மாவீரன் சங்கிலியன் சரித்திர தொடர்- முன்னுரை-பாகம் 01-03-வரலாறு.
‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித்த ஆக்கங்கள் ஓரளவாவது கொண்டிக்க வேண்டும். அந்தத் தரத்தை கொண்டதாக இது அமையும் என்று நான் கருதுகின்றேன். வாசிக்கும் போதும் அதிகமாக சரித்திர நாவல்களையே விரும்பிப் படிப்பேன். தென் இந்திய நாவலாசிரியர்களினது சரித்திர நாவல்களை வாசிக்கும் போது அது எத்தனை பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசிக்கும் போது சலிப்பே வராது. அந்தளவு அவர்கள் வரலாற்றை கற்பனையுடன் கலந்து தந்திருப்பார்கள். உதாரணமாக ஒரு கொடுங்கோல் அரசனது சில நல்ல குணங்களை கருவாக வைத்துக்கொண்டு அவனை கதை நாயகன் ஆக கொண்டு கற்பனையில் சிறந்த காவியத்தைப் படைத்துவிவார்கள். இந்த மாதிரியான நாவல்களை வாசிக்கும் போது இந்தியாவின் பல அரசர்களைப்பற்றிய சுவையான விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. (பாதி கற்பனை) இலங்கைத் தமிழ் அரசர்கள் பற்றிய சில நாவல்களையும் வாசித்திருக்கின்றேன். அவை பெரும்பாலும் வரலாற்றுடனேயே ஒன்றிப்போகின்றன. அங்கு கற்பனைக்கு இடம் குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் காவியம் பாதி, கற்பனை பாதி என்ற குறிக்கோளுடன் ஒரு சரித்திர நாவல் எழுத ஆசைப்பட்டேன்.

இலங்கையில் தமிழ் அரசர்கள் பலர் ஆண்டாலும் எனக்கு மாத்திரம் அன்றி பலருக்கும் ஞாபகத்துக்கு வருவது சங்கிலியனே. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன் அவனது சிலை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே அவன் பற்றிய தகவல்களைத்திரட்ட முற்பட்டேன். இதற்கு கலாநிதி க.குணராசா (செங்கை ஆழியான்) அவர்களின் மீள் வாசிப்பாக வெளியிடப்பட்ட (என்னைப் போன்றவர்களுக்கு) எஸ். ஜோனின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1878), மாதகல் மயில்வாகனப் புலவரின் ‘யாழ்ப்பாண வைபவமாலை’ (1884), ஆ. முத்துத் தம்பிப்பிள்ளையின் ‘யாழ்ப்பாணச் சரித்திரம்’ (1912) அத்துடன் பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘நாடகத்திரட்டு’ ஆகியவற்றில் இருந்து தகவல்களைப் பெற்றேன். இந்த ஆயத்தங்களுடன் சங்கிலி வரலாற்றை வாசிக்கத் தொடங்கிய போது ஆரம்பமே எனக்கு அஷ்ட கோணலாகிப் போனது. காரணம் யாழ்ப்பாணத்தை இரு சங்கிலி அரசர்கள் ஆண்டிருக்கின்றார்கள். இவர்களில் முதலாவது சங்கிலி செகராசசேகரன் என்ற சிங்காசனப் பெயருடன் நாட்டை ஆண்டிருக்கின்றான் (கி.பி 1519 முதல் கி.பி 1565 வரை) இரண்டாம் சங்கிலி எனும் சங்கிலி குமாரன் கி.பி 1616 முதல் 1621 வரை ஆண்டிருக்கின்றான். நான் மேலே குறிப்பிட்ட மூன்று சரித்திர ஆசிரியர்களும் (நாடகம் தவிர்ந்த) இவ்விரு சங்கிலியையும் ஒருவரே என இணைத்து தங்கள் நூல்களில் எழுதியுள்ளனர். (பின்னைய எழுத்தாளர்களால் அறியப்பட்டது) இதனால் எனக்கு முதல் சங்கிலியினது முடிவும் இரண்டாம் சங்கிலியினது ஆரம்பமும் தெரியாமல் போய்விட்டது.

கதைக்கேற்ப கதாநாயகனின் முடிவை நாங்கள் எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பத்தையும் கற்பனையில் எழுதினால் இக்கதை முற்று முழுதாக கற்பனைக்கதையாகப் போய்விடும். அதனால் முதற் சங்கிலியின் வரலாற்றையே நாவலாக எழுதத் தீர்மானித்தேன். அதிலும் ஓர் சிக்கல் வந்தது. இச்சங்கிலி நாட்டுமக்களுக்கு நன்மை செய்தாம் தன் சொந்த விஷயத்தில் சுயநலத்துடன் நடந்து கொண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இச்சங்கிலியானவன் மன்னன் பரராஜசேகரனது வைப்பாட்டியின் மகனாவான். இவன் தன் தமையனைக் கபடமாகக் கொன்று ஆட்சிப் பொறுப்பைப் பெற்றான் என ஆசிரியர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். என் கதையின் நாயகனைக் கொடியவனாகக் காட்டுவது எனக்கு சரியாகப் படவில்லை. ஆதலால் சரித்திரத்தில் உள்ள நல்ல விடயங்களை எடுத்துக்கொண்டு மிகுதி கற்பனையையும் சேர்த்து இந்த சரித்திர நாவலை ஆக்கியுள்ளேன். வெறும் ஏழு பக்க வரலாற்றை வைத்து நான் முப்பது அத்தியாயங்கள் எழுதிவிட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முக்கியமானவிடயம், ஒரு ஏகலைவனுக்கு எப்படி துரோணர் குருவாக அமைந்தாரோ அவ்வாறு எனக்கு குருவாக மறைந்த புகழ் பூத்த தென்இந்திய சரித்திர ஆசிரியர் சாண்டில்யன் இருக்கின்றார். அவரின் புத்தகங்களை வாசித்தே அவரின் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். என்னுடைய ரசனை அவருடன் நிறையவே ஒத்துப் போகின்றது. ஏறத்தாள அவருடைய எல்லா நூல்களையும் யாழ்ப்பாணத்தில் வாசித்து விட்டேன். எஞ்சிய நூல்கள் கிடைக்காததால். ஆனாலும் அண்மையில் தமிழ்ச்சங்கத்தில் சில நான் வாசிக்காத நூல்களைக் கண்டு சந்தோசப்பட்டேன். இன்னும் பெற்றுக் கொள்ளவில்லை.

எனவே தெரிந்தோ தெரியாமலோ இக்கதையில் சாண்டில்யன் பாணி பல இடங்களில் பரவிக்கிடக்கும். (உதாரணம் எலியானா என்ற கற்பனைப் பாத்திரம்) இந்த நாவலின் ஐம்பது வீதம் சரித்திரமே. சரித்திரத்தை சுவைபடக் கூறுவதற்கு கற்பனை வேண்டும் என்று புரிந்து கொண்டவர்களுக்கு இது ரசமாக அமையும். எழுத்துருவில் இருந்த இந்த நாவலை வலைப்பதிவில் ஏற்றக் காரணம். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் வலைப்பதிவின் ஆதிக்கமும். எனக்கு இந்தக்கதையை எழுதுவதற்கு மூல நூல்களைத்தந்து என்னை யாழ்ப்பாணத்தரசன் சங்கிலியின் வரலாற்றை இந்திய சரித்திர ஆசிரியர்களைப் போல் எழுதுமாறு கூறி இரண்டு வருடங்களுக்கு முன் ஆக்கமும் ஊக்கமும் தந்த என் நண்பன் தக்சனுக்கு எனது நன்றிகள். (அவனும் சரித்திர நூல் வாசகன். அவன் கல்கி வாசகன்) எனது எழுத்துத்துறையில் அவனுக்கு பங்குண்டு.

நான் உங்களிடம் வேண்டுவது என்ன என்றால் குறைகளை சுட்டிக்காட்டுங்கள். நிறைகளை பாராட்டுங்கள். தொடர் சிறப்hக அமைவதற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். சங்கிலியன் வரலாற்றுத் தொடரின் முதல் அத்தியாயத்துடன் சந்திக்கின்றேன்.

நன்றியுடன் வரோதயன். 

000000000000000000000000000

பாகம் 01 தேவதையைக் கண்டான்


பகல் பொழுது முடிவுற்று நள்ளிரவுக்கு இடைப்பட்ட முன்னிரவுப் பகுதியில் இரவின் இருளாட்சியில் உலகம் சிறிதுநேரம் கட்டுண்டு கிடந்தபின், நிலவின் வருகையால் மீண்டும் அது மலர்ச்சி பெறத் தொடங்கியது. சுவைத்துப் பருகி ருஷி பார்க்க வேண்டும் என்ற வேட்கையை உண்டுபண்ணும் விதமாக அந்நிலவின் அடர்த்தியான பாலொளி எங்கெங்கும் பிரவாகித்து பொங்கிக் கொண்டிருந்தது. ஆரவாரம் மிகுந்த இடங்களில் இருந்து நிலாப்பொழுதைக் காண்பதில் எவ்வித இன்பமும் இருப்பதில்லை. ஆனால் இம்மாதிரி எளிமையில் அழகு சேர்ந்து அமைதியும் உடன் இணைந்து இழையும் இடங்களில் இந்த நிலாப்பொழுது கூடித்தரும் இன்பம் எழுத்தில் கூறிவிட முடியாது. இந்த நிலப்பொழுதின் எழில் ஜாலங்களை எல்லாம் ஓர் உயரிய காவியத்தை படித்துச் சுவைப்பது போலச் சுவைக்க வேண்டும்.

சில்லென்று வீசும் சீதளத் தென்றலிலே அசைந்தாடும் இலைமலிந்த மரக்கிளைகளும், மலர் சுமந்த செடி கொடிகளும்ஏதோ ஒரு புதிய நடனத்தை அரங்கேற்றிக் காட்டுவது போலத்தான் இருந்தது. பகல் பொழுதில் கேட்காத நானாவித ஒலிகள் அதற்கு முன் கேட்டறியாத ஏதோ ஒரு புதிய இசையாகவே இசைத் இன்பம் தந்தது. அந்த இன்பமயமான வேளையில் இரு வீரர்கள் குதிரை மீதமர்ந்து மிகச் சந்தோசமாக சோழியர்புர வீதியில் வலம் வந்தார்கள். அவர்களை அருகே போய்க் கவனித்தோமானால் ஒருவன் அரசனைப்போல் தோற்றமளித்தான். மற்றன் அவன் நண்பனாக இருக்க வேண்டும். அவ் அரசிளங்குமரன் சராயை மட்டுமே அணிந்திருந்தான். அந்த வாலிபனின் உடலின் மேற்பகுதி திறந்தே கிடந்தது. திறந்திருந்த மார்பு விசாலமாகவும் திண்ணிய தசைகளுடன் இரும்பெனக் காட்சியளித்தது. அதில் வளர்ந்திருந்த கறுத்த முடிகளிடையே ஆடிய பெரும் மரகதக்கல் ஒன்றைத் தாங்கியிருந்த பொற்சங்கிலி ஒன்று அவன் கழுத்தைச் சுற்றியிருந்தது. இரும்பென நீண்ட மெல்லிய கரங்களில் குதிரையின் கடிவாளத்தைப்பிடித்திருந்த தோரணை எல்லாமே அவன் அசுவ சாஸ்திரத்தை நன்கு அறிந்தவன் என்பதை மட்டுமின்றி அவன் உடலின் உறுதிக்கும் வலுவுக்கும் சான்று கூறின. அவன் விசால வதனத்தில் தலையிலிருந்து தொங்கிய ஓரிரு சுருட்டை முடிகள் அவ்வதனத்திற்கு தனி அழகைக் கொடுத்தன. அவன் கண்களிலும் ஏதோ தனிப்பட்ட வசியம் காணப்பட்டது. அவன் இதயத்தில் மகிழ்ச்சி வெள்ளம் புரண்டதன்றி அந்த வெள்ளத்தின் அலைக்கோடுகள் முகத்திலும் உருண்டதால் அவன் வீர உதடுகளும் ஆனந்த நகை பூத்தன. அந்த அர்த்த ஜாமத்தில் மிகவும் சர்வ சாதாரணமாக எதிலும் சிரத்தை காட்டாமல் உலகத்தையே அலட்சியமாக நினைத்து யாழ் மாநகரின் பிரதான ராஜ வீதிகளில் ஒன்றான சோழியர்புர வீதியிலே குதிரையில் தன் நண்பனுடன் சென்ற வாலிபன் தன்னைவிட அதிர்ஷ்டசாலி உலகில் இல்லை என்றே நினைத்தான்.

இரு வாலிபர்களது சம்பாசனையில் இருந்தும் அவர்கள் பால்ய சினேகிதர்கள் என்பதும் பொழுது போக்கிற்காக ஊரைச்சுற்றுகின்றார்கள் என்பதும் தெளிவாகின்றது. அதில் அரசிளங்குமரன் போலிருப்பவன் நண்பனைப் பார்த்துக் கேட்கின்றான்.

“வீரமாப்பாணா! இயற்கை அழகு நிறைந்த இலங்காபுரிக்கே தனி அழகு சேர்க்கும் ஒரு அழகு யாழ்ப்பாணத்தில் இல்லை. அது என்னவென்று கூறு பார்ப்போம்?”. வீரமாப்பாணன் பலமாக யோசித்துவிட்டு “நீ இங்கிருக்கின்றாய், அவ்வாறிருக்க எந்த அழகு யாழ்ப்பாணத்தில் குறைந்து விட்டது”. என தனது விகடப் பேச்சைக் காட்டினான். “இவ்விடத்தில் உனது நகைச்சுவை எனக்கு சிரிப்பை வரவழைக்கவில்லை. விளையாடாமல் நான் கேட்ட கேள்விக்குப் பதிலைச்சொல்லு. உனக்கு கண்டுபிடிப்பதற்கு வேண்டுமானால் சான்று தருகின்றேன். அது ஒரு இயற்கை….”

“இயற்கையா?.... அவ்வாறானால் அழகான பெண்கள் யாழ்ப்பாணத்தில் இல்லை என்கிறாயா சங்கிலி” 

“நல்லதொரு அழகைக் கண்டு பிடித்தாயடா அடிமுட்டாள், உனக்கு சிறிதளவேனும் முளை இருக்கின்றதா?” “எனக்குத்தான் புரியவில்லையே, நீயே கூற வேண்டியது தானே! இரவு நேரத்தில் உனது கேள்வி புத்தியை மழுங்கடிக்கின்றதடா” “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. உன்னுடன் சேர்ந்த என்னைச் சொல்ல வேண்டும். சரி.. நானே கூறுகின்றேன். இனியாவது பாடமாக்கி வைத்துக்கொள், இலங்கையின் மத்திய பகுதிகளிலும் தென் பகுதிகளிலும் அழகான மலைத் தொடர்களும் சிகரங்களும் உள்ளன. இங்கு ஒன்றுமே இல்லையடா, ஒரு மலையாவது இருந்திருந்தால் யாழ்ப்பாணம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும்”

“பூ… இவ்வளவு தானா…? நான் என்னமோ… ஏதோ… எனப் பெரிதாகக் கற்பனை பண்ணிவிட்டேன்”. “உனக்கெங்கேயடா இருக்கப் போகின்றது கலா ரசனை” சங்கிலி கடிந்து கொண்டான். “சரி நேரமாகின்றது… நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. குதிரையில் இருந்தே விழுந்து விடுவேன் போலிருக்கின்றது. வா எங்காவது சத்திரத்தில் உறங்குவோம்”. மாப்பாணன் அவசரப்படுத்தினான். “எனக்கு அரண்மனையை விட வேறு இடங்களில் உறங்கிப் பழக்கமில்லை. தாகமாக இருக்கின்றது. வா… இவ்விடத்தில் தான் நம் மந்திரி அப்பாமுதலியின் வீடு இருக்கின்றது. அங்கு சென்று ஏதாவது அருந்துவோம். அவர் நீண்ட நாட்களாக என்னைத் தனது வீட்டுக்கு வரும்படி அழைக்கின்றார். எனக்கோ நேரமே கிடைப்பதில்லை. மீண்டும் நாம் எப்போது சோழியர்புரப்பகுதிக்கு வருவோமோ தெரியாது. ஆகவே சென்று வருவோம்”. “நான் வேண்டாம் என்றால் நீ விடவா போகின்றாய். வா… போவோம்”.

இருவரும் நள்ளிரவில் அப்பாமுதலியின் வீட்டை விசாரித்துக்கொண்டு போய் கதவைத்தட்டுகிறார்கள். “யார்… யாரது இந்த நேரத்தில்?...” உள்ளிருந்தவாறே அப்பாமுதலி குரல் கொடுத்தார். “நான்…. நான் தான்…” “நான் தானென்றால்… யார்?....” என்று கூறியவாறே அப்பாமுதலி வந்து கதவைத்திறக்கின்றார். “யாரது… ஓ..! இளவரசரா… வாருங்கள் வாருங்கள். இப்பொழுதுதான் இந்த ஏழையின் வீடு தெரிந்ததோ?”. திறந்த வீட்டினுள் சென்ற சங்கிலி தனது கண்களாலேயே வீட்டை அளவெடுத்தான். சிறிய வீடென்றாலும் அப்பாமுதலி சொல்வதைப் போல் அது ஏழை வீடாக தெரியவில்லை.

“அது… வந்து… இவ்விடம் ஓர் அரசாங்க அலுவலாக வந்தோம். மிகுந்த தாகமாக உள்ளது. அதுதான் உங்கள் வீடு தேடி வந்தோம். அருந்துவதற்கு ஏதேனும் கிடைக்குமா?” சங்கிலி வினவினான். “உங்களுக்கில்லாத பானமா? இரவு வேளையாதால் சூடாகவே ஏதாவது கொண்டுவரக் கூறுகின்றேன்” எனக்கூறிக்கொண்டு உட்பக்கமாகத்திரும்பி “வடிவழகி… வடிவு… சூடாக ஏதாவது அருந்துவதற்கு இரண்டு கோப்பைகள் கொண்டு வா” எனக்குரல் கொடுத்தார். ‘அப்பாமுதலிக்குக்கு மகள் இருக்கிறாளா? இது எனக்கு இவ்வளவு நாளும் தெரியாதே, ஒருவேளை சிறு பிள்ளையாக இருக்குமோ?” என சங்கிலி எண்ணமிட்டான்.

“இந்தாருங்கள் அப்பா!” என்ற தேனிலும் இனிய குரலைக்கேட்டு நிமிர்ந்து பார்த்த சங்கிலி மிதமிஞ்சிய ஆச்சரியத்தை அடைந்தான்.

சாதிக்க வருவான்

0000000000000000000000000000

பாகம் 2 சந்திப்போமா 


குரலின் இனிமைக்கு எந்த விதத்திலும் குறையாமல் அப்பாமுதலியிடம் இரு குவளைகளையும் நீட்டினாள் ஒரு பைங்கிளி. எவ்வளவு தான் கூட்டிப்பார்த்தாலும் வயது பதினெட்டைத் தாண்டமாட்டாது போலிருந்தது அப்பைங்கிளியின் வனப்பு.

அந்தப் பூவுடலில் தான் எத்தனை வளைவுகள்!, எத்தனை சுழிவுகள்!, எத்தனை எழுச்சிகள்! முகத்தில் தான் எத்தனை விற்கள்! எத்தனை மலர்கள்! இவற்றையெல்லாம் சங்கிலியின் கண்கள் ஆராயத்தான் செய்தன. புருவங்கள் மாத்திரம் விற்கள் என்று வர்ணித்த பழம் புலவர்கள் எத்தனை அறியாதவர்கள் என்று அந்தச் சில வினாடிகள் நினைத்துப்பார்த்தான். புருவங்கள் விற்களென்றால் இமைகள் மாத்திரம் என்ன விற்களில்லையா? மேலும் கீழுமாக சிறியதும் பெரியதுமாக கண்ணைக் காக்கும் நான்கு விற்கள் இல்லையா? இந்த நான்னையும் புருவ விற்களுடன் சேர்த்தால் விற்கள் ஆறு ஆகுமே! இப்படி ஏன் புலவர்கள் கணக்குப் போடவில்லை. இவற்றுடன் செழுமையான கன்னத்தாமரைகள், கருங்கண்கள், உதட்டுச் செம்பருத்தி இப்படிப்பல மலர்களைக் கொண்டு காதலின் விளையாட்டுத் தோட்டம் போலிருந்த முகத்தை ஒருவேளை அந்தக்காலத்து கவிஞர்கள் பாத்திருக்க மாட்டார்களோ? என்றெல்லாம் தன்னைத் தானே கேட்டுக் கொண்ட சங்கிலி, ஆராய்ச்சி வெளிப்படையாகத் தெரிந்த முகத் தோட்டத்தின் சிறு மலர்க்குவியலில் இருந்து கீழிறங்கி மறைந்திருந்தாம் மதியை மயக்கிய செண்டுகளையும் தண்டுகளையும் ஆராயத் தொடங்கியதும் அப்பைங்கிளி வீட்டினுள் சென்று விட்டாள்.

நண்பனது ஆராய்ச்சி தோல்வியடைந்ததை கடைக்கண்களால் கண்டுகொண்ட வீரமாப்பாணன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அப்பாமுதலி தந்த சூடான பானத்தை அருந்திவிட்டு, நன்றி கூறிக்கொண்டு இருவரும் புறப்பட்டார்கள். போகும் வழியில் சங்கிலியின் மனது அவனிடம் இல்லை என்பது வீரமாப்பாணனுக்கு புரிந்தது. இடையில் திடீரென சங்கிலி நண்பனைப் பார்த்து

“மாப்பாணா! எனது புரவி தான் வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. எனது இதயம் பின்நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றது” எனக் கூறினான். “ஏன்? மீண்டும் தாகமா? தண்ணீர் வேண்டுமா?” என நண்பன் கேலியுடன் வினவினான். “இல்லையடா நண்பா! உயிர் வேண்ட…” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டான் சங்கிலி. “உயிர் வேண்டவா?...” “ஆமாம் நண்பா! அவளைக்கண்ட மாத்திரத்திலேயே அவள் கண்களுக்குள் என் உயிர் ஓடி ஒழிந்து கொண்டது. அந்த தொலைந்த உயிரை வேண்டி வரத்தான் என் இதயம் தூது போய்க்கொண்டிருக்கின்றது”. “நீங்கள் இப்படி இலகுவில் மயங்கி விடுவீர்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை”. என போலி மரியாதையை மாப்பாணன் காட்டினான். “நானும் தான் எதிர் பார்க்கவில்லையடா இப்படி எல்லாம் நடக்கும் என்று, எல்லாம் சொப்பனத்தில் நடந்தது போல இருக்கின்றது. அப்பாமுதலி அழைத்ததும் இப்படியொரு பேரழகி வருவாள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. உலகத்து அழகை எல்லாம் உருக்கிச் செய்யப்பட்ட அழகுச் சிலை அவள்” என்று சங்கிலி சிலாகித்தான். “தாங்கள் பாராத அழகா?” என சினேகிதத்தின் உறவை பாணன் வெளிப்படுத்தினான். “பார்த்திருக்கின்றேன், நிறையவே கண்டிருக்கின்றேன். எத்தனையோ வெளிநாட்டுக்கிளிகள், உள்நாட்டுக்கிளிகள் என பல கிளிகளைச் சந்தித்திருக்கின்றேன். ஆனால் என் குருதியில் உலை மூட்டி உயிர் சுட வைத்தவள் அவளே! என் ஆண்மைக்கு அறைகூவல் விடத்தக்கவள் அவளே! நான் துரத்திப்பிடிக்க நினைத்தது இப்படி ஒரு பொற்சிலையைத் தான்”. “நீ கண்ணசைத்தால் ஆயிரங்கிளிகள் வந்து அரண்மனையில் அணிவகுக்குமே! நீயாக ஏன் உன் மதிப்பைக் கெடுத்துக் கொள்கிறாய்”. “ஓடும் மீனையெல்லாம் விடுத்து உறுமீனுக்காக தவமிருக்கவில்லை இந்தச்சங்கிலி, ஒரு விண்மீன் கிடைக்க வேண்டுகிறேன்”. இவ்வாறாக பேசிக் கொண்டே சிறிய தூரம் சென்ற இருவரில் திடீரென கடிவாளத்தை இழுத்ததால் சங்கிலியின் குதிரை தடுமாறி நின்றது. என்னவென்று புரியாமல் வீரமாப்பாணனும் தனது குதிரையை நிறுத்தினான்.

“என்ன சங்கிலி குதிரையை நிறுத்திவிட்டாய்? அதற்குத் தண்ணீர் காட்டப் போகின்றாயா?”. “நண்பா! வடிவழகியின் மனதை வெல்லாமல் நான் அரண்மனை வர இஷ்டப்படவில்லை. நீ அரண்மனை சென்று சேர், நான் இரு தினங்களில் திரும்ப முயற்சி செய்கின்றேன். “இளவரசே! இது இளவரசிக்குத் தெரிந்தால்….” என்று பேரிடியை சங்கிலியின் தலையில் பாணன் இறக்கினான். வடிவழகியின் பித்தத்தால் திணறியிருந்த சங்கிலி சுயநினைவு பெற்றான். ஆனபோதும் அதை லட்சியம் செய்யாமல் “அந்தப்பேரழகு எனக்குப் பித்தேற்றி விட்டது. அவளோடு வாழ்ந்தாலும் இன்பம் தான், இறந்தாலும் இன்பம் தான்” என்று கூறினான். “நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். போரையும் காதலையும் அவசரத்தில் தொடங்கிவிடக் கூடாது” நண்பன் ஆலோசனை கூறினான். “என்ன ஆனாலும் சரி நான் வடிவழகியின் மனதை வென்று வருகின்றேன், நீ அரண்மனை செல்!” எனக்கூறிவிட்டு சங்கிலி குதிரையைத் திருப்பினான். அவன் குதிரை பஞ்சகல்யாணியும் தலைவனது ஆசையைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக வேகமாக சோழியர்புரம் நோக்கிச் சென்றது, பிற்காலத்தில் நிகழப்போகும் விளைவுகளை அறியாமல்.

பி.கு : தற்போது சுழிபுரம் என்று அழைக்கப்படும் பகுதியே சோழியர்புரம் என அன்று அழைக்கப்பட்டது

சாதிக்க வருவான்…

0000000000000000000000000000

பாகம் 3 காதலுடன்


அப்பாமுதலியின் வீட்டுக்கு பின்னால் உள்ள தென்னந்தேப்புக்கு அப்பால் அமைந்த ஓர் அழகிய சோலை. அச்சோலையில் மனிதரின் முயற்சியால் விளைந்தது என்று சொல்லக்கூடிய எதுவுமே இல்லை. சிறிதளவும் செயற்கை மரக்கன்றுகள் ஊன்றப்படாமல் எல்லாம் இயற்கையால் இயற்கையாகவே அங்கு ஜனித்து வளர்ந்து சர்வாலங்கார கோலத்துடன் விளங்கின. அழகும் பயனும் அற்ற எந்தவொரு செடி, கொடி, மரமும் அந்த இயற்கைச் சோலையில் இல்லாமலிருந்தது ஒரு பெரும் விந்தையாகவே இருந்தது. தோட்டக்கலையில் தேர்ந்த ஒருவன் பல படியாகப் பரிசோதித்து ஒவ்வொரு செடி, கொடி, மரமாகத் தேர்ந்தெடுத்து அதற்குரிய பண்பு உணர்ந்து அந்தந்த இடத்தில் அதையதை கவனச் சிரத்தையுடன் நட்டு பயிராக்கி வளர்த்து வைத்ததைப் போல அந்தக் காட்டுச் சோலை ஓர் ஒழுங்கு முறையுடன் வளர்ந்து நின்றன. ஒரு முட்செடியோ ஒரு நாகதாளியையோ அந்த வனச்சோலையெங்கும் தேடினாலும் காணமுடியாது. உயர்தரமான மலர்ச்செடி, கொடி, மரங்களும் கனிவகை தருக்களும் மட்டுமே அங்கு செழிப்புடன் வளர்ந்திருந்தன.

அச்சோலையின் ஒரு மூலையில் மல்லிகைப் பந்தலின் கீழ் வடிவழகியும் தோழி செங்கமலமும் உற்கார்ந்திருந்தனர். இருவரும் வேறு வேறான எண்ணங்களில் மூழ்கியிருந்தார்கள். வடிவழகியின் எண்ணம் இவ்வாறிருந்தது.

“சே! இந்த ஆண்கள் தான் எத்தனை மோசம். நேற்று வந்த சங்கிலி இருக்கிறாரே, அவருக்கு மனதில் என்ன மகாராஜா என்ற நினைப்பா? ஒரு பெண்ணை கண்களால் இவ்வாறு எல்லாம் அளவெடுப்பதா? இது தான் அரச குடும்பத்தாரின் பண்போ?” என்று நினைத்தாள். ஆனால் அவள் உள் மனது இவ்வாறு கூறியது ‘உனக்குத் தான் அவர் உன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கின்றார் என்று தெரிந்ததல்லவா? பானத்தை வைத்து விட்டு வீட்டினுள் போக வேண்டியது தானே? ஏன் அவர் கண்களால் அளவெடுக்கும் வரை அங்கேயே நின்றாய். உன்னை அங்கம் அங்கமாக அவர் அளவெடுப்பதை பெரிதும் விரும்பினாய். அதனால் தானே அப்பாவின் பக்கத்தில் சிறிது நேரம் நின்றாய்?’ எனக் கேட்டது.

அவள் உள்ளம் இவ்வாறான போராட்டத்தில் இருந்தாலும் உண்மை அதுவல்ல. சங்கிலி அரசகுமாரனைப் பற்றி தனது தகப்பன் வந்து கூறும் போதெல்லாம் அவர் அப்படி இருப்பாரா? அல்லது இப்படியிருப்பாரா? ஏன மனதிலேயே ஒரு சங்கிலியின் போலியான உருவத்தைக் கற்பனை செய்து கொள்வாள். நாளாக நாளாக அவரைக் காண வேண்டும் என்ற அவா அவளிடத்தே உண்டானது. அவளையறியாமலே அவள் மனம் சங்கிலி பால் லயித்துவிட்டது.

அன்றும் வீடு வந்த வாலிபன் அழகாய் இருந்தபோதும் யாரெனத் தெரியாததால் அவன் தன்னை அப்படிப் பார்க்கின்றானே என நினைத்து கூனிக்குறுகிப் போனாள். ஆனால் அவன் தான் சங்கிலி என தந்தை மூலம் அறிந்த போது எவ்வளவு சந்தோஷப்பட்டாள். ‘இப்படியென்றால் நான் நன்றாக நிமிர்ந்து பார்த்திருப்பேனே?’ என எண்ணமிட்டாள். இவ்வாறு நடந்த சம்பவங்களை நினைத்து சிரித்த வடிவழகியை செங்கமலத்தின் குரல் நிஜ உலகிற்கு கொண்டு வந்தது.

“மகாராணிக்கு அப்படியென்ன சிரிப்பு?” “அதொன்றும் இல்லையடி. நான் உன்னை ஒன்று கேட்பேன். எனக்கு விளக்கம் தருவாயா?” “விளக்குவதற்குத் தானே நான் இருக்கின்றேன். தாராளமாகக் கூறலாம்” “ஒரு ஆடவன் ஒரு பெண்ணை இமைக்காமல் கண்களால் அங்கம் அங்கமாக அளவெடுத்தால் அதற்கு என்ன அர்த்தம்?” “வேறு என்ன? காதல் தான். ஏன் யாராவது உன்னை அவ்வாறு பார்த்தார்களா?” செங்கமலத்தின் பதிலைக் கேட்டதும் மனதுக்குள் பேருவகை எய்தினாலும் அதை வெளிக்காட்டாது “அப்படியொன்றும் இல்லை. நேற்றொருவர் நம் வீடு வந்தார். தண்ணீர் கொடுக்க வந்த என்னை கண்வெட்டாமல் பார்த்தார். அது தான்…” “யாரவன்? கிழவனா… குமரனா?” அறியும் ஆவலில் கேட்டால் செங்கமலம். “குமரன் தான்….” இழுத்தாள் வடிவு. “குமரனா…, யாரடி அவன்? எனக்குக் கூற மாட்டாயா? நான் உன் உயிர்த்தோழியல்லவா… கூறு … கூறு….” மன்றாடினாள்.

“சங்கிலி… தான்…” “என்னடி சங்கிலியா….? சங்கிலி என்று சாதாரணமாகச் சொல்கிறாய். அவர் யாழ்ப்பாண இளவரசன். ஆரம்பத்தில் நான் உன்னை மகாராணி என்று கூறியது உண்மையாகப் போய்விட்டது.” சந்தோசத்தில் கத்தினாள் செங்கமலம். “சும்மா உந்தக் கதைகளை விடடி… அவருக்குத் தான் திருமணமாயிற்றே” தனது ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறினாள் வடிவு. “அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம் வடிவு. அவர் திருமணம் செய்திருந்தாலும். அவர் மனமும் உன்னை நாடுவது போல் படுகின்றது” சமாதானம் கூறினாள் செங்கமலம்.


இது இவ்வாறு இருக்க சோழியர்புரம் முழுவதும் சங்கிலியின் குதிரை சுற்றிக் களைத்துவிட்டது. “இந்த வழி போயிருப்பாளோ? இருக்காது… வாசனை எதுவும் இல்லையே! அவள் போகும் வழியெல்லாம் பூ மணக்குமே!” என்று எண்ணமிட்டவாறு எங்கெங்கெல்லாம் வழி தெரிகின்றதோ, அங்கெல்லாம் குதிரையை விட்டான் சங்கிலி. ஓரிடத்தில் இரு பெண்கள் அளவளாவிக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்த்த சங்கிலி சந்தோசப்பட்டான். “ஓ! வடிவழகி. நான் தேடி வந்த திருமலரா இவள்?” வேகமாகக் குதிரையைத் தட்டி அவள் இருந்த இடம் நோக்கி வந்து சட்டென்று தரையில் குதித்துக் கடிவாளத்தை குதிரை மீது விட்டெறிந்து அவன் கிட்;ட வந்த போது… “ஓ! நீங்களா?...” என்றாள் வியப்புடன் வடிவழகி. “நானே தான்…” “ஏது இந்தப்பக்கம்?” “ வேட்டை…. வே..ட்டைக்கு…” மென்று விழுங்கினான். “வில்லுமில்லாமல், அம்புமில்லாமல் வேட்டைக்கு வந்த முதல் வீரர் நீங்களாகத் தான் இருப்பீர்கள்” தோழிகள் இருவரும் சிரித்தார்கள். சங்கிலி முகத்தில் அசடு வழிந்தது. அதை மறைப்பதற்காக “நான் வந்தது மான் வேட்டைக்கு. அதைக் கொல்ல இஷ்டமில்லை. ஆதலால் உயிரோடு பிடித்துப் போக வந்தேன்” என்று தனது இலக்கியப் புலமையை வெளிப்படுத்தினான். “இவரை உனக்கு முன்னமே தெரியுமா வடிவு?” செங்கமலம் கேட்டாள். “தெரியும்” “எப்படி?” “இவர் தான் சங்கிலி… எங்கள் வீட்டிற்கு….” “ஓ! இவர் தான் அவரா?.... ம்…. உங்களுக்குள் கதைக்க ஆயிரம் இருக்கும். நான் ஏன் குறுக்காக நிற்பான். நான் போய் வருகின்றேன். வடிவழகி உன்னை நான் மீண்டும் வீட்டில் சந்திக்கின்றேன்” பறந்தாள் செங்கமலம். “ஏய்! நில்லு செங்கமலம் நில்லு…”

கூடவே போக எத்தணித்த வடிவழகியின் கையைத் தடுத்து நிறுத்தியது சங்கிலியின் கை. அத்துடன் “குறிப்பறிந்த தோழி…” என அவன் உதடுகள் கூறின. தான் மனத்தால் மணாளனாக வரித்த இளவரசன் தன் அருகாமையில் உள்ளான் என்ற சங்கடத்தாலும் இன்ப பூரிப்பாலும் அவள் உடலில் ஆயிரம் மின்னல்கள் பாய்ந்தன. அவற்றையெல்லாம் மறைத்துக் கொண்டு.

“எடுங்கள் கையை…” என்றாள் கோபமாக. தடுத்த கை இறுகப் பற்றியது. திடீரென நடந்து விட்ட இந்தச் சம்பவத்தால் சங்கடப்பட்ட வடிவழகி “ என்ன இது! இப்படித்தான் முன்பின் தெரியாத பெண்களிடம் தமிழ் வீரர்கள் நடந்து கொள்வார்களோ?” என அவனின் பிடியில் இருந்த தன் கையை விலக்காமலே கேட்டாள். “முன் பின் தெரியாதவளா? நான் என்னவளின் கையைத் தானே பற்றினேன்” “ஓ! நல்ல அழகு. ஏன்னவளது கையா? நான் என்ன உங்கள் முறைப்பெண்ணா? அல்லது நீங்கள் என்ன என் மாமனா? மச்சினனா?” “அவற்றை விட மேலானவன்.” “ அப்படி என்றால் விபரியும் பார்க்கலாம்” அவன் வாயால் அப்படி ஒரு சொல்லை கேட்க வேண்டும் என்ற ஆவலில் கூறினாள்.

அவள் காது மடல்களுக்கு அருகாமையில் சென்று “காதலன்….” இந்த வார்த்தையால் திக்குமுக்காடிப்போன வடிவழகி தன் பின் பக்கமாக மிகவும் நெருங்கி வந்துவிட்ட சங்கிலியை உணர்ந்து கொண்டாள். பின்புறமாக வந்த சங்கிலி தனது நீண்ட கைகளால் அவளை அணைத்துக்கொண்டான். அவன் அணைப்பில் இருந்து விலகாமல் “உறவைப் பிரயோகிக்கத் தொடங்கி விட்டீர்கள் போலிருக்கின்றதே” எனக் குழைந்தாள்.

அவனது முரட்டு இதழ்கள் காதை வருடி கழுத்தில் புதைந்தது நீண்ட நேரம் மெய்மறந்து இருந்த இருவரில் வடிவழகியே சட்டென விலகி “ஆசை மோசத்தை உண்டு பண்ணிவிடும். எல்லாம் திருமணத்திற்கு அப்புறம் தான்” எனக்; கூற சங்கிலி சிணுங்கினான். பின் இருவருமே மிகுந்த ஆசையுடன் ஒருவரை பற்றி ஒருவர் தங்கள் ஆசைகளையும் விருப்பங்களையும் பரிமாறிக் கொண்டனர். சோழியர்புரம் தோப்புக்களில் சங்கிலி தனது குதிரையின் முன்பக்கமாக வடிவழகியை இருத்தி இன்பமயமாக எல்லாவற்றையும் மறந்து உலாவந்தான். இவ்வாறான பொழுதில் ஒரு துக்கம் அவனை நோக்கி நண்பன் வடிவில் வந்தது.

சாதிக்க வருவான்… 

நன்றி : http://sankili.blogspot.fr/2010/03/blog-post.html

Comments