மனிதனும் நட்சத்திரப் பயணங்களும்-அறிவியல் - பாகம்- 08.


ஒளியின் வேகத்தை மிஞ்சி நட்சத்திரங்களுக்குப் பயணிக்க முடியுமா? 


Star Trek திரைப் படத்தில் காட்டப் படுவது போல் விண்வெளியில் ஒளியின் வேகத்துக்கு சமீபமாக அல்லது அதை மிஞ்சும் வேகத்தில் பயணித்து நட்சத்திரங்களை அடைவது சாத்தியமே என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது warp drives எனப்படும் எனப்படும் Star Trek உயர் மாடல்கள் கொள்கை அடிப்படையிலும் சில மாடல்கள் செய்முறை அடிப்படை இலும் வருங்காலத்தில் இக்கனவை நிறைவேற்ற உள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளி ஆராய்ச்சியில் மனித இனத்தின் இலக்குகளை மட்டுப் படுத்துவதற்கு எந்த வரையறையும் கிடையாத நிலையில் ஒளியின் வேகத்தில் நாம் பயணித்தால் கூட நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது பல வருடங்களை அல்லது நூற்றாண்டுகளை அல்லது ஆயிரம் வருடங்களை எடுக்கக் கூடும் என்பதே யதார்த்தம்.


பிரபஞ்சத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சும் பொருள் எதுவுமே இதுவரை இல்லை என்ற போதும் ஐன்ஸ்டீனின் சார்புக் கொள்கைப் படி வெளியையும் காலத்தையும் வளைத்து அதன் ஓட்டைகளுக்கூடாக (loop holes) ஒளியின் வேகத்தில் பயணிக்கும் விண் ஓடங்களின் பல மாதிரிகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து வருகின்றனர்.

சார்புக் கொள்கைப் படியும் சில கணிதச் சமன்பாடுகள் கூறுவதன் படியும் warp speed எனும் இயற்கையை வளைத்துச் செல்லும் வேகத்தில் ஒரு சிறிய விண்வெளி ஓடம் பயணிப்பதற்கு சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமான வியாழனின் திணிவுக்குச் சமனான சக்தி தேவைப் படுகின்றது என கூறப்படுகிறது.


நிகழ்காலத்தின் மெக்ஸிக்கோவைச் சேர்ந்த வான் பௌதிக விஞ்ஞானியான Miguel Alcubierre , கோள வடிவமான விண்கலம் ஒன்று தனக்கு முன்னே உள்ள வெளியை இணைத்து தனக்குப் பின்னால் விரிவடையச் செய்யும் விதி முறையில் பயணிக்கக் கூடிய விதத்தில் சில கொள்கைகளை முன் வைத்துள்ளார்.

குறித்த இவ் விண்கலம் ஒரு கிரகத்திடம் இருந்து அல்லது ஒரு சூப்பர் நோவாவிடம் இருந்து சக்தியைப் பெற்று விண்வெளியில் ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

வேற்றுக்கிரக வாசிகளுக்கான நமது தேடல் எமக்கே சாபமாகலாம்!


இப்பிரபஞ்சத்தில் நாம் உறுதியாக அறிந்த ஒரேயொரு புத்திக் கூர்மை மிக்க உயிரின வாழ்க்கையாக நமது பூமியில் நிகழும் மனித வாழ்க்கையைக் கூறலாம்.

இந்நிலையில் மனிதன் தன்னைப் போல் புத்திக் கூர்மை மிக்க வேற்றுக் கிரக வாசிகள் யாரும் இப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து வருகின்றனரா என்று மேற்கொள்ளும் ஆராய்ச்சி அவனுக்கே சாபக் கேடாக அதாவது மனித இனத்தின் அழிவுக்கே வழி வகுக்கலாம் என விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலைக் கூறுகின்றனர்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவது 'பெரிய வடிகட்டி' என்று பொருள் படும் Great Filter தத்துவம். அதாவது இப்பிரபஞ்சத்தில் புத்திக் கூர்மை மிக்க உயிரினங்களின் வாழ்க்கை ஒரு கட்டத்தைத் தாண்டி வளர்வதை ஒரு மர்ம வேலி போன்ற சக்தி தடுத்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். Great Filter என அழைக்கப் படும் இவ்வேலி மனித வாழ்க்கையின் கடந்த காலத்தில் இருந்திருக்கும் என்றும் வருங்காலத்தில் நாம் எதிர் நோக்க வேண்டிய சவாலாகக் காத்துக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்படுகின்றது.


நாம் இப்பிரபஞ்சத்தில் வேறு ஏதும் புத்திக் கூர்மை மிக்க உயிரினங்களைக் கண்டு பிடித்தால் இந்த Great Filter இன் விளைவை நாம் சந்திக்க நேரிடும் எனப்படுகின்றது. அதாவது மனித இனம் உட்பட இப்பிரபஞ்சத்தில் ஏதேனும் பாகத்தில் வசிக்கும் ஏனைய தொழிநுட்ப அறிவு மிக்க அனைத்து உயிரினங்களின் நாகரீகங்களும் தமது அண்டத்தில் (Galaxy) இருந்து இன்னொரு அண்டத்துக்கு பயணிப்பதை இந்த Great Filter இன் செயற்பாடு தடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது.


இதனால் நாம் மட்டுமல்லாது வேற்றுக் கிரகவாசிகளும் கூட தமது நாகரீகத்தின் உச்சத்தில் அதாவது அறிவின் உச்சத்தினை அடையும் போது பேரழிவை விரைவில் சந்திக்கும் கட்டத்தில் இருப்போம் என விஞ்ஞானிகள் எச்சரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த Great Filter தத்துவம் பிரபஞ்சத்தில் நிச்சயம் செயற்படுகின்றது என்பதற்கு சான்றாக இந்த வாதத்தை விஞ்ஞானிகள் முன் வைக்கின்றனர். அதாவது விஞ்ஞான வானியல் ஆராய்ச்சி வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் மனிதன் தற்போது நமது சூரிய குடும்பத்தைப் போன்ற நூறு பில்லியன்களுக்கும் மேற்பட்ட நட்சத்திர மண்டலங்கள் பிரபஞ்சத்தில் வியாபித்து இருப்பதை அறிவான். இந்நிலையில் நமது பூமியைத் தவிர்த்து இந்த பில்லியன் கணக்கான நட்சத்திர மண்டலங்களில் பூமியைப் போன்றே உயிர் வாழ்க்கையின் பரிணாமத்துக்கு உதவக் கூடிய சூழல் அமைந்திருக்கும் பல கிரகங்கள் அடையாளம் காணப்பட்ட போதும் இதுவரை நம்மைப் போன்ற உயிரினங்களை ஏன் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதே இவர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது. Fermi Paradox என்று அழைக்கப் படும் இந்தக் கேள்விக்கான பதிலாக Great Filter தத்துவம் கூறப்படுகின்றது.


விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத UFO எனும் பறக்கும் தட்டு பற்றிய கட்டுக் கதைகளைத் தவிர்த்துப் பார்த்தால் enrico Fermi என்ற பௌதிகவியலாளர் கூறும் Fermi Paradox ஞாயமானதாகவே தோன்றுகின்றது. இதேவேளை பூமியில் மனித வாழ்க்கை தோன்றி 200 000 வருடங்களில் நாம் பல சூப்பர் எரிமலைகள், விண்கற் தாக்குதல்கள் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களில் இருந்து தப்பி வந்துள்ளோம் என்றும் விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

நன்றி: 4tamilmedia.com


Comments