண்ணியம் என நினைத்து கடல் மார்க்கமாக கோவைக்கு தப்பியோடினார்.
பெருத்த மனநிம்மதியுடன் சங்கிலியும் அவன் பரிவாரமும் யாழ்ப்பாணத்திற்கு மீண்டது. யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததும் பிறிதொரு கவலை சங்கிலியை வாட்டத் தொடங்கியது.
சாதிக்க வருவான்…
0000000000000000000000000000
பாகம் 6-இணைவு.
மன்னாரில் இருந்து மீண்ட சங்கிலி ஒரு ஓய்வு நேரத்தில் வீரமாப்பாணனுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றான். “அரசே! நீங்கள் இப்பொழுதெல்லாம் ஒன்றை மறந்து விட்டீர்கள். இராஜாங்க காரியங்களிலேயே ஈடுபடுகிறீர்கள்” என நகைத்தான். அவன் என்ன கூறுகின்றான் என்பதைப் புரிந்து கொண்ட சங்கிலி “அப்படியில்லையடா! நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவள் நினைவாகத் தான் இருக்கின்றேன். அரச காரியங்கள் அவளை என்னிடம் இருந்து பிரிக்கின்றன. இந்த அரசுப் பொறுப்பை ஏன் ஏற்றேன்? என இப்பொழுது மனம் நினைக்கின்றது” என்று கூறினான். “அரசே! இப்பொழுது தான் உங்களுக்கு நல்லது. அரசன் ஆனபடியால் யாரையும் எங்கும் நீங்கள் சந்திக்கலாம். புறப்படுங்கள் போவோம். எனக்கும் கடற்கரையில் நீந்த வேண்டும் போல் இருக்கின்றது. இருவர் ஆசையும் நிறைவேறும் வாருங்கள்” எனத் துரிதப்படுத்தினான்.
சோழியர்புரத்திலே அப்பாமுதலியின் வீட்டில் வடிவழகியும் செங்கமலமும் உட்கார்ந்து அளவளாவுகின்றனர். “ஏன்டி வடிவு! வீட்டை அப்பா, அம்மா இல்லையா?” “இல்லையடி அவர்கள் அரண்மனைக்கு சென்றவர்கள் இரண்டு நாட்களாகியும் வரவேயில்லை” என்று அலுத்துக் கொண்டாள். தோழியின் மனநிலையைப் புரிந்த செங்கமலம் “பெற்றோரை மட்டும் தான் காணவில்லையா? அல்லது உற்றோரையுமா?....” இழுத்தாள். அவள் என்ன குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்த வடிவழகியின் முகம் குங்குமச் சிவப்பானது. வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். “அட! வெட்கத்தைப் பாரேன். பூப்படைந்த போது கூட நீ இப்படித் தலை குனியவில்லை.” எனக் கிண்டலடித்தாள். “அது கிடக்கட்டும் மன்னர் கடைசியாக எப்பொழுது உன்னைக் கண்டார்” செங்கமலம் கேட்டாள். “அவர் மன்னராவதற்கு முன்னால்” என ஒரு ஏக்கப் பெருமூச்சை விட்டாள். “அது தானே! அவக்கு நிறைய ராஜ காரியங்கள் இருக்கும், உன்னை நினைவில் வைத்துக் கொள்ளப் போகிறாரா? இப்ப எந்த மயிலுடன் நடனமாடுகிறாரோ” என செங்கமலம் சீண்டினாள். இந்தச் சம்பாசனையை அறவே ரசிக்காத வடிவழகி கோபத்துடன் முகத்தை திருப்பி வைத்துக் கொண்டாள். “அட! மகாராணிக்கு கோபத்தைப் பாரேன். நான் விளையாட்டாக கூறினேன். நீ உண்மை என நம்பிவிட்டாயா?” என வினவினாள். “அவர் அப்படிப்பட்டவர் அல்ல” எனக் கூறினாள் வடிவு. “ஏய்! நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவர் அல்ல, திருமணத்திற்கு முன் உன்னைக் காணாமல் விட்டு விட்டாரே என்றுதான் கவலையாக இருக்கின்றது. ஆனால் உன்னைக் கண்ட பின் வேறு எந்தப் பெண்களையும் ஏறெடுத்துக் கூடப் பார்க்க மாட்டர். இது அவர் முகத்திலேயே தெரிகின்றது. நீ பயப்படாமல் இரு! அவர் நிச்சயமாக உன்னைச் சந்திக்க வருவார்” என செங்கமலம் தைரியம் கூறினாள்.
அந்தவேளை வீட்டு வாசலிலே குதிரைக் காலடி ஓசை கேட்டது. நிமிர்ந்து பார்த்த இரு பெண்களும் ஆச்சரியப் பட்டார்கள். வாயிலில் சங்கிலி அரசன் நின்றிருந்தான். இதைக் கண்டவுடன் செங்கமலம் எழுந்து பின்பக்கமாக ஓடி விட்டாள். என்ன செய்வது எனத் தெரியாமல் திக்குமுக்காடிப் போன வடிவழகி எழுந்து வீட்டினுள் சென்று கதைவைச் சாத்திக் கொண்டாள். வாசற்கதவைத் திறந்து கொண்டு உட்சென்ற சங்கிலி வடிவழகியைத் தேடிய போது உள் அறைக்கதவு ஒன்று சற்றத் திறந்திருந்தது. மஞ்சத்தில் தேவேந்திரச் சிற்பி செதுக்கிய சிலையென வடிவழகி ஒருக்களித்துப் படுத்திருந்தாள். மொகலாயர் காலத்தில் பிரசித்தி பெற்ற லஸ்தர் விளக்கு ஒன்றின் மங்கலான வெளிச்சம் அந்த அறையின் மூலையில் இருந்து அவள் மேல் லேசாக விழுந்தது. அவள் உடுத்தியிருந்த சேலை கூட விலகாமல் அவள் உடல் பூராவையும் நன்றாக மறைத்தே நின்றது. அவள் சுந்தர வதனத்தில் இருந்த தெய்வீக அழகில் ஈடுபட்டு சங்கிலி சிறிது நேரம் நின்றான். அவள் முகத்தில் பல உணர்ச்சிகள் வந்து பிரதிபலித்தன. புருவங்கள் நானேற்றும் வில்லைப்போல் நன்றாக ஒருமுறை வளைந்து நெருங்கின. அவற்றைத் தொடர்ந்து திலகப்பிரதேசம் சிறிது சுளித்தது. துக்கம் நிறைந்த முகத்தில் அடுத்தபடியாக மகிழ்ச்சிக் குறி படர்ந்தது. இதழ்கள் மந்தகாசத்தால் விரிந்தன. தேகம் பூராவும் சந்தோசத்தின் ஆனந்தச் சாயல்! கன்னங்களில் இரு ரோஜா மலர்கள் வெட்கமளித்தன.
இவற்றை அவதானித்த சங்கிலி “பாரேன் நான் வந்தது கூடத் தெரியாமல் படுத்திருக்கிறாள். இவளுக்கு இவ்வளவு வெட்கமா?” என மனதுக்குள் நினைத்துக்கொண்டு அவள் படுத்திருந்த பஞ்சனையை அணுகி ஓர் ஓரத்தில் இருந்தான். மெல்ல தன் ஒரு கையை அவள் தோள் மீது வைத்து “வடிவழகி …” என அழைத்தான். பதிலுக்கு “உம்….” என்ற ஒற்றைச் சொல்லே அவள் வாயிலிருந்து வெளிவந்தது. மெல்ல தன் தலையைக் குனிந்து அவள் கன்னத்தில் உதட்டைப் பதித்தான். அவனது ஒரு கை அவள் இடையில் தவழ்ந்தது. அவள் மார்போ பயத்தால் மிக வேகமாக எழுந்து தாழ்ந்தது. அப்படியே அவளை வாரி அணைத்துக் கொண்டான்.
மஞ்சம் சிருஷ்டித்த மணவறையிலே மகிழ்ந்து இணைந்து விட்ட காதலர்கள் இருவரும் மறுநாள் வௌ;வேறு அலுவல்களில் ஈடுபட்டாலும் அவ்விருவர் மனங்களிலும் முந்திய இரவின் இன்ப நினைப்புகளிலேயே ஈடுபட்டுக்கிடந்தது. இதனால் அவ்விருவரும் மறுநாள் சற்றுத் தடுமாற்றத்துடனேயே நடந்து கொண்டார்கள். இரவில் பஞ்சனையிலே உறங்கிவிட்ட இருவருள் பொழுது புலருவதற்குள் வெகு நேரமிருக்கையிலேயே கண்விழித்துவிட்ட வடிவழகி விளக்கின் ஒளியில் அருகே கிடந்த ஆடவன் மீது கண்களை ஓட்டினாள். அவன் அலுத்துக் களைத்து உறங்குவதைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு புதுப்பொழிவும் பெருமையும் துலங்கின. சற்றுத்தடுமாறி எழுந்து உட்கார்ந்து கொண்ட அவள் பல வினாடிகள் தன் முந்தாளைக் கட்டிக்கொண்டு அந்தக் கட்டிளங்காளையைப் பார்த்த வண்ணமே உட்கார்ந்திருந்தாள். பிறகு மெல்ல ஒருமுறை அவன் உடல் மீது கையை வைத்து உலுக்கிப் பார்த்தாள். அவன் சிறிதும் அசையாமல் அயர்ந்து தூங்குவதைக் கண்டதும் சிறிது புன்முறுவல் கொண்டு தலையை அண்ணாந்து பின்னலைப் பிரித்து குழல்களை முடிந்து கொண்டு எழுந்திருந்து வெளிச்சென்றாள். எத்தனையோ இன்ப எண்ணங்கள் மனதில் அலைபாய அந்த எண்ணங்களால் உடல் பலவிதமாய் ஒய்யார அசைவு அசைய, இடைதுவள, கால்கள் சரியாக நடக்கமுடியாமல் பின்ன அவள் தன் காலைக்கடன்களைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்தின் பின் கண்விழித்த சங்கிலி தன் பக்கத்தில் வடிவழகி இல்லையெனக் கண்டதும் அவளைத் தேடாது விட்டு வெட்கத்தில் அரண்மனை செல்வதற்காக குதிரையேறினான். அவ்வாறு அவன் வெளியேறியதை இருசோடி கண்கள் மறைந்து நின்று பார்த்தன.
சாதிக்க வருவான்…
00000000000000000000000000000
பாகம் 7 கண்டிப்பு
அந்த இருசோடி கண்களில் ஒருசோடி கண்களுக்குரியவர் வேறு யாருமல்ல, வடிவழகியின் தந்தை அப்பாமுதலி தான். இவ்விடயத்தில் அவசரப்பட்டால் பெரிய ஆபத்தை உண்டுபண்ணிவிடும். எனவே அமைதியாக ஆராயலாம் என இருந்தார். ஒருநாள் மெல்ல தன் மனையியிடம் கதையைத் தொடக்கினார்.
“கனகம்! கனகம்! நீ கொஞ்ச நாளா எங்கட வீட்டில ஏதாவது வித்தியாசத்தை உணர்றியோ?” “என்னங்க புதிராப் பேசிறீங்க, அப்பிடியென்ன புதினத்தை கண்டுட்டீங்க?” “அப்பிடியில்லையப்பா, உன் மகளின் போக்கில் ஏதாவது மாற்றம் தெரியுதா? ஏதாவது விடயங்களில் தனது நேரத்தை போக்குகின்றாளா? ஏன் கேட்கிறணென்டால் உனக்குத் தெரியாமல் இந்த வீட்டில ஒண்டும் நடவாது. பிள்ளையை ஒருவன் கையில ஒப்படைக்கிற வரைக்கும் நாங்க தான் கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கோணும்.” “இதென்ன புதுக்கதை சொல்லுறியள், சத்தியமா எனக்கு ஒண்டும் தெரியவே தெரியாது. நீங்க தான் ஏதோ மறைக்கிறீங்க, அதை என்னெண்டு தான் சொல்லுங்கோவன்”. “என் நண்பன் முத்துலிங்க முதலியின் வீட்டுக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தன். அப்போது தான் பேச்சுவாக்கில் அவன் என்னிடம் இந்தக் கதையைச் சொன்னவன். இவள் பிள்ளை வடிவழகியும் சங்கிலியும் ஒருவரை ஒருவர் மனதாரக் காதலிக்கினமாம். இவ்விடயத்தை இப்படியே விட்டால் எங்கள் தலையில இடியைப் போட்டுட்டு இவள் ஏதாவது செய்து விடுவாள். அது பெருத்த அவமானமாய்ப் போய்விடும்”. “இப்படியேதாவது நடந்திருந்தால் எனக்குத் தெரிந்திருக்கும்.” சிறிது யோசித்து விட்டு “எங்கள் வீட்டிற்கு பின்புறம் இருக்கும் தோப்பில் சில நாட்களாக சங்கிலி நடமாட்டம் தெரிகின்றது. இவள் பிள்ளையும் அடிக்கடி சோலைக்கு போகிறாள். சிலவேளை இது உண்மையாக இருக்குமா?” கனகம் அங்கலாய்த்தாள். “அது தானே பார்த்தேன். நெருப்பில்லாமல் புகையுமோ? நீ இனிக்கவனமாக இருக்க வேண்டும். உன் பெண்ணை தோப்புப் பக்கம் போகாமல் பார்த்துக்கொள். அவள் வந்த நல்ல புத்திமதிகளைச் சொல்ல அவள் மனத்தை மாற்ற முயற்சி பண்ண வேண்டும்”.
அவ்வேளை வடிவழகி வெளியில் இருந்து வீட்டினுள் நுழைந்தாள். அப்பாமுதலி பேச்சை நிறுத்திவிட்டு தனது மனைவிக்கு கண்ணைக் காட்டினார். உடனே மனைவி கனகம் மகளை நோக்கி “எடி! பிள்ளை… இஞ்சை ஒருக்கா வந்திட்டுப் போ” “என்னம்மா! என்ன விஷயம்?” “அது… வந்து… நான் நேரடியாக விஷயத்துக்கு வாரன். உனக்கும் சங்கிலிக்கும் ஏதாவது தொடர்பிருக்கோ? வெளியில் பலபேர் பலவிதமாக் கதைக்கினம். இறுதியில் எங்களுக்கு தானே அவமானம்”. திகைத்த வடிவு
“சங்…கிலி…யுடனா? இல்..லை… அம்மா…. நான் அவரைக் காண்பதே இல்லையே” வடிவழகி மென்று விழுங்கினாள். “இதோ பார்! அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் இப்பொழுது இருந்து அதை மாற்றிக்கொள். உந்த இடம் சரிப்பட்டு வராது. சங்கிலியோ ஏற்கனவே திருமணம் ஆனவன். அவனுக்கு பட்டத்துத்தேவி இருக்கிறாள். நீ அவனைக் காதலித்து மணம் முடித்தால் அவன் ஆசை நாயகியாக தான் இருக்கலாம். அரசுரிமை உன் வாரிசுகளுக்கு கிடைக்கப்போவதில்லை. ஆகையால் உந்தத் தொடர்பை விட்டுவிடு. அப்பா உனக்கு எல்லா வகையிலும் ஏற்ற மாப்பிளை பார்த்திருக்கின்றார். அவரும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.” கனகம் கூறினாள்.
இதைக்கேட்ட வடிவழகியின் முகத்தில் இருள் குடிகொண்டது. கண்களில் கண்ணீர் சுரந்தது. அதை ஒருவாறு அடக்கிக் கொண்டு “யாரம்மா அவர்?” என்று கேட்டாள். சங்கிலியின் அண்ணன் மகன் பரராஜசிங்க முதலி” “பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே “நான் மாட்டன்” என வெடுக்கென பதில் கூறினாள். அதுவரை சம்பாசனையை ஓரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்பாமுதலி கோபம் கண்களில் கொப்பளிக்க திடீரென உட்புகுந்தார். “அவனுக்கென்ன குறைச்சல்?” “குறையொண்டும் இல்லைத்தான். ஆனால் எனக்கு அவரைப் பிடிக்கல. அவரை நான் திருமணம் செய்து கொள்ள மாட்டன்”. வடிவழகி உறுதியுடன் கூறினாள்.ஸ “ஓகோ! பேச்சு அப்படியும் போகுதோ… எங்களையே எதிர்த்துப் பேசுற அளவுக்கு நீ பெரிய மனுஷி ஆகிட்டாய். இதோ பார், நாங்க எது செய்தாலும் உன் நன்மைக்குத் தான் செய்வம். பேசாமல் எங்கள் பேச்சைக் கேட்டு நட” அப்பாமுதலி கூறிமுடிக்க வீட்டு வாயிலின் முன் அமளிதுமளிப்பட்டது. மனைவியையும் மகளையும் உட்செல்லப்பணித்துவிட்டு வாயிலை நோக்கிச் சென்று பின் பரநிரபசிங்கன் தலைமையிலான சிறு கும்பலுடன் உள் வருகின்றார்.
“வாருங்கள் அரசே, வந்து உட்காருங்கள்” “நான் என் தனிப்பட்ட விஷயமாக இவ்விடம் வந்தேன். உம்மையும் ஒருமுறை பார்த்துச் செல்லலாம் என வந்தேன்” கூறிக்கொண்டே இருக்கையில் அமர்ந்தார் பரநிருபசிங்கன். “மிக்க நல்லது” உள் திரும்பி “கனகம் அரசருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு” என்று கூறிவிட்டு மீண்டும் பரநிரபசிங்கன் பக்கம் திரும்பி “நீங்கள் கண்டி சென்றீர்களே மருத்துவம் செய்விக்க, இப்போது அவர்களுக்கு சுகம் தானே?” “ஓம்! அவர்கள் மெத்த சுகம். சந்தோஷமாக இருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் எங்கள் குடும்பத்தில் தான் துக்கம் நடந்துவிட்டது.” என்ன பண்டாரத்தின் கொலை பற்றி கூறுகிறீர்களா? அது இருக்கட்டும் நீங்கள் அரச பதவி துறந்தது பற்றியும் ஒருகதை உலாவுகிறதே” என தனது கதையைத் தொடக்கினார் அப்பாமுதலி.
“என்ன மாதிரி?” “தாங்கள் செய்தது முறையல்ல என்று” “இல்லை.. இல்லை. அதுதான் சரி! என்னைவிட சங்கிலி ரொம்ப கெட்டிக்காரன், அவன் தான் அரசாளத் தகுதியானவன்”. “அது உண்மை தான். ஆனால் அப்பதவிக்கு அவன் தகுந்தவன் தானா என ஐயப்பட வைக்கிறது”. “ஏன் அப்படி?” “அவன் பட்டத்து ராணியின் மகனல்ல, அது தவிர ஒழுக்கத்திலும்…” “ஏன் ? அவன் யாரிடம் முறைதவறி நடந்தான். அவ்வாறு ஏதாவது நடந்திருந்தாலும் தனது நிலைக்குத் தக்கவாறு மாற்றிக்கொள்வான்”. “அவ்வாறெனில் பறவாயில்லை. ஆனால் அவர் நாட்டிலுள்ள பெண்களையெல்லாம் தொல்லைப்படுத்தித் திரிகிறார். அது மட்டுமல்ல என் குடும்பத்திலும்….” சொல்ல முடியாதவாறு போலிக்கண்ணீர் வடித்து பரநிருபசிங்கனிடம் முறையிட்டார் அப்பாமுதலி. “என்ன சொல்கிறீர்? உமது குடும்பத்திலேயா? கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்கள் பார்க்கலாம்”. “நானோ? இந்த ஏழை சொல்லப் பயமாக இருக்கின்றது” “பரவாயில்லை. நான் இருக்கின்றேன். எதுவானாலும் வெளிப்படையாகக் கூறும்” “அரசே! என் மகள் வடிவழகி மீதும் கண் வைத்துத் திரிகிறார். இது கைகூடுமானால் என் குடும்பமே கெட்டுவிடும்”. எனக் கூறி பரநிருபசிங்கன் காலில் விழுகின்றார்.
“முதலியாரே! பயப்படவேண்டாம். நான் சங்கிலியின் மற்றக்குற்றங்களை பொறுத்தாலும், வடிவழகி விடயத்தில் வாய்கட்டி நிற்க மாட்டேன்.” “நீங்கள் அரச பதவியை ஏற்றிருந்தால் இந்தக் கெடுதி ஒன்றும் வந்திருக்காது. என்ன செய்வது? எங்கள் தலைவிதி அவ்வளவு தான்”. எனப் பெருமூச்சு விடுகின்றார். “போனதைப்பற்றி கவலைப்பட்டுப் பயனில்லை. உம் மகள் வடிவழகியை எனது மாளிகைக்குக் கொண்டுவந்து எனது பாதுகாப்பில் விடும். அவளுக்கு ஒரு துன்பமும் நேராது”. பரநிருபசிங்கன் அப்பாமுதலியின் வீட்டிலிருந்து கிளம்பினான். “தாங்கள் இங்கு வந்தது நான் செய்த பாக்கியமே” எனப் பெரும்பாரம் இறங்கியது போல அப்பாமுதலி கூறினார்.
மற்றைய ஒருசோடி கண்களுக்குரியவன் சங்கிலியின் வாழ்க்கையிலேயே சூறாவளியை உண்டு பண்ணிவிட்டான்.
சாதிக்க வருவான்
0000000000000000000000000000
பாகம் 8 திண்டாட்டம்
சங்கிலியின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்ட பட்டத்து இளம்ராணி இராசமாதேவி சங்கிலியை கண்காணிக்க ஒரு ஒற்றனை ஏற்பாடு செய்திருந்தாள். அந்த மற்றைய சோடி கண்களுக்குரியவன் அவனே. அவன் நேராக இராசமாதேவி இருந்த நந்தவனத்திற்கு வந்தான். அங்கே இராசமாதேவியும் தோழி அங்கயற்கன்னியும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களைச் சந்தித்து தான் ண்ட விடயத்தைக் கூறிப்போனான். இதைக்கேட்ட இராசமாதேவியின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.
“பார்த்தாயா அங்கயற்கன்னி! அரசாங்க அலுவல் என அடிக்கடி கூறிக்கொண்டு சோழியர்புரம் பகுதி சென்று என்ன அலுவலைக் கவனித்திருக்கின்றார் என்று” தனது ஆதங்கத்தை நண்பியுடன் பகிர்ந்து கொண்டாள்.
“தேவி! நாம் தீர விசாரிக்காமல் ஒரு முடிவுக்கு வர இயலாது. ஆரசர் நல்லவர், ரொம்பக் கெட்டித்தனமுடையவர்” என்று கூறினாள் தோழி.
“பிற பெண்களை விரும்புவதிலும் அவர் கெட்டிக்காரர் தான்” என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மாதேவி.
“பெண்களை என்று ஏன் பொதுவாகச் சொல்கிறீர்கள், வடிவழகி ஒருத்தியைத் தானே!”
“சாட்சியுடன் இருப்பது இது ஒன்று, சாட்சியில்லாமல் எத்தனை காரியங்கள் நடந்தனவோ? யாரரிவார்?. அரசர் செல்லும் இடங்களுக்கெல்லாம் ஒன்றனை என்னால் அனுப்ப முடியுமா? அது தர்மமாகுமா?”
“விடுங்கள், அரசர் அப்படிச் செய்யக்கூடிய ஆளில்லை. அவர் மேல் குற்றம் கூறமுடியாது. அவருக்கு இடம் கொடுத்த வடிவழகியைத் தான் குற்றம் கூறவேண்டும், அரசர் கல்யாணமானவர் என்று தெரிந்துமா அவள் காதலிக்கத் துணிந்தாள்.” என்று சமாதானம் கூற முயன்றாள் தோழி.
“அவள் கூடாதவள் என்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே”
“அப்படியெல்லாம் கூறமுடியாது. எல்லோரும் நல்லவர் போல் தான் நடிப்பார்கள். தக்க சமயம் வரும்போது தான் அவர்களது சுயரூபம் வெளிப்படும். ஆசைக்கும் அளவு இருக்க வேண்டும். கட்டிய மனைவி இருப்பது தெரிந்தும் ஓர் ஆடவனை வேறொரு பெண் காதலிக்கலாமா? இது தமிழர் பண்பாடாகுமா?” என பிரசங்கம் செய்தாள் அங்கயற்கன்னி.
“சரி இதைப்பற்றி பேசிப்பயன் என்ன? எல்லாம் ஆண்டவன் விட்ட வழிப்படி நடக்கட்டும். இருட்டுகின்றது நீ போய் வா! நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டும். நாளை உன்னை மீண்டும் சந்திக்கின்றேன்.” எனக் கூறிக்கொண்டு இராசமாதேவி நேராக மன்னன் பள்ளியறை நோக்கிச் சென்று பஞ்சணையில் தொப்பென்று விழுந்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.
அன்றைய அலுவல்களை முடித்துக்கொண்டு சங்கிலி தன் படுக்கையறை நோக்கி வந்தான். அரசன் வருவதை அறிந்த தேவி விருட்டென எழுந்து பஞ்சனையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தலையை மறுபுறம் திருப்பி வைத்துக் கொண்டாள். அறைக்குள் நுழைந்த சங்கிலி இடுப்பிலிருந்த உடைவாளைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டு மேலங்கியையும் கழற்றி வைத்துவிட்டு பஞ்சணையில் திரும்பியிருந்த தேவியைப் பார்த்தான்.
இதுவரை வெளியில் எடுக்கப்படாதிருந்த வெண்பட்டு, மலரிலும் மென்மையான அவள் உடலை ஆசையுடன் தழுவி நின்றது. மார்பில் தொங்கிய கெம்புக்கல்லும் அவள் தலையில் செருகியிருந்த ரோஜாப்பூவும் அந்த வெண்பட்டுக்கு மாற்று வர்ணங்களாக அமைந்தன. சிலகணம் அவள் அழகைப்பருகிய சங்கிலி மெதுவாக அவள் பின்புறமாக வந்து அவளுக்குப் பின்னால் அமர்ந்து தனது வலது கையால் அவள் இடையைச் சுற்றிப்பிடித்தான்.
வெடுக்கென அவன் பிடியிலிருந்து விலகி மாதேவி எழுந்து நின்றாள். இதைச்சற்றும் எதிர்பார்க்காத சங்கிலி,
“மகாராணிக்கு என் மேல் கோபம் போலிருக்கின்றதே” என யாதும் அறியாதவனாய்க் கேட்டான்.
“நீங்கள் செய்த செயலுக்கு உங்களை கட்டியணைத்து முத்தமிடவா முடியும்?” என முகத்தைத் திருப்பாமலே கேட்டாள்.
“ஏன் நான் என்ன தப்புச் செய்து விட்டேன்?”
“சோழியர்புர பகுதிக்கு ஏன் அடிக்கடி செல்கிறீர்கள்”
“அரசாங்க அலுவலாக…”
“அரசாங்க அலுவலா? அல்லது அப்பாமுதலியின் மகளா?” நடந்த விடயங்கள் எவ்வாறோ இவளுக்கு தெரிந்துவிட்டது. இனி கெஞ்சுவதைத் தவிர வழியில்லை என நினைத்துக் கொண்டான் சங்கிலி. ஒரு ஆண் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்வாள். ஆனால் தன்னை விடுத்து வேறொரு பெண்மீது தன் கணவன் நாட்டங்கொண்டிருக்கின்றான் என்பதை எந்தப்பெண்ணும் தாங்கிக் கொள்ள மாட்டாள். பஞ்சணையில் இருந்து எழுந்து வந்த சங்கிலி மீண்டும் அவளை அணைத்து அவள் முகவாயைப்பிடித்து தன்னை நோக்கித் திருப்பி, உண்மையை மறைத்து
“நீ நம்புகிறாயா?” என ஒரு கேள்வியைக் கேட்டு அவள் இதழில் தன் இதழை ஆழமாகப்பதித்தான். இங்கு தான் இருக்கின்றது பெண்களின் பலவீனம். சற்று நேர இன்பத்தால் திக்குமுக்காடிப்போன தேவி கொஞ்சம் மனம் கனிந்து அவன் மார்பில் தன் முகத்தை புதைத்துக் கொண்டு விம்மத் தொடங்கினாள். அவளை மெதுவாகப் பஞ்சணையில் அமர வைத்த சங்கிலி அவள் குழல்களை ஆதரவாகத் தடவினான். கணவனது நெருக்கத்தால் பெரிதும் மகிழ்ந்து எல்லாவற்றையும் மறந்து கணவனுக்கு கீழ்ப்படிகின்ற குணம் மட்டும் பெண்களுக்கு இல்லையானால் அன்று சங்கிலி தப்புவது பெருந்திண்டாட்டமாய் போயிருக்கும். சிறிது நேரத்தின் பின் புன்றுவல் பூத்தாள் மாதேவி.
“ஏன் நகைக்கிறாய் தேவி?” என வினவிய சங்கிலி அவள் கைகளை நன்றாக அழுத்திக் கொடுத்தான்.
“ஒன்றுமில்லை” என்ற அவள் சற்றே அசைந்தாள்.
“பின் ஏன் நகைக்கிறாய்?”
“நகைக்கக் கூடாதா?”
“கூடாது”
“நகைத்தால் என்ன செய்வீர்கள்?”
“கன்னங்களைத் திருகி விடுவேன்”
“திருகுங்கள் பார்ப்போம்” அவன் கன்னத்தில் கைவிரல்கள் இரண்டை வைத்து அழுத்தினான். அவள் மேலும் நகைத்தாள்.
“இன்னும் உறைக்கவில்லையா?”
“இல்லை”
“இன்னும் அழுத்திக்கிள்ளுவேன்”
“கிள்ளுங்கள்” அவன் அவள் கன்னத்தை சற்று அழுத்தியே கிள்ளினான். அவள் பதிலுக்கு அவனுடன் அதிகமாகவே இழைந்தாள்.
“என்ன இவ்வளவு தான் கிள்ளுவீர்களா?” என்று கேட்டாள். அவன் அவள் கன்னத்தை திரும்பிப் பார்த்தான். கிள்ளிய இடம் சற்று சிவந்திருந்தது.
“சே! சற்று அழுத்திக் கிள்ளிவிட்டேன்” என்று வருந்தினான் சங்கிலி.
“பின் பொய்யாகவா கிள்ளுவீர்கள்”
“அப்படித்தான் கிள்ள நினைத்தேன்”
“அதிலென்ன பிரயோசனம்”
“வலிக்கக் கிள்ளினால் தான் உனக்குப் பிடிக்குமா?”
“ஆம்”
“ஏன்?”
“கணவன் கணவனாக இருக்க வேண்டும். கணவன் மனைவியை அடிப்பதும் இன்பம், கிள்ளுவதும் இன்பம், அணைப்பதும் இன்பம்”
“தூங்கு தேவி” உடலைத்தடவினான்.
“தூக்கம் வரவில்லை”
“எனக்கு மட்டும் வருமா தேவி?”
“எது?”
“தூக்கம்” இந்தப்பதிலை கேட்ட தேவி மெல்ல நகைத்தாள். இரகசியமாக
“உம் வராது… வராது” எனச் சொன்னாள். அவள் சொற்களில் குழைவிருந்தது. அடுத்து வந்த ஆனந்தத்தில் நிறைவிருந்தது. மறுநாள் ஓர் அவசர செய்தியுடன் சங்கிலியைத் தேடி நண்பன் வீரமாப்பாணன் வந்தான்.
சாதிக்க வருவான்…
00000000000000000000000000
பாகம் 9 சவேரியார்
நிலம் குழைய, குளம் வழிய நல்ல மழை யாழில் பெய்து ஓய்ந்தது. மேற்றிசை வான்சரிவில் ஏழ்வண்ண வில்லோவியம் எழுந்து நின்றது. வானத்தில் நிற முகில்கள் பல்வேறு சித்திரங்களாக வடிவெடுத்து நின்றன.
தன்னை நோக்கி வந்த வீரமாப்பாணனை எதிர்கொண்டு வரவேற்ற சங்கிலி
“நல்ல சமயத்தில் தான் வந்தாய் தோழா! உன்னிடம் ஓர் ஆலோசனை கேட்க வேண்டும்.”
“என்ன விடயமாக?”
“வடிவழகிக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பு பற்றி தேவிக்கு சிறிது சந்தேகம் வந்திருக்கின்றது. இதற்கு என்ன செய்யலாம்”
“அதைத் தக்க தருணம் வரும் போது கூறிச் சமாளித்துக் கொள்ளலாம். இப்பொழுது வேறொரு பணி வந்துவிட்டது”
“என்ன அது?”
“சவேரியர் உன்னைக்காண வந்திருக்கின்றார்”
“யாரவர் சவேரியர்?”
விளக்கினான் நண்பன்.
0000000000000000000000000
மன்னாரில் அறுநூறு பேருக்கு சிரச்சேதம் செய்ததால் அங்கு மதத்தைப் பரப்பிக் கொண்டிருந்த கிறிஸ்தவ குருவானவர் தப்பிக் கோவைக்குச் சென்றதை முன்னைய அத்தியாயம் ஒன்றில் வாசித்திருப்பீர்கள். அவர் நேரடியாக அங்குள்ள பிரதம குருவான சவேரியரிடம் சென்றார்.
“என்ன சிஷ்யா! திடீரென மன்னாரிலிருந்து இங்கு வந்து நிற்கிறாய். அங்கு எல்லோரையும் எங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டாயா?” சவேரியர் வினவினார்.
“குருவே! எங்கள் திட்டத்தில் எல்லாம் இடிவிழுந்து விட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து புயல்போல ஒரு அரசன் கிளம்பி வந்து மதம் மாறுவோரைத் தண்டித்தான். எதிர்த்த அறுநூறு பேருக்கு எந்தவிதக் கருணையும் காட்டாமல் சிரசைக் கொய்ய ஆணையிட்டான். அவன் தீவிர மதப்பற்றுடையவனாகத் தெரிகின்றான். அவன் இடத்தில் எங்கள் விளையாட்டுக்கள் எதுவும் பலிக்காது போலிருக்கின்றது.” எனப் பரிதாபமாகக் கூறினார்.
“ஓ! அப்படியா? சங்கதி, அதை நானும் ஒருமுறை பார்க்கின்றேன்.” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு மன்னார் வருவதற்கு ஆயத்தமானார். அதன்படி மன்னாரிலும் வந்திறங்கினார். அங்கு மதத்தைப்பரப்புவதற்காக மக்களைச் சந்தித்தார். அதற்காக சில சலுகைகளையும் வெளியிட்டார்.
“மகா சனங்களே! நீங்கள் எல்லோரும் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கும் வருட வருமானத்தின் ஐந்து மடங்கை நாம் இனாமாகத் தருகின்றோம். உங்களை உயர் ராஜாங்க உத்தியோகங்களில் அமர்த்துகின்றோம். அத்துடன் உங்கள் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வசதிகளைப் பெற்றுத் தருகின்றோம்” என இவ்வாறான பல சலுகைகளை அறிவித்திருந்தார். மக்கள் எவருமே அதற்குச் செவிசாய்க்கவில்லை. சங்கிலியின் குணம் தெரிந்திருந்ததால் அவன் ஆணையைக் கடக்க எவரும் விரும்பவில்லை. இதனால் மன்னாரில் நின்று பயனில்லை என அறிந்த சவேரியர் 1548 இல் சங்கிலியை சந்திப்பதற்காக யாழ்ப்பாணம் வந்தார்.
0000000000000000000000000000
அந்தவகையில் சவேரியரை ஒரு வெளிநாட்டுத் தூதர், அத்துடன் ஒரு மதகுரு என்ற வகையில் சிறந்த அரச மரியாதையுடன் வரவேற்று கோட்டை அரச சபா மண்டபத்தில் சங்கிலி சந்தித்தான்.
“வணங்குகின்றேன் அரசே! உன் புகழ் கடல் தாண்டி இந்தியாவிலும் அறியக் கூடியதாக இருக்கின்றது. இவ்வளவு வீரம் படைக்கப்பெற்ற நீ பறங்கி அரசர்களோடு நல்லுறவை வைத்துக் கொண்டால், உனக்கும் உன் நாட்டு மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்குமே!” என ஆசை வார்த்தை கூறினார் சவேரியர்.
ஆனால் இதற்கெல்லாம் மயங்குகின்றவனா நம்மன்னன் சங்கிலி. சவேரியரது உள் நோக்கங்களைப்புரிந்து கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல் “ஆம் அவ்வாறே செய்யலாமே!” எனக் கூறினான்.
அதன்படி ஒரு ஒற்றனை அனுப்பி கோவையில் இருக்கும் அரசனுடன் கதைத்து அவன் விரப்பத்தைக் கேட்டு வரும்படி கூறினார் குருவானவர்.
அதற்கேற்ப சங்கிலியும் தன் அந்தரங்க தூதுவனொருவனை கோவைக்கு அனுப்பி வைத்தான். அதன்படி அவன் வரும்வரை சவேரியரை பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்திலேயே தங்க வைத்துக் கொண்டான். போன தூதனும் சில நாட்களில் கோவை பறங்கி அரசனது தகவலுடன் யாழ் வந்து சேர்ந்தான். அரச சபையிலே அரசனைச் சந்தித்து கோவை அரசன் நம நட்பை ஏற்றதாகவும் அதற்கு அடையாளமாக சில நினைவுச்சின்னங்களையும் அரசனுக்கு ஒரு நட்பு ஓலையையும் தந்ததாகக் கூறினான். இவ்வாறு சில நாட்கள் அமைதியாக ஓடின. ஒருநாள் சங்கிலியைச் சந்தித்த சவேரியர் மெல்ல தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.
“அரசே! என்னையும் என்னுடன் வந்தவர்களையும் சேர்த்து நாங்கள் நிறைய ஆட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியுள்ளோம்.”
“அது தெரியும் தானே”
“இல்லை எங்களுக்கு…”
“என்ன ஏதாவது குறைபாடா? அரச ஊழியர்கள் உங்களைச் சரிவரக் கவனிப்பதில்லையா? அவர்களைத் தண்டிக்கட்டுமா?”
“இல்லை அரசே! நாங்கள் வழிபடுவதற்கு இங்கு எங்களுக்கு தெய்வம் இல்லையே”
“இதில் என்ன வருத்தம் கடவுள் ஒருவர் தானே! நீங்கள் மானசீகமாக மனதால் வழிபட்டாலே போதுமே!” எனக் கூறினான்.
“அப்படியல்ல, எமக்கு இங்கு வழிபட ஒரு கோயில் அமைக்க இடம் தாருங்கள். அதற்கான செலவை நாம் தந்துவிடுகின்றோம்”. என சவேரியர் கூறினார்.
சவேரியரது உள் நோக்கங்களைப் புரிந்து கொண்ட சங்கிலி இப்பொழுது இவர்கள் கோயில் அமைக்க இடம் கேட்பார்கள். காலப்போக்கில் எங்கள் கோயில்களையும் அழித்துவிடுவார்கள் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.
“நான் ஆரம்பத்திலேயே நினைத்தேன். என்ன இன்னும் நமக்கு இவர்கள் தொல்லை தரவில்லையே என்று? இப்பொழுது புரிகின்றது உங்கள் உள் நோக்கங்கள். இனி உங்களை இங்கே வைத்திருப்பது வயிற்றில் நெருப்பை கட்டி வைத்திப்பது போன்றது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லலாம். வந்தோரை வரவேற்பது தமிழர் பண்பு. நாம் வரவேற்றோம். ஆனால் உங்கள் கபட நாடகத்திற்கு இங்கு இடமில்லை. நீங்கள் புறப்படலாம்” என கடுமையாக உத்தரவிட்டான்.
இனித்தன் தந்திரங்கள் பலிக்காது என அறிந்த சவேரியர் அவ்வளவில் மனம் சலித்து யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு சீன தேசம் சென்றார்.
ஒரு அழிவில் இருந்து மீண்ட யாழ்மக்களை சிறிது காலத்தில் மாபெரும் அழிவுக்கான ஆயத்தங்கள் சூழ்ந்தன. இதிலிருந்து யாழ்ப்பாண மக்களைக் காப்பாற்ற சங்கிலி பெரும் பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.
சாதிக்க வருவான்…
00000000000000000000000000
பாகம் 10 பறங்கியர் படையெடுப்பு
பொற்பழம் போலிருந்த சூரியன் அக்கினிக் கனியெனச் சிவந்து அடிவான மடியில் அவரோகணமாகிக் கொண்டிருந்தான். ஒளிவற்றிச் சுருண்டு மிக லேசான இருள் தூற்றலிடத் தொடங்கும் வேளை அண்மித்துவிட்டது.
இந்த மாலைவேளையிலும் அவசர அவசரமாக அரச சபையை கூட்டவேண்டியதாயிற்று சங்கிலிக்கு. அந்த அவசரத்திற்கு காரணம் ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி. பறங்கிகள் படையொன்று யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுத்து வருவதா, இதனால் அரசசபையில் அன்று அனைத்துத் தலைவர்களும் கூடியிருந்தார்கள். லஸ்தர் விளக்குகளினாலும் மெழுகுவர்த்திகளாலும் வெளிச்சமூட்டப்பட்ட அந்த சபா மண்டபம், தேவர் சபைபோலக் காட்சியளித்தது. வேகமாகச் சங்கிலி அவையினுள் பிரவேசித்தான். எல்லோரும் எழுந்து வணக்கம் செலுத்திவிட்டு அவன் அரசுக்கட்டிலில் அமர்ந்ததும் அமர்ந்தனர்.
சபையில் உள்ளோரைப்பார்த்து சங்கிலியே பேச்சைத் தொடங்கினான். “பறங்கிகள் பெரும்படையுடன் யாழ்நோக்கி வருகின்றார்கள். நான் போருக்கு அஞ்சுவதில்லை. ஆனால் நாட்டு நலனுக்கு ஏற்ப உங்களுடனும் கலந்தாலோசிப்பதற்காக சபையைக் கூட்டியுள்ளேன். நாம் இப்போது வேண்டுமானாலும் போருக்கு புறப்படலாம். ஆனால் உங்கள் கருத்துக்களை கூறுங்கள். எமது படையை என்றுமே தயாராக வைத்திருக்கின்றார் நம் தளபதி இமையாணன்” என்றான்.
இதைக்கேட்ட முதன் மந்திரி தனிநாயக முதலி எழுந்து “மகாராஜா! பறங்கிகளுடன் போர் செய்வதற்கு முன் நாம் யோசித்துத் தொடங்குதல் சிறந்ததாகும். அவர்கள் தென்பகுதியிலும், இந்தியாவிலும் மிகுந்த பலத்துடன் இருக்கின்றார்கள்.” எனக் கூறினார். இதனை அவைக்களத்துப் புலவரும், மந்திரி அடியார்க்கு நல்லானும் ஆமோதித்தனர். அத்துடன் நல்லான் எழுந்து “அரசே! பறங்கியருடன் போரிடுவதற்கு முன்னர் நாம் சில உபாயங்களைச் செய்தல் வேண்டும். அவர்களுக்கு எல்லா திசைகளிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அவர்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.”
“என்ன செய்யலாம் கூறுங்கள்” சங்கிலி வினவினான்
தளபதி இமையாணன் எழுந்து “அரசே! வடக்கே தஞ்சை நாயக்கருக்கு ஓலை அனுப்பி அவர்களோடு சண்டையிட ஏற்பாடு செய்ய வேண்டும். கள்ளிக்கோட்டை சமோரினையும் அவ்வாறே பறங்கியருக்கு எதிராக போரிடுமாறு தூண்ட வேண்டும். தெற்கே கோட்டை இராஜ்ஜியத்தை கைப்பற்றி விட்டார்கள். அங்கே நீர்கொழும்பு, சிலாபம் முதலிய பகுதிகளில் உள்ள மக்களை பறங்கியருக்கு எதிராக கலகம் பண்ணும்படி தூண்டிவிடலாம். பறங்கியரை திணறச்செய்வதற்கு இவை நல்ல உபாயங்கள்” எனக் கூறினான்.
இதுவரை பேசாதிருந்த அப்பாமுதலி “அரசே! பறங்கியருக்கு மாறாக இவ்வளவு நடவடிக்கைகள் வேண்டுமா? அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக இங்கு வியாபாரம் நடத்த வருகின்றார்களாக்கும். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா? நாம் அவர்களை வாழவைக்க வேண்டும். அந்தப் பெருமை எதிர்காலத்தில் உங்களையே வந்துசேரும்” என தன் போலி அனுதாபத்தைக் காட்டினார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கிலி இறுதியாகத் தீர்மானமாக எல்லோரையும் பார்த்துக் கூறினான் “நான் மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன், நான் போருக்கு அஞ்சவில்லை. அதனால் நாட்டுமக்கள் படும் துன்பத்தை நீக்க வேண்டும். எனவே எதற்கும் ஒருமுறை பறங்கித்தளபதிகளுக்கு ஒரு நல்லெண்ண முயற்சியாக போரைத்தவிர்க்கும் விதமாக தூதொன்றினை அனுப்பிப் பார்ப்போம்” எனக் கூறியதுடன் ஒரு மூலையில் இருந்த தன் நண்பனைப்பார்த்து “மாப்பாணா! நீதான் இதற்குப் பொருத்தமானவன். உடனே சென்று எனது விருப்பத்தை அவர்களுக்கு தெரிவித்து வா” எனக் கூறினான்.
அதன்படி வீரமாப்பாணனும் மன்னாருக்கு அருகில் உள்ள தீவுகளில் முகாமிட்டிருந்த பறங்கியத்தளபதிகளுடன் கலந்தாலோசித்துவிட்டு மீண்டும் சங்கிலியை வந்து சந்தித்தான். “என்ன மாப்பாணா! போன காரியம் எவ்வாறு முடிந்தது” சங்கிலி வினவினான். “வெற்றி தான், ஆனால் நாம் எமது பொக்கிஷத்தின் சிறுபகுதியை இழக்க வேண்டிவரும்” என்று கூறினான். “பூ! இவ்வளவு தானா? மனித உயிருடன் ஒப்பிடும் போது இது எவ்வளவு அற்பமானது” எனக் கூறி ஒரு தொகை திரவியங்களை அரச கஜானாவில் இருந்து படைவீரர்கள் மூலம் பறங்கிகளுக்கு கொடுத்தனுப்பினான்.
அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோர் ஒரு குடையின் கீழ் சங்கிலியின் ஆட்சியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் இருந்தனர். அடிக்கடி யாழ்ப்பாணத்தைச் சூழும் போர் மேகங்களால் பெரிதும் கவலையுற்ற சங்கிலி, இவர்களை இங்கு வைத்திருப்பது சிரமம் என யோசித்தான். அதை அரசசபையிலும் தெரிவித்தான். அதற்கு பலபேர் வரவேற்புத் தெரிவித்தனர்.
முதன் மந்திரி தனிநாயகமுதலி “அரசே! இவர்களது சனத்தொகை பெருகும் போது பறங்கிகள் போல் இவர்களும் எமக்கெதிராக போருக்கு எழுவார்கள். உள்நாட்டுப்போர் வெளிநாட்டுப் போரிலும் மிகக் கொடியது. இதனால் பல உயிர்சேதம் ஏற்படும்” என தன் ஐயத்தைத் தெரிவித்தார். அரசகேசரியும் “இவர்கள் கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்தையே பிடிக்கக் கூடியவர்கள். இவர்களால் நாம் பரதேசிகளாக வாழவேண்டி நேரிடலாம்” எனக் கூறினார். அடியார்க்கு நல்லான் “மன்னா! அவர்களுக்கென்று சொந்த இடங்கள் இருக்கின்றது. இதனால் அவர்களை இங்கிருந்து வெளியேற்றினாலும்; பெரிதாகக் கஷ்டப்படமாட்டார்கள். நாட்டு நன்மை கருதி அவர்களை இங்கிருந்து வெளியேற்றுவதே சிறந்த முடிவாகும்” எனக் கூறினான்.
எல்லோரது ஆலோசனைகளையும் ஏற்ற சங்கிலி சிங்களவர், சாவகர், வன்னியர் போன்றோரை எந்தவித சேதமும் இல்லாமல் அவர்கள் சொந்தப்பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தான்.
இந்த சமயத்தில் பாண்டி நாட்டிலிருந்து ஒரு அபாயம் யாழ் நோக்கி வந்துகொண்டிருந்தது.
சாதிக்க வருவான்
நன்றி :http://sankili.blogspot.fr/2010/03/10.html
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : நேசன் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : தனிமரம்
வலைச்சர தள இணைப்பு : சண்டே என்றால் ரெண்டு!ஹீ
This comment has been removed by the author.
ReplyDeleteஎனது வலைதளத்தை எல்லோருக்கும் அறிமுகப்படுதியதிற்கு எனது மனமார்ந்த நன்றிகள் திண்டுக்கல் தனபாலன் .
Delete