ராகவி ஆகிய நான்….- சிறுகதை-தாட்சாயணி.முற்றத்து மாவில் ‘குத்’தென்று வந்திறங்கியது ஒரு மைனா.
கொஞ்ச நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஏதோ தன் பாட்டில் கீச்சுக்,கீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.பிறகு தான் தெரிந்தது.அது தன் பாட்டில் பேசவில்லை.சற்றுத் தள்ளி இன்னொரு கிளையிலிருந்த வேறொரு மைனாவோடு பேசிக்கொண்டிருக்கிறதென்று.இரண்டும் கொஞ்ச நேரம் கீச்சு,மாச்சென்று அமளியாய்க் கதை பேசிக் கொண்டிருந்தன.அந்தச் சோடி மைனாக்களின் கொஞ்சநேர சந்தோசம் கூட என் வாழ்வில் அமைந்திருக்கவில்லை.சற்று நேரத்துக்குள் இரண்டும் பறந்துபோய் விட்டன.ஆரவாரம் அடங்கிக் கிடந்தது முற்றம்.

மைனாக்களின் சத்தம் ஓயப் புலுனிகள் மாங்கிளைகளில் தொங்கிக் கொண்டு ஊஞ்சலாடின.குழாயடியில் தேங்கியிருந்த நீர்க்குளத்தில் சிறகுகள் நனைத்துச் சிலிர்த்துக் கூத்தாடின.தாங்கள் மட்டும்தான் உலகம் என்பது போல சிரித்துக் களித்துக் கொண்டிருந்த புலுனிகளைப் பார்க்க ஏக்கமாய்க் கிடந்தது.கீரைவிதை போலச் சின்னக்கண்கள்.தலையைச் சரித்து அவை தத்தித் தத்தி இரை பொறுக்குவதை நாள் முழுக்கப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். பார்த்துக்கொண்டேயிருக்க விடாமல் நேரம் துரத்தும்.

புலுனிகளின் சத்தம் கேட்டு உள்ளேயிருந்து பூனை வந்தது.மெத்து,மெத்தெனக் கால்களை நீட்டி ஆவலோடு புலுனிச் சத்தத்திற்கு அது தலையைக் கொடுத்தபோதுதான் சஜிதா வந்தாள்.அவளுக்கு ஒரு இடத்திற்குப் போனால் முதலில் அவள் கண்களில் தட்டுப்படுவது, நாய்,பூனை போன்ற விலங்குகள் தான் எனச் சொன்னாள்.மனிதர்களைப் பார்க்க முதல் அவளது புலன்கள் அவற்றில் தான் குவியுமாம்.அவற்றின் தன்னிச்சையான செயற்பாடுகளைத் தான் ரசிப்பதாகவும் அவை வேண்டுமென்றே ஒருபோதும் தீங்கு செய்யாதவை என்றும் சொன்னாள்.அப்படி எனக்கும் சில இருந்தன.ஆனால் நான் தேடுவது மிருகங்களை அல்ல.எனது கண்கள் வானத்தையும்,மரங்களையும் துளாவும்.பறவைகள் தான் என் தேடலுக்குக் காரணமானவை. பறவைகளைத் தேடத் தொடங்கியபிறகு என் மனம் மிகு இலேசாயிருக்கிறது.

மனிதர்களிடத்தில் எதையும் தேட விரும்பியதில்லை.அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களில்லை ஒருபோதும்.எனது அடி மனதில் என்றைக்கும் அது ஒட்டியபடிதான் இருக்கிறது. அப்படி மனிதர்கள் மீதிருந்த அவநம்பிக்கை தான் அவள் என்னைத் தேடி வந்ததற்கான காரணமாகக்கூட இருக்கலாம்.ஆனால், அவள் என்னை எந்த விதத்தில் நம்பினாள் என்பது எனக்குத் தெரியவில்லை.அவள் தனது வளையல்கள் உள்ளிட்ட நகைகளை காகிதத்தினுள் சுற்றி ஒரு துணிப் பையினுள் பொதிந்து என்னிடம் தந்திருந்தாள்.அவளது வெற்றுக் கைகளைப் பார்க்க எனக்கு ஏதோ போலிருந்தது.ஆசை,ஆசையாய்க் கைகளில் வளையல் போடுவதில் எனக்கும் தான் எவ்வளவு ஆசை இருந்தது.

அவளது மணிக்கட்டை இயல்பாக எனது கை வருடியபோது, அவள் ஏதோ பாம்பு பட்டது போல சட்டென்று தன் கையை உதறினாள்.எனக்கு என்னவோ போலாகிவிட்டது.


“நீ கவலைப்படாதை பிள்ளை, எல்லாத்தையும் மீட்டுப்போடலாம்…” என்றேன் அவளுக்குச் சமாதானமாக.

“இது வரைக்கும் எனக்கு இப்பிடியொரு நிலை வரேல்லை.முதல்முதலா நகையெல்லாம் அடகு வச்சிருக்கிறன்.உங்களிலை உள்ள நம்பிக்கைதான்.ஏமாத்திப்போடாதையுங்கோ அக்கா…”

‘ஏமாத்திப்போடாதையுங்கோ அக்கா…’ என்ற அவளது அந்த வார்த்தைகளில் என் மனம் கொதித்தது.

“ஏமாத்திப்போடுவன் எண்டு நினைச்சால் போ… கொண்டு போய் பாங்கிலை அடகு வை… இப்பதானை சந்திக்குச் சந்தி வங்கி திறந்து வைச்சிருக்கிறாங்கள்…”
எனது எரிச்சலான குரலை மேவி அவள் வறட்சியாகச் சிரித்தாள்.

“நீங்கள் கண்டிப்புக் கறார் எண்டாலும் நேர்மை, நாணயம் எண்டு நம்பினதாலை தான் உங்களிட்டை வந்தனான்…குறையா நினைக்காதையுங்கோ…”

அவள் எழும்பியபோது உள்ளே சென்று அலமாரியைத் திறந்து அவளுக்குக் கொடுக்கவென வங்கியிலிருந்து எடுத்து வைத்த இரண்டு லட்சத்தை எடுத்து வந்து கொடுத்தேன்.

“வீடு கட்ட வெளிக்கிட்டிட்டு, மூளியாயே திரியப் போறாய்.ஏதும் ‘கவரிங்’கெண்டாலும் கழுத்துக்கு,கையுக்கு வாங்கிப் போடு பிள்ளை” என்று மறுபடியும் அவள் கரத்தைத் தடவ முற்பட்டபோது அவள் விலகி எழுந்தாள்.

“வாறன் அக்கா…” சைக்கிளை எடுத்து உழக்கத் தொடங்கினாள்.பத்து மைல் தொலைவிலிருந்து வந்திருந்தாள்.இத்தோடு இரண்டு,மூன்று தரம் வந்திருப்பாளா என்னிடம்.இருக்கலாம்.

வங்கியிலேயே நகையை அடைவு வைத்திருக்கலாம்.பிறகு ஊரெல்லாம் தெரிந்து போனால் அவமானமாம்.கட்டிய குறையில் நிற்கிற வீட்டை முடிக்க அவளுக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான்.இரண்டு குழந்தைகளோடு அவள் அல்லாடிக் கொண்டிருந்தாள்.

நான் ராகவி.சந்தைக்கு வியாபாரத்திற்குப் போய்க் கொண்டிருந்தேன்.வட்டிக்குப் பணம் கொடுப்பதுவே என் பிரதானமான வேலையாகவிருந்தது.இந்த நாற்பத்து மூன்று வயதுக்குள் நானாக உழைத்த காசில் ஊருக்குள் நான் கொஞ்சம் வசதியானவளாய்த் தானிருந்தேன்.இருந்துமென்ன எல்லாம் போயிற்று.நான் உழைத்துச் சேர்த்த எல்லாவற்றையும் போன வருஷத்தின் நடுப்பகுதியில் ஒருநாள் இழந்தேன்.எல்லாவற்றையும் இழந்து, வெறுங்கையோடு, வெறுங்கையோடு இருந்தால் மட்டும் பரவாயில்லை.உள்ளே குத்தி ரணமாக்கிய வேதனையோடு செயலிழந்து போய்க் கிடந்த நாலைந்து மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் திரும்பத் தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறேன்.

அவளுக்கு எந்த அளவிற்கு என்னைப் பற்றித் தெரிந்திருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அவள் மீது எனக்கு ஏதோ ஒருவித ஒட்டுதல் வந்திருந்தது.என்னைக் குறித்து அவள் எச்சரிக்கையாக இருப்பது எனக்கு ஒருமாதிரி இருந்தாலும், அவள் வாழ்ந்த, வளர்ந்த சூழல் அவளை அப்படி வைத்திருப்பதற்கு அவளை எப்படிக் குறை சொல்ல முடியும்.என் தலைவிதி… நான் இப்படி இருக்கிறேன்.வழிய,வழிய வந்து பழகியவர்களின் நடிப்புத்தான் ஒருநாளில் வெடித்துச் சிதறிவிட்டதே.
அதெப்படி,இவ்வளவு மோசமாக நடிக்க முடிகிறது மனிதர்களால்.நான் என்பாட்டில் தானேயிருந்தேன்.நானா வலிந்து போய்ப் பழகினேன் அவர்களோடு.அவர்களாகவே வந்தார்கள்.பழகினார்கள்.வந்தது தான் வந்தார்கள்.என்னில் மிச்சமிருந்த ஜீவனையும் சேர்த்து சூறையாடிக் கொண்டு போய் விட்டார்கள்.

அவர்களைப் பற்றி எனக்கென்ன நினைப்பு இப்போது.நான் கொஞ்சம்,கொஞ்சமாக எல்லாவற்றையும் மறந்து கொண்டு வருகின்றேன்.நான் பிறந்ததில் இருந்து இன்றுவரை என் பெற்றவர்களை, சகோதரர்களை, அவர்களிடமிருந்து என்னைப் பிரித்த விதியை, அண்டி வாழ்ந்த உறவுகளை , புதிசாய்க் கிடைத்த சொந்தங்களை, நான் நம்பி ஏமாந்து என் முதுகுக்குப் பின்னால் சிரித்தவர்களை, என் வாழ்க்கை முழுக்க நான் கண்ட ரணங்களை, நான் தேடித் திரிந்த உண்மை அன்பை, இந்த முரட்டு உடம்புக்குள்ளும் நான் உணர்ந்த மென்மையை… எல்லாவற்றையும் மறந்துவிட நினைக்கிறேன்.

எல்லாம் போதும் எனக்கு…
எந்தவிதமான அன்புத் தேடலுக்கும் நான் அருகதை அற்றவள்.
என்னையொரு கேலிப் பொருளாய் ஆக்கிவிட்டார்கள் அவர்கள்.இந்த மனதுக்குள் இருந்த உணர்வை அவர்களால் ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை.
நான் ஒரு பாவப்பிறப்பா…?

காதல் உணர்வு எனக்குள்ளும் ஏற்பட்டது என் தவறா…?
என் மனதைப் புரிந்து கொண்டு என்னைப் பகிர முழுமையாய் ஒருவன் கிடைக்கமாட்டானாவென்று எத்தனை காலமாய்க் காத்திருந்தேன். அவன் எனக்கே எனக்கென்று கிடைத்தபோது நம்ப முடியாமல் திணறினேன். கடைசியில் என்னை ஒற்றையில் தனித்திருக்கவிட்டு அவன் துரோகத்தோடு காணாமல் போனான்…..

அந்த ஆறேழு மாதங்கள் நான் அவனோடு வாழ்ந்திருந்தேன்.வாழ்க்கை என்றால் என்னவென்று உணர்ந்தேன்.அவ்வளவு காலம் இழந்த வாழ்வின் தேன்துளியெல்லாம் அப்போது எனக்குப் பருகக் கிடைத்தது.மனதில் ஒரு ஆறுதல் ஏறி உட்கார்ந்திருந்தது.என்னை எள்ளி நகையாடிய உலகத்தைப் பார்த்து எனக்கு வாழ்க்கை கிடைத்துவிட்டது என உரத்துக் கத்தவேண்டும் போலிருந்தது. சுற்றியிருந்த அந்த அன்பான உறவுகள் போல யாருக்குக் கிடைக்கும்.நான் அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்தேன்.

0000000000000000000

ருக்மணி பாதிப் பொழுது ஓய்ந்து போய்க் கிடந்தாள்.பிள்ளைகள் ஓய்ந்து வரும்போதெல்லாம் நான் அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.
என் கையெழுத்து எப்போதும் முத்துப் போல அழகாக இருக்கும்.அந்தக் கையெழுத்து இன்றுவரை மாறவில்லை.தமிழிலே எவ்வளவுதான் விருப்பத்தோடும்,கெட்டித்தனத்தோடும் நான் இருந்தாலும் எனக்குத்தான் தொடர்ந்து படிக்கக் கிடைக்கவில்லை.

அப்போது பள்ளிக்கூடக் காலத்தில் என்னுடைய எழுத்தைக் காட்டி சங்கரப்பிள்ளை மாஸ்டர் மற்றப் பையன்களுக்கு உதாரணம் காட்டுவதுண்டு.
“இப்பிடி எழுதோணுமடா , இதெல்லோ எழுத்து…” என்று என்னைப் பார்த்துப் பாராட்டுவார்.ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து தங்களுக்குள் நெளித்துச் சிரிப்பார்கள்.நான் அவர்களோடு அப்போதிலிருந்தே சேர்வதில்லை. அதிலும் தேவன் என் கையைப் பிடித்து முறுக்குவதும்,கிள்ளுவதும் எனக்கு அறவே பிடிக்காது.அப்போதே நான் அவர்களிடமிருந்து விலகித்தானிருந்தேன்.

பக்கத்தில் இப்போது யாருமில்லை.வீடு பூட்டித்தான் கிடக்கிறது.அவர்கள் போய்விட்டார்கள்.ஆறேழு மாதம், அலை எழுப்பிய கடல் மாதிரி குடியிருந்துவிட்டு எந்த அடையாளமும் இன்றிக் கிளம்பிப் போய் விட்டார்கள்.அவர்கள் மட்டுமில்லை.நானும் கொஞ்ச நாள் வாழ்ந்த வீடு அது.

இப்போது அங்கே யாரும் வாடகைக்கு வர ஒத்துக்கொள்கிறார்கள் இல்லையாம்.பக்கத்து வீட்டுச் சொந்தக்காரர் அடிக்கடி வந்து கத்தி விட்டுப் போகிறார்.யாரும் குடிவராததற்கு நானும் ஒரு காரணமாம்.நல்லாய்த்தான் சொல்வார்கள் எல்லாரும்.ஒரு நேரத்தில் அவரது மனைவி ஆஸ்பத்திரியில் இருந்தபோது நான் அவளுக்கு உதவியாய்ப் போய் நின்று பார்த்த கதையெல்லாம்அவர் மறந்து விட்டார் போல.

குடும்பகாரர் அந்த வீட்டுக்கு வரப் பயப்படுகிறார்களாம்.
என்னைக் குற்றம் சாட்டும் தொனி.
என்னை விரட்டுகின்ற ஆங்காரம்.
நான் என் வீட்டில் குடியிருக்கிறேன்.
நான் எதற்குப் போக வேண்டும்…?
நான் வீம்பாகத்தான் நின்றேன்.

ஒரு பெண் பிள்ளைக்கு இத்தனை ஆங்காரம் கூடாதுதான்.ஆனால், நான் அப்படி எதிர்த்து நின்றிராவிட்டால் எங்கேனும் விரட்டியடித்திருப்பார்கள் என்னை. ஆனால் அதற்கும் முயற்சி செய்து கொண்டுதான் இருந்தார்கள்.
இரவுகளில் தகர வேலியில் கற்களை எடுத்து எறிவார்கள்.பெரிய,பெரிய சத்தம் இரவில் திகிலை மூட்டும்.

எனக்குத் தெரியும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் என்னை விரட்டச் செய்கின்ற சதிதான் என்று.

கிராம அலுவலரிடம் போனேன்.போலிசுக்குப் போனேன்.என்னை என் வீட்டில் இருக்க விடுகிறார்களில்லை என்று முறைப்பாடு கொடுத்தேன்.

கொஞ்ச நாளைக்கு ஓய்ந்திருக்கும்.பிறகு மறுபடி தொடங்கிவிடும்.

சத்தம் தாளாமல் நான் பகல் வேளைகளில் ஆங்காரமாய்க் கத்துவேன்.

எனக்கு மூளைப்பிசகு வந்துவிட்டதாய்ச் சொன்னார்கள்.
அக்கம்பக்கத்தில் நிம்மதியாக இருக்க முடியவில்லை என்றார்கள்.

என்னால் திரும்பவும் அவர்களோடு மோத முடியவில்லை. வீட்டுக்குள்ளேயே ஒடுங்கினேன்.திரும்பவும் எந்த நினைப்பும் இல்லாமல் உழைக்கத் தொடங்கினேன்.கையில் மறுபடியும் கொஞ்சம் காசு சேரத் தொடங்கியது.

எனது பணம் அவர்களது அவசரத் தேவைகளுக்குத் தேவைப்பட்டது.வாயை மூடிக் கொண்டார்கள்.

அப்படி என்னிடம் காசு வாங்கிப் பழகியவர்கள் தான் சஜிதாவுக்கு என்னைப் பற்றிச் சொல்லியிருக்க வேண்டும்.

சஜிதாவுக்கு நல்ல நீளத் தலைமுடி.பார்க்கப், பார்க்க ஆசையாக இருக்கும்.எனக்கு இடுப்புக்குக் கீழ் வளரவேயில்லை முடி.அவளது முடியைப் பார்க்கத் தடவிக் கொடுக்க வேண்டும் போலிருக்கும்.ஆனால், அவள் அருகில் போனாலே விலகிக் கொண்டு விடுவாள்.எனக்குத் தலை நிறையப் பூ வைப்பதில் விருப்பம் இருந்தது.அவளுடைய பின்னலுக்குப் பூ வைத்தால் எவ்வளவு அழகாக இருக்கும்.ஆனால், அவள் அதில் அக்கறை காட்டுபவள் போல் தெரியவில்லை.அவளது கழுத்தைச் சுற்றி இறுக்குகின்ற குடும்பப் பிரச்சினைகளுக்குள் அவள் இதில் அக்கறை எடுத்தால் தான் ஆச்சரியம்.

நான் குழாயடியில் இரண்டு மல்லிகைக் கன்றுகள் வைத்திருந்தேன்.அது இப்போது நல்லாய்ப் பூத்துக் கொட்டுகின்ற பருவத்தில் நிற்கிறது.ஒவ்வொரு விதமாய் ஆசைதீர நான் அந்த வாசம் திகட்டும் வரைக்கும் நூலில் கட்டித் தலைக்கு வைத்துக் கொள்வேன்.
யாரேனும் சிறிசுகள் வந்து மல்லிகைப்பூ என்று வாசலில் நின்றாலும் கொடுக்கத் தோன்றாது எனக்கு.மரம் முழுக்கப் பூவாய் இருக்க வாசனையில் குலுங்கும் வீடு.அவளுக்கு நான் அந்த மரத்திலிருந்து கொஞ்சம் பூக்களைப் பிடுங்கிக் கொடுப்பேன்.

“உன்ரை தலைக்கு நல்ல வடிவாக் கிடக்கும், சரம் கட்டி வை பிள்ளை…”

அவள் அதை அசிரத்தையாய் வாங்கிக் கொள்வாள்.
இந்த மல்லிகைப் பூ வாசத்தின் மேலும் ஒருத்திக்கு ஆசை வராமலா இருக்கும், என அவள் மீது எனக்கு ஆச்சரியம் தோன்றும்.

வாழ்க்கையில் பட்ட அடிகள் அவளை இப்படிப்பட்ட சின்னச்சின்ன சந்தோஷங்களைக்கூட கவனிக்காமல் பண்ணுமா…? எனக்கும் தான் வாழ்க்கையில் எத்தனை அடி. நான் இந்தப் பூக்களை, வளையல்களை, அலங்காரங்களை ரசிக்காமலா இருக்கிறேன்.

அவள் வன்னியில் வேலை பார்த்தவள்.இப்போது இங்கு மாற்றம் எடுத்து வந்திருந்தாள். வன்னியிலே இருந்த சொத்துக்கள் எல்லாம் அழிந்து போக, இங்கேயிருந்த சீதனக் காணியில் வீடு கட்டிக் குடி போகும் எண்ணத்தில் வந்திருந்தார்கள்.சிறிசுகள் படிக்கிற வயதில் கடனுக்கு விண்ணப்பித்து விட்டு என்னிடம் நகைகளை அடகு வைக்கக் கொடுத்திருந்தாள்.

என்னிடம் வரமுதல் நாலைந்து இடங்களில் என்னைப்பற்றி விசாரித்திருப்பாள் போல.என் குண இயல்புகள் அறிந்தவள் போல அதற்கேற்ப நடந்து கொண்டாள்.ஆனாலும் கொஞ்சம் தயக்கமாய் விலகியே நின்றாள்.நான் அவளோடு ஒட்டிக் கொண்டது போல அவளால் என்னோடு ஒட்டிக் கொள்ள முடியவில்லை.

இரண்டு,மூன்று பிள்ளைகளைப் பெற்று அதில் ஒன்றை வன்னிக்குள் காவு கொடுத்துவிட்டு, துயரங்களைத் தாங்கும் சக்தியின்றி வந்து நின்றவளை நான் கொஞ்சம் பரிவாகத்தான் பார்த்தேன்.ஆளுக்காள் துயர் சொல்லி ஆற ஒரு நிழல் கிடைத்தாற் போல.ஆனால் அவள் அதற்கு இசைவாள் போல் தெரியவில்லை. எனக்கும், உனக்கும் இந்தக் கொடுக்கல் வாங்கல் மட்டும்தான்.இது முடிந்தவுடன் எல்லாமும் முடிந்துவிடும்.உனது கண்டிப்பும், கறாரும் இருக்கும் வரைக்கும் எனது காணாமற்போன தம்பிகளைப் பற்றியோ, வன்னிக்குள் குடியேறப் போய் விட்ட தம்பி மனைவியைப் பற்றியோ உன்னிடம் பேசத் தேவையிராது என்றுதானே உன்னிடம் வந்தேன்… என்பது போல எட்டத்தில் இருப்பாள்.மனம் திறந்து எதுவும் கதைத்திருக்கவும் இல்லை.அவளைப் பற்றி அக்கம் பக்கத்திலிருந்து அரசல்,புரசலாய் வந்த கதைகளின் படி அவளது தம்பிகள் இருவர் இயக்கத்தில் கொஞ்சம் பொறுப்பான இடத்தில் இருந்ததாகவும் , இருவரும் காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டு விட்டாலும் உண்மை என்னவென்று தெரியாதென்றும், தம்பி மனைவிக்கும் குழந்தைகளுக்கும் இவளே பணம் அனுப்பிக் கொண்டிருப்பதாகவும் இவள் வீட்டுக்கு விசாரணைக்கென சி.ஐ.டி வந்து போவதாகவும் வீடு கட்டுவதற்குப் பணம் எப்படி வருகிறதென அவர்கள் ஆராய்வதாகவும், இந்தக் கதைகளை என் காதுபடவே சனங்கள் கதைத்தார்கள்.ஆனால், நான் எதையும் அவளிடமிருந்து பிடுங்கிக் கேட்கவுமில்லை.

இந்தச் சனங்களின் வாயிலிருந்து வருகின்ற ஈவிரக்கமற்ற சொற்கள் நாளை என்னையும் வேட்டையாடும்.இதுவரை என்னைத் தின்ற சொற்கள் தானே.நான் அவற்றைக் காதில் வாங்கவும் விரும்புவதில்லை.

அவளைப் பற்றி நான் எதுவுமே கேட்கவில்லை.
எப்போது பணம் தேவை…? எப்போது திருப்பிக் கொடுப்பாள்…? எவ்வளவு தேவை…? போன்ற விபரங்களையும், எனது வட்டிக் கணக்கையும் மட்டுமே அவளோடு பேசிக் கொண்டேன்.அதைத் தவிர எங்களுக்கிடையே பேச எதுவும் இருக்கவில்லை.ஆனால், ஒரு நாள் எனது பூனை மல்லாந்து ராஜ தோரணையில் படுத்துக் கிடந்ததைக் கண்டபோதுதான் அவளது கண்கள் விரிந்து பரிவு வழிந்தோடத் தன் வாய் திறந்தாள்.

“அய்யே… என்ன மாதிரி, சொகுசாப் படுத்திருக்கிறார். பஞ்சு போல எவ்வளவு ஆசையாக் கிடக்கு…”

அவள் மூன்று குழந்தைகளுக்குத் தாய் என்றதை மறந்து குழந்தையாய்க் குதூகலித்தாள்.அதற்குப் பிறகுதான் அவள் சொன்னாள். எங்கே போனாலும், ஓடித்திரியும் அணில்களையும், பூனை,நாய்களையும் அவள் மனம் பின் தொடர்ந்து செல்வதாக. அவள் சொன்ன பிறகுதான் நானும் யோசித்துப் பார்த்தேன்.எனது மனமும் அப்படித்தானே குருவிகளையும், மரங்களையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் அண்ணாந்து பார்க்கின்ற போது இழந்து போன எனது சந்தோஷங்களைத் தேடுவதாக நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.ஆனால், நிச்சயமாக நான் தேடுவது தொலைந்து போன மனிதம் மேலே, எங்கேயாவது தொங்கிக் கொண்டிருக்கிறதாவென்றுதான் …

அவள் தங்கள் வீட்டுப் பூனைக்குட்டிகள் பற்றி,வன்னியில் தவறவிடப்பட்ட பூனைக்குட்டியை, அங்கு வந்து போகும் குரங்குக் குட்டிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பாள்.நானும் எங்கள் வீட்டுப் புலுனிகளையும், மைனாக்களையும் பற்றிச் சொல்வேன்.அப்படித்தான் எங்களுக்கிடையிலான இடைவெளிகளை நாங்கள் நீக்கிக் கொள்ளத் தொடங்கினோம். அவளோடு பழகப் பழக என் மனதில் நிறைந்திருந்த கசந்த நினைவுகள் கொஞ்சம், கொஞ்சமாய்க் கழன்று கொண்டு போயின. நானும், சந்தையும், வியாபாரமும் என் வட்டிக் கடனுமென ஓடிக் கொண்டிருந்தேன்.சைக்கிளை எடுத்து, பாருக்கு மேலால் கால் போட்டு,நான் நிமிர்ந்து சைக்கிள் ஓட்டும்போது ஒழுங்கைக்குள் சிறிசுகள் ஓடி வந்து வேடிக்கை பார்க்கும்.

நீண்ட நாட்களாக வராமல் இருந்தவள் மறுபடியும் வந்தபோது நான் அவளிடம் கேட்டேன்.

“என்ன, கன நாளாய் ஆளைக் காணேல்லை…”

“நெஞ்சுக்குத்து,ரெண்டு நாள் ஆஸ்பத்திரீலை கிடந்தனான்… இப்ப பறுவாயில்லை…” பரிவாய் அவள் நெஞ்சைத் தடவப் போகப் பட்டென்று விலகிக் கொண்டாள். என் மனம் உடைந்து குமுறியது.

என்ன தான் அன்பு, பாசம் காட்டினாலும், எனக்கும் அவளுக்குமான உறவு வெறும் காசுக் கொடுக்கல்,வாங்கல் தானே.

“ஏன் பிள்ளை இவ்வளவு தூரம் நீ சைக்கிள் ஓடிக்கொண்டு வாறாய்.நெஞ்சுக்குத்துக்காறி.மனிசனை அனுப்பியிருக்கலாம் தானை.நான் குடுத்து விட்டிருப்பன் காசு…” என்றேன்.

“வேண்டாம். நானே வந்து வாங்குறன்” என அவள் முணுமுணுத்தாள்.

“மனிசனை அனுப்பித் தாரை வாக்க இவளுமென்ன ருக்குமணியே…”

தகரவேலிக்கு அப்பாலிருந்து எப்படி அந்தச் சொற்கள் கிளம்பி வந்ததோ தெரியவில்லை.எனது உச்சியிலிருந்து கொதி கிளம்பிக் கொண்டு வந்தது.விறு,விறென்று வீதிக்கு ஓடினேன்.இரண்டு உருவங்கள் ஒழுங்கை முனையில் மறைய தெருவில் கிடந்த கற்களைப் பொறுக்கி எறிந்தேன்.

“என்னடி சொன்னியள்… என்னடி சொன்னியள்…” பைத்தியம் பிடித்தது போல் கத்தினேன்.

சஜிதா திகைப்போடு படலையடிக்கு வந்தாள்.

“அக்கா… உள்ளுக்கு வாங்கோக்கா…எல்லாரும் பாக்கினம்…”

“பாக்கட்டும்… எல்லாரும், இப்ப மட்டுமே பாக்கினம்…நான் பிறந்த நாளிலையிருந்து எல்லாரும் என்னை விசித்திரமாய்த்தானை பாக்கினம்…”

நெஞ்சில் அறைந்தபடி கத்தினேன்.

“உள்ளுக்கு வாங்கோக்கா முதலிலை… ஆக்களை வேடிக்கை பாக்க வைக்காதையுங்கோ…”

“எனக்குப் பைத்தியம்… எல்லாரும் பாக்கட்டும்… அவன் என்னைப் பைத்தியம் ஆக்கிப் போட்டான்…”

நான் எழும்பி அரற்றியபடி உள்ளே வந்தேன். வீதியில் ஆட்கள் குழும,அவள் என்னைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.இப்போதும் அவள் என்னைப் பிடித்த போது கொஞ்சம் விலகித்தான் நடந்து வந்தாள்.அவள் தோளில் சாயக் கூட எனக்கு உரிமை இல்லை.கொஞ்சம் சாய வேண்டும் போல்தான் இருந்தது.சாய்ந்தால் உதறிவிட்டுப் போய்விடுவாளோ எனும் பயத்தில் நான் என்னைச் சுதாகரித்துக் கொண்டேன்.

விறாந்தையின் வெளிக் குந்தில் அவள் என்னை அமர்த்திவிட்டுப் பக்கத்தில் இருந்தாள்.

“ஒண்டும் யோசிக்காதையுங்கோ அக்கா.. சனத்தின்ரை கதையை விடுங்கோ…” என்றாள்.

நான் அவளைக் கூர்மையாகப் பார்த்தேன். அவள் தனது கண்களைத் தாழ்த்திக் கொண்டாள். என்னைப் பார்ப்பதிலிருந்து விடுபட நினைக்கிறாளோ…?

“நீ உண்மையைச் சொல்லு பிள்ளை, சனத்திண்டை கதையை நீயும் நம்புறியோ…?”

“என்ன…?”

“நான் உன்ரை புருஷனை வளைச்சுப் போடுவன் எண்டுதானோ நீ தனிய இவ்வளவு கரைச்சல்பட்டு இஞ்சை வந்து போறாய்…”

“உந்தக் கதையை விடுங்கோ அக்கா…”

“உண்மையைச் சொல்லு…”

“அவருக்கு நேரமில்லை…” அவள் எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னாள்.

“அப்ப நீ என்னை நம்புறியோ…?” அவள் திகைப்போடு திரும்பினாள்.

“என்னத்தை நம்புற…?”

“நான் ஒருத்தரையும் ஏமாத்தேல்லை எண்டதை…?”

“நீங்கள் ஏன் ஏமாத்திறியள்….”

“நீ என்ரை கதையை முழுக்கக் கேட்டிட்டுச் சொல்லு பிள்ளை எனக்கு எல்லாருமாச் செய்த அநியாயத்தை…”

நான் எனது கதையை அவளுக்கு முதலில் இருந்து சொல்லத்தொடங்கினேன்.

சின்ன வயதில் அம்மாவை இழந்து அதற்குப் பிறகு அப்பாவையும் இழந்த பிறகு சகோதரர்கள் கொஞ்சம், கொஞ்சமாய் என்னை விலக்கத் தொடங்கினர்.
அக்கா,தம்பிகளின் பிள்ளைகள் வளர,வளர பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளிடையே அவமானமாய்க் கிடந்ததாய்க் கத்துவார்கள்.நானும் எத்தனை நாட்களுக்கென்று தான் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடப்பது…? நான் வட்டிக்குப் பணம் கொடுக்கத் தொடங்கியபின் கொஞ்சம், கொஞ்சமாய்ச் சேமித்தேன்.அதன் பிறகு தான் என் பெயரில் இருந்த சிறிய காணித்துண்டில் எனக்களவான சிறிய வீட்டை அமைத்துக் கொண்டேன்.அங்கு சுதந்திரமாய் வந்த பிறகுதான் சந்தைக்குப் போயும் வியாபாரம் பண்ண முடிந்தது.

நான் கொஞ்சம் காசு புழங்கும் ஆளாக இருந்ததால் எல்லாரும் காசுத் தேவைக்கு என்னிடமே வந்தனர். கொடுப்பதைப் போலவே அதை வசூலிப்பதிலும் நான் கறார் ஆகவே இருந்தேன்.

அப்போது தான் பக்கத்து வீட்டுக்கு ருக்மணியின் குடும்பம் குடி வந்தது. ருக்மணிக்கு நாலு பிள்ளைகள்.எங்கெல்லாமோ மாறி,மாறி இடம் பெயர்ந்து வந்ததாக அவள் சொன்ன போதும், அவளது உண்மையான இடம் எதுவென்பது கடைசிவரை எனக்குத் தெரியவேயில்லை.

வந்த புதிதில் எதற்கெடுத்தாலும் என்னிடமே வருவாள்.
“திருவலையைத் தாங்கோ அக்கா..”
“பிள்ளையளுக்குப் பள்ளிக்கூடத்துக்குக் காசு கட்டவேணும் அக்கா. கொஞ்சம் காசு கடனாத் தாங்கோ…”
என எதற்கெடுத்தாலும் என்னிடமே வருவாள்.அவளது கணவன் பெரிதாக வெளிப்பட மாட்டான். இடைக்கிடை எங்கேனும் வேலை கிடைத்தால் போய் வருவதாக ருக்மணி சொன்னாள்
எப்போது பார்த்தாலும் அவள் கணவனைக் குறை சொல்லிக் கொண்டேயிருந்தாள்.அவனைப் பார்க்கப் பாவமாயிருக்கும்.
எதற்கெடுத்தாலும் குறை சொல்வதை நிறுத்தும்படி நானும் அவளிடம் இரண்டு,மூன்று முறை சொன்ன ஞாபகம்.
திடீரென்று சில நாட்களில் ருக்மணி தனக்கு ஏலாமல் இருக்கிறதென்று என்னைத் தேநீர் போட்டுத்தரச் சொல்லிக் கேட்பாள்.நாரிப் பிடிப்பென்று அவள் படுத்திருப்பாள்.கஷ்ட காலத்தில் தானே உதவி தேவையென்று நானும் அவளுக்குச் செய்து கொடுப்பேன்.தேநீர் போட்டு அவள் கணவனுக்கும், பிள்ளைகளுக்கும் நானே கொடுப்பேன்.

அப்படித்தான் ருக்மணி ஒருநாள் என்னைக் கூப்பிட்டாள்.

“அக்கா,இந்த மனிசன் சாப்பாடு வேண்டாமெண்டு படுத்திருக்கு.என்னவெண்டு ஒருக்காக் கேளுங்கோ அக்கா…”
இப்படிக் கூப்பிட்ட போதுதான் எனக்கு வினை ஆரம்பிக்கிறதென்று எனக்கு ஏனோ தெரியாமல் போயிற்று.
“ஏன், என்னத்துக்குச் சாப்பிடாராம்…”

“நீங்களே கேளுங்கோ என்னவெண்டு…”

நான் அவனிடம் ஆறுதலாக என்னவென்று விசாரித்தேன்.
குடும்பக் கவலையைச் சொன்னான்.எப்படியும் வெளிநாட்டுக்குப் போகவேண்டும் என்று சொன்னான்.நான் அவனுடைய கவலைகளைக் கேட்பது மனதுக்கு நிம்மதியைத் தருவதாகச் சொன்னான்.

நான் ருக்குவுக்கும், அவனுக்கும் தேறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு அடிக்கடி அப்படி நிகழ்ந்தது.

“அக்கா நான் குடுத்தா அவர் சாப்பிடாராம்…நீங்கள் வந்து குடுங்கோ அக்கா…” அவள் என்னை வருந்தி,வருந்தி அழைத்தாள். அன்புக்கு ஏங்கிக் கிடந்த நான் அவளது குழைந்த வார்த்தைகளில் எடுபட்டேன்.

நாட்கள் போகப் போக அவன் என்னை அணுகும் முறை வித்தியாசப்பட, என் மீதில் அவன் எடுத்த உரிமை அச்சத்தைத் தர ருக்குவிடம் சொன்னேன்.

“வேண்டாம் ருக்கு,நான் இனிமேல் வரேல்லை….”

“ஏன் என்ன நடந்தது…?”

“இல்லை ருக்கு, இப்பிடி ஒரு பொம்பிளை தன்ரை புருஷனை இன்னொருத்தீற்றை விடக் கூடாது. விட்டால் அது பிழையாப் போம்.”

“ஏன், என்ன பிழை… எனக்கு என்ரை புருசன்ரை சந்தோசம் தான் முக்கியம்.நான் வருத்தக்காறி.உனக்கு விட்டுத்தாறன்… நீ என் யோசிக்கிறாய்…?

ருக்குவிடமிருந்து இந்த வார்த்தைகளை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. அதிர்ந்து போனேன்.ருக்கு என்னை அவனுக்கு இரண்டாம் தாரமாக்குவதாகச் சொன்னபோது எனக்கு இந்த உலகமே என் காலடிக்குக் கீழே வந்தது போலிருந்தது.

அதற்குப் பிறகு நானும் எல்லாத் தயக்கங்களிலும் இருந்து விடுபட்டு அவனோடு குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.எனக்கென்று ஒருவன் இருக்கிறான் என்பதே எனக்குப் போதுமானதாய் இருந்தது.அவன் என்னில் காட்டிய அக்கறையில் நான் நெகிழ்ந்து போனேன்.என் வீட்டுக்கு யாரும் ஆண்கள் காசு விஷயமாக வந்தால் கூட என்னை வெளியே வர விடமாட்டான்.

“ராகவி,நீ உள்ளுக்கை போ…” என என்னை உள்ளே அனுப்பிவிட்டு அவனே எல்லாவற்றையும் பேசிக் கொள்வான்.அவ்வளவு நாளும் என் சுய உணர்வோடு இருந்த என் அறிவு அப்போது தான் முழுசாய் மங்கியது.அவனது அந்த வார்த்தைக்குத் தான் நான் அவ்வளவு காலமும் காத்திருந்தது போல் பட்டது.எனது வீட்டில் சகோதரர்கள் கூட ஆண்கள் யாரேனும் வீட்டுக்கு வந்தால் என்னை உள்ளே போவென்று சொன்னதில்லை.இவன் சொன்னான்.அவன் ஒருவன் என்னைத் தன் மனைவியாக முழுக்க,முழுக்க ஒரு பெண்ணாக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்ற மகிழ்வில் திண்டாடினேன்.

பிறப்பில் ஆணாயிருந்து, வளர வளர உடலின் சுரப்புக்களும்,உணர்வுகளும் மாற, முடி வளர்த்து, சேலை கட்டி, அறுவை சிகிச்சை செய்து முழுதாகப் பெண்ணாக மாறிவிட்டாலும் கூட ‘அலி’என்று பெயர் சூட்டிய இந்தச் சமூகம் என்னைப் பெண்ணாகப் பார்க்கவில்லையே.அவன் என்னை உள்ளே போகச் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் எல்லாவற்றையுமே அவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தேன்.வங்கியிலிருந்து என் பணம், நகை எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் கொடுத்தேன்.எட்டு லட்சம் ரூபாய்கள்.அவன் ஏஜென்சிக்குக் கொடுப்பதற்கு அதுவும் உதவுமென்றால் எனக்கு எவ்வளவு சந்தோஷம்.அவனோடு நானும் கொழும்புக்குப் போனேன்.அவன் அந்தப் பணத்தை ஏஜென்சிக்காரனிடம் கொடுப்பதை நான் என் கண்களால் கண்டேன்.போய்ச் சேர்ந்தபிறகு ருக்குவையும், பிள்ளைகளையும் கூப்பிடும் போது என்னையும் கூப்பிடுவதாகச் சொன்னான்.

நான் ஊருக்கு வந்தேன்.இரண்டு மாதங்களில் ருக்குவும் கொழும்புக்குப் போய் அலுவல் பார்த்துக் கொண்டு வருவதாய்ச் சொல்லிக் கொண்டு போனாள்.
போனவர்கள் இரண்டு மாதங்களில்லை நாலு மாதங்கள், ஆறு மாதங்கள் என்று காலங்கள் போன பிறகும் திரும்பி வரவேயில்லை.அவர்கள் ஏதோ ஒரு நாட்டுக்குப் போய் விட்டார்கள் என்று என் முதுகுக்குப் பின்னால் யாரோ கதைத்தார்கள்.ஆனால், அவன் என்னைக் கூப்பிடுவான்,கூப்பிடுவான் என நினைத்துக் காத்திருந்து,காத்திருந்து நான்… எல்லாவற்றையும் இழந்தேன், என் மன நிம்மதியையும் சேர்த்து.இப்போது ஒரு பைத்தியம் போல் அலைந்து கொண்டிருக்கிறேன்.

என் புலம்பல் ஓய்ந்தபோது சஜிதா என்னை வருடிக் கொண்டிருந்தாள்.அவளது கரங்களில் கூச்சம் கொஞ்சமும் இல்லை என்பதைக் கொஞ்சம் தாமதமாகவே நான் உணர ஆரம்பித்தேன்.

நன்றி தாட்சாயிணி

http://eathuvarai.net/?p=1585


Comments