பார்த்தீபன் கனவு 04- புதினம் -முதலாம் பாகம்- அத்தியாயம் 04- பாட்டனும் பேத்தியும்.
உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும்வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. "தாத்தா!" என்று வள்ளி கூப்பிட்டாள். சற்றுநேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் "வா வள்ளி! வாருங்கள்மாப்பிள்ளை!" என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். பிறகு வீட்டுக்குள்ளே நோக்கி, "கிழவிஇங்கே வா! யார் வந்திருக்கிறது பார்" என்றான். மூன்று பேரும் வீட்டுக்குள் போனார்கள். "யார்வந்திருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்த கிழவி வள்ளியையும் பொன்னனையும்பார்த்துப் பல்லில்லாத வாயினால் புன்னகை புரிந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள்.வள்ளியைக் கட்டிக்கொண்டு "சுகமாயிருக்கயா, கண்ணு! அவர் சுகமாயிருக்காரா என்றுகேட்டாள். பொன்னன் "தாத்தா, உங்கள் பேத்தியைக் கொண்டு வந்து ஒப்புவித்து விட்டேன்.நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்" என்றான். "வந்ததும் வராததுமாய் எங்கேபோகிறாய்?" என்று கிழவன் கேட்டான். "மகாராஜாவைப் பார்க்கப் போகிறேன்" என்றான்பொன்னன். "மகாராஜா இப்போது அரண்மனையில் இல்லை, மலைக்குப் போயிருக்கிறார்.இங்கே வா காட்டுகிறேன்" என்று கிழவன் அவர்களை வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான்.

முற்றத்திலிருந்து அவன் காட்டிய திக்கை எல்லோரும் பார்த்தார்கள். உச்சிப்பிள்ளையார் கோவில் தீபம் தெரிந்தது. அங்கிருந்து தீவர்த்திகளுடன் சிலர் இறங்கி வருவதுதெரிந்தது. இறங்கி வந்த தீவர்த்திகள் வழியில் ஓரிடத்தில் சிறிது நின்றன. "அங்கே நின்று என்னபார்க்கிறார்கள்?" என்று வள்ளி கேட்டாள். "மகேந்திர சக்கரவர்த்தியின் சிலை அங்கேஇருக்கிறது. மகாராஜா, இளவரசருக்கு அதைக் காட்டுகிறார் என்று தோன்றுகிறது" என்றான்கிழவன். "அவர்கள்தான் இறங்கி வருகிறார்களே, தாத்தா! நான் அரண்மனை வாசலுக்குப்போகிறேன். இன்று ராத்திரி மகாராஜாவை எப்படியும் நான் பார்த்துவிட வேண்டும்" என்றுசொல்லிக் கொண்டே பொன்னன் வெளிக் கிளம்பினான். கிழவன் அவனோடு வாசல் வரை வந்துஇரகசியம் பேசும் குரலில், "பொன்னா! ஒரு முக்கியமான சமாசாரம் மகாராஜாவிடம் தெரிவிக்கவேணும். மாரப்ப பூபதி விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. அதைஅந்தரங்கமாக அவரிடம் சொல்லவேணும்!" என்றான்.

"மாரப்ப பூபதியைப் பற்றி என்ன?" என்று பொன்னன் கேட்டான். "அதெல்லாம் அப்புறம்சொல்கிறேன். மகாராஜாவின் காதில் எப்படியாவது இந்தச் சேதியைப் போட்டுவிடு" என்றான்கிழவன். கிழவி விருந்தாளிகளுக்குச் சமையல் செய்வதற்காக உள்ளே போனாள். பாட்டனும்பேத்தியும் முற்றத்தில் உட்கார்ந்தார்கள். திடிரென்று வள்ளி, "ஐயோ தாத்தா! இதெல்லாம்என்ன?" என்று கேட்டாள். முற்றத்தில் ஒரு பக்கத்தில் உலைக்களம் இருந்தது. அதன் அருகில்கத்திகளும் வாள்களும் வேல்களும் அடுக்கியிருந்தன. அவைகளைப் பார்த்து விட்டுத்தான் வள்ளிஅவ்விதம் கூச்சல் போட்டாள். "என்னவா! வாளும் வேலும் சூலமுந்தான். நீ எங்கேபார்த்திருக்கப் போகிறாய்? முன்காலத்தில்...." "இதெல்லாம் என்னத்திற்கு, தாத்தா?""என்னத்திற்காகவா? கோவிலில் வைத்து தூப தீபம் காட்டிக் கன்னத்தில் போட்டுக்கொள்வதற்காகத்தான்! கேள்வியைப் பார் கேள்வியை! தேங்காய்க் குலை சாய்ப்பது போல்எதிராளிகளின் தலைகளை வெட்டிச் சாய்ப்பதற்கு வாள், பகைவர்களின் வயிற்றைக் கிழித்துக்குடலை எடுத்து மாலையாய்ப் போட்டுக் கொள்வதற்கு வேல், தெரிந்ததா!" "ஐயையோ!பயமாயிருக்கிறதே!" என்று வள்ளி கூவினாள்.

"இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த நாட்டு ஆண்பிள்ளைகள்கூடஉன்னைப்போலேதான் ஆகிவிடுவார்கள். வாளையும் வேலையும் கொண்டு என்ன செய்கிறதுஎன்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வள்ளி! இந்தக்கேள்வி என்னுடைய பாட்டன்,முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா? அப்போது கொல்லுப் பட்டறையில்எல்லாம் வாளும் வேலும் சூலமும் செய்த வண்ணமாயிருப்பார்களாம். ஒவ்வொரு பட்டணத்திலும்கம்மாளத் தெரு தான் எப்போதும் 'ஜே ஜே' என்று இருக்குமாம். ராஜாக்களும் ராஜகுமாரர்களும்சேனாதிபதிகளும் கம்மாளனைத் தேடி வந்து கொண்டிருப்பார்களாம். என் அப்பன்காலத்திலேயே இதெல்லாம் போய்விட்டது. வாழைக்கொல்லை அரிவாள்களும் வண்டிக்குக்கடையாணிகளும், வண்டி மாட்டுக்குத் தார்குச்சிகளும் செய்து கம்மாளன் வயிறுவளர்க்கும்படிஆகிவிட்டது. என் வயதில் இப்போது தான் நான் வாளையும் வேலையும் கண்ணால்பார்க்கிறேன்.... ஆகா! இந்தக் கதைகளிலே மட்டும் முன்னைப் போல வலிவு இருந்தால்?இருபது வருஷத்துக்கு முன்னாலே இந்த யுத்தம் வந்திருக்கக் கூடாதா!"

"சரியாய்ப் போச்சு, தாத்தா! இவருக்கு நீ புத்தி சொல்லி திருப்புவாயாக்கும்என்றல்லவா பார்த்தேன்! யுத்தத்துக்குப் போகணும் என்று இவர் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்...." "பொன்னா! அவன் எங்கே யுத்தத்துக்குப் போகப் போகிறான் வள்ளி?பொன்னனாவது உன்னை விட்டு விட்டுப் போகவாவது! துடுப்புப் பிடித்த கை, வாளைப்பிடிக்குமா? பெண் மோகம் கொண்டவன் சண்டைக்குப் போவானா?" "அப்படி ஒன்றும் சொல்லவேண்டாம் தாத்தா! இவர் போகணும் போகணும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார்.மகாராஜாதான் வரக்கூடாது என்கிறார். இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க இவர் இருக்கவேணுமாம்." "அடடா! உன்னுடைய அப்பனும் சித்தப்பன்மார்களும் மட்டும் இப்போதுஇருந்தால், ஒவ்வொருவன் கையிலும் ஒரு வாளையும் வேலையும் கொடுத்து நான் அனுப்பமாட்டேனா? எல்லாரையும் ஒரே நாளில் காவேரியம்மன் பலி கொண்டுவிட வேண்டுமா?" என்றுசொல்லிக் கொண்டே கிழவன் பெருமூச்சுவிட்டான். வள்ளிக்கு அந்தப் பயங்கரமான சம்பவம்ஞாபகம் வந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு கிழவனையும் கிழவியையும் தவிர, குடும்பத்தார்அனைவரும் ஆற்றுக்கு அக்கரையில் நடந்த ஒரு கலியாணத்துக்குப் படகில் ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள்

நடு ஆற்றில் திடிரென்று ஒரு சூறாவளிக் காற்று அடித்தது படகு கவிழ்ந்துவிட்டது.அச்சமயம் கரையில் இருந்த பொன்னன் உடனே நதியில் குதித்து நீந்திப் போய்த் தண்ணீரில்விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன்றான். தெய்வ பத்தனத் தினால் வள்ளியை மட்டுந்தான்அவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் எல்லாரும் நதிக்குப் பலியானார்கள். கிழவன் மேலும்சொன்னான். "என் குலத்தை விளங்க வைக்க நீ ஒருத்தி தான் இருக்கிறாய். உன் வயிற்றில் ஒருகுழந்தை பிறந்துவிட்டால், பொன்னனை நானே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன் யுத்தத்துக்குப்போ" என்று. "யுத்தம் என்னத்திற்காக நடக்கிறது, தாத்தா! அதுதான் புரியவில்லை" என்றாள்வள்ளி. "யுத்தம் என்னத்திற்காகவா - மானம் ஒன்று இருக்கிறதே, அதுக்காகத் தான்! எருதுக்கொடிக்குப் புலிக் கொடி தாழ்ந்து போகலாமா? தொண்டை நாட்டுக்குச் சோழ நாடு பணிந்துபோகிறதா? இந்த அவமானத்தைப் போக்குவதற்காகத்தான்" "எருதுக்கொடி யாருடையது?""இது தெரியாதா உனக்கு? எருதுக் கொடி காஞ்சி பல்லவ ராஜாவினுடையது." "சிங்கக் கொடிஎன்று சொல்லு." "இல்லை, எருதுக் கொடி தான்." "நான் இன்றைக்குப் பார்த்தேன் தாத்தா!தூதர்களின் கொடியில் சிங்கந்தான் போட்டிருந்தது." "ஆமாம்; எருதுக் கொடியைச் சிங்கக்கொடியாக மாற்றிவிட்டார்கள். ஆனால் எருது பன்றியை ஜயித்து விட்டதால் சிங்கமாகிவிடுமா?" என்றான் கிழவன்.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா! விபரமாய்ச் சொல்லேன்" என்றாள் வள்ளி."சரி, அடியிலிருந்து சொல்கிறேன் கேள்!" என்று கிழவன் கதையை ஆரம்பித்தான். "நீ பிறந்தவருஷத்தில் இது நடந்தது. அப்போது காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டுகொண்டிருந்தார். அவருடைய வீரபராக்கிரமங்களைப் பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த உறையூருக்கும் அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின்ஞாபகார்த்தமாகத்தான் நமது மலையிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது.இப்படி இருக்கும் சமயத்தில் வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் - பெரியபடை திரட்டிக் கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம் பொங்கிவருவதுபோல் வந்த அந்தச் சைன்யத்துடன் யுத்தகளத்தில் நின்று போர் செய்ய மகேந்திரசக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட்டைக்குள் சைன்யத்துடன் பதுங்கிக்கொண்டார். கோட்டையைக் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப் பார்த்தான் புலிகேசி. அதில்பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி வந்தான். நமது கொள்ளிடத்தின்அக்கரைக்கு வந்துவிட்டான். அப்பப்பா! அப்போது இந்த உறையூர் பட்ட பாட்டை என்னவென்றுசொல்லுவேன்! நமது பார்த்திப மகாராஜா அப்போது பட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான்ஆகியிருந்தது. புலிகேசியை எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார்.

இதற்குள் வடக்கே புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டதுபோலிருந்தது. புலிகேசி கொள்ளிடத்தைத் தாண்டவேயில்லை திரும்பிப் போய்விட்டான்.போகும்போது அந்தக் கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்தஅட்டூழியங்களுக்கு அளவேயில்லையாம். ஊர்களையெல்லாம் சூறையாடிக் கொண்டும் தீ வைத்துக் கொண்டும் போனார்களாம். அதிலிருந்து மகேந்திர சக்கரவர்த்தியினுடைய புகழ் மங்கிவிட்டது. 'சளுக்கரின் பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்துவிட்டது' என்றுஜனங்கள் பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர சக்கரவர்த்திஅதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம சக்கரவர்த்தி பட்டதுக்குவந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததிலிருந்து புலிகேசியைப் பழிக்குப் பழி வாங்கிப் பல்லவகுலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார்.கடைசியில் ஆறு வருஷங்களுக்கு முன்பு பெரிய சைன்யத் தைத் திரட்டிக் கொண்டு வடக்கேபோனார்.

புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச்சாம்பலாக்கிவிட்டுத் திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த்தமாகப்பல்லவர்களின் ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவர்த்தி. சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார்.அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது. வள்ளி! அதற்குள்ளே...." இத்தனைநேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள், "அப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியுடன் நமதுமகாராஜா எதற்காக யுத்தம் செய்யப் போகிறார் தாத்தா!அவருடன் சிநேகமாயிருந்தாலென்ன?"என்று கேட்டாள். "அடி பைத்தியக்காரி..." என்று கிழவன் மறுமொழி சொல்ல ஆரம்பித்தான்.அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம் கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது."வீரபத்திர ஆச்சாரி!" என்று யாரோ அதிகாரக் குரலில் கூப்பிட்டார்கள். உடன் கிழவன், "அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது,சமையற்கட்டுக்குள் போ, அவன் தொலைந்ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்றான்.

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html

Comments