இந்து மதம் எங்கே போகிறது? -மெய்யியல் - பாகம் - 91- 2- பாகம் 96.


எது இந்து மதம்?


நம் தேசத்தில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.

சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே... ஏன்?

நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

0000000000000000000000

பகுதி – 91 - 2.

இவ்வளவு விஷயங்களைப் பார்த்த நாம்.. எங்கேயாவது ஒரு இடத்திலாவது 'ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறோமா? முதல் அத்தியாயத்தின் முடிவில்... பிராமணர்கள் இங்கு (இந்தியாவிற்கு) வரும்போது 450 மதங்கள் இருந்தனவாம் இதில் எது இந்து மதம்? என கேள்வி எழுப்பியிருந்தேன்.

அந்தப் பிரயோகத்திற்குப் பிறகு வேறு எந்த இடத்திலாவது நாம் இந்து or ஹிந்து என்கிற வார்த்தையைப் பிரயோகப்படுத்தி யிருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள் தலைப்பே இந்து மதம் எங்கே போகிறது? என்பது தான் ஆனால், இதுவரை இந்து என்கிற பெயரையே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த வில்லையே?

நமது மதத்தைப்பற்றி இவ்வளவு விஷயங்களை, நமது கலாச்சார மதத்தைப்பற்றி எத்தனை மேற்கோள்கள், சம்பவங்கள், கதைகள் பார்த்துவிட்டோம் ஆனால்...? இந்து or ஹிந்து என்கிற பதத்தை எடுத்து பயன்படுத்தவில்லையே?

இந்தக் கேள்வி வரும்போதுதான் இந்தப் பதம் எப்படி வந்தது என சொல்ல வேண்டியுள்ளது அதற்குமுன்.. உலகத்தில் பொதுவாக மனித இனங்களைப் பார்த்தோமென்றால்.. அய்ந்தாகப் பிரிக்கிறார்கள் Artho biological அறிஞர்கள்.

என்னென்ன இனம்? Semetic - யூதர்கள், அரேபியர்கள் Hemetic - இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள். Negroes - ஆப்பிரிக்கா மக்கள். Mongols - சீனா தேசத்தவர். Aryans - அய்ரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள் போன்றோர்..

இந்த இனப் பாகுபாட்டை அப்படியே பார்த்துவிட்டு பாபிலோனியாவுக்கு (IRAQ) வாருங்கள். பாபிலோனியா?
ஆமாம் உலக வரலாற்றாசிரியர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு.. அவர்கள் வெளியிட்ட ஒரு சொற்றொடரை இங்கே தருகிறேன் அப்போது பாபிலோனியா என்றால் என்ன என்று உங்களுக்கு விளங்கும்.

''In the dark past of ancient countries.. Bobylonia and Egypt are only lights with fine culture' உலகின் மிக இருட்டான பழைய காலத்தைப் புரட்டிப் பார்க்கிறபோது அங்கே இரண்டு இடங்களில் தான் நாகரிக கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது ஒன்று பாபிலோனியா (IRAQ) , மற்றொன்று எகிப்து.

இதில் ஒரு வெளிச்ச ஸ்தலமான பாபிலோனியாவைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம் அங்கே வாழ்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகப் புரட்சி செய்தவர்கள், நாடமைத்து, நகரம் அமைத்து கட்டியாண்டவர்கள் அவர்களது மதமும், நாகரிகமும் பொருந்தியதாகத்தான் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் 'The Encyclopedia of world religions and Ethics’ என்ற களஞ்சியத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.

பாபிலோனியர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்ன? பழைமை வாய்ந்த பாபிலோனியாவில் Fatamism worship அதாவது விலங்கு உருக்களை வழிபடும் வழக்கமும் இருந்தது.எப்படி? அவர்கள் அந்த விலங்குக் கடவுளுக்கு விழா எடுத்தார்கள் அதுவும் நம்மூரில் பல்லாக்கு தூக்குகிறோமே அதேபோல மரத்தாலான பல்லாக்கு செய்து அதை பூக்களால் அலங்கரித்து தங்கள் தெய்வத்தை அதற்குள் வைத்து தூக்கிக்கொண்டு சென்று உற்சவமே நடத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி... இன்னது இன்னதுதான் தர்மங்கள், இவைகளைச் செய்யக்கூடாது என நீதிக் கருத்துக்களை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் வளர்ந்திருந்தனர்.

குட்டைப் பாவாடை போல கட்டிக்கொண்டு கரடு முரடான கட்டுமஸ்தான உடலில் இடுப்பில் வாளை சொருகிக் கொண்டு அவர்கள் பார்க்கப் பயங்கரமாக இருப்பார்கள்.

ஆனால், முற்றிய நாகரிகத்திலிருந்து முளைவிட்டுப் பூத்திருந்தது அவர்களின் வாழ்க்கை.சரி.. பாபிலோனியாவில் கலாச்சார வெள்ளம் கரைபுரண்டு ஓடட்டும் அதற்கும், 'இந்து பேருக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்க வருகிறீர்கள். பொறுங்கள்.. பாபிலோனியாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்த்து விடுவோம்.

0000000000000000000000

பகுதி – 92.

பாபிலோனியர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். நமது விஷயத்துக்கு வரும் முன்னர் பாபிலோனியர்களின் நாகரிக கலாச்சாரம் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். என்ன பண்பாடு. அப்படியே ஆச்சரியம் பொத்துக் கொண்டு பாபிலோனியா மீது வழிகிறது. அப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் பாபிலோனியர்கள்.

சுமேரிய நாகரிகத்தின் சுவடுகளைக் கொஞ்சம் எடுத்துக் கொண்ட பாபிலோனியர்கள் தங்களுக்கென்று தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பாபிலோனிய மண்ணுக்கு கொஞ்சம் செல்லலாமா?

பச்சைப் பசேலென பூத்துக் கிடக்கும் பச்சை மரங்கள். அந்தப் பக்கமாய் ஓர் இனிய இசை காற்றில் சலசலவென பரவுகிறது. அது என்ன நாதம்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாசிக்கப்பட்ட அந்த கீதத்தை, இசையை எப்படி வார்த்தைகளில் கொண்டுவர முடியும்?

அதோ அந்த இசை வரும் திசை நோக்கிச் சென்றால், ஒரு சிறிய கூட்டம் நடுவிலே மொட்டைத் தலையோடு நீண்ட சிவப்பு நிற முழு அங்கியோடு காட்சி தருகிறார் ஒருவர். யார் இவர்? அவர்தான் பாபிலோனியர்களின் மதகுரு.

பாபிலோனியர்களின் மதம் என்ன? இயற்கையான சூரியனையும் சந்திரனையும் வழிபட்டவர்கள். பிறகு விலங்குகளை வழிபட்டு பிற தங்களுக்கென கடவுள்களை தங்கள் மொழியின் பெயரில் உருவாக்கிக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில், டமாரம் இருக்கிறது. புல்லாங்குழல் இருக்கிறது. சிலர் இவற்றை வாசிக்க இன்னும் சிலர் பாடுகிறார்கள். “In the assembly of the elders may my speech he heardOh God.. daily walk with me thy prise I would sing...”பாபிலோனியர்களின் பலதரப்பட்ட பக்தி கீதங்களில் ஒரு சிறு துளி இது.

Encyclopedia of World Religions and ethics என்ற புத்தகத்தில் . . . Babytlonian’s Prayer என்ற தலைப்பின் கீழ் இந்த பாட்டை நாம் படிக்க முடிகிறது. என்ன அர்த்தம்?

“மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழவேண்டும். கடவுளே என்னை அந்த அளவுக்கு என்னை அறிவுள்ளவனாக மாற்று. தினமும் என்னோடு எனக்குத் துணையாக நடந்து வா. அதற்காகத்தான் உன்னைப் போற்றிப் பாடுகிறேன்..” கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பாபிலோனியர்கள்.

இங்கே மதகுருமார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மதகுருக்களில் நிறைய வகைகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். பொதுவான மத குருவுக்கு சேங்கு என்று பெயர். இதற்கு தலைவர் என்று அர்த்தம். இதற்கு அடுத்தவர் ‘சேங்கு ரேபு’ என்றால் High Preist. அவரைவிட இவர் உயர்ந்தவர். அதற்கு அடுத்தவர் ‘சேங்கு டேனு’ இவருக்கு Mighty Preist என பெயர். இவரையும் விட உயர்ந்தவர்தான் ‘சேங்கு மேஹு’. அதாவது Supreme Preist.

இவ்வாறு மதகுருக்களில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வழிபாடுகளில் அதாவது Public Prayer களில், மன்னனிலிருந்து பாமரர்கள் வரை அங்கே அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். பாமரர்களும் ஏன் அடிமைகள் கூட அங்கே கூட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வழிபாட்டில் கலந்துகொள்ள ஒரு தகுதி வேண்டும்.

அதாவது பத்தில் ஒரு பங்கு வரி கட்டுபவன். வழிபாட்டில் வந்து கலந்துகொள்ளலாம். அப்படி வரிகட்ட இயலாதவன் அதாவது நிலமற்ற ஏழைகளும் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அதற்கு பதிலாக கோயில் காரியங்கள் சிலவற்றைச் செய்யவேண்டும். அதாவது உடல் உழைப்பை அர்ப்பணிக்கவேண்டும்.

வழிபாட்டில் பெண்கள்? ஏன் கிடையாது? இதே போல அவர்களுக்கும் வரி தகுதிதான். ஏனென்றால் பாபிலோனியர்கள் பெண் தெய்வங்களையும் வழிபட்டவர்களாயிற்றே.

இங்கேயொரு காட்சி. ஒரு கோயிலில் பொது வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே வந்த ஒரு பெண்ணை சில அதிகாரிகள் வழிபாட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விடுகின்றனர்.

‘ஏய். நான் யார் தெரியும்? ’‘யாராக இருந்தால் என்ன?’‘ என் பெயர் நின்குயயா (Ninaqaya). நான் இந்நாட்டு அரசனுடைய அம்மாவின் பணிப்பெண். அரண்மனையிலிருந்து வருகிற எனக்கே அனுமதி இல்லையா? ’‘வரியைக் கட்டு பெண்ணே. அதுவரை நீ ராஜாவின் அம்மாவாக இருந்தால் கூட உனக்குக் கவலையில்லை.’ பிறகென்ன? தாதிப்பெண் தன் பங்கான வரியைக் கட்டினாள். பிறகுதான் வழிபாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டாள்.

ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மதகுருமார்கள் பக்தி, ஆன்மிகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல, பல்வேறு நிர்வாகப் பணிகளையும் இதன் மூலம் செய்து வருகிறார்கள்.

இப்படி மதவிஷயத்தி லும் நிர்வாக விஷயத்திலும் கட்டுப்பாடு, வரி நிர்ணயம், அதன் மூலம் பொதுச்சேவை, அரசன் முதல் பாமரன் வரைக்கும் வரையறுக்கப்பட்ட நீதி என்றும் பொது வழிபாடு என்றும் நாகரிகமான வாழ்க்கை நடத்தி யிருக்கிறார்கள். இவர்களின் இந்த நகர நாகரிக வாழ்க்கை அடுத்த நாட்டு அரசர்களை உறுத்துவது வாடிக்கை தானே. பாபிலோனியா மீது ஆசை சொண்டான் அந்த நாட்டு மன்னன்.

00000000000000000000000000

பகுதி - 93.

உச்சகட்டமான பாபிலோனிய கலாச்சார வாழ்க்கை முறையைப் பார்த்தோம். இப்படிப்பட்ட பூமியை ஆள... யாருக்குதான் ஆசை வராது? வந்தது அந்த மன்னனுக்கு. எந்த மன்னனுக்கு? இன்றைக்கு இரண்டாயிரத்து 600 ஆண்டுகள் முன்பாக என்றொரு வரலாற்றுக் கணிப்பு -

பாபிலோனியாவுக்குப் பக்கத்து பூமியான பாரசீக நாட்டின் மன்னன் முதலாம் கேம்பசிஸ் (Cambysis I) என்பவனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே ஒருவித ஆக்ரோசத்துடன் தான் அவதரிக்கிறான் அந்தப் பயல். எல்லாரும் யோசிக்கிறார்கள். ‘அடிமைகளின் தேசத்தில்... பிறந்த உடனேயே இப்படி ஆக்ரோசத்துடன் துடிக்கிறானே... சரியான வால்தான்’ என்று.

ஆமாம்... அப்போது பாரசீகர்கள் மிடீய நாட்டு அரசனான ஆஸ்ட்யாகஸ் (Astyages) சின் அடிமைகளாகவே (Vassals) வாழ்க்கை நடத்தி வந்தனர். மிடீயன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்தபோதும், பாரசீக நாடும் ஒரு அமைப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. The Persian nation contains a number of tribes என்கிறார் வரலாற்றறிஞர் ஹெராடடஸ்.

அதாவது பல பழங்குடி மக்களின் தொகுப்பு தான் பாரசீகம்.

பாஸரகேட், மராஃபி, மாஸ்பி போன்ற பல பழங்குடியினத்தவர். இப்படி கொத்துக் கொத்தாக வாழ்ந்து வந்த இந்தப் பழங்குடியின மக்களைத் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தான் மிடீயன் நாட்டு மன்னன். இந்த சமயங்களில் சைரஸ் (க்யூரஸ் என்றும் அழைப்பார்கள்) சின்னப் பிள்ளை. தன் அப்பாவின் வளர்ப்பில் எல்லா கலைகளையும் கற்றுக் கொண்டு வந்த சைரஸ்... இளமை துடிக்கும்... முறுக்கேறிய வயதில் தன் நாட்டின் அரசன் ஆனான்.

அப்போதெல்லாம் பாரசீகர்களின் நாட்டுக்கு அன்சன் என்று பெயர். சைரஸ், அன்சனின் அரசானானதும்... தன் தந்தை கட்டி மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி நாடோடி மக்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். தன் தந்தையைவிட சைரஸ் அவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்த... அதாவது இவனே மிடீயன் அரசனுக்கு கட்டுப்பட்டு வந்தவன். ஆனால்... இவன் தனக்கு கீழே சில பழங்குடியினரை உதைத்து கப்பம் வாங்கிக் கொண்டிருந்தால்... அவர்கள் என்ன செய்வார்கள்?

கத்தி, கற்களைத் தூக்கிக் கொண்டு சைரஸ்க்கு எதிராகப் போராட ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தான் மிடீயன் அரசன். “இந்த சைரஸே நமது கட்டுப்பாட்டில் இருக்கிறான். இவன் எப்படி அந்தப் பழங்குடியினரை மேய்க்கலாம்?” என கோபப்பட்டு... தன்னுடைய ஒரு படையை சைரஸ் நாட்டுக்கு அனுப்பி விட்டான். மிடீயன் நாட்டுப்படை ஹார்பகஸ் (Harpogus) என்ற தளபதியின் தலைமையில் சைரஸ் நாட்டுக்கு விரைந்தது.

“வாடா... வா... நான் என்ன என் அப்பனைப் போல கிழவன் என்று நினைத்தாயா? யாரை அடிக்கலாம்... அதுவும் இவ்வளவு காலமாக எங்களை அடிமையாக வைத்திருந்த உன்னை எப்போது அடிக்கலாம் என காத்திருந்தேன்...” என தொடை தட்டிய சைரஸ்... தன்னை நோக்கி வந்த மிடீயன் நாட்டுப் படையை... ஓட ஓட விரட்டினான்.

தளபதி ஹார்பகஸ் என்பவனை அடித்து நொறுக்கிய சைரஸ் அடுத்த கட்டமாய்... மிடீயா நாட்டையும் பிடித்தான். அது முதற்கொண்டு... மிடீயா மற்றும் பார்ஸியா பேரரசின் தலைவனான் சைரஸ். தன் அப்பன் காலத்தில் தன்னை யார் அடிமையாக்கினார்களோ, அவர்களை தன் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக மாற்றினான்.

இந்த இடத்தில்தான் ஒரு ‘ராஜ ரகசியம்’ பதுங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை வரலாற்றாசிரியர் ஹெரடடஸ்ஸே பகிரங்கப்படுத்துகிறார். என்ன ரகசியம்?

சைரஸின் அப்பா இருக்கிறானே... அவன் தன்னை அடிமையாக வைத்திருந்த மிடீயா நாட்டு மன்னனின் மகள் மண்டனே (mandane) வை எப்படியோ வளைத்துப் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டான். அதாவது பல மனைவியரில் அவளையும் ஒருத்தியாக தன் அந்தப்புரத்து சுந்தரியாகக் கொண்டான்.

சரி... இதில் என்ன ராஜ ரகசியம்... இதுதான் அரச குலங்களிலே நடக்கும் அன்றாடச் செயலாயிற்றே? என நீங்கள் கேட்கலாம்.

ரகசியம் இனிமேல் தான் இருக்கிறது. சைரஸின் அப்பா மிடீயா நாட்டு மன்னனின் ஒரு மகளை கட்டிக் கொண்டானா? இதைத் தொடர்ந்து “Ctesias of Cnidus” என்ற கிரேக்க வரலாற்றாளன் எழுதுகிறார். “மிடீயா நாட்டு மன்னனின் இன்னொரு மகளை சைரஸ் கல்யாணம் பண்ணிக் கொண்டான்”

என்னடா இது? ஒரு மகளை அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டான். இன்னொரு பெண்ணை பையன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அதுவும் அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்! அப்படியென்றால் சைரஸ் தன் சித்தியையே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.

அதனால் மிடீயா ராஜாங்கத்துக்கு சைரஸ் சொந்தக்காரனாகி விட்டான். அதனால் தன் மாமனாரின் இன்னும் சொல்லப் போனால்... தன் தாத்தாவின் மிடீயா நாட்டு ராஜாங்கத்தையும், பெர்ஸியன் ராஜாங்கத்தையும் இரட்டை குடியாட்சி செய்தான் சைரஸ்.

இந்த சைரஸ்தான் பாபிலோனியா மீது ஆசைப்பட்டவன். ஆனால்...? பாபிலோனியப் படையை சமாளிக்க சைரஸ்க்கு இன்னும் கொஞ்சம் தேவை ராணுவம். அதற்காக என்ன செய்தான்? யாரை கேட்டான்... அடுத்து சொல்கிறேன்.

00000000000000000000000000000

பகுதி – 94.

என்ன பார்த்தோம்? பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியா மீது மண்ணாசை கொண்டதை பார்த்தோம்.

பாபிலோனியாவை வீழ்த்த ‘இந்த படை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்ற நிலையில்... அவனுக்கு சிலர் அறிவுரைகள் வழங்கினர். கொஞ்ச தூரம் தள்ளிச் செல்...

அங்கே The king of Sindhu Desh இருக்கிறான். அவனிடம் நீ உதவி கேள். கண்டிப்பாக கொடுப்பான் என்றனர். சைரசோ... அவனது ஆட்களோ சிந்து தேசத்தை அடைந்தனர். சிந்து தேசம் என்றால்... இன்றைய சிந்து நதியின் கரைப் பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம்.

சிந்து... இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து... ஓடி... ஓடி... ஓடி... பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது. சிந்து நதியின் கரைகளிலும், கரைப் பகுதியைச் சுற்றிலும் சிந்து தேசம் வியாபித்து இருந்திருக்கக் கூடும். வலிமையான ராஜாங்கம் செய்து வந்த அந்த சிந்து தேசத்திடம் தான் சைரஸ், படை உதவிக்காக அணுகுகிறான்.

வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில்... சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால்.... அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.

சிந்து நதியின் ராஜாங்கத்தைப் போலவே சிந்து தேச ராஜாவும், சைரஸுக்காக தசை பலம் பொருந்திய யானைப் படை, குதிரைப்படையை கொடுத்தான். இந்தப் படையின் உதவி மூலம் தான் பாபிலோனியாவை சைரஸ் ஜெயித்துக் கைப்பற்றினான்.

இது.... வரலாற்றறிஞர் டால்மீயின் குறிப்புகளில் உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள (பி.டி. பாணி என நினைக்கிறேன்) ஒரு பப்ளிஷர்ஸ் வெளியிட்ட Age of Shankara என்ற புத்தகத்தில் டால்மீயின் மேற்கோள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சரி... சிந்து தேச ராஜா, சைரஸுக்கு உதவிவிட்டுப் போகட்டும் என்கிறீர்களா?

இப்போதுதான் நமது விஷயத்துக்கு வருகிறோம். ஹிந்து என்ற பெயர் எப்படி வந்தது என கேட்டிருந்தேன் இல்லையா? இப்போது கேளுங்கள். இந்த சைரஸ்... சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?

ஏனென்றால்... உலக ஃபிலாலஜி, அதாவது மொழியியல் வல்லுநர்களின் முடிவுப்படி... சமஸ்கிருத பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன.

அதாவது இங்கே க்ஷ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுரஹா’ என்று சொல்வதைப்போல அவர்கள்... அஹீரமஸ்தா என்ற கடவுளை வணங்கினார்கள்.

அந்த வகையில்தான் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என உச்சரித்தார்கள். தப்பாக உச்சரித்தார்கள் பாரசீகர்கள்.

ஆனால்... நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

சரி... சிந்து என்ற வார்த்தை எப்படி பயன்படுத்தப்பட்டது?

‘சிந்தோஹா... அபர பாதே ஆசன்ன...” இந்த வரியைத் தொடர்ந்து வரும் வேத வாக்கியங்கள் ஒரு நதியைப்போல சலசலவென ஓடுகின்றன.

இவற்றுக்கு என்ன அர்த்தம்? சிந்து நதி இப்போதுள்ள அகலத்தைவிட பல மடங்கு அதிகமான அகலத்துடன் ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அலைகள் அழகழகாய் அசைந்து கொண்டிருக்கின்றன.

அந்த ஜீவ நதியாம் சிந்துவிலே ஒரு தோணியிலே சிலர் ஏறி அக்கரையிலிருந்து இக்கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இந்த வேதவரியின் விளக்கம்.

இந்த சிந்து நதிக்கரையிலே தான் வாதம் வருத்த பல்வேறு கர்மாக்கள். அதாவது அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆச்சார்யர்களிடம் படிக்க அனுப்பினார்கள். இதை உபநயனம் என்றார்கள். அதாவது... பள்ளிக்கு அனுப்புவதை இப்போது பூணூல் போட பயன்படுத்தி வருகிறார்கள்.

அடுத்து, கல்யாணம் பண்ணுவது, குழந்தை பிறப்பது, குழந்தைக்குப் பேர் வைப்பது, குழந்தைக்கு சோறூட்டுவது என்றெல்லாம் மக்கள் அன்றாடம் செய்யும் காரியங்களை மந்திரப்படுத்தினார்கள்.

இதன்படி... வேதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கர்மாக்கள் மட்டுமன்றி, அதாவது பூர்வ பிரயோகம், அபர பிரயோகம்.

அதாவது... இருக்கும் வரை செய்யும் கர்மா மற்றும் இறந்தபின் செய்யும் கர்மா போன்றவற்றை... ஆபஸ்தம்பர் என்ற ரிஷி விளக்கியுள்ளார். இதற்கு ஆபஸ்தம்ப சூத்ரம் என்று பெயர். “நதேவாஹா நகந்தர்வாஹாநபிதஇதீ ஆஜக்ஷதே அயந்தர்மோ ஆயந்தர்மேதீயந்தா ஆர்யா க்ருமாணம் சம்சந்தி நதர்மஹா”- அதாவது மக்கள் செய்யவேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர்.

இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர்.

அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்று தான் பெயர் வைத்தார்.

அப்படியென்றால்... சிந்து நதிக்கரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே... ஏன்?

000000000000000000000000000000

பகுதி – 95.

ஸிந்துவைப் பற்றியும் ஸ என்ற எழுத்து, உச்சரிப்பு ஹ என்று மருவி மாறியதைப் பற்றியும் பார்த்தோம். அதாவது ஸி என்பது ஹி என்று ஆனதைப் பார்த்தோம்.

ஹிந்து தேசம் என்று பாரசீகன் சொன்னானே தவிர... அந்த தேசத்தை வேதக்காரன் பாரதம் என்றுதான் அழைத்தான்.

ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய ஒரு மந்த்ரம் எழுந்து வருகிறது பாருங்கள்.

“விஸ்வாமித்ரஸ்ய ரக்ஷதீப்ரம்மே இதம்பாரதஞ்ஜனம்...”... 

இதற்கு என்ன அர்த்தம்? விஸ்வாமித்ரர் சொல்கிறார்.. .“என்னுடைய ஞான தேஜஸ்-ஸினால்... நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால்.... நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களை யெல்லாம் வாழவைக்கும்... பாதுகாக்கும்...” என்று வீரமாக, நம்பிக்கையாக சொல்கிறார் விஸ்வாமித்ரர்.

‘என்னுடைய மந்த்ரம், இந்த ஹிந்து தேசத்தை பாதுகாக்கும்’ என்று விஸ்வாமித்ரர் சொல்லவில்லை என்னுடைய மந்த்ரங்கள் ஸிந்து தேசத்தை பாதுகாக்கும்; என்று சொல்லவில்லை, பாரத தேசம் என்றுதான் அழைத்திருக்கிறார்.

அடுத்ததாக...நான் முன்பு மேற்கோள் காட்டியிருந்தேனே... ‘சிந்தோ அபராபாதே ஆஸன்ன...’ என்று ஞாபகம் இருக்கிறதா?

அதற்கு முன்னே ‘பாரதாஸி ஏனா...’ என்றொரு சொற்றொடர் வருகிறது. அதாவது பாரத தேசத்தவர்கள் சிந்து நதியைக் கடக்கிறார்கள்... என்ற வகையிலே தான் இதற்கு அர்த்தம். சிந்து நதியின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தில் கூட பாரதம் என்றுதான் இந்த தேஸத்தை வேதக்காரன் விளித்திருக்கிறான்.

இதேபோல் இன்னொரு உதாரணம் பாருங்கள். ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது சங்கல்பம். சங்கல்பம் என்றால்... ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் ‘இதை இந்த கர்மாவை சிறப்பாக, சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன்’ என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம்தான் இது. சங்கல்பம் என்றால் உறுதியான எண்ணம் அதாவது சபதம்.

சரி... அந்த சங்கல்பம் என்ன? “விஷ்ணோ...ஆக்ஞாய...... ...... ...பாரத வர்ஷே பரத கண்டே சகாப்ஹே...” இந்த சங்கல்ப மந்த்ரத்தில் அந்த இடையில் வரும் வரிக்காகத் தான் இதைச் சொன்னேன்.

பாரத வர்ஷே என்றால்...பாரத தேஸத்தில் வாழும் என்று அர்த்தம். பரத கண்டே.... என்றால்... பரதன் ஆண்ட தேசம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் இந்த ‘சங்கல்பம்’ பிரகாசிக்கிறது. அதாவது... இதை பாரத தேசம் என்று தான் அப்போதும் சொல்லி யிருக்கிறார்கள். அதாவது சிந்து சேதம் என்று கூட அவர்கள் தங்களை அழைத்துக் கொள்ளவில்லை.

பிறகு... ‘ஹிந்து...’ என்ற பெயர் வந்தது எப்படி? நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.

ஆமாம்... எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது. அதாவது... மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்... தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர்.

மக்களோ... ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.

சரி... இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது... என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான். அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர்.

நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை...

அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது... (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து...

ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்... என அந்த புஸ்தகங்களைக் காட்டினான். ‘Don’t follow, religion of brhamin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.

இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க... இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன்.

அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படி யென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது... பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo...’

00000000000000000000000000000

பகுதி – 96 .

நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம். சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம்.

நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.

ரகுநாதராவ், என்னை விட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்...

கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கே தான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன். முதலில் நம்மைப்பற்றி Zindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான்.

அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.

இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது.

ஆக... இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால்... இது Christian சூட்டிய பெயர்

நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த... கண்டுகூட பிடிக்கவில்லை.

தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்... எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை. சூட்டிக் கொள்ள முடியாது.

ஏனென்றால்...நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே.... ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?

இப்போது நீங்களே சொல்லுங்கள்.

எது ஹிந்து மதம்...? வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.

வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.

இவையெல்லாம் தவிர்த்து... நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.

அதாவது இவ்வளவு... வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.

நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.

ஆனால்... நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத... எவனோ ஒருத்தன்... நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்.... அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?... அப்படித்தான் வைத்திருக்கிறோம்.

நம் மதம் என்னும் குழந்தைக்கு! சரி... ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.

இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்.... வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.

வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே நாம் பின்பற்றி வருகிறோம். 

நன்றி : http://thathachariyar.blogspot.fr/2011/01/91.html

Comments