நர்மதாவின் கடிதங்கள் - சிறுகதை-தாட்சாயிணி.



நர்மதாவிற்கு யார் கடிதம் எழுதச் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது.ஆனால்,அவளைப் போல ரசனையோடு கடிதம் எழுதும் வேறு எவரையும் இன்று மட்டும் நான் காணவில்லை.அவளிடமிருந்து கடிதம் வருவது நின்று பத்து வருடங்களுக்கு மேலாய் ஆகியிருக்கும்.அவள் எங்கேயிருக்கிறாள்…? எப்படியிருக்கிறாள்…? என்பதொன்றும் எனக்குத் தெரியாது.இருந்தாலும் அவளைப் பற்றி அறியும் ஆவலும்,ஆர்வமும் என்னுள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டேதானிருக்கிறது.
நான் தேவமஞ்சரி. ரொறண்டோவில் குடியேறிப் பன்னிரண்டு வருடங்கள்.அதற்கு முன் நான்கு வருடங்கள் கொழும்புவாசி.அதற்கும் முன்னால் இருபது வருடங்கள் பிறந்ததிலிருந்து யாழ்ப்பாணத்தின் கல்வயல் மண்வாசத்தில் திளைத்துக் கிடந்தவள்.எதிர்பார்க்காத ஒரு தருணத்தில் எந்த ஒரு எதிர்வு கூறலுமின்றி கொழும்புக்கு இடமாற்றப்பட்டு,அதேபோல எந்தவித அபிப்பிராயங்களுக்கும் இடமில்லாமல் கனடாவிற்குப் பொதி செய்யப்பட்டவள்.இப்போது கணவனதும்,குழந்தையினதும் அன்பில் தோய்ந்து உலகை மறந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த சாதாரண ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்.அப்படிச் சொல்வது இனி எவ்வளவிற்கு சாத்தியமாகுமோ தெரியவில்லை.யாழ்ப்பாணத்தில் வசித்திருந்த இருபது வருடங்களை மேவிக் காலம் பறக்கின்றபோது,கனடாவின் சூழ்நிலை எனக்கு அதிகம் பரிச்சயமானதாகக் கூட மாறிவிடலாம்.பனிப் பாளங்களை வழிக்கும் குளிர்காலங்களில் ஏற்படும் மூச்சடைப்பு ஒன்றுதான் இந்த மண் எனக்கு அந்நியம் என்பதை அடிக்கடி நினைவூட்டிக்கொண்டிருக்கிறது.

நிற்க,நர்மதாவைப் பற்றிச் சொன்னேன்.நர்மதாவைப் பற்றிச் சொல்வதைவிட அவள் கடிதங்களைப் பற்றிச் சொன்னால் அதிகம் புரிந்து கொள்வீர்கள்.அவள் கடிதங்களுக்கான காலஎல்லை நான்கு வருடத்திலிருந்து,ஐந்து வருடங்களுக்குள் இருக்கலாம்.ஊரிலிருந்தபோது அப்படிக் கடிதம் எழுதுவதற்கான தேவை எமக்குள் ஏற்பட்டதில்லை.அதனால் அவளது எழுத்தாற்றலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.தெரிந்திருந்தால் அவளை அப்போதே எழுத்துத் துறையில் ஊக்குவித்திருப்பேன்.

திடுமென்று கொழும்புக்கு இடம்பெயர்க்கப்பட்ட காலத்திலிருந்து,பிறகு கனடாவிற்கு வந்து இரண்டொரு வருடங்கள்வரை அவளது கடிதங்கள் தொடர்ந்தன.
எங்களுக்கிடையிலான கடிதங்கள் எவ்வளவு இடைவெளிக்குள் இருக்கும் என்றுமட்டும் கேட்காதீர்கள்.ஒரு கடிதத்தை அவள் தொடங்கியிருந்தாள் என்றால்,அதற்கு நான் கொஞ்சம் விடயம் சேர்த்து,சோம்பல் தெளிந்து பதில் எழுதி,அது அவளுக்குக் கிடைத்தவுடனேயே அவளது அடுத்த கடிதம் ஆரம்பித்துவிடும்.எப்படிச் சொல்கிறேன் என்றால்,அவளது கடிதத்தில் ஒவ்வொரு தடவையும் அவள் எழுதும் வரிகள் ‘உனது கடிதம் இன்று கிடைத்தது’
என்பதாகத் தான் இருந்தது.அதில் தான் கடைசிவரை அவளுக்குச் சலிப்புத் தட்டவில்லை.அப்படி இருந்தும் சிலவேளைகளில் ‘இன்று கடிதம் மதியத்திற்கு மேல்தான் கிடைத்தது.இரவின் நிலவொளிக்குள் பதில் எழுதிக் கொண்டிருக்கிறேன்…’ என மாற்றுவாள்.

எனது கடிதம் கிடைத்தவுடன் அவள் எழுதி,அவளுடையது கிடைத்து,நான் கொஞ்சம் யோசித்துப் பதில் எழுதி…அது அவள் கையைச் சேர்ந்த உடனேயே அவள் மீண்டும் பதில் எழுதி…இந்தச் சங்கிலி வட்டம் எப்போது நின்றது…?

நல்லவேளையாக அன்றைய காலகட்டத்தில் ஒருகடிதம் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போய்ச்சேர,ஒரு மாதத்திலிருந்து மூன்று மாதம்வரை கூட சிலவேளைகளில் எடுத்தது.இல்லாவிட்டால் என்ன எழுதுவதென்று எனக்குத் திண்டாட்டம் ஆகியிருக்கும்.சமயங்களில் அதிர்ஷ்டவசமாக ஒரு கிழமையில் கடிதம் வந்துசேர்ந்ததும் உண்டு.(கவனியுங்கள்,ஒரு கிழமையில் கடிதம் போய்ச் சேர்வதே அந்தக் காலத்தில் அதிர்ஷ்டம் தான்.)

அதிகமில்லை…எங்கள் கடிதங்களில் அனேகமாக இரண்டு விடயங்கள் மேலோங்கியிருக்கும்.
ஒன்று வயல்கரைப் பிள்ளையார்…
இரண்டாவது அவளது குட்டித்தம்பிகள்.
பிள்ளையார் மீதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு.அவளானால் முருகனின் பக்தை.
நான் முதலிலேயே சொன்ன மாதிரி கடித ஆரம்பத்தில் நலம் கோரும் பகுதிகளில் பின்வருமாறு எழுதுவாள்.
‘நான் நலம்…நீ நலமா…’ என எழுதிச் சலித்தவள்,

‘நீ நலமென்று நம்புகிறேன்…’
‘நீ நலமாக என முருகனை வேண்டுகிறேன்…’
‘நீ நலமாக உன் வயல்கரை பிள்ளையார் துணையிருப்பாராக..’
‘இங்கே நானும் முருகனும் நலம்.உன்னை உன் பிள்ளையார் நலமாக வைத்திருக்கிறாரா…?’
எனப் படிப்படியாக அவளது கடிதங்கள் வளர்ச்சியுறும்.

எழுத்தென்றாலும்,கட்டுரை என்றாலும் பெரும் அலேர்ஜிக்குள்ளாகின்ற நான்,அவளது கேள்விகளுக்கூடாக பதில் எழுதும் ஆற்றல் தூண்டப்பட்டவளானேன்.அவளது கேள்விக்கான பதில்களாய் எனது கடிதங்களும் நீளும்.
வயல்கரைப் பிள்ளையார் என்னில் செலுத்திய செல்வாக்கு ஆழமானது.அதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவள் அவள்.பிள்ளையாரைச் சுற்றியிருந்த சணல்வயல் மஞ்சளாய்ப் பூத்துக் கொட்டும் காலத்தில் இருவருமாய் மஞ்சள் துளிர்க்கும் வரப்புகளில் ஓடியாடியிருக்கிறோம்.நான் இங்கு வந்தபிறகு எத்தனை பனி மூடிய அழகு மரங்களைப் பார்த்திருந்தாலும் அந்த மஞ்சள் வயலின் மயக்கும் அழகு இன்றுவரை என மனத்திலிருந்து விலகவேயில்லை.

கடிதங்களில் நான் கேட்டிருக்கிறேன்.
‘எங்கள் வீட்டுப்பக்கம் போனாயா நர்மதா…?’
‘இன்னமும் அங்கே சணல் பூத்திருக்கிறதா…?’
‘இன்னமும் வயல்கரைப் பிள்ளையார் தனித்துத்தான் இருக்கிறாரா…?’
நர்மதாவிடமிருந்தான பதில்கள் கேலியும்,கிண்டலுமாய் இருந்தாலும் அவள் பதில்கள் எனக்கு ஆறுதல் ஊட்டும்.
‘உன்னுடைய பிள்ளையாரை நான் ஒன்றும் பிடித்துக் கொள்ளவில்லை.’
‘நீ போன பிறகு இங்கு யாரும் சணல் விதைக்கவேயில்லை…’
என்பன போன்றெல்லாம் தொடரும் அவள் கடிதத்தின் இறுதிப் பகுதியில் எனக்கான ஆறுதல் மொழி ஏதேனும் இருக்கும்.
‘கவலைப்படாதே…நீ மறுபடி இங்கே வருவாய்…’
‘அந்தச் சணல்காட்டில் மறுபடியும் நாம் திரியும் காலம் வரும்…’
‘வயல்கரைப் பிள்ளையாரும் என்னைப்போல் தான் உனக்காகக் காத்திருக்கிறார்…’
என்றெல்லாம் ஆறுதல் தொக்கும் வரிகளைத் தீர்த்தமாய்த் தருவாள்.

பிள்ளையாருக்கு அடுத்து அவள் என்னிடம் பரிமாறிக் கொண்ட விடயம் அவளது குட்டித் தம்பிகள்.நான் அவளை விட்டுப் பிரிந்தபோது,அவர்களுக்கு வயது ஒன்பதே ஒன்பதுதான்.இரட்டைத் தம்பிகள்.அவளுக்கு அடுத்து இன்னொரு தங்கை இருந்தாள்.நர்மதாவிற்கும்,தம்பிகளுக்கும் இடையில் பதினோரு வயசு வித்தியாசம்.அதனால் எங்கள் வகுப்பில் எல்லோருக்கும் அவள் தம்பிகள் மீதில் அதிகச் செல்லம் இருந்தது.

நான் கொழும்பு போகிற காலம் வரை அவள் அவர்களில் ஒருவனைத் தூக்கி வைத்துக் கொண்டுதான் இருப்பாள்.மாறி,மாறி நானும் அவர்களில் ஒருவனைத் தூக்குவேன்.தூக்கி வைத்துக் கொண்டு பக்கத்து வளவுகளுக்குள் அலைவோம்.ஷெல்லடி,விமானத் தாக்குதல் நடக்கின்ற காலம் அப்போது.அடுப்படிப் புகைக்கூடு,மரத்தடி பங்கர் என அவர்களைத் தூக்கிக் கொண்டு ஓடுவோம்.

‘ஆரூர் எங்கை…?’
‘ஆர்த்தியை நீ தூக்கு…’ என அந்த நேரங்களில் அவளும்,தங்கையுமாய் அல்லோலகல்லோலப்படுவார்கள்.
ஏதாவது வானத்தில் இரைந்தால் அவளது குரல் முதலில் அந்தக் குட்டித் தம்பிகளைக் கூப்பிடுவதாய்த்தானிருக்கும்.

ஒருதரம் பங்கருக்குள்ளிருந்த ஆரூரிற்கு ஏதோ விஷ ஜந்து கடித்துவிட்டது.வலி பொறுக்க முடியாமல் அவன் அழுத அழுகை தாங்கமுடியவில்லை.அவளது அம்மா அவனைத் தூக்கிக் கொண்டு கந்தப்பு அண்ணரிடம் ‘பார்வை’ பார்க்கப் போய்விட்டாள்.ஆனாலும் நர்மதாவால் பொறுக்க முடியவில்லை.ஏதாவது செய்தாக வேண்டும் என்ற தீவிரமான வேகத்தில் அன்று மாலை முழுதும் சாணி கரைத்து பங்கரை மெழுகினோம்.தங்கை ஆர்த்திகனைத் தூக்கிவைத்துக் கொள்ள ,
‘இனிமேல் எந்த விஷ ஜந்தையும் உள்ளே வரவிடமாட்டோம்’ என அவனுக்குச் சத்தியம் செய்து கொடுத்தோம்.பொழுது கறுக்கக் கறுக்க பங்கர் மெழுகியிருந்தோம்.
எங்களைக் காணாமல் அவள் அம்மா பங்கருக்குள் வந்து தேடி என்னை வீட்டுக்குப் போகச் சொல்லி வற்புறுத்தும் வரைக்கும் நான் அங்கேயே நின்றது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது.

ஆரூரும்,ஆர்த்தியும் பிறந்தது இந்திய இராணுவத்தின் காலம்.அவர்கள் பிறந்ததிலிருந்து எப்போதும் யுத்தத்தின் நெருக்கடிகளுக்குள்ளேயே வாழ்ந்திருப்பார்கள்.அதனாலேயோ என்னவோ,மிகவும் அமைதியான சொல் கேட்கும் பிள்ளைகளாய் அவர்கள் இருந்தார்கள்.அது சிலவேளை நர்மதாவின் கைகளுக்குள் வளர்ந்ததனால் வந்ததாகக் கூட இருக்கலாம்.

ஆரூரிற்கு புலமைப் பரிசிலில் பாடசாலையிலேயே முதலிடம் கிடைத்தது…
ஆர்த்திகன் சித்திரப் போட்டியில் முதல் பரிசு பெற்றது…
என அவள் அவர்களது முன்னேற்றங்களை எழுதிக் கொண்டே போவாள்.
எனக்கு அவர்களோடு கடைசியாய்ப் போன பிள்ளையார் கோவில் தீர்த்தத் திருவிழா நினைவில் வந்துகொண்டேயிருந்தது.

வேட்டியைச் சின்னதாய் மடித்துத் தார் பாய்ச்சி இருவருக்கும் கட்டிவிட்டபோது இருவரும் குட்டிக் கிருஷ்ணர்களைப் போலவேயிருந்தார்கள்.அன்று முழுக்க அவர்கள் எங்களைத் தூக்க விடவில்லை.பெரிய மனிதர்கள் போல் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு நடந்து வந்தார்கள்.நாங்களும் அன்று சேலை உடுத்தியிருந்தோம்.அவர்களைத் தூக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.தீர்த்தக்கேணியில் தாமரைப் பூக்கள் மிதப்பதையும்,சுவாமி தீர்த்தம் ஆடுவதையும் ஆவலாகப் பார்த்தோம்.கோவிலுக்கு வந்த காவடிகளுக்குப் பின்னே ஆரூரும்,ஆர்த்தியும் இழுபட்டார்கள்.இருந்தாலும் எங்கள் கைகளை விடவில்லை.காவடியிலிருந்து விழுந்த மயிலிறகுகளைப் பொறுக்கி அவர்களுக்குச் சேர்த்துக் கொடுத்தோம்.அன்று முழுக்க அவர்களின் குதூகலம் விடாமல் எங்களைச் சுற்றிக் கொண்டேயிருந்தது.

ம்ம்…எங்கள் குட்டித்தம்பியரின் காலம் அது.
திடுமென்று தான் அவளுடனான அந்தப் பிரிவு வந்தது.
யாழ்ப்பாணத்து மக்கள் இடம்பெயர்ந்து தென்மராட்சி முழுக்கவும்,வன்னியுமாய் பரிதவித்தபோது, எங்களுக்கு இடம்பெயர வேண்டி ஏற்படவில்லை.கல்வயலுக்குள்ளேயே எங்கள் காலம் கழிந்தது.ஆறுமாதம் கழித்து,மீண்டும் தென்மராட்சியையும் கைவிட்டுப் போகும் நிலை தோன்றியவுடன் நாங்கள் வவுனியா போய் அப்பால் கொழும்பு போனோம்.ஏற்கனவே அங்கு அண்ணா வேலை செய்துகொண்டிருந்தது எமக்கு மிகவும் வசதியாய்ப் போயிற்று.எங்கள் குடும்பத்தை கொழும்பில் நிலைநிறுத்துவதற்குரிய ஏற்பாட்டை அவன் செய்து கொண்டான்.

நர்மதாவும் அவள் குடும்பமும் ஊரைவிட்டு வெளியேறவில்லை.உள்ளூரிலேயே இரண்டு,மூன்று தினங்கள்,அயலுக்குள் இடம் மாறிவிட்டுப் பின் தங்கள் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததாகப் பிறகு எழுதியிருந்தாள்.

அவளை நான் கடைசியாகப் பார்க்கப் போனது ஒரு அவசரமான காலமாகவிருந்தது.வீட்டில் எல்லோரும் கொழும்பு போவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தபோது நான் அவள் வீட்டிற்குப் போயிருந்தேன்.எல்லார் முகங்களிலும் கலக்கமே மேலோங்கியிருந்தது.எதிர்காலம் குறித்து யாராலுமே எதுவும் எண்ணமுடியாதிருந்தது.

“இஞ்சை இனி இருக்கிறது அவ்வளவு பாதுகாப்பில்லை.அங்காலை எப்பிடியாவது வரப் பாருங்கோ…”
என்னால் ஊரில் இருக்க முடியாமல் போன ஆதங்கம் அவர்களுக்கு உபரியாக ஒரு அழைப்பை விடுத்தது.
ஆரூரனும்,ஆர்த்திகனும் என்னை வளைத்துக் கொண்டார்கள்.
“எங்கையக்கா போகப் போறீங்கள்…?”
“இனி வரமாட்டீங்களோ…?”
“எப்பக்கா வருவீங்கள்…?”
என்னை மொய்த்த கேள்விகளுக்கு எனக்குப்பதில் தெரியவில்லை.நர்மதா மட்டும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை.
“இனி எப்ப காணுறமோ தெரியாது…எங்கையிருந்தாலும் நல்லாயிரு…”
அவள் சொன்னமாதிரி அவளை இன்றுவரை காணவும் முடியவில்லை.அவள் வார்த்தை பலித்தமாதிரி இன்றுவரை குறையில்லாமல் தான் இருக்கிறேன்.
தொடர்ந்து அவள் எமது ஊர் நிலவரங்களைக் கடிதங்களில் எழுதுவாள்.தனது குட்டித் தம்பிகளின் காலம் போருக்குள்ளேயே கழிந்துவிட வேண்டும் என்பதுதான் விதியா…? என்பாள்.

நானும் எங்களோடு படித்தவர்களை கிளாலியில், ஓமந்தையில் கண்டது பற்றி எழுதுவேன்.

நான் கொழும்புக்குப் போகமுதல் எங்கள் வகுப்பில் இரண்டு பேர் இயக்கத்திற்குப் போயிருந்தனர்.அவர்களைப் பற்றியெல்லாம் அவள் உருக்கமாக எழுதுவாள்.
‘என தம்பிகளுக்கு வயசு குறைய என்பதற்காக இப்போது சந்தோஷப்படுகின்றேனடி…’ என எழுதுவாள்.

‘ஆனால் அவர்களுக்கும் ஒருநாள் கடகடவென்று வயது வளரும் …அப்போதுஎன்ன செய்வது…?’ என மனம் கலங்கி எழுதுவாள்.
கடைசியாய் ‘தம்பிகளின் வளர்த்தியைப் பார்க்கப் பயமாய் இருக்கிறதடி…’ என எழுதினாள்.

அந்தக் கடிதங்களுக்கூடேயே அவளும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகி ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்துகொண்டிருந்தாள்.

நான்கு வருடங்களாக நாங்கள் கடிதத்தில் பேசியிருப்போம்.
அப்படி என்னதான் எழுதுகிறீர்கள் மாறி,மாறி…? என அண்ணா என்னை வம்புக்கிழுப்பான்.சிலவேளை ஊரில் எனக்கேதும் காதல் இருந்திருக்குமென்றும்
நர்மதா தூதாகச் செயற்படுவதாயும்கூட அவன் சந்தேகப்பட்டிருக்கலாம்.இல்லாவிட்டால் எதற்கு இருபத்திநாலு வயசு முடிய முதல் என்னைக் கனடாவுக்கு அனுப்ப அண்ணா பிரயத்தனப்பட்டிருக்க வேண்டும்…?

எனது கல்யாணமும் கூடத் திடீர் என்று ஏற்பட்டதுதான்.அதையும் அவளுக்குக் கடிதத்தில் தான் தெரியப்படுத்தினேன்.திருமணம் கொழும்பில் நடந்தது.அழைப்பிதழை அவளுக்கும் அனுப்பியிருந்தேன்.வழமை போலவே திருமணம் முடிந்தபிறகு தான் இந்த அழைப்பிதழ் அவள் கையைச் சேர்ந்திருந்தது.

அதற்குப்பிறகு அங்கே சண்டை வலுத்திருந்தது.அவளும்,அவள் குடும்பமும் எப்படியோ…என நான் தவித்துக் கொண்டிருந்தேன்.அப்போது நான் கனடாவிற்குப் போகக் காத்துக் கொண்டிருந்த நேரம்.


ஆறேழு மாதம் நான் கனடா போகவும் முடியவில்லை.அவளது தொடர்பும் அற்றிருந்தேன்.கனடாவிற்கு விசாக் கிடைத்து விமானத்திற்கு டிக்கெட் ‘புக்’ பண்ணி புறப்படும் தறுவாயில் அவள் கடிதம் வந்தது.

தும்பளையில் இருக்கிறாளாம்…
ஊரிலே ஒருவரும் எஞ்சவில்லையாம்…
ஒட்டுமொத்தமாய் ஊர் முழுக்க இடம்பெயர்ந்து வன்னிக்கும்,வடமராட்சிக்கும்,வலிகாமத்திற்குமெனப் போய்விட்டார்களாம்.
தீராத துயரங்களோடு வந்து சேர்ந்திருந்தது அந்தக் கடிதம்.
அதற்கான பதிலை நான் கனடாவிற்குப் போய்த்தான் அவளுக்கு எழுதவேண்டியிருந்தது.
புது வாழ்க்கை தந்த பிரமிப்பிலிருந்து நீங்கி நான் அவளுக்குப் பதில் போட இன்னும் ஆறேழு மாதங்கள் ஆகின.

அதற்குப் பிறகு அவள் கடிதம் கொஞ்சம் கோபத்தோடு,மனத்தாங்கலோடு வந்திருந்தது.
‘உனக்குப் புது வாழ்க்கை கிடைத்துவிட்டது…’
‘உனக்கு இனி நான் யாரோ தானே…’
‘பரவாயில்லை நன்றாயிரு…’
‘என கடிதங்களுக்குப் பதில் போட்டு நீ உன் நேரத்தை வீணாக்காதேடி…’
என்ற சாரப்பட அந்தக் கடிதம் வந்திருந்தது.
அதிலும் ‘வயல்கரைப் பிள்ளையாரையும்,சணல் வயலையும் …நானும் இப்போது பிரிந்து விட்டேன்…உன் சார்ந்த எல்லா நினைவுகளும் என்னை வெறுமையாக்கிவிட்டது…’ என்ற பின்குறிப்பு வேறு.
என்னால் தாங்க முடியாமல் போனது.
‘எத்தனை உறவுகள் வந்தாலும் உனக்குப் பதில் போடுவதை மறப்பேனா…? எண்பது வயதுக் கிழவி ஆனாலும் ,கண்ணாடி போட்டுக் கொண்டு உனக்குப் பதில் எழுதுவேன்…’ என என பதிலை அனுப்பியிருந்தேன்.
அதற்குப் பிறகு சமாதான காலங்கள் வந்து அவள் ஊருக்குப் போனதைச் சொன்ன கடிதங்கள் வந்தன.
விசுவமடுவில் ஆசிரியர் நியமனம் கிடைத்ததைச் சொல்லி எழுதியிருந்தாள்.
சந்தோஷப்பட்டேன்.
அத்தோடு எனக்கும் குழந்தை பிறந்து அந்த சந்தோஷத்தையும் அவளிடம் கடிதத்தில் பகிர்ந்து கொண்டேன்.
என குழந்தையின் உடல்நலம் விசாரித்து வயல்கரைப் பிள்ளையார் கோவில் திருநீறு வைத்து ஒரு கடிதம் அனுப்பிய ஞாபகம் இருக்கிறது.
எனது மகள் கூட ‘அன்ரீ…தின்நீறு…’என மழலை சொல்லப் பழகியிருந்தாள்.
ஆதலால் அதற்குப் பிறகான ஒரு காலத்தில் தான் அவளது கடிதம் நின்றிருக்க வேண்டும்.
அதற்குப் பிறகு என்னால் அவளது அன்பான கடிதங்களைக் காணமுடியவில்லை.
முகநூல்களில் எங்காவது அவளோ…அவளது தம்பிகளோ தென்படுகிறார்களா என நான் தேடித் பார்த்துக் களைத்துவிட்டேன்.அவளை விட ஊரில் என்னோடு படித்தவர்கள் எல்லாம் இப்போது முகநூலுக்கு வந்துவிட்டார்கள்.அவளை மட்டும் எங்கும் காணக்கிடைக்கவில்லை.

000000000000000000000000000

என்னாலும் ஊருக்கு வந்து போக முடியும் என்பதை முதலில் என்னால் நம்பவே முடியவில்லை.என் மாமியார் ஊரில் சுகவீனமாய்க் கிடப்பதைச் சாட்டாக வைத்துக் கொண்டு தான் அவரால் வேலைக்கு விடுப்பு எடுக்க முடிந்தது.இரண்டு கிழமை யாழ்ப்பாணத்தில் தங்க முடியும் என்பதே மகிழ்ச்சி அளித்தது.இரண்டு நாட்கள் அவரது வீட்டில் தங்கியிருந்தோம்.மூன்றாம் நாள் கல்வயலில் எங்கள் வீட்டுக்கு வந்தோம்.அங்கே எங்கள் சித்தி குடும்பம் இப்போது குடியிருந்தது.எனக்கு நினைவு முழுக்க நர்மதா பற்றியே இருந்தது.மாலை ஆறுதலாக மகளைக் கூட்டிக்கொண்டு நர்மதா வீட்டுக்கு வெளிக்கிட்டேன்.

போகிற வழியில் வயல்கரைப் பிள்ளையார் கோவில் இடிபாடுகளோடு தென்பட்டது.கதவு இன்னும் திறக்கப்படவில்லை.எனினும் பூசை நடப்பதற்கு ஏதுவாய் வாசலில் உலர்ந்த பூக்களும்,மாலைகளும் சிந்திக் கிடந்தன.வாசலில் நின்று குட்டிக் கும்பிட்டுவிட்டுப் பிறகு வரலாம் என மகளிடம் சொல்லியவாறு புறப்பட்டேன்.
சணல் வயல் காய்ந்துபோய்க் கிடந்தது.

அவள்சொன்னதுஉண்மைதான்.பிள்ளையாரையும்,சணல்வயலையும் காண நான் ஊருக்கு வருவேன் என்றாள்.வந்துவிட்டேன்.முக்கியமாக அவளைப் பார்ப்பதற்கு.
இதை அவளுக்குச் சொல்லவேண்டும் என நினைத்தபடி கைவிரலில் மகளது விரல்களைக் கோர்த்தபடி நடந்தேன்.

நான் அவளைப் பிரிந்தபோது அவளது தம்பிகளுக்கும் இதே வயது இருக்குமோ…?
அவர்கள் இப்போது வளர்ந்திருப்பார்கள்.
அவள் எதிர்பார்த்தது போல் ஆரூரன் மருத்துவபீடத்திலும்,ஆர்த்திகன் நுண்கலைப் பீடத்திலும் படித்துக் கொண்டிருப்பார்களா…?
அவளுக்குக் கல்யாணம் ஆகியிருக்குமா…?
அவளுக்கும் குழந்தைகள் இருக்குமா…?
வழி வழியாய் மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்த போதும் மனம் முழுக்க நர்மதா பற்றிய கேள்விகளே வியாபித்துக் கிடந்தன.
நர்மதா வீட்டுக்கு வந்த போது அவளது வீட்டு வேலி சிதைந்து போய்க் கிடந்தது.வெறும் கிளுவந்தடிகளை நெருக்கமாக நட்டிருந்தார்கள். கிளுவங் குருத்துக்கள் காற்றில் ஆடியபோது,இந்தப் பத்து வருடங்களாக அவள் எழுதாத கடிதத்திலிருந்த விடயங்கள் தம்மைக் கேள் கேள் எனப் படபடப்பதுபோல் உணர்ந்தேன்.

உள்ளே போய் அழைத்த போது சிறு பையன் ஒருவன் எட்டிப் பார்த்தான்.எட்டு , ஒன்பது வயது இருக்கும்.கடைசியாய் அந்த வீட்டிற்கு அவளிடம் விடைபெற வந்த போது ஆரூரும்,ஆர்த்திகனும் என்ன கோலத்தில் இருந்தார்களோ அதே தோற்றத்தில் இருந்தான் அவன்.காலம் பின் நோக்கிச் சுழல ஆரம்பித்துவிட்டதா என்ன…?

“ஆர் பிள்ளை ” என்றபடி நர்மதாவின் அம்மா.

நரைத்துக் கொட்டிய தலைமுடி உயிருக்குப் பதிலாக உடலைத் தின்று விட்ட காலம்…

எச்சிலை விழுங்கியபடியே “நான் மஞ்சரி நர்மதாவோடை படிச்சனான்”என்றேன்.

“ஆர் மஞ்சரியோ…” என்ற அம்மாவின் குரலில் ஆச்சரியம் அதிகமாய் இல்லை.

“இரும் பிள்ளை கூப்பிடுறன்…” என்றவள் உள்ளே போனாள்.

உள்ளிருந்து ஈரக்கையைத் துடைத்தபடி எட்டிப் பார்த்த நர்மதா என்னைக் கண்டவுடன் பரபரப்பாய் வெளியே வந்தாள்.

“மஞ்சரி…” என ஆச்சரியமாய் மலர்ந்தாள்.

“இதாரிது குட்டி மஞ்சரியே…” என மகளை அணைத்துக் கொஞ்சினாள்.

வேடிக்கை பார்த்தபடி இருந்த மகனைக் கூப்பிட்டாள்l.

“என்ரை மகன் ,நவீன் …”

அவன் இன்னமும் ஒதுங்கிக் கொண்டேயிருந்தான் .அதே சுபாவம் …ஆரூரா…ஆர்த்தியா…யாரது சுபாவம் ஒட்டி இருக்கிறது அவனில் …

“கடைசி வரைக்கும் கடிதம் போடோணும் எண்டிட்டு கடைசிலை நீ கடிதம் போடாமலே விட்டிட்டியே” என்றேன்.

“ஒவ்வொரு பிரச்சினை ..பிரச்சினையாய் வரத்தொடங்க கடிதம் எழுத வேணும் எண்ட எண்ணமே செத்துப் போச்சு..”.அவள் எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னாள்.

“எங்கே உன்ரை அவர்…எப்ப கல்யாணம் நடந்தது..?.”

“விசுவமடுவிலை தான் அவரும் படிப்பிச்சவர் …விரும்பித்தான் கட்டினான்.இப்ப அங்கை தான் வீடு பாக்கப் போட்டார்…”

“எங்கை உன்ரை குட்டித் தம்பிகள் ஆர்த்திகன், ஆரூரன்…”
“ஆர்த்தி…” அவள் சத்தமாய்க் கூப்பிட்டாள்.

நெடு நெடுவென்று நல்ல வளர்த்தியாக அவன் வெளியே வந்தான்.முகம் குழந்தைத்தனத்தோடு இருந்தாலும் அதில் சிந்தனை தேங்கியிருந்தது .

“ஆர் தெரியுதோடா…மஞ்சரியக்கா”

அவன் லேசாய் சிரித்தான்.நர்மதாவின் மகனை வாரியெடுத்து மடியில் இருத்திக் கொண்டான். இது ஆர்த்தியா ஆரூரா…எனும் தயக்கம் அவள் ஆர்த்தி என அழைத்ததில் விலகியிருந்தது.இவன் தான் சித்திரப் போட்டியில் பரிசு பெற்றவன்.அவள் நுண்கலைப் பீடத்திற்குப் போக வேண்டுமென்று எதிர்பார்த்தது இவனைத்தான்.

”தம்பி கம்பஸ்ஸா…” என்றேன்.

“இல்லை…” எனத் தலையாட்டினான்.

“அப்ப என்ன செய்யிறீர்…”

“ஏதும் வேலை கிடைக்குமோ எண்டு பார்க்கிறன்…”

“ஆரூர் எங்கை…?” அவனாவது மருத்துவ பீடத்துக்குத் தெரிவான செய்தியைக் கேட்க மாட்டேனோ எனும் நப்பாசையில் தான் கேட்டேன்..ஒருவரும் ஒன்றும் பேசவில்லை..கொஞ்ச நேர அமைதி…அதைக் குலைத்தபடி
“இப்பதான் ஏ.எல் எழுதினான் அக்கா…”என்றான் ஆர்த்தி.

“ஏன் இத்தனை வருசமா ஏன் எழுதேல்லை…”
“இப்ப தானை தடுப்பாலை வந்தனான்…” என்றான்.

நான் அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தேன்.

“அப்ப ஆரூர்…?”

“அவன் முள்ளிவாய்க்காலிலை எங்களை விட்டிட்டுப் போட்டான்…”

நான் நர்மதாவிடம் திரும்பினேன்.

“என்ன நடந்தது…?”

“லீவு நாளிலை வந்து நில்லுங்கோடா எண்டு நான் தான் இவங்களைக் கூப்பிட்டன்…இவங்கள் வந்த நேரம் பாதை பூட்டி…அவங்கள் என்னோட இழுபறிப்பட்டு கடைசிலை ஆர்த்தி இயக்கத்துக்குப் போய் ஆரூர் முள்ளிவாய்க்காலிலை ஷெல் பட்டுச் செத்து …இவன் இப்பதான் தடுப்பாலை வெளிக்கிட்டவன்…”

நர்மதாவின் எழுதாத கடிதங்களில் இருந்திருக்க வேண்டிய சொற்கள் என் முன்னால் ரத்தம் சொட்ட விழுந்து கொண்டிருந்தன.

நான் ஆர்த்தியைப் பார்த்தபோது அவன் எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்,குழந்தைத்தனம் மாறாத அவனதும் ஆரூரினதும் முகங்கள்…

என் உடம்பை யாரோ வெட்டி உப்புக் கண்டம் போட்டாற் போல நான் அந்தக் கணத்தில் உணர்ந்தேன்…

நன்றி: தாட்சாயிணி

http://eathuvarai.net/?p=766

Comments