தெரிய வேண்டும் ஆட்டிசத்தை- மருத்துவ தொடர்- பாகம் 06.


சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-2

”இப்படி சமநிலை குலைகையில் நான் மிகவும் வினோதமாக நடந்து கொள்கிறேன். ஒரே நேரத்தில் 40 தொலைகாட்சி அலைவரிசைகளை ஒருசேரப் பார்த்தால் எப்படியிருக்குமோ அது போல் குழப்பமாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறேன்” – சென்சரி ஓவர் லோட் எனும் நிலையைப் பற்றிய ஒரு ஆட்டிச பாதிப்புடையவரின் வாக்குமூலம் இது. நம்மைப் போல சராசரி வாழ்கை வாழும் மனிதர்களுக்கு இந்நிலையைக் கற்பனை செய்து கொள்வது கூட சிரமம்தான்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் மூளையுடன் கொண்டுள்ள தொடர்பை சென்சரி என்று சொல்லலாம். அவ்வைந்து புலன்களைத் தவிர்த்த சில விஷயங்களும் இருக்கிறது என்றாலும் முதன்மையானவை ஐம்புலன்கள் வழியே நமக்கு கிடைக்கும் உள்ளீடுகள்தான்.

எந்தவொரு பொருளையும் அல்லது விஷயத்தையும் மூளை உணர்வது கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் வழியே அவை தரும் அடிப்படைத் தகவல்களை பரிசீலிப்பதன் மூலம் தான். அத்தகவல்களின் அடிப்படையில்தான் நாம் மேற்கொண்டு சிந்தித்து, உணர்ச்சி பூர்வமாகவும் உடல் மூலமாகவும் அத்தகவல்/செய்கைக்கு எதிர்வினையாற்றுகிறோம். சாதாரணமாய் இவையெல்லாம் அனிச்சையாகவே நடக்கும் என்பதால் நாம் இவற்றை பொருட்படுத்துவதில்லை.

ஆனால் ஆட்டிச பாதிப்பு உடையோருக்கு இந்த சென்சரி தகவல்களைப் பெறுவதிலும், அவற்றை பகுப்பாய்வு செய்து புரிந்து கொள்வதிலும் மிகுந்த சிக்கல்கள் உண்டு. அச்சிக்கலில் மாட்டியவர்கள், மிகுந்த மனப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் உணர்வார்கள். ஒரு சில ஆட்டிசக்குழந்தைகள் உடல் ரீதியிலான வலியையும் உணர்வதுண்டு. இது அவர்களின் நடத்தையை உடனடியாக பாதிக்கும்.

ஐம்புலன்களின் மூலம் நம்மை அடையும் தொடுதல், கேட்டல், பார்த்தல், முகர்தல், சுவைத்தல் என்பது தவிர இன்னும் இரு வகையான சென்சரிகளும் உண்டு. அவையும் முக்கியமானவை தான்.

1. அவை சமநிலை(balance or ‘vestibular’)

2. உடலை உணரும் திறன்(body awareness or ‘proprioception’).

ஆட்டிசக் குழந்தைகள் இந்த ஏழு வகை உணர்வுகளுக்கும் மிகையாகவோ குறைவாகவோ எதிர்வினை புரிகின்றவர்களாக இருக்கின்றனர். (over- or under-sensitive /’hypersensitive’ or ‘hyposensitive’ ).

முந்தைய கட்டுரைகளில் சொன்னது போல ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமிலிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரின் பாதிப்புகளும் பிரத்யேகமானவை. எனவே இங்கே குறிப்பிடப் போகும் எல்லா சிக்கல்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டுமென்பதில்லை.

சென்சரி பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து, என் ஆய்வுக்கு உதவிக்கொண்டிருக்கும் மருத்தவர்களிடம், தெரபிஸ்ட்டுகளிடமும் பேசியபோது, அடுக்கடுக்காய் பல நிலைகள் இருப்பதை உணரமுடிந்தது. அவர்கள் சொன்ன விசயங்களையும், கொடுத்த சுட்டிகளின் வழியும் இக்கட்டுரையை தமிழில் எளிமைப்படுத்தி எழுத முனைந்துள்ளேன்.

1. பார்வை

2. சத்தம்

3. தொடுகை

4. சுவை

5. முகர்தல்

6. சமநிலை

7. உடலை உணரும் திறன்

மேற்கண்ட ஏழும் மிகவும் முக்கியமான விஷயங்கள் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு வகை சென்சரியிலும் சாத்தியமான எல்லா சிக்கல்களையும், இருவேறு படி நிலைகளையும் ஒரளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.

தொடரும்

நன்றி : http://216.185.103.157/~balabhar/blog/?p=1147


Comments