சூரிய குடும்பம் 6 -செவ்வாய்.
செவ்வாய்க்கிரகம்
நட்சதிரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் இன்று செவ்வாய்க் கிரகத்தைப் பற்றிய தகவல்களை பார்ப்போம்.
தரையின் சிவப்பு நிறம் காரணமாக ரெட் ப்ளானெட் என அழைக்கப்படும் செவ்வாய்,ரோமானியர்களின் யுத்தத்துக்கு உரிய கடவுளான மார்ஸ் எனும் பெயரை சூடியுள்ளது. சூரிய குடும்பத்தில் சூரியனிடமிருந்து 4வது இடத்தில் பூமிக்கு அடுத்ததாக இது காணப்படுகின்றது. செவ்வாய், போபோஸ் மற்றும் டெயிமோஸ் எனும் இரு துணைக் கோள்களைக் கொண்டுள்ளது.
துணைக்கோள் போபோஸ்
துணைக்கோள் டெயிமோஸ்
பூமியைப் போலவே துருவப் பகுதிகளைக் கொண்டுள்ள செவ்வாயில் சந்திரன் மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களில் காணப்படுவது போலவே பாரிய குழிகளும் மேலும் மலைகள், பள்ளத்தாக்குகள், கால்வாய்கள், எரிமலைகள் மற்றும் பாலை வனங்கள் என்பனவும் காணப்படுகின்றன. சூரிய குடும்பத்திலேயே மிகப் பெரிய மலைத் தொடரான ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பூமியில் காணப்படுவது போலவே செவ்வாயிலும் பருவ நிலை வட்டம் நிகழ்கின்றது. மிகவும் மெல்லிய வளி மண்டலத்தை உடைய செவ்வாயில் கார்பனீரொட்சைடு வாயுவே அதிகம் உள்ளது.
ஓலிம்பஸ் மலை
தரைப்பகுதி சிவப்பாகக் காணப்படுவதற்குக் காரணம் அதில் மேற்பரப்பில் உள்ள துரு அல்லது இரும்பு ஒக்ஸைட்டு ஆகும். துருவப்பகுதிகளில் உள்ள பனி பெரும்பாலும் கார்பனீரொட்சைட்டின் உலர்ந்த வடிவமாகும்.
செவ்வாய்க் கிரகமே அதிகளவு விண்கலங்கள், தொலைக்காட்டிகள் மற்றும் செய்ம்மதிகள் மூலம் ஆராயப்பட்ட கிரகமாகும். 1965ம் ஆண்டு நாசாவால் செலுத்தப்பட்ட மரீனெர் 4 செவ்வாயின் மேற்பரப்பில் நீர் உள்ளதா என ஆய்ந்தது. இதையடுத்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் செவ்வாயில் ஒரு காலத்தில் மிக அதிகளவு நீரும் பூமியில் உள்ளது போலவே கடலும் காணப்பட்டதற்கான சாத்தியக் கூறுகள் கிடைத்தன.
பூமியும் செவ்வாயும்
சமீபத்தில் 2007ம் ஆண்டு மார்ச்சில் ஏவப்பட்ட நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் செவ்வாயின் மார்ட்டியன் நிலம் எனும் ஆழம் குறைந்த தரையில் 2008 ஜூலை 31 இல் இறங்கி பனித் துகள்கள் குறித்து ஆராய்ந்தது. தற்போது செவ்வாயின் சுற்றுப் பாதையில் மூன்று விண்கலங்கள் இயங்குகின்றன. அவை மார்ஸ் ஒடிஸ்ஸி, மார்ஸ் எக்ஸ்பிரெஸ், மற்றும் மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் என்பனவாகும்,
மேலும் நாசாவின் இரு இரட்டை வண்டிகளான ஸ்பிரிட் மற்றும் ரோவர் என்பன செவ்வாயின் தரையில் இறங்கி அதன் மேற்பரப்பின் இயல்புகளை ஆராய்ந்தன. இவை ஆரம்பத்தில் ஒழுங்காக இயங்கிய போதும் சில மாதங்கள் கழித்து இவற்றுடன் தொடர்புகளை மேற்கொள்வதில் தடங்கல்கள் ஏற்பட்டன. இதையடுத்து நாசாவால் செலுத்தப்பட்ட மார்ஸ் குளோபல் செர்வெயோர் எனும் செய்மதி செவ்வாயின் தென் துருவத்தை ஆராய்ந்து அங்கு பனிப் பாறைகள் விலகுவதைக் கண்டுபிடித்தது. செவ்வாய்க் கிரகம் இத்தனை தீவிரமாக விஞ்ஞானிகளால் ஆராயப்படுவதற்குக் காரணம் அங்கு உறை நிலையிலோ வாயு நிலையிலோ நீர் காணப்படுமிடத்து வருங்காலத்தில் அங்கு மனிதன் குடியேற முடியும் என்பதாகும்.
ஸ்பிரிட் விண்வண்டி
ரோவர் விண்வண்டி
இனி செவ்வாய்க்கிரகம் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -
1.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள அதிக பட்ச தூரம் - 249 209 300 Km அல்லது 1.665 861 AU
2.சூரியனிடம் இருந்து அமைந்துள்ள குறுகிய தூரம் - 206 669 000 Km அல்லது 1.381 497 AU
3.தனது அச்சில் சரிவு - 25.19 பாகை
4.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 24.6229 புவி மணித்தியாலங்கள்
5.சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் நேரம் - 686.98 நாட்கள்
6.சுற்றுப் பாதையில் பயணிக்கும் வேகம் - 24.1309 Km/s
7.கோளின் விட்டம் மையக் கோட்டினூடாக - 6794.4 Km
8.மேற்பரப்பளவு - 144 மில்லியன் Km2
9.திணிவு - 6.4191 * 10 இன் வலு 23 Kg
10.சராசரி அடர்த்தி - 3.94 g/cm3
11.மேற்பரப்பு ஈர்ப்பு சக்தி - 3.71 m/s2
12.தப்பு வேகம் - 5.02 Km/s
13. மேற்பரப்பு வெப்பநிலை - குறுகியது 133K மத்திய 210K அதிக 293K
செவ்வாயின் வளிமண்டலத்திலுள்ள வாயுக்களின் வீதங்கள் -
1.காபனீரொட்சைட்டு - 95.32%
2..நைதரசன் - 2.7%
3.ஆர்கன் - 1.6%
4.ஒக்ஸிஜன் - 0.13%
5.நீராவி - 0.03%
6.ஓசோன் - மிகக் குறுகியளவு
வெறும் கண்களால் பார்க்கும் போது சந்திரனுக்கு அண்மையில் பிரகாசமான நட்சத்திரம் போல் தென்படும் செவ்வாய் தொலைக் காட்டிகளாலும் தெளிவாக அவதானிக்கத் தக்கது. அமெரிக்காவின் மரீனர் 4 செய்மதியைப் போலவே முந்தைய சோவியத் ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் செவ்வாய் குறித்து ஆராய்வதற்கு ஆர்வம் காட்டின.
செவ்வாயின் தோற்றம் பற்றி நோக்கும் போது விஞ்ஞானிகள் கருதுவது என்னவென்றால் சூரிய குடும்பம் தோன்றும் போது இத்தொகுதியில் காணப்படும் தூசு துகள்களுடன் விண்கற்கள் மோதியதால் செவ்வாய் உருவானதாகவும் பின்னர் சூரியனால் ஈர்க்கப்பட்டு அதைச் சுற்றி வர நேரிட்டதாகவும் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் அதிகளவு எரிமலைகள் தொழிற்பட்டு வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு நிரம்பியதாகவும் கூறப்படுகின்றது. செவ்வாயின் தரைப் பகுதி மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டு நோக்கப் படுகின்றது.
அவையாவன :
1.தெற்கு உயர் நிலம்
2.வடக்கு சமநிலம்
3.துருவப் பகுதிகள்
தெற்கு உயர் நிலம் மிகப் பெரியதாகும். இங்கு சந்திரனில் காணப்படுவது போன்று குழிகள் காணப்படுகின்றன. 3.9 மில்லியன் வயதுடைய இம்மலைப்பகுதி மிகப் பழையதாகும் வடக்கு சமநிலம் மிகத் தாழ்ந்த பகுதியாகும். மிகப் பழைய காலத்தில் இங்கு பூமியில் உள்ளதைப் போலவே கடல்கள்,அருவிகள்,மற்றும் நீர் வீழ்ச்சிகள் என்பவற்றுடன் எரிமலைகளும் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. துருவப் பகுதிகளை எடுத்து நோக்கினால் நாம் சாதாரண தொலைக் காட்டிகள் மூலம் அவதானிக்கும் போது கூட தெளிவாகத் தென்படுவனவாகும். நாசாவின் போஃனிக்ஸ் லேண்டர் இந்த துருவப் பகுதியிலேயே (தென் துருவம்) இறங்கி பனிக்கட்டிகளைக் குடைந்து நீர் மூலக்கூறுகளைத் தேடியமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாயின் மையத்திலிருந்து சராசரியான ஆரை 1500 - 2000 Km இடையில் அமைந்துள்ளது. இதன் உட்பகுதி பெரும்பாலும் இரும்பு கலவையினாலும் சல்ஃபர் மற்றும் சிலவேளைகளில் ஒக்ஸிஜனாலும் ஆக்கப்பட்டுள்ளது. பூமியைப் போலவே இதன் மையத்தில் அமைந்துள்ள திரவமான மன்டெல் சிலிக்கேட்டால் ஆனதாகும். இதன் அடர்த்தி 1300 - 1800 Km இடைப்பட்டதாகும். சூரியனுக்கு அண்மையிலுள்ள ஏனைய கிரகங்களைப் போலன்று செவ்வாயின் வளி மண்டலம் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதால் அதனால் வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை. எனினும் எரிமலைகளின் தொழிற்பாடு காரணமாகவும் தரையின் இயல்பினாலும் அதன் மேற்பரப்பு வெப்பநிலை பூமியை விட அதிகம். இதனால் திரவ நிலையில் அங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்கள் குறைவு.
இதன் மேற்பரப்பில் அடிக்கடி நிகழும் மணற் புயல் காரணமாக இதன் தரை வேறுபாடுகளை உயர்ரக விண் தொலைக்காட்டிகளால் கூட தெளிவாக அவதானிக்க முடியாத தன்மை நிலவுகின்றது.
தொடரும்
0000000000000000000000000000
சூரிய குடும்பம் 7 -வியாழன்
பூமியும் வியாழனும் ஒப்பீடு
இன்றைய நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரில் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோம்.
ஐதரசன் மற்றும் ஹீலியம் ஆகிய வாயுக்களினால் பெரும் கனவளவு நிரப்பப் பட்ட பெரு வாயுக் கோளான வியாழன் ஜோவியான் அல்லது வெளிப்புறக் கிரகங்கள் நான்கிலும் மிகப் பெரியதும் அதிக ஈர்ப்புச் சக்தி உடையதுமான கோளாகும். நாம் இதுவரை பார்த்த மிகச் சிறிய கிரகங்கள் பாறை அல்லது தரையை உடைய றொக்கி பிளானெட்ஸ் ஆகும்.
ஆனால் ஏனைய கிரகங்கள் வாயு ஜாம்பவான்கள் அல்லது மேற்பரப்பில் அதிகளவு வாயுவும் உட்கருவில் சூடான பாறையும் திரவ உலோகம் ஆகியவற்றை உடைய போதும் விண்கலங்கள் இறங்கக் கூடிய தரை மேற்பரப்பை இவை கொண்டிருக்காத தன்மை உடையன. இதனால் இவை வெளிப் புறக் கிரகங்கள் அல்லது ஜோவியான் கிரகங்கள் என அழைக்கப் படுகின்றன.
சூரியனிடமிருந்து ஐந்தாவது இடத்தில் அமைந்துள்ள வியாழன் பூமியின் விட்டத்தை விட 11 மடங்கு அதிக விட்டத்தையும் பூமியின் நிறையைப் போல் 318 மடங்கு அதிக நிறையையும் புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு அதிக ஈர்ப்பு விசையையும் உடையது. வியாழன் கிரகத்திற்குள் 1321 பூமிகளை வைக்கக் கூடிய இடம் காணப்படுகின்றது.
சூரியனிடமிருந்து சராசரியாக 484 மில்லியன் மைல் தூரத்திலும் பூமியிலிருந்து 97 மில்லியன் மைல் தூரத்திலும் அமைந்துள்ள வியாழன் தன்னைத் தானே சுற்றி வரும் வேகம் மிக அதிகமாகும். இது தன்னைத்தானே ஒரு முறை சுற்ற (விநாடிக்கு 8 மைல் வேகத்தில்) 9 மணி 50 நிமிடங்களை எடுக்கின்றது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 12 வருடங்களாகும். வானில் நிலா மற்றும் வெள்ளிக்கு அடுத்து வியாழனே மிகப் பிரகாசமாக சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் கிரகமாகும். மேலும் சூரிய குடும்பத்தில் மிக அதிக பட்சமாக 64 துணைக் கோள்களை வியாழன் கொண்டுள்ளது. இவற்றில் கனீமிட் எனும் துணைக் கோள் புதன் கிரகத்தை விட பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழனின் துணைக் கோள்களும் பூமியும் அதன் நிலவும்
வியாழனில் மிக அதிகளவில் வாயுக்களின் புயல் வீசி வருகின்றது. இதன் விளைவாகவே இங்கு மிகப் பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் (Great Red Spot) உருவாகியுள்ளது. பூமியை விட மிகப் பெரிய கனவளவுடைய இப்பிரதேசத்தில் 17ம் நூற்றாண்டில் தொடங்கிய மாபெரும் புயல் வீசி வருகின்றது.
மேலும் ஏனைய ஜோவியான் கிரகங்களைப் போலவே (சனி,யுரேனஸ்) வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதியும் வலிமையான காந்தப் புலமும் உள்ளது. வியாழனின் அதி கூடிய ஈர்ப்பு விசை காரணமாக விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் தூசுதுகள்கள், வால் வெள்ளிகள், மற்றும் விண் கற்கள் என்பன ஈர்க்கப்பட்டு அதன் துணைக் கோளாக மாறக் கூடிய சாத்தியங்களும் காணப்படுகின்றன. மேலும் புவிக்கருகில் வியாழன் இருப்பதால் பூமியைத் தாக்க வரும் விண் பொருட்களும் இக்கோளாள் ஈர்க்கப்பட்டு விடும் சந்தர்ப்பங்களும் பல நிகழ்ந்துள்ளன.
மிகச் சிறந்த வானியலாளரும் தொலைக்காட்டியைக் கண்டு பிடித்தவருமான கலிலியோ தனது தொலைக் காட்டியின் மூலம் 1610 ஆம் ஆண்டு வியாழனின் 4 பெரிய நிலவுகளைக் கன்டு பிடித்தார். அவை யுரோப்பா,கனிமீட்,லோ மற்றும் கல்லிஸ்டோ என்பவையாகும். வியாழன் மிகப் பெரிய கிரகமாகத் திகழ்வதால் அதற்கு ரோமானியர்கள் தமது கடவுள்களின் அரசனும் வானத்தின் தேவனுமான ஜுபிடர் எனும் பெயரைச் சூட்டினர் என்பது குறிப்பிடத் தக்கது.
வானியல் அறிஞர் கலிலியோ
ரோமான் கடவுள்களின் அரசன் ஜுபிட்டர்
வியாழன் ரோபோட்டிக் விண்கலத்தாலும் நாசாவின் பயனீயர் மற்றும் வொயாஜெர் செய்மதிகளாலும் கலிலீயோ ஆர்பிட்டர் எனும் விண்கலத்தாலும் விரிவாக ஆராயப்பட்ட கிரகமாகும். மேலும் 2007 பெப்ரவரியில் வியாழனின் சுற்றுப்பாதை வழியாக புளூட்டோ கிரகத்தை ஆராயச் சென்ற நியூ ஹாரிஸன் எனும் விண்கலத்தால் சமீபத்தில் வியாழன் படம் பிடிக்கப்பட்டது. இவ்விண்கலம் வியாழனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது வேகத்தை அதிகரித்துக் கொள்ளும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வியாழனின் துணைக் கோளான இயுரோப்பா பனிக்கட்டி மூலக்கூறுகளாலான சமுத்திரத்தை உடையது எனும் காரணத்தால் அது வானியலாளர்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
இனி வியாழன் குறித்த சுருக்கமான தகவல்களைப் பார்ப்போம் -
1.தன்னைத் தானே ஒரு முறை சுற்ற எடுக்கும் நேரம் - 9 மணி 55 நிமிடம் 30 செக்கன்
2.சூரியனை ஒரு முறை சுற்ற எடுக்கும் காலம் - 11.8618 ஆண்டுகள்
3.தனது அச்சில் சாய்வு - 1.305 பாகை
4.சுற்றுப் பாதையில் சராசரி வேகம் - 13.07 Km/s
5.சராசரி ஆரை - 69 911 +or- 6 km
6.மேற்பரப்பளவு - 6.1419 * (10 இன் வலு 10) km2 - 121.9 மடங்கு பூமியின்
7.கனவளவு - 1.4313 * (10 இன் வலு 15) Km3 - 1321.3 மடங்கு பூமியின்
8.நிறை - 1.8986 * (10 இன் வலு 27) Kg - 317.8 மடங்கு பூமியின்
9.சராசரி அடர்த்தி - 1.326 g/cm3
10.மையத்திலிருந்து ஈர்ப்பு - 24.79 m/s2 or 2.528 g
11.தப்பு வேகம் - 59.5 Km/s
12.மேற்பரப்பு வெப்பம் - குறை - 0.1 K, நடு - 0.165 K, மிகை - 0.112 K
13.மேற்பரப்பு அமுக்கம் - 20 - 200 kPa
வளி மண்டலத்தில் வாயுக்களின் வீதம் -
1.ஐதரசன் - 89.8%
2.ஹீலியம் - 10.2%
3.மெதேன் - 0.3%
4.அமோனியா - 0.026%
5.நீர் - 0.0004%
வியாழனின் துணைக் கிரகமான யுரோப்பாவில் தண்ணீர் இருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது. அங்கு 10 Km அளவுக்கு கனமான ஐஸ்கட்டி படிவங்கள் உள்ளன. அவை 3 Km ஆழத்துக்கு படிந்து உள்ளன. இதன் மூலம் அங்கு பெரிய கடல்களும் ஏரிகளும் இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் விண்வெளி இயற்பியல் நிறுவன தலைவர் பிரிட்னி அறியத் தந்தார்.
மேலும் 1994ம் ஆண்டு வெயில் காலத்தில் வானில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வாகப் பதியப் பட்டது என்னவென்றால் சூமேக்கர் லெவி 9 எனும் மிகப் பெரிய வால்வெள்ளி வியாழனுக்கு அண்மையில் வந்து அதன் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு பல துண்டுகளாகச் சிதறி அதனுடன் மோதியது. இத்துண்டுகள் விஞ்ஞானிகளால் முத்துக்களின் சிதறல் எனும் பட்டப் பெயரால் அழைக்கப்பட்டன. இம் மோதுகையினால் வியாழனில் மிகச் சிறிய நடுக்கங்கள் ஏற்பட்டதை வானியலாளர்கள் அவதானித்துள்ளனர். மேலும் இம்மோதுகை காரணமாக ஏற்பட்ட கரும் பொட்டுக்கள் வியாழனில் பல மாதங்களுக்குத் தென்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதுவரை வியாழன் குறித்த சுருக்கமான விபரங்களைப் பார்த்தோம். அடுத்த தொடரில் சூரிய குடும்பத்திலேயே அடர்த்தி மிகக் குறைந்த கிரகமாகவும் இரண்டாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்கும் சனிக் கிரகத்தைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.
தொடரும்
00000000000000000000000000000000
நன்றி : http://www.4tamilmedia.com/knowledge/essays/4515-star-journey-13-jupiter
Comments
Post a Comment