மாவீரன் சங்கிலியன் சரித்திர தொடர் 04--வரலாறு-பாகம்21-30-இறுதி பாகம்.


பாகம் 21 முடிவை நோக்கி 


பத்து நாள் இடை விடாத போரால் களைத்து, நாளையும் போர் முனை செல்ல வேண்டுமென நினைத்த பறங்கி வீரரில் மூவர் தமது பாசறையிலிருந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

'அப்பப்பா! எத்தனை போர்களை கண்டிருக்கின்றேன். எந்தப் போரும் இவ்வளவு நாட்கள் நீடித்ததில்லையே! பல இடங்களில் தாக்குப் பிடிக்க முடியாது நாங்களே பின் வாங்கியிருக்கின்றோம். ஆனால் தளபதி சளைக்காமல் போராடச் சொல்கிறாரே" என்றான் உலோப்பே.

'ஆம், அன்று சங்கிலி தன்னிடம் சவால் விட்டதைக் கண்டு மிகவும் மனம் வெகுண்டிருக்கின்றார் தளபதி. சங்கிலியைத் தோற்கடித்தே தீருவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்" என்றான் மிக்கேல்.
'எனக்கென்னமோ, இந்தப் போரில் நாங்கள் வெற்றி பெறுவோமென்று தோன்றவே இல்லை. ஆகா! அந்தத் தமிழ்த் தளபதி இருக்கின்றர்னே! என்ன மாதிரிப் போராடுகின்றான். எவ்வளவு சிறப்பாக படையை வழிநடத்துகின்றான். நம் தளபதி அவனிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது" என சூசை கூறினான். இதனால் மூவரும் பெரிதாக நகைத்தனர்.

வெளிநாட்டு மதுவை உறிஞ்சிக் கொண்டிருந்த மூவரில் போதையின் உச்சத்திலிருந்த உலோப்பே 'எங்களுக்கு மட்டும் வெற்றி கிடைக்கட்டும், யாழ் மண்ணை எவ்வாறு கொள்ளையடிக்கின்றேனென இருந்து பார்" என்றான்.

'ஆம், ஒரு கன்னிப் பெண்களையும் விடுவதில்லை. அவர்கள் தான் எத்தனை அழகு" என சிலாகித்தான் இன்னொருவன்.
'போன தடவை திருகோணமலையில் நடந்த போரின் பின்னரான கொள்ளையடித்தலில், நான் ஒரு கோயிலுக்குச் சென்றேன். அப்பாடா! என்ன நகைகள், தங்கம், வெள்ளி, இரத்தினங்களென கொட்டிக் கிடந்தது. அதை நான் எடுக்க முன் தளபதி அள்ளிச் சென்று விட்டான்" என சினந்தான் சூசை.

இவர்கள் இடத்திற்கு தளபதி பிரகன்ஸாவும், கோட்டைத் தலைவன் தொன்பிலிப்பும் வந்தனர். ஆதலால் தங்கள் சம்பாசனையை மூவரும் நிறுத்திக் கொண்டனர்.

"என்ன இரண்டாம் நிலைத் தளபதிகளே! மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கின்றதே, நாளை நமக்குத் தான் வெற்றி. பயப்பட வேண்டாம். நன்றாக மது அருந்துங்கள்" என்றான் தொன்பிலிப்பு.

'அட! நீங்க வேற, நாளை மது அருந்துவதற்கு நாங்கள் இருப்போமோ தெரியாது. அது தான் இன்று நன்றாக அருந்துகின்றோம்" என்ற உலோப்பையை சுடும் விழிகளால் பிரகன்ஸா பார்த்தான்.

'ஏன் அப்படிக் கூறுகின்றாய்?"

'அவர்கள் என்ன மாதிரிப் போரிடுகிறார்களென்று பார்த்தீர்கள் தானே! அவர்கள் பலத்திற்கு முன்னால் எங்கள் துப்பாக்கிகள் எல்லாம் வெத்து வேட்டுக்கள்."

'நாம் இப்போரில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். குறைந்த பட்சம் சங்கிலியையாவது பிடிக்க வேண்டும்."
'அது முடியுமா? பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள் தானே! சிறிதாவது அஞ்சுகிறானா சங்கிலி. படையின் முகப்பில் நிற்கின்றார். ஆனால் அவன் சுண்டு விரலைக்கூட எங்களால் நெருங்க முடியாதுள்ளது. ஆகா! அவன் குதிரை தான் எத்தனை அற்புதம். மின்னல் போல அங்குமிங்கும் தோண்றுகின்றதே. அது தான் எத்தனை அழகு!" என்றான் மிக்கேல்.

'எது எவ்வாறு இருந்தாலும் நாளை சங்கிலி பிடிபட்டே தீருவான். அஞ்சாதீர்கள் வெற்றி நமக்குத் தான்" எனக் கூறிவிட்டு பிரகன்ஸா கோட்டைத் தலைவனுடன் வெளியேறினான்.

மறுபுறம் சங்கிலி, பாசறையில் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடலில் இருந்தான். 'என்ன அற்புதமாக பறங்கிகள் போராடுகின்றார்கள். இதல்லவா வீரனுக்குச் சவால். போராடுவதற்கு எவ்வளவு சீரமப்பட வேண்டியுள்ளது. உண்மை வீரர்கள் அவர்கள் தான்." என்று எதிரி வீரர்களின் திறன் பற்றி தனது கருத்துக்களை சங்கிலி கூறினான். 

'பிரபு! நாங்கள் இப்போரில் வீரத்தை விட விவேகத்தையே பயன்படுத்துவது மிகச் சிறந்தது. படையளவில் எங்கள் படை பெரிதானாலும், அவர்கள் குண்டுகளை சமாளிக்க முடியாது இதனால் புத்தியை மிகவும் கூர்மையாக்கி போரிட வேண்டும். அதற்கு ஏற்றால் போல் வீரர்களை தயார் படுத்த வேண்டும்." என்றான் தளபதி இமையாணன்.

'தளபதியே! நீர் இருக்கும் போது எனக்கென்ன கவலை, நிச்சயம் இந்தப் போரில் வெற்றி பெறுவோம்" என்றான் சங்கிலி.

அங்கு அரண்மையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும்...
'போரிற்குச் சென்று பத்து நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் களமுனையிலிருந்து எதுவித தகவலும் வரவில்லையே. என்ன நடக்கின்றதோ" என பயத்தால் படபடத்தாள் தேவி.
'தேவி! இப்பொழுது தான் வீரமாகாளியம்மன் கோயில் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை இத்தாம்பாளத்தில் கொண்டு வந்து என்னிடம் தந்து விட்டுப் போகின்றார். அம்மனுக்கு முன் பூஜையில் நீங்கள் வைக்கும்படி கூறிய பூக்கட்டுக்கள் இத்தொன்னையில் இருக்கின்றன. கற்பூரம் கொழுத்துகின்றேன். இதில் ஒரு பூக்கட்டை எடுங்கள், பார்ப்போம்" என்றாள்.வீரமாகாளியை மனதால் வழிபட்ட மாதேவி மிகுந்த பயத்துடனும், பக்தியுடனும் ஒரு பூக்கட்டை எடுத்தாள்.

'தோழி! இக்கட்டை அவிழ்க்க எனக்குப் பயமாக இருக்கின்றது. நீதான் அவிழ்த்து அதற்குள் என்ன நிறப் பூ இருக்கின்றது என்று பார். வெள்ளைப் பூவாயின் எங்களுக்கு வெற்றி" எனக் கூறினாள்.

பூக்கட்டுக்களை வாங்கிய அங்கயக்கன்னி மெதுவாக அவற்றை அவிழ்க்கின்றாள். அவள் முகம் மலர்கின்றது. 'தேவி! இதோ பாரங்கள் நீங்கள் நினைத்த வெள்ளைப்பூவே வந்துள்ளது. வீரமாகாளி எங்களை கைவிடாள்" எனக் கூறினாள்.

'முன்பே நான் கூறவில்லையா?, எல்லாம் அம்மன் அருள் தான்"
'இனியாவது அரசரை நினைத்து கலங்குவதை விட்டு விடுங்கள். எமக்கே வெற்றியென பூக்கட்டும் காட்டி விட்டது. அரசரின் ஆண்மையின், போர் வன்மையும் உங்களுக்கு தெரிந்த விடயம் தானே!"

'ஆம், போரில் தான் அவருக்கு சமனானவர் எவருமில்லையே!"

இப்படியாக பலரின் எதிர்பார்ப்புக்களுக்கிடையே முடிவை நோக்கிய போருக்காக மறுநாள் பொழுதும் விடிந்தது... 

சாதிக்க வருவான்....

0000000000000000000000000000

பாகம் 22 பதினோராம் நாள் போர்


பதினொராம் நாட்போரில் கிடைக்கவிருக்கும் முடிவை அறிய பகலவனும் கீழ்த்திசையில் ஆவலுடன் உதித்தான். போருக்காக, சங்கிலி படையில் கடுங்காயமுற்றவர்கள் ஓய்வெடுத்தார்கள். சிறு காயங்களுக்கு உள்ளானவர்கள் போர்க்களத்திற்கு வர சிறு பிள்ளை போல அடம்பிடித்தார்கள். இதனைக் கண்ணுற்ற சங்கிலி பெரிதும் வியந்தான். ஆனந்தக் கண்ணீர் வடித்தான்.

தன் படை வீரரில் சிறந்த நானூறு பேரைத் தெரிவு செய்து அவர்களை படையணிவகுப்பின் முன் நிறுத்தி, அவர்களை தானே முன்னின்று வழி நடத்திச் சென்றான். எஞ்சியவர்களை தளபதி இமையாணன் வழிநடத்திச் சென்றான். சங்கிலி படையில், பரநிருபசிங்கனும் சில மந்திரிகளும் போரில் எதுவித சிரத்தையையும் காட்டாததை அவதானித்த சங்கிலி,
“ஏன் அண்ணா! போர் உங்களுக்கு பிடிக்கவில்லை போலிருக்கின்றதே” என்றான். அவன் இகழ்ச்சிச் சொற்களை பரநிருபசிங்கன் அவதானித்தாலும்
“பறங்கியர்களது யுத்த முறை புதிதாக இருக்கின்றது. அதனால் திகைத்து விட்டேன்” என்றான்.

“உங்கள் வீரத்திறன் நன்றாக இருக்கின்றதே, இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமில்லையா?” என்று கேட்டான். அத்துடன் “இனி எதற்கும் அஞ்சாதீர்கள். எல்லாவற்றுக்கும் நானிருக்கின்றேன். போரை தைரியத்துடன் எதிர் கொள்ளுங்கள். எம் வீரர்களையும் உற்சாகப்படுத்துங்கள்” என்று கூறிச் சென்றான்.

பதினொராம் நாள் போரும் ஆரம்பித்தது. பறங்கிகள் தம் போர் முறையை மாற்றினார்கள். இனி துப்பாக்கிக் குண்டுகள் பயனில்லை எனத் தெரிந்ததும், வாட்போருக்கு ஆயத்தமாகி நின்றார்கள். சிறப்பாக வாள், வில் போர்களுக்கு பயிற்சி பெற்ற சங்கிலி வீரர்களுக்கு இது வசதியாகப் போய்விட்டது. சங்கிலி ஒரு சிறுபடையுடன் பறங்கிகள் படையை ஊடறுத்துச் சென்று அவர்கள் பகுதியில் நின்று போரிட்டான். அவன் துணிச்சலைக் கண்ட பலரும் வியந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பல பறங்கி வீரர்கள் தலைகள் தரையில் உருண்டன. சங்கிலியின் நீண்ட வாள் இரத்தத்தில் தோய்ந்திருந்தது. சங்கிலி படைக்குள் ஊடுறுவ எத்தணித்த பறங்கி வீரர்களை இமையாணன் தலைமையிலான படை வழிமறித்துத் தாக்கியது. இதிலும் பல பறங்கி வீரர்கள் மாண்டார்கள்.

இந்த நேரத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஈட்டியொன்று சங்கிலியின் வலது தோற்பட்டையில் தைத்தது. அதனை இலகுவாகப் பிடிங்கி எறிந்து விட்டு வாளை இடது கைக்கு மாற்றிப் போரிட்டான். வலது கையிலிருந்து வெளியேறிய குருதியால் களைப்புற்று மயக்கமாகிய சங்கிலி குதிரையில் சாய்ந்தான். நன்றாக பழக்கப்பட்டிருந்த சங்கிலியின் குதிரையான பஞ்சகல்யாணி அவனைப் பத்திரமாகப் படை மத்தியில் இருந்து பாதுகாப்பாக அவனது பாசறைக்கு கொண்டு வந்து சேர்த்தது. அங்கு வைத்தியர்கள் சங்கிலிக்கு பச்சிலை வைத்துக் கட்டுப்போட்டார்கள்.

சங்கிலி இல்லாத படையின் வழி நடத்தும் பொறுப்பை, இமையாணன் முற்றாக எடுத்துக் கொண்டான். வீரமாப்பாணனும் அவனுக்கு உதவி புரிந்தான். சங்கிலி படைவீரர்கள் புலியெனப் பாய்ந்து பறங்கி படைவீரர்களை வெட்டிச் சாய்த்தனர். இதனால் பயந்த பறங்கியர்கள், இனி போரிடுவதில் பயனில்லையென அறிந்து பின்வாங்க முற்பட்டனர். அச்சமயம் தரங்கம் பாடியிலிருந்து பறங்கிகளுக்கு துணைப்படையொன்று வந்து சேர்ந்தது. அதனால் உற்சாகமடைந்த பறங்கி வீரர்கள் போர்களத்திற்கு பக்கத்தே இருமருங்கும் உள்ள காடுகளில் மறைந்திருந்து துப்பாக்கியால் சரமாரியாக குண்டுகளைப் பொழிந்தனர். இதனை சற்றும் எதிர்பாராத சங்கிலி படை முதலில் திணறினாலும் பின்னர் சமாளித்துக் கொண்டு போரிட்டனர். அதுவும் சங்கிலி முழுப்பலத்துடன் போர்க்களத்திற்கு திரும்பி வந்ததைக் கண்டதும் உற்சாகமானார்கள். இரு மருங்கும் மறைந்திருந்து போரிட்ட வீரர்களை நோக்கி கவண்கல்லை மழையாக பொழிந்தனர். இதனால் திணறிய பறங்கி வீரர்கள் சுதாகரிப்பதற்குள் அவர்களை வெட்டிச் சாய்த்தனர்.

இதேசமயம் போர்க்களத்தின் மத்தியில் சங்கிலிக்கும் பறங்கி கோட்டைத் தலைவன் தொன்பிலிப்புக்கும் இடையில் உச்சக்கட்ட சண்டை நடைபெற்றது. இருவரது வாளும் பெரும் சத்தத்துடன் உராந்தன. நீண்ட நேர போராட்டத்தின் பின் சங்கிலியின் வாள் அவன் மார்பில் பாய்ந்தது. ஏற்கனவே பாரிய இழப்பைக் கண்டிருந்த பறங்கிய வீரர்கள், தலைவனை இழந்ததும் புறமுதுகிட்டு ஓடினார்கள். தாங்க முடியாத ஆத்திரத்தை பறங்கி வீரர்கள் மீது கொண்டிருந்த சங்கிலி வீரர்கள், அவர்களைத் துரத்தித் துரத்தி வெட்டினார்கள். பறங்கிகள் காட்டில் ஓடி மறைந்தார்கள். அவர்களைத் தொடர்ந்த சங்கலி வீரர்கள் பறங்கிகளது கோட்டையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கோபாவேசத்தில் சென்ற சங்கிலியின் வீரர்கள் அங்கிருந்த பறங்கிப் பெண்களிடம் சேஷ்டை புரிய முற்பாட்டார்கள். அச்சமயம் அங்கு வந்த சங்கிலி “வீரர்களே! எமக்குத் தேவை வெற்றி, அது கிடைத்து விட்டது. இனி வன்முறை தேவையில்லை. இங்கிருக்கும் பெண்களும், குழந்தைகளும், வயோதிபர்களும் எதுவித பாவமும் செய்யாதவர்கள். அவர்களைத் தண்டிப்பது தகாத செயலாகும். எனவே அவர்களை பாதுகாப்பாக மரக்கலங்களில் ஏற்றி அவர்கள் இடங்களுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். இங்குள்ள திரவியங்களை ஏற்றி நம் கோட்டைக்கு அனுப்புங்கள்” எனக் கூறினான்.

சங்கிலி சொற்படியே சகலவற்றையும் நிறைவேற்றி முடித்த வீரர்கள் மீண்டும் நல்லூர் கோட்டை நோக்கி செல்ல ஆயத்தமானார்கள். 

சாதிக்க வருவான்....

00000000000000000000000000

பாகம் 23 வெற்றி வேள்வி


அரசமாளிகையில் இராசமாதேவியும் அங்கயற்கன்னியும் பேசிக்கொள்கிறார்கள், “அரசர் போருக்குச் சென்று பதினொரு நாட்கள் ஆகிவிட்டது. இன்னும் ஒரு செய்தியையும் காணவில்லை. முதன் மந்திரி தனிநாயக முதலிக்கு கூட ஒரு செய்தியும் வரவில்லை” என கவலையுடன் மாதேவி கூறினாள்.

“அவர்கள் நிச்சயம் திரும்பி வந்து விடுவார்கள்” என தோழி ஆறுதல் கூறினாள். அப்போது வாயிற்காவலன் உள்ளே வந்து “தேவி வணக்கம்! போர்க்களத்திலிருந்து தூதன் வந்திருக்கின்றான்” எனத் தெரிவித்தான்.

மகிழ்ச்சியில் துள்ளியெழுந்த தேவி “உடனே அவனை வரச்சொல்” எனக் கூறினாள். உள் வந்த தூதனிடம் “சண்டையின் முடிவு என்ன? எங்களுக்கு வெற்றி தானே?” எனப் பரபரப்புடன் வினவினாள்.
“எங்கள் மகாராசா போருக்குச் சென்றிருக்கும் போது, அதனைக் கூறவும் வேண்டுமோ?” என தூதன் சிலாகித்தான். இதனால் பெரிதும் மகிழ்ந்த தேவி “சற்று விபரமாகத் தான் கூறேன்” என்றாள்.

“தாயே! போரில் தோற்ற பறங்கிகள் கோட்டையை விட்டும் ஓடிவிட்டார்கள். கைப்பற்றிய பொருட்களுடன் சங்கிலி மன்னன் தலைமையிலான எங்கள் படை தற்போது அரண்மனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. இந்த செய்தியை உடனே தங்களிடம் தெரிவித்து வரும்படி மன்னர் தான் என்னை அனுப்பி வைத்தார். மக்களெல்லோரும் வெற்றிப் படையை வரவேற்க வீதியோரமெங்கும் குழுமியிருக்கிறார்கள். நீண்ட நேரமாகின்றது. மன்னர் இப்போது நகர எல்லைக்குள் வந்திருப்பார். நான் வரும்போதே முதன் மந்திரி, அரசரை எதிர்கொண்டு அழைத்து வருகின்றார்” என்றான்.

“அப்படியா! நல்லது. நீ சென்று வா!” எனக் கூறிய தேவி, தோழியைப் பார்த்து “மன்னரை வரவேற்பதற்கான ஆயத்தங்களை செய்” என ஆணையிட்டாள்.

யாழ் நகர வீதியெங்கும் மங்கள வாத்தியங்களுடனும், பூமாரியுடனும் வரவழைக்கப்பட்ட சங்கிலி, அரண்மனையை வந்தடைந்தான். அங்கு மாதேவி மங்கள ஆராத்தி எடுத்து சங்கிலியை வரவேற்றாள். அரசனைத் தொடர்ந்து இமையாணனும், மாப்பாணனும், தனிநாயக முதலியும் வேறு சில அமைச்சர்களும் பிரதான மண்டபத்தினுள் வந்தமர்ந்தனர். போர் வீரர்கள் தங்கள் தங்கள் இடங்களுக்குச் சென்றார்கள்.

“தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று எங்களுக்கு முன்னமே தெரிந்து விட்டது. வீரகாளியம்மன் எனக்கு பூ மூலம் காட்டிவிட்டாள்” என மகிழ்ச்சியுடன் தேவி கூறினாள்.

அன்புடன் அவளைப்பார்த்து புன்னகைத்த சங்கிலி “இந்த வெற்றி குறித்து வழக்கம் போல வீரகாளியம்மனுக்கு வேள்வி செய்ய வேண்டும். அதற்கான ஒழுங்குகளை செய்ய மறந்து விடக்கூடாது. தெரிகின்றதோ?” என முதன் மந்திரியை பார்த்துக் கூறினான். “ஓம் ஓம், இப்போதே போய் அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கின்றேன்” என்றார். அதற்கான ஏற்பாடுகளும் தடல் புடலாக இடம்பெற்றன.


ஓய்வு நேரமொன்றில் நண்பன் மாப்பாணனுடன் இருந்த சங்கிலி, “நண்பா! எல்லாம் செவ்வனே முடிந்து விட்டன. ஆனால் வடிவழகியைப் பற்றி நினைக்கும் போது தான் கவலையாக இருக்கின்றது. இனி அவளைச் சந்திப்பதென்பது முடியாத காரியம் போலிருக்கின்றதே! தேவி மிகவும் கவனமாய் இருப்பாள்” என்றான்.

“கஷ்டம் தான்”, என்றான் நண்பன்.

“நான் வடிவழகியுடன் காதல் கொண்டேன் என்ற செய்தியை இப்போது மறந்திருப்பாளோ?”

“மறந்திருக்க மாட்டார். பார்க்கின்ற அளவில் உங்களை அவர் மன்னித்து விட்டார் போலிருக்கின்றது. தேவி பெருங்குணம் படைத்தவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே!”
“ம்ம்… அது இருக்கட்டும். என்னால் வடிவழகியைச் சந்திக்காமல் இருக்கவும் முடியாது. தேவி கட்டளையை மீறி அவள் மனதை புண்படுத்தவும் முடியாது. இதனால் பெரும் அவஸ்தையில் சிக்கியிருக்கின்றேன். இதற்கு என்ன செய்யலாம் கூறு”

“செய்கின்றதென்ன…. ஒரு வழியாக தேவிக்கு இதனைத் தெரியப்படுத்துவது தான் தகும்”

“முடியுமா?”

“முயற்சி பண்ண வேண்டும்”

“எப்படி?”

“தேவியின் தோழி அங்கயக்கன்னியால் தான் இது ஆகவேண்டும். நான் அவளிடம் கூறி ஏதாவது முயன்று பார்க்கின்றேன்”

“தோழனுக்கு தோழி மேல் பிரியமோ” என்று கூறிச் சிரித்தான் சங்கிலி, இதனால் பெரிதும் வெட்கமுற்ற மாப்பாணன் பதில் கூறாது அங்கிருந்து வெளியேறிச் சென்றான். மனப்பாரம் பெரிதும் இறங்கிய சங்கிலி, பஞ்சணையில் புரண்டான். நித்திரை அவனை நன்றாகவே ஆட்கொண்டது.

திட்டமிட்டபடியே வீரகாளியம்மனது வேள்வி ஆரம்பமாகியது. போரில் பங்கு கொண்ட வீரர்களது ஊதியங்கள் இரு மடங்காக உயர்த்தப்பட்டதால் வீரர்கள் பெருஞ் சந்தோஷத்துடன் வேள்வியில் குடும்பங்களுடன் பங்கேற்றனர். போட்டி போட்டுக்கொண்டு வீரர்கள் வேள்விக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டதால் அவர்களுக்கிடையே சிற்சில கைகலப்புக்களும் உருவாகின. இதனைச் சங்கிலியும், தளபதியும் பூஜையில் கலந்து கொண்டதால் கவனிக்க முடியாது போயிற்று. சம்பவத்தை ஒரு வீரன் சங்கிலிக்கு தெரிவிக்கவே, கோபமாக எழுந்து வந்த சங்கிலி “இதற்காகவா நாம் வேள்வி நடத்துகின்றோம். நாட்டு மக்கள் எந்த கெடுதல்களுக்கும் ஆளாகமால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைத்து வேள்வி நடத்தும் போது, நீங்களே சண்டை பிடிக்கலாமா? இதுவா நீங்கள் எனக்குத் தரும் மரியாதை? உங்கள் பாசம் புரிகின்றது. அதற்கு இப்படியா நம்முள் அடித்துக் கொள்வது? அதற்குரிய இடமா இது? இன்று இந்த வேள்வியைத் தொடர்வது மனக்கஷ்டத்தைத் தரும். ஆகவே வேள்வி நாளை தொடரும். நீங்கள் பக்தியுடனும் சகோதரத்துவத்துடனும் அதில் கலந்து கொள்ளுங்கள்” எனக் கூறிவிட்டு அரண்மனை சென்றான்.

ஆவலுடன் ஏற்பாடாகியிருந்த வேள்வி தடைப்பட்டதால் பெரிதும் மனக்கஷ்டமடைந்த வீரர்கள் தங்கள் அறியாமைக்காக வருந்தி மறுநாள் சிரத்தையுடன் வேள்வியில் கலந்து கொண்டார்கள். யாழ்ப்பாணமெங்கும் மக்கள் மிகுந்த சந்தோஷத்துடன் காணப்பட்டனர். அரண்மனையிலும் அப்படித்தான். மிகுந்த சந்தோஷத்துடன் அரண்மனையிலிருந்த இராசமாதேவிக்கு வீரன் ஒருவன் கொண்டு வந்த செய்தி துக்கத்தையும் ஆவேசத்தையும் உண்டு பண்ணியது.

சாதிக்க வருவான்....

00000000000000000000000000000000

பாகம் 24 துருவங்கள் சந்திப்பு 


பனிக்காலம், பொழுது புலர்ந்து ஒரு நாழிகை நேரமாகியும் பனி மூட்டம் இன்னும் கலையவில்லை. பகலவனும் முகம் காட்டவில்லை. எங்கெங்கும் வெண் பனித்திரை விரிந்து கவிந்திருந்தது. நீரணுக்கள் நிறைந்த கனத்த பனிப் புகையால் உலகின் தோற்றமே ஒடுங்கி மறைந்து விட்டிருந்தது. புல்லிதழ்களின் மடியில் வயிரமணிகள் உருண்டிருந்தன. மர இலைகளில் முத்துக்கள் காய்த்திருந்தன. பூமாதேவியின் இதயமே உறைந்து சுருங்கி விடத்தக்க குளிர். சகிக்க முடியாத தண்ணென்ற வரட்சிக் காற்று.

இத்தகைய பொல்லாப் பனியையும், காற்றையும் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சங்கிலியின் அரண்மனைக்குள்ளே முக்காடிட்டு வந்த ஒரு உருவம் வாயிற் காவலனிடம் ஏதோ கூறியது. அவனும் அதற்கிணங்கி ராணி இராசமாதேவியை வந்தடைந்து வணக்கி நின்றான்.

'வணங்குகிறேன் தேவி"

'இருக்கட்டும்.. என்ன விடயம்?"

'உங்களைப் பார்க்க பெண்ணொருத்தி வந்துள்ளாள்"
'யாரவள்?"

'தெரியவில்லை"

'இந்த நேரத்திலா?"

'ஆம்..."

'வரச்சொல் பார்க்கலாம்"

மாதேவியிடம் இருந்து விடை பெற்றுச் சென்ற காவலன் அந்தப் பெண்ணை உள்ளே அனுப்பினான்.

உள்வந்த பெண்ணைக் கண்டதும் பெரிதும் சினப்பட்ட தேவி, 'யார்... அப்பாமுதலியின் மகள் வடிவழகியோ?"

'ஆம்!"

'இங்கு எப்படி வந்தாய்? வந்திருப்பது நீயெனத் தெரிந்திருந்தால், உன்னை உள்ளே வரவே அனுமதித்திருக்க மாட்டேன். ஒழுக்கங் கெட்டவளே! என்னருகில் வர உனக்கென்ன துணிவு. இது முதற்தடவையாக இழைத்த குற்றமாதலால் மன்னித்து விடுகின்றேன். பிழைத்துப் போ... இனி இந்த மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது. புரிந்ததா?... அங்கயற்கன்னி! இந்தச் சிறுக்கியை என் முன் நிற்கவிடாதே.. போகச் சொல்!" என தேவி ஆத்திரத்தில் கத்தினாள்.

தேவியின் குரலைக் கேட்டு பக்கத்தறையில் இருந்து ஓடி வந்த தோழி, அங்கு நின்ற இருவரையும் மாறி மாறிப் பார்த்து 'அழகில் இருவரும் சளைத்தவர்கள் அல்ல" என தனக்குள் கூறிக்கொண்டு வடிவழகி அருகே சென்றாள். இதனால் சற்று அப்பால் விலகிய வடிவழகி இராசமாதேவியைப் பார்த்து 'தேவி! நான் செய்தது குற்றம் தான். என்னில் கோபிக்க வேண்டாம். அரச வாழ்வுக்கும் எமக்கும் எட்டாப் பொருத்தம் என்பதனை இப்பொழுது நன்கு அறிந்து கொண்டேன். தெரியாமல் செய்த குற்றம். மன்னித்து விடுங்கள். நான் இப்போது இங்கு வந்தது வேறு காரியமாய். அது இரகசியம். நீங்களே அதைக் கட்டாயம் அறிதல் வேண்டும்" என விண்ணப்பித்துக் கொண்டாள்.


'சரி, உன் இரகசியத்தைக் கூறு" என்றாள் தேவி அலட்சியமாக.. தேவியின் கண்ணில் தெரிந்த அலட்சியத்தை அவதானித்த வடிவழகி, அங்கும் இங்கும் பார்த்து விட்டு 'தேவி! அரசருக்கு எதிராக பல சூழ்ச்சிகள் நடக்கின்றன. அவரை மிகவும் கவனமாக இருக்கச் சொல்லுங்கள். அவர் நலனுக்காக பாடுபடுவோர் போல பலர் வெளியில் காட்டித்திரிகிறார்கள். அவர்களை நம்பவேண்டாம். படு மோசம் பண்ணி விடுவார்கள்" என எச்சரித்தாள்.

சூழ்ச்சி மகாராஜாவிற்கு எதிராக என வடிவழகி கூறியவுடன் பதற்றமடைந்த தேவி சிறிது நிதானித்துக் கொண்டு, மிகக் கவனமாய் எழுந்து சென்று வடிவழகியின் கையைப் பிடித்து அழைத்து வந்து இருக்கையொன்றில் இருத்தி 'பயப்படாதே! ஏன் அப்படிச் சொல்கிறாய்? இந்த வஞ்சகச் சூழ்ச்சிகள் பற்றி உனக்கு ஏதோனும் தெரியுமோ? அஞ்சாமற் சொல்லு. உனக்கு நான் பாதுகாப்புத் தருகின்றேன்" என்றாள்.

'ஆம் தேவி! எல்லாமே எங்கள் வீட்டில் தான் நடக்கின்றது."
'அப்படியோ?"

'தேவி, உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றேன். நான் இங்கு வந்தது ஒருவருக்கும் தெரியக் கூடாது. என்னைக் கடுங்காவலில் வைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒருவகையாகத் தப்பி வந்தேன். நான் வந்ததை அவர்கள் அறிந்தால் என் உயிருக்கே ஆபத்து."

'தெரியும். ஒன்றுக்கும் பயப்படாதே! உனக்குத் துணையாக நான் நிற்கின்றேன்" என ஆதரவாக அவள் தோளில் தட்டினாள் தேவி.

'தேவி! நான் இனி இங்கு நிற்க முடியாது. நேரமாகின்றது. வீட்டுக்குப் போய்ச்சேர வேண்டும்" என அவசரப்பட்டாள் வடிவு.
'சரி, அங்கயற்கன்னி... வடிவழகியை கவனமாக மாளிகையின் பின் பக்கக் கதவால் கொண்டு சென்று, அவள் வீட்டுப் பூந்தோட்ட வாயில் வரை சென்று விட்டு வா. ஒருவருக்கும் தெரியாமல் இருவரும் கவனமாகப் போங்கள்" எனக் கூறினாள்.

அவர்கள் சென்றதும், இராசமாதேவி ஆழந்த எண்ணத்தோடு அங்குமிங்கும் உலாவினாள். சிறிது நேரத்தில் அங்கயற்கன்னி திரும்பி வந்தாள்.

'என்ன தோழி! அதற்குள் திரும்பி வந்து விட்டாய். வடிவு எங்கே?"

'அவளைத் தக்க துணையுடன் அனுப்பி விட்டேன்".

'யாருடன்?"

'மன்னரின் தோழர் மாப்பாணனுடன்..."

'அவரை உனக்கெப்படி தெரியும்?"

பதில் கூற முடியாது வெட்கத்தில் தோழியின் கன்னம் சிவந்தது.

'அடி கள்ளி! எனக்குத் தெரியாமற் போய் விட்டதே. பரவாயில்லை. ஆனால் நாம் வடிவழகியைப் பற்றி எண்ணியவையெல்லாம் பிழையாகப் போய்விட்டது. அவள் மிகவும் நல்லவள்" என்றார் தேவி.

'நானும் அப்படித் தான் எண்ணுகின்றேன்" என்றாள் தோழி.

சங்கிலிக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி பற்றி சங்கிலிக்கு தெரிவித்து உஷார் படுத்த முன்னமே, ஆபத்து கோட்டைக்குள் வந்து விட்டது.

சாதிக்க வருவான்....

000000000000000000000000000

பாகம் 25 காக்கை வன்னியன் 


சங்கிலியனின் வழி நடத்தலின் கீழான படைகளுக்கு முகம் கொடுக்க முடியாத பறங்கித் தளபதி பிரகன்ஸாவும் ஏனைய போர் வீரர்களும் ஊர்காவற்துறையில் நிலை கொண்டிருந்த காக்கை வன்னியனிடம் சென்றார்கள்.

வலிய வந்து எங்களுக்கு மண்ணாசை காட்டிவிட்டு, இப்படி இங்கு சகல சௌபாக்கியங்களுடனும் ராஜா மாதிரி இருக்கிறாயே! உன் பேச்சை நம்பி, நாம் அடைந்த கதியைப் பார்த்தாயா?” எனப் பிரகன்ஸா சீறினான்.

“தளபதியாரே! சற்று அமைதியாக இருங்கள். எல்லாவற்றிற்கும் ஒரு காலம் உண்டு” எனச் சமாதானப்படுத்த முயன்றான் வன்னியன்.

“இவ்வாறு தான் அன்றும் கூறினாய், இன்று என் நிலையைப் பார்த்தாயா? எங்கள் சேனையில் பதினொராயிரம் வீரர்களும் சிறந்த கோட்டைத் தலைவனும் மாண்டது தான் நாம் கண்ட முடிவு”

“போர் ஏற்படின் உயிரிழப்புக்கள் ஏற்படுவது வழமை தானே!”
“ஏன் கூற மாட்டாய் வன்னியா? போரில் உயிரிழப்புக்கள் சகஜம் தான். ஆனால் எந்தவொரு பிணக்குகளுக்கும் போகாமல் அமைதியாக இருந்த எங்களை உங்கள் பிணக்கிற்கான நடுவில் இழுத்துப் பந்தாடி விட்டீர்களே! உதவிக்கு கூட ஒருவரும் வரவில்லை”

“பெரும் படை பலம் பொருந்திய நீங்கள் சமாளிப்பீர்கள் என எண்ணியிருந்தேன். நீங்கள் மண் கௌவி விட்டீர்களே! உங்கள் பீரங்கிக் குண்டுகளுக்கு கூட அவர்கள் பயப்படவில்லையா?”

“சங்கிலியின் படைகளின் கவண் கல்லுக்கும், எரியம்புகளுக்கும் முன் எங்கள் பீரங்களில் எந்த மூலைக்கு? அவர்களின் போர் தந்திரம் தான் என்ன!”

“நீங்கள் எமக்கு அறிவித்திருக்கலாமே! உதவியுடன் விரைந்து வந்திருப்போம்”

“நாங்கள் அறிவிக்கும் நிலையிலா இருந்தோம். அப்பா! அந்த சங்கிலி இருக்கிறானே, அவனைப் போல் ஒரு சுத்த வீரனை நான் இதுவரை கண்டதில்லை. உன்னைப் போல் கோட்டையில் அடைந்து கிடக்காமல் வீரர்களுடன் வீரர்களாக நின்று போரிடுகின்றான். பயமென்பது துளியும் அவன் உடம்பில் இல்லைப் போலும்”

“க்கும்… அது தெரிந்த விடயம் தானே!”

“இதை முன்பே கூறி அனுப்புவதில்லையா வன்னியா?”

“உங்கள் போர்த்திறனுக்கு முன் அவன் படை சுருண்டு விடும் என எண்ணினேன்”

“இப்பொழுது என்ன செய்வதாக உத்தேசம். எங்களுடன் நீயும் எங்களுர் வந்து விடுகிறாயா?” என பிரகன்ஸா இகழ்ச்சியுடன் வினவினான்.

பறங்கித் தளபதியின் இகழ்ச்சியை கவனித்த காக்கை வன்னியன் தன் நிலைமையை எண்ணி ஏதும் சொல்ல இயலாதவனாக இருந்தான். அதனால் மீண்டும் தளபதி,

“என்ன வன்னியா வருகிறாயா?”

“அதில்லை… நாம் மீண்டும் அங்கு செல்ல வேண்டும்”

“எங்கு?”

“யாழ்ப்பாணம் தான்”

“ஐயோ, நாம் வாழ வழிகேட்டால்.. நீ சாக வழி சொல்கிறாயே. நாங்கள் அங்கு வரவில்லை”

“நீங்கள் பயப்படும்படி எதுவும் இல்லை. இம்முறை போரிடத் தேவையில்லை. சமயோசிதமாக அவனைக் வெல்ல திட்டம் தீட்டியிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தூதனை எதிர்பார்த்திருக்கின்றேன். அவன் வந்த பின் தான் எனது முடிவைக் கூற முடியும்” என்றான்.

அச்சமயம் யாழ்ப்பாணத்திலிருந்து தூதன் ஒருவன் வந்திருக்கின்றான் என்ற செய்தி காக்கை வன்னியனுக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஓடிச் சென்று அவனை பிரகஸா இருக்குமிடம் அழைத்து வந்தான். அவன் முன்னிலையில் காக்கை வன்னியனது விசாரணை தொடர்ந்தது.

“என்ன விடயமாக வந்திருக்கின்றாய்”

“பரநிருபசிங்கன் ஓலை ஒன்றை அனுப்பியிருக்கின்றார்.”

“அப்படியா? நல்லது கொடு” என அவன் ஓலையை வாங்கிப் படித்ததும் அவன் முகம் பிரகாசமானது. அவ்வோலையை பறங்கித் தளபதிக்கும் காட்டினான்.

இதுவரையும் வெளிப்படாது இருந்தோம். இனி வெளிப்பட்டு கருமம் முடித்தல் வேண்டும். ஆயத்தமாக வருக.
பரநிருபசிங்கன்

மேற்கண்டவாறு குறிப்பிட்டு பரநிருப சிங்கனது இரகசிய முத்திரை குறிப்பிடப்பட்டிருந்தது.

ஓலையைக் காட்டிய வன்னியன் “பார்தாயா பிரகன்ஸா! நமக்கு காலம் கனிந்து வந்து விட்டது. இதற்காகத் தான் இவ்வளவு நாளும் காத்திருந்தோம். நீ மட்டும் சங்கிலியுடன் வாக்குவாதப் படாது இருந்திருந்தால் இந்நேரம் யாழ்ப்பாணம் எங்கள் வசம் வந்திருக்கும்” என்றான்.

“இப்போது என்ன செய்வது?”

“மீண்டும் போரிட வேண்டும்”

“என்னிடம் படை இல்லையே!”

“எனது படையின் சிறு பகுதியையும், உனது படையின் எஞ்சிய பகுதியையும் சேர்த்து யாழ்ப்பாணம் அழைத்து வா. ஆனால் அதற்குத் தேவை இருக்காது என நினைக்கின்றேன். இதில் ராஜ தந்திரங்கள் நிறையவே இருக்கின்றன” என்று காக்கை வன்னியன் கூறினான்.

இதன்படி படையை செப்பனிடும் பணியைப் பிரகன்ஸா கவனத்துக் கொண்டான். படையைப் பின்னால் வருமாறு கூறிவிட்டு காக்கை வன்னியன் விரைந்து நல்லூரையடைந்து மாறு வேசத்தில் பரநிரபசிங்கனிடம் வந்தடைந்தான்.

“யார்? காக்கை வன்னியனா?”

“ஆம்”

“அடையாளமே தெரியவில்லையே”

“அது தான் மிகவும் நல்லது”

“உடனடியாகப் புறப்பட்டு வந்து விட்டாயே”

“இதற்குத் தானே காத்திருந்தோம்”

“ஆம்.. ஆம்”

“இப்போது என்ன செய்வதாக உத்தேசம்”

காக்கை வன்னியனை அருகில் அழைத்த பரநிருபசிங்கன் அவன் காதில் ஏதோ கூறினான். அதைக் கேட்ட வன்னியன் “ஆகா திட்டமென்றால் இதுவல்லவா திட்டம்” என்று பரநிருப சிங்கனைப் பாராட்டினான். பிறகு மாறுவேடத்திலேயே மீண்டும் மரக்கலமேறிச் சென்று பின்வந்த பறங்கியர் படைகளுடன் கலந்து கொண்டான்.

காக்கை வன்னியன் நகருக்கு வந்து சென்ற விடயம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பறங்கிப் படைகள் மீண்டும் வருவதை ஒற்றர்கள் வாயிலாக அறிந்த சங்கிலி கடுஞ்சினமடைந்து உடனடியாக அரச உயர்மட்டத்தனைக் கூட்டி சபா மண்டபத்தில் சந்தித்தான்.

“கோழை! புறமுதுகிட்டு ஓடிவிட்டு மீண்டும் வருகின்றான் பிரகன்ஸா. இவனை அன்றே தொலைத்திருக்கலாம். மானங்கெட்டவன். ஓடிவிட்டான்” என சங்கிலி சினந்தான்.
“அவன் ஆயுள் ரொம்பவே குறைவு போலிருக்கின்றது. அது தான் நம்மீது படை எடுக்கின்றான். இறந்தால் வீரனின் கையால் இறக்க வேண்டுமென அவன் நினைக்கிறான் போலிருக்கின்றது” எனக் கூறிய இமையாணன் இடியென நகைத்தான்.

“தளபதி அவர்களே! அவர்கள் மீண்டும் நம்மிடம் கண்ட தோல்விகளையெல்லாம் மறந்து வருகின்றார்கள் என்றால் அவர்களுக்கு ஒரு பெரிய துணையொன்று இருக்கின்றது. அவர்களை நாம் மட்டமாக எடை போடக் கூடாது. எதற்கும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றான் சங்கிலி.

“எது எவ்வாறாக இருந்தாலும் நம்மிடத்தில் வந்து போரிட்டு எவனும் மீண்டதாக சரித்திரமே இல்லை. நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றான் வீரமாப்பாணன்.

“பரவாயில்லை. என்றாலும் தளபதியாரே! மீண்டும் நம்படைகளை பழைய பொழிவுடன் விரைவாகக் கட்டியெழுப்பும்” எனச் சங்கிலி கூறினான்.

படையணிகளோடு தனக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை அறியாத சங்கிலி கோட்டை வாயிலை வந்தடைந்தான். அங்கு அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

சாதிக்க வருவான்....

0000000000000000000000000

பாகம் 26 சூது


உலகம் உறங்கிக் கொண்டிருந்தது. ஆனால் யாழ் நகர் உறங்கவில்லை. வெற்றி மகிழ்ச்சியால் உறங்காமல் திளைத்திருக்க வேண்டிய மக்கள் மீண்டும் ஒரு போருக்காக படைகள் விரைவாக ஆயத்தமாக்கிக் கொண்டிருந்ததால் கவலையால் விழித்திருந்தார்கள். வலிந்து வரும் போரையும், அதனால் ஏற்படப் போகும் அழிவுகளையும் எண்ணி யாழ் மக்கள் கலங்கினார்கள். தெருக்களில் ஜன நடமாட்டமே இல்லை. வீடுகளில் விளக்குகள் அணையவில்லை. மாட மாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் வானளாவப் பறந்து கொண்டிருந்த கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தாலும், அவற்றின் கீழே செய்யப்பட்டிருந்த அலங்காரங்கள் அலைந்து, குழைந்து, கலைந்து கிடந்தன. எங்கும் ஒருவித அவசயமான நீர்த்தன்மை புழுக்கமிட்டுக் கொண்ருந்தது.

இங்கே குறுகிய கால அவகாசத்தில் போருக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டு சங்கிலியும் பூரண போர்க்கவசமணிந்து போருக்குத் தயாராகியிருந்தான். இதற்கிடையில் பரநிருபசிங்கன் ஓர் உபாயம் செய்தான். ஓர் ஒற்றனைச் சேனாதிபதி இமையாணனைச் சந்திக்கும் படி ஏற்பாடு செய்தான். இதற்கமைய அவன் இமையாணனை அடைந்து, “பறங்கிய ஒற்றனொருவன் கீழைக் கோபுர வாயிலிற் காத்திருக்கின்றான்” என்றான்.

“என்ன விடயம் என்று கேட்டாயா?”

“இல்லை. அவன் தளபதியைச் சந்திக்க வேண்டுமென்று கூறினான். அத்துடன் போர் பற்றிய முக்கிய விடயம் என்றும் கூறினான்”

‘போரை நிறுத்துவதற்காக பறங்கிகள் தூதனுப்பியிருப்பார்களா?’ என சிந்தித்த இமையாணன், ‘அவ்வாறெனின் எவ்வளவு நல்லது. மீண்டும் ஒரு பேரழிவைத் தடுக்கலாம்’ என்ற நினைப்பால் “நான் இதோ வருவதாக அவனிடம் போய்க் கூறு” என தனக்கு எதிராக விரித்திருக்கும் மாயை வலை பற்றி அறியாமல் சொல்லி அனுப்பினான்.

இதேவேளை அரண்மனையில் ஒரு வாயிற்காவலன் சங்கிலியை அணுகி “ஊர்காவற்துறை அரசன் உங்களைக் காண வந்துள்ளார்” என்றான். இதனைச் சிறிதும் எதிர்பார்க்காத சங்கிலியன் “யார் காக்கை வன்னியனா?” என மகிழ்ச்சியுடன் வினவினான்.

“ஆம்”

“ஏன் அவனைக் காக்க வைத்துள்ளீர்கள். சீக்கிரம் அவனை உள்ளே அனுப்புங்கள்” எனக் கட்டளையிட்டான்.

“காக்கை வன்னியனுடன் சில வீரர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை என்ன செய்வது”

“எல்லோரையும் உள்ளே விடு!” சங்கிலி கூறினான்.

இதனால் காக்கை வன்னியன் தலைமையிலான பத்துப் பன்னிரண்டு வீரர்கள் சங்கிலியன் இருந்த இடத்திற்கு வந்தனர். காக்கை வன்னியனைக் கண்ட சங்கிலி, அவன் ஆருயிர்த் தோழனாதலால் ஓடோடிச் சென்று கட்டியணைத்து வரவேற்றான். 

“என்ன நண்பா திடீர் விஜயம்?” சங்கிலி கேட்டான்.

“மண்டை தீவுக்கு ஒரு அலுவலாக வந்தேன். அவ்வாறே உன்னையும் பார்த்துச் செல்லலாம் என இங்கு வந்தேன்” என சிறிதும் குழப்பம் அடையாமல், தான் வந்த எண்ணம் சங்கிலிக்கு தெரியக்கூடாது என்பதற்காக நிதானமாகக் கூறினான். 

“நீ வருவாய் என அறிவித்திருந்தால், எவ்வளவு ராஜ மரியாதையுடன் வரவேற்றிருப்பேன். யாழ்பாணம் முழுவதும் முறைசறைவித்திருப்பேன். இப்பொழுது திருடன் மாதிரி வந்திருக்கிறாயே?” என நகைச்சுவையாகக் கூறினான்.

சங்கிலியின் நகைச்சுவையைக் கேட்டு பயந்த காக்கை வன்னியன் சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“வா நண்பா! இப்படி உட்கார். நான் உனக்கு எவ்வளவு உபகாரங்களைச் செய்ய வேண்டும். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லாது போய் விட்டது. நீ அறிந்தாயோ தெரியாது. வயிற்றுப் பிழைப்புக்காக வந்த பரதேசிப் பறங்கிகள் என்னையே ஏமாற்றி என் மீதே போர் தொடுத்தார்கள். நான் அவர்களை புறமுதுகிட்டு ஓடச்செய்தும் மீண்டும் எம் மீது படையெடுத்து வருகின்றார்கள். எவ்வளவு நெஞ்சழுத்தம் பார்த்தாயா? இதற்கு யாரோ எம்முடன் நெருங்கிப் பழகுபவர்கள் ஆதரவு வழங்குகிறார்கள். அது தான் எனக்கு கவலையாக இருக்கின்றது” என அவனை இருக்கையை நோக்கி சங்கிலி அழைத்துச் சென்றான்.

“ஆ… அப்படியா? எனக்குத் தெரியாமற் போய்விட்டதே! இனியும் தாமதிக்கக் கூடாது. உனக்குத் துணையாக நானிருக்கின்றேன். நீ கவலைப் படாதே” என கட்டியணைத்து சங்கிலிக்கு தெரியாமலே சற்று இறுக்கிக் கொண்டான். அத்துடன் தன் முன்னால் நின்ற வீரர்களுக்குக் கண்ணைக் காட்டினான்.

அன்று சங்கிலிக்கு பின் தலையில் மாத்திரம் ஒரு கண்ணிருந்தால் யாழ்ப்பாணத்திற்கு நேர இருந்த அவலம் தடுக்கப்பட்டிருக்கும். விதி விளையாடியது. காக்கை வன்னியன் கண்ணசைப்பால் முன்னேறிய வீரர்கள் சங்கிலியின் இடையிலிருந்த வாளை அகற்றினார்கள். இதனால் திணறிய சங்கிலி சுதாகரிப்பதற்குள் பின் தலையில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. சங்கிலி மயங்கிச் சரிந்தான். அவன் குரலைக் கேட்டு ஓடிவந்த காவலர்கள் காக்கை வன்னியன் வீரர்களுடன் போரிட ஆயத்தமான போது, அங்கு வந்த பரநிருபசிங்கன் அவர்களைத் தடுத்தான். “தளபதி இல்லாமல் நாங்கள் போரிடக் கூடாது” என கூறினான். பரநிருபசிங்கனது வஞ்சகத்தை அறியாத வீரர்களும் பேசாமல் நின்றனர். நினைவிழந்து கிடந்த சங்கிலியை காக்கை வன்னியன் வீரர்கள் தூக்கிச் சென்றனர்.

இதேவேளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சாதாரணமாக வழமை போன்று தூதனைச் சந்திப்பதற்காக கோட்டை கோபுர வாயிலுக்கு வந்த தளபதி இமையாணன், அங்கு ஒருவரையும் காணாததால் சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்து விட்டு உள்ளே செல்லத் திரும்பினான். அக்கணத்தில் எங்கோ இருந்து பறந்து வந்த குறுவாள் ஒன்று அவன் கழுத்தில் புதைந்து நின்றது. தளபதி அலறித்துடித்துக் கொண்டு நிலத்தில் வீழ்ந்தான். யாழ்ப்பாணம் ஒரு சிறந்த தளபதியை இழந்தது. மறைந்திருந்த பல பறங்கி வீரர்கள் வெளிவந்து தளபதியின் உடலை எடுத்துச் சென்றார்கள். கோட்டைக்குள் இருந்த சங்கிலியின் வீரர்கள் எந்தவித வழிநடத்தலும் இல்லாது திணறி நின்றனர். பரநிருபசிங்கன் கோட்டைப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டான். சங்கிலியின் மயங்கிய உடலும், தளபதியின் உயிரற்ற சடலமும் பறங்கிக் கோட்டை கொண்டு செல்லப்பட்டது. மக்கள் திகைத்து நின்றனர். 

சாதிக்க வருவான்....

00000000000000000000000

பாகம் 27 பரராசசேகரன் நிலை


சங்கிலியை இழந்த யாழ்ப்பாணம் தலையிழந்த முண்டம் போல் தத்தளித்தது. பறங்கியரின் வழி நடத்தலின் கீழ் வாழ விரும்பாத, சுகவீனமுற்றிருந்த சங்கிலியின் தந்தையான பரராசசேகரன், ‘அரண்மனை வாழ்கையிலும் விட இனி காடே சிறந்தது’ என எண்ணி வன்னிக் காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டான்.

இதனால் வெகுண்ட பறங்கிகள், நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தார்கள். “பரராசசேகரனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கோ, அவன் இருப்பிடத்தை அறிவிப்பவர்களுக்கோ இருபத்தையாயிரம் இறைசால் பரிசாக வழங்கப்படும்”. பரராசசேகரன் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் வைத்திருந்த நாட்டு மக்கள், இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் பரராசசேகரனிடம் முன்பு முதன் மந்திரியாக இருந்த கன்னெஞ்சப்பார்ப்பாண் எனும் கொடியவன், பொருளெனும் பேய்க்கு ஆசைப்பட்டு பரராசசேகரனைத்தேடி வன்னிக் காட்டுக்குள் சென்றான். அங்கு கையில் இளநீரும், தேசிக்காயும் சகிதமாக அலைந்தான்.

மறுபுறம் யாழ்ப்பாணத்தில், சங்கிலியன் ஆட்சியை வெறுத்த அப்பாமுதலி, பரநிருபசிங்கன் போன்ற ஆட்கள், பறங்கியருடன் இணைந்து வீதியெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இனிப்புப்பண்டங்களையும் வழங்கினார்கள். இவை எவற்றிலும் அக்கறை காட்டாத மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அரண்மனைக்கு வேலைக்கு வரவும் விருப்பவில்லை.

காட்டினுள் பரராசசேகரனைத் தேடித்திரிந்த பார்ப்பாண், மிகுந்த சங்கடமடைந்தான். எங்கு தேடியும் அரசனைக் காண முடியவில்லை. இதனால் தனக்கு பரிசுத்தொகை கிடைக்காதோ என ஏக்கமடைந்து அங்குமிங்கும் புலம்பித் திரிந்தான். காட்டினுள் கேட்ட கூச்சலை மறைவிடத்தினுள் இருந்து அவதானித்த பரராசசேகரன் அது என்னவாக இருக்கம் என அறியும் ஆவலில் எட்டிப்பார்த்தான். தனக்கு மிகவும் நெருக்கமான மந்திரி துயரத்துடன் அங்குமிக்கும் அலைவதைக் கண்டு குரல் கொடுத்தான்.
“பார்ப்பாண்… பார்ப்பாண்…!”


குரல் வந்த திசையை நோக்கிய பார்ப்பாண், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தான் காடு மேடெல்லாம் தேடிய பொருள் இப்படி வலிந்தே சிக்குமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. இதனால் எழுந்த மகிழ்ச்சியை முகத்தில் குறைத்துக் கொண்டு, ஓடோடிச் சென்று மன்னன் காலில் விழுந்தான். 

அவனை ஆதரவுடன் தூக்கிய அரசன், “ஏன் பார்ப்பாண்? என்ன விடயம்? ஏன் இவ்வளவு சோகத்தில் அலைந்து திரிகிறாய். அதுவும் காட்டில்…?”

“காடா… இதுவா காடு? காடென்பது இதுவல்ல. நீங்கள் இல்லாத நாடே காடு. இது அரண்மனை” என போலிக் கண்ணீர் வடித்தான்.

“அது சரி, இங்கு நீ ஏன் வந்தாய்?”

“நீங்கள் இல்லாத இடத்தில் எனக்கு இருக்கப்பிடிக்கவில்லை. அங்கு பரநிருபசிங்கன் பறங்கியரின் கையாளாக இருந்து கொண்டு கொடுங்கோலாட்சி புரிகின்றான். மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”

“பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலி பற்றி ஏதாவது அறிய முடிந்ததா?”

“இல்லை. இல்லவே இல்லை… ஆனால் பறங்கிகள் சங்கிலியை உயிரோடு விடுவார்கள் என்று நான் கருதவில்லை”
“அரண்மனையில் மந்திரிகள், அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்?”

“பரநிருபசிங்கனது அதட்டலுக்குப் பயந்து வேண்டா வெறுப்பாக, அவன் கீழ் ஊதியம் செய்கிறார்கள். அவர்களுக்கும் வயிற்றுப்பிழைப்பு என்று ஒன்று உண்டு தானே!”

“அதுவும் சரி!”

“அரசே! நீங்கள் மிகவும் களைத்துள்ளீர்கள். அடியேன் கொண்டு வந்திருக்கும் இளநீரைக் குடியுங்கள்” என அரசன் முன் தான் பத்திரமாக வைத்திருந்த இளநீரை நீட்டினான். ஆவலுடன் அதை வாங்கிய அரசன், தன் உடை வாளால் அதைச்சீவி பருகத் தொடங்கினான். சமயம் பார்த்துக் காத்திருந்த பார்ப்பாண் “அரசே இந்த தேசிப்பழத்தை பிழிந்து இளநீரினுள் விடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்” எனக் கூறினான். தான் இளநீரை அருந்துவதால், அதை வெட்டி விடுப்படி பரராசசேகரன் பார்ப்பாணுக்கு கண்ணைக்காட்டினான். காரியம் கைகூடுவதை நினைத்து மகிழ்ந்த பார்ப்பாண், அரசன் வாளை எடுத்து ஒரு கணத்தில் அரசன் சிரசைக் கொய்தான். அரசனின் தலையற்ற உடல் பூமியில் சாய்ந்தது.

துண்டாக விழுந்த சிரசை பத்திரமாக பொதி செய்து யாழ் நகர் நோக்கி வந்தான் பார்ப்பாண். அங்கு பறங்கித் தளபதியைச் சந்தித்து, தான் கொண்டு வந்த பொருளைக் காட்டி பரிசுத்தொகையை பெறவேண்டும் என்ற ஆவலில் கோட்டைக்குள் சென்று தளபதியைச் சந்தித்தான். பார்ப்பாண் கொண்டு வந்த பொதியைப் பிரித்துப் பார்த்த பறங்கித் தளபதி பிரகன்சா

“என்ன இது?” எனக் கேட்டான்.

“பரராசசேகரனது தலை” என மகிழ்ச்சியுடனும் பேராவலுடனும் கூறிய பார்ப்பாணை நோக்கிய தளபதி

“என்ன செய்தாயடா மூடா” எனக் கத்தினான்.

“நீங்கள் தானே கூறினீர்கள்”

“என்னவென்று?”

“பரராசசேகரனை பிடித்துத்தரும்படி”

“நீ என்ன செய்திருக்கிறாய்?”

“கொணர்ந்துள்ளேன்”

“எதை?”

“தலையை!”

“நான் தலை கேட்டேனா?”

“நான் அவரைக் கொண்டு வந்தால், நீங்கள் சிரச்சேதம் செய்வது உறுதி. ஆதை நானே செய்துவிட்டேன். எனக்குரிய பரிசைத் தாருங்கள்”

நொடியும் யோசிக்காத பிரகன்ஸா “உனக்குரிய பரிசு இது தான்” என தன் இடையில் இருந்த உடைவாளை எடுத்து பார்ப்பாணின் சிரசைக் கொய்தான். பார்ப்பாணது பேராசை, பெரும் தரித்திரமாகப் போய்விட்டது.

இதேவேளை பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலியின் நிலையோ, பரிதாபத்துக்கிடமாகப் போய்விட்டது.  
சாதிக்க வருவான்....

000000000000000000000000000000

பாகம் 28 சிறையில் சங்கிலியன்


மயக்கத்திலிருந்து விழித்த சங்கிலிக்கு தான் ஓர் புதிய இடத்தில் இருப்பதை உணர முடிந்தது. தலையை உயர்த்தி எதையும் பார்க்க முடியாமல் இருந்தது. உடலெங்கும் பயங்கரமாக வலியெடுத்தது. எழுந்திருக்க மனமில்லாமல் கல்மேடையிலேயே மல்லார்ந்து படுத்துக் கிடந்தான். சிறிது நேரத்தில் வெளியே ஆரவாரப்படுவதை அவனால் உணர முடிந்தது. 'அவன் வழித்து விட்டான்" என வெளியில் யாரோ சத்தமிடுவது சங்கிலியின் காதில் கேட்டாலும், அதை கணக்கிலெடாது பேசாமல் படுத்திருந்தான். சிறிது நேரத்தில் சிலர் தன்னை நோக்கி வருகின்றார்கள் என்பதை உணர்ந்து கொண்டான்.

பார்த்தீரா தளபதியாரே! தன் பள்ளியறைப்பஞ்சணை போல் எவ்வளவு நிம்மதியாக உறங்குகின்றான். பயம் என்பது இவன் முகத்தில் கொஞ்சமாவது தெரிகின்றதா?" என்றான் ஒருவன். அவன் குரலை அடையாளம் கண்டு கொண்ட சங்கிலி, தன்னருகே காக்கை வன்னியனும், பறங்கித்தளபதி பிரகன்ஸாவும் நிற்பதை உணந்து கொண்டான். மெல்ல எழுந்து உற்கார்ந்தும் கொண்டான்.

நிமிர்ந்து வன்னியனைப் பார்த்த சங்கிலி, 'நண்பா! நீ இப்படி கயவர்களுடன் சேர்ந்து என்னைக் காட்டிக் கொடுப்பாய் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை" என்றான்.

'நீ என் இனத்திற்கு செய்த கெடுதலுக்கு உன்னை விட்டு வைத்ததே பெரிய விடயம். வன்னியர்களை யாழ்ப்பாணத்தில் இருந்து ஓட ஓட விரட்டினாய் அல்லவா? அதற்கான பலனை இப்போது அனுபவி" என்றான் காக்கை வன்னியன்.

'கோழைத்தனமாக என்னை கைது செய்திருக்கிறீர்களே! இது முறையா?"

'உன்னை மடக்குவதற்கு இதை விட வேறு வழி எங்களுக்குத் தெரியவில்லை"

'பிற்கால சந்ததி உன்னைத்தூற்றுமே! அதையாவது நினைத்துப் பார்த்தாயா?"

'இக்கால சந்ததி பற்றியே எனக்கு கவலை இல்லை. இதில் பிற்கால சந்ததி பற்றி நான் ஏன் கவலை கொள்ள வேண்டும்"
'நாங்கள் தமிழர்கள். இனத்தால் ஒன்று பட்டவர்கள். ஒரே இரத்தம். ஒரே உறவுகள். அடித்தாலும் பிடித்தாலும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் நீ எங்கிருந்தோ வந்த பறங்கிகளுடன் உறவு வைத்திருக்கிறாயே. இது தகுமா?"

'யார் கூறியது நாங்கள் அண்ணன், தம்பியென? நீ அவ்வாறு நினைத்திருந்தால் அன்று எங்களை விரட்டியிருக்கமாட்டாய். இன்று இவ்வளவு கஷ்டத்தை எதிர்நோக்க வேண்டிய தேவையும் இல்லை"

'அன்று நடந்த சம்பவத்தை சரிவர விளங்கிக் கொள்ளாமல் முட்டாள் தனமாக உளறாதே! வன்னியர்கள் அன்று நாட்டினுள் கலகமூட்டினார்கள். ஒரு நாட்டுக்கு தலைவன் என்ற ரீதியில், அந்நாட்டின் நன்மை கருதி அவர்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று" என்றான் சங்கிலி.

இவர்கள் சம்பாஷணையை பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்த பிரகன்ஸா இடையில் புகுந்து, 'சவாலா விட்டாய் என்னிடம், இப்போது பார்த்தாயா உன் உயிர் என் கையில்" என்றான்.

'என் உயிரைத் தான் உன்னால் எடுக்க முடியும். என் மக்களின் அன்பையும், தேசப்பற்றையும் உன்னால் ஒருபோதும் பெற முடியாது" என சங்கிலி ஆவேசமாகக் கத்தினான்.

'சிங்கம் கூட்டில் இருந்தாலும் கர்ச்சிக்கின்றது" என கொக்கரித்தான் பிரகன்ஸா. பின், 'உன் திமிர் என்றும் உன்னை விட்டுப் போகாது. உனக்குத் தகுந்த பாடம் புகட்டுகின்றேன்" என்றான்.

'வீரமும், தேச பக்தியும் எம் இரத்தத்தில் இரண்டறக் கலந்துள்ளன. நாங்கள் சந்தர்ப்பவாதிகள் அல்ல. என் போன்ற ஆயிரமாயிரம் பேர் இன்னும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றார்கள். அவர்கள் இருக்கும் வரை ஒரு துரும்பைக் கூட உன்னால் அசைக்க முடியாது"

'உன் அண்ணன், அங்கு எனக்கு கட்டுப்பட்டு ஆட்சி நடத்துகின்றான்"

'காலம் வரும்போது மக்கள் அவனுக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள். பறங்கிகளே! நீங்கள் மீண்டும் ஓடத்தான் போகிறீர்கள். இது நிச்சயம்;" என சங்கிலி முழங்கினான்.

'நீ இருந்தால் தானே இதெல்லாம் நடக்கும். உனக்கு தக்க தண்டனை தருகின்றேன் பார்!" எனக் கூறிய பிரகன்ஸா வாயிலைப்பார்த்து, 'யாரங்கே?" என கூவி அழைத்தான். அவன் அழைப்பின் பேரில் ஐந்தாறு பறங்கி வீரர்கள் சட சட என ஓடி வந்தார்கள்.

'இவனை இழுத்துச் சென்று தூணில் கட்டி நூறு கசையடி கொடுத்து மீண்டும் சிறையில் அடையுங்கள். நீர் கூடக்கொடுக்க கூடாது" எனக் கட்டளையிட்டான்.

அதற்கமைய வீரர்களும் சங்கிலியை தர தரவென நிலத்தால் இழுத்துச் சென்று தூணில் கட்டினார்கள். ஒரு பறங்கி வீரன் நீண்ட சவுக்கொன்றால் தாறு மாறாக சங்கிலியை அடித்தான். எந்தவித எதிர்ப்பையும் காட்டாதிருந்த சங்கிலியின் உடலின் பல இடங்கள் வெடித்து அதிலிருந்து இரத்தம் வழிந்தோடியது. அவன் அணிந்திருந்த உடை இரத்தத்தினால் தெப்பமாக நனைந்திருந்தது. தலை துவண்டு தொங்கியது. விதிக்கப்பட்ட தண்டனை நிறைவடைந்ததும் சங்கிலி இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் சிறையில் வீசப்பட்டான்.

மயங்கிய நிலையில் பல மணி நேரம் சிறையில் உறங்கிக் கிடந்த சங்கிலி, மயக்கம் தெளிந்து எழுந்ததும் தன்னருகே இருந்த உருவத்தைப் பார்த்து திகைப்படைந்து 'நீயா?" என்ற சொற்கள் அவன் வாயிலிந்து வெளிவரத் தொடங்கியது.

சாதிக்க வருவான்....

0000000000000000000000000000

பாகம் 29 துவண்ட கொடி


பறங்கி வீரர்களால் சிறையில் தள்ளப்பட்டிருந்த சங்கிலி இரத்தம் அதிகமாக வெளியேறியதால் நினைவற்று மயங்கிக் கிடந்தான். இக்கொடுமையை காணச் சகிக்காத பகலவனும் தன் ஒளியை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டு மேற்றிசையில் மறைந்து விட்டான். மெல்ல இருள் ஏறியதும், ஓர் உருவம் மெதுவாக சங்கிலியிருந்த சிறைக்கதவை ஓசைப்படாமல் திறந்து உள் வந்தது.

அங்கு, சங்கிலியனை கொஞ்ச நேரம்; வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தது. பின்னர் குருதியில் தோய்ந்த அவன் ஆடைகளை உடல் வலிக்காதவாறு மெதுவாகக் கழற்றியது. வீரஞ்செறிந்த அவன் உடலின் நிலை கண்டு அவ்வுருவத்தின் கண்களில் இருந்து நீர் வழிந்தது. மெல்ல சங்கியது காயங்களை சுடுநீர் கொண்டு சுத்தப்படுத்தி பின் காயங்களுக்கு மருந்திட்டுக் கட்டியது. தான் கொணர்ந்த மாற்றுடையை அவனுக்கு அணிவித்து, உயர்ந்த மது வகை ஒன்றை அவன் வாய்க்குள் ஊற்றியது. சங்கிலியின் கடைவாயால் வழிந்தோடிய மதுவை ஆசையுடன் துடைத்து விட்டது. பின் நீண்ட நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தது.

இந்த உபசாரங்களால் சிறிது சுய நினைவுக்கு வந்த சங்கிலி மெல்லக் கண் விழித்தான். உடம்பு, உயிரே போய்விடும் அளவிற்கு வலித்தது. தன் வாயருகே மது மணப்பது போல உணர்ந்ததால் சற்று அங்கும் இங்கும் கண்களைத் திருப்பியவன், பக்கத்தில் இருந்த உருவத்தைப் பார்த்ததும் “நீயா?” என வினவியதுடன் எழுந்திருக்கவும் முற்பட்டான். அது முடியாமல் போகவே மீண்டும் படுத்துக் கொண்டான்.

“ஆம் நானே தான்”

“இங்கு எப்படி வந்தாய்?”

“இதென்ன கேள்வி, என்னிடத்தில் நான் சுற்றித்திரிய யார் தடுப்பார்கள்?” என்று கூறியது அவ்வுருவம். அப்பொழுது தான் சங்கிலி, தன் காயங்கள் சுத்தப்படுத்தப்பட்டு மருந்திடப்பட்டு உடை மாற்றியிருப்பதை கவனித்தான். இதனால் சங்கடப்பட்ட சங்கிலி,

“எலியானா! இந்த உடைகளை மாற்றியது யார்?”

“ஏன்.. நான் தான்…”

“உனக்கு வெட்கமாக இல்லையா?”

“எதற்கு?”

“ஒரு ஆடவனின் உடையை மாற்றுவதற்கு”

“இதில் வெட்கமென்ன இருக்கின்றது. உங்களை என்றோ நான் கணவனாக வரித்து விட்டேன். ஒரு கணவனுக்கு மனைவி இதைக் கூடச் செய்யக் கூடாதா?” என நகைத்தாள்.

“விளையாடாதே எலியானா!”

“நீங்கள் விளையாடும் நிலையிலா இருக்கிறீர்கள்”

“உன் வேடிக்கைப் பேச்சுக்களை நிறுத்து, அது ரசிப்பதாக இல்லை”

“அப்படியானால் ருசிக்கும் படியாக ஒன்று தருகின்றேன்” என அவன் இதழ்களை தன்னிதழ்களால் அழுத்தி முத்தமிட்டாள்.
சிறிது நேரத்தில் நிகழ்ந்து விட்ட இந்தச் சம்பவத்தால் நிலை தடுமாறிய சங்கிலி, “என் நிலை தெரியாமல் விளையாடுகின்றாய். இது தகாது” எனக் கூறினான். 

“நன்றாகவே தெரியும். நீங்கள் உறங்குங்கள். நாளை உங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றேன்” எனக் கூறிவிட்டுச் சென்றாள். சங்கிலி பேச சக்தியற்று வாயடைத்து நின்றான்.

மறுநாளும் இரவு எலியானா சங்கிலி சிறைக்குள் வந்தாள். கூடவே கையில் ஓர் உடையையும் கொண்டு வந்தாள்.

“கிளம்புங்கள்”

“எங்கு?”

“உங்கள் ஊருக்குத் தான்”

“தளபதி கருணை அடிப்படையில் விடுவித்து விட்டானா?”

“தளபதியாவது விடுவிப்பதாவது”

“பிறகெப்படி செல்வது. தப்பிப் போகச் சொல்கிறாயா?”

“வேறு வழியில்லை”

“நான் மாட்டேன். நான் என்ன கோழையா?”

“இனியும் தாமதிப்பது எம் இருவருக்குமே ஆபத்து. உங்களை அவர்கள் நேர்மையாகவா பிடித்தார்கள். நீங்கள் தப்பிச் செல்வதில் எந்தவித தப்பும் இல்லை”

“நான் அதை விரும்ப மாட்டேன்”

“நீங்கள் இங்கிருந்து உயிரை விடுவது தான் மிச்சம். அங்கு உங்களுக்காக காத்திருக்கும் உங்கள் நாட்டு மக்களுக்காகவேனும் நீங்கள் தப்பிச் செல்லுங்கள்” எனக் கூறிய எலியானா முக்காடுடைய ஒரு சட்டையை எடுத்து சங்கிலியிடம் கொடுத்து அணிவித்தாள். சுpறையில் இருந்து மெதுவாக வெளியேறிய இருவருக்கும் காவலர்கள் தடை விதிக்கவில்லை. காரணம் எலியானா பிரகன்ஸாவின் காதலி. முக்காடிட்ட உருவம் யாரென்பது காவலாளிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சங்கிலியை மெதுவாக கோட்டையின் பின்புறம் அழைத்து வந்த எலியானா, அங்கு தயாராக இருந்த ஒரு குதிரை வண்டியில் அவனை ஏற்றி விட்டு குதிரை ஓட்டுபவனிடம், “வீரனே, இவரை கவனமாக நான் கூறியது போல கொண்டு போய் சேர்” என்றாள்.

பின்னர் சங்கிலியைப் பார்த்த போது, அவள் கண்களில் தெரிந்த ஏக்கத்தை அவன் கவனித்தான்.

“எலியானா! நீயும் என்னுடன் வந்து யாழிலே தங்கியிருக்கலாமே!”

“அது தவறு”

“எது?”

“நான் உங்களுடன் வருவது”

“ஏன்?”

“நீங்கள் திருமணமானவர். அத்துடன் காதலியும்…” என இழுத்தாள்.

“பரவாயில்லை! ஒரு உற்ற தோழியாக என் அரண்மையில் தங்கியிரு”

“நீங்கள் என் மீதுள்ள இரக்கத்தால் என்னை அழைக்கிறீர்களே தவிர, உங்களுக்கு என் மீது எந்தவித தனிப்பட்ட பற்றும் இல்லை” என கூறினாள். அதனைக் கேட்ட சங்கிலி பேசாதிருந்தான். அவள் விழிகளில் இருந்து நீர் வழிந்தது. அவள் கையை ஆதரவுடன் பற்றிய சங்கிலி அவள் நெற்றியில் முத்தமிட்டு, “எலியானா நீ நிச்சயம் வரலாறுகளில் பேசப்படுவாய். நீ செய்திருக்கும் உதவியை என்றுமே நான் மறக்க மாட்டேன்” எனக் கூறினான்.

பெருகி வந்த அழுகையை அடக்கிக் கொண்ட எலியானா, “நேரமாகிறது. புறப்படுங்கள்” எனக் கூறினாள். இதனால் சங்கிலி வண்டியும் மெல்ல மெல்ல நகர்ந்தது. அவன் வண்டி கண்ணிலிருந்து மறைந்ததும் அழுகையை அடக்க முடியாது வாய்விட்டழுதாள். பின்னர் மெல்லத் திரும்பி கோட்டையினுள் அடியெடுத்து வைக்க திரும்பிய போது, பின்னால் நின்ற பிரகன்ஸாவை கண்டு அதிர்ச்சியுற்றாள்.

“என்ன உன் காதலனை தப்புவித்து விட்டாயா? நல்லது. நான் அன்றே சந்தேகப்பட்டேன். இன்றும் சந்தேகத்தில் சிறை சென்று பார்த்த போது அவனைக் காணவில்லை. அவன் இப்போது எங்கள் கண்ணிலிருந்தே மறைந்து விட்டான். அவனைப் பிடிக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது நீ அறியாததுமல்ல”

“அவர் வீரர். உன்னை மாதிரி கோழையல்ல முதுகில் குத்துவதற்கு”

“ஓகோ! அப்படியா சங்கதி. சந்தோஷம்! அவனைத் தப்புவித்ததற்கு உனக்கு நல்ல பரிசை நான் தர வேண்டாமா?” எனக் கூறிய படி பிரகன்ஸா தன் இடையில் செருகியிருந்த குறுவாளை எடுத்து அவள் மார்பில் ஓங்கிக் குத்தினான். எலியானா துவண்டு நிலத்தில் விழுந்தாள். அவளது வெள்ளை மேனியையும், பூமியையும் செந்நிறம் ஆட்கொண்டது. இது சங்கிலிக்கு தெரிய வாய்ப்பில்லை.

இதேவேளை, ஆவேசத்துடன் சங்கிலி யாழ்ப்பாணத்தின் கதியை நிர்ணயிப்பதற்காக கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான்.

சாதிக்க வருவான்....

00000000000000000000000000

பாகம் 30 போர் ஆயுத்தம்


நகரையடைந்த சங்கிலியைக் கண்டதும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உடனடியாகவே யாழ்ப்பாணம் எங்கும் இந்தச்செய்தி தீயென பரவிவிட்டது. அரண்மனைக்குள் அரக்கப்பரக்க ஓடிவந்த அப்பாமுதலியிடம், பரநிருபசிங்கன்
“என்ன மந்திரியாரே! என்ன விடயம்?”

“சங்கிலி வந்து விட்டான்”


“எந்தச்சங்கிலி?”

“அதுக்குள்ளேயே மறந்துவிட்டாயா? உன் தம்பி தானப்பா”
அதைக் கொஞ்சம் நம்ப மறுத்த பரநிருபசிங்கன் பயத்தால் வெல வெலத்து,

“பறங்கிகளிடம் இருந்து எப்படித் தப்பி வந்தான் அவன்?”
“அதெப்படி எனக்குத் தெரியும்! நீ இங்கிருப்பது ஆபத்து. உடனடியாக எங்காவது ஓடிவிடு”

“நீங்கள்….”

“நான் அவன் கால் கையிலாவது விழுந்து சமாளித்துக் கொள்வேன். அவன் தான் என் மகளைக் காதலிக்கிறானே” எனப் பெருமையாகச் சொன்னார் அப்பாமுதலி.

“இப்பொழுது என்ன செய்வது?”

“வன்னிக்காட்டுக்குள் ஓடிவிடு. வன்னியரிடமும் அகப்பட்டு விடாதே!” என்று எச்சரித்தார். பரநிருபசிங்கனும் சங்கிலியன் கைக்குள் அகப்படாமல் வேகமாக கோட்டையில் இருந்து தப்பிச் சென்று மறைந்தான்.

சங்கிலி வருகையை அறிந்த இராசமாதேவி படுக்கையில் இருந்து துள்ளியெழுந்து அவனைக் காணச் சென்றாள். சங்கிலி சிறைப்பட்டதிலிருந்து அவள் அன்ன ஆகாரமின்றி படுத்த படுக்கை தான். நன்றாக மெலிந்துவிட்டாள். வண்டியிலிருந்து இறங்கிய சங்கிலியை ஆதரவுடன் பிடித்து மஞ்சத்தில் இருத்தினாள்.

“பாவிகள்! இப்படிச் சித்திரவதை செய்திருக்கிறார்களே. இவர்களை தெய்வம் சும்மா விடாது” என அழுதாள்.

“தேவி! தெய்வத்தை வேண்டிப் பயனில்லை. நாம் தான் அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை துரிதமாகக் கவனிக்க வேண்டும்” என்றான் சங்கிலி.

“இந்த நிலையிலா?”

“ஆம்”

“சிறிது காலம் ஓய்வெடுங்களேன். உடம்பு புண்கள் சற்று ஆறட்டும்” என்று கூறியவள் ஏதோ நினைத்தாற் போல், “வடிவழகி அன்று கூறியவைகளை உங்களுக்குக் கூறி உஷாப்படுத்துவதற்கிடையி;ல் எல்லாம் முடிந்து போய் விட்டது” என்றாள்.

‘வடிவழகி’ என்ற சொல்லைக் கேட்டதும் கண்களை அகல விரித்துப் பார்த்த சங்கிலி,

“வடிவழகியா…!”

“ஆம்”

“அவள் எப்போது இங்கு வந்தாள்”

“நீங்கள் பிடிபடுவதற்கு முதன் நாள்”

“எதற்காக?”

“உங்களை எச்சரிக்க…”

“எது விடயமாக?”

“உங்களுக்கெதிராக தன் வீட்டில் சதி நடப்பதாக கூறினாள். அந்தச் சதியில் யார், யார் பங்குகொண்டார்கள் என்பதைக் கூறவில்லை”

“அது இப்பபொழுது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வடிவழகி எங்கே?” என ஆவலுடன் வினவிய சங்கிலியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை தேவி கவனிக்கத் தவற வில்லை.

“அவள் வீட்டில் தான்”

அதற்குள் சங்கிலியை தேடி வந்த தோழன் மாப்பாணன் சங்கிலியின் நிலையைக் கண்டு பெரிதும் கவலையுற்றான்.

“மாப்பாணா நம் தளபதியெங்கே? வந்தது முதல் அவரைக் காணவில்லையே!”

தனது சோகத்தையெல்லாம் மனதில் அழுத்திக் கொண்ட மாப்பாணன்,

“எதற்கு?” எனக் கேட்டான்.

“போருக்காக நம் படைகளை மீண்டும் தயார்ப்படுத்த”

“இந்த நிலையிலா?”

“நான் மிகுந்த தேக ஆரோக்கியத்துடன் தான் இருக்கின்றேன்”
இதற்குள் இடைப்புகுந்த தேவி, “நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. நீங்களாவது சொல்லி இவரை ஓய்வெடுக்க வையுங்களேன்” எனக் கெஞ்சினாள்.

“அரசே! தேவி சொல்வதும் சரி தானே! கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்” என்றான் நண்பன். ஆத்திரமடைந்த சங்கிலி, “எங்கே இமையாணன். அவனை வரச்சொல் நான் கதைக்கின்றேன்” என சற்று உரத்த தொனியில் கூறினான்.

“அவர் வரமுடியாது” தயக்கத்துடன் மாப்பாணன்.

“ஏன்”

“அவர் இப்பொழுது உயிருடன் இல்லை” எனக் கூறிய மாப்பாணன் அழுது விட்டான். இதைக்கேட்ட சங்கிலி தன் உயிரே போய்விட்டதைப் போல உணர்ந்தான். சோகமும், ஆத்திரமும் கொப்பளிக்க, “எப்படி?” என வினவினான்.

“உங்களைப் போலவே உங்களுக்கு பெரும் பலமாக இருந்த தளபதியையும் வஞ்சகமாக வெட்டிச் சாய்த்துவிட்டார்கள் துரோகிகள்”

இதைக்கேட்ட சங்கிலி செய்வதறியாது, “இப்படிப்பட்ட ஆயிரமாயிரம் வீரர்களின் கனவுகளுக்காவது நாம் உடனடியாக போரைத்தொடங்க வேண்டும். மாப்பாணா! இன்றிலிருந்து நீ எம்தேசத்தின் தளபதிப் பொறுப்பை எடுத்துக் கொள். இது என் கட்டளை. விரைவாக செயற்படு. படைகளைத் தயார்ப்படுத்து. ஒரு கணமும் ஓய்வெடுக்க நேரமில்லை. மிக விரைவில் போர் தொடங்கும்” என்றான். மன்னனை வணங்கி விடைபெற்றுச் சென்ற வீரமாப்பாணன் போருக்கான ஆயத்தங்களைக் கவனிக்கலானான். குறுகிய காலத்தில் நிறைவான படையையும் திரட்டி விட்டான். மன்னனைக் கண்ட நாட்டு மக்கள் தாமாக விரும்பி படைகளில் இணைந்து கொண்டனர். நல்லூர் கோட்டையில் எந்நேரமும், வாள்களும் வேல்களும் செய்யும் ஓசை ‘ணங்… ணங்…’ என கேட்டுக் கொண்டே இருந்தது. மீண்டும் சங்கிலியனின் படை விடியலுக்கான போரை நோக்கி ஆயத்தமாகியது. 

சாதனை முடிந்தது .

http://sankili.blogspot.fr/2010_09_01_archive.html


Comments