இந்து மதம் எங்கே போகிறது?- மெய்யியல் -பாகம் -43 - 50.


ஆபாச திருமண மந்திரங்கள். உடலுறவின் போது.பகுதி 43.


ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

உடலுறவை கண்காணிக்கும் தேவதைகள்.பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

விஷ்ணுர் யோனி கர்ப்பயது...’ எனத் தொடங்கும் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்தான் என்ன?

பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. யோனி, மத்யமம், உபஸ்தம் என மூன்றாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கிறது.

அதாவது, விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய தேவதைகள் இம்மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

இவர்கள்தான்... ஆணும், பெண்ணும் தேக ஸம்பந்தம் உடலுறவுகொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்கிறார்கள்.

அதாவது... நாம் தேக ஸம்பந்தம் கொள்வதை கூட விஷ்ணு உள்ளிட்ட தேவதைகள் அருகில் இருந்து, இன்னும் சொல்லப்போனால் அந்த இடத்திலேயே இருந்து கவனிக்கிறார்கள்.

இவ்வாறு கவனிக்கும் தேவதைகள் விஷ்ணு, தொஷ்டா, தாதா ஆகிய சக்திகள் அவளுக்கு கர்ப்பத்தை உண்டாக்க அருள்புரிய வேண்டும்... என்கிறது இந்த மந்த்ரம்.

நாம் பெண் என்றால் தெய்வம் என்கிறோம். ஆனால், பெண்ணின் ஓர் உறுப்பிலேயே மூன்று தெய்வங்கள் எல்லை பிரித்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறது இந்த மந்த்ரம்.

இதை நீங்கள் பெண்மையின் உயர்வாகவே எடுத்துக் கொள்ளலாம். `அந்தரங்கம்’ எல்லாம் `அந்தரங்கன் அறிவான்’ என கண்ணதாசன் சொல்லி வைத்ததற்கு முதல் முதன் முன்னோடியாக விளங்கியிருக்கிறது என்றும் வைத்துக் கொள்ளலாம்.இங்கே முக்கியமானதொன்று... வேத திருமணங்கள் பெரும்பாலும் கர்ப்பாதானம்ம என்றே அழைக்கப்பட்டிருக்கின்றன.

விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்றும், பாணிக்ரஹணம் என்றால் கைப்பிடித்தல்என்றும் பார்த்திருக்கிறோம். வையெல்லாம் எதற்காக? கர்ப்பாதானம் செய்து... குழந்தைகள் பெற்று மகிழ்ந்து வாழத்தானே. அதனால்தான் திருமணத்தை கர்ப்பாதானம் என்றே குறிப்பிட்டது வேதம்.

இதற்காகவே கணவனுக்கும், மனைவிக்கும் மணமேடையில் நிகழும் உரையாடலாக வேதம் இப்படி பதிவு செய்திருக்கிறது.

அவள் கேட்கிறாள்.``மணாளா... நீங்கள் எனக்கு புருஷனாக கிடைத்தது எனது அதிர்ஷ்டம். இந்த கன்னி செய்த புண்ணியத்தால் உன்னை கைப்பிடித்தேன். நீ சம்பாதிக்கும் செல்வத்தையெல்லாம் வீட்டுக்கே கொண்டு வரவேண்டும். அதுபோல உனது இந்த்ரிய சந்தோஷத்தையும் நீ என்னிடம் மட்டுமே பகிர்ந்துகொள்ள வேண்டும். வேறு வேறு பெண்களை நாடி நீ போகக்கூடாது... என்ன சரியா?’’ என்கிறாள்.

அவன் இதற்கு பதில் சொல்கிறான்.``நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம்தான் ஒப்படைப்பேன்.

அதேநேரம்...இந்த்ரிய சந்தோஷத்தை உன்னுடன் தான் அனுபவிக்கவேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக் கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் நேராது...’’ என்கிறான் அவன்.

இதை தான்...``உதுத்தரம் மாரோஹந்திமுர்த்தானம் பத்யு ராரோஹ’’கல்யாணம் செய்து போன பெண்... கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

அதாவது... அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்கவேண்டும். அவனது மூளையில் இவளே முழுதும் இருக்கவேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்லமாட்டான் அல்லவா? என்கிறது வேதம்.

கணவன் மூளைக்குள் தன்னை நிரப்பவேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்தவேண்டும்?

``ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீஅனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்சம்மார்ஜன அனுரே பாப்யாம்க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும்பூஷ்ஹேஸ்யதா’’

கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு... இப்படி செய்வதால்தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...

தொடரும்

0000000000000000000000000000000

பாகம் 44 : மகன்கள் தன்தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இன்னொரு மந்த்ரம். இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

ஆனால்...?,

“என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.

ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கிறார்கள்.

சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கிறார்கள். சரி. அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மது ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினெட்டு மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின் போது பூமியை காக்க அவரால் நியமிக்கப் பட்டவர்தான் மநு என்கிறார்கள்.

அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழவேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார் மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுஷன் என்ற பதமும் வந்தது என்றொரு மொழிக் குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

சரி... நாம் பார்க்கும்போது மநு யார்? வேதத்தை எளிமையாக்கி அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்?

உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன். மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண்குழந்தை எட்டு வயதிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விளையாடிக் கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (மரப்பாச்சி என்றால் இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா. மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள் தான்) களை வைத்துக் கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் வேளையில்...திடீரென அந்தப் பெண் குழந்தையை...“வாம்மா... நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்... எல்லோரும் வந்துவிட்டர்கள்.

இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால் தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா.. வா...”என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும்.“இரும்மா.. விளையாடிட்டு இருக்கேன்... இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேன்.”- ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பிக்கிறது.

தொடரும் 

00000000000000000000000000000

பாகம் 45:எட்டுவயதுப் பெண் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? 

மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணாமல் அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை.

எட்டுவயது பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்துவிட்டது என்றேனே.. மநு எப்படி விளையாடும்?...

மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண்குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!... என்ன சொல்கிறார் இவர்?... என்ற கேள்வி எழுகிறதா?...

ஆமாம்... விளையாடிய குழந்தையை சீவி சிங்கரித்து அம்மா கூப்பிடுகிறாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை... பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?

கிடையவே கிடையாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளை யெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கிறார்களே... அதற்காகவா?...முற்றிலும் கிடையாது... மணப் பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.

என்னது... எட்டு வயதுப் பெண்தான் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? இதுதான் மநுவின் விளையாட்டு மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கிறது.

வேதம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தாலும் அவள் ருதுவான பின்னர்தான் திருமணம்.

மநுவர்க்கம் என்றெல்லாம் சடங்குகளைப் பின்னியது....ஆனால் மநு அப்படியல்ல... எட்டு வயதுக்குள்ளேயே பெண்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது மநு...ப்படி பெண்களுக்கு பொதுவான பெயர் க்ருஹிணி அதாவது வீட்டுக்காரி வீடுதான் அவள் உலகம்.

வீட்டுக்குள்தான் அவள் இருக்கவேண்டும். நான் முன்பு சொன்னேனே. வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள் என்று. திருமணம் வரைக்கும் வீட்டு வாசலில் விளையாடலாம்.

அதன்பிறகு கல்யாணமாகி முழு க்ருஹிணி ஆன பின்னர் வீடுதான் அவள் சகலமும் கல்யாணத்தை மநு கன்னிகா தானம் என்கிறது. கன்னிகையை தானம் செய்தல் கன்னிகாதானம்.

கன்னிகா என்றால் அதாவது கன்னிகை என்றால்? மநு தர்மப்படி எட்டு வயது பெண்கள் அனைவரும் கன்னிகைகள், பின்... கன்னிகைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும்.

இன்னொருவன் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டும். அதாவது அவனிடத்திலே இந்த கன்னிகையை தானம் செய்யவேண்டும். இது கன்னிகாதானம்.இதைத்தான்...‘அஷ்ட வருஷா பலேத் கன்யா...’ என்கிறார் ஆதிபுருஷர் மநு.

இதில் இன்னொன்று... எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது. எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகைப் பருவத்தை கடந்து விடுகிறாள். அதனால்... அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகாதானமல்ல. அதாவது கல்யாணமல்ல.

அதனால் எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு...கல்யாணத்தில் இப்போது நிச்சயதார்த்தம் என ஒரு சடங்கு வைக்கிறார்கள்.

சிலபேர் இதை நிச்சயதாம்பூலம் என்று சொல்கிறார்கள். ஏதோ ஒன்றை சொல்லிவிட்டுப் போங்கள் ஆனால்... இதன் அர்த்தம் என்ன? முன்பு எப்படி நடந்தது’... என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?...

கிராமப் புறங்களில் சந்தையிலே ஆட்டையோ, கோழியையோ, மாட்டையோ விற்பதாக வைத்து... பக்கத்திலே துண்டை கையால் மூடிக் கொண்டு விலை பேசுகிறார்கள் தெரியுமா? இதன் பேர் தான் நிச்சயதார்த்தம்.

இன்னொரு முக்யமான விஷயம். இந்த நிச்சயதார்த்தத்தில் மணப்பெண் மட்டும்தான் கலந்து கொள்வாள். மாப்பிள்ளைக்கு அங்கு வேலையே கிடையாது. இது வெறும் லௌகீகச் சடங்கு... அதாவது மந்த்ரத்துக்கு இடமே இல்லை.ஆனால்... இன்று நிச்சயதார்த்தம் என்ற பெயரில் திருமணத்துக்கு சமமான ஒரு சடங்கை create பண்ணிவிட்டார்கள்.

வாத்யார்களைக் கேட்டால் ‘ எல்லாம் பெரியவாள்’ சொன்னது...’ என்கிறார்கள்.என்னைக் கேட்டால் இப்போது கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிதம் பண்ணி வைக்கும் வாத்தியார்களையெல்லாம் ஒரு சிறைக்குள் போட்டு... அதாவது மறைச்சிறை அதுதான் வேதச்சிறை.

அங்கே அவர்களுக்கு... உண்மையான சடங்கு சம்ப்ரதாயங்களைக் கற்றுத் தரவேண்டும். வேதத்தில்... ஸ்மிருதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அர்த்தத்தோடு விளக்கி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அதன்பிறகு அவர்களை வெளியே அனுப்பவேண்டும்.சரி சரி... நான் என்ன சொன்னேன்?

எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக்கொடு. அப்படியா.. ‘மநுபிரபோ என்னால் முடியவில்லை. என் பெண் குழந்தையை கட்டிக் கொள்ள எந்த பொடிப் பயலும் கிடைக்கவில்லை. அவளுக்கும் எட்டு வயது கடந்து விட்டது. இப்போது ருதுவாகி விட்டாளே...’இப்படியாக ஒரு ஏழைத் தகப்பன் மநுவிடம் மன்றாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். மநுவிடம் வாய்வழியாக மனு போடுகிறான் எனக் கருதிக்கொள்ளுங்கள்.

அவனுக்கும்... அவனைப் போன்ற அப்பாக்களுக்கும் மநு பதில் தருகிறார்.

“பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹாகன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா...நகன்யாஸீ...”

இது பதில் அல்ல தண்டனை. எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?...

தொடரும் 

000000000000000000000000

பாகம் 46 : ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து?

ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும்.

கொடுமையான தண்டனை... அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம்.

000000000000000000000

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 46.

எட்டு வயதைத் தாண்டி, பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைக்கின்ற அப்பா... மநுவிடம் போட்ட மனு என்ன ஆனது?... இப்போது மந்திரி பிரதானிகளிடம் மக்கள் கொடுத்த மனு எப்படி குப்பைத் தொட்டிக்குப் போகிறதோ அதே மாதிரிதான்.

அதோடு நின்றால் பரவாயில்லை. கூடவே... நீ ஏனடா உன் பெண்ணுக்கு எட்டு வயது வரை கல்யாணம் செய்யாமல் இருந்தாய். கன்னிகா தர்மத்தை கால்களில் போட்டு மிதித்து விட்டாயே... இது பாவம் என்று உனக்குத் தெரியாதா? இந்த பாவத்துக்கு தண்டனை என்ன என்று உனக்கு தெரியாதா?... என மநு ஸ்மிருதி அந்த அப்பாவி அப்பாக்களை பார்த்து அதட்டுகிறது.

இக்கால அப்பாக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அக்கால அப்பாக்களுக்கு மநு வகுத்த தண்டனைகள் தெரியும். அதனால் அவர்கள் ஆடிப் போயிருந்தார்கள். அந்த தண்டனையை அனுபவிப்பதை அவர்களால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அந்த அசிங்கத்தை செய்வதை விடவும் தங்கள் ஆயுளையே முடித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள் அந்த அப்பாக்கள்.அப்படிப்பட்ட அளவுக்கு அது என்ன தண்டனை?

“மாஸி மாஸி ரஜஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...”

இந்த ஸ்மிருதி விதியை எழுதுவதற்கு என் பேனா கூசுகிறது. இப்படிப்பட்ட ஒரு கருத்தை சுமந்து கொண்டிருப்பதற்காக சமஸ்கிருத பாஷையே கூச்சப்பட வேண்டும். அந்த விதியின் விளக்கத்தை உங்களுக்கு தமிழில் நான் சொல்லும்போது... தமிழின் தரம் கெட்டுவிடக் கூடாதே என நான் பயப்படுகிறேன்.

அது என்னவென்றால்...அடே கையாலாகாத அப்பா... உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்கவேண்டும். தவறிவிட்டாய். அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத்துக்குள் நீ அவளுக்கு மணமுடிக்கவில்லையென்றால்... அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும் வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற்றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்த தண்டனை.

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன்னதை தெரிந்து கொண்டீர்களா? எழுதி முடித்தபின் என் பேனாவுக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. மரண தண்டனை விதித்து தீர்ப்பு எழுதிய பேனாவை முனை குத்தி முறித்துப் போட்டு விடுவதைப் போல... இந்த பேனாவையும் தூக்கி எறிந்து விடலாமா என தோன்றுகிறது.

அடப்பாவிகளா?... வறுமையாலோ, ஜாதக தோஷத்தாலோ.. பெண்ணின் குறைபாடுகளாலோ கல்யாணம் தாமதமாகி எத்தனை பெண்கள் வீட்டில் இருக்கிறார்கள். ருதுவான பிறகு தான் கல்யாணமே பண்ணவேண்டும் என்பது பொதுவான விழிப்புணர்வாளர்களின் கருத்து.

அதையும் தாண்டி மகளின் மாத விலக்கை பருகச் சொல்கிற மநு எத்தனை கடுமை?... கொடுமை?... எரிகின்ற தீயில் எது நல்ல தீ என்பது மாதிரி... இந்த தண்டனையிலிருந்து தப்பிக்க இன்னொரு பரிகாரத்தையும் அருள்கிறார் மநு. அப்படியா? என்ன பரிகாரம்?...

உன் மகள் ருது காலத்தில் அவளது ப்ரம்மஹத்தி தோஷத்தை சாப்பிடவேண்டும் என்று சொன்னேன் இல்லையா?...

அதிலிருந்து நீ தப்பிக்க வேண்டுமானால் அவளுடைய ஒவ்வொரு பஹிஷ்டையின் (மாதவிடாய்) போதும் ஒரு பசுவை பிராமணனுக்கு தானம் பண்ணிவிடு. இந்த கோதானம் தான் உனக்கு பரிகாரம்.

அதாவது... மகள் ருதுவாகி கல்யாணம் ஆகும் வரை அவளுக்கு எத்தனை பஹிஷ்டை நேருகின்றதோ... அத்தனை பசுக்களை தானம் பண்ணவேண்டுமாம். இப்போது புரிகிறதா... எங்கு போய் எங்கு வருகிறார் மநு என்று?

அந்த கோதானம் பண்ணுகிற செலவில் கல்யாணத்தையே நடத்தி விடலாம் என்கிறீர்களா?

கொடுமையான தண்டனை... அதிலிருந்து தப்பிக்க ‘வரும்படி’ தருகின்ற பரிகாரம். சரி.. கோதானம் கொடுத்தோ, கொடுக்காமலோ கல்யாணம் ஆகிவிட்டது.

அடுத்த ஒருவருஷம் வரை... அவளும் அவனும் தினமும் வீட்டில் ஒளபாசனம் பண்ணவேண்டும். அதென்ன ஒளபாசனம்

அக்னி காரியம் தம்பதிகள் தினமும் அக்னி வளர்த்து பண்ணவேண்டிய ஹோமம் இந்த ஒரு வருடம் வரை... அவள் கணவன் வீட்டில் இருந்தாலும்... கணவனுக்கு பணி விடைகள் செய்தாலும்... ஒரே மஞ்சத்தில் படுத்தாலும் தேக ஸம்பந்தம் கொள்ளக்கூடாது.

ஒரு வருஷம் கழித்து ஒளபாசன கடமைகளை முடித்த பின்னர்தான் சாந்தி கல்யாணம்.

இதற்கிடையில்... ஒரே மஞ்சத்தில் படுத்திருக்கும் இருவரும் ஒன்றுசேரக் கூடாது என்பதற்காக மஞ்சத்தில் அவளுக்கும் அவனுக்கும் இடையே ஒரு தர்பை (புல்)யை கிள்ளிப் போடுவார்கள். அந்த தர்பை தான் கந்தர்வன். அவன்... இருவரும் இணையாமல் பார்த்துக் கொள்வானாம். இப்போது இன்னமும் சிலர் சாஸ்திரத்துக்காக இதைத் தொடருகிறார்கள் என்பது ஹாஸ்யம்.

இப்பழக்கம் ஆதிகாலத்தியது. க்ருஹ சூத்திரம் சொல்வது. இதன்படி, வகுத்தவர்களாலேயே நடக்க முடியவில்லை. என்ன ஆனது?... அந்த ஒரு வருஷம்... 6 மாசங்களானது... அப்போதும் கஷ்டம்... என்னடா இவ்வளவு நாள்கள் ஆகிறதே என்று... கொஞ்சமாய் குறைந்து மூன்று மாதங்கள் ஆனது.

அடுத்தடுத்து வந்த தலைமுறையினருக்கு மூன்று மாதமே பெருங்காலமாக இருந்தது. அப்புறம் பார்த்தார்கள். 15 நாள்கள் ஆக்கினார்கள். அதுவும் தேய்ந்து 7 நாள்களானது.

பின் கல்யாணம் ஆகி 3 நாள்கள் கழித்து... இப்போது காலையில் கல்யாணம் ராத்திரி சாந்தி கல்யாணம்.

நமது சௌகரியத்துக்கேற்ப சாஸ்திரத்தை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதை போல் ஆக்கி விட்டோம் என்பதற்காக சொல்ல வந்தேன்.

சரி... மநு சொன்னபடி பால்ய கல்யாணம் பண்ணிக் கொண்டவர்கள் யாரையாவது காண்பிக்க முடியுமா?

தொடரும்

00000000000000000000000

பாகம் 47 : பிராமணபெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான். 

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.

கல்யாணத்தின்போது சீதைக்கு வயது ஆறேதான்.

மநு தர்மப்படி எட்டு வயசுக்கு முன்பே கல்யாணம் செய்து கொண்ட ஒரே ஒரு ஜோடியையாவது காட்ட முடியுமா?

என் காலத்தில் என் கண்ணெதிரே எத்தனையோ பெண்களுக்கு மநு மணங்கள் நடந்திருக்கின்றன.

அவர்களை எனக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியுமோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லையே?

அப்படியென்றால் எல்லோருக்கும் தெரிந்த மிகப் பிரமாண்டமான ஒரு ஜோடியை பிடித்து உங்களுக்கு காட்டவேண்டும். அதுவும் மநுமணம் செய்துகொண்டதாக , அதாவது பால்ய திருமணம் செய்துகொண்ட ஜோடியாக இருக்கவேண்டும். அல்லவா?

சரி, இதோ உதாரணம். ராமர் சீதா தெரியுமா? அவர்கள்தான்.சற்று முன்பே சொன்னேனே. பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். கூப்பிட்டு... கல்யாணம் பண்ணி வைத்துவிடுகிறார்கள் என்று. அதேபோல்தான் ஜனக மகாராஜனின் புத்திரியான சீதாதேவி விளையாடிக் கொண்டிருந்த பருவத்திலேயே கல்யாணத்தை முடித்துவிட்டார்கள்.

கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார் இவர். கம்பராமாயணத்தலே கம்பர் வேறு மாதிரியல்லவா சொல்லியிருக்கிறார்.

“ராமரை சீதை பார்த்த போது, சீதையின் தேகம் வெட்கத்தாலும் வெப்பத்தாலும் சூடேறியது. அவள் படுத்திருந்த பஞ்சு மஞ்சம் இந்த சூடு தாங்கமுடியாமல் எரிய ஆரம்பித்தது. விரகச் சூடு தாங்காமல் அவளது பொங்கிய மார்பகம் அனல் கக்கியது.

சீதை தன் கழுத்தில் போட்டிருந்த கருகமணி மாலைகள் இந்த சூடு தாங்க முடியாமல் அறுந்து உதிர்ந்து, கீழே உருண்டோடுகின்றன. ராமனை... இப்படியாக சீதையை பாதித்தாள். அவனது கனவுகளை சோதித்தாள்” என்றல்லவா கம்பர் எழுதியிருக்கிறார்.

அப்படிப் பார்த்தால் சீதைக்கு கல்யாண பயத்தில் வயதுக்கு வந்த வயதாகத்தானே இருக்க முடியும் என்று நமக்கு நியாமான சந்தேகம் எழலாம்.

கம்பர்.. தமிழ்ச் சூழலில் கல்யாண பருவத்தில் சீதையை குழந்தையாக காட்டவேண்டாம் என நினைத்திருக்கலாம்.
ஆனால், வால்மீகி ராமாயணத்தில்,

தோஷாத் தாரக்தியாம்பதி
சிந்தையா மான தர்மாத்மா
சோபாத்யாய சபாந்த்த வஹா

என்கிறார் ராமன். சின்னப் பிள்ளையாக இருக்கும்போது அவனுக்கு 12 வயது ஆகும்போதே அவனது கல்யாணத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் தசரத சக்கரவர்த்தி.

விஸ்வாமித்ரரோடு ராமன் ஜனகராஜனின் அரண்மனைக்கு வரும்போது தனுஸ் அதாவது வில்லை ஒடிப்பவர்களுக்கு சீதையை திருமணம் செய்து தருவேன் என்கிறான் ஜனகன். ராமன் வில்லை ஒடித்தான். ஒடித்துவிட்டு நான் சீதையை கல்யாணம் செய்வதற்காக வில்லை ஒடிக்கவில்லை என் பலத்தை நிறுவுவதற்காகவே ஒடித்தேன் என சொல்கிறான். அதன்பிறகு தசரதன் சொல்லி பிறகு ராம சீதா கல்யாணம் நடக்கிறது.

கல்யாணம் எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். ஆனால், கல்யாணத்தின்போது ராமனுக்கு 12 தான். சீதைக்கு வயது ஆறேதான். இதுதான் வால்மீகி காட்டும் வயது.

வனவாசத்தின்போது சீதாதேவி ஆஞ்சநேயரிடம் சொல்கிறாள்.
"அஷ்டாதஸ வருஷானி மம ஜென்மணி கன்யதே
நான் என் 18-ஆவது வயதில் வனவாசம் செய்ய வேண்டியதாயிற்று. எனது 6-ஆவது வயதில் கல்யாணமாகி 12 வருடம் ராமரோடு வாழ்ந்தேன். அதன்பிறகுதான் காடு புகும்படி விதி விளையாடிவிட்டது.” என சீதாதேவி ஆஞ்சநேயரிடத்திலே சொல்கிறார்.

இன்னொரு இடம் சீதா அக்னிப் பிரவேசம் தீக்குளிக்கும் முன்பு ராமனைப் பார்த்து கேட்கிறாள்.

‘நப்ரமாணி கிரதப்மாணி
பால்யே பாலேன பீடிதஹ்”

ராமா என்னையே நீ சந்தேகப்படுகிறாயே?

குழந்தைப் பருவத்திலேயே என் கையை இறுக்கமாக பிடித்தவனாயிற்றே. அப்படியிருந்துமா என்னை நீ புரிந்துகொள்ள வில்லை... என்கிறாள். இதிலிருந்து சீதாதேவியின் கல்யாணம் அவளது 6 வயதில் அதாவது மநு ஸ்மிருதிக்கு கட்டுப்பட்ட கல்யாணமாகவே நடந்திருக்கிறது என்பது புரிகிறது. உதாரணம் சொல்லியாகிவிட்டது.

கல்யாணம் என்றதுமே இக்காலத்தில்
“மாங்கல்யம் தந்து நானே நவஜீவன கேது நாம்”
என்ற Trade Mark மந்த்ரம்தான் பலருக்கு ஞாபகம் வரும். இதற்கு என்ன அர்த்தம்?

“அடியே இந்த புனிதமான நூலை உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இது இருந்தால்தான் உன்னை என் மனைவி என்று இந்த ஊர் - உலகம் நம்பும். அதற்காகத்தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.” இதுதான் இந்த மந்த்ரத்தின் அர்த்தம்.

நான் சில பல அத்யாயங்களுக்கு முன்னரே சொல்லியிருந்தேனே. பனை ஓலையில் பெண்ணின் பெயரை எழுதி இவள் இவனுக்கு அடிமை என எழுதி அதை நூலில் கோர்த்து கழுத்தில் கட்டுவார்கள். பனை - தால் அதனால்தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது என சொல்லியிருந்தேன்.

அப்படிப்பட்ட Symbol தான் தாலி. அதாவது ஊருக்கு தெரியவேண்டும். நீதான் என் மனைவி என்று. அதற்காக கட்டுகிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். இப்பழக்கம் பிற்காலத்தில் வந்தது. இந்த மந்த்ரமும் பின்னால் சேர்ந்ததுதான்.

மநு-ப்படி கல்யாணம் ஆன பெண்களும், இப்போது கல்யாணம் ஆகாத பெண்களும் ஒன்றுதான். அடுத்ததாக பொதுவாகவே பெண்களுக்கு வித்யா ரீதியாக என்ன வாய்ப்புகளை கொடுத்தது மநு?....

வேதத்தில் பெண்கள் அத்யயனம் செய்ததையும் சம்ஸாதம் நடத்தியதையும் பார்த்தோம். ஆனால், மநு உறுதியாக உரத்துச் சொன்னது.

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்

தொடரும் 

0000000000000000000000000000000

பாகம் 48:பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது. 

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

இத்தொடரில் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதா? வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.

அப்படிப்பட்ட நிலையில்...

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு. இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.

உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

அதாவது...

``ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது அப்புறம்...?

``ஸ்த்ரீதாம் உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத்...’’

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது

தொடரும் 

0000000000000000000000000

பாகம் 49: பூணூல், உபநயனம் என்றால் என்ன‌? மந்த்ரங்கள்ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான். 

பூணூலை மையமாகவைத்து கயிறுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள்.

இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.

பிறகு... இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்... பெண்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப்பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது...

உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே மநு சொல்வதை புரிந்துகொள்ள முடியும். சரி! உபநயனம் என்றால் என்ன?

இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆண் மகனுக்கு முதல் கல்யாணம்போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.

உண்மையில் உபநயனம் என்றால்... பிராமணப்பையனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது...?

இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சாரியர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம்.

அதாவது ஆசிரியர் மாணவனை கையைப்பிடித்து அழைத்துச் செல்வதுதான்.

இந்த சமயத்தில் அந்தக் குழந்தைப் பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் `பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.

அப்போது அவனது அப்பா... ``பயலே... இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சாரியரோடு போ...’’ என்று பையனை வழியனுப்பி வைப்பார்.

அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான்.
இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற பையனை லீவு போடச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகிறார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப் பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்... நடைமுறையில் அப்படியே முரண்பாடாகி விட்டது.

காரணம்...? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகிறேன் பாருங்கள். உபநயனம் உள்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்குக் கிடையாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே?

ஆனால்... இன்று எல்லா ஜாதி பையன்களும், பெண்களும் உபநயனம் பண்ணிக் கொள்கிறார்கள். ஆமாம்... பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறார்களே!

பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டமாய்

தொடரும் 

0000000000000000000000000000000

பாகம் 50: வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்? 

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை இறந்த கணவன‌து சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி.

விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

(மொட்டை பாப்பாத்தி என கேள்விப்பட்டிருப்பீர்களே. இப்பொழுது விளங்குகிறதா?)

கல்வியும் கிடையாது... மந்த்ரங்கள் வழியே கூட அதை பெறக்கூடாது. 8 வயசிலேயே கல்யாணம் பண்ணிக்கொண்டு நான்கு சுவர்களுக்குள் நன்கு குடித்தனம் நடத்து.

“இதுதான் மநு தர்மம் பெண்களுக்கு சொன்னது.
வேதத்தில் ‘சதி’ பற்றி பார்த்தோமே... வேதமே அப்படி சொல்கிறதென்றால் மநு சும்மா விடுமா?... வேதத்தை விட இன்னும் தெளிவாக சொல்கிறது.

“சிதா வாரோஹணம் பிரம்மச்சர்யம்...”

கணவனை இழந்த பெண் என்றால்... அவளை அவனது சிதையிலேயே வைத்து தீர்த்துக்கட்டு என உத்தரவிடுகிறது மநு ஸ்மிருதி மநு மணம் முடித்து இதுபோல் கணவனை இழந்த பெண்கள், மிகச்சிறு வயதிலேயே விதவைகளாகி விடும்போது... சிதைக்கு போகாமல் தப்பித்த பெண்களும் உண்டு.

ஆனால்... அவர்களது வாழ்க்கையிலும் பயங்கர கட்டுப்பாடுகள் பின்னப்பட்டன. கணவனை இழந்த அவள் மேல் வேறெந்த ஆணுக்கும் ஆசை வரக்கூடாது என்பதற்காக உடனடியாக அவளுக்கு மொட்டையடிக்கப்பட்டது.

‘உலகை ஆற்றுப்படுத்தும் அழகுதான் பெண்’ என்றது வேதம். அந்த அழகை மொட்டையடித்து அவலட்சணமாக்கி அழுவதை வேடிக்கை பார்த்தது மநு.

விர... அந்த விதவைப்பெண் வேறெந்த ஆணிடமும் பேசக்கூடாது, பழகக்கூடாது அவளது கண்களை கட்டுப்பாட்டால் கட்டிப் போட்டனர்.

இதையும் மீறி... வயதின் ஆட்சியால் வாலிபத்தின் தூண்டுதலால் மிக இளமையான வயதில் கணவனை இழந்த பெண்களுக்கு ஆண் துணை வேண்டுவது இயற்கையின் விதி. இதை இப்போது மறுமணம் என்கிறோம்.

ஆனால் மநு மணத்தில் மறுமணம் ஏது? ஒரு பெண், கணவனை இழந்த பின்பு... ஆறுதலுக்காகவும், வாழ்க்கை நடத்திட வழி வேண்டியும் இன்னொரு ஆணை அணுகினால் அது கிட்டத்தட்ட விபச்சாரம் ஆகி விடுகிறது என்கிறது மநு. இதற்கும் தண்டனை உள்ளது. அதற்கு முன் விதவைகளுக்கு மொட்டை போடுதல் என்ற தண்டனை பற்றி இன்னும் சில விளக்கங்களை சொல்லி விடுகிறேன்.

விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்று வடகலை வைணவர்கள் வலியுறுத்தினார்கள். அதெல்லாம் இல்லை மொட்டையடித்தே ஆக வேண்டும் என்பது தென்கலைக்காரர்களின் தரப்பு வாதம்.

இந்த இடத்தில் வடகலை, தென்கலை என இரண்டு பிரிவுகள் பற்றி உங்களுக்கு கேள்வி வரலாம். அப்படி என்றால் என்ன?
பிரம்மத்துவம் எனப்படும் கடவுள்தன்மை பெருமாளின் துணைவியான பிராட்டி அதாவது தாயாருக்கு உண்டா என்ற பிரச்சினை விவாதமாக எழுந்தது.

அப்போது... பெருமாளுக்கு துணையாக இருக்கிறாரே தவிர பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் பங்கு கிடையாது. உதவும் சக்தி கிடையாது. வெறும் சிபாரிசு மட்டும்தான் செய்யமுடியும் என்பது தென்கலைகாரர்களின் வாதம். பெருமாளின் துணைவிக்கே சக்தி இல்லை என்றவர்கள் சாதாரண ஸ்த்ரீ... அதுவும் கணவனை இழந்த ஸ்த்ரீக்கு என்ன சொல்வார்கள். மொட்டையடிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

வடகலைக்காரர்களோ... பிராட்டிக்கு மோட்சம் வழங்குவதில் குறிப்பிட்ட பங்கு இருக்கிறது என்று நம்பினார்கள். அதனால் பெண்மைக்கு முக்யத்துவம் கொடுத்து... விதவைகளுக்கு மொட்டையடிக்கக் கூடாது என்றார்கள். இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் மட்டுமல்ல... பல விஷயங்களின் அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் தான் வடகலை, தென்கலை என்று பிரிந்தார்கள்.

அது இருக்கட்டும்... மநு மணம் முடித்த பெண்கள், விதவைகளாகி மறுமணம் முடிக்க நினைத்தால்?... இதை விபச்சாரம் என்னும் அடைமொழிக்குள் வைத்துப்பார்க்கிறது மநு.

அவளுக்கு ஒழுக்கம்தான் முக்யம். ஒரு ஆணுக்கு வாழ்க்கைப்பட்டவள் இன்னொரு ஆணோடு வாழ்வதா?... பிடி அவளை... அவளது படுக்கையோடு சேர்த்து அவளை சுற்று ஆமாம் அப்படியே தீ வை. எந்த படுக்கையில் விபச்சாரம் என்னும் அபச்சாரத்தை செய்தாளோ... அதிலேயே வைத்து அவள் எரிக்கப்பட வேண்டும் என மநு தன் கட்டளைகளில் கொள்ளிக்கட்டைகளை கொண்டு வருகிறார்.

வேதம் பெண்களை எப்படிப்பார்த்தது... மநு பெண்களை எப்படிப் பார்த்தது?... என்று இதுவரை பார்த்துவிட்டோம். சாதாரண மனித பெண்களை இப்படி நடத்தியிருக்கிறார்கள். அப்படியென்றால் தெய்வப்பெண்களை?... அதாவது பெண் தெய்வங்களை எப்படி பார்த்தார்கள்?

இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. சற்று முன்புதான் மோட்சம் வழங்குவதில் பிராட்டி அதாவது பெண் தெய்வத்தின் பங்கு பற்றி சில விஷயங்களை பார்த்தோம்.

கோவில்களில் பெருமாளை பார்த்திருப்பீர்கள். பெருமாளுக்கு வலது பக்கமும், இடது பக்கமும் பூதேவி, நீளாதேவி என இரண்டு பெண் தெய்வங்கள் இருப்பார்கள். ஆனால்... பிராட்டி எனப்படும் தாயார் தனிக்கோவில் நாச்சியாராகத்தான் இருப்பார். அதாவது அவருக்கென்று தனி சன்னதி இருக்கும். அங்கே தான் இருப்பார்.

கோவில்களில் உற்சவம் நடப்பதை பார்த்திருப்பீர்கள். பெருமாள் வாகனங்கள் புடைசூழ வெளியே வருவார்.

முதலில் அன்னபட்சி வாகனத்தில் வெளியே வருவார். கருடன் மீதேறி ஊர் சுற்றுவார். சூரியபிரபை என்னும் வாகனத்தில் புறப்பட்டு கடைத்தெருக்களை பார்வையிடுவார். பிறகு குதிரை வாகனம்... கடைசியில் தேர், ஊர்கூடி இழுக்க உள்ளே படாடோபமாக அமர்ந்திருப்பார் பெருமாள்.

ஆண் தெய்வமான பெருமாள் இப்படி ஊர் சுற்றி உலகம் சுற்றிவிட்டு வர... பெண் தெய்வமான பிராட்டியார்?

தொடரும்

நன்றி : http://thathachariyar.blogspot.in/2010/10/3.html

Comments