இந்து மதம் எங்கே போகிறது? - மெய்யியல் - பாகம் 71 - பகுதி – 82 - 1 .



பாகம் 71 தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா?


தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள். தமிழுக்கு என்ன நிலைமை?... தமிழ் இறைவனின் நேசபாஷையா? நீசபாஷையா? இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.

தமிழ் இறைவனின் நேச பாஷையா அல்லது நீசபாஷையா என்பதை திருப்பாணாழ்வாரின் வாழ்வியல் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம்.

திருப்பாணாழ்வாரின் தமிழை கேட்பதற்காக ஆளனுப்பி அவரை மரியாதையோடு தூக்கிவரச் சொன்னார் அரங்கத்துக்கு பெருமாள். ஆனால்... அப்பேற்பட்ட ஸ்ரீரங்கத்திலே படுத்துக்கிடக்கும் ரங்கநாதனுக்கு எதிரே நாலாயிரம் அருளிச் செயலை பாடுகிறார்களா?

ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்துநாள் பின் பத்துநாள் ஆக இருபது நாள்கள் நாலாயிரம் ஆழ்வார்கள் அருளிச் செயலை பாடி ஒரு தமிழ்விழா நடத்துவார்கள். இது வருடா வருடம் நடக்கும்.

ஸ்ரீரங்கத்தில் எப்படி நடக்கும் என்றால்... மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழ் கேட்க காத்திருக்க... உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்துக்கு தூக்கி வருவார்கள்.

அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு... பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்று பெயர். இது முடிந்த பிறகு... அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் தூக்கி உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

ஆக... தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

அதுவும்... தமிழுக்காக ஆழ்வாரை தூக்கிவரச் சொல்லி தமிழ் கேட்ட ரங்கநாதனுக்கு... நமது பூஜை புனஸ்காரங்கள் படி தமிழ் கேட்க வாய்ப்பில்லை. இதை நான்முன்பே பலதடவை வலியுறுத்தியபோதும்... வைணவ சமயவாதிகள் சிலர் எதிர்த்தனர்.ஆனால் என் நிலையிலும், தமிழின் நிலையிலும் மாற்றமே இல்லையே?

சரி வைணவத்தில் தமிழ் பார்த்தாயிற்று சைவத்தில்?... “தென்னாடுடைய சிவனே போற்றி...என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...”என்ற தமிழ்க் கவிதையே சிவன் தென்னாட்டவன் அதாவது தமிழ்க் கடவுள்... ஆனாலும் எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என தமிழ் நாட்டுக்காரனாக தத்துவப்படுத்தியிருக்கிறது.

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் அளவுக்கு சிவனுக்கும் தமிழுக்கும் Tight Relationship கொடுத்துள்ளார்கள். சிவனடியார்களும் நாயன்மார்களும் உதாரணத்துக்கு...இன்றைய வேதாரணியம்... அன்றைய திருமறைக்காடு... அங்குள்ள சிவன் கோயில்மணிவாசல் கதவு வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டது.

என்னென்னமோ பண்ணி பார்த்து விட்டோம். திறக்கவே முடியவில்லை என சிவனடியார்கள் துன்புற்ற வேளை... திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மணிக்கதவை திறக்கவேண்டும்என முடிவு செய்தனர்.

திருநாவுக்கரசர் கோயில் வாசலிலேயே நின்று...``பண்ணினர் மொழியோள் உமைபங்கரோமண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோகண்ணினால் உமைக் காணக் கதவினைதிண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...”என தமிழ்ப்பாடினார்.

தாமதமானது, மீண்டும்``அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்இரக்க மொன்றிலீர் எம்பெருமானரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரேசரக்க இக்கதவம் திறம்பிம்பினோ...”இந்த இரண்டாவது தமிழ்ப் பாட்டு கேட்டதும் வேதங்களால் வெகுகாலம் மூடிக்கிடந்த சிவன் கதவு மணிக்கதவு மெல்லத் திறந்தது. இறைவனுக்கு தமிழ்ப் பாமாலைகள் சாத்திவழிபட்டனர். மகிழ்ச்சி பொங்கியது.

சரி, இரவாகிவிட்டது’ கதவை அடைத்துவிட்டு நாளை திறக்க வேண்டும். மறுபடியும் திருஞான சம்பந்தர் ‘சதுரமறைதான்...’ என பதிகம் பாட கதவு மூடிக் கொண்டது.அன்றிலிருந்து தான் கதவு திறந்து சாத்தும் வகையில் மாறியது என்கிறார்கள்.

இந்தக் கதையை நாம் நம்பவேண்டாம் என்றாலும்கூட பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ்பாடி திறக்கவேண்டும்’ என்ற கருத்துருவே நமக்கு போதுமே. வேதம் அடைத்ததை தமிழ் திறக்கும் என்ற கருத்தை நிலை நிறுத்தவே இந்த கதையில் கதவுகொண்டு வரப்பட்டது.

இப்படியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிய...பலதரப்பினரும் புரிந்துகொள்ளத்தக்க தமிழ்ப் பாக்களை வளர்த்தது சைவம். முற்காலத்தில் காவிரி பொய்த்து பஞ்சம் பாசனம் நடத்தியபோது... இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.

ஏனென்றால் அப்போதுதான் அடியார்களின் தமிழ் கேட்கலாம் என்ற அவாவில். இதை...“இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசுநித்தம் நல்கிறீர்” என்கிறார் சுந்தரர், மேலும்,“பாடலங்கார பரிசில் காசருணிபழுத்த செந்தமிழ் மலர் சூடி...” என்கிறார் சேந்தனார் திருவிசைப்பாவில்அதாவது... உணவுக்கு பஞ்சம் வந்தால்கூட தமிழுக்கும்... தமிழ்ப்பற்றுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்பதை ‘சிவனை’ முன்னிறுத்தி மொழிந்தார்கள் சைவக்காரர்கள்.

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவபெருமானுக்கு...சிவன் கோயில்களில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் தமிழுக்கு என்ன நிலைமை?...

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு... லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழ் இருக்காது சமஸ்கிருதம்தான் சொல்லும் இந்தநேரத்தில்... லிங்கத்திடமிருந்தும்... சிவாச்சாரியாரிடமிருந்தும் சற்றே தூரத்தில் நின்றுகொண்டு... வெளிப்புறமாக நின்றபடி ஓதுவார்கள் தமிழை.

தேவாரம், திருவாசம், திருவிசைப்பா, பெரியபுராணம், திருப்பல்லாண்டு ஆகிய பக்திப்பாடல்களில் இருந்து சில பாடல்களை ஓதுவார்கள். அவர்கள் பெயர்தான் ஓதுவார்கள்.

ஆக...இவர்கள் ஓதும் தமிழ் சிவாச்சாரியாருக்கோ... சிவலிங்கத்துக்கோ... அருகில் சென்று கணீரென கேட்காது. நாம் பேருந்தில் செல்லும்போது நமக்குப் பிடித்த பாடல் எங்கோ திடீரென லேசாக ஒலித்து காதைவிட்டு மறையுமே... அதேபோலத்தான் சிவன் கோயில்களில் சிவனுக்கு தமிழ் கேட்கும்.

00000000000000000000000

பாகம் 72 பிராமணர்கள் தமிழகத்திலேயே வாழக்கூடாதாம்.?

பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம் .பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன் தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?

வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது. உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது. நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா? தமிழ் கெட்டவர்களின் கெட்டபாஷை ? தமிழ் தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன ?

வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.

“தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை...” 

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்சபாஷை... அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.

எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மையற்ற பாஷை... என்கிறது வேதம்.

இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “...தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா...”

அதாவது... விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்... கங்கை, யமுனை நதிகள் பாயும்... இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும். அதனால்... இந்த பகுதியை தவிர... மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை.

இதே நேரம்... மநு இன்னொரு கருத்தையும் சொல்கிறார் பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதிகளாக... வகுத்துச் சொல்லும் போது, ப்ரும்மா வர்த்தம், ப்ரும்மரிஷி வர்த்தம் என்றெல்லாம் இமய மலைச்சாரல் பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

மநு சொல்படி, வேதச் சொல்படி பார்த்தால்... பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம். மேலும், அவர்கள் இமயமலை, விந்தியமலை, கங்கை, யமுனை பகுதிகளில்தான் வசிக்கவேண்டுமே தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது

இதையெல்லாம் பின் பற்றும் பட்சத்தில் தமிழையும் ஒதுக்கட்டும். ஆனால்... பல ஆண்டுகளுக்கு முன், தான் வாழ்ந்திருந்த நிலப்பகுதியை மட்டுமே அறிந்த எவனோ பண்ணிவைத்த மந்த்ரத்துக்கு இன்றும் குருட்டுத்தனமாக கட்டுப்பட்டு வாழ்வதும் குருட்டுத் தனமானதுதானே.

ஒரு சுவாரஸ்யமான உதாரணம் சொல்கிறேன் பாருங்கள். கர்மாக்களில், யாகங்களில் ஒரு வேத மந்த்ரம் சொல்வார்கள்.

“நமோ கங்கா யமுனை யோஹேமத்யேயே வசந்தீ...தேமே ப்ரஸனினாத் மானாஹா”...

இந்த வேத மந்த்ரத்தை நமது காவேரிக்கரையிலோ... வைகைக்கரையிலோ... தாமிரபரணி ஆற்றின் கரையிலோ உட்கார்ந்து பிராமணன் உச்சரிக்கிறான். அவனும் கைகூப்பி அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கிறவர்களையும் கைகூப்பச் சொல்கிறான்.

இந்த மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்...“கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் வசிக்கும் ரிஷிகளே மக்களே உங்களை வணங்குகிறேன்” என்பதாகும்.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன்தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?

கேள்வி கேட்டால், ‘வேதத்தில் இருக்கு நான் சொல்கிறேன்’ என்பார்கள்.

வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது. உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது. நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

வேதக்காரர்கள் அன்று... தாங்கள் வாழ்ந்த பிரதேச வாழ்வின் அடிப்படையில் தங்கள் நிலப்பகுதியை, நதிகளை, மலையை வணங்கு. அதாவது இயற்கை வழிபாடு. அதை விட்டுவிட்டு... காவேரிக்கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால்? அந்த மந்த்ரத்தை மாற்றவேண்டும்.

சென்னையில் இருக்கும் பிராமணர்கள்...“நமோ அடையாறு கூவம் யோஹேமத்யேயே வசந்தீ...” அடையாறுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடைப்பட்ட ரிஷிகளை வணங்குகிறேன் என சமஸ்கிருதத்தில் வேண்டாம் தமிழில் சொல்லுங்கள். சரி... நெல்லை, மதுரை போன்ற தென்ஜில்லாக்காரர்களா? தாமிரபரணிக்கும் வைகையாற்றுக்கும் இடையே உள்ளவர்களை வணங்குகிறேன்... என சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள். பிரமாதமாக காரியம் ஈடேறும். தஞ்சாவூர், திருச்சி... என காவேரி பாயும் ஊர்க்காரர்கள். காவேரியையும் கொள்ளிடத்தையும் கைகூப்பிவிட்டு... ஆரம்பிக்கட்டும்.

“கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுப்பாட்டு...” என திருமாலையில் சாதிக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். “கங்கையைவிட தூயதான புனிதமான காவிரி சூழ்ந்த திருவரங்கம் என்கிறார்.

ஆனாலும்... நீங்கள் வேதம் சொன்னபடி கங்கையைத்தான் வணங்குவேன். காவிரியை வணங்கமாட்டேன் என்றால்...?

00000000000000000000000000000

பாகம் 73 தமிழா!! ஜடமாகி போனாயா?

`ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்தான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.
கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம் தான். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் குளத்துக்குள் இறங்கி அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

காவிரிக்கரையிலே நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு கங்கையைப் போற்றும் நமது `அறியாமை’யை போன அத்தியாயத்தில் பார்த்தோம். இதோடு சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகளை மிலேச்ச அதாவது Non Aryan பாஷை என்று சொல்லி... அவற்றை வேதம் மறுதலிக்கச் சொன்னதையும் பார்த்தோம். சமஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம், சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் கேட்போம் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு நானும் `ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.
இதுவும் அந்த சமஸ்கிருதத்தில்தான் இருக்கிறது. அந்த ஸ்லோகம் சொல்கிறபடி நடப்பார்களா?

``வேத ப்ராமாண்யம் கஸ்ய மிதுகர்த்ரு வாதஹா ஸ்நானேதர்மேச்சா ஜாதிவாத அவலேபஹசந்தா பாரம்பஹா பாபஹானா யசஇதீஸத்வஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே....’’

இந்த சமஸ்கிருத கவிதை சாற்றும் பொருள் என்னவென்று விளக்குகிறேன் கேளுங்கள்.

மனிதன் உயிருள்ளவன், ஜீவன் உள்ளவன் சிந்திக்கவேண்டிய கடமை கொண்டவன். இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய... மனிதன் என்று வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச்சுவர் போலவும், சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான். ஏன் அவ்வாறு ஜடமானான்? சிந்னை சக்தி இழந்தான்? என்பதற்குக் காரணங்களை அடுக்குகிறது அந்த ஸ்லோகம்.

ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக் கொண்டு... அதில் நல்லவை, கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது (`வேத ப்ராமாண்யம்’).

2. கஸ்யமிது கர்த்வாஹா...அதாவது நாம் எல்லோரையும் ஒருத்தன்தான் படைத்தான். அவன்தான் நமக்கு கர்த்தன், அதாவது காப்பாளன் என சும்மா நம்பிக் கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே... இது ரொம்ப முக்கியமான வார்த்தை. சாதாரண காலை வேளைகளில் நாம் ஸ்நானம் செய்வது உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் தான். ஆனால்... இந்த குளிக்கும் விஷயத்தை கூட்டமாக சேர்ந்து போய் ஆற்றில் குளிக்க வைத்து அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள் .சாயம் பூசினால் தண்ணீரில் போய் கழுவலாம். தண்ணீருக்கு சாயம் பூசிவிட்டால்...?

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற சில நாள்களை காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் இறங்கி, குளத்துக்குள் இறங்கி தீர்த்தமாடுகிறார்கள். தங்களது அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி விடுகிறார்கள். இதுபோன்று அன்றாட ஆரோக்கியப் பணிகளை குளியல் செய்வதில் மதத்தை சம்பந்தப்படுத்துவதால் மனிதன் ஜடமாகிப் போனான்.

4. அடுத்ததாக ஜாதிவாத அவலேபஹ...அதாவது இவன் உயர்ந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி, இவன் தோள் பட்டையிலிருந்து பிறந்தான். அவன் தொடையிலிருந்து பிறந்தான். எனவே, இவனும் அவனும் ஒன்றாக முடியாது. இவன் கும்பிடும் இடத்தில் அவன் வரக்கூடாது. இவன் வசிக்கும் பகுதியில் அவன் நுழையக்கூடாது என `ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்மதான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.

5. சந்தாபாரம் மனிதன் ஜடமாய் போய் விட்டதற்கான அடுத்த `தகுதி’ இது.அதென்ன?

இன்றும் சாதாரணமாக சாலைகளிலேயே நாம் பார்க்கிறோம். பலசாலியான ஒருவன்... குடும்பம் குட்டியோடு பக்திமானாக ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகப் போய் சாட்டையால் தன்னைத்தானே அடித்து துன்புறுத்திக் கொள்கிறான். முதுகு, மார்பெல்லாம் ரத்தக் கோடுகள் வழிகின்றன. கேட்டால் கோயிலுக்கு, எல்லாம் வல்ல கடவுளுக்கு வேண்டுதல் என்பான். நாக்கில் அலகு குத்திக் கொண்டு, ரத்தம் வழிய ஊர்வலம் வருகிறான்.

இதுபோல கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம்தான். இவைகள்தான் அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்.

எல்லாவற்றிலும் சமஸ்கிருதமே இருக்க விரும்பும் இன்றைய அர்ச்சகர்கள் சிலரிடம் போய்... `இந்த ஸ்லோகத்தை சொல்லி பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிக் கொடுங்கோ’ என்றால் `பேஷாக பண்ணித் தரேன்’ என்பார்கள். ஏனென்றால்... அவர்களுக்கு வடமொழி அறிவு அந்த நிலையில் தான் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் ஒத்துக்கொள்கிறேன் என்பவர்கள்.... தர்மபாலர் என்பவர் எழுதிய `பிரமாண வார்த்திகம்’ என்னும் புத்தகத்தில் உள்ள மேற்கண்ட சமஸ்கிருத ஸ்லோகத்தை ஏற்றுக் கொள்வார்களா? முடியாது என்று சொல்வார்களே என்றால் ஏன்?

சமஸ்கிருதம் தேவ பாஷையாயிற்றே. அதில் சொன்னால் தெய்வமும் சொன்ன மாதிரியாயிற்றே. ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மொழி என்றால் அது கருவி. மனுஷாள் பேசிக் கொள்ள பயன்பட வேண்டியதுதான் மொழியே தவிர, அது ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ள பயன்படக் கூடாது.

இது தாழ்ந்த மொழி, இது உயர்ந்த மொழி, இது தெய்வ மொழி... இது அசுர மொழி என்றால்... அந்த மொழியே நம்மைப் பார்த்து திட்டும். இதை விளக்கத்தான் தர்மபாலரின் ஸ்லோகத்தை சொன்னேன்.

00000000000000000000000000000000

பாகம் 74 தமிழர்கள் விரதம் இருக்கக்கூடாது.

விரதம் என்றால் என்ன ? விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன. சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது... விரதம் என்றால் என்ன ? இவைகளெல்லாம் எப்படி வந்தன? லெளகீக வாழ்க்கையில் இருக்கிறவர்கள் தான் அது வேண்டும். இது வேண்டும் என விரதம் இருக்கிறார்கள் என்றால்... எல்லாவற்றையுமே துறந்த சாமியார்களுக்கு எதற்கு விரதம்?

தர்மபாலரின் ஜடம் பற்றிய ஸ்லோகத்தை பார்த்தோம். ஐந்து தகுதிகள் சொல்லியிருந்தார் அல்லவா?அதில் ஒன்றை கொஞ்சம் விஸ்தாரமாக பார்ப்போமே.

கடவுள் நமக்கு அருளவேண்டும் என்பதற்காக நம் உடம்பை நாமே வருத்திக்கொண்டு நம்மை நாமேகஷ்டப்படுத்திக் கொள்வது என்று பார்த்தோமல்லவா அதில் ஒன்று விரதம்.

விரதம் என்றால் என்ன ? 'கடவுளே உன்னை எண்ணி நான் இன்று சாப்பிடாமலே இருக்கிறேன் என் உறுதிப்பாட்டை மெச்சி எனக்கு நீ அருள்செய்' என கடவுளிடம் ஒரு Demand வைத்து செயல்படுவது தான் விரதம்.

இன்றைய காலங்களில் நிறையபேர் விரதம் இருக்கிறார்கள். விரதங்களும் பலவகைப் பட்டதாக ஆகிவிட்டன.

கன்னிப் பெண்கள் தங்களது எதிர்காலக் கணவன் நன்றாக இருக்கவேண்டும். நல்ல கணவனாக வாய்க்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு வரலட்சுமி விரதம் இருக்கிறார்கள். அதாவது அன்று முழுவதும் வயிற்றுக்கு சாப்பாடு போடாமல், எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல சாப்பாடு கிடைக்க வேண்டும் என வேண்டுகிறார்கள்.

கல்யாணம் ஆன குடும்பப் பெண்கள்... தீர்க்கசுமங்கலியாக தன் தாலி குங்குமம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக வரலட்சுமி விரதம் இருந்து தன்னைப் போல குடும்பப் பெண்களுக்கு ரவிக்கை துணிகளையும் லஞ்சமாக கொடுக்கிறார்கள். இது வரலட்சுமி விரதம் என்றால் விரதங்களில் முக்கியமான விரதம் ஏகாதசி.

ஏகாதசி அன்று சாப்பிடாமல் விழித்திருந்தால் நேரடியாக மோட்சத்துக்குப் போகலாம் என ஒரு கருத்தை நம்பிக் கொண்டு பலரும் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். ஏகாதசி அன்று ஒருவாய் தண்ணீர்கூட குடிக்கக்கூடாது. சாதம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால்... ஏகாதசி அன்று பெருமாளை வேண்டி உண்ணாவிரதம் இருக்கிறோம். ஆனால், அந்த நாளில் பெருமாளுக்கும் சாப்பாடு போடக் கூடாது என்கின்றன. நமது வாழ்த்துகள். ஆமாம்... ஏகாதசி அன்று மட்டும் பெருமாளுக்கு சாதம் நிவேதனம் செய்யாமல் உப்புமாவை நைவேத்யம் செய்கிறார்கள்.

இதேபோல் நம்மை விட்டுப் பிரிந்த பித்ருக்கள் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதற்காக அமாவாசையில் விரதம் இருப்பார்கள். குழந்தை பாக்யம் பெறவேண்டி வைணவர்கள் திருவோணத்திலும், சைவர்கள் முருகனுக்காக சஷ்டியிலும் விரதம் இருக்கிறார்கள்.

இன்னொரு புகழ்பெற்ற விரதம் பிரதோஷம் என்றால் என்ன என்பது தெரியாமலேயே பலர் சிவனைவேண்டி விரதம் இருந்து வருகிறார்கள். பிரதோஷம் என்றால் ராத்திரியின் முன்வேளை அதாவது ஆரம்ப ராத்திரி. இந்த வேளை சிவனுக்குஉகந்தது. இந்த நேரத்தில் சிவனை வழிபட்டு பலன் காண்பதுதான் பிரதோஷ வழிபாடு. சரி... இத்தனை விரதங்கள் பார்த்தோம்.

இவைகளெல்லாம் எப்படி வந்தன? அந்தக் காலத்தில் வேதத்தின் கர்மாக்கள், கட்டளைகள்படி யாகங்கள் போன்ற பெரும் செலவிலான வழிபாட்டு முறைகள் இருந்த நிலையில்...பூஜை, புனஸ்காரம் எதுவும் இல்லாமல் ஆடம்பரம், ஏற்பாடுகள் என எதுவும் இல்லாமல் நமக்கும் கடவுளுக்குமான தனிப்பட்ட காரியம் தான் இந்த விரதம். அதாவது புஸ்தகத்தில் இல்லை. பண்ணிவைக்க வாத்தியார் வேண்டாம். ஹோமம் வேண்டாம்.

விரதம் என்பது "Unpriscribed by the vedas and uncommitted to the veda tradition"... விரத வழிபாடு முறை என்பது வேதத்தால் வரையறுக்கப்படாதது... அதாவது வேத நாகரிகம் ஒத்துக்கொள்ளாதது. வேதம் சொல்வதை நீ கேட்கிறாய் என்றால் 'சாதம் வேண்டாம்' என விரதம் இருக்கக்கூடாது எப்படி?

தஸ்மாது ஆஹராமனுஷ்யா அசனமிச்சந்தேப்ராயதஸ்ச சாயஞ்ச்ச...என்று போகும் இந்த வேதவரிகள் விரதம் பற்றி சொல்லாமல் சொல்கின்றன. ஒரு மனிதனுக்கு சாப்பாடு தான் முக்கியம். நீ தினமும் முறைப்படி ஒழுங்காக சாப்பிட்டால் தான் மனிதனாக வாழமுடியும். மிருகங்கள் எப்போது வேண்டுமானாலும் தின்னும். ஆனால், மனிதனாகிய நீ காலை இரவு என முறை வைத்து முறையாக சாப்பிடவேண்டும். நித்யப்படி இதைப் பின்பற்று என தினந்தோறும் நன்றாக சாப்பிடச் சொல்கிறது வேதம்.

இன்னொரு மந்த்ரம்..."அஸ்னாதி சப்ரானஏவ ஆதிதோ பவதீ..."டேய்... உனக்கு உயிர் தருவதே சோறு தான். நீ மிகப்பெரிய யாகங்களை செய்தாக வேண்டும். அதற்கு உனக்கு பலம் வேண்டும். அதனால் நீ நன்றாக சாப்பிடு. சாப்பிடாமல் இருந்துவிடாதே..என யதார்த்தமாக சொல்கிறது வேதம்.

வேதம் மறுத்தலித்த விரதத்தை மநுஸ்மிருதி என்ன செய்கிறது தெரியுமா? விரதத்துக்கும் ஒருவிரதத்தை வைக்கிறது.

'நா°தி ஸ்தீரீனாம்பரத் யக்ஞயஹாநவ வ்ரதம்நாப உபோஷனம்'
விரதம் இருக்கலாம் ஆனால்... சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது... என தனது ஆணையை நிறுவுகிறார் மநு.

லெளகீக வாழ்க்கையில் இருக்கிறவர்கள் தான் அது வேண்டும். இது வேண்டும் என விரதம் இருக்கிறார்கள் என்றால்... எல்லாவற்றையுமே துறந்த சாமியார்களுக்கு எதற்கு விரதம்? ஒரு சாமியார் தன் ஆசிரமத்தில் உட்கார்ந்து நிஷ்டையில் இருந்தார். வெளியே மழை...என்னவென்று விசாரித்தால் சாமியார் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறார் என்றார் சிஷ்யர். எள்ளுதான் காய்கிறது என்றால் எலிப் புழுக்கை ஏன் காய்கிறது?

00000000000000000000000

பகுதி – 75.

எள் இருக்கிறதே... அது எண்ணெய் ஆகவேண்டும் என்பதற்காக காயும் அதோடு சேர்ந்து எலிப் புழுக்கையும் காயும். ஆனால், எலிப்புழுக்கை காய்வதால் என்ன உபயோகம்?

அதுபோலத்தான்... உலகியல் வாழ்க்கையில் நாட்டம் உடையவர்கள், இது வேண்டும், இன்னது நடக்க வேண்டும் என்ற சுயநல, பொதுநல, கோரிக்கைகளோடு விரதம் இருக்கிறார்கள்.

ஆனால், சாமியார்கள், சந்நியாசிகள், துறவிகள், யதிகள் என அத்தனைபேரும் உலக வாழ்க்கையை, சுகதுக்கங்களை துறந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை, தேவைகள் எல்லாம் செத்துப் போய்விட்டன. இதை ஆங்கிலத்தில் 'Civil death' என்று சொல்வார்கள்.

இப்படிப் பட்டவர்கள் ஏன் விரதம் மேற்கொள்ள வேண்டும்? அவர்கள் இந்த சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதன் பின்னணி என்ன? இன்னும் சில சந்நியாசிகள் நாங்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருக்கிறோம் என்று கோர்ட்டுக்கு வராமலேயே... இருக்கிறார்களே? அப்படியென்றால் ரொம்ப முக்கியமானதோ அந்த சாதுர்மாஸ்ய விரதம்?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண... நாம் சந்நியாசிகளின் சில பக்கங்களை புரட்டிப் பார்க்கவேண்டும். அதற்கு முன் கீதையிலிருந்து பகவான் கிருஷ்ணர் அருளிய ஒரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்.

ஸ்யதஹ ப்ரவர்த்தினிபூதானாம் ஏனசர்வம்இதம்ததம் சொகர்மனாஹாதம்அப்யர்ச்ச சித்திம் விந்ததீ மானவஹா...

அதாவது உனக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமென்றால் நீ கண்களை மூடிக்கொண்டு தியானித்துக் கொண்டு இருக்காதே. ஓடு... இயங்கு இயங்கிக்கொண்டே இரு. run in the society. சமூகத்துக்குள் ஓடு...As you the part of the society, discharge your duty and contribute to the society.அதாவது உன்னால் முடிந்ததை சமூகத்துக்கு செய்துகொண்டே இரு. உன் கடமையை நிறைவேற்றுவதுதான் மோட்சத்துக்கு இட்டுச் செல்லும்.

இது கீதையில் கிருஷ்ணன் சொன்னது எல்லாருக்காகவும் சொன்னது. இதில் சில அம்சங்கள் சந்நியாசிகளுக்கும் பொருந்தலாம்.அதில் ஒன்றுதான்... ஓடு... ஓடு... ஓடிக்கொண்டே இரு...

அதாவது சந்நியாசிகள் பிச்சையெடுத்து சாப்பிடக் கூடியவர்கள். அவர்கள் இன்று ஒரு கிராமத்தில் தங்கி பிச்சையெடுத்து சாப்பிட்டார்கள் என்றால்... மறுநாள் அதே கிராமத்தில் பிச்சையெடுக்கக் கூடாது.

கதிரவன் கிழக்கில் தோன்றுகிறான். கதிர்கள் மெல்லப் பாய்கின்றன. அந்தக் கிராமத்தில் தங்கியிருந்த சாமியார் தனது தண்டம், துணிகளை சுருட்டிக் கொண்டு அவசர அவசரமாக கிளம்புகிறார். இது பழைய காலத்தில் நடந்த சம்பவம். ஏனென்றால்... ஒரு சந்நியாசி ஒரு கிராமத்தில் ஒரு ராத்திரிக்குமேல் தங்கக்கூடாது ஓடிவிடவேண்டும். அதாவது தினந்தோறும் சுற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.அதுவும் எப்படித் தெரியுமா

'வாகனஸ்தம் பதிந் திருஷ்ட்வா சசேர ஸ்நானமாஸ்யே...'... எதிரே மாட்டுவண்டி, குதிரை வண்டி, அரச பல்லக்கு, தேர் முதலிய வாகனங்கள் ஏதேனும் வந்தால்... உடனே தலைமுழுகி அந்த 'வாகனத்தை பார்த்த பாவம்' போக்கிவிட்டு நடக்க ஆரம்பிக்கவேண்டும்.ஆக அர்த்தம் என்ன? நடந்தே சுற்றவேண்டும். அதுவும் ஒரு ராத்திரிக்குமேல் எந்த கிராமத்திலும் தங்காமல் சுற்றவேண்டும். இப்படிப்பட்ட 'ஒரு ராத்திரி ஒரு கிராமம்' என்ற கட்டுப்பாட்டுடைய சந்நியாசிகளை பரமஹம்ஸ பரிவ்ராசகர் என்று அழைப்பார்கள்.

அதாவது... சந்நியாசிகளால் 4 நிலைகள்...குட்டீஸன், பஹுதஹன், ஹம்ஸன், பரமஹம்சன், முதல்நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்ன வகைப்படுத்தப்பட்டு இந்நிலைகளில் கடைசி நிலையான உயர்ந்த நிலை உடையவர்கள் பரமஹம்ஸர்கள் தான்.சரி... இந்த வகைப்பாடுகள் இருக்கட்டும்.

சாதுர்மாஸ்ய விரதம் பற்றி பேசினோமே அது என்ன ஆனது?

சுற்றிக்கொண்டே இருக்கும் சந்நியாசிகள் வருடம் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்க முடியுமோ? வெயில் காலத்தில் நிழல்களில் இளைப்பாறிவிட்டு நடக்கலாம். பல கிராமங்களை கடக்கலாம். ஆனால்... மழைக்காலங்களில்...? இப்போது உள்ள மழைக்காலம் என்பது வேறு... அப்போதைய மழைக்காலம் வேறு. அப்போதெல்லாம் மழை பெய்யும், பெய்யும் பெய்துகொண்டே இருக்கும். இன்றைய மக்கள்தொகை போல அன்றைய மரங்கள் தொகை, இன்றைய மரங்கள் தொகை போல மக்கள் தொகை கேட்க வேண்டாமா? தூய்மையான பூமி... வள்ளலான வானம்.

மழைக்காலத்தில் வெளியே தலைநீட்ட முடியாது. பார்த்தார்கள் சந்நியாசிகள். இந்த மழையில் நடந்துபோய் சுற்றி பிச்சையெடுப்பது நடக்கிற காரியமல்ல, போடு டேராவை. மழை மாதங்களான 4 மாதமும் ஒரே பகுதியில் தங்கினார்கள். இதற்காகவே 'மழைக்கால 4 மாசமும் ஒரே இடத்தில் தான் தங்கவேண்டும்' என்ற பழக்கத்தை ஏற்படுத்தினார்கள். சாதுர்மாஸ்யம் என்றால் நான்குமாசம் என்று பொருள். இதையே பின்னாளில் சாதுர்மாஸ்ய விரதம் என ஆக்கிவிட்டார்கள்.

அதாவது நாலுமாச விரதமாம். மழைக்காலத்தில் வெளியே போனால்... நடந்தே நாறிவிடுவார்கள். அதனால் 4 மாசம் வெளியே போகக்கூடாது என்று தங்களுக்குள் விதித்த கட்டுப்பாட்டை விரதம் ஆக்கிவிட்டார்கள்.
இன்றுகூட தஞ்சாவூர் ஜில்லாவில் ஆண்டிக்காடு என்ற கிராமம் உள்ளது.

இங்குதான் மழைக்காலத்தில் ஆண்டிகள், சந்நியாசிகள் எல்லாம் தங்கியிருப்பார்கள். மழைக்குப் பயந்து 4 மாசம் உட்கார்ந்திருப்பது தான் சாதுர்மாஸ்யம்.

மழை அதிகம் இல்லாத இந்தக் காலத்திலும் கோர்ட்டுக்குப் பயந்து சாதுர்மாஸ்ய விரதம் என்கிறார்கள்.சரி... விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன. அடுத்து மலையேறப் போகும் உண்மைகள்..

000000000000000000000000000000000

பாகம் 76 திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன?

பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்? பெண்னை ஆணாக மாற்றிய ஆன்மிக ஆப்பரேஷன். திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.

விரதங்கள்பற்றிப் பார்த்தோம். சாப்பிடாமல் தியானம் செய்வது வேதத்துக்கும், கீதைக்கும் எதிரானது என்பதையும் பார்த்தோம். இந்த விரதத்திலே இன்னொரு முக்கிய அம்சம்...இப்போதெல்லாம் குறிப்பிட்ட நாள்கள் விரதம் இருந்து ஒரு மண்டலமோ... இரண்டு மண்டலமோ விரதம் இருந்து... கூட்டம் கூட்டமாக பக்தர்கள் புறப்படுகிறார்கள். நடைபயணமாகவே உன்னை வந்து அடைகிறேன் என்று சொல்லி கால் கடுக்க நடக்கிறார்கள்... பின் உடல் உயிர் எல்லாம் கஷ்டப்பட மலையேறுகிறார்கள். மலையிலே வீற்றிருக்கிற தெய்வத்தைப் பார்த்து வணங்கி தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள். விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டதாகச் சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா?

விரதம் இருந்து மலையேறுவது தொடர்பான உண்மைகளை இப்போது பார்க்கலாம்.

``தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம் ஆரியவர்த்தம் விதுர்புதாஹா...’’ 

அதாவது இமயமலை, விந்தியமலைக்கு இடைப்பட்ட பகுதி தான் தெய்வப்பகுதி மற்றவை எல்லாம் மிலேச்ச பகுதி என்று மநு சொன்னார்.

ஆனாலும்... உலகின் அந்தந்த பகுதியில் வசிக்கும் மலை மக்கள் தத்தமது மலைகளை தெய்வத்தன்மை உடையதாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்று தான் இந்த தென்னிந்திய மலை. இந்த மலையில் ஏழு குன்றுகள் இருப்பதால் ஏழுமலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலை... மிக மிகப் பழங்காலத்தில் எப்படி இருந்திருக்கும்? சிந்தனை செய்யுங்கள். எங்கு பார்த்தாலும் காடு, மிக அடர்ந்த காடு, அதற்குள் வனவிலங்குகள் கூட்டம். இந்த இயற்கை அடர்த்திக்கு இடையே தான் அந்த மலைக்கே உரிய மலைவாசிகளும்... அதாவது Hilltribes மக்களும் அங்கே வசித்து வந்தார்கள்.

அவர்களுக்கு மலையை விட்டால் வேறெதுவும் தெரியாது. கீழே இறங்கி வருவதெல்லாம் அந்த காலத்தில் சாத்தியம் இல்லாத காரியம். வாழ்வோ, சாவோ... அந்த மலை மேல் தான்.காட்டில் விளைந்திருக்கும் பழங்களைப் பறித்துத் தின்றார்கள். காட்டு விலங்குகளை பிடித்து அடித்து மாமிசம் உண்டார்கள்.

ஆனாலும்... அம்மலை மக்களுக்கு தங்கள் வாழ்க்கையைப் பற்றிய பயம் போகவில்லை.``என்னடா இது... கொடிய மிருகங்கள் எல்லாம் கொட்டம் அடிக்கின்றனவே. உலகத்தின் உயரத்தில் இருந்தும் நமக்கு எப்போதும் பய வாழ்வுதானா?...’’ மலைவாசிகளின் குழந்தைகளை மிருகங்கள் எப்போது கடித்துக் குதறும் என்பது தெரியாது. திடீர் திடீரென நடக்கும். அடர்ந்த காடுகளின் இருட்டே அவர்களுக்கு பயமாக இருந்தது. பயம்தான் கடவுளை கண்டுபிடிக்க மனிதனுக்கு கிடைத்த முதல் சாவி என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். அந்த வாழ்க்கை பயத்தால் தான்... அந்த மலைவாசிகள் தங்களுக்கென ஒரு தெய்வத்தை வைத்துக்கொள்ள (Security God) விரும்பினார்கள். முதலில் சூரியனை வழிபட்டார்கள், பிறகு விலங்குகளை வணங்கியவர்கள், பின்... idol worship முறையில் தங்கள் தெய்வத்தை அமைத்தனர்.அவர்களின் தெய்வம் எப்படியிருக்கும்? அவர்களை மாதிரியே தான் இருக்கும்.

மலைவாசிகளுக்கு அப்போது கடவுளுக்குத்தான் பஞ்சம். கல்லுக்கா பஞ்சம். தங்கள் மலையிலேயே கல்லெடுத்து... தங்களைப் போன்றே உருவமுள்ள கருப்பான சிலையை அமைத்தார்கள். அதுதான் காளி. ஆமாம்... காளி என்றால் கறுப்பு. பெண் தெய்வங்களை அதிலும் Rural Gods பற்றி ஏற்கெனவே நாம் பார்த்த போது... ஊருக்கு பாதுகாப்புக்காக பெண் தெய்வத்தை வைத்தார்கள். ஆண் என்றால் அலைந்துகொண்டே இருக்கும் பெண் என்றால் வீட்டை ஒழுங்காக பார்த்துக் கொள்வது போல ஊரையும் ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளும் என்பதற்காக Primitive மக்கள் தங்கள் பகுதி பாதுகாப்புக்காக பெண் தெய்வங்களைப் படைத்தார்கள் என பார்த்தோம். அந்த வகையில்... தங்கள் மலையை மக்களை காப்பாற்றிக் கொள்ள... முதன் முதலாக மலைக்காளி உருவத்தை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

வேட்டைக்குச் செல்லும்போது ஆண்கள் வழிபடுவதும்... வேட்டைக்குச் சென்று வந்தபின்னர்... வேட்டையாடிய பொருள்களை காளியின் கால்களில் படையலிட்டு பிறகு எடுத்துச் செல்வதும் அவர்களது பழக்கமானது. இதனால் தானோ என்னவோ... இப்பழக்கத்துக்கு ஏற்றாற்போல அக்கற்சிலையை வடிவமைத்திருந்தனர். காளிக்கு இரண்டு கைகள். வலது கையை கீழ்நோக்கிக் காட்டும்படி வைத்து இடது கையை தன்னை நோக்கி தூக்கிக் காட்டுவாள் காளி.`எனக்கு காலடியில் படையல் இட்டால், உன்னை நான் காப்பேன்’ என்பது, மலைவாசிகளின்‘Tribes Tradition Dictionary’ யில் இதற்கு அர்த்தமாக இருக்கலாம். இப்படியாக காளிக்கு படையலிட்டு பூசையிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொண்டு வந்து மலைமக்கள்... இதே காளியை மையமாக வைத்து கொண்டாட்டங்கள் நடத்தவும் தவறவில்லை.

காளிக்காக மலையெங்கிலும் உள்ள மலர் பறித்து... சூட்டி தங்களது உற்சாகப் பண்களை இசைத்துக் கொண்டாடவும் செய்தார்கள். இதெல்லாம் அவர்களது பயத்தைப் போக்கிக் கொள்வதற்காக ஒரு Entertainment. இது போலவே பல நூறு வருஷங்களாக மலையில் இந்த காளி வழிபாடு தொடர்ந்து வந்தது. வெளி மனிதர்களால் அந்த மலை தீண்டப்படாதவரை இந்த காளி வழிபாடு தான் மலைமேல் நடந்த ஒரே வழிபாடு. மலைக்காளியை ஒருபுறம் வையுங்கள். இந்த விஞ்ஞான யுகத்திலே... பகவத் சிருஷ்டியையே மாற்றிப் பார்க்க துணிந்து விட்டார்கள். அதாவது ஏதேதோ ஆபரேஷன்கள் செய்து ஸ்த்ரீயை புருஷாளாகவும், புருஷாளை ஸ்த்ரீயாகவும் மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள். ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மாற்ற முடியுமா?

00000000000000000000000

பகுதி – 77.

பெண்ணை ஆணாய் மாற்றும் ஆபரேஷன் பற்றி எழுதினேன் இல்லையா?... என்னடா இவர்,ஆன்மீக தொடரில் ஆபரேஷனை பற்றி எழுதுகின்றாரே என்று குழம்பாதீர்கள்.
அதாவது இது ஆன்மீக ஆபரேஷன். மலைமக்களின் பூர்வீக தெய்வமாக மலைக்காளி நிலைபெற்று வந்ததை சொன்னேன். பலநூறு ஆண்டுகளாக... வெளியாட்கள் மலையேறும் வரை காளிதான் அங்கே கடவுள். அப்படியென்றால் அந்தக் காளி... திருப்பதியில் அவதரித்த... ஏழுமலையிலே மலைமக்கள் பெற்றெடுத்து வணங்கிய காளி இன்று எங்கே?... இந்த கேள்வியின் பதிலில் தான் ஆன்மீக ஆபரேஷன் ஆரம்பமாகிறது.

பற்பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு...மலையின் மேலே... மலைமக்கள் அல்லாதவர்கள் ஏற ஆரம்பித்தனர். மலைமக்கள் அல்லாதவர்கள் என்றால்..?. பிராமணர்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். மலையில் ஏறியவர்கள்... அந்தக் காளி சிலையை பார்த்தார்கள். காட்டு மலர்களை பறித்தும், வேட்டையாடிய மிருகங்களை படைத்தும் ‘பூசெய்’ செய்து வந்த மலைமக்களைப் பார்த்த பிராமணர்கள்... ‘இப்படியா பூசை செய்வது?

நாங்கள் ஆகமம் தெரிந்தவர்கள். பூசையை எப்படி செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வதால் காளிக்கு சக்தி கிடைக்காது. காளியின் அருளும் நமக்குக் கிடைக்காகது.அதனால் காளியை எங்களிடம் விட்டு விடுங்கள்” என்றார்கள் பிராமணர்கள்.. மலைமக்களுக்கு ஆச்சரியமாகிவிட்டது . எங்கிருந்தோ மேலே ஏறி வந்து... நம் தெய்வத்தை கேட்கிறார்களே என்று. எல்லாரும் ஒன்றாகக் கூடினர். பலநூறு ஆண்டுகளாக நாம் வழிபட்டு வந்த தெய்வத்தை ‘நாங்கள் வழிபடுகிறோம்’ என்று சொல்கிறார்களே?... கொடுப்பதா வேண்டாமா... இதுதான் விவாதம்.கொடுப்போம்...

நம் காளிக்கு சக்தி அதிகம் கிடைக்கட்டும் என்றனர் சிலர். இல்லை... வேண்டாம் நம் காளியை நாமே வழிபடுவோம் என்றனர் சிலர்.உடனே இது நடக்கவில்லை. காலப் போக்கில்... நாளடைவில் அந்த காளிச்சிலை பிராமணர்களின் கைக்கு வந்தது. இதுநாள் வரை நீங்கள் காளிக்கு பூஜை செய்திருக்கலாம். மலர்களையும், மாமிசங்களையும் இனிமேல் படைக்கக்கூடாது. மலைமக்களின் காளிதேவியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து ஆகமவிதியில் வழிபாடுகளை ஆரம்பித்தனர் பிராமணர்கள். காளி தேவிக்கென மிக சின்னதாக ஒரு கோவிலும் கட்டப்பட்டது.

முற்றிலும் ஆஹம ரீதியிலான வழிபாடுகளை ஆரம்பித்த பிராமணர்கள் காளிதேவியை தங்களுக்குள் அடைத்தார்கள். ஆகமப்படி பெண் தெய்வங்கள் இருக்கும் கோவிலில் சிம்மத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். ஆண் தெய்வங்கள் இருக்கும் கோயில்களில் ரிஷபத்தை ஸ்தாபித்து வைப்பார்கள். இதன்படி... காளிக்கு பக்கத்தில் சிம்மத்தை ஸ்தாபித்தார்கள். இப்படியான காளியை தங்கள் வசம் எடுத்துக் கொண்ட பிராமணர்கள்...

‘இனிமேல் நீங்கள் உள்ளே வரக்கூடாது. நாங்கள் பூஜை செய்கிறோம். நீங்கள் வெளியே நின்று வழிபட்டு விட்டு அப்படியே போய்விடுங்கள். இது ஆகம ரீதியிலான காளி, உங்கள் பழைய காளி கிடையாது. நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வழிபடுவதற்கு.

நாங்கள் நடத்தும் வழிபாட்டு முறைகளை மீறினால்... காளிக்கு சக்தியற்றுப் போய்விடும். அதனால்... காளிக்கு நீங்கள் இதுவரை நடத்திய உற்சவங்கள், திருவிழாக்கள், படையல்களுக்கான பொருளை எங்களிடம் கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும்பார்த்துக் கொள்கிறோம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை மலைக்காரர்கள். இந்த ஆகம அதிரடியை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு இன்னொரு மாற்றமும் கொஞ்ச காலத்தில் நடந்தது. இதைத் தான் நான் ஆபரேஷன் என்று சொன்னேன். வழிபட வந்த மலைமக்கள்... தங்கள் காளியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தனர். காரணம்?... நேற்று வரை பெண்ணாக இருந்த காளி... இன்று ஆணாக மாறிவிட்டாள். காளியின் கைகளில் நாகங்கள் சுருண்டிருந்தன. பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. அதாவது நாகக்காப்பு.என்ன இது?...

“நாங்கள் இந்த தெய்வத்தை ப்ராபகண்டா ஆக்கப் போகிறோம். இது சைவர்களின் தெய்வம்... சிவபெருமான். காளி கிடையாது... ”இப்போதுதான் பிராமணர்கள் தங்கள் அடிமடியை அவிழ்த்துக் கொண்டிருப்பதை மலைமக்கள் உணர்ந்தனர். போராடத் தொடங்கினார்கள். ஆயுதங்களை தூக்கினார்கள். ஆயுதங்களை பிராமணர்களின் அறிவு தோற்கடித்தது. “இருங்கள். பொறுங்கள். இந்த தெய்வத்தால் உங்களுக்கும் பலன்கிட்ட வேண்டும். எங்களுக்கும் பலன் கிட்ட வேண்டும். உங்களின் பூர்வீக தொழில்களை கூறுங்கள்... “வேட்டையாடுவது, தேனெடுப்பது, முடிமழிப்பது...” “என்னது?... கடைசியாய் என்ன சொன்னீர்கள்?...” “எங்களில் ஒரு பிரிவினர் அம்பட்டையர்கள். முடி மழிப்பது தான் எங்கள் வேலை...”

“சபாஷ்! இனிமேல் கோயிலுக்கு உள்ளே யார் வந்தாலும்... தரிசனம் செய்ய யார் வந்தாலும்... உங்களிடம் உட்கார்ந்து தலையைக் காட்டி முடிகளை மழித்துக் கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இது இன்று முதல் க்ரமம். அதற்கேற்ற தட்சணையை நீங்கள் வாங்கிக் கொள்ளவேண்டும். உள்ளே என்ன தட்சணையோ அதை நாங்கள் எடுத்துக் கொள்வோம்.உங்களுக்கும் பலன் எங்களுக்கும் பலன். உங்களுக்கும் தட்சணை. எங்களுக்கும் தட்சணை உங்களுக்கும் அனுக்ரஹம். எங்களுக்கும் அனுக்ரஹம். ”.

மலை மக்களான அம்பட்டையர்கள் காளியை வழிபடும் உரிமையை இழந்து வெளியே அமர்ந்து மொட்டையடிக்க ஆரம்பித்தார்கள். பிராமணர்கள் உள்ளே சென்று மலை மக்களுக்கு மொட்டையடித்தார்கள். இந்த நிலையில்தான்...

0000000000000000000000000

பகுதி – 78 .

இந் நிலையில்தான்...எந்த நிலையில் தான்.... திருப்பதி மலைக்காளியை பரமசிவனாகவும் சுப்ரமண்யனாகவும் சைவர்கள் மாற்றி விட்ட நிலையில் தான் இந்தத் தகவல் வைணவர்களுக்குக் கிடைக்கிறது. கொதித்தெழுந்தனர். வைணவத்திலகம் எம்பெருமானார் என்ற உயர்ந்த பட்டப்பெயர் கொண்ட சான்றோர் ராமானுஜர் தலைமையில் கொதித் தெழுந்தனர். மலைமீது அடுத்ததாக வைணவப்படை ஏறியது.

ஸ்ரீராமானுஜர் காலம் 11-ஆம் நூற்றாண்டு அதாவது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. தன்னுடைய மாமா திருமலைநம்பியிடம் ராமாயணம் கேட்பதற்காக திருப்பதிக்குப் போனார் ஸ்ரீராமானுஜர். அங்கே கீழே ராமாயணம் கற்றுக்கொண்டிருந்த போது தான்... மேலே மலையில் சிவபெருமானை வழிபடுகிற தகவல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். தன்னுடன் பல வைணவர்களை அழைத்துக்கொண்டு மலையேறினார். அங்கேயோ... கோயில் கட்டி அதற்குள் இந்த காளியை சிவனாக்கி சைவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

இந்த வைணவ-சைவ போரில் ஸ்ரீராமானுஜர் ஈடுபட்டதைப் பற்றி குருபரம்பரை என்றால் குரு என்றால் ஆச்சார்யர்கள் என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அதாவது... வைணவ சமய சம்பிரதாய ஆச்சாரியார்களின் வாழ்க்கைக் குறிப்புகளை தொகுத்தெடுத்து தரும் புஸ்தகம் தான் குருபரம்பரை. இந்த புஸ்கத்திலே தான் திருப்பதி மலை மேலே நடந்த அந்த சம்பவம் விளக்கப்படுகிறது.

ராமானுஜர் தன் தலைமையில் வைணவர்களை கூட்டிக் கொண்டு மலை உச்சிக்குச் சென்றதும் அங்குள்ள சைவர்கள் கோபத்தின் உச்சிக்குப் போனார்கள். ‘இங்கே எங்கே வந்தீர்கள்’ இது எங்கள் கோயில், எங்கள் தெய்வம், மரியாதையாக இறங்கிப் போங்கள்’ சைவர்கள் குரல் எழுப்பினர். ராமானுஜரும், அவரது அடியார் குழாமும் அசையவில்லை. இது பகவான் நாராயணன் எழுந்தருளியிருக்கும் கோயில். இங்கே இத்தனை காலமாக, நீங்கள் இருந்தது போதும். இனி மேலாவது இடத்தைக் காலி பண்ணுங்கள்...

வைணவர்கள் வாதம் செய்தனர்.“முடியவே முடியாது பாருங்கள் அவர் கைகளில் பாம்புகள் சுருண்டிருக்கின்றன. அதனால் இவர் சிவன்தான்.” தாங்கள்கொஞ்ச காலத்துக்கு முன்பு மாட்டிய நாகக்காப்புகளை ஆதாரமாக எடுத்து வைத்தனர். இரண்டு தரப்பிலும் வாதப்பிரதிவாதங்கள் வெடித்த நிலையில் எங்கிருந்தோ ஒரு மன்னனை அவர் பேர் தொண்டமான் சக்கரவர்த்தியாம். மன்னன் முன்னிலையில் அந்த ‘பகவத் பஞ்சாயத்து’ தொடர்ந்தது. (அந்த காலத்தில் மலைமேலே மன்னன் ஏது? அவன் ஏன் இங்கு வந்தான்? என்ற கேள்விகள் எனக்குள்ளும் எழத்தான் செய்கின்றன.

ராமானுஜர் வாய்திறந்தார். “சரி... நாம் இரண்டு தரப்பினரும்... இப்படி வாதப் பிரதி வாதங்கள் பண்ணிக் கொண்டே இருக்கிறோம். இம்மலையில் இருப்பது பெருமாள்தான் என நாங்கள் அறுதியிட்டுக் சொல்லுவோம். நீங்களோ இதுசிவகிரி என்கிறீர்கள். இப்பிரச்சினையை நாம் பேசித்தீர்க்க முடியாததால்... பகவானே தீர்த்து வைக்கட்டும் நான் யார் பெருமாளா, சிவனா?...என அவனே தன் பதிலைச் சொல்லட்டும்” என்றார் ராமானுஜர்.

எம்பெருமானாரே... அவர் எப்படிச் சொல்லுவார்? எனக் கேட்டார் ராமானுஜரின் சிஷ்யர் ஒருத்தர். கூட்டத்தில் கொஞ்சம் சலசலப்பு. இத்தனை விவாதங்கள் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அம்மலைக்கே உரிய மலைமக்கள், இந்த பஞ்சாயத்தைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா எனத் தெரியாமல் விழித்தனர்.

சரி மறுபடியும் குரு பரம்பரைக்குச் செல்வோம். பகவானே எப்படி பதில் சொல்வார் என்ற கேள்விக்கு ராமானுஜர் பதில் சொன்னார். “பெருமாளின் முக்கியமான ஆயுதங்கள்.... சங்கு, சக்கரம், சிவனின் முக்கிய ஆயுதங்கள் மான், மழு, இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் எடுத்து வாருங்கள். சாதகமான சூழ்நிலை வந்தால் எடுத்துப் பொருத்தி விடலாம். என்ற நம்பிக்கையில்... இரண்டு தரப்பினரும் தத்தமது பகவான்களின் ஆயுதங்களைக் கொண்டு வந்தனர்.

“இந்த இரண்டு தரப்பு ஆயுதங்களையும் சன்னதியில் விக்ரஹத்துக்கு கீழே வைப்போம். ராத்திரி சன்னதியை இழுத்துப்பூட்டிவிடுவோம். எல்லோரும் போய்விட்டு சூர்யோதய சமயத்திலே வருவோம். சன்னதியை திறந்து பார்ப்போம். விக்ரகம் சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டிருந்தால் அவர் பெருமாள். மான், மழுவை தரித்துக் கொண்டிருந்தால் சிவன். இந்த முடிவுக்கு கட்டுப்படுகிறீர்களா?” ....கேட்டார் ராமானுஜர்.

கூடிப் பேசினார்கள். ‘எல்லாம் பகவத் சங்கல்பம். சரி... இதுதான் சரி...’ எல்லோரும் சம்மதித்தனர். சங்கு சக்கரத்தையும், மான், மழுவையும் அந்த சன்னதிக்குள் கொண்டுபோய் வைத்தார்கள். ராத்திரி நேரம். கும்மிருட்டு உள்ளே யாராவது ஒளிந்திருக்கிறார்களா? ராத்திரி இருட்டோடு இருட்டாக உள்ளே இருந்து, தங்களுக்கு சாதகமான ஆயுதத்தை எடுத்து மாட்டிவிடுவார்களோ என்ற சந்தேகத்தில் நன்றாய் சன்னதியை ஆராய்ந்து விட்டு வெளியேவந்தார்கள்.

சன்னதியை இழுத்துப் பூட்டினர்.உள்ளே விக்ரஹத்தைத் தவிர யாரும் இல்லை. இனி எல்லாம் அவன் தீர்ப்பு... கூட்டம் கலைந்தது. ராத்திரிப் பொழுது எதிர்பார்ப்போடு கரைய... சூர்யோதயம் நேர்ந்தது. வானம், பூமி வெளிச்சமாயின.
பகவான் யார்? அவன் தீர்ப்பு என்ன? ஆவலோடு கதவைத் திறந்தார்கள்... உள்ளே?

0000000000000000000000000000000

பகுதி – 79

ராமானுஜரின் யோசனைப்படி... பெருமாள், சிவன் ஆகிய இருவரது இஷ்ட ஆயுதங்களையும் சந்நிதிக்குள் வைத்துப் பூட்டுகிறார்கள். மறுநாள் சூரியன் பிரவேசம் ஆவதற்கு முன்பே வாசலில் எல்லாரும் காத்திருக்க ஆரம்பித்தார்கள். அவர்களது நெஞ்சங்களில் ‘ஆண்டவன் தீர்ப்பு’ என்னவோ என்பதைஅறியும் ஆவல். சூரியன் பிரவேசித்த பிறகு... பூட்டு திறக்கப்பட்டது. கதவு விலக்கப்பட்டது. உள்ளே...தனது தோள்பட்டைகளில் சங்கு சக்கரம் தாங்கி ஜம்மென நின்றிருந்தது விக்ரஹம். காரணம், பெருமாளுக்கே உரிய நான்கு கைகள் இங்கே இல்லை. இரண்டு கைகள் தான். சக்கரம் சூடிக்கொண்ட சந்நிதியைப் பார்த்ததும் வைஷ்ணவர்கள் முகமெல்லாம் பூத்துப் போனது. சைவர்கள் முகமெல்லாம் செத்துப்போனது. இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

சங்கு சக்கரத்தை சூடிக் கொண்டதோடு நிற்கவில்லை பெருமாள். நேற்று ராத்திரி அங்கே வைக்கப்பட்டிருந்தன அல்லவா?... சிவனது மான், மழு மற்றும் சூலம் போன்ற ஆயுதங்கள். அந்த சிவ ஆயுதங்களெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு தூள் தூளாகக்கிடந்தன. பகவானின் சந்நிதியில் ஒரு பக்கா ரவுடி புகுந்தது போல... சிவனது ஆயுதங்கள் தூள் தூளாக சிதறடிக்கப் பட்டிருந்தன. இதைக் கண்டதும் வைஷ்ணவர்களுக்கு மேலும் கொண்டாட்டமானது. சைவர்கள் திரும்பிவிட்டனர். இந்த காரணத்தினாலேயே... ஸ்ரீராமானுஜருக்கு ‘அப்பனுக்கு சங்காழி அளித்தவர்’ என்ற பட்டப் பெயர் உண்டானது.

அப்பன் என்றால் திருப்பதி பெருமாள் என்று பொருள். அப்பனுக்கே அதாவது திருப்பதி பெருமாளுக்கே சங்கு, ஆழி அதாவது சக்கரம் வழங்கியவர் என்று அர்த்தம். இத்தனையும் குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ளவை தான். இதுபோல... மற்ற சமயத்தவரிடமிருந்து வைணவத்தை போரிட்டு காப்பாற்றியவர் என்பதாக ராமானுஜர் மீதுராமானுஜ நூற்றந்தாதி... என்றொரு அந்தாதியே பாடியிருக்கிறார் திருவரங்கத்து அமுதனார்.

அதில் ஒரு பாடல் கேளீர்....‘தர்க்க சமணமும் சாக்கிய பேய்களும்-தாழ்சடையோன் சொற்கற்ற சோம்பரும் சூனியவாதமும் நிற்க குறும்பு செய் நீசரும் மாண்டனர் நீ நிலத்தே பொற்கற்பகம் எம் ராமானுச முனி போந்த பின்னே..

.’‘அதாவது... வாதம் பண்ணும் சமணர்களும், புத்தமதம் என்னும் பேய்களும்... தாழ்சடையோனாகிய சிவபெருமானின் வழியை பின்பற்றும் சைவர்களும், கடும் சூனியவாதம் பேசுபவர்களும்... எல்லாமே பொய் என குறும்பு பேசும் அத்வைதிகளும்... செத்து ஒழிந்தனர். எப்போது?... எங்கள் ராமானுஜர் பிறந்த பிறகு...’என்கிறது இந்த அந்தாதி. திருப்பதி மலையிலிருந்து திடீரென இறக்குவது போலிருக்கிறதே என எண்ணாதீர்கள். மேலே இன்னும் கொஞ்சம் செய்திகள் பாக்கியிருக்கிறது.

மலைமேல் உள்ள பகவான் தன் இஷ்டமான சங்கு, சக்கரத்தை சூடிக் கொண்டார் சரி... பிறகு எதற்கு சிவனுடைய ஆயுதங்களை அப்படி துவம்சம் பண்ணி சிறு சிறு துண்டுகளாக செய்யவேண்டும்?... சங்கு, சக்கரத்தைச் சூடிக் கொண்டாலே... பெருமாள் என்பது அனைவர்க்கும் புரிந்து விடும். பிறகு எதற்கு... பகவான் நாராயணன் சிவபெருமானின்ஆயுதங்களை உடைக்க வேண்டும்.?... இப்படி உடைப்பதா தெய்வத்துக்கு அழகு?

...இந்தக் கேள்வியை கேட்கும் போதுதான் ‘செவி வழிச் செய்தி’ என்ற வகையில்... குருபரம்பரையை அடிப்படையாக வைத்து ஒரு செய்தி பரவியிருக்கிறது. அதாவது முதல்நாள் ராத்திரி... இருதரப்பு ஆயுதங்களையும் உள்ளே வைத்துப் பூட்டி விட்டார்கள். உள்ளே மனுஷாள் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டுதான் எல்லாரும் சென்றார்கள். இதன்பிறகு... ராத்திரியில் ராமானுஜர் மறுபடியும் கோயிலுக்கு வந்தார். எப்படி?... ஒரு பாம்பு வடிவம் எடுத்தாராம். பாம்பா?..
.
ஆமாம். ராமானுஜர் ஆதிசேஷனின் அம்சம் என்று அவருக்கு ரொம்ப காலம் முன்பு வாழ்ந்த நம்மாழ்வாருக்கு பெருமாள் பிரசன்னமாகி கூறியதாக அய்திக குறிப்பு உண்டு.... 

அதன்படியே... நம்மாழ்வார் தனக்குப் பின் வரப்போகும் ராமானுஜரைப் பற்றி... ‘கலியும் கெடும் காண்மின்’ என பாடி வைத்திருக்கிறார். இந்த வகைக்கு பவிஷ்யதாசார்யர் என்று பெயர். அதாவது தனக்குப் பின் வரும் ஆசார்யரைப் பற்றி அறிந்து போற்றுதல். இப்படியாக ‘ஆதிசேஷனின் அம்சமாக ராமானுஜர் அவதரிப்பார்’ என்று பெருமாளே...நம்மாழ்வாருக்கு சொன்னதாக அய்தீகம்.

அப்படிப்பட்ட... ஆதிசேஷனின் அம்சமாகிய ராமானுஜர்... அன்று ராத்திரி மறுபடியும் கோயிலுக்கு வந்தார். சந்நிதி பூட்டிக் கிடக்கிறது. உள்ளே இருதரப்பு ஆயுதங்களும் இருக்கின்றன. காலையில் சங்கு, சக்கரம், சூடிக் கொண்டு பெருமாளாகத்தான் அவர் காட்சியளிக்க வேண்டும் என முடிவு கட்டிய ராமானுஜர்... கோயிலை சுற்றிச் சுற்றி வருகிறார். உள்ளே போக ஒரே வழி... கோமுகைதான். அப்படியென்றால்?... உள்ளே உள்ள விக்ரஹத்துக்கு திருமஞ்சன நீராட்டு வைபவம் நடத்தும் போது அந்த நீர்மம்... வழிந்து வெளியே ஓடி வருமே... அந்த துவாரத்துக்கு பெயர்தான் கோமுகை. அது ஒன்றை தவிர சன்னதிக்குள் செல்ல வேறு வழியில்லை.

டக்கென... ஆதிசேஷனின் அம்சமான ஒரு பாம்பாக வடிவெடுத்த ராமானுஜர் அந்த துவாரம் வழியாக சன்னதிக்குள் சென்று விட்டார். கடகடவென சங்கையும், சக்கரத்தையும் எடுத்து விக்ரஹத்தின் தோள் பட்டையில் சொருகுகிறார். காரியம் முடிந்தது. மறுபடியும் பாம்பாகி வெளியே வந்து...ராத்திரியில் மறைந்து விட்டார்.
பிறகு... காலை எல்லாரோடும் வந்து திறந்து பார்க்கும் போது சங்கும் சக்கரம் சூடியபடி நிற்க... சிவ ஆயுதங்கள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் அந்த செவிவழிச் செய்தி...அப்படியென்றால்?...

0000000000000000000000000000

பகுதி – 80.

குரு பரம்பரையை மையமாக வைத்து எழுந்த அந்த செவி வழிச் செய்தியைக் கேட்டீர்கள் அல்லவா? செவி வழிச் செய்தி என்றால், மறுக்கலாம், மறுக்காமலும் இருக்கலாம். தனியே மொட்டையாய் இந்தச் செய்தி முளைத்திருந்தால் இதை மறுதலித்து விடலாம். ஆனால், குரு பரம்பரையில் குறிப்பிட்டுள்ள நிகழ்வுகளை ஒட்டியது என்பதால் ரொம்பவும் புறக்கணித்துவிட முடியவில்லை. இன்னொரு பக்கம்... ராமானுஜர், ஆதிசேஷன் வடிவம் கொண்டு கோமுகம் வழியாக உள்ளே சென்ற வைபவமும் ஒரிஜினல் குரு பரம்பரையில் இருக்கிறது. அதை விட்டு வைத்தால்... ராமானுஜர் நிரூபணம் செய்தது கேள்விக்குறி ஆகிவிடும் என்று... அச்சம்பவத்தை செவி வழிச் செய்தியாக மாற்றி விட்டார்கள் என்றும் ஒரு கருத்து கனமாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலைமையிலே... திருப்பதி மலையைப் பற்றிப் பேச நீர் யார்? உமக்கு என்ன பாத்யம் இருக்கிறது? என என்னிடம் சிலர் நேரடியாகவே வந்து கேள்வி கேட்கிறார்கள். இதற்குப் பதிலாகவும் திருப்பதி மலையைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யத்தையும் சொல்கிறேன். ராமானுஜரின் மாமா திருமலை நம்பி என்று சொன்னேன் அல்லவா? அவர் மலை மேலே இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்தாராம்.

அந்த மலையிலே செய்யக்கூடிய பெரிய கைங்கர்யம் பெருமாளுக்கு நித்யப்படி தீர்த்தம் கொண்டு வருவது தான். ஏனென்றால்... மலைமீது சிலச் சில குன்றுகளுக்கு இடைப்பட்ட ஆழப்பகுதியில் தண்ணீர் தேங்கியிருக்கும். அதை தேடிப்பிடித்து குடத்தில் எடுத்துக்கொண்டு வரவேண்டும். ரொம்ப கஷ்டமான காரியம். இதுபோல திருமலை நம்பி மலையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சென்று பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணி வந்தார். அன்றைக்கு என பார்த்து... சுற்று வட்டாரத்தில் எங்கேயும் தண்ணீர் இல்லை. ஆஹா... பகவானுக்கு எப்படியாவது கைங்கர்யம் செய்யவேண்டுமே என யோசித்த திருமலை நம்பி எங்கெங்கும் அலைந்தார். தண்ணீரே கிடைக்கவில்லை. ரொம்ப ரொம்ப அலைந்து கஷ்டப்பட்டு ஒரு குடம் தண்ணீரை மொண்டு விட்டார். (திருமலை நம்பி பட்ட கஷ்டத்தை உரைப்பதற்காக ஆகாசகங்கை போய் தண்ணீர் கொண்டு வந்தார் என்றும் சொல்வார்கள்.)

ரொம்ப சந்தோஷப்பட்டபடியே அந்தக் குட தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு திரும்பினார். அப்போது... ஒரு குன்றின் அந்தப் பக்கத்திலிருந்து... `தாத்தா’ என ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தார் திருமலை நம்பிகள். தாகத்தால் தவிக்கும் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
`எனக்கு மிகமிக தாகமாக இருக்கிறது. வாய்க்குள் எச்சில்கூட வற்றிவிட்டது. கொஞ்சம் தீர்த்தம் தந்தீர்கள் என்றால் உங்களுக்கும் தன்யனாவேன். (நன்றிக்குரியவன் ஆவேன்) என கெஞ்சினார். அவரது கண்கள், கைகள் இரண்டும் திருமலை நம்பிகள் தண்ணீர் கொடுப்பார் என எதிர்பார்த்திருந்தன.

திருமலை நம்பிகள் திரும்பிப் பார்த்தார். இந்தக் காலத்தில் கிராமப் பகுதிகளில் எங்கெங்கோ அலைந்து ஒரு குடம் தண்ணீர் எடுத்து வருவதுபோலவும், நகரப் பகுதிகளில் லாரி வந்து நிற்கும் போது அடித்துப் பிடித்து ஒரு குடம் தண்ணீர் பிடித்தவன், எப்படிப் பார்ப்பானோ கிட்டத்தட்ட அதேபோல திரும்பிப் பார்த்தார். `மன்னிக்கணும் அய்யா.... இது பெருமாள் கைங்கர்யத்துக்கு எடுத்துக்கொண்டு போறேன். நானே ரொம்ப கஷ்டப்பட்டு பிடிச்சேன். உங்களுக்குக் கொடுக்க முடியாது.’``என்னப்பா ஒரு மனுஷன் தவியா தவிக்கிறேன். எனக்குக் கொடுக்காம... பெருமாள், பெருமாள்னு சொல்றியே? இது உனக்கே நியாயமா? எனக்குத் தண்ணீர் தந்தால் ஒரு உயிரை காப்பாற்றின புண்ணியம் கிடைக்கும். அந்தக் கல்லுக்கு ஊற்றி என்ன பண்ணப் போறே?’’ என்றார் அந்த தாகவாதி. திருமலை நம்பியோ `முடியவே முடியாது’ என சொல்லிவிட்டு நடந்தார்.

மீண்டும் தாத்தா... என குரல். இப்போது கொஞ்சம் வேகமாக ஒலித்தது... திரும்பிப் பார்த்தால் பெருமாள்தான் அந்த தாகவாதியாக வந்து தண்ணீர் கேட்டு சோதித்து இப்படி காட்சி தந்திருக்கிறார். இதையேன் நான் இப்போது சொல்கிறேன்? `தாத’ என்றால் சமஸ்கிருதத்தில் அப்பா என ஒரு அர்த்தம் உண்டு. பெருமாளை பிரம்மனுக்கு அப்பா என்பார்கள். அப்படிப்பட்ட அப்பாவான பெருமாளே திருமலை நம்பியை `தாத...’ அதாவது அப்பா என அழைத்ததால்... திருமலை நம்பி அடியார்க்கு தாத்தா ஆனார். அவரது வம்சத்தினர் தாதாச்சாரியார்கள் ஆயினர்.

அதாவது...`பிதாமகஸ்ய அபி பிதாமஹாய பிராசேத்து ஆதேஸ பலப்ரதாய ஸ்ரீபாஷ்யகாரஉத்தம தேசிகாய ஸ்ரீஸைல பூர்ணாய நமோ நமஸ்தே...’- பிரம்மனுக்கு அப்பாவாகிய பெருமாளே திருமலை நம்பியை அப்பா என அழைத்ததால் அவரை நாம் போற்றுவோம் என்கிறது இந்த ஸ்லோகம்.

அதாவது திருமலை நம்பியின் வழிவழி வந்தவர்கள் `தாத்தாச்சாரி’ ஆகினார்கள். அடியேனும் அப்படி வந்தவன்தான் என என் குடும்பத்தினர் சொல்லியுள்ளார்கள்.
அதனால்... நானும் திருப்பதியைப் பற்றி பேச, எழுத பாத்யம் உள்ளவன்தான். இதற்காக மட்டும் அந்தக் கதையை நான் சொல்லவில்லை. `மனிதனுக்கு உதவு. தெய்வத்தைப் பிறகு பார்’ என தெய்வமே திருமலை நம்பிகளிடம் சொன்னது என்ற நீதியை உணர்த்தவே இதை நானிங்கு குறிப்பிட்டேன். அடுத்து... திருப்பதி மலையைப் பற்றி நாம் பார்க்கையிலே முக்கியமானவர் ஹத்தியராம் பாபாஜி. யார் இவர்? -

00000000000000000000000000000

பகுதி – 81.

திருப்பதி மலையின் ‘கல்லின் கடவுள்’ அதாவது மண்ணின் மைந்தன் என்று சொல்கிறோமே... அது போல இம்மலைக்கேயுரிய தெய்வம் காளி என்பதையும்... அவள் எவ்வெவ்வாறு மாற்றப்பட்டாள் என்பதையும் இதுகாறும் பார்த்தோம். சென்ற அத்யாயத்தின் முடிவில் ஹத்தியராம் பாபாஜி என்பவரை குறிப்பிட்டு அவர் முக்கியமானவர் என்றும் சொல்லியிருந்தேன். இவர் யார்?... திருப்பதியில் இவர் என்ன செய்தார்?... பேரைக் கேட்ட உடனே உங்களுக்கு அவர் எப்படிப்பட்டவராக இருந்திருப்பார் என யூகிக்க தோன்றும்.

ஹத்தியராம் ஒரு வடக்கத்தியர், வட இந்தியாவிலிருந்து அமைசியைத் தேடி அலைந்து... பரதேசியாய் சுற்றிச் சுற்றி திருப்பதிக்கு வந்து சேர்ந்தார். அப்போது இங்கே வேங்கடாஜலபதி கோயிலில் வழிபாடுகள் இயல்பாக அமைதியாக நடந்து கொண்டிருந்தன. பாபாஜி வேங்கடாஜலபதி மீது பக்தி செலுத்தினார். சன்னிதிக்கு பக்கத்திலேயே இருப்பார். கோயில் காரியங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார். கொஞ்ச நாளில்... இந்த ஆர்வத்தினாலேயே பாபாஜி... திருப்பதி கோயிலின் நிருவாகியாகவே மாறினார். சரி... இவர் என்ன அப்படி... பெரிதாக செய்துவிட்டார் என்கிறீர்களா?...

மலை மீது ஏறி... தெய்வத்தைப் பார்க்க வருகிறவர்கள் மொட்டையடிக்கும் பழக்கம் எப்படி வந்தது என்று உங்களுக்கு விளக்கினேன். ஞாபகம் இருக்கிறதா?... மலைமக்களில் பூர்வீக குடிகளில் ஒரு பிரிவினரான அம்பட்டையர்களுடன்... பிராமணர்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி... ‘உனக்கும் தட்சணை வேண்டும். எனக்கும் தட்சணை வேண்டும்...’ என்று பேசிய பேரத்தின் படி... கோயிலுக்கு வருபவர்களுக்கு அம்பட்டையர்கள் மொட்டையடித்து வருமானம் பார்த்தார்கள். அந்த மொட்டையடிக்கும் பழக்கத்தை தனது காலத்தில் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார் பாபாஜி... கோயிலை ப்ராபகண்டா அதாவது பிரபல்யமாக்க வேண்டுமென்றால், இதுபோல ஏதாவது செய்யவேண்டும்... என நினைத்து இப்படிச் செய்தார்.

இந்த காலகட்டங்களில் தான் திருப்பதிக்கு ஜனங்கள் கொத்துக் கொத்தாக வரத் தொடங்கினர். இப்போது... புரட்டாசி மாசம்... திருப்பதிமலையே ஆடிப்போகும் அளவுக்கு பெருங்கூட்டம் கூடுகிறது. இந்த அளவு கூட்டம் அன்று இல்லையென்றாலும்... அந்தக் காலத்துக்கு ஏற்றவாறு... அப்போதைய சூழலுக்கு தக்கவாறு கூட்டம் வரத் தொடங்கியது .இப்படிப்பட்ட நிலையில்தான்... சில பிராமணர்கள் பாபாஜியிடம் சென்றனர். ‘விக்ரஹத்தின் கைகளில் பாம்பு இருக்கிறது. அதை எடுத்துவிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதே போல... அந்த பின்னலையும்... நீக்கி விட்டால்...’ இதற்கு... ‘பழையபடி தான் இருக்கும். எதையும் மாற்ற முடியாது’... என மறுத்துவிட்டாராம் பாபா. அதென்ன பின்னல்?...

இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை. இதை உங்களிடம் சொல்லக்கூடாது. கூடவே கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும்... கொஞ்சம் நெருடலுடனேயே சொல்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு...இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் பற்றி தான் உங்களுக்கு தெரியுமே... எப்போதும் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கும் மோதல் தேசங்கள். இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் யுத்தக் காற்றையே சுவாஸித்துக் கொண்டிருந்தனர். போர்ப்புழுதி படிந்த அந்த நித்யகண்ட பூமியில் உள்ளதுதான் ஜெருசேலம்.

திருப்பதி பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் ஏதுக்கடா... ஜெருசேலம் போனார் என நீங்கள் யோசிக்கலாம். அந்த ஜெருசேலத்தில் ஜனித்த ஒரு ஸ்த்ரீக்கு இந்தியக் கோயில்களைப் பற்றி அறிய ரொம்ப அலாதியான ஆசை. அதுவும் திருப்பதி கோயிலை, பெருமாளை பார்க்கவேண்டும் என்கிற ஆசை. அந்த யூத இனத்தைச் சேர்ந்த யுவதிக்கு நம்மூர் இசையரசி எம்.எஸ். அம்மா அவர்களைத் தெரியும். அந்த அறிமுகம் மூலமாக திருப்பதி கோயிலுக்கு வந்தார். தனக்கு அவ்வப்போது வரும், சனாதன சமயம் பற்றி சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக வேதம் அறிந்த ஒருவரை தேடினார். அந்த யூத யுவதி. உடனே... என்னைப் பற்றிய தகவல்களை அவருக்கு யாரோ கொடுக்க... என்னை அணுகினார். சரி என அவருடன் நானும் போனேன், திருப்பதி கோயிலுக்கு. அவர் மிலேச்ச மதத்தை சேர்ந்தவராயிற்றே எப்படி உள்ளே விட்டார்கள்?...

சிற்சில பராக்கிரமங்கள் நிகழ்த்திய பிறகுதான் உள்ளே போன அந்த யூதயுவதி... வேங்கடாஜலபதியை சுற்றிப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட...‘கொஞ்சம்’ சிபாரிசுகளுக்குப் பிறகுதான் அதற்கும் அனுமதி கிடைத்தது. அப்போதுதானப்பா... நானும் பார்த்தேன். திருப்பதி பெருமாளுக்கு அழகான பின்னல். தலையை சீவி சிங்காரித்து பின்னல் செய்து போட்டிருந்தார்கள். இப்போது சரியா... அவள் மலைக்காளி தான் என்று நான் சொன்னது... நீ என்ன நேராகப் போய் பார்த்தாயா என்று யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் ரொம்ப ரொம்ப தயக்கத்துக்குப் பிறகு... அரை மனதோடு இந்த முழு உண்மையையும் உங்களுக்கு சொல்லிவிட்டேன்

வேங்கடாஜலபதி பெருமாளை இப்போதும் எக்கச்சக்கமான பக்தர்கள் அதீத நம்பிக்கையோடு... வணங்கிச் செல்கிறார்கள். அவர்கள் நினைத்ததெல்லாம் நடந்து ‘திருப்பதிக்கு போய் வந்தால் வாழ்வில் திருப்பம் நேருமடா’ என்றெல்லாம் போற்றி புகழப்படுகிறது. ஆனாலும்... திருப்பதியில் என்ன நடக்கிறது?...பணம் படைத்த முக்கியஸ்தர்கள் என்றால்... அவர்களை சற்றே கிட்டத்தில் நின்று பெருமாளை தரிசிக்க வைக்கிறார்கள். மற்றவர்களுக்கு 50 ரூபாய், 100 ரூபாய் என... பெருமாளைப் பார்க்க கட்டணம்.

அதுவும் பணம் இல்லாதவர்கள் என்றால்... 5 மணிநேரம், 8 மணிநேரம், ஏன் 24 மணிநேரம், 2 நாட்கள் என நின்று பார்க்க வேண்டிய கட்டாயம்... அதுவும்... பெருமாளுக்கு 15 அடி, 20 அடி முன்பே பக்தர்களை தடுத்து ‘நிறுத்தி’ `அப்படியே போய்க் கொண்டே இரு...’ என்கிறார்கள். இப்படி வர்த்தகக் கடவுளாக மாறிவிட்ட வேங்கடாஜலபதியின் முந்தைய நிலைமையைதான் நான் உங்களுக்குச் சொன்னேன்.

அதாவது... மலையின் மைந்தர்கள், முதலில் காளியை வழிபட்டவர்கள் இன்று வெளியே உட்கார்ந்து மொட்டையடிக்கிறார்களே... இதை பெரிய பிஸினஸ்ஸாகவும் ஆக்கி விட்டார்களே... அந்த ஆதங்கத்தில்தான்... திருப்பதி பற்றிய இத்தனை திருப்பங்களையும் சொன்னேன். அடுத்து...

0000000000000000000000000000000

பகுதி – 82 - 1

என்ன பார்த்தோம்...? திருப்பதியில் நான் பார்த்ததைப் பார்த்தோம். வெங்கடாஜலபதி விக்ரகம் குறித்த சர்ச்சைகளைப் பார்த்தோம். இதற்கு மேலும் சில ஆதாரங்களைக் கூட நாம் சேகரிக்க முடியும்.

பொதுவாகவே திருமாலுக்கு நான்கு கைகள். இரண்டு கையில சங்கு சக்கரமும் இன்னும் இரண்டு கைகள் எக்ஸ்ட்ராவாகவும் இருக்கும்.

ஆனால்... திருப்பதி பெருமாளுக்கு இரண்டே இரண்டு கைகள் தான். அந்த இரண்டு கைகளிலும் சங்கு சக்கரம் இல்லை. சங்கு சக்கரம் தோள்பட்டையில்தான் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த கை கணக்கும் சர்ச்சைக்கு கை கொடுக்கிறது.

அடுத்ததாக முக்கியமான இன்னொரு ஆதாரம்... திருப்பதி பெருமாளின் பக்கத்தில் பிராட்டியைப் பார்த்ததுண்டோ? இருக்க மாட்டாரே? ஏன் இல்லை?

மலையை விட்டு கீழே இறங்கி கொஞ்ச தூரம் பயணித்த பின் திருச்சானூர் என்னும் இடத்தில் தான் பத்மாவதித் தாயாரை காட்டுகிறார்கள். ஏன் பக்கத்தில் இல்லை?

பெண்ணுக்குப் பக்கத்தில் ஜோடியாக எப்படிப் பெண்ணை வைக்க முடியும்.

ஆமாம்... ஏற்கெனவே மேலே இருக்கும் விக்ரகமே மலைமக்களின் தாயாராக இருந்ததுதானே? அதனால் தான் மேலே... வெங்கடாஜலபதியானவருக்கு ஜோடியில்லை.

பின் கீழே திருச்சானூரில் பிராட்டி இருக்கிறார் என்ற கருத்துரு பரப்பப்பட்டது. இவைதான் இந்தச் சர்ச்சைக்கு ஆதாரங்கள். நமக்கு... இப்போது வெங்கடாஜலபதி ஆணா, பெண்ணா என்பது முக்கியமில்லை.

இருந்தாலும்... இன்றைக்கு உள்ளூர் குளிர்பானங்களான மாப்பிள்ளை விநாயகர், கோலிசோடா போன்றவற்றை வெளிநாட்டு பானங்கள் நசுக்கி நம் தண்ணீரையே பயன்படுத்தி சம்பாதிப்பது போல....Local People ஆன மலைமக்களின் காளியை மலையேறியவர்கள் மாற்றிவிட்டார்களே. அந்த உரிமைப் பிரச்சினைக்காகத்தான் இப்படிச் சொன்னேன்.

அதனால்... திருப்பதி பக்தர்கள் என்னை தப்பாக நினைத்துக் கொண்டுவிடாதீர்கள். பக்தி ஒன்றுதான்.‘சரி... அடுத்து...?’

தொடரும் 

நன்றி : http://thathachariyar.blogspot.fr/2011/01/76-to-82-1.html

Comments