பார்த்திபன் கனவு 12-புதினம்- இரண்டாம் பாகம்-அத்தியாயம் 02- வம்புக்கார வள்ளி.



பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடைகள்செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில்சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டுவந்து சிவனடியார் முன்புவைத்தாள். அவர் மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார். "வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?" என்று கேட்டார் சிவனடியார்."இளவரசர் பக்கத்தில் இருக்கும் போதெல்லாம் தேவி தைரியமாகத்தான் இருக்கிறார். அவர்அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்" என்றாள் வள்ளி. பிறகு, "சுவாமி!இதெல்லாம் எப்படித்தான் முடியும்? இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்" என்றாள்."எனக்கென்ன தெரியும் அம்மா! கடவு ளுடைய சித்தம் எப்படியோ அப்படித் தான் நடக்கும்.உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?" "ஜனங்கள் எல்லோரும் இளவரசர் பக்கந்தான் இருக்கிறார்கள். பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறார்கள். பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சுகுழந்தைகூடக் கிடையாது. சுவாமி! அந்தச் செய்தியைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்குமுன்னால் எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக்காரரும் இதுவரையில் லட்சம் ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்" என்றாள்.

நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன். இருக்கட்டும்; மாரப்பபூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம் ஜோஸியம் கேட்க அவன் வருவதுண்டா?" என்று கேட்டார் சிவனடியார். "ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்"என்றாள் வள்ளி. உடனே எதையோ நினைத் துக் கொண்டவள் போல் இடி இடி என்றுசிரித்தாள். சிவனடியார் "என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச் சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?" என்றார். "இல்லை சுவாமி! மாரப்ப பூபதியின் ஆசை இன்ன தென்று உங்களுக்குத் தெரியாதா? காஞ்சி சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப்போகிறானாம்! கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியது தான் பாக்கி" என்றாள்.சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம் படர்ந்தது போல் தோன்றியது.உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு "ஆமாம்; உனக்கென்ன அதில் அவ்வளவுசிரிப்பு?" என்று கேட்டார். "சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன் எங்கே?உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே. நரசிம்ம பல்லவரின்மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?" என்றாள் வள்ளி. "ஆனால், உன்பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய் அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாதபொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?" என்றார் சிவனடியார். "அப்படிச்சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்;சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்றுவள்ளி ஆவலுடன் கேட்டாள்.

"சிவனடியார் புன்னகையுடன் பார்த்திருக்கிறேன் அம்மா, பார்த்திருக்கிறேன். ஆனால்அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான் துறவி!" என்றார். "எங்கள் ராணியை விட அழகாயிருப்பாளா? சொல்லுங்கள்." "உங்கள் ராணி அவ்வளவு அழகா என்ன?" "எங்கள்ராணியா? இல்லை! இல்லை! எங்கள் ராணி அழகேயில்லை. சுத்த அவலட்சணம், உங்கள்சக்கரவர்த்தி மகள்தான் ரதி..." "என்ன வள்ளி, இப்படிக் கோபித்துக் கொள்கிறாய்?" "பின்னே என்ன? எங்கள் ராணியை நீங்கள் எத்தனையோ தடவை பார்த்திருந்தும் இப்படிக் கேட்கிறீர்களே? அருள்மொழித் தேவியைப் போல் அழகானவர் இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது...." "நான்தான் சொன்னேனே, அம்மா! ஆண்டியாகிய எனக்கு அழகுஎன்ன தெரியும். அவலட் சணந்தான் என்ன தெரியும்?" "உங்களுக்குத் தெரியாது என்றுதான் தெரிகிறதே! ஆனால் காஞ்சி சக்கர வர்த்தியை எப்போதாவது பார்த்தால் கேளுங்கள்; அவர் சொல்லுவார். அருள்மொழித் தேவிக்கும் பார்த்திப மகாராஜாவுக்கும் கலியாணம் ஆவதற்கு முன்னால் நடந்த செய்தி உங்களுக்குத் தெரியுமா? அருள்மொழித் தேவியின் அழகைப் பற்றி நரசிம்மவர்மர் கேள்விப்பட்டு "அருள்மொழியைக் கல்யாணம் செய்து கொண்டால் செய்துகொள்வேன்; இல்லாவிட்டால் தலையை மொட்டையடித்துக் கொண்டு புத்த சந்நியாசியாகப்போய் விடுவேன்" என்று பிடிவாதம் செய்தார். ஆனால் அருள்மொழித் தேவிக்கு அதற்கு முன்பே பார்த்திப மகாராஜாவுடன் கலியாணம் நிச்சயமாகி விட்டது. இன்னொரு புருஷனை மனதினால்கூட நினைக்கமாட்டேன் என்று கண்டிப்பாய்ச் சொல்லி, கடைசியில் பார்த்திபமகாராஜாவையே கலியாணம் செய்து கொண்டார்."

சிவனடியார் முகத்தில் மந்தகாசம் தவழ, "ஆமாம் அம்மா! நரசிம்மவர்மர் அப்புறம் என்னசெய்தார்? தலையை மொட்டை அடித்துக்கொண்டு பௌத்த பிக்ஷ¤ ஆகிவிட்டாரா?" என்றுகேட்டார். "ஆண் பிள்ளைகள் சமாசாரம் கேட்க வேண்டுமா? சுவாமி! அதிலும் ராஜாக்கள்,சக்கரவர்த்திகள் என்றால் மனது ஒரே நிலையில் நிற்குமா? அப்புறம் அவர் பாண்டியராஜகுமாரியைக் கல்யாணம் செய்து கொண்டார். இன்னும் எத்தனை பேரோ, யார் கண்டது?நான் மட்டும் ராஜகுமாரியாய்ப் பிறந்திருந்தால் எந்த ராஜாவையும் கலியாணம் செய்து கொள்ளமாட்டேன். அரண்மனையில் பத்துச் சக்களத்திகளோடு இருப்பதைக் காட்டிலும், கூரைக்குடிசையில் ஒருத்தியாயிருப்பது மேலில்லையா?" சிவனடியார் கலகலவென்று சிரித்தார். "நீசொல்வது நிஜந்தான், அம்மா! ஆனால் நரசிம்மவர்மன் நீ நினைப்பது போல் அவ்வளவு பொல்லாதவனல்ல..." என்றார். "இருக்கட்டும் சுவாமி! அவர் நல்லவராகவே இருக்கட்டும்.அவர்தான் உங்களுக்கு ரொம்ப வேண்டி யவர் போலிருக்கிறதே! ஒரு காரியம் செய்யுங்களேன்?சக்கரவர்த்தியின் மகளை எங்கள் இளவரசருக்குக் கலியாணம் செய்து வைத்து விடுங்களேன்!சண்டை, சச்சரவு எல்லாம் தீர்ந்து சமாதானம் ஆகிவிடட்டுமே." "நல்ல யோசனைதான் வள்ளி!ஆனால் என்னால் நடக்கக்கூடிய காரியம் அல்ல. நீ வேண்டுமானால் சக்கர வர்த்தியைப் பார்த்துச் சொல்லேன்...." "நான் சக்கரவர்த்தியை எப்போதாவது பார்த்தால் நிச்சயமாய்ச்சொல்லத்தான் போகிறேன் எனக்கு என்ன பயம்?" என்றாள். அச்சமயத்தில் படகு கரைக்கு வந்துசேர்ந்த சத்தம் கேட்டது. வள்ளி, "படகு வந்துவிட்டது" என்று சொல்லிக் கொண்டு குடிசைக்குவெளியே வந்தாள்.

தொடரும் 

நன்றி :http://priyanthandotscrapbook.blogspot.fr/2014/01/blog-post_21.html


Comments