பாகம் 11 வன்னியர் வருகை
சித்திரையில் சிறுமாரி எனக்கூறுவார்கள். காலையில் மழை வராது என நினைத்துக் கொண்டு தொழிலுக்கும், அன்றாட அலுவல்களுக்குமாக புறப்படுவோர் பிற்பகலில் பெய்யும் மழையால் வீடு திரும்பமுடியாது திணறிவிடுவார்கள். யாழில் அது நிலவி வருகின்றது. இந்தக்காலகட்டத்தில் பாண்டி நாட்டில் வன்னியர்கள் குழுவாக ஆலோசனைகளில் ஈடுபடுகின்றனர்.
‘எமக்கு இங்கு இருப்பதினால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை. நாம் யாழ்ப்பாணம் சென்றால் கை நிறையச் சம்பாதிக்கலாம். எம்மையும் வளர்த்துக் கொள்ளலாம்’ என நினைத்த அவர்கள் சில படகுகளில் யாழ்ப்பாணம் நோக்கி வர ஆயத்தமாகினர். அதன்படி இரு மரக்கலங்களைப் பெற்று, ஒன்றினுள் ஐம்பது வன்னியர்களும் இன்னொன்றில் அவர்கள் மனைவிமாரும் பிள்ளைகளும், நம்பிகளும் (ஆண்டிகளில் ஒரு சாதி) புறப்பட்டனர். இவர்கள் ஆயத்தமானபோதே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறப்பட்ட பயணத்தை தள்ளிப்போடுதல் அவ்வளவு அனுகூலமாக இருக்காது என்ற காரணத்தினால் பயணத்தைத் தொடர்ந்தனர். திடீரென கடல் கொந்தளிக்கத் தொடங்கியது. பேரலைகள் எழுந்து வீழ்ந்தன. சூறைக்காற்று சுற்றிச்சுற்றி சுழன்று அடித்தது. வன்னியர்களது மரக்கலங்கள் சிறியவை, ஆதலால் சூழலுக்கு எதிர்த்து நின்று தாக்குப் பிடிக்க முடியாமல் போனது.
இரு மரக்கலங்களும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டது. தமது கணவன்மார்களை பிரிந்திருந்த பெண்களும், தந்தையர்களை பிரிந்த குழந்தைகளும் “குய்யோ! முறையோ!” எனக் கத்திய சத்தம் கடலலைகளை ஊடறுத்து இந்து சமுத்திரம் எங்கும் எதிரொலித்தது. தமது மனைவி, பிள்ளைகளைப் பிரிந்த வன்னியர்களில் சில துணிச்சலானவர்கள் கடலில் குதித்து பேரலைகளை எதிர்கொண்டு நீந்தினார்கள். சில பயந்த வன்னியர்கள் ஒன்றுமே செய்ய இயலாமல் கண்ணீர் வடித்து இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டார்கள். ‘கடலில் குதிப்பொமா அல்லது மரக்கலத்திலேயே இருப்போமா?’ என நினைத்த வன்னியரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த வயதானவர்கள் “உங்கள் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள், இனி அவன் விட்ட வழி தான்” என கூறினார்கள்.
இதேவேளை மற்றைய மரக்கலத்தில் இருந்தவர்களின் துயரத்திற்கு சொல்லி அளவில்லை. அங்கிருந்த நம்பிகள் குடும்பமாக இருந்ததினால் ‘வாழ்வோ, சாவோ! எதுவானாலும் எல்லோரும் ஒன்றாகவே முகங்கொடுப்போம்’ என்ற முடிவுடன் இருந்தனர். சில பெண்கள் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டார்கள். “ஐயோ!, உங்களைப் பிரிந்துவாழ எப்படித் தைரியம் வரும், புது இடத்தில் போய் எப்படி வாழமுடியும்.? உங்களுடன் மீண்டும் நாங்கள் சேராவிடின் குடும்பத்துடன் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வோம். இது கடற் கன்னி மீது சத்தியம்” எனக் கதறினார்கள்.
பிள்ளைகள் தாயின் சேலைகளைப் பிடித்துக் கொண்டு, “அம்மா அப்பா எங்கம்மா? அப்பா வருவாரா?” எனக் கண்ணீர் வடித்தார்கள். இவர்கள் எல்லோரையும் தாங்கிய மரக்கலம் நடுக்கடலில் நர்த்தனமாடியது. பல மணிநேர போராட்டத்தின் பின் இந்த மரக்கலமானது யாழ்ப்பாணத்தின் ஒரு கரையை வந்தடைந்தது. கரையில் இறங்கிய நம்பிகளும், பெண்களும், பிள்ளைகளும் செய்வதறியாது தவித்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை சனநடமாட்டத்தையும், அவர்களது மற்றைய மரக்கலத்தையும் காணமுடியவில்லை. இதனால் சோகமே உருவாக என்ன செய்வதென்று அறியாது திறந்த வெளியில் இளைப்பாறினார்கள். அங்கு கிடைத்த காய்கனிகளை உண்டு தங்கள் பசியைப் போக்கினார்கள்.
இரண்டு நாட்களின் பின்னர் கடலில் குதித்து நீந்திய வன்னியன் ஒருவன் கரைவந்து சேர்ந்தான். அவனைக்கண்டதும் ஆவல் மேலிட கரையில் இருந்த அனைவரும் எழுந்து அவனை நோக்கி ஓடினார்கள். அந்த அதிஷ்டக்காரன் கரைப்பிட்டி வன்னியனே! அவன் வருகையைக் கண்ட அவன் மனைவி அம்மைநாச்சி பெரிதும் சந்தோஷமடைந்தாள். ஆனாலும் அதனை வெளிப்படுத்த முடியாத நிலைமை அவளுக்கு… மற்றயவர்களின் கதி..? ஆவனைச்சூழ்ந்து கொண்ட கூட்டத்திலிருந்து “என் கணவன் எங்கே? என் கணவனைக் கண்டீர்களா? என் அப்பா எங்கே?” என ஏகோபித்த குரலில் பலர் கேட்டனர். இதனால் ஏற்கனவே இளைத்திருந்த வன்னியன் மிகுந்த களைப்புற்றான்.
கூட்டத்திலிருந்த பெரியவர் ஒருவர் அவனைச்சுற்றி நின்ற கும்பலை அகற்றிவிட்டு அவனுக்கு கிழங்கும் நீரும் கொடுத்தார். அதை அவன் ஆசையுடன் உண்டான். அதன் பின்னர் அவர் “தம்பீ! உன்னுடன் வந்தவர்கள் எங்கேயப்பா? அவர்களுக்கு என்ன நடந்தது?” என துக்கம் மேலிடக் கேட்டார். தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட அவ்வன்னியன், “அந்த இக்கட்டான சூழ்நிலையில் பலர் கடலில் குதித்தனர். அவர்கள் தப்புவது மிகவும் கடினம். எஞ்சியவர்களும் ஒருவாறு தப்ப முயற்சி பண்ணிய போது ஒரு பேரலை எமது மரக்கலத்தை கவிழ்த்து சென்றது. இதனால் நாம் எல்லோரும் கடலில் தூக்கி வீசப்பட்டோம், கடலலைகளுக்குள் சிக்கித் திணறிய நான் ஒரு மரக்கட்டையின் உதவியுடன் ஒருவாறு நீந்திக் கரைசேர்ந்தேன். மற்றவர்கள் வருவதென்பது குதிரைக் கொம்பு தான்” எனக் கூறிமுடித்தான்.
அவனது கூற்றைச் செவிமடுத்த சிலர் மயங்கிச் சரிந்தனர். பலர் என்ன செய்வதென்று அறியாமல் மிரள மிரள விழித்தனர். ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதியில் தங்கிய வன்னியர்கள், அவ்விடம் அவர்கள் தொடர்ந்து வாழ தகுந்த இடமாக காணப்படாததால் குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். அந்த ஒருமாத காலப்பகுதியில் கடலில் இருந்து எந்தவொரு வன்னியனும் மீண்டுவரவில்லை. இதனால் அவர்கள் இறந்தவர்களே எனத் தீர்மானித்து மிகுதியானவர்களும் கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்கள்.
அந்தவகையில் கரைப்பிட்டி வன்னியனும் அவன் மனைவியும் சில நம்பிகளும் கந்தரோடை எனும் இடத்தில் தங்கினார்கள். கரைப்பிட்டி வன்னியன் அரண்மனை சென்று ஏதாவது வேலை வாங்கலாம் என்ற எண்ணத்தில் நல்லூர் பகுதியை நோக்கிப் புறப்பட்டான்.
சாதிக்க வருவான்…
0000000000000000000000000000000000
பாகம் 12 : கரைபிட்டி வன்னியன்
யாழ் நல்லூர்க் கோட்டை பகுதியெங்கும் மக்கள் சுறுசுறுப்புடன் இயங்கினர். சட்டநாதர் கோயிலும், வீராகாளியம்மன் கோயிலும் பக்தர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன. பல அரண்மனை வாசிகளும், அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் இக்கோயிலை வழிபடுவர். இது தவிர யாழ் வீதிகளில் வீணாக பொழுதைப் போக்குபவர்களைக் காண்பதே அரிதாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்புடன் எப்போதும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டுவந்த கரைப்பிட்டி வன்னியன் ‘வாழ்ந்தால் இவ்வாறான ஒரு இடத்தில் தான் வாழவேண்டும்’ என தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
கோட்டையை அண்மித்த வன்னியன் அதன் அழகைக் கண்டு சிறுவர்களைப்போல் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டு நின்றான். இந்தியக் கோட்டைகளைப்போல் எதிரிகளை இலகுவாகச் சமாளிக்கும் வகையில் மிக நுட்பமாக கட்டப்பட்டிருந்த நல்லூர்க் கோட்டையையும் பக்கத்திலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஜமுனா ஏரியின் அழகையும், அதன் குழுமையால் கோட்டையைச்சுற்றி வளர்ந்திருந்த மரஞ்செடி கொடிகளையும் கண்ட கரைப்பிட்டி வன்னியன் ‘யாழ் மக்கள் கலாரசனையுடையவர்கள் தான்’ என நினைத்தான்.
அந்தநேரத்தில் அவ்வழியால் வந்த வீரமாப்பாணன் கோட்டையையே துருவித்துருவி பார்க்கும் வன்னியனைக் கண்டதும் சந்தேகம் கொண்டு அவ்விடத்தில் பணியிலிருந்த காவலாளிகளிடம் கண்ணைக்காட்டினான். உடனே இருவர் ஓடிவந்து ஈட்டி முனையில் அவனைத் தடுத்து நிறுத்தினர். அந்த திடீர் கைதால் வெலவெலத்துப் போன கரைப்பிட்டி வன்னியன் மிரள மிரள விழித்தான். அவனிடம் வந்த மாப்பாணன் அவனை நோக்கி “யார் நீ எனக் கேட்டான்” . நடுங்கியபடியே “நான் வன்னியன், அரசவேலை தேடி இங்கே வந்தேன்” எனக் கூறினான். அவன் நடத்தை மீது சந்தேகம் கொண்ட மாப்பாணன் அவனைக் கைது செய்து சங்கிலி இருக்குமிடம் கொண்டு சென்றான்.
சங்கிலி அந்தப்புரத்திலிருந்ததால் அவனை நந்தவனத்திற்கு வரும்படி மெய்க்காப்பாளனை மாப்பாணன் அனுப்பினான். சிறிது நேரத்தில் அங்கு வந்த சங்கிலி மாப்பாணனுடன் கூடவே ஒருவன் நிற்பதைக் கண்டு “என்ன மாப்பாணா! சிறிது காலம் நான் உன்னுடன் ஊர்சுற்ற வரவில்லை. அதற்குள் கோபம் கொண்டு நண்பனை மாற்றி விட்டாயே” எனச் செல்லமாகக் கடிந்துகொண்டான். “அவ்வாறில்லை அரசே! இவன் அரண்மனைக்கு வெளியே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினான். விசாரித்ததில் இவன் வன்னியன், இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றான். பெயர் கரைப்பிட்டி வன்னியன் என்றும் அறியமுடிந்தது” என்றான். “ஓகோ! அப்படியா?” எனக் கூறிக்கொண்டு வன்னியன் மீது விழிகளை நாட்டி “நீ எப்பொழுது இங்கு வந்தாய்?” என சங்கிலி வினவினான்.
தனது நிலையை அழுகையுடன் ஒருவாறு கரைப்பிட்டி வன்னியன் கூறிமுடித்தான். அவன் கதையைக் கேட்ட சங்கிலி ஆதரவாக அவன் தோளைத்தட்டி “வீரனே! பயப்படாதே, அடைக்கலம் தேடிவந்தவரை காப்பது எம் கடமை. நான் உனக்கு அரண்மனையிலேயே வேலை ஒன்றுக்கு ஏற்பாடு செய்கின்றேன்”. எனக் கூறினான். இதைக்கேட்ட கரைப்பிட்டி வன்னியன் பெரிதும் சந்தோசமடைந்தான். மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிக் கொண்டான். மன்னன் ஆணைப்படி கரைப்பிட்டி வன்னியனுக்கு சங்கிலி படையில் ஒரு பதவி வழங்கப்பட்டது. இந்த சம்பவங்களையெல்லாம் இருப்பிடம் சென்று தன் மனைவி அம்மை நாச்சியிடம் கூறிச் சந்தோசமடைந்தான் வன்னியன்.
நாட்கள் நகர்ந்து செல்ல கரைப்பிட்டி வன்னியன் மனதில் தீய எண்ணங்கள் குடிகொண்டது. தான் அரச பதவியில் இருந்ததால் அதைத் தவறாகப் பயன்படுத்த நினைத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துன்பங்களை விளைவித்தான். தன் கட்டளைக்குப் பணியாதவர்களை தண்டித்துவந்தான். அதுமட்டுமல்லாமல் பெண்களுடனும் தகாத முறையில் நடந்து கொண்டான். ஒருமுறை தன் சூழலில் வசித்து வந்த நம்பி ஒருவருடைய மகளின் அழகைக் கண்டு மயங்கி அவள் பின்னாலேயே அலைந்தான். அரசாங்கப் பதவியைக்காட்டி அவளை மயக்க முயன்றான். ஒன்றுக்குமே அவள் மசியாததால் தனது அதிகாரத்தைப் பாவித்து அவளை அச்சுறுத்தி வந்தான். அவள் பற்றிய தவல்களை அறிந்த போது அவள் தம் குலத்தில் ஒரு ஆடவனைக் காதலிப்ப தெரிய வந்தது. இதனால் வெகுண்ட வன்னியன், அவள் காதலனை அறிந்து, அவனைச்சிறைப்பிடித்துச் சித்திரவதை செய்தான். அவன் இருக்கும் நிலை பற்றி நம்பியின் மகளுக்குச் சொல்லியனுப்பினான்.
தன் காதலன் நிலையறிந்து, சொல்லமுடியாத கவலை அடைந்த அவள், ஓடோடி வன்னியன் சிறையிலிருந்த காதலனைக் கண்டாள். கடுமையாகத் தாக்கப்பட்டதால் நினைவிழந்து மயங்கிச் சரிந்த அவனைப் பார்த்து கதறியழுதாள். அவன் தலையைத்தூக்கி தன் மடியில் வைத்தாள். அவன் “தண்ணீர்! தண்ணீர்!” என முனகினான். அவ்வேளை அங்கு வந்த கரைப்பிட்டி வன்னியன், அவ்விடத்திலிருந்து நம்பி மகளை பலாத்காரமாகத் தூக்கிச் சென்று தன் பஞ்சணையில் எறிந்தான். கதறக்கதற அவள் கற்பைச் சூறையாடினான். நாயைப் போல கடித்துக்குதறி அவளைச் சின்னாபின்னமாக்கினான். பின் அவளையும், அவள் காதலனையும் அங்கிருந்து அடித்துத் துரத்திவிட்டான்.
தள்ளாடித்தள்ளாடி இருவரும் தம்மிடம் வந்து சேர்ந்தனர். கற்பிழந்து உருக்குலைந்து தன் முன் வந்து நின்ற மகளைப்பார்த்த நம்பி, செய்வதறியாது பித்துப்பிடித்துப் போனார். இதற்கெல்லாம் காரணமான வன்னியனைப் பழிவாங்கியே தீருவது என்று சபதமெடுத்துக் கொண்டார். அரச பதவியில் இருக்கும் அவனைப் பழிவாங்குவது அவ்வளவு இலேசான காரியமல்ல என்பதை அறிந்த நம்பி, குறுக்கு வழியில் அவனைக் கொல்லத்திட்டமிட்டார். இதன்படி தனித்து வீடுவந்த கரைப்பிட்டி வன்னியனை நாள் பார்த்து முதுகில் குத்திக் கொன்றார்.
நடந்த சம்பவங்களை அறிந்த கரைப்பிட்டி வன்னியனின் மனைவி அம்மைநாச்சி அவமானம் தாங்கமுடியாமல் வாழ மனமற்று வாளால் வயிற்றில் குத்து தற்கொலை செய்து கொண்டாள். நடந்த விடயங்களை முழுமையாக அறியாத சங்கிலி தன் படையின் முக்கிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்து வெகுண்டெழுந்து ஒரு கொடுங்காரியத்தைச் செய்து விட்டான். இதனால் அவன் வாழ்நாள் முழுவதும் வருந்த வேண்டியதாயிற்று.
சாதிக்க வருவான்…
0000000000000000000000000
பாகம் 13 நம்பிகள்
நல்லூர் அரசிலே சிறப்புற்று விளங்கியது யாதெனில் சட்டநாதர் ஆலயத்திற்கு சற்றுத் தெற்காக வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் அமைக்கப்பட்ட மந்திரிமனையாகும். இக்கட்டடத்தின் அமைப்பும், மரத்தாலான சிற்ப வேலைப்பாடுகளும் நூதனமான கலைப்பண்பை வெளிப்படுத்துகின்றன. அதில் நம் சுதேச மரபு கலந்திருந்தது.
மந்நிதிமனைக்கு உள்ளிருந்து வெளியே யமுனா ஏரிக்கு வந்து சேரும் வகையில் மிக நுட்பமாக ஒரு சுரங்க வழி அமைக்கப்பட்டிருந்தது. இது நல்லூர்க் கோட்டைக்கு மிகவும் பாதுகாப்பாக விளங்கியது. சுரங்கவழியின் பாதுகாப்பையும் உறுதியையும் ஆராயவென தளபதி இமையாணனும், சங்கிலியும் சுரங்க வழிக்குள் இறங்கி நின்றனர்.
இந்த வேளையில் சங்கிலியைப் பல இடங்களில் தேடிய வீரமாப்பாணன், கடைசியாக சுரங்க வழிக்குள் வந்து சங்கிலியைச் சந்தித்தான்.
“என்ன மாப்பாணா! புரபரப்புடன் வருகின்றாய்? உன்னுடன் என்றுமே ஒரு தகவலைக்கூட வைத்திருப்பாயே! இன்று என்ன கூற வந்தாய்… என்னை எங்காவது கூட்டிக்கொண்டு போகப்போகின்றாயா? நான் பாதுகாப்புப் பற்றிய ஆலோசனைகளில் இருக்கின்றேன். நாளை போவோமா?” என மாப்பாணன் வந்த விடயத்தை தானாக ஊகித்துக் கூறினான்.
நிலமை தெரியாமல் சங்கிலி கூறியதைச் செவிமடுத்த தோழன்,
“நான் வந்திருக்கும் விடயம் சந்தோஷமானதல்ல, துக்கமானதாகும்” எனக் கூறினான்.
“என்ன! என்ன விடயம்?” சுதாகரித்துக் கொண்டான் சங்கிலி. “நம்மிடம் புதிதாக இணைந்த வன்னியன் இறந்துவிட்டான்”.
“யார்… நம் தளபதிகளில் ஒருவனான கரைப்பிட்டி வன்னியனா?”
“ஆம் அரசே!”
“என்ன விடயம் என விசாரித்தாயா?”
“இல்லை, ஆனால் அவன் கீழ் வேலை செய்யும் நம்பி ஒருவன் தான், அவனை யுத்த நெறிமுறைகளுக்கு புறம்பாகக் கொன்றான்”.
“நம்பியா கொன்றான்! நம் படைத்தலைவன் என்று தெரிந்தும் நம்பிக்கு எவ்வாறு அவனைக் கொல்ல தைரியம் வந்தது”
“தெரியவில்லை மன்னா!”
சங்கிலி கோபம் கண்களில் கொப்பளிக்க தளபதி இமையாணனைப் பார்த்து “சங்கிலி படைத்தளபதி ஒருவனை அடிமை ஒருவன் சாய்த்து விட்டான். அவனுக்கு தக்க தண்டனையை நாம் வழங்க வேண்டும். நம்பரை வீரரை அனுப்பி அந்த நம்பியை கொல்லும் படி ஆணையிடு” எனக் கூறினான்.
“அரசே! எதையும் தீர விசாரித்து அறியாமல் ஒரு முடிவுக்கு வருவது தப்பு” என மாப்பாணன் ஆலோசனை கூறினான். ஆனால் ஏற்கனவே வெளிநாட்டவர் மீது ஆத்திரம் கொண்டிருந்த சங்கிலி அவனது ஆலோசணையை ஏற்கவில்லை. இதனால் அநியாயமாக ஒரு உயிரை எடுக்க வேண்டியதாயிற்று.
சில நாட்களின் பின்பே உண்மை நிலையைச் சங்கிலி அறிந்தான். இதனால் பெரிதும் வருந்தினான். நம்பிகளுக்கு ஏதாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நம்பிகள் இருந்த இடத்தைத் தேடிச் சென்றான். சங்கிலியின் தண்டணையால் பெரிதும் மனமுடைந்த நம்பிகளில் பலர் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். அவர்கள் யாழ்ப்பாணத்தில் காலூன்றி பல சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்ததால் அந்த அனாதைச் சொத்துக்களை எல்லாம் அரச உடமை ஆக்கினான். தன் மனநிம்மதிக்காக பல ஆலயங்களில் விசேட பூஜைகள் பலவற்றை ஏற்பாடு செய்தான்.
தன் ஆத்திரப்புத்தியை மிகவும் நொந்து கொண்டு அந்தப்புரம் சென்றான். கவலைகளை மறக்கடிக்கும் அவ்விடமும் அவனுக்கு சுமையாகவே தோண்றியது. தோழிகளுடன் சிரித்துப் பேசிக் கொண்டு பஞ்சணையில் உட்கார்ந்திருந்த மாதேவி, சங்கிலியைக் கண்டதும் வழக்கமான நாணத்துடன் பெரிய எதிர்பார்ப்புடனும் மெல்லிய திரைச்சீலையால் சுற்றவரக் கட்டப்பட்டிருந்த அந்தத் திரு மஞ்சத்தில் உட்கார்ந்திருந்தாள். சங்கிலியை கண்ட தோழிகள் தலைதாழ்த்தி வணக்கம் தெரிவித்து விட்டு மெதுவாக வெளியேறினார்கள். மஞ்சம் நோக்கி வந்த சங்கிலி பஞ்சணையில் இருந்த பைங்கிளியை ஏறெடுத்தும் நோக்காமல் பஞ்சணையின் ஒரு ஓரத்தில் இருந்தான்.
சங்கிலியின் கொஞ்சல்களையும், குழாவல்களையும் எதிர்பார்த்திருந்த மாதேவி சிறிது நேரம் எந்தவித சலனத்தையும் காணாததால் விரக்தியடைந்து, ஏமாற்றத்துடன் பஞ்சணை முகப்பிலிருந்த மெல்லிய திரையை விலக்கிக் கொண்டு தலையை நீட்டி “என்ன நடந்தது? ஏன் குழம்பிய மனத்துடன் காணப்படுகின்றீர்கள். வழமையாக நான் உங்களை இப்படிக் கண்டதே இல்லையே” என சோகமாக வறட்சியான குரலில் கூறினாள்.
அவளுக்கு உடனடியாகப் பதில் சொல்லாத சங்கிலி திரைகளுக்கு இடையே தெரிந்த அவள் சுந்தர முகத்தையும், விலகிய சேலையின் விளைவாக தெரிந்த மேல் அழகுகளையும் சில வினாடிகள் உற்று நோக்கினான். “இந்த சௌந்தர்யங்களையெல்லாம் ஆள இப்போது என்னால் இயலாது” என மனதுக்குள் சொல்லிக் கொண்டு பஞ்சணையை அணுகி மாதேவியை அப்படியே தனது கைகளில் அள்ளித் தூக்கித் தனது இதழ்களை முரட்டுத்தனமாக அவள் கழுத்தில் பதித்தான். அங்கிருந்து மீண்ட உதடுகள் அவள் செவ்விய அதரங்களுடன் ஒரு வினாடி இழைந்தது. அடுத்து எந்த சரசத்திலும் ஈடுபடாத சங்கிலி வெடுக்கென எழுந்திருந்தான்.
“தேவி! ஏன்னால் இன்று இன்பமாக இருக்க முடியாது. என் மனம் இன்று ஒரு நிலையில் இல்லை. சங்கடப்பட்டுக் காணப்படுகின்றது” எனக் கூறினான். தரையில் நின்றபடி அவன் உடல் மீது சாய்ந்து தனது உடலை அவன் உடலுடன் முற்றும் இழைத்துக் கொண்டாள் மாதேவி. அந்த ஒரு வினாடி அவன் மனதை மாற்றியது அந்த அணைப்பு. அவளை அணைத்துக் கொண்ட சங்கிலி “தேவி! என் அவசரப்புத்தியால் அநியாயமாக ஒரு உயிரைப்பறித்து விட்டேன்” என சோகமாகக் கூறினான்.
நடந்ததைக் கேட்டறிந்து கொண்ட பட்டத்து ராணி, அவனை ஆதரவாக அணைத்து அவன் மார்மேல் தலையைச் சாய்த்துக் கொண்டு “நீங்கள் என்ன தெரிந்தா இப்படிச்செய்தீர்கள். மேலே கடவுள் என்று ஒருவன் இருக்கி;ன்றான். அவனுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்” என அவன் மனப்பாரத்தை இறக்க முயன்றாள்.
ஆனால் சங்கிலி மனம் ஆறுவதற்கு நீண்ட காலம் பிடித்தது. அதற்குள் சங்கிலிக்கு சவால் விடும்படியாக உள்நாட்டில் சிக்கலான சூழ்நிலை உருவானது.
சாதிக்க வருவான்…
000000000000000000
பாகம் 14 கலகங்கள்
வாழ்க்கை என்பது ஒரு வட்டத்தைப் போன்றது. அதில் பருவகாலங்களைப் போல மாறி மாறி இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். ஆனால் சங்கிலியின் வாழ்க்கையில் சோதனைகளும் வேதனைகளுமே நிறைந்திருந்தன.
மந்திரி பிரதானிகள் சூழ சங்கிலி யாழ்ப்பாணப் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலில் சபா மண்டபத்தில் ஈடுபட்டிருந்தான். தனிநாயக முதலியைப் பார்த்த சங்கிலி “என்ன முதன் மந்திரியாரே! நாடு சற்று குழப்பமடைந்து காணப்படுகின்றதே… என்ன நடக்கின்றது என்று சற்று விபரியுங்கள் பார்க்கலாம்” என்றான்.
“மறவன்புலவிலுள்ள மறவர்கள் அயற் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையிடுகின்றனர்”
“என்ன? மறவன்புலவில் கொள்ளையா?... நம் ஆட்சியில் கொள்ளையா? ஏன் என் மக்களுக்கு என்ன குறை? ஏதற்காக அவர்கள் இப்படியொரு காரியம் செய்கின்றார்கள்”.
“அரசே! அவர்கள் பரம்பரையினர் தென் இந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உமது மூதாதையர் ஆட்சியில் இங்கு குடியேறினார்கள். இப்பொழுது நமது அரசிற்கு நாலாபக்கத்திலிருந்தும் பகை கிளம்புகின்றது. அதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கலகம் விளைவிக்கும் நோக்குடன் சூறையாடல்களில் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். அரசே, இவர்களை அடக்காவிடின் கொள்ளையும், களவும் குறைய மாட்டாது” என்றார் முதன்மந்திரி.
சங்கிலி தனது தளபதியாரைப் பார்த்து “தளபதி இதற்கொரு முடிவு கட்ட வேண்டும். இவ்விடயத்தை நீர் கவனித்துக் கொள்ளும்” என்றான்.
“ஆகட்டும் அரசே! சின்ன விடயம். எங்கள் வீரர்களை அனுப்பி அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுகின்றேன்” என்றான் இமையாணன்.
அதன்படி தளபதியின் கட்டளையின் பேரில் சென்ற வீரர்கள் சூறையாடல்களில் ஈடுபட்டிருந்த மறவர்களை சிறை செய்தனர். பயந்தோடிய மறவர்கள் காட்டுப்பகுதிகளில் ஒழிந்து கொண்டனர். இந்தக் காலப்பகுதிகளில் தொண்டைநாட்டிலிருந்து பன்னிரண்டு கருணீகரும் தம் குடும்பங்களுடன் வந்து யாழ்ப்பாணம் சேர்ந்தனர். இவர்கள் வருகை ஏதாவது சூழ்ச்சியுடன் இருக்குமோ என சங்கிலி ஐயப்பட்டான். அதனை தன் அரச சபைக்கும் தெரியப்படுத்தினான்.
“அரசே! அவர்கள் இயற்கையாகவே அறிவை நிரம்பப் பெற்றவர்கள். அவர்கள் இங்கிருப்பதால் நமக்குத் தான் பெருமை. அவர்கள் இப்படியான சிறுமையான, கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்” என எல்லோரும் ஆதரவு கூறினார்கள். அதன்படி அவர்களுக்கு காடாயிருந்த கரணவாய் எனும் பிரதேசத்தை சங்கிலி கொடுத்தான். அதனை அவர்கள் பண்படுத்தி நீண்ட காலம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள்.
இதன் பின்னர், சிறிது காலத்தில் வடமராட்சிப் பகுதியில் கலகம் ஏற்பட்டது. இது பற்றி சங்கிலி கேட்டறிந்த போது தனிநாயக முதலி கூறினார் “கோப்பாய் தலைமைக்காரனும், அவன் ஆட்களும் வடமராட்சி கோயில் திருவிழா ஒன்றிற்கு சவாரி வண்டியில் போயிருக்கிறார்கள். புறாப் பொறுக்கியில் சிறிது தங்கிய போது, அவ்வூர் சிறுவன் ஒருவன் வண்டி மாட்டின் குஞ்சத்தை கழற்றியிருக்கின்றான். இதனை அவதானித்த கோப்பாய் தலைமைக்காரன், சிறுவனைப்பிடித்து தண்டித்து அனுப்பிவிட்டான்.
அந்தச் சிறுவன் உடுப்பிட்டி தலைமைக்காரனது மகன். இதனால் ஆத்திரமடைந்த உடுப்பிட்டி தலைமைக்காரனும், அவனது ஆட்களும் சம்பவ இடத்திற்கு வந்து கோப்பாய் தலைமைக்காரனையும் அவனது ஆட்களையும் நையப்புடைத்து அனுப்பினர். இதனால் வெகுண்ட கோப்பாய் காரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்து மீண்டும் உடுப்பிட்டிக்காரரை பழிவாங்கினார்கள். இதனால் மீண்டும் மீண்டும் அவர்களுக்குள் கலகம் ஏற்படுகின்றது. இதனால் அந்தப்பகுதிகள் எதொடர்ந்தும் பதற்றமாகவே காணப்படுகின்றன.”
“இரு தலைமைக்காரர்களையும் இங்கு வரவழைத்து விசாரிப்போமா?” என தளபதி இமையாணன் கேட்டான்.
“இல்லையில்லை, நானும் அங்கு அடிக்கடி செல்வதில்லை. இம்முறை அங்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டு தீர்ப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன்” எனச் சங்கிலி கூறினான்.
அதற்கமைய வடமராட்சி சென்ற சங்கிலி, அங்கு மக்களுடன் கலந்தாலோசித்து நிலமைகளை சுமூகமாக்கிவிட்டு மீண்டும் யாழ் நோக்கி வந்தபோது, கள்ளியங்காட்டெல்லையில் அவன் வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் சினமுற்ற சங்கிலி காரணம் என்னவென வினவினான்.
அங்கு நின்ற காவலர் தலைவன் “இது பரநிருபசிங்கன் எல்லை, அதுதான் நிறுத்தும்படியாயிற்று” என தாழ்ந்த குரலில் கூறினான்.
“எப்பொழுதிலிருந்து?” சங்கிலி வினவினான்.
பதில் கூறமுடியாது காவலர் தலைவன் திணறினான். பின் சங்கிலியை தொடர்ந்தும் தடுக்க முடியாது என்பதால் அங்கிருந்து செல்லுமாறு கூறினான்.
அப்பாமுதலியின் வாக்குப்படி சங்கிலி மீதிருந்த வெறுப்பினாலேயே பரநிருபசிங்கன் அப்படியொரு கட்டளையை இட்டிருந்தான். இந்த சம்பவங்களால் ஆத்திரடைந்த சங்கிலி அரண்மனை சென்றதும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்டுவது எனத் தீர்மானித்துக் கொண்டான். அரண்மனையில் இருக்கவே அவனுக்கு பிடிக்கவில்லை. உடம்பெல்லாம் எரிந்தது. உள்வீட்டிலிருந்து இப்படியான எதிர்பை அவன் எதிர்பார்க்கவில்லை. மனமுடைந்த அவன் நல்லூர் வடக்கெல்லையில் உள்ள குடிசையொன்றில் தங்கி இளைப்பாறினான்.
மாலைவரை யாரும் அவனைத் தேடி வரவில்லை. இரவு நெருங்க வீரனொருவன் விளக்கை மட்டும் குடிசையில் வந்து வைத்துச் சென்றான். இரவு ஏறியதும் பாயை விரித்துப்படுத்த சங்கிலி சிறிது நேரத்தில் உறங்கி விட்டான். நள்ளிரவு வந்தது, அவன் எதையோ நினைத்துப் சற்றுப் புரண்டான். புரண்டவன் சட்டென்று மலைத்தான். எழுந்திருக்கவும் முயன்றான். ஆனால் அவனை எழுந்திருக்க விடாமல் அழுத்தின இரு பூங்கரங்கள்.
“நீ எப்பொழுது வந்தாய் வடிவழகி?” அவன் கைகள் அவள் பூவுடலை வளைத்தன. அவள் புஷ்பம் போன்ற கைகளாகிய மாலை அவன் கழுத்தைச் சுற்றிச் சுழன்றது.*
“இவ்விடம் உனக்கு எப்படித் தெரிந்தது?”
“உங்கள் நண்பர் கூறினார்”
“என்ன விடயத்திற்கு வந்தாய்?”
“நீங்கள் அரசாங்க அலுவல்களில் மூழ்கியிருப்பதால் என்னை மறந்து விட்டீர்கள். ஆனால் இந்தப் பேதையால் அவ்வாறு இருக்க முடியவில்லை. எந்நேரமும் உங்கள் நினைப்புத்தான்” எனக் கூறிய வடிவு, அவன் முரட்டு இதழ்களை தன் முல்லைப்பற்கள் இரண்டால் பற்றினாள்.
அவள் பூவுடல் வலிக்கும்படியாக சங்கிலி இறுக அணைத்துக் கொண்டான். அந்த வலியிலும் இன்பம் இருப்பதை உணர்ந்த வடிவழகி,
“ஆனாலும் நீங்கள் ரொம்ப மோசக்காரர்” என்றாள்.
“எவ்விடயத்தில்?...”
“பெண்கள் விடயத்தில்….”
“ஏன்?...”
“தனித்திருக்கும் பெண்ணை அணைக்கத்தான் தெரிகின்றது” எனக் கூறிய அவள் வெட்கத்தால் குனிந்தாள். அத்துடன் மல்லாந்து படுத்த நிலையில் ஒரு மோகப்புன்னகையில் சங்கிலியை பார்த்தாள். அப்புன்னகையில் அழைப்பிருந்தது.
அந்த இன்பமயமான வேளையில் யாழ்ப்பாணத்தின் தலையெழுத்தையே மாற்றக்கூடிய புயல் ஒன்று யாழ் கரையை வந்தடைந்தது.
சாதிக்க வருவான்…
00000000000000000000000000000
பாகம் 15 பறங்கிகள் சந்திப்பு
சங்கிலி, அப்பாமுதலியின் மகள் வடிவழகி மீது ஒரு கண்ணை வைத்திருப்பதை அறிந்த பரநிருபசிங்கன் பெரிதும் வெகுண்டான். “இவனெல்லாம் ஒரு அரசனா? நல்ல படியாக ஆட்சி செய்வான் எனக்கருதி எனது அரசுரிமையை அவனிடம் ஒப்படைத்தும் பிரயோசனமில்லாமல் போய்விட்டதே! எமது குலத்திற்கே அபகீர்த்தி தேடித்தரப் போகிறானே!” என்று கடுஞ்சினங் கொண்டு, ஊர்காவற்துறையில் அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்த காக்கைவன்னியனுக்கு ஒரு ஓலை எழுதி முத்திரையிட்டு தனது அந்தரங்கத்திற்கு பாத்திரமான ஒரு தூதனிடம் இரகசியமாகக் கொடுத்தனுப்பினான்.
ஏற்கனவே சங்கிலி மீது பகைபூண்டிருந்த காக்கைவன்னியன் பரநிருபசிங்கனின் தூதுவனை சிறப்பாக வரவேற்று அவன் கொணர்ந்த ஓலையை ஆவலாகப் பிரித்துப் படித்தான். அது கீழ்க் கண்டவாறு இருந்தது.
காக்கைவன்னியனுக்கு,
சங்கிலி முறைதவறி ஆட்சி நடத்துகின்றான். அவன் ஆட்சியில் மக்கள் சந்தோசமாகவே இல்லை. அவன் ஆட்சியை ஒழிக்க வேண்டும். ஆனால் அது கடினம். மந்திரிகளும் பிரதானிகளும் அவன் பக்கம் இருக்கின்றார்கள். நாட்டில் ஏற்பட்ட பல கலகங்களையும் அடக்கி விட்டான். ஆதலால் அவனை நானோ, நீயோ வெற்றி காண முடியாது. இதனால் நீ பறங்கிகள் உதவியை நாடு. விரைவாக இதற்கான முடிவைக்காண்.
பரநிருபசிங்கன்.
ஓலையைப் படித்த காக்கைவன்னியன் உடனடியாகவே பறங்கித் தளபதிகளை சந்திப்பதற்காக மரக்கலமேறித் தரங்கம்பாடியை அடைந்தான். அவனை வரவேற்ற பறங்கியத் தளபதி பிரகன்ஸா,
“என்ன சகோதரரே! திடீர் விஜயம். ஏதேனும் எங்களால் ஆதாயம் கிடைக்க வேண்டுமா?” என்றான்.
“ஆதாயம் வேண்டும் தான். ஆனால் அதனால் என்னைவிட உங்களுக்கு தான் பயன் அதிகம்” என்றான் வன்னியன்.
“என்ன கூறுகிறாய்… எமக்கு ஆதாயமா?”
“ஆம்…”
“விளக்கிக் கூறு பார்ப்போம்”
“நீங்கள் யாழ்ப்பாணம் மீது படையெடுத்து வரவேண்டும்”
“வேண்டவே வேண்டாம். சங்கிலியைப் பற்றி எங்களுக்கு உன்னைவிட நிறையவே தெரியும். அவனை எதிர்க்க முடியாது. எங்களை நீ கட்டாயப்படுத்தாதே. எங்களுக்கு எங்கள் உயிர் முக்கியம். பேராசைப்பட நாம் தயாராக இல்லை” எனத் தீர்மானமாகக் கூறினான்.
“நீங்கள் நினைப்பது போலில்லை. அங்கு இப்பொழுது அவனுக்கு பல எதிர்ப்பலைகள் கிளம்பியுள்ளன. அவன் அண்ணன் தான் எங்களுக்கு இந்த திட்டத்திற்கான அனுமதியையே தந்தான். உங்களுக்கு பல முனைகளில் ஆதரவு கிடைக்கும். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உங்களுக்கு இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது” எனப் பறங்கியர்களின் மனதை மாற்றினான். இதனால் அவர்களும் யாழ்ப்பாணத்திற்கு வரச் சம்மதித்தனர்.
“எப்பொழுது யாழ் வருவீர்கள்?” ஆவலுடன் வன்னியன் கேட்டான்.
“சீக்கிரமே புறப்பட்டு விடுவோம். எப்படியும் அடுத்தவாரமளவில் வருவதற்கு முயற்சிக்கின்றோம். சங்கிலி அண்ணனிடம் யாழில் எங்களுக்கு சுமுகமான சூழலை ஏற்படுத்தச் சொல்லு” என பிரகன்சா கூறினான்.
இந்த சந்தோச செய்தியை காக்கை வன்னியன் ஊர்காவற்துறை திரும்பிய உடனேயே ஒரு தூதுவனிடம் கூறி பரநிருபசிங்கனிடம் அனுப்பினான்.
திட்டமிட்டபடியே உரிய காலத்தில் பறங்கியர்கள் வர்த்தக வேடமிட்டு விநோத பண்டங்களுடன் பண்ணைத்துறையில் வந்திறங்கினார்கள். அவ்வாறே யாழ் கோட்டைக்கும் வந்து சங்கிலியைச் சந்தித்தான் பிரகன்சா. அவனுடன் பறங்கிகளின் உயர்மட்ட தலைவர்களும் வந்திருந்தனர். இவற்றைவிட பிரகன்சாவின் காதலியான ஒரு வெள்ளைக்காரப் பெண்ணும் சங்கிலி அரசசபைக்கு வந்திருந்தாள்.
பார்த்த மாத்திரத்திலேயே ஆண்களைக் கவர்ந்திழுக்கும் நீலக்கண்களுடனும், பொன்னிற முடியுடனும் காணப்பட்ட அவளைப்பார்த்த சங்கிலியே ஒருமுறை நிதானம் தவறிப்போனான். முழங்காலுக்கு மேல் தொடையின் அரைப்பகுதிவரை ஏறியிருந்த வெள்ளைநிறக் கவுனுடன் கழுத்திலிருந்து மார்புவரை அர்த்த சந்திர வடிவமாக வெட்டிவிடப்பட்ட கவுனின் மேற்பகுதியும், அறவே கைகளற்ற தோள்வரை மட்டுமே தழுவி நின்ற அந்தக்கவுனினால் அவளது திண்ணிய பருத்த மார்பகத்தின் பெரும்பகுதி வெளிப்படையாகவே தெரிந்தது. விலையுயர்ந்த இரத்தினக்கல் பதிக்கப்பட்ட சங்கிலியொன்று அவர் மார்பைத் தழுவியிருந்தது. இவற்றை ஓர் பார்வையிலேயே அளவெடுத்த சங்கிலி “இரத்தினத்திற்கு அடித்த யோகம்” என ஆதங்கத்துடன் மனதில் கூறியதோடு தன் மனதையும் திடப்படுத்திக் கொண்டான்.
பேச்சை ஆரம்பித்த பிரகன்சா, “வணங்குகிறோம் பிரபு! உங்கள் நாட்டின் வளம் பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்து வியாபாரம் செய்தால் நிறையச் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தில் இங்கு வந்து இறங்கினோம். நாங்கள் உங்கள் நாட்டில் வியாபாரம் செய்ய நீங்கள் அனுமதி தரவேண்டும்” எனக் கோரினான்.
அவனைக்கண்களாலேயே அளவெடுத்த சங்கிலி “நீங்கள் கூறுவதை எவ்வாறு நம்புவது. வியாபார நோக்கோடு வந்த நீங்கள், உங்களை வளப்படுத்திய பிறகு எங்களுக்கு எதிராகத்திரும்புவீர்கள்” என தனது ஐயத்தைத் தெரிவித்தான்.
இதற்கிடையில் அவையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி! இவர்கள் மன்னாரில் வந்திறங்கிய பறங்கிகள் அல்ல. இவர்களது நோக்கமும் எங்களுக்கெதிரானது அல்ல. பாவம்! வயிற்றுப்பிழைப்புக்காக வந்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றில் அடிக்கலாமா?” எனக் கூறினான். அப்பாமுதலியும் அவன் கூற்றை ஆதரித்தார். இதனால் மனம் மாறிய சங்கிலி பறங்கித் தளபதியைப் பார்த்து “நீங்கள் கூறவது உண்மையானால் பகற்காலத்தில் மட்டுமே, நகர்வந்து வியாபாரம் செய்ய வேண்டும். இரவில் மீண்டும் உங்கள் கூடாரங்களுக்கு திரும்பிவிட வேண்டும். இதற்குச் சம்மதமானால் எங்கள் நாட்டில் தங்குங்கள்” என்று கூறினான்.
அதற்கு உடன்பட்ட பறங்கிகள் அவ்வாறே செய்வதாகக் கூறிச்சென்றனர். பறங்கிகளுக்கும் தனக்குமிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தயின்போது அவர்களுடன் வந்திருந்த தங்க விக்கிரகம் தன்னையே ஏறெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததை அவதானித்த சங்கிலி ஏக்கப்பெருமூச்சொன்றை வெளிவிட்டான். அண்ணன் பேச்சைக் கேட்டு பறங்கிகளை குடியமர்த்தியதன் விளைவை சிறிது காலத்திலேயே சங்கிலி உணர்ந்தான். அது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கே வில்லங்கமாகிவிட்டது.
சாதிக்க வருவான்…
00000000000000000000000000000000
பாகம் 16 பறங்கிக்கோட்டை
இளவேனிற் காலத்தின் சுகந்தவளி சுகமாக வீசிக் கொண்டிருந்த ஒரு பொழுது, தூக்கத்தில் சிரிக்கும் குழந்தையைப் போல நிகரற்ற சௌந்தர்யத்துடன் மலர்கள் மொட்டு விரித்து முறுவலித்துக் கொண்டிருந்தன. உதிர்ந்த மலர்களை மரகத வண்ணப் பசும்புல் தரை ஏந்தி தன் மடியில் கிடத்திக் கொண்டு தாய்மை எழிலுடன் காட்சி தந்தது. அவ்வற்புத அழகு இரகசியங்களை கவிதையாக்கி தம் தீங்குரலால் வானவர்க்குப் பாடிக் காட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையுடன் நீல விண்ணின் விசும்பு மேல் ஏற முயன்று முயன்று தோல்லியடைந்து கொண்டிருந்தன சில வானம்பாடிகள்…
இந்த அற்புதங்களையெல்லாம் தாங்கி வீராப்புடன் நிமிர்ந்து நின்றது யாழ் மண். வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற பறங்கியர்கள் தமது மரக்கலம் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் தாம் கொண்டு வந்த பொருட்களை நகருக்குள் விற்றுச் சென்றனர். இவ்வாறே சில காலங்கள் சென்றன. பின் அவர்கள் தாம் தந்த வேலையைக் காட்டத் தொடங்கினர்.
பறங்கிய முக்கிய தலைவர்களுடன் கலந்தாலோசித்த தளபதி பிரகன்சா அவர்களைப் பார்த்து “இப்பொழுது சங்கிலிக்கு எம்மீது பூரண நம்பிக்கை வந்துவிட்டது. இதனால் இனி நாம் வந்த வேலையைக் காட்டத் தொடங்கலாம்.” எனக் கூறினான்.
“அதற்காக என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்?” பறங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவனான தொன்பிலிப்பு கேட்டான்.
“நாம் மெதுவாக மரக்கலங்களை விட்டு நகருக்குள் காலூன்ற வேண்டும்”
“முடியுமா?”
“முயன்றால் முடியும். எம்மீது உள்ள நம்பிக்கையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சங்கிலியிடம் சென்று நமக்காக நிலம் கேட்க வேண்டும்.”
“அவன் கடுமையானவனாயிற்றே! நமக்கு அனுமதி தருவானா?”
“கேட்கின்ற விதத்தில் கேட்டால் நிச்சயம் தருவான். அந்த வேலையை நான் பார்த்துக் கொள்கின்றேன். நாம் முதலில் நல்ல ஒரு நாளில் சங்கிலியை சந்திக்க வேண்டும்”
“வெறுங்கையுடன் சென்று சந்தித்தால் அவ்வளவு நல்லாயிராதே!”
“அதற்கும் ஏற்பாடு செய்து விட்டேன். இந்தியாவிலிருந்து விலையுயர்ந்த திரவியங்களை இறக்குமதி செய்து விட்டேன்.” எனப் பெருமையுடன் கூறினான் பிரகன்சா.
“அப்படியா! மிகவும் மகிழ்ச்சி. நாம் விரைவாகவே சங்கிலியைச் சந்திப்போம்” என்றான் தொன்பிலிப்பு.
பறங்கிகள் தமக்குள் நடந்த ஆலோசனையின்படி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த பட்டாடைகள், பல வாசனைத்திரவியங்கள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களுடன் சங்கிலியை கோட்டையில் வந்து சந்தித்தார்கள்.
“என்ன வீரர்களே! யாழ்ப்பாணத்தில் உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா? ஏதாவது வசதிக்குறைவு ஏற்பட்டுவிட்டதா?” என வந்திருக்கும் பறங்கியர்களை ஒருமுறை அலசிப்பார்த்து கேட்டுக் கொண்டான். வந்திருந்தவர்களில் அன்று வந்த வெள்ளைக்காரியைக் காணாததால் சிறு ஏமாற்றத்துடன் சம்பாசனையைத் தொடர்ந்தான்.
“இல்லைப் பிரபு! உங்கள் உதவியால் நாம் பெரிதும் மகிழ்ச்சியாகவே உள்ளோம். உங்களுக்கு நிறையவே கடன் பட்டுள்ளோம். அதற்கான சிறிய உபகாரமாக நாம் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஏற்க வேண்டும்” என பிரகன்ஸா கூறினான்.
அவன் வேண்டுகோளின் படி அப்பொருட்களை ஏற்றுக் கொண்ட சங்கிலி “உங்களுக்கு ஏதாவது குறை ஏற்படுமிடத்து தயங்காமல் என்னிடம் தெரிவியுங்கள்” எனக் கூறினான்.
நல்ல சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த பறங்கியத் தளபதி “மகாராசாவே! பகலெல்லாம் உணவின்றி நகருக்கு வந்து வர்த்தகம் செய்தவிட்டு இரவில் எங்கள் மரக்கலங்களுக்கு சென்று போசனஞ் செய்து நித்திரை கொள்கின்றோம். அது பெருங்கஷ்டமாகவே இருக்கின்றது. ஆதலால் நாம் கரையிலேயே ஒரு வீடு கட்டி அதிலிருந்து நகர்வந்து வர்த்தகம் செய்ய அனுமதி தரவேண்டும்” எனத் தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான்.
இவ்வேண்டுகோளைக் கேட்ட சங்கிலி தனது சந்தேகக் கண்களை தனது தளபதி மீது நாட்டினான். அவன் கண்களிலும் சஞ்சலம் நிறைந்திருப்பதைக் சங்கிலி கண்டான். இதனை அவதானித்த சபையிலிருந்த பரநிருபசிங்கன் “சங்கிலி என்ன யோசிக்கின்றாய்? அவர்கள் கேட்பது நியாயம் தானே! பாவம்! அவர்களுக்கு இந்தச் சிறு உதவியையாவது செய்யாவிடின் நாம் மனித இனம் என்பதை வெளியில் கூறமுடியாது. இதற்கு அனுமதியை வழங்கு” எனக் கூறினான்.
“இல்லை அண்ணா!...” எனத் தொடங்கிய சங்கிலியின் வார்த்தையை இடைமறித்த மந்திரி அப்பாமுதலி “அண்ணா சொல்வது சரி, சங்கிலி அவர்களுக்கு அனுமதி வழங்கு” எனக் கூறினார். வேறு வழியில்லாது முதன் மந்திரி தனிநாயக முதலியும் சங்கிலியை அனுமதி வழங்குமாறு கூறினார். சபையினரது ஆலோசனைக்கு ஏற்ப சங்கிலியும் பறங்கியினருக்கு மிருகங்கள் சஞ்சரிக்கும் அடர்ந்த காடாயிருந்த பண்ணைக் கடலுக்கு சமீபமான நிலப்பரப்பை வழங்கினான்.
மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்ற பறங்கிகள் காடாயிருந்த அப்பிரதேசத்தை துரிதமாக துப்பரவு செய்து, வீடு கட்டுவது என்ற போர்வையில் மண்ணாலான சிறு கோட்டை ஒன்றைக் கட்டினார்கள். காலப்போக்கில் அதைப் பலப்படுத்திக் கொண்டார்கள். கோட்டையின் பாதுகாப்பிற்காக பெரிய அகழிகளைத் தோண்டினார்கள். அத்துடன் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், போதியளவு சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவிலிருந்து படைவீரர்களையும் கடல் மார்க்கமாக வரவழைத்துக் கோட்டைக்குள் இருத்திக் கொண்டார்கள். இந்த நடவடிக்கைகள் சங்கிலிக்கு புலப்படாத வகையில் வழக்கம் போல நகருக்கு வந்து வர்த்தகம் செய்து வந்தார்கள்.
யாழ்ப்பாணம் எதிர்நோக்கியிருந்த பேரவலத்தை அறியாத சங்கிலி நிம்மதியாக யமுனா ஏரியின் அழகைப்பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனை நோக்கி வந்தது பேரழகு அதிர்ச்சி.
சாதிக்க வருவான்…
00000000000000000000000
பாகம் 17 வெண்புறா
நீலவான் நெடுமஞ்சத்தில் ஆடையற்ற நிலவுப் பெண் மோகாவேச போதையுடன் அழகாகப் படுத்துக்கிடந்தாள். அவ்வப்போது தன் குலைந்த தோற்றத்தைக் கண்டு நாணிக் கண்புதைத்து ஓடி வெண்முகில் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொள்கின்றாள். அவள் போர்வை கொள்ள மறுத்தாலும் அவளுடைய மூத்த சகோதரியான காற்றுப் பெண் அரக்கப் பறக்க ஓடிவந்து கருநிற முகில்களை இழுத்து அவளை மூடி உள்ளே அனுப்பி விடுகிறாள்.
ஒன்றின் துன்பத்தைக் கொண்டு இன்னொன்று இன்பம் அனுபவிப்பது நடைமுறைத்தத்துவம் அல்லவா? விரக வேதனையுறும் வெண்ணிலவின் காம ஒளியால் உலகம் ஓர் ஒப்பற்ற காட்சியைச்சாலையாக திகழ்ந்தது. எங்கும் அழகின் பூரிப்பு. இந்த இயற்கையைப் பருகிக் கொண்டு நின்ற சங்கிலி தனக்கு பக்கத்தில் ஓடிக்கொண்டிருந்த யமுனா ஏரியின் குளிர் நீரில் தன் கால்களை அலசிக் கொண்டான்.
இயற்கையின் இன்பப் பூரிப்பால் திளைத்திருந்த சங்கிலி திடீரென்று வீசிய சுகந்த வாசனையால் பெரிதும் கவரப்பட்டு அது என்னவாக இருக்கும் என அறிய ஆவலில் தலையைத் திருப்பியவன்.. திருப்பியபடி திகைத்து நின்றான். அவன் கண்களை அவனால் நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. அந்த அழகுச்சிலை மெதுவாக சங்கிலியை நெருங்கி வந்தது. இதனால் பெரிதும் சஞ்சலமடைந்த சங்கிலி “இவள் இங்கு எதற்கு வருகிறாள்? அன்று அரச சபையில் பார்த்ததை விட எத்தனை மடங்கு அழகாக இருக்கிறாள்” என நினைத்துக் கொண்டான்.
பக்கத்தில் வந்துவிட்ட அந்த பறங்கியப் பெண்ணை தீராத ஏக்கத்துடன் ஒருமுறை கண்களால் அளவெடுத்தான் சங்கிலி. வெளேரெனத் தெரிந்த அவள் கன்னப் பகுதிகளும் கழுத்தும் இருந்த வழவழப்பு சலவைக்கல்லுக்குக் கூட இராதென்று நினைத்தான். சிவந்த சிறு பூவைப் போலிருந்த உதடுகளில் தெரிந்த ஈரம் அவற்றுக்கு தனி மெருகைக் கொடுத்து தேனை உள்ளடக்க முடியாத மலரிதழ்களுக்கு உவமை காட்டியது. வெள்ளைக்காரியாதலால் அவள் கேசம் தங்கநிறம் பெற்றிருந்தது. கண்களும் இமைகளும் வெள்ளைக்கன்ன முகப்புகளில் படுத்துக்கிடந்தன. திண்ணிய மார்பும் இருபுறமும் உட்புறமாக வழித்துவிடப்பட்ட இடைப்பகுதியும் லேசாக எழுந்து பிறகு கீழ்ப்புறம் விர்ரென்று சரிந்து இறங்கிவிட்ட வயிறும் சற்றே அகன்று கிடந்த அழகுக் கால்களும் ஏதோ புதுத் தேவதை மண்ணில் இறங்கியதைப் போல அவளைக் காட்டியது.
தன்னை அங்குலம் அங்குலமாக ஆராய்ந்ததை ரசித்த வெள்ளைக்காரி பெரிதும் மகிழ்ந்து அவன் அருகில் வந்து தன் அழகுகள் அவன் மீது உராயும் வண்ணம் நெருங்கி நின்றாள். இதனால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி சிறு நிதானத்துடன் சற்று விலகி “தேவி இங்கு வந்திருக்கும் காரணம் யாதென அறியலாமா?” எனப் பெரும் சிரமத்தின் மத்தியில் வாயிலிருந்து சொற்களை உதிர்த்தான்.
“உன்னைப் பார்க்கத்தான்” என்ற வெள்ளைக்காரியின் உரையாடலில் கொஞ்சமும் மரியாதை இல்லாததை கவனித்த சங்கிலி உள்ளுக்குள் எழுந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு “என்ன விடயம் தேவி?”
“உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோண்றியது, அது தான்..” என அவன் உடலுடன் மீண்டும் உராய்ந்தாள்.
என்ன செய்வதென்றறியாத சங்கிலி உணர்ச்சிகள் கட்டுமீறிப் போவதை உணர்ந்து கொண்டதுடன் தன்னைச் சமாளித்துக் கொண்டு “ஏன் தேவி?” எனக் கேட்டான்.
அவன் தன்னை நிமிடத்துக்கு ஒரு தடவை ‘தேவி!’ என்றழைப்பதை விரும்பாத அவள் “நீ என்னைப் பெயர் சொல்லியே அழைக்கலாம்” என்றாள்.
“முன் பின் தெரியாதவர்களை எவ்வாறு பெயர் சொல்லி அழைக்க முடியும்?”
“பழகிக் கொள்”
“எனக்கு உன் பெயர் தெரியாதே” எனச் சங்கிலியும் மரியாதையைக் கைவிட்டான். சற்று யோசித்த அவள் “ஓ! உனக்கு என் பெயர் தெரியாதல்லவா?” எனக் கேட்டாள்.
“ஆம்”
“எலியானா”
“நல்ல பெயர்”
“நீ வேண்டுமானால் என்னை ‘எலி’ என சுருக்கியும் அழைக்கலாம்”
“ஹா ஹா! அவ்வாறு கூப்பிட்டால் நம்மூரில் அசிங்கமாகிவிடும்.” என நகைப்புக்கிடையில் கூறினான். அவன் ஏன் நகைக்கின்றான் என்பதை அறியாத எலியானா, அவன் தோள் மீது தன் இரு கைகளையும் போட்டாள்.
“இது முறையல்ல..” என்றான் சங்கிலி.
“எது?”
“இவ்வாறு ஆடவர் மேல் கை போடுவது”
“அதனாலென்ன?”
“இல்லை! நான் திருமணம் ஆனவன்”
“அதனால்…??” என குதர்க்கமாக பேசிய எலியானா “உன்னைப் போல் அழகனுக்கும் வீரனுக்கும் எங்களுரில் ஆயிரம் பெண்டாட்டிகள் இருப்பார்கள்” என்றாள்.
“இங்கு அவ்வாறில்லை”
“உன்னை என்ன ஆயிரம் பெண்ணையா திருமணம் செய்யச் சொன்னேன். என்னை மட்டும் தானே? அதுவும் திருமணம் அல்ல.. சில நாட்கள் என்னுடன் சந்தோஷமாக இரு. பிறகு நான் எங்கள் ஊர் சென்று விடுவேன்” எனக் கூறினாள்.
“தப்பு”
“எது?”
“அப்படிச் செய்வது”
“உங்கள் ஊர் அரசர்களும் அப்படித் தானே!”
“நான் அவ்வாறல்ல…” வடிவழகி மீது கொண்ட தீராத காதலே தன்னை இவ்வாறெல்லாம் பேச வைக்கின்றது என்பதை உணர்ந்த சங்கிலி “வடிவழகி மட்டும் இல்லையெனில், இப்பொழுது என்னவாயிருக்கும்” என்பதை நினைத்துச் சிரித்துக் கொண்டான்.
தனக்கு மசியாமல் தன்னுள்ளேயே சிரித்துக் கொள்ளும் சங்கிலியைக் கண்ட எலியானா ஆத்திரத்துடன் அவனை இறுக அணைத்துக் அவன் இதழ்களுடன் தன் பூவிதழைப் பதித்தாள். திடீரென நடைபெற்ற இந்நிகழ்ச்சியால் பெரிதும் கலவரமடைந்த சங்கிலி வெடுக்கென எலியானாவை பிடித்துத் தள்ளிவிட்டு அரண்மனை நோக்கிச் சென்றான்.
நிலத்தில் விழுந்த எலியானா “உன்னை அடையாமல் விடமாட்டேன்” என மனதில் கறுவிக்கொண்டாள். தன்னை வருங்காலத்தில் காப்பாற்றப் போகின்றவள் அவளென அறியாத சங்கிலி கோபத்துடன் அரண்மனை சென்ற போது அங்கு நண்பன் மாப்பாணன் ஒரு செய்தியுடன் காத்திருந்தான்.
சாதிக்க வருவான்…
0000000000000000000000000
பாகம் 18 சங்கிலியன் கோபம்
பெரிதும் சங்கடப்பட்டுக்கொண்டு கோட்டையினுள் நுழைந்த சங்கிலி தன்னை எதிர்பார்த்து தன் நண்பன் இருப்பதைக்கண்டதும் தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
“என்ன மாப்பாணா! திடீரென்று வந்து நிக்கின்றாய்? என்ன விடயம்?” என்றான்.
“ஒன்றுமில்லை… அரச பதவி ஏற்றது முதல் நீ என்னுடன் ஊர் சுற்ற வரவில்லை. இப்பொழுது நாட்டு நிலவரம் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல் சுமூகமாக இருக்கின்றது. வாவேன் நாங்கள் ஒருமுறை யாழ்ப்பாணத்தைச் சுற்றி வருவோம்” என ஆவலுடன் கேட்டான்.
தன் மனச்சஞ்சலங்களை தீர்ப்பதற்கு, அதை மறக்கடிப்பதற்கு இது ஒரு நல்ல ஏற்பாடு என்பதை அறிந்த சங்கிலி, அதற்கு உடன்பட்டான்.
முன்பனிக்காலத்து குளிர், உயிரினங்களின் நாடித்துடிப்புக்களையெல்லாம் மந்தப்படுத்தி நடுங்க வைத்துக்கொண்டிருந்தது. மரஞ்செடி கொடிகளின் இதய நரம்புகள் வரை பனியின் குளிரோட்டம் ஏறிவிட்டிருந்தபடியால் அவை அப்படியிப்படி அசையாமல் விறைத்துக்கிடந்தன. பனிக்காற்றிலுள்ள வரட்சித்தன்மை இலைக்கணுக்களிலிருந்த ஜீவரசத்தையெல்லாம் உறிஞ்சி, அவற்றை பழுத்து உதிரச்செய்து கொண்டிருந்தது. இமயமலைச் சிகரத்திலிருந்து இறங்கி ஓடிவந்தது போல் பனித்துளிகளைச் சுமந்த காற்று எங்கெங்கும் புகுந்து படிந்து எல்லாவற்றையும் ஈரமாக்கியது. அளவுக்கு மீறிய அந்தப் பனிக்குளிர் காற்றில் விறைத்துக்கொண்டு குதிரையில் தோழர்கள் யாழ் நகர் வலம் வந்தார்கள்.
குளிர்காலமாதலால் இருவருக்கும் ஓரளவு வசதியாகப் போய்விட்டது. வீதியோரங்களில் காவல் வீரர்களைத்தவிர பெரிதாக சனநடமாட்டம் இல்லை. இருவரையும் அடையாளம் கண்டு கொண்ட வீரர்கள் தெருக்களில் தலைதாழ்த்தி வணங்கினார்கள். தன் பக்கத்தில் நடுங்கியபடி குதிரையில் வந்துகொண்டிருந்த வீரமாப்பாணனைப் பார்த்த சங்கிலி “இனியாவது நீ எனக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கிறாயா பார்ப்போம்” என்றான். காலை நேரமாதலால் கோயில்களின் மணியோசையும், இசைப்புலவர்களின் பாட்டொலியும் யாழ் நகர் வீதிகள் தோறும் ஒலித்தன.
நீண்ட காலத்தின் பின்பு இவற்றையெல்லாம் ரசித்துக்கொண்டு வந்த சங்கிலி, யாழ் நகரிற்கு தெற்கே கடலோரம் வந்தபோது அவன் கண்களையே அவனால் நம்பமுடியவில்லை. சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு அருகில் வந்த நண்பனைப்பார்த்து,
“மாப்பாணா! தூரத்தில் ஒரு கோட்டை போல தென்படுகின்றதே, அது என்ன?” என வினவினான்.
நிமிர்ந்து வடிவாக அதை உற்று நோக்கிய மாப்பாணன் “சந்தேகமேயில்லை… அது கோட்டை தான்” என்றான் கலவரத்துடன்..
“கோட்டையா?....... என்னிடம் அனுமதி பெறாமல் யார் கட்டியது… ஒருவேளை அண்ணனாக இருக்குமோ?”
“இல்லையில்லை… அவர் கட்டியிருந்தால் நம் வீரர்கள் மூலம் எப்படியும் தகவல் வந்திருக்கும்”
“பின் யார் கட்டியிருப்பார்கள்… நம் ஒற்றர்கள் கூட சொல்லவில்லையே!”
“இது பறங்கிகளுக்காக நாம் அளித்த பிரதேசம் சங்கிலி” என்றான் மாப்பாணன். இதனால் ஐயமுற்ற சங்கிலி “வா! அவ்விடம் சென்று பார்ப்போம்” என நண்பனுடன் அவ்விடம் சென்றான்.
மேற்கத்தேயப் பாணியில் மிகவும் கலை நேர்த்தியுடன் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட அக்கோட்டையை வர வர வியப்புடன் பார்த்து வந்த இருவரையும் இரு வீரர்கள் வழிமறித்தனர். தங்களை வழிமறித்த பறங்கி வீரர்களை கண்டு பெரிதும் சினமடைந்த சங்கிலி “டேய்! உங்கள் தளபதியெங்கே? நான் அவனை உடனடியாகக் காண வேண்டும்” என இடிமுடிக்கம் போல சத்தமிட்டான்.
அவ்விடம் வந்த பறங்கியத் தளபதி பிரகன்ஸா “என்ன அரசே! ஆச்சரியமாக இருக்கின்றதா? இது நாம் கட்டிய சிறிய வீடு. நீங்கள் வருவீர்களென்று தெரிந்திருந்தால் தாரை தப்பட்டைகளுடன் தடபுடலாக அழைத்திருப்போமே” என இகழ்ச்சியுடன் கூறினான்.
“என்ன காரியம் செய்தாய் பிரகன்ஸா? உனக்கு கோட்டை கட்ட யார் அனுமதியளித்தது” என கண்கள் தீயென சிவக்க சங்கிலி கேட்டான்.
சிறுதும் பயப்படாமல் “நீயே தந்தாய்….” எனப் பறங்கியத் தளபதி கூறினான்.
“நானா?...”
“ஆம்”
பறங்கியரின் நோக்கத்தை புரிந்து கொண்ட சங்கிலி, “அடேய், அயோக்கியப் பயலுகளே! இப்போதே கோட்டையை இடித்துவிட்டு மரக்கலமேறி உங்கள் ஊருக்கு செல்லுங்கள்” என ஆணையிட்டான்.
அவன் ஆணையைக் கேட்ட பிரகன்ஸா பெரிதாக நகைத்து “நாம் இடிக்கப் போவதில்லை, முடிந்தால் நீ இடித்துப் பார்” எனச் சவாலிட்டான். இதனால் வெகுண்ட சங்கிலி
“உன் கபடத்தை நானறிவேன். முடிந்தால் உன்னைக் காப்பாற்றிப் பார்” என வீராவேசமாகக் கத்திவிட்டு தன் நல்லூர்க் கோட்டையை வந்தடைந்தான். அவசர அவசரமாகச் சபையைக் கூட்டி நடந்ததை விளக்கினான். அத்துடன் கோபம் கொப்பளிக்க பரநிருபசிங்கனைப் பார்த்து “பார்த்தாயா உன் யோசனையை? நம் நாட்டின் பாதுகாப்பிற்கே பெரிய பங்கம் ஏற்பட்டு விட்டது. இப்பொழுது வேறு வழியில்லை, படையைத் திரட்டுவதைத் தவிர” என்றான். கூடவே தளபதிக்கு யுத்தத்திற்கு தயாராகவும் ஆணையிட்டான்.
இதனை ஏற்றுக் கொண்ட யாழ் தளபதி இமையாணன், அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கலானான். நடக்கவிருக்கும் போரையும், அதனால் ஏற்படப்போகும் அழிவுகளையும் நினைத்துப் பார்த்த சங்கிலி பெரிதும் கவலையுற்றவனாய் தன் சயன அறை நோக்கிச் சென்றான். அங்கு அவனது சினத்தை கூட்டக்கூடியதான ஒரு நிகழ்ச்சி காத்திருந்தது.
சாதிக்க வருவான்…
000000000000000000000000000000
பாகம் 19 சிக்கல் சந்திப்பு
கார் காலத்து கருமேகங்கள் சூழ் கொண்ட இளம்பெண்ணைப் போல் வான வெளியில் மெல்ல மெல்ல நீந்திச் சென்று கொண்டிருந்தன. வானின் பசுமை ஒளியைக் கரு முகிற் படலம் மறைத்துவிட்டிருந்ததால் அந்தக் குளிர்ந்த மாலை நேரம் தன் வனப்பை இழந்து வெளிறிக் காணப்பட்டது. மழை மஞ்சுக் கூட்டங்களின் மேல் புரண்டு வந்த காற்று, சங்கிலியின் அழகிய கோட்டையைத் தழுவிச் சென்றது. சிந்தனை என்னும் செந்தழலில் வெந்து தீய்ந்து கொண்டிருந்த சங்கிலி அந்த வேக்காட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள தன் பள்ளியறை சென்றான்.
கதவினைத் திறந்த சங்கிலிக்கு கட்டிலில் இருந்த அழகைக் கண்டவுடன் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. விறு விறுவென அதனை நோக்கிச் சென்ற அவன்,
“நீ எப்படி இங்கு வந்தாய்?” என வினவினான்.
“ஏன் வரக் கூடாதா? என அவ்வழகு வினவியது.
“எலியானா! என்னுடன் விளையாடாதே. உன்னை இங்கு வர யார் அனுமதித்தது?”
“யார் அனுமதிக்க வேண்டும்?”
“காவல் பலமாகவிருக்கின்றதே!”
“அதனாலென்ன…”
“உன்னை ஒருவரும் தடை செய்யவில்லையா?”
“பல பேர் என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே அசடு வழிந்து விட்டு விட்டார்கள். விசாரிக்க நினைத் ஒரு சிலரையும் தங்க நாணயங்கள் கொண்டு மயக்கி விட்டேன்” என அவனைப் பார்த்து மோகனப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
“நீ நினைப்பதைப் போல் என்னை இலகுவில் மயக்கிவிட முடியாது” என்றான் சங்கிலி.
“அதையும் பார்ப்போமே!” என்று இளக்காரமாகச் சொன்னால் எலியானா.
“ஏன் கால் கடுக்க நிற்கின்றீர்கள். இப்படி அமருங்கள்.” என தான் சற்றுத் தள்ளி பஞ்சணையில் சங்கிலி அமர்வதற்கென ஒரு இடத்தை ஒதுக்கிக் கொடுத்தாள். அதில் உட்காராமல் சங்கிலி நின்றதைப் பார்த்ததும் “பரவாயில்லை, நானும் எழுந்து நிற்கின்றேன்” என எழுந்து சங்கிலியின் கையைப் பற்றினாள். அவ்வாறே அவனையும் இழுத்து மஞ்சத்தில் விழுத்திவிட்டு அவர் மார்மேல் படுத்தாள். அவள் இன்பங்கள் தன்மீது பட்டதால் சங்கிலி பெரிதும் சஞ்சலமடைந்தான். ஆனாலும் அவளைத் தள்ளிவிட அவன் கைகள் எழவில்லை. மாவீரனான சங்கிலிக்கு எலியானாவைத் தள்ளுவது பெரிய வேலையா என்ன! ஆனால் அவன் இருந்த நிலைமையில் அவனால் முடியவில்லை. இதனை அவதானித்த எலியானா சங்கிலியின் மனது சஞ்சலமடைவதை உணர்ந்ததால் மெல்ல எழுந்து தனது ஆடைகளை களைய ஆயத்தமானாள். இந்த நேரத்தில் சுதாகரித்துக் கொண்ட சங்கிலி
“உனக்கென்ன பைத்தியமா?” எனக் கூவினான்.
அவனது அதட்டலான வார்த்தையினால் தான் செய்ய எண்ணிய செயலை நிறுத்தினாலும், அந்தக் குரல் அவள் மந்தகாசத்தை அதிகமாக முகத்தில் பரவவிட்டன. அவள் கண்கள் சிரித்தன. அவனை உற்று நோக்கி உதடுகள் உரைத்தன “யாருக்கும் பைத்தியமில்லை”
சங்கிலி அவளை சுட்டுவிடுபவன் போலப் பார்த்தான்.
“உன்னைத் தவிர வேறு யாருக்கும் பைத்தியமில்லை” என்று சீறினான்.
“தவறு காதலரே தவறு” என்றாள்.
“என்னை அப்படி அழைக்காதே”
“எப்படி?”
“இப்போது அழைத்தாயே, அப்படி”
“எப்படி அழைத்தேன்”
“அது தான் காதலரே என்று….” அவன் வார்த்தையை சொல்ல முடியாமல் தத்தளித்தான்.
அவளின் நீள விழிகள் அவனை மீண்டும் நிமிர்ந்து நோக்கின “ஒரு சொல்லைச் சொல்ல இத்தனை பயமா?” என்று வினாவினாள்.
“பயமொன்றுமில்லை”
“இருக்கின்றது”
“என்ன காரணம்?”
“நான் உங்களைக் காதலிக்கும் அளவிற்கு நீங்களும் என்னைக் காதலிக்கின்றீர்கள்”
“இல்லை… பொய்…. பொய்”
“உங்கள் மனதைக் கேட்டுப் பாருங்கள்”
“இல்லை, முடியாது” பலமுறை கூவினான்.
“நான் வடிவழகியாக இருந்தால்….” இந்த வார்த்தையால் நிதானத்திற்கு வந்த சங்கிலி “இந்தப் பெயர் உனக்கெப்படித் தெரியும்?”
“விசாரித்தேன்”
“யாரிடம்?”
“பலரிடம்”
“ஏன்?”
“ஒரு ஆடவனிடம் தானாக வலிய வந்து ஒரு பெண், அதுவும் அழகான பெண்… தன்னைக் கொடுக்கும் போது… வேண்டாம்… என்று கூறுகிறானெனில் அவன் வேறு யார் மீதோ தீராத காதலில் இருக்கின்றான் என்று அர்த்தம். இந்த வீரன் யாரைக் காதலிக்கின்றான் என்று அறியும் ஆவலுடனேயே நான் விசாரித்தேன்”
“உனக்கென்ன அக்கறை?”
“எனக்கு நீ வேண்டும்”
“அது தான் இப்போது உனக்கு புரிந்து விட்டதே. என் மனம் யாரிடமென்று… வீணாக முரண்டு பிடிக்காமல் சென்று விடு” என்று சங்கிலி கூறினான்.
“முடியாது”
“அப்படியெனில் பைத்தியமாக அலை” என ஆவேசமாகக் கூறிக்கொண்டு வெளியேற முற்பட்டான். சிறிது தூரம் சென்றதும் மீண்டும் திரும்பி எலியானா நோக்கி வந்தான். இதனால் பெரிதும் சந்தோஷமடைந்த எலியானா “இப்போதாவது என் அருமை புரிந்ததா” எனக் கேட்டாள்.
“நான் உன்னைத் தேடி வரவில்லை. உன்னை எச்சரித்துப் போகலாமென்று வந்தேன். இதோ பார்! எலியானா, உன் காதலன் எனக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டான். அவனை நான் இனி மன்னிப்பதாக இல்லை. ஆதலால் அவன் அழிவு நெருங்கிவிட்டது. எனவே உன்னை நான் எச்சரிக்கின்றேன். அவர்களிடமிருந்து வீணாக நீயும் மாண்டு விடாதே! அவர்ளை விட்டும், இவ்விடத்தை விட்டும் நீ சீக்கிரம் உன் ஊர் போய்ச் சேர்” எனக் கூறினான்.
“என் மீது உங்களுக்கு என்ன அக்கறை?” அவள் கேள்வியில் மரியாதையும், கனிவும், ஆதங்கமும் நிறைந்திருந்தது. அவள் கண்கள் பனித்திருந்தன. இதனைக் கண்ணுற்ற சங்கிலி ‘இனியும் தாமதித்தால் என் மனம் மாறிவிடும்’ என நினைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான். சிறிது நாட்களின் பின் தளபதி இமையாணன் தலைமையில் சங்கிலியின் படை போருக்கு தயாராகி நின்றது.
சாதிக்க வருவான்.
00000000000000000000000
பாகம் 20 போர் ஆரம்பம்
முதுவேனிற் காலத்து புழுக்கம் மரஞ்செடி கொடிகளையெல்லாம் ஆடாமல் அசையாமல் அப்படியே சித்திரங்களாக அமைத்து வைத்திருந்தது. அவற்றின் முற்றிய கிளைகளிலும் நாரேறிய கொடிகளிலும் மலர்கள் குறைவாகவும் காய் கனிகள் மிகுதியாகவும் பலவித வண்ணங்களில் தொங்கிக் கொண்டிருந்தன. அவற்றிடையே கொழுந்துளிர்களே இல்லாமல் கரும் பச்சை நிறமான முதிர்ந்த இலைகள் மலிந்து அடர்த்தியாக மண்டிக் கிடந்தன. மலரும் காலம் போய் கனியும் காலம் வந்துவிட்டதால் வண்டுகளும் தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும் மலரற்ற மரஞ்செடிகளைச் சுற்றிச் சுற்றி வந்து சோக கீதம் இசைத்துக் கொண்டிருந்தன இதற்கு மாறாக பழந்தின்னி பட்சிகளும் அழகிய அணிற்பிள்ளைகளும் மகிழ்ச்சிக் குரலெழுப்பிக் கனிகளை தாங்கிய கிளைகளையும் கொப்புகளையும் வலம் வந்து கொண்டிருந்தன.
சட்டநாதர் கோவிலுதும் வீரமாகாளி அம்மன் கோயிலதும் அருட் கடாட்சத்தை மனதில் நினைத்து அத்தெய்வங்கள் மீது பாரத்தை போட்டுவிட்டு தளபதி இமையாணனுடன் படை அணி வகுப்பை பார்க்க சங்கிலி சென்றான்.
“என்ன இமையாணா! நம்படை மிகுந்த திடத்துடன் இருக்கின்றதா?”
“ஆம் அரசே!”
“பறங்கிகள் துப்பாக்கியின் துணை கொண்டு போரிடுவார்கள். எமக்கு அந்த வசதி இல்லை. அதனால் எச்சரிக்கையுடன் நாம் போரிடாது விட்டால் நமக்கு இழப்பு அதிகமாகும் தளபதியாரே”
“அதற்கேற்றது போலவே நம் படையையும் அணிவகுத்துள்ளேன். குறிபார்த்து கவண்கல் வீசும் வீரர்களையும் எரியம்புகளை வீசுபவர்களையும் படையின் முன்புறத்தில் நிறுத்தியுள்ளேன். காலாட் படைகளையும் குதிரைப்படைகளையும் அணிவகுப்பின் பின்புறத்தே நிறுத்தியுள்ளேன். அத்துடன் போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கு தேவையான உணவையும் யானைகளிலேற்றி படையின் இறுதியில் நிறுத்தியுள்ளேன”;.
“அப்படியா! மிக்க சந்தோஷம். நான் வீரர்களைச் சென்று சந்திக்க வேண்டும். அவர்களை மனதளவில் திடப்படுத்த வேண்டும்” என்றான் சங்கிலி.
“அவ்வாறே செய்யலாம்” எனக் கூறிய இமையாணன் சங்கிலியை வீரர்களின் பாசறைக்கு அழைத்துச் சென்றான்.
நடக்கவிருக்கின்ற போரின் விளைவுகளை அறியாத சங்கிலியின் வீரர்கள் குடித்தும் கும்மாளமிட்டும் மிகவும் மகிழ்ச்சியுடன் தமது கூடாரங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் காணப்பட்டனர். சங்கிலியின் வருகையை அறிவிக்கும் தாரைகள் ஊதப்பட்டதால் தங்கள் நிதானத்திற்கு வந்த வீரர்கள் அமைதியாக நின்றார்கள். களமுனைத் தளபதிகளை சந்தித்து ஆலோசனை கூறிய சங்கிலி வீரர்களுடனும் சிரித்துப்பேசி நடக்கவிருக்கும் போர் பற்றிய சிறு விளக்கத்தையும் கொடுத்து அவர்களைத் திடப்படுத்தினான். பின் அங்கிருந்து புறப்படும் போது “நாளை உதயத்தில் பறங்கிகளோடு யுத்தத்திற்கு ஆயத்தமாகவிருக்கும் படி” கூறிவிட்டு கோட்டைக்குத் திரும்பினான்.
மறுநாட்காலை எழுந்து நீராடி வீரமாகாளி அம்மனை வழிபட்டு போருக்கான கவசங்களையும் புனைந்து கொண்டு தன் நீண்ட வாளை ஒருமுறை கூர்பார்த்து இடையில் கட்டிக்கொண்டு கோட்டையிலுள்ள அம்பிகையை வழிபடச்சென்றான். அங்கு ஏற்கனவே ஆயத்தமாக சங்கிலியனுக்காக பூஜை முடிந்த பின் மங்கல ஆராத்தியுடன் நின்ற இராசமாதேவி அவனை வரவேற்று நெற்றியில் வீரத்திலகம் இட்டாள். அங்கிருந்து புறப்பட்ட சங்கிலி கோட்டை வாயிலுக்கு வந்து, அலங்கரிக்கப்பட்ட நிலையில் தயாராகவிருந்த தன் குதிரை பஞ்ச கல்யாணியில் ஏறி படையணிவகுப்பைப் பார்த்தான்.
கடலென ஆர்ப்பரித்து நின்ற அப்படையணி “சங்கிலி வாழ்க!, சங்கிலிக்கே வெற்றி!” போன்ற கோஷங்களை பெரிதாக எழுப்பினர். படையணிவகுப்பின் முகப்பில் வீரமாப்பாணனும் இமையாணனும் பூரண போர்க்கவசமணிந்து வீராப்புடன் நின்றிருந்தனர். சங்கிலி படையணி புறப்படுவதற்கு அறிகுறியாக தனது வாளை வானை நோக்கி உயர்த்தி இருமுறை ஆட்டினான். கோட்டை மீதிருந்த டமாரங்கள் சப்தித்தன. சங்குகள் முழங்கின. வீரர்களின் ஜயகோஷத்துடன் படை நகர்ந்தது. வீதிகளெங்கும் திரண்டிருந்த மக்கள் மலர் தூவி ஆசீர்வதித்தனர். மாட மாளிகைகளில் ஏறிநின்ற பெண்கள் மலர் மாரி தூவினார்கள். இவ்வாறு புறப்பட்ட சங்கிலியின் படை வீரமாகாளி அம்மன் கோயில் மேலை வெளியிலே கடல் போலப் பரப்பி நின்றனர். அணி வகுப்பின் முகப்பில் மிதுனக் கொடி (யாழைக் கையிலேந்திய சயமகட் கொடி, சங்கிலி மன்னன் வரை யாழ்ப்பாணக் கொடியாகவிருந்தது) கம்பீரமாகப் பறந்தது. பறங்கிகளது சேனையும் துப்பாக்கி வீரர்களை முன்னிறுத்தி சங்கிலி வீரர்களை எதிர்கொள்ள தயாராகவே நின்றது.
போர் ஆரம்பமாகியது. துப்பாக்கி ரவைகளின் தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்வதற்காக நிலத்தில் படுத்த சங்கிலி வீரர்கள், அவர்கள் ரவைகளை ஒவ்வொன்றாக மாற்றும் போது எழுந்து கவண்கல்லையும் எரியம்புகளையும் வீசினார்கள். இதனால் நிலைகுலைந்த பறங்கியர்களிள் நிதானமாக போரிட்டனர். இருபக்கங்களிலும் நிறையப் பேர் காயமுற்றனர். சில வீரர்கள் மாண்டார்கள். படையணியின் முன்னிலையில் சங்கிலி நின்று வழிப்படுத்தினான். இதனால் இமையாணனும் வீரமாப்பாணனும் அரசனின் பாதுகாப்பிற்காக முன்னிலையில் வரவேண்டியதாயிற்று. முக்கிய தலைவர்களின் உற்சாகத்தால் சங்கிலி படை வீரர்கள் ஆவேசமாகப் போரிட்டார்கள். முதன் நாட் போரில் வெற்றி தோல்வி காணும் முன் சூரியன் அஸ்தமனமாயிற்று. இதனால் இறந்த வீரர்களின் சடலங்களுடன் இருபக்க வீரர்களும் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினார்கள்.
இரண்டாம் நாளும் இவ்வாறே போர் நடந்தது. இருபக்க வீரர்களும் சளைக்காது போரிட்டார்கள். பறங்கிகள் தமது துப்பாக்கிகளை இலக்கு நீட்டிப் பார்க்க ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ஒவ்வொருவராய் நின்று சங்கிலி வீரர்கள்திரிவாய்க்கு நெருப்பு வைக்க அவற்றில் சில பற்றியும், இலக்குத்தப்பியும், சில பற்றாமலும் பொய்த்தன. இந்த விசித்திர போராட்டத்தை தடுப்பதற்கு உபாயத்தை அறியாத பறங்கி வீரர்கள் திகைத்து நின்றனர். முதன் நாள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு சிறிது பயந்த சங்கிலி வீரர்கள் மறுநாள் மிக்க தைரியத்துடனும் ஊக்கத்துடனும் போரிட்டனா. இதற்கிடையில் அம்புகளும், கவண்கல்லும் எறியாயுதங்களும், நஞ்சூட்டிய ஈட்டிகளும், அம்புகளும், வளை தடியென்னுஞ் சக்கரங்களும் சங்கிலி படையிலிருந்து பறந்து சென்றன. இரு பகுதியிலும் அநேகர் மாண்டனர். ஆனாலும் போர் ஒரு முடிவுக்;காகத் தொடர்ந்தும் நடந்தது. அவ்வளவிற் சூரியனும் மேல் கடல் வாயடைந்தான். சேனைகளும் தத்தம் உறைவிடஞ் சென்றனர்.
இப்படியே பத்து நாட்கள் யுத்தம் நடந்த போதும் ஒரு முடிவும் கிட்டவில்லை. இதனால் இருபக்க தலைவர்களும் பெரிதும் சலிப்பிற்கும், வாட்டத்திற்கும் உள்ளானார்கள். இறுதி முடிவுக்காக மறுநாளும் போர்க்களம் செல்லத் தீர்மானித்தார்கள்.
சாதிக்க வருவான்.
நன்றி : http://sankili.blogspot.fr/2010_06_01_archive.html
Comments
Post a Comment