மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்- அறிவியல் - 05 - பிரபஞ்சவியல் -பாகம் 06 -பாகம் 11 .



நமது நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித்தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் இதுவரை கரும் சக்தி (Dark Energy), மற்றும் கரும் பொருள் (Dark Matter) குறித்து சற்று விரிவாக ஆராய்ந்தோம். இன்றைய தொடரில் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் புதிய அத்தியாயம் ஆரம்பமாகின்றது. அதாவது ஆதிகாலம் தொட்டு இன்றைய நவீன விஞ்ஞான யுகம் வரை பிரபஞ்சம் தொடர்பான மனிதனின் பார்வையும் அறிவும் எவ்வாறு மாற்றம் அடைந்து வருகின்றது என்பது குறித்து இவ்வத்தியாயத்தில் ஆராய உள்ளோம்.

20 ஆம் நூற்றான்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'

Bertrand Russel

விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார்.

ஆமையின் ஓட்டில் பூமி

அந்தப் பெண்மணி மட்டுமல்ல. இன்றைய நவீன யுகத்தில் கூட சில மனிதர்கள் பூமியைத் தாங்குவது ஆமை என்பது போன்ற கேலிக்கிடமான உவமைகளையும் கற்பனைகளையுமே பிரபஞ்சத்தைப் பற்றிய தமது பார்வையாகக் கொண்டுள்ளார்கள். 'நாம் ஏன் இன்னமும் பிரபஞ்சத்தைப் பற்றி சிறந்த விதமாய் சிந்திக்கவோ அறியவோ முடியாது?' என இவர்கள் நினைப்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் பின்வரும் கேள்விகளை நமக்கு நாமே எழுப்பிக் கொள்ள வேண்டும். அதாவது இப் பிரபஞ்சத்தைப் பற்றி நமக்கு என்னதெரியும்? நமக்குத் தெரிந்த விடயங்களை எப்படி நாம் கண்டு கொண்டோம்? எங்கிருந்து இந்தப் பிரபஞ்சம் வந்தது? எங்கு இப்பிரபஞ்சம் போய்க் கொண்டிருக்கிறது? பிரபஞ்சத்துக்குத் தோற்றம் உள்ளதா? அப்படித் தோற்றம் உள்ளதெனில் அதற்கு முன் என்ன நடந்தது? காலத்தின் இயல்பு என்ன? இக்காலம் ஒரு முடிவுக்கு வரக் கூடுமா?

காலத்தின் தொடக்கம் (Big Bang)

இப்படி இன்னும் பல கேள்விகளை பிரபஞ்சம் குறித்து முன் வைக்கலாம். இன்றைய நவீன யுகத்தில் பௌதிகவியல் (Physics) துறையில் விஞ்ஞானிகள் அடைந்து வரும் முன்னேற்றம் காரணமாக விருத்தியடைந்து வரும் புதிய தொழிநுட்பங்கள் மிக நீண்ட காலமாக நிலவி வரும் இத்தகைய கேள்விகளுக்கு விடை கூறக் கூடும். எதிர்காலத்தில் எப்போதாவது இக்கேள்விகளுக்கு நாம் பெறும் விடைகள் இன்று பூமி சூரியனைச் சுற்றி வருவதை நாம் அறிந்திருப்பதைப் போல் தெளிவானதாக இருக்கலாம் அல்லது ஆமையின் ஓட்டில் உலகம் அமைந்துள்ளது என்பது போன்ற கேலிக்குரியதாக இருக்கலாம். காலம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

பிரபஞ்சவியலில் (Cosmology) முக்கியமான அடிப்படை அவதானங்கள் அவற்றுக்கான விளக்கங்கள் மற்றும் உண்மையான வாதங்கள் என்பன வரலாற்றில் சிறிது மெதுவாகவே தோற்றம் பெற்றன. 20 ஆம் நூற்றாண்டில் தான் பௌதிகவியலின் அபார வளர்ச்சி காரணமாக பிரபஞ்சவியலின் வளர்ச்சியும் சற்றுத் துரிதமடைந்தது. மிக நீண்ட காலத்துக்கு முன் அதாவது கி.மு 340 இல் கிரேக்க நாட்டின் அறிவியலாளரான அரிஸ்டோட்டில் தனது புத்தகமான 'On The Heavens' இல் பூமி தட்டையான கிண்ணமல்ல (Flat Plate) அது கோள வடிவமானது (Sphere) என்பதற்கு முதன் முதலாகத் தெளிவான இரு வாதங்களை முன்வைத்திருந்தார்.

'On The Heavens' புத்தகம்

இதில் முதலாவது வாதமாக சந்திர கிரகணத்தின் போது அதாவது சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவே பூமி வரும் போது பூமியின் நிழல் வட்ட வடிவத்தில் சந்திரனில் வீழ்வது அது கோளமாக இருப்பதனாலேயே என்பதைக் கூறினார். இரண்டாவது வாதமாக பூமியின் வடக்கே துருவப் பகுதிக்கு அண்மையிலுள்ள கிரீஸ் இல் இருந்து நோக்கும் போது துருவ நட்சத்திரம் வடக்குத் திசையில் தாழ்வாகக் காணப்படும். ஆனால் சற்றுக் கீழே துருக்கியில் இருந்து நோக்கும் போது இந்நட்சத்திரம் வடக்கு வானில் மூலையுடன் சற்றுத் தள்ளித் தென்படும். (துருவ நட்சத்திரம் வடதுருவத்தில் இருந்து நோக்கும் போது தலையுச்சிக்கு நேரே மேலே வானத்தின் மத்தியிலும் பூமத்திய ரேகையில் இருந்து நோக்கும் போது வடக்குத் திசையில் வானத்தின் மூலையிலும் காணப்படும்.) பூமி தட்டையாக இருந்தால் துருவ நட்சத்திரம் எப்போதும் உச்சி வானில் மட்டுமே தென்பட வேண்டும். இவ்வித்தியாசம் ஏற்படக் காரணம் பூமி கோளமாக இருப்பதனால் என்பதும் தெளிவாகின்றது.

துருவ நட்சத்திரம்

அரிஸ்டோட்டில் கணிதவியல் தேற்றங்களையும் கிரீஸ் மற்றும் துருக்கிக்கான தூரத்தையும் பயன்படுத்தி பூமியின் அண்ணளவான சுற்றளவைக் கணித்து அது 400 000 Stadia எனக் கூறினார்.
(1stadia - 200 yards)

கிரேக்க மேதை அரிஸ்டோட்டில்

இந்த இரண்டு வாதங்களை விட தெளிவாக நோக்கப் படும் ஒரு அவதானமும் பூமி கோள வடிவானது என்பதை நிரூபிக்கின்றது. அதாவது ஒரு கடற்கரையிலிருந்து நோக்கும் போது கடலில் தூரத்தில் ஒரு பாய்மரக் கப்பல் வருகின்றது என வைத்துக் கொள்ளுங்கள். அப்போது நமது பார்வையில் முதலில் பாய்மரக் கப்பலின் உச்சியிலுள்ள துணியே தெரியும். பிறகு படிப்படியாக முழுக் கப்பலும் தெரிய்ம். இதற்குக் காரணம் பூமி கோள வடிவாக இருப்பது ஆகும்.

பிரபஞ்சவியல் 7 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் II)

நட்சத்திரப் பயணங்கள் விண்வெளித் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய பாகமாக 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் சென்ற வாரம் புதிய அத்தியாயம் தொடங்கியிருந்தோம். இப்பகுதியில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 21 ஆம் நூற்றாண்டு வரை பிரபஞ்சம் பற்றிய நமது பார்வை எவ்வாறு மாறி வருகின்றது என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம்.

சென்ற தொடரில் வரலாற்றின் முதல் வானியல் மேதை எனக் கருதக் கூடிய கிரேக்க தேசத்தைச் சேர்ந்த அரிஸ்டோட்டில் மற்றும் அவர் எழுதிய புத்தகமான 'On The Heavens' இல் பூமியைப் பற்றிய அவரின் நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டோம். பூமி கோள வடிவமானது என்று முதன்முறை கூறியவர் இவரே. எனினும் கிறித்தவ மதத்தின் ஆதிக்கமோ அல்லது வேறு ஏதும் நம்பிக்கை அடிப்படையிலேயோ அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தின் மையம் பூமி என்ற பிழையான அவதானத்தை நம்புவதற்குக் காரணமானது.

இவரின் கூற்றுப்படி 'பூமி பிரபஞ்சத்தின் மையம் என்பதுடன் நிலையானது. இதை சூரியன், சந்திரன், ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் என்பன வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன' என்று விளக்கப்பட்டது.

இவரைப் பின்பற்றி கி.பி 2 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எகிப்து நாட்டின் இன்னொரு மேதையான தொலமி பூமியை மையமாகவும் அதைச் சுற்றி 8 கோள வளையங்களில் (Spheres) முறையே சந்திரன்,புதன்,வெள்ளி,சூரியன்,செவ்வாய்,வியாழன்,சனி, மற்றும் நிலையான நட்சத்திரங்கள் என்பன அமையுமாறு ஒரு கணித வரைபடத்தை ஆக்கினார். இவ்வரைபடம் தொலைக்காட்டிகள் மூலம் நோக்கப் படாத கண்ணால் பார்க்கக் கூடிய வின்வெளியின் பிரத்தியட்சத் தோற்றத்தை வெறும் அவதானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அதில் உள்ள பொருட்களின் இயக்கத்தை விளக்கியது.

தொலமியின் கோள் வளைய மாதிரி

இவ்வரைபடம் முழுதும் விஞ்ஞான ரீதியாக இல்லாவிட்டாலும் கிறித்தவ தேவாலயங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டு அவர்களின் புவி மையப் பரப்புரைகளை நியாயமாக்கி வந்தது. எனினும் கி.பி 1514 இல் நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ் எனும் போலந்து நாட்டைச் சேர்ந்த பாதிரியார் தொலமியின் மாதிரியை விட மிக எளிமையான வரைபடத்தை முன்வைத்தார். இதில் பிரபஞ்சத்தின் மையம் சூரியன் எனவும் சூரியனை மையமாகக் கொண்டு சந்திரன்,ஏனைய கிரகங்கள், மற்றும் நட்சத்திரங்கள் வட்ட ஒழுக்கில் வருகின்றன என்றும் அவர் விளக்கியிருந்தார். எனினும் இவரின் மாதிரியை அறிஞர்கள் ஏற்றுக் கொள்ள மேலும் ஒரு நூற்றாண்டு ஆனது.

நிக்கலஸ் கொப்பர்னிக்கஸ்

சில நூற்றாண்டுகளாக நீடித்து வந்த தொலமி மற்றும் அரிஸ்டோட்டிலின் புவி மையக் கோட்பாட்டு மயக்கம் அடிபட்டுப் போனது கி.பி 1609 இல் தான். முதன் முதலில் தொலைக்காட்டி ஒன்றின் மூலம் அவதானங்களை மேற்கொண்டு கேத்திர கணித வரைபடங்களை வரைந்த அறிஞரான கலீலியோ கலிலி இவ்வருடத்தில் தான் தன் தொலைக்காட்டி மூலம் வியாழனைச் சுற்றி துணைக் கோள்கள் காணப்படுவதை கண்டு பிடித்தார். இவரின் அவதானத்துக்கும் தொலமியின் மாதிரிக்கும் தொடர்பின்மை உறுதியானதை அடுத்து கலீலியோ கொப்பர்னிக்கஸ்ஸின் மாதிரியை ஏற்றுக் கொண்டார்.

கலீலியோ கலீலியின் தொலைக்காட்டி

இவரைத்தொடர்ந்து அதே நூற்றாண்டில் வாழ்ந்தஇன்னொரு வானியலாளரான ஜொஹான்னாஸ் கெப்ளர் கொப்பர்னிக்கஸ் மற்றும் கலீலியோவின் யோசனைகளை ஏற்றுக் கொண்டதுடன் இன்னொரு படி மேலே போய் சூரியனைச் சுற்றிக் கிரகங்கள் வட்ட ஒழுக்கில் அல்லாது நீள்வட்டப் பாதையில் வலம் வருகின்றன என்றும் விளக்கினார்.

கெப்ளரின் நீள்வளைய மாதிரி

வானியலில் கிரகங்களின் நீள்வட்ட ஒழுக்கு என்பது எதிர்பாராத ஒரு அவதானமாகும். கிரகங்கள் இப்படித்தான் சூரியனை சுற்றி வருகின்றன என அக்காலத்தில் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட முடியாமைக்குக் காரணம் ஈர்ப்பு விசை (Gravity) குறித்த இவர்களின் விளக்கம் போதாமையேயாகும். இதன் பின் தான் அறிவியலில் புரட்சி ஏற்படப் போகின்றது என அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆம். சர் ஐசாக் நியூட்டன் அறிவியல் உலகில் பிரவேசித்தார். கிரகங்கள் சூரியனைச் சுற்றி வரக் காரணம் சூரியனின் காந்தப் புலத்தால் அன்றி அதன் ஈர்ப்பு விசையால் என அவர் கூறினார். மேலும் சந்திரன் பூமியைச் சுற்றி வரவும் பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கும் காரணம் ஈர்ப்பு விசையே என்றும் அவர் கூறினார். ஈர்ப்பு விசை என்பது பிரபஞ்சத்தில் எந்த இரு பொருட்களுக்கும் இடையே காணப்படும் ஒரு வித கவர்ச்சி விசை. இது பூமியில் உள்ள சிறு கற்கள் மரங்கள் மட்டுமன்றி கோள்கள் உட்பட நட்சத்திரங்கள் என்பவற்றுக்கு இடையிலும் காணப்படுகின்றது.

சர் ஐசாக் நியூட்டன்

இந்த ஈர்ப்பு விசை ஒரு பொருளின் திணிவில் தங்கியுள்ளது என அவர் தெரிவித்தார். நியூட்டன் 1687 இல் எழுதிய 'Philoshopiae Naturalis Principia Mathematica' 'எனும் புத்தகத்தில் சூரியன் மற்றும் கிரகங்களுக்கு இடையே மட்டுமல்லாது குறித்த இரு பொருட்களுக்கு இடையே தொழிற்படும் ஈர்ப்பு விசை அவற்றின் இயக்கம் குறித்த மிகவும் சிக்கலான கணிதச் சமன்பாடுகளும் சூத்திரங்களும் காணப்படுகின்றன. மேலும் பௌதிகவியலில் முக்கிய பகுதிகளான இயக்கவியல் (Dynamics), நிலையியல் (statics) ஆகியவற்றில் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகக் கணிதவியலில் நுண்கணிதம் (Calculas) எனும் பிரிவை விருத்தி செய்தவர் நியூட்டனே ஆவார். இதற்காக என்றும் அறிவியல் அவருக்குக் கடமைப் பட்டுள்ளது.

'Philoshopiae Naturalis Principia Mathematica' புத்தகம்

நியூட்டனுக்குப் பின்னரும் வானியலில் பிரபஞ்சத்தின் மையம் எது என்ற குழப்பமும் நட்சத்திரங்கள் யாவும் நிலையாக ஒரு இடத்தில் இருக்கின்றன என்ற மயக்கமும் தீர்க்கப் படாமல் காணப் பட்டன. பிரபஞ்சத்தின் மையம் சூரியன் என்றும் பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதாகவும் தெளிவான பின்னர் நட்சத்திரங்கள் இரவு வானில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பயணிப்பது பூமியின் சுழற்சியால் தான் என ஊர்ஜிதமானது. ஆகவே அவை தமது இடத்தை மாற்றுவதில்லை விண்ணில் நிலையாக தத்தமது இடங்களில் உள்ளன என்ற கருதுகோளும் உருவானது.

ஆனால் நியூட்டனின் இயக்க விதிப்படி எந்த இரு பொருட்களுக்கும் இடையே ஈர்ப்பு விசை தொழிற்படும். அப்படியானால் நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசையோ இயக்கமோ இல்லாமல் இருக்குமா? அப்படியிருந்தால் அவை எப்படி நிலையானவையாக இருக்க முடியும்? எனும் கேள்வி நியூட்டனின் கொள்கைகளால் விளைந்தது...

பிரபஞ்சவியல் 8 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் III)

நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரின் பிரபஞ்சவியல் பகுதியில் புதிய அத்தியாயம் 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பில் ஆரம்பிக்கப் பட்டு இரு தொடர்கள் முடிந்து விட்டன. சென்ற இரு தொடர்களிலும் பிரபஞ்சத்தில் பூமி, சூரியன் ஏனைய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் விண்வெளியில் எவ்வாறு நிலை பெற்றுள்ளன என்ற விளக்கம் பண்டைய காலத்தில் அரிஸ்டோட்டிலில் ஆரம்பித்து நியூட்டனின் காலம் வரை எவ்வாறு திருத்தம் பெற்று படிப்படியாக மனித அறிவுக்குத் தெளிவாகி வந்துள்ளது என்பதை அலசியிருந்தோம்.

இதில் நியூட்டனின் வருகைக்குப் பின்னரும் பிரபஞ்சத்தின் மையம் எது? நட்சத்திரங்கள் எப்படி விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் காணப் படக் கூடும்? அவற்றுக்கிடையே ஈர்ப்பு விசை தொழிற்பட்டு அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலையாமல் ஏன் உள்ளன? எனும் கேள்விகளுக்கு விடை காணப்படாமல் இருந்தது.

இவ்விடயம் தொடர்பாக அக்காலத்தில் வாழ்ந்த 'ரிச்சர்ட் பென்ட்லேய்' எனும் விஞ்ஞானி ஒருவருக்கு 1691 ஆம் ஆண்டு நியூட்டன் எழுதிய கடிதத்தில் பின்வரும் விளக்கம் காணப்படுகின்றது.

ரிச்சர்ட் பென்ட்லேய்

''விண்வெளியில் எல்லைக்கு உட்பட்ட இடமும் குறிப்பிட்டளவு நட்சத்திரங்களும் மட்டும் காணப் பட்டால் தான் பிரபஞ்சத்துக்கு மையம் இருக்க முடியும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதுடன் ஈர்ப்பு விசை காரணமாக நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி உருக்குலைந்து போகும் வாய்ப்பும் ஏற்படும். ஆனால் இதற்குப் பதிலாக பிரபஞ்சம் எல்லையற்றதாகவும் அதில் முடிவற்ற நட்சத்திரங்கள் சம அளவுக்கு ஏறக்குறைய கூடவோ குறையவோ பங்கிடப் பட்டும் இருந்தால் அவை ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைய வாய்ப்பில்லை. ஏனெனில் அவை ஈர்ப்பு விசையால் ஈர்க்கப் பட்டு மோதிக் கொள்ள பிரபஞ்சத்தின் மையப் புள்ளி இதுதான் என ஒன்றும் கிடையாது.''

எல்லைக்கு உட்பட்ட பிரபஞ்சம் (Static Universe)

மேலும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நட்சத்திரமும் அதன் மையம் தான் எனக் கருதவும் முடியும். ஏனெனில் எந்த ஒரு நட்சத்திரத்தைச் சுற்றியும் எல்லாப் பக்கத்திலும் முடிவற்ற நட்சத்திரங்கள் அமைய முடியும்.

20 ஆம் நூற்றாண்டு தொடங்குவதற்கு முன்னர் யாருமே பிரபஞ்சம் விரிவடைகின்றது அல்லது சுருங்குகின்றது என்ற கருத்தை முன்வைத்ததில்லை. ஆனால் பொதுவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளப் பட்ட கருத்து என்னவென்றால் கடந்த காலத்தின் ஏதோ ஒரு பகுதியில் இன்று நாம் பார்ப்பதை விட சற்று வேறுபாடு உடைய பிரபஞ்சம் படைக்கப் பட்டது எனும் கோட்பாடு அல்லது சற்றும் மாறுபாடு அடையாத பிரபஞ்சம் எப்போதும் இருக்கிறது எனும் கோட்பாடாகும். பிரபஞ்சம் அழிவில்லாதது மற்றும் மாறுபாடில்லாதது என்ற எண்ணம் அக்கால மத நம்பிக்கைப் படி மனிதன் வயதாகி இறக்க நேரிட்டாலும் பிரபஞ்சத்துக்கு இறப்பில்லை என்ற அடிப்படையில் தோன்றியதாகும்.

நியூட்டனின் கொள்கைகளின் படி பிரபஞ்சம் நிலையான (static) ஒன்றல்ல என்று தெளிவு படுத்தப் பட்ட போதும் யாரும் பிரபஞ்சம் விரிவடைகின்றது என எண்னவில்லை.

எனினும் அக்கால வானியலாளர்கள் ஈர்ப்பு விசையுடன், (gravity) விலக்கு விசை (repulsive force) எனும் புதிய கருதுகோளைச் சேர்த்து சற்று மாறுபட்ட எண்ணங்களை முன்வைத்தனர். அதாவது மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையே ஈர்ப்பு விசை விலக்கு விசையாக தொழிற்படுகின்றது எனவும், இது கிரகங்களுக்கு இடையிலான இயக்கத்தைப் பாதிக்காது என்றும் கருதினர்.

ஈர்ப்பு விசையும் விலக்கு விசையும்

இக்கோட்பாட்டின் மூலம் முடிவற்ற நட்சத்திரங்கள் விண்ணில் சமநிலையில் பரப்பப் பட்டுள்ளன எனும் கருதுகோள் உறுதிப் படுத்தப் பட்டது. அதாவது அருகிலுள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான ஈர்ப்பு விசை மிக அதிக தூரத்தில் உள்ள நட்சத்திரங்களுக்கு இடையிலான விலக்கு விசையை சமப்படுத்துவதன் மூலம் அவை நிலையாக ஓரிடத்தில் உள்ளன என விளக்கப் பட்டது.

எனினும் இந்த சமநிலைக் கோட்பாடு இக்காலத்தில் பொருத்தமற்றது என்றே நாம் நம்புகின்றோம். இதற்குக் காரணமாக விண்வெளியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் ஒரு நட்சத்திரம் மிகச் சிறிய இடைவெளியில் இன்னொரு நட்சத்திரத்துடன் காணப் பட்டால் அவற்றுக்கிடையேயான ஈர்ப்பு விசை விலக்கு விசையை விட அதிகமாகி அவை ஒன்றின் மேல் ஒன்று வீழத் தொடங்கி விடும்.

இதற்குப் பதிலாக இவ்விரு நட்சத்திரங்களுக்கும் இடையிலான தூரம் அதிகமானால் அவற்றுக்கிடையேயான விலக்கு விசை ஈர்ப்பு விசையை விட அதிகமாகி அவை ஒன்றையொன்று விலக்கி நெடுந்தூரம் சென்று விடும்.


பிரபஞ்சவியல் 9 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் IV)


நமது நட்சத்திரப் பயணங்கள் தொடரில் பிரபஞ்சவியல் பகுதியில் இதுவரை 9 தொடர்கள் எழுதப் பட்டுள்ளன. இதில் கடந்த மூன்று தொடர்களிலும் பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் எனும் தலைப்பின் கீழ் வரலாற்று ரீதியாக விண்வெளி பற்றிய மனிதனின் புரிந்துணர்வு எவ்வாறு தெளிவு பெற்று வருகின்றது என விளக்கி வருகின்றோம். இறுதியாக சென்ற தொடரில் நியூட்டனின் காலம் வரை வானியல் அறிவு எவ்வாறு வளர்ச்சி பெற்று வந்துள்ளது என ஆராய்ந்திருந்தோம்.

இதில் நியூட்டனின் கருதுகோளான எல்லையற்ற நிலையான பிரபஞ்சத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் சம அளவில் பரப்பப் பட்டுள்ளன என்றும் இதற்கு மையம் இல்லை என்பதும் விவரிக்கப் பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து வரும் விளக்கங்களை இன்று பார்ப்போம். நியூட்டனின் இக்கருதுகோள் ஜேர்மனிய தத்துவவியலாளரான 'ஹெயின்ரிச் ஒல்பெர்ஸ்' (Heinrich Olbers) என்பவரால் விரிவு படுத்தப்பட்டது. இவர் தனது கொள்கைகளை 1823 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார். நியூட்டனின் சமகாலத்தவர்கள் பலர் அவரது எல்லையற்ற பிரபஞ்சம், எண்ணற்ற நட்சத்திரங்கள் மற்றும் மையமின்மை கொள்கைக்கு எதிராக எழுப்பிய பல கேள்விகளுக்கு எதிராக போலியான வாதங்களை பலர் முன்வைத்த போது ஒல்பெர்ஸின் வாதம் தனித்து உறுதியான ஒன்றாகத் தென்பட்டதால் அவரது விளக்கங்கள் பல அறிஞர்களால் எடுத்து நோக்கப் பட்டன.

Heinrich Olbers

Infinite Static Universe எனப்படும் எல்லையற்ற நிலையான பிரபஞ்சம் எனும் கருதுகோள் தெளிவாக விளங்குவதற்குத் தடையாக உள்ள காரணம் என்னவென்றால் இப்படிப்பட்ட ஒரு பிரபஞ்சத்தில் நமது கண் பார்வை திரும்பக்கூடிய அனைத்துக் கோணங்களிலும் ஏதாவது ஒரு நட்சத்திரம் தென்பட வேண்டும் என்பதும் இதன் காரணத்தால் இரவிலும் வானம் முழுதும் சூரிய வெளிச்சம் போல் மிகுந்த பிரகாசமாகத் தென்பட வேண்டும் எனும் முரண்பாடு இருப்பதாகும். ஒல்பெர்ஸ் முரண்பாடு (Olbers paradox) எனப்படும் இந்த மாறுபாட்டுக்கு ஒல்பெர்ஸ் முன்வைக்கும் எதிர் வாதம் என்னவென்றால் மிகவும் தூரத்திலுள்ள நட்சத்திரங்களில் இருந்து புறப்படும் ஒளி அவற்றுக்கும் பூமிக்கும் இடையே உள்ள வெளியில் காணப்படும் இடைப்பட்ட சடப்பொருளினால் உறிஞ்சப் படுவதால் அவை மங்கலாக்கப் படுகிறது என்பதாகும்.

Olbers Paradox

எனினும் இந்த விளக்கம் யதார்த்தமாகாமல் இன்னொரு முரண்பாடும் தோன்றுகின்றது. அதாவது இந்த இந்த இடைப்பட்ட சடப்பொருள் (Intervening Matter) நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒளியை உறிஞ்சினால் இறுதியின் அவை மிகவும் சூடாகி நட்சத்திரங்களைப் போல் பிரகாசமாகி மினுங்கத் தொடங்கி விடும் என்பதே இதைச் சாத்தியமற்றதாக்கும் பிரதிவாதமாகும்.

இந்த முரண்பாட்டைத் தீர்க்கும் ஒரே வழியாக பிரபஞ்சம் எல்லையற்றதாக உள்ள ஒன்று என்ற போதும் அது அழிவற்றது அல்லது நிலையானது எனும் கருத்து பொய், அதாவது Static Universe என்பது ஏற்புடையதல்ல என அக்கால விஞ்ஞானிகள் உணரலாயினர்.

ஏனெனில் பிரபஞ்சம் கடந்த காலத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் தோன்றியது என்றும் அது எப்போதாவது அழிவடையும் என்பதையும் ஏற்றுக்கொண்டால் இவ்வுண்மை நட்சத்திரங்களுக்கும் பொருந்தும். ஆகவே நட்சத்திரங்கள் எப்போதும் மின்னிக் கொண்டிருப்பவையல்ல. அவை கடந்த காலத்தில் எப்போதோ வெளியிட்ட ஒளியைத் தான் இன்று நாம் பார்க்கிறோம். வானத்தில் நாம் பார்க்கும் கோணம் எதுவாக இருந்தாலும் அங்கு ஒரு நட்சத்திரம் இருக்கும் வாய்ப்பு இருக்கின்றது எனினும் அவற்றின் ஒளி நம்மை இன்னமும் வந்து சேரவில்லை அல்லது பூமி தோன்ற முன்னமேயே கடந்து போய் விட்டது என்று கருதுவதே இரவு வானம் முழுதும் பகல் போல் பிரகாசமாக இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்று தெளிவு படுத்தும் விளக்கமாகும்.

இதையன்றி பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையே ஒளியை உறிஞ்சும் சடப்பொருள் உள்ளது எனும் விளக்கம் போலியானது என்பதும் அதை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை என்பதும் இக்கால அறிஞர்களுக்கும் புலனாகும்.

பிரபஞ்சத்துக்கு தோற்றமும் முடிவும் உண்டு என்பது இப்போதல்ல, அரிஸ்டோட்டிலுக்கு முற்பட்ட பண்டைய காலத்திலேயே இந்நம்பிக்கை ஒரு பகுதியினரிடையே காணப்பட்டது. மனித நாகரீகத்தின் ஆரம்பத்தில் காணப்பட்ட சில வானியலாளர்கள் மற்றும் யூத, கிறிஸ்தவ, முஸ்லிம் கலாச்சாரப்படி பிரபஞ்சத்துக்குத் தோற்றம் உள்ளது என்பதும் இது பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் என்றல்லாது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நிகழ்ந்தது எனவும் இது நிகழ்வதற்கு அடிப்படையான முதற் காரணம் (First Cause) எனும் எனும் சம்பவம் ஒன்று இருந்தது எனவும் பரவலாக நம்பப்பட்டது. அதாவது இப்பிரபஞ்சத்தில் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களுக்குப் பின்னணியிலும் ஒன்றுக்கொன்று காரணத் தொடர்பு இருக்கும் எனவும் ஆனால் பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு அப்படியல்லாமல் குறித்த ஏதேனும் ஒரே காரணம் தான் இருக்க முடியும் எனவும் அதுவே முதற் காரணம் மற்றும் அதிலிருந்து தான் ஏனைய காரணங்கள் தோன்றுகின்றன எனவும் விளக்கப்பட்டது.

முதற்காரணமும் காரண சங்கிலியும்

அரிஸ்டோட்டிலுக்குப் பின்னர் கி.பி 354 இல் வாழ்ந்த கிறித்தவ தத்துவவியலாளரான புனித. ஆகஸ்டின் (St.Augustine) எழுதிய புகழ் பெற்ற நூல் 'கடவுளின் நகரம்' எனப் பொருள் படும் 'The City of God.' இதில் மனித நாகரிகம் செயற்படக் காரணமான பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றும் தொழிநுட்பங்களையும் யார் கற்பித்ததோ அவரே பிரபஞ்ச இயக்கத்தையும் கற்பித்தவர் (படைத்தவர்) என்ற வாதம் காணப்படுகின்றது. மேலும் ஆகஸ்டின் எழுதிய 'தொடக்கம்' (Genesis) எனும் நூலில் கிறிஸ்துக்கு முன் 5000 ஆண்டில் பிரபஞ்சமும் மனித நாகரீகமும் தோன்றியது எனும் குறிப்பு காணப்படுகின்றது.

St.Augustine

இதில் சுவாரசியம் என்னவென்றால் இந்த வருடம் கடைசிக் குளிர்க்காலம் (Last Ice Age) முடிவடைந்த ஆண்டான கிறிஸ்துக்கு முன் 10 000 இல் இருந்து இது வெகு தொலைவில் இல்லை என்பதுடன் அக்குளிர்காலம் முடிவடைந்த ஆண்டே மனித நாகாரிகம் உண்மையில் விருத்தியாகத் தொடங்கியது என தொல்பொருளியாலாளர்கள் (Archaeologists) கூறுவதும் இதனுடன் பொருந்துவதாகும்.

கடைசிக் குளிர்காலத்தில் உலகம்

எனினும் இவருக்கு முன் வாழ்ந்த (கி.மு 384) அரிஸ்டோட்டில் அவர் கொண்டிருந்த மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டால் பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதையோ அழிவடையும் என்பதையோ ஏற்க மறுத்தது. எனவே அவரும் அக்கால அறிஞர்களும் மனித குலம் ஏற்கனவே இருந்தது எனவும் எப்போதும் இருக்கும் எனவும் நம்பினர். மேலும் பருவ கால அடிப்படையிலும் குறித்த கால இடைவெளிகளிலும் அடிக்கடி தோன்றும் வெள்ளம் போன்ற இயற்கை அனர்த்தங்கள் மனிதனை அழிப்பதற்கன்றி அவர்கள் நாகரீகமடையத் தொடங்க உதவுவதற்கே என்றும் அவர்கள் கூறினர்.

காலப் பெருவெளியில் ஏதோ ஒரு கட்டத்தில் பிரபஞ்சம் தோன்றியதா? மற்றும் அது எல்லையுடையதா? என்ற கேள்விகளை மிகத் தீவிரமாக ஆராய்ந்த தத்துவவியலாளர்களில் முக்கியமானவர் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இம்மானுவெல் கான்ட் (Immanuel Kant) இவர் எழுதிய மிக முக்கிய நூலான 'Critique of Pure Reason' 1781 இல் வெளிவந்தது. இதில் இவர் மேலே குறிப்பிட்ட இரு கேள்விகளையும் முரண்பாடுகள் எனக் குறிப்பிடுகின்றார். மேலும் இக்கேள்விகளுக்கு ஆம் என்பவர்களுக்கும் இல்லை என்பவர்களுக்கும் சமமாக இரு பிரதி வாதங்களை முன்வைக்கலாம் எனவும் இவர் கூறுகின்றார்.

Immanuel Kant

அதாவது thesis எனப்படும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் தோன்றியது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால் பிரபஞ்சத்துக்கு தோற்றம் இல்லையென்றால் எந்த ஒரு சம்பவத்துக்குப் பின்னும் முடிவற்ற காலம் காணப்படும். எனவே இது நகைப்புக்கு இடமானது ஆகும். இதேவேளை antithesis எனப்படும் பிரபஞ்சம் தோற்றமும் முடிவும் அற்றது என நம்புவர்களுக்குச் சார்பாக இவர் கூறுவது என்னவென்றால், பிரபஞ்சத்துக்கு தோற்றம் உண்டென்றால் அதற்கு முன்னர் முடிவற்ற காலம் எப்போதும் காணப்படும். எனவே ஏன் பிரபஞ்சம் இதில் குறித்த ஒரு பகுதியில் மட்டும் தனித்து தோன்ற வேண்டும்? என்பதாகும்.

இவர் முன்வைக்கும் இந்த இரு கருத்துக்களும் கூறுவது ஒரே வாதத்தைத் தான் என்பதை சற்று ஆழமாகப் படித்துப் பார்த்தால் புரியும். இது இரண்டிலும் இவர் கூற வரும் கருத்து என்னவென்றால் பிரபஞ்சம் எப்போதும் நிலையாக இருக்கிறதோ இல்லையோ காலம் என்ற ஒன்று முன்னுக்கும் பின்னுக்கும் எப்போதும் உள்ளது என்பதுதான். அதாவது காலத்தைப் பற்றிய இக்கருதுகோள் பிரபஞ்சத்தின் தோற்றத்தோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்ற ஒன்றாக் மாறி விடுகின்றது.

இக்காரணத்தால் தான் முன்னர் குறிப்பிட்ட கிறித்தவ தத்துவவியலளாரன புனித ஆகஸ்டின் பின்வரும் கருத்தைக் கூறியிருந்தார். அதாவது அவரிடம் ஒருவர் பிரபஞ்சத்தைப் படைக்கும் முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்? எனும் கேள்வியை எழுப்பியிருந்தார்.

பிரபஞ்சவியல் 10 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் V)


நட்சத்திரப் பயணங்களின் 26 ஆவது தொடரும், பிரபஞ்சவியலின் 9 ஆவது பாகமும், 'பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம்' எனும் தலைப்பின் கீழ் 4 ஆவது அத்தியாயமுமான சென்ற தொடரின் இறுதியில் ஒரு சுவாரசியமான கேள்வியுடன் முடித்திருந்தோம்.


இந்துக்களின் படைத்தற் கடவுள் 'பிரம்மா'

அதாவது, காலத்தைப் பற்றிய பழங்கால நம்பிக்கை அது எப்போதும் உள்ளது என்பதாகும். இதனால் பிரபஞ்சம் இதில் குறித்த ஒரு கட்டத்தில் மட்டும் தோன்றியது என்பதை அறிஞர்களால் ஏற்க முடியவில்லை. மேலும் பண்டைய அறிஞர்கள் ஆன்மிகவாதிகளின் 'கடவுள் பிரபஞ்சத்தைப் படைத்தார்!' எனும் கூற்றையும் ஏற்க மறுத்தனர். இதற்கு உதாரணமாகப் பினவரும் சம்பவத்தைக் கூறலாம். 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறித்தவ தத்துவவியலாளரான ஆகஸ்டினிடம் ஒருவர் பின்வரும் சிக்கலான கேள்வியை கேட்டார். அக்கேள்வி இதுதான் -

''பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்பது சரி. ஆனால் அதற்கு முன் கடவுள் என்ன செய்து கொண்டிருந்தார்?''

ஆகஸ்டின் சற்றுத் தயக்கத்துடன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். சிலவேளை அவர் இப்படி யோசித்தாரோ தெரியாது.

''இந்த மாதிரி குறுக்குக் கேள்விகள் கேட்பவர்களுக்கான நரகத்தை அவர் படைத்துக் கொண்டிருந்திருக்கலாம்!''

ஆனால் இதற்குப் பதிலாக அவர் கூறியது என்னவோ இதுதான். ''அதாவது காலம் என்பதும் கடவுளால் படைக்கப்பட்ட பிரபஞ்சத்தினுடைய ஒரு அங்கம். இக்காலம் பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன்னர் காணப்படவில்லை!''

இயேசு கிறிஸ்து

அக்காலத்தில் பெரும்பாலான மக்கள் பிரபஞ்சம் உறுதிப்பட நிலையானது என்றும் மாறுபாடு அற்றது என்றும் நம்பிய போது அதற்குத் தோற்றம் உண்டா அல்லது இல்லையா என்பது மெட்டா இயற்பியல் (Meta physics) அல்லது சமய நம்பிக்கை (theology) சார்ந்த ஒன்றாகவே இருந்தது. மேலும் இதை நிரூபிக்கத் தேவையான அவதானங்களோ ஆதாரங்களோ இருக்கவில்லை. நமக்குத் தெரிந்த பிரபஞ்சத்தின் அளவு நமது பார்வை வீச்சுக்கு உட்பட்டு இருப்பதால் அதற்கு அப்பாலுள்ள விண் பொருட்களின் நிலை பற்றி நாம் ஊகிக்க மட்டுமே முடிகின்றது. மேலும் நாம் இந்தப்பூமியில் தோன்ற முன்பு பிரபஞ்சம் எப்படி இருந்தது என்பதை அறிவதற்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில் பிரபஞ்சம் மாறுபாடில்லாதது என நம்புவது அறிவீனம் என்பதை நிகழ்காலத்தில் நாம் அறிந்துள்ளோம்.


Meta physics குறித்த விவரணம்

Theology குறித்த விவரணம்

இதற்கு அடிப்படையான விளக்கங்கள் அவதான அடிப்படையில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முதலில் அறியப்பட்டது. 1929 ஆம் ஆண்டு நவீன விஞ்ஞான உலகுக்கு மிக முக்கியமான அவதானத்தை ஆதாரமாகக் கொண்டு பிரபஞ்சம் விரிவடைந்து வருகின்றது என விஞ்ஞானி எட்வின் ஹபிள் நிரூபித்தார்.

விஞ்ஞானி எட்வின் ஹபிள்

அதாவது பூமியிலிருந்து வானத்தின் எத்திசையில் நோக்கினாலும் மிகத் தூரத்திலுள்ள அண்டங்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்று கொண்டிருக்கின்றன என்பதே இவரது அவதானமாகும். இதனால் பிரபஞ்சம் முழுமையும் விரிவடைகின்றது எனவும் கடந்த காலத்தில் இவை அனைத்தும் மிக அருகில் சேர்ந்து ஒரு தொகுதியாக இருந்திருக்கும் எனவும் கொள்ள முடியும்.

விலகிச் செல்லும் அண்டங்கள்

(இந்த முக்கிய கண்டுபிடிப்புக்காக இன்றைய நவீன உலகின் மிகப் பெரிய விண் தொலைக் காட்டிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவீன உலகில் மிகத் தொலைவிலுள்ள அண்டங்கள், கருந்துளைகள், சூப்பர் நோவாக்கள் மற்றும் விண்மீன்களைப் படம் பிடித்து பூமிக்கு தினமும் அனுப்பி வரும் ஹபிள் விண்தொலைக்காட்டி இன்று மிக முக்கிய விஞ்ஞான கருவியாக விளங்குகின்றது.)

ஹபிள் விண் தொலைக்காட்டி

விஞ்ஞானி ஹபிளின் அவதானம் பிரபஞ்சத்தின் ஆதி நிலை குறித்து பின்வரும் அபிப்பிராயத்தை ஏற்படுத்தியது. காலப்பெருவெளியில் இறந்த காலத்தில் குறித்த ஒரு புள்ளியில் (Bigbang அல்லது பெருவெடிப்பு) அதாவது ஏறக்குறைய 10 அல்லது 20 ஆயிரம் மில்லியன் புவி வருடங்களுக்கு முன்னர் அண்டங்கள் உட்பட பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் இருந்தது. மேலும் அனைத்து சடப்பொருளும் ஓரிடம் எனும் போது அது முடிவிலி (infinite) அடர்த்தியுடையதாகவும் பூச்சியத்துக்கு மிக அண்மை சிறிதாகவும் இருக்கும் என்பது என்பது மிக விசித்திரமான விஞ்ஞான, கணித ரீதியான கணிப்பாகும்.

முடிவில் அடர்த்தி உருவகப் படம்

மேலும் இப்படி ஒரு கட்டத்தில் இன்று அறியப்பட்ட அனைத்து விஞ்ஞான ரீதியான அணுகுமுறைகளும் எதிர்காலம் குறித்த எந்த ஒரு ஊகமும் இதை விளக்கத் திராணியற்றவை ஆகி விடும். ஏனெனில் இந்த ஆதி பெருவெடிப்புக்கு முன்னர் ஏதும் சம்பவம் நடந்திருந்தால் அது இன்றைய நிகழ் காலத்தைப் பாதிக்க வாய்ப்பேயில்லை. அவ்வாறான சம்பவங்களின் தோற்றம் பற்றி நம் கணக்கெடுக்கத் தேவையில்லை ஏனெனில் அவற்றை உறுதிப் படுத்தும் அவதான ஆதாரங்கள் கிடையாது.

எனினும் துவக்கத்தில் பிரபஞ்சம் மாறுபாடில்லாதது என்று கருதப் பட்ட போதே பிரபஞ்சத்துக்கு வெளியே இருந்து கடவுள் அதை முழுமையாகப் படைத்தார் எனும் நம்பிக்கை சில தரப்பினரிடையே இருந்தது. ஆனால் அப்போது விஞ்ஞான ரீதியாக அது படைக்கப் பட்டது என்று கருதப்படுவதற்கு இடமிருக்கவில்லை. அதாவது பிரபஞ்சம் எப்போதும் உள்ளது என்றே பல விஞ்ஞானிகள் கருதினர்.

இந்த பெருவெடிப்பு (Bigbang) எனும் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞான ரீதியான கொள்கையையும் ஆன்மிகவாதிகள் பயன்படுத்தி தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அதாவது பெருவெடிப்பு என்பதே கடவுளின் செயல் என அவர்கள் விளக்கமளிக்கலாம். ஆனால் அதற்கு முன்னரேயே அவர் படைக்கத் தொடங்கி விட்டார் எனக் கூறுவது பொருத்தமற்றது. ஏனெனில் விஞ்ஞான ரீதியிலான விளக்கத்துக்குப் படைப்பவர் (Creator) என்பவர் பிரபஞ்சத் தோற்றத்துக்கு அவசியமானவர் அல்ல.

பெருவெடிப்பு வரையிலான அவதான காலக்கோடு

மேலும் விரிவடையும் பிரபஞ்சத்தில் ஆதியில் கடவுள் எப்போது உலகைப் படைத்தார் என்ற கேள்விக்கு விஞ்ஞான ரீதியாகப் பெருவெடிப்பின் போதே என்று பதில் கூற முடியும். அதாவது அது தன்னிச்சையாக நிகழவில்லை என்றும் கூற முடியும். ஏனெனில் பெருவெடிப்பு (Bigbang) ஏன் நிகழ்ந்தது என்பதற்கு விஞ்ஞானிகளிடம் விடை இல்லை. அதே நேரம், 'பெருவெடிப்பின் போது கடவுள் எங்கிருந்து பிரபஞ்சத்தைப் படைத்தார்? என்பதும் திகைப்பூட்டுவது குறிப்பிடத்தக்கது.

பிரபஞ்சவியல் 11 (பிரபஞ்சம் பற்றிய நமது கண்ணோட்டம் VI)



ஆன்மிகவாதிகள் பெருவெடிப்பின் (Bigbang) போது கடவுள் உலகைப் படைத்தார் என்று தமது நம்பிக்கையை முன்வைப்பதற்கு இடமுண்டு என்று கூறியிருந்தோம்

ஆனால் இதன் போது அதாவது காலமும் வெளியும் (Time and Space) தோன்ற முன்னர் கடவுள் எங்கிருந்து இதைப் படைத்திருப்பார் என்பது சிறு பிள்ளைக்கும் தோன்றக் கூடிய கேள்வியாகும். இப்பிரச்சினையை ஆன்மிகவாதிகளின் போக்கிலேயே விட்டு விடுவோம். அதாவது இந்துக்களின் அத்வைதம் அல்லது இஸ்லாமியர்களின் கூற்றுப் படியும் ஏனைய மதங்களின் உட்பொருள் படியும் இவ்வாறு நோக்கலாம்.

'கடவுள் உருவமோ தோற்றம் மறைவோ இல்லாத ஒரு பொருள், அதுவே சத்தியம் மற்றும் எப்போதும் உள்ள பொருள்.'

இப்படிக் கருதினால் பிரபஞ்சத்தை வெளியில் இருந்து படைப்பதற்கு அவருக்கு இடமோ காலமோ தேவைப் பட்டிருக்காது. எனவே இக்குழப்பத்துக்கு இலகுவில் தீர்வு கிடைத்து விடும்.

அத்வைத வேதம்

இஸ்லாமிய கடவுட் கொள்கை

இதையே விஞ்ஞானிகளின் அணுகுமுறையைப் பார்த்தால் பிரபஞ்சத்தை விளக்கும் தத்துவம் என்பது இலகுவாக்கப் பட்ட பிரபஞ்சத்தின் ஒரு மாதிரி (model) அல்லது மட்டுப்படுத்தப் பட்ட (Restricted) அதன் ஒரு பாகமாகும். அதாவது நமது அவதானங்களை அடிப்படையாகக் கொண்ட சில அளவீடுகளை விளக்கும் விதிகளின் தொகுப்பு எனலாம். இந்த தத்துவம் நமது மனதால் உருவாக்கப் படுகின்றதே ஒழிய பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மையை உள்ளபடி அப்படியே விளக்கும் வெளிப்பாடு அல்ல.

விஞ்ஞானத்தால் கையாளப் படுகின்ற ஏதேனும் ஒரு தத்துவம் மிகச் சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளப்பட அது இரண்டு அம்சங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

1. மிகச் சொற்பமான தன்னிச்சையான அம்சங்களைக் கொண்டு பெறப்படும் அனைத்து அவதானங்களிலும் அதிக பட்ச அளவை மிகத் திருத்தமாக விளக்க வேண்டும்.

2. எதிர்காலத்தில் மேற்கொள்ளப் படவுள்ள அவதானங்களின் முடிவுகள் குறித்தும் உறுதியான எதிர்வுகூறல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

விஞ்ஞான தத்துவம் (Scientific Theory)

உதாரணமாக, அரிஸ்டோட்டிலின் தத்துவம் சாதாரணமான ஒன்று எனவும் நியூட்டனின் தத்துவம் மிகச் சிறந்தது என்றும் கொள்ளப் பட முடியும். அதாவது அரிஸ்டோட்டில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் வெறும் 4 மூலகங்களால் ஆனது எனவும் அவை பூமி, காற்று, நெருப்பு, மற்றும் தண்ணீர் என்றார். இது ஒரு எளிமையான விளக்கமாக இருந்த போதும் இதில் எதிர்காலத்துக்கான எதிர்வு கூறல்கள் எதுவும் இல்லை.


உலகம் ஆக்கப்பட்டுள்ள 4 மூலகங்கள்

ஆனால் நியூட்டனும் இதைப் போன்ற எளிமையான ஒரு தத்துவத்தைச் சொன்னார். அத்தத்துவம் ஈர்ப்பு விசை பற்றிய அவரது சமன்பாடு ஆகும். விளக்கமாகச் சொன்னால், எந்த இரு பொருளும் தமக்கிடையே ஈர்க்கப் படுகின்றன. இதன் போது அவற்றுக்கிடையே தொழிற்படும் விசையானது அவற்றின் திணிவுக்கு நேர் விகிதசமனாகவும், அவற்றுக்கிடையேயான தூரத்தின் வர்க்கத்துக்கு தலைகீழ் விகிதசமனாகவும் இருக்கும் என்பதே அச்சமன்பாடு ஆகும். இதைக் கணித வடிவில் கொடுத்தால்,
விசை - F, திணிவுகள் - m1,m2, அகில ஈர்ப்பு மாறிலி - G, இரு திணிவுகளினதும் மையத்துக்கு இடையேயான தூரம் - r எனின் சமன்பாடு இவ்வாறு அமையும்.

F = G. m1.m2/r2 , {G = 6.674×10 (−11 ஆம் வலு) N m2 kg−2}


இரு பொருட்களுக்கிடையேயான ஈர்ப்பு

இதில் அகில ஈர்ப்பு மாறிலியான G இன் பெறுமானம் முழுப் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். இதனால் இச்சமன்பாடு நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் சூரியன், நட்சத்திரங்கள்,சந்திரன், மற்றும் கிரகங்கள் ஆகியவற்றின் இயக்கத்தை விளக்கப் பயன்பட்டு வருகின்றது. இந்த விசேட தன்மையால் நியூட்டனின் இந்த ஈர்ப்புக் கொள்கை மிகச் சிறந்ததாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் இன்றைய நவீன வானவியலுக்கு இன்னும் இதுவும் பற்றாத நிலை இருப்பது வியப்பான உண்மையாகும். ஆம். நாம் இந்த ஈர்ப்புத் தத்துவத்தை நிறையுடைய துணிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். துணிக்கை மற்றும் அலை ஆகிய இரு அம்சங்களையும் கொண்ட ஒளி போன்ற மின்காந்த அலைகளுக்கோ அல்லது புற ஊதாக் கதிர்கள் பிரபஞ்ச பின்புலக் கதிர்களுக்கோ பிரயோகிக்க முடியாது.

ஒளியின் இருமை இயல்பு

இச் சந்தர்ப்பத்தில் நாம் 20 ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கையையே கையாள வேண்டியுள்ளது. இச் சார்புக் கொள்கையின் அடிப்படையில் ஒளியை விட வேகமான பொருள் பிரபஞ்சத்தில் கிடையாது என நிரூபிக்கப் பட்டுள்ளது. (ஒளியின் வேகம் - 299 792 458 m / s)

அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து சக்தி,சடப்பொருள்களும் தகவல்களும் பயணிக்கக் கூடிய அதிகபட்ச வேகம் ஒளியின் வேகமாகும். ஒளியைத் துணிக்கையாகக் கருதினால்தான் நியூட்டனின் தத்துவம் செல்லுபடியாகாத நிலை தோன்றும். ஆனால் மற்றைய சந்தர்ப்பங்களில் பொருள்களின் இயக்கத்துக்குப் பிரயோகிப்பதற்கு நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கைக்கு எப்போதும் இன்றியமையாத மதிப்பு உண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

பொதுவாக எந்த ஒரு பௌதிகவியல் தத்துவமும் அதன் அனுமான அடிப்படையில் தற்காலிகமானதாகத் தான் இருக்கும். எம்மால் அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது. நாம் எத்தனை முறை பரிசோதனை செய்து பார்த்தாலும் அதே முடிவையே காட்டும். அது அடுத்த முறையேனும் பிழையான முடிவைக் காட்டுமா என எம்மால் ஊகிக்க முடியாது.

ஆனால் சிலவேளைகளில் மிகச்சிறிய ஒரேயொரு அவதானம் குறித்த தத்துவத்தின் எதிர்வுகூறல்களை பொய்யாக்கி விடலாம். இரசாயனவியலாளர்களுக்கு (Chemists) இந்த அனுபவம் அனேகமாக வாய்த்திருக்கும். விஞ்ஞான உலகின் தத்துவவியலாரான கார்ல் பொப்பெர் பின்வருமாறு கூறுகின்றார் -

ஒரு சிறந்த தத்துவம் எவ்வாறு வடிவமைக்கப் படுகின்றது என்றால் தனது எதிர்வுகூறல்களை மறுதலிக்கும் அல்லது தவறு என சுட்டிக் காட்டும் அவதானங்கள் குறித்த சில மும்மொழிவுகள் அதன் கொள்கையில் அடங்கியிருக்குமாறு அதைப் பேணுவதன் மூலமாகும். ஏதேனும் ஒரு கட்டத்தில் புதிய ஒரு அவதானம் அதனுடன் முரண்பட்டால் அத்தத்துவத்தைப் புறக்கணிக்கவோ அல்லது திருத்தியமைக்கவோ முன்னர் இவ்வாறு செய்தால் அக்கொள்கை குறித்த நமது நம்பிக்கை நிலையாக இருப்பதுடன் எப்போதும் அதைப் பிரயோகிக்கத் தயாராக இருப்போம். மேலும் இக்கொள்கைக்குப் போட்டியாக புதிய அவதானங்களை மேற்கொள்ளும் நபர்களுடன் அவசியமான கேள்விகளைக் கேட்கவும் அதனைத் திருத்தி அமைக்கவும் முடியும்.

கார்ல் பொப்பெர்

நடைமுறையில் எவ்வாறு அமையுமெனில் புதிதாக உருவாக்கப்படும் தத்துவம் முன்னர் கருதப்பட்ட தத்துவத்தின் தொடர்ச்சியாக அல்லது திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக விரிவாக்கப் படுவதாகும். உதாரணமாக புதன் கிரகத்தின் இயக்கம் குறித்துத் தொலைக் காட்டிகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகவும் திருத்தமான அவதானங்கள் நியூட்டனின் ஈர்ப்புக் கொள்கையின் மூலம் கூறப்பட்ட எதிர்வுகூறலுடன் சிறிய வித்தியாசத்தைக் காட்டியுள்ளன.

இதேவேளை ஐன்ஸ்டீனின் பொதுச் சார்புக் கொள்கை (General Theory of Relativity) மூலம் பெறப்பட்ட எதிர்வுகூறல்கள் மிகச்சரியாகப் பொருந்தியுள்ளன. இந்த முடிவு ஐன்ஸ்டீனின் கொள்கையை ஏற்றுக்கொள்வதற்கான மிகத் திருத்தமான ஒரு சந்தர்ப்பமாகும். இவ்வாறு இருந்த போதும் நடைமுறையில் அதாவது அதிக நுணுக்கம் தேவைப்படாத இடங்களில் நியூட்டனின் கொள்கையே நிகழ்காலத்தில் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்று நியூட்டனின் கொள்கை ஐன்ஸ்டீனுடையதை விட மிக எளிமையாக இருப்பதும் ஆகும்.

இந்நிலையில் இன்றைய விஞ்ஞான உலகின் முக்கிய தேடலாக முழு பிரபஞ்ச இயக்கத்தையும் விளக்கும் முழுமையான ஒரேயொரு சமன்பாட்டைக் கண்டு பிடிப்பது எனும் இலக்கு விளங்குகின்றது. எனினும் இதற்காக தற்போது விஞ்ஞானிகள் பின்பற்றும் அணுகுமுறை இந்தத் தேடலை இரு பிரிவுகளாக பிரித்துப் போட்டுள்ளது.

தொடரும் 
நன்றி : http://www.4tamilmedia.com/knowledge/essays/9835-star-journey-27-cosmology-11


Comments