வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்குவந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு"தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப்பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள். "ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத் தானே நமது பழையசேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று?" என்றான் கிழவன். "சேச்சே! நான்சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை எதற்காக என்று தெரியாமல்தானேகேட்டேன்!" என்று வள்ளி சொன்ன போது அவள் கண்களில் நீர்ததும்பிற்று. "ஆமாம், வள்ளி!அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச்சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்துவிட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காகநரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறுவருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமதுபார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலைஅனுப்பினார்.
அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாகஅன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும்,சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்திஅனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல்படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம்அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி! இப்போதுநீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம்சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத்தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா? அந்த அவமானத்தைச்சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக்கொண்டிருக்க வேண்டும்?" "அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா! நமதுபார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப்பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள்.
இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா!நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா....?" "ஆமாம்; நமது மகாராஜா ரொம்பநல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவுஇடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்!" "என்னசொல்லுகிறாய், தாத்தா?" சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமதுமகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம்தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக்கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜாசெத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப்பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர்பிறக்கும் வரையில் இவன்தான் 'யுவராஜா'வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோஇவனிடம் அன்பு காட்டிக் கௌரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார்.இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?" "இவனோடுஉனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்னவேண்டிக் கிடந்தது?" "உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!" என்றான் கிழவன். வள்ளிதிடுக்கிட்டு "என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே கதை!" என்றாள்.
"உன்னால் ஏற்பட்டதுதான் இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல்வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி! காலம் ரொம்ப அபாயமான காலம்.நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்பபூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன்விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்." "என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய்? இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?" என்று வள்ளி கேட்டாள். "நான்சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக்கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்..." "அவன் தலையிலே இடி விழ!"என்றாள் வள்ளி. "அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா என் தலையிலே அல்லவாவிழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்துவரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களைஅழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு போவதாக இருந்தான் இதுவும்எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால்ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப்போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன்அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள்.
சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்...." இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன்பெருமூச்சு விட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான். வள்ளி,"இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா? இவன்தானா என்அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டாள்."நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன்வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச்சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். 'நீ பெரியசக்கரவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு"என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்டஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக்கொண்டிருக்கிறான்." "இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது,தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன்? நீதான் என்னைக்காப்பாற்றவேணும்?" என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.
கிழவன், "பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன் சண்டைக்குப்போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்குநேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான்இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம்என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்!" என்றான். அச்சமயம் வாசலில் முரசடிக்கும்ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- "வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம் வருகுது! சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில் சேர்வதற்குமீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒருதாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள்எல்லாரும் வரலாம். வெற்றிவேல்! வீரவேல்!" - இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர்அதிரும்படியாக எழுந்தது. இந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப்பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க்கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர்.
இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும்கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும்கிழவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- "வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும்காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறுயாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்" என்றான். தெற்கு வானத்தில் திடிரென்று ஒருநட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதிவேகமாகப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது. இதை பார்த்த வள்ளிக்குஉடம்பு சிலிர்த்தது. அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல்சிலிர்த்தான். அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வானவெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான்.உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்றுசொப்பன லோகம்போல் காட்சியளித்தன. "ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்"என்று சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும்உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளிசிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடை வீதிகளும், பலவகைத்தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன.
சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால்பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான். மகாராஜா, சுவாமி தரிசனம்செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்குஎன்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான்சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை,மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து,விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக் கொள்ளும்படிவேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதேபொன்னனுக்கும் இரத்தம் கொதித்தது. "சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனைநாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கிஅந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறைபொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான்மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா?- இவ்விதம்யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.
தொடரும்
நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html
Comments
Post a Comment