கெளுத்தி மீனும் கெப்பர்த் தவளையும்- நீதிக்கதை.


காலை நேரச் சந்தடியில் மூழ்கியிருந்தது, புல்லுக் குளம்!
சுற்று வட்டாரத்துப் பூச்சிபுழுக்களும் புல்பூண்டுகளும் புதுநாளின் வரவையொட்டிச் சில்லிட்டுச் சிலிர்த்திருந்தன. பறவைகளும் விலங்குகளும் பசிக்குணவு தேடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

கரையோரமாக நீரில் மிதந்தபடி, தினவெடுத்த தோள்களுடன் தண்டால் எடுப்பதுபோலப் பாவனை செய்துகொண்டிருந்த தவளையை, கெளுத்தி மீனொன்று எதேச்சையாகக் கண்டது.

“பெரியவர் தேகாப்பியாசம் செய்கிறார் போலும்.” பேச்சுக் கொடுத்தது, கெளுத்தி.

“நானென்ன மாமரத்திலிருந்து மாங்காயா பிடுங்குகிறேன்? பார்த்தாலே தெரியவில்லை?” செருக்குடன் உரத்த குரலில் உறுமியது, தவளை.

“தெரியுது தெரியுது …….. பெரியவரின் புஜபல பராக்கிரமங்களைப் பார்த்தாலே தெரியுது.” பயத்துடன் சற்றே ஓரடி பின்வாங்கிய கெளுத்தி சொன்னது.

“அட முட்டாளே, அங்க லட்ஷணம் மட்டுமா? அனைத்துலகளந்த அறிவிலும் உயர்ந்தவன், நான். நீரே தஞ்சமென வாழும் நின்போன்ற நீசர்கள் என்னறிவின் ஆழ அகலம் அறிவரோ? நீரிலும் வாழ்வேன் – நிலத்திலும் வாழ்வேன், நான். பரந்து விரிந்த பல்லுலக சஞ்சாரி, என் பட்டறிவுக்கு நிகரேது? என் பராக்கிரமங்களுக்கு அளவேது?”

அகங்காரத்துடன் வாய் பிளந்து குளமதிரக் கத்தியவாறு, தரையிலும் தண்ணீரிலுமாக மாறி மாறித் தன்னை மறந்து துள்ளித் துள்ளிச் சாகச சமத்காரங்களில் தவளை ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணம் பார்த்து , திடீரெனப் பாய்ந்து வந்த கொக்கொன்று, அதனை ‘லபக்’ என்று கௌவிச் சென்றது!

தன் வாயால் கெட்ட இந்தத் தவளை போல, காரணமேதுமின்றிக் கத்திக் கத்தியே தம்முயிரைக் காவுகொடுப்போரை எண்ணி வருந்தியபடி, நடுக் குளத்தை நோக்கி நகர்ந்து சென்றது, கெளுத்தி மீன்!

Comments