தெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர-பாகம் 01.



எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது, தன்னந்தனியே சிரித்துக்கொள்வது, சுற்றக்கூடிய பொருட்களின் மீது ஆர்வமாய் இருப்பது, சக வயதுடைய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரிடமும் ஒட்டாமல் பெருங்கூட்டத்தில் தனி ஒருவனாக இருப்பது என்பது ஆட்டிசத்தின் கூறுகளாக நாம் இன்று அறிந்திருக்கிறோம். ஆனால்.. இதை முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த மருத்துவர் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

குழந்தை பிறந்த பின் – காது கேட்காமல் போவது, பேசாத்தன்மை, பார்வைக்குறைபாடு, உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குறைபாடு போன்றவற்றை எளிமையாக கண்டுகொள்ள முடியும். ஆனால் ஆட்டிசம் அப்படி எளிமையாக வகைப்படுத்த முடியாதது.

1943ல் டாக்டர். லியோ கானர் (Dr. Leo Kanner) என்பவர் உலகிற்கு ஆட்டிசம் என்ற வார்த்தையையே அறிமுகப்படுத்துகிறார். அவர் தனது “அன்பு வளையத்தை சிதைக்கும் ஆட்டிசம்” (Autistic Disturbances of Affective Contact) என்ற ஆய்வறிக்கையை நெர்வஸ் சைல்ட்(Nervous Child) என்ற பத்திரிக்கையில் வெளியிட்டார். அதில்தான் உலகில் முதன் முதலாக ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பிரச்சனைகள் பேசப்பட்டது.

ஆனால், ஆட்டிசத்திற்கு காரணமாக கானர் கருதியதில் முக்கியமானது, பெற்றோர்களின் அரவணைப்பை குழந்தைப் பருவத்தில் பெறாததினால் தான் இதன் பாதிப்பு ஏற்படுகிறது என்று பெரிதும் நம்பினார். முற்றிலும் தவறான கொள்கை என்று பின்னாளில் தெளிவாக நிறுவப்பட்டு விட்டது என்றாலும் ஆட்டிசம் எனும் குறைபாட்டை முதன் முதலாக வரையரை செய்தவர் என்கிற வகையில் டாக்டர். கானரின் பங்கு மகத்தானது.

ஆட்டிசம் என்ற வார்த்தைக்கு யதார்த்ததிலிருந்து விலகி ஓடுவது என்பதுதான் அகராதிப்படியான அர்த்தம். கானர் இவ்வகை குறைபாடுள்ள நோயாளிகள் அப்படி உண்மையை சந்திக்காது விலகி வாழ்வதாகக் கூட எண்ணியிருக்கலாம்.

சரியாக இதே நேரத்தில் டாக்டர். ஹான்ஸ் ஆஸ்பெர்ஜர் (Hans Asperger) என்பவரும் இதே வகைக் குறைபாடுகளை சற்றே வளர்ந்த பேச முடிந்த குழந்தைகளிடம் கண்டறிந்தார். 1944ல் அவர் ஜெர்மானிய மொழியில் இது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். பிற்காலத்தில் ஆட்டிசத்தின் இவ்வகைக்கு (பேசக் கூடிய ஆனால் மற்றவர்களோடு பழகுதலில் சிரமம் உடைய) குறைபாட்டுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

கானரின் ஆராய்ச்சியில் முதல் முதலாக ஆட்டிச பாதிப்புக்குள்ளானவராக கண்டறியப்பட்ட டோனால்ட் (Donald Triplett ) என்பவர் முழுக்க குணமடைந்து இயல்பான ஒரு வாழ்வை வாழ்ந்து வருகிறார் என்கிற தகவல் 2010ல் கண்டறியப்பட்டபோது அது ஆட்டிசக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு பெரிய நம்பிக்கையைத் தந்தது.

ஆட்டிசம் என்பதை மிகத் துல்லியமாக வரையறுக்க முடியாததைப் போலவே அதற்கான சிகிச்சை முறைகளையும் அறுதியிட்டு கூற முடிவதில்லை. ஒருவருக்குப் பயனளிக்கும் சிகிச்சை மற்றொரு குழந்தைக்கும் பயன் தரும் என்பது நிச்சயமில்லை. எனவே இதற்கான சிகிச்சையைத் தேர்வு செய்யும் பொறுப்பு ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோரிடமே இப்போதைக்கு உள்ளது. இது ஒரு பெரிய ஆயாசத்தையும், குற்றவுணர்வையும் அவர்களுக்கு உருவாக்குகிறது.

தொடரும் 

நன்றி : http://216.185.103.157/~balabhar/blog/?p=1061








Comments