சென்சரி பிரச்சனைகள் (Sensory Problems) பாகம்-4
சென்சரி பிரச்சனைகள் உடையவர்களுக்கு உதவ சில வழிமுறைகள்:
இந்த வழிமுறைகள் எல்லாமே எல்லாக் குழந்தைகளுக்கும் பொருந்துவன அல்ல. தெரபிஸ்ட், பெற்றோர் ஆகியோர் கலந்து பேசி குழந்தையின் தேவைக்கேற்ப இங்கே கீழே தரப்பட்டுள்ள விஷயங்களையோ அல்லது அது போன்ற அவர்கள் அறிவுறுத்தும் மற்ற செயல்களையோ முயற்சிக்கலாம்.
பார்வை தொடர்பான சென்சரி உடையோருக்கு:
ஃபுளோரசண்ட் விளக்குகளை தவிர்க்கலாம்.
குளிர் கண்ணாடி அணிய பழக்கலாம்.
திரைச்சீலைகளை பயன்படுத்தி குழந்தைக்கு உறுத்தாத அளவுக்கு ஒளியை குறைக்கலாம்.
ஒலி தொடர்பான சென்சரி சிக்கல்களுக்கு:
கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்து வெளி சத்தம் வீட்டின் உள்ளே வராது தடுத்தல்
சத்தம் அதிகமான இடங்களுக்கு போவதற்கு முன்னரே குழந்தையை மனதளவில் அதற்கு தயார் செய்தல்
காதுகளில் ஒலிவாங்கி(ear plug) பொருத்திக் கொண்டு இசை கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல்.
தொடுகை உணர்வு தொடர்பான சிக்கல்களுக்கு:
அதிக எடை கொண்ட போர்வைகளையோ ஸ்லீப்பிங்க் பேகுகளையோ உபயோகிக்கலாம்.
குழந்தையை தொடுவதற்கு முன் அதற்கு அதை முன்கூட்டியே சொல்லுங்கள். எப்போதுமே முன்புறத்திலிருந்து மட்டும் குழந்தையை அணுகுங்கள். -இவையெல்லாம் நம் தொடுகைக்கு குழந்தை தன்னை தயார் செய்து கொள்ள வாய்ப்புக்கொடுக்கவே.
அணைத்தல் என்பது குழந்தைக்கு வலி ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து அதை தவிர்க்கவும்.
வெவ்வேறு வகையான கட்டமைப்பு(texture) உடைய பொருட்களை மெல்ல மெல்ல பழக்குங்கள். (சிலருக்கு கொழகொழ(உம்:அல்வா, மைதா மாவு உருண்டை, சகதி, களிமண்) என்ற பொருட்கள் பிடிக்காமல் இருக்கலம். வேறு சிலருக்கு ஸாஃப்ட்டான(உம்:பஞ்சு, பூத்துண்டு, வெல்வெட் துணி) பொருட்கள், சொர சொரப்பானவையும்(உம்:சாக்பீஸ், சிமிண்ட் தளம், கருங்கல் தளம் ) பிடிக்காமல் இருக்கும்.)
தானே பல் துலக்கவும், தலை வாரவும் கற்று கொடுத்துவிட்டால் தங்கள் விருப்பம் போல அவர்களே அதையெல்லாம் செய்து கொள்வார்கள். நம் தொடுகையை தாங்க வேண்டியிருக்காது.
முகர்தல் தொடர்பான உணர்வு பிரச்சனைகளுக்கு:
முடிந்தவரை வாசனை இல்லாத டிட்டெர்ஜெண்ட், ஷாம்பூ போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
அவர்களுக்கு பிடிக்காத வாசனையை போக்க வேறு ஏதேனும் நறுமணத்தை பரப்பலாம் – (உம்:சாம்பிராணி, அஷ்டகந்தம் போல)
சமநிலை உணர்வை சரி செய்ய:
ஊஞ்சல், சீசாப் பலகை, வளைவான அடிப்பாகமுள்ள குதிரை பொம்மை போன்றவற்றில் விளையாட ஊக்குவிக்கலாம். இவை எல்லாமே குழந்தைகளின் சமநிலை தொடர்பான உணர்ச்சிகளை சமன் செய்யக் கூடியவை.
வேலைகளை துண்டு துண்டாக பிரித்து, ஒவ்வொன்றாக செய்ய ஊக்குவிக்கலாம்.
உடல் பற்றிய தன்னுணர்வு சிக்கல்களுக்கு:
அவர்களை நடமாட வசதியான இடத்தில் அமருமாறு பார்த்துக் கொள்வது – ஏதேனும் ஒரு மூலையில் உட்காருவதற்கு பதில் அறையின் மையத்தில் உள்ள நாற்காலியில் உட்காரச் செய்யலாம்.
தரையில் வண்ண நாடாக்களை ஒட்டி வைத்து நடமாடுவதற்கான பாதையை உணர்த்தலாம்.
எப்போதும் ஒருவரிடமிருந்து ஒரு கை அளவு தூரத்தில் நின்றே பேச வேண்டுமென்று பழக்கலாம். எனவே கையை நீட்டி, அது இடிக்காத தூரத்தில் நின்று உரையாட பழகுவர்.
பேலன்ஸ் போர்ட் போன்ற சிறு கருவிகளை வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கலாம்.
தொடரும்
நன்றி : http://blog.balabharathi.net/?page_id=25
Comments
Post a Comment