" வேங்கையின் மைந்தன் " -புதினம் -முன்னுரை .
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தைய ராயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனதிலிருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ”
- பாரதி 

ஆம்; ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தமிழ்த் திருநாடு
பெற்றிருந்த பேற்றை நினைக்கும் போது நம்முடைய மனம் பொங்கிப்பூரிக்கின்றது. நெஞ்சு பெருமிதத்தால்விம்முகின்றது.‘எந்தாய் வாழ்க! எந்தாய் வாழ்க!’ என்று உள்ளம் குளிர வாய் வாழ்த்தத் துடிக்கின்றது. கங்கை வளநாட்டிலே தமிழரின் புகழ் மண்டி வளர்ந்தது. கடல் கடந்த கடாரத்திலும், ஸ்ரீவிஐயத்திலும், பழந்தீவு பன்னீராயிரத்திலும், ஈழத்தின் எண்திசையிலும் அவர் பெருமையே பேசப்பெற்றது. தமிழகத்தின் தனிக்கொடியாகச் சோழர்களின் புலிக்கொடி இந்தப் பாரெங்கும் பட்டொளி வீசிப்பறந்த நம்முடைய மாபெரும் பொற்காலம் அது.பிற்காலச் சோழர்களில் தனித்தன்மை பெற்றுத் தன்னிகரில்லாமல் திகழ்ந்த மாவீரர் இராஜராஜ சோழர், வீரத்தில் வேங்கையாகவும் அரசியல்பெருந்தன்மையில் சிங்கமாகவும் விளங்கியவர். வேங்கையின் மைந்தன் இராஜேந்திரரோ தம் தந்தை அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் மிக
உயர்ந்த மாளிகையை எழுப்பியவர். அந்தத் தமிழ் சாம்ராஜ்ய மாளிகைக்கோபுரங்களில் எண்ணற்ற வெற்றிப் பொற்கலசங்களை ஏற்றி வைத்தவர். தமிழ்ச் சாதி இந்தத் தரணி எங்கும் செருக்கோடு மிடுக்கு நடைபோட்ட
உன்னதமான காலம் அது.

மாமன்னர் இராஜேந்திரரின் வாழ்க்கையும் அவர் உருவாக்கிய பொற்காலமும், எனக்கு இந்தக் கதையை எழுதுவதற்கு உற்சாகம் தருகின்றன. அந்தப் பேரரசர்தாம் இந்தக் கதையின் நடு நாயகமாக விளங்குகிறார்.
என்றாலும் இதன் கதாநாயகன் சரித்திரச் சான்றுகளின் இடைவெளிக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு வீர இளைஞன், கொடும்பாளூர் வேளிர் குலக்கொழுந்தான தென்னவன் இளங்கோவேள்.

சரித்திரச் சான்றுகள், இராஜேந்திரர் தம் தந்தையிடமிருந்து ஆட்சிப்பொறுப்பேற்று மணி மகுடம் புனைந்து கொண்ட காலத்தில் அவருக்குச் சுமார் ஐம்பது வயதென்று கூறுகின்றன. அவர் ஆட்சியின் மாபெரும் வரலாற்று நிகழ்ச்சிகள் இன்னும் சில ஆண்டுகள் சென்றே நடைபெற்றிருக்கின்றன.ஆகவே அந்த மன்னர் பெருமகளை இளம் கதைத் தலைவராக வைத்துக்கொண்டு கற்பனைகளைச் சூழவிட்டால், அவருடைய பெருமைக்கு மாசாகுமே என்று அஞ்சுகிறேன். எனினும் இந்தச் சரித்திரக் கற்பனையின் பின்னணியில்
தமக்கே இயல்பான இமயத்தின் கம்பீரத்துடன் அந்த வேங்கையின் மைந்தன்
பவனி வருகிறார்.

சோழர்களின் புலிக்கொடியைத் தமிழகத்தின் பொதுக்கொடியாக ஏந்திக்கொண்டு திக்கெட்டிலும் பாய்ந்து சென்றனர் லட்சக்கணக்கான மாவீரர்கள். அத்தகைய வீரர்களில் ஒருவனே இளைஞன் தென்னவன்
இளங்கோவேள். சோழர்களுக்காகவே போராடித் தியாகம் புரிந்த கொடும்பாளூர்ப் பரம்பரையின் வழித்தோன்றல் அவன். இராஜேந்திரரைப்பெற்றெடுத்த வீரத்தாய் வானவன் மாதேவியை எந்தக் கொடும்பாளூர்வேளிர்குலம் பெற்றெடுத்ததோ அதே குலம்தான் இளங்கோவையும்பெற்றெடுத்தது.

இளங்கோவேளின் இலட்சியக் கனவுகள், அவன் புகுந்த போர்க்களங்கள், அவனது வீரம், காதல் முதலிய அகப்புறப் போராட்டங்கள் இவற்றையே நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

இராஜேந்திரரின் முதற் புதல்வி அருள் மொழி நங்கை அவனுக்கு முறைப்பெண்தான். ஆனால் உறவு முறையும் அசர முறையும் ஒன்றாகுமா? மற்றொரு பெண், சோழர் குலத்தையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் வெறுத்து ஒதுக்கும் குலத்தில் பிறந்த ரோகிணி. அப்படியிருந்தும் ஏன் அவளால் இளங்கோவை வெறுக்க முடியவில்லை? ஏன் ஒதுக்க முடியவில்லை?

சிலப்பதிகாரக் காலத்துக்கு முன்பிருந்தே பெருமையுடன் திகழ்ந்த பெரும்நகரம் கொடும்பாளூர். சோழநாட்டிலிருந்து பாண்டியநாடு செல்லும் சாலையில் இரன்டு நாடுகளுக்கும் எல்லையை வகுத்து விட்டு. இடையில் வளர்ந்த சிற்றரசன் தலைநகரம் அது. காலங்காலமாக அதை ஆண்டு வந்த வேளிர்குல மக்கள் எத்தனை எத்தனையோ வெற்றி தோல்விகளை கண்டிருக்கிறார்கள். அவர்கள் நன்றாக வாழ்ந்தபோதெல்லாம் தமிழ் மொழியும் வாழ்ந்தது. வள்ளல்தன்மையும் வளர்ந்தது; புலவர் பெருமக்களும் பெருகினர்.

சங்க காலம் தொட்டு இலக்கியத்திலும் பிற்காலத்தின் வரலாற்றிலும்அழியாப் பெயர் பெற்ற கொடும்பை மாநகரையும், இராஜேந்திரரின் வெற்றிச்சின்னமான கங்கை கொண்ட சோழபுரத்தையும், சரித்திரக் கற்பனைகளைக்கிளறும் வேறு சில இடங்களையும் நேரில் சென்று பார்த்தேன். கொடும்பாளூரில் வேளிர்குல வீரர்கள் உலவிய இடங்களில் உலவினேன். கங்கை கொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர மாமன்னர் மிதித்த தமிழ்மண்ணை மிதித்தேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நகரங்கள்எப்படியிருந்திருக்கக் கூடும் என்று கற்பனை செய்து பார்த்தேன். எங்கோவானத்தின் உச்சியில் நான் மிதப்பது போல் தோன்றியது. இன்றைய நிலையை உற்று நோக்கினேன். இரண்டு சொட்டுக் கண்ணீர் மணிகள் என் விழிகளில்திரண்டன. அவற்றை அரும்பாடுபட்டு என் இதயத்திலே தேக்கி வைத்துக்கொண்டேன். அந்தக் கண்ணீர் சொல்லும் கதையே இந்த ‘வேங்கையின்மைந்தன்.’ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கதையாக இதை
எழுதப்புகுந்தாலும் இன்றைய வாசகர்களுக்காக எழுதுவகை நான் மறந்துவிடவில்லை. முற்றிலும் வரலாற்றுப் பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும்மட்டிலுமே கொண்ட சரித்திரக் கதையல்ல இது. வரலாறு தழுவிய கற்பனைக்கதை. கதாபாத்திரங்களில் சிலர் வரலாற்று நூல்களில் வாழ்பவர்கள். இன்னும்சிலர் இக்கதையில் மட்டும் வாழ வந்திருப்பவர்கள். சரித்திரச் சான்றுகளைஎன் கற்பனைக்குத் தேவையான அளவுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மேலும்சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தக்க சான்றுகள் கிடைக்காமையால் சிற்சில
இடைவெளிகளை இன்னும் விட்டு வைத்திருக்கிறார்களல்லவா? அந்தஇடைவெளிகளின் வழியே இக்கற்பனையின் சில கொடிகளைப் படரச்செய்திருக்கிறேன். வரலாற்று ஆசிரியர்களும் மாணவர்களும் கதாசிரியரின்மனோ தர்மத்துக்கு மதிப்பளித்து இதை வரவேற்பார்கள் என்றே நம்புகிறேன்.

தமிழ்த் திருநாட்டை மீண்டும் பொன்விளையும் பூமியாக. புகழ் பெருக்கும்தாயகமாக, அன்பும் அறிவும், அருளும் மலரும் கலைச் சோலையாகஉருவாக்க வேண்டுமென்ற ஆவலை வாசகர்களில் சிலரிடமாவது இந்தக் கதைதூண்டிவிடுமானால் அதுவே எனது நோக்கத்தின் பயனாகும்.

அகிலன் 

Comments