தெரிய வேண்டும் ஆட்டிசத்தை - மருத்துவ தொடர் -பாகம் 05.


சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-1



நமக்கு சிறுவயது முதல் கற்பிக்கப்பட்ட பழக்கங்களில் ஒன்று தான் தீபாவளி மாதிரியான பண்டிகை நாட்களில் வெடிவெடித்துக்கொண்டாடுவது. பண்டிகைக்காலம் என்றிலாமல் இப்போதெல்லாம் இழவு ஊர்வலத்தின் போதும், கிரிக்கெட்டில் வெற்றி கிடைக்கின்ற போதும் ஏன்.. நம் மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகக் கூட பட்டாசு வெடிப்பதை சொல்ல முடியும்.

ஆனால்.. இந்த பட்டாசு வெடிச்சத்தம் சிலரை நிலைகுலைய வைக்கிறது, அதுவும் அவர்களின் இயல்பு நிலை மாறி, கோபமூட்டி, கட்டுக்குள் அடங்காத வெறிகொண்டவர்களாகவும், தூரத்தில் கேட்கும் பட்டாசு ஒலிக்குக்கூட தூக்கித்தூக்கி போடுபவர்களாகவும் சிலர் இருக்கிறார்கள் என்பது நம்மில்பலரும் அறியாத ஒரு பகுதி. தன்முனைப்புக் குறைபாடு என்று சொல்லப்படும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த பட்டாசுகளின் அதீத ஒலியுடன் இணைந்து போக முடியாமல் அவதிப்படுபவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஆட்டிச பாதிப்புடைய குழந்தைகளின் பெற்றோர்கள் சிலரை ஒரு தெரபி செண்டரில் வைத்துப் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். அவர்களில் அநேகரும், ‘இருக்கிறதுலயே ரொம்பவும் ஹாரபிள் பெஸ்டிவெல்னா.. அது தீபாவளி தான் சார். தீபாவளி நெருங்க நெருங்க.. பசங்களுக்கு உடம்பு நடுங்குதோ இல்லையே எங்களுக்கு நடுங்க ஆரம்பிச்சுடுது’ன்னு ஒரே மாதிரியாக சொன்னார்கள்.

பொதுவாகவே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவருமே சென்சரி பிரச்சனைகளாலும் பாதிக்கப்படிருக்கிறார்கள் என்பது உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளும் குறைபாடுகளும் இருக்கும். ஆனால்.. ஆடிட்டிரி சென்சரி பிரச்சனைகள் அனேக குழந்தைகளுக்கு இருப்பதாகவே தெரிகிறது.


அது சரி.. அது என்ன சென்சரி என்ற கேள்வி எழலாம். சென்சரி டயட் என்று இதனை சொல்கிறார்கள். மருத்துவர்கள், தெரபிஸ்டுகள், ஆட்டிசக்குழந்தைகளின் பெற்றோர் என பலருக்கும் இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதற்கு நான் அறிந்த ஒரு சம்பவத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். அப்புறம்.. சென்சரி பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சம்பவம்-1

நிம்மிக்கு ஏழு வயது. பார்க்கச் செல்லமாக இருப்பாள். நல்ல புத்திசாலியும் கூட. ஆங்கில எழுத்துக்கள் அத்தனையும் அத்துப்படி. பேனா பிடித்து எழுத வராதே தவிர, ஒரு முறை கண்ணால் பார்த்த எந்த பெயரையும், அழகாய் டைப் செய்துவிடக்கூடியவள். ஆனால் இக்குழந்தைக்கு ஆட்டிசம் என்பதை அவளின் பெற்றோர் உணர்ந்துகொண்டது நான்கு வயதில். அதன் பிறகு தொடர்ந்து தெரபிகளும், மருத்துமாத்திரைகள் என்று பணத்தை அள்ளி விட்டுக்கொண்டிருந்தனர் அவர்கள். பெற்றோர் இருவரும் இந்தியாவில் இருக்கும் வெளிநாட்டு வங்கியில் பெரும் அதிகாரிகள். நான் நிம்மியைக்காண அவர்களைக் வீட்டுக்கு போயிருந்த போது, நிம்மி தரையில் விழுந்து அழுது பயங்கரமாக கத்திக்கொண்டிருந்தாள். அம்மாவும், அப்பாவும் அவளை சமாதானப்படுத்த முயன்றுகொண்டிருந்தார்கள். ஆனால்.. நிம்மியின் கோபத்திற்கு முன் யாராலும் நிற்கமுடியவில்லை.கொஞ்ச நேரத்திற்கு பிறகு எழுந்து நின்ற நிம்மி, நீள்வட்ட சுற்றுப்பாதையில் ஓடத்தொடங்கினாள். பத்து நிமிடங்கள் சுற்றிச்சுற்றி ஓடியபின் அவளாகவே சமாதானம் அடைந்துவிட்டாள்.

அப்புறம் அவர்களோடு, பேசிக்கொண்டிருக்கும் போது ” நிம்மியின் சென்சரி டயட்டுக்கு என்ன செய்றீங்க”னு கேட்டேன். அவர்களுக்கு அதன் பொருள் புரியவில்லை. நான் சொன்னேன், ‘இக்குழந்தைகளுக்கு சென்சரி பிரச்சனைகள் மிகவும் முக்கியனாதாக சொல்லுறாங்க. இவங்களுக்கு அதுல கொஞ்சம் தீர்வு கிடைச்சாலே பாதி ப்ராபளம் கிடையாது. பக்கத்துல ஏதுனா.. பார்க் இருந்தா அழைச்சுப்போங்க. அங்கே இருக்குற ஊஞ்சல் இவங்களுக்கு ரொம்பவும் நல்லது’ன்னு நான் சொன்னதும், நிம்மியின் அப்பா சொன்னாது தான் பயங்கர அதிர்ச்சி.

‘மொதல்ல கூட்டிகிட்டு போனோம். ஆனா.. இவ அங்க இருக்குற ஊஞ்சல்ல உட்கார்ந்துட்டா.. அப்புறம் இறங்கவே மாட்டா.. அதுனாலயே கூட்டிகிட்டு போறதில்லை’ன்னு சொனார்.

உண்மையில் ஆட்டிச குழந்தைகளில் பலர் தங்களின் சென்சரித்தேவைகளை அறிந்து வைத்திருப்பவர்களாகவே இருக்கிறார்கள். தங்களுக்கு தேவைப்படும் வரை, தெரபிபலூன் மீது குதிப்பதோ, ஊஞ்சல் ஆடுவதோ இவர்களை சமன் நிலைக்கு கொண்டுவரும் என்று எனக்குத் தெரிந்ததை எடுத்துச்சொல்லி அவர்களுக்கு புரியவைத்தேன்.

தொடரும்

நன்றி : http://216.185.103.157/~balabhar/blog/?p=1139

Comments