எல்லோருக்குமிருக்கும் வானம்- சிறுகதை - யோ.கர்ணன்.
 


இன்றைக்குத்தான் இப்பிடியொரு கண்றாவிக்குள்ள மாட்டுப் பட்டிருக்கிறன். இதைக் கருமம் என்று சொல்லவும் ஏலாதுதான். சிலர் சொர்க்கமென்று சொல்லுகினம். சரி ஏதோ ஒரு கண்றாவியென்று வைப்பம். அப்பிடியொரு சங்கதி பஸ்சுக்கு வெளியில நடந்து கொண்டிருக்குது. பஸ் யன்னலுக்குள்ளால வெளியில பார்க்கவே சங்கடமாயிருக்குது. எப்பவுமே யஸ் பயணங்களில நான் யன்னல்கரையோடதான் இருப்பன். நல்ல காற்றும் விழும். நாலு புதினத்தை பார்த்ததாகவும் முடியும். முக்கியமாக இன்னொரு காரணமுமிருக்குது. பஸ்சை இடையில மறிச்சு குழந்தைப் பிள்ளையயோட ஏறுற பொம்பிளையளுக்கு சீற் குடுக்க தேவையில்லை. ஆனால் யன்னல்கரையுடன் இருந்ததினால் இன்றைக்கு இந்த கண்றாவியை பார்க்க வேண்டியிருக்கிறது.

உண்மையில நான் ஒரு இரண்டும் கெட்டான் நிலைமையிலதானிருந்தன்.வெளியில நடக்கிற கூத்தைப் பார்க்கவுமேலாமல் கிடக்குது. சரி. பார்க்காமலிருப்பமென்றால் அதுவும் முடியாமலிருக்குது. இருபது இருபத்திரண்டு வயசு மதிக்கத்தக்க ஒரு பொடியனும் பெட்டையும் கீழே நிற்கினம். பஸ் ஸ்ராண்டின் கடைசிக் கட்டடத்துடன் ஒட்டியபடி இந்த பஸ் நிற்கிறது. பஸ்சுக்கும் கட்டடத்திற்குமிடையிலிருந்த இரண்டு மூன்று அடி இடைவெளியில் இருவரும் நிற்கினம். வெளியாட்களின் பார்வைபடாத இடமது.

பொடியன் என்னடாவென்றால், அங்க இஞ்சையென்று பெட்டையின்ர பலபத்து இடங்களிலயும் தொட்டுக் கொண்டிருக்கிறான். ஆன பெட்டையென்றால் தடுக்கிறதுதானே. தடுக்கிற மாதிரி ஒரு அக்சன் போட்டுக் கொண்டு, யாரும் தங்களை கவனிக்கினமோ என்றுதான் பார்க்கிறாள். எத்தனையாயிரம் பேர் வந்துபோற இடத்தில நின்று இந்த கூத்து ஆடுதுகள். என்ன பிறப்புகளோ தெரியயில்லையென்று மனசுக்குள்ள திட்டிக் கொண்டிருந்தன். எங்கட தமிழ்ப் பண்பாடும் பாரம்பரியமும் இந்த மாதிரியான எளிய சீவனுகளாலதான் காற்றில பறக்குது.

இதுகளிற்கு ஒரு மேய்ப்பராக இல்லாவிட்டாலும், கொஞ்சம் நல்வழிப்படுத்த வேணுமென்று என்ர மனம் சொல்லிக் கொண்டிருந்தது. இப்பிடியான கட்டங்களில கப்டன் விஜயகாந்திட்ட இந்த இரண்டு சீவனுகளும் மாட்டுப்பட்டிருக்க வேணும். அரை மணித்தியாலம் அட்வைஸ் பண்ணி அதுகளை கொன்றிருப்பார். எனக்கு இப்படியான ஐடியாக்கள் வராது. எனக்கு தெரிந்த ஒரே வழி, விடாமல் அதுகளை பார்த்துக் கொண்டிருக்கிறதுதான். என்ன தலையா போகப்போகிறதென விடாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பிடிப்பார்த்தாவது தமிழ்ப் பண்பாட்ட பாதுகாக்கலாமாவென பார்த்தேன். ஆனால் அதுகள் இதைப் பற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை. கனபேர் பார்க்கிற நடு பஸ்ஸ்ராண்டில நிற்காமல், கொஞ்சப்பேர் பார்க்கிற இதில நிற்கலாமென அதுகள் யோசித்திருக்கலாம்.

அனேகமாக எங்கேயோ தூர இடத்திலயிருந்து ரவுணுக்கு படிக்க வந்ததுகளாக இருக்க வேணும். அறிஞ்ச தெரிஞ்ச சனங்கள் வரமாட்டுதுகள் என்ற துணிவில நிற்குதுகள் போல என யோசிச்சன். முந்தி எங்கட காலத்தில இப்பிடியே நிலைமையிருந்தது? முந்தி எங்கட காலமென்றதும், ஏதோ பல பத்து வருசமென யோசிக்க வேண்டாம். இரண்டு, மூன்று வருசம் முதல்தான். அப்ப நாடு இப்பிடியா இருந்தது?

நானும் அந்த நேரம் பஸ்சேறி ஒரு மணித்தியாலம் பயணம் செய்து ரவுணுக்கு வந்துதான் படிச்சிட்டு போனனான். என்னை மாதிரியே ஏராளம் பொடியளும் வந்தவையள்தான். கனக்க ஏன், இப்பிடியொரு பஸ்சிலதான் கிரிசாவும் வந்தவள். பஸ் நெருக்கத்துக்க கூட அவளோட முட்டுப்பட பயந்து கொஞ்சம் தள்ளித்தான் நிற்பன். பிறகு, தெரிஞ்ச பெட்டையொருத்தியிட்டக் குடுத்துத்தான் அவளுக்கு கடிதம் அனுப்பினனான். அப்ப எங்களுக்கு வீட்டுக்காரருக்கோ, இயக்கத்துக்கோ, ஆமிக்காரருக்கோ பயமில்லை. எங்கட பயமெல்லாம் கலாச்சார சீரழிவென்ற சொல்லுக்குத்தான்.

அந்த நேரம் வந்த பேப்பருகளிலயும், நோட்டீசுகளிலயும் இந்த சொல் அடிக்கடி வரும். கலாச்சார சீரழிவில ஈடுபட்டவர் நையப்புடைக்கப்பட்டார். எச்சரிக்கப்பட்டார். சுடப்பட்டார் என்ற கணக்கில வரும். ஏன் வீண் சோலியை என்றிட்டு, படிக்கிற காலத்தில பெட்டையளில இருந்து மூன்றடி தூரம் தள்ளியே நின்றன்.

பஸ் கோர்ண் அடிச்சுது. வெளிக்கிடப் போகுது போல. பஸ் வெளிக்கிட்டால் மறைவிருக்காதுதானே. பொடியனும் அந்தரப்படத் தொடங்கினான். என்ன கருமத்துக்கென்று தெரியவில்லை. நானும் இமை வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தன். முன்னுக்கு ஆரோ ஏதோ கேட்டது மாதிரியிருந்தது. என்னைத்தான் யாரும் கதை கேட்கினமோ தெரியவில்லையென திரும்பினன். அது முன் சீற்றில இருக்கிறவை தங்களுக்க கதைச்சுக் கொண்டிருக்கினம். பொடியனை தவறவிடக் கூடாதென ‘டக்’கென திரும்பினேன். இடைப்பட்ட இந்த ஒன்றோ இரண்டோ செக்கனில பொடியன் பாய்ந்து பெட்டையின்ர கன்னத்தில கொஞ்சிப் போட்டான். நான் பார்க்கத்தான் அவனின்ர உதடு பிரிய மனமில்லாமல் அவளின்ர கன்னத்திலயிருந்து பிரியுது. தமிழ் பண்பாட்டை காப்பாற்றும் எனது முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. கடைசியில் ஒரு ‘பிட்’டு படம் பார்த்த உணர்வுதான் மிஞ்சியது.

பஸ் மெதுவாக நகர வெளிக்கிடத்தான் நாலைந்து பெட்டையள் அடிச்சுப் பிடிச்சுக் கொண்டு ஏறிச்சினம். அவையளும் ரவுணுக்கு படிக்க வந்திருக்க வேணும். கையில புத்தகம் கொப்பியள் வைச்சிருந்தினம். ஓடியோடி ஆட்கள் இல்லாத சீற்றுகளில இருந்திச்சினம். எனக்கு பக்கத்திலயுமொருத்தி இருந்தாள். என்னைப் பார்த்து இலேசாக சிரித்த மாதிரியுமிருந்தது. நானும், சிரிக்கிறனோ இல்லையோ என்று அவவுக்கு டவுட் வரத்தக்கதான அக்சன் ஒன்றை குடுத்தன்.

அவள் பஸ்சேறும் போது நான் வடிவாக கவனிச்சிருக்கயில்லை. இப்பதான் கவனிச்சன். அப்பிடியொரு வடிவு. அவளுக்கு பக்கத்தில நானிருக்க குடுத்து வைச்சிருக்க வேணும். எல்லாம் நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம். இப்பிடியொரு சந்தர்ப்பம் வாய்த்தது. நீங்கள் அனேகமாக சாண்டில்யனின் கதையள் வாசிச்சிருப்பியள். அவரின்ர எல்லாக் கதையிலயும் வாற அரசிளங்குமரிகளைப்பற்றி ஏழெட்டுப் பக்கத்தில வர்ணிச்சிருப்பார். அது அப்பிடி. இது இப்பிடியென. ஒரு சிறுகதையில நான் அவளை அவ்வளவு தூரம் வர்ணிக்க ஏலாது. ஆகவே சுருக்கமாக சொல்லுறன். அவர் ஏழெட்டு பக்கத்தில எழுதினதை ஒரு வசனத்தில சுருக்கினாலும் இப்பிடித்தான் வரும்- ‘அந்த மாதிரிச் சரக்கு’.

எனக்கென்றால் இருப்புக் கொள்ளவில்லை. அவளின்ர கவனத்தை என்ர பக்கம் திருப்ப பல முயற்சியள் செய்து கொண்டிருந்தன். அப்பிடி திரும்பினன். இப்பிடி திரும்பினன். செருமினன். நொக்கியா போனை எடுத்து வைச்சிருந்தன். அவள் ஆள் ஒன்றுக்கும் மசியிற மாதிரித் தெரியவில்லை. என்னத்தை பார்க்கிறாள் தெரியவில்லை. முன்னாலேயே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இருக்கும்தானே, கண்ணுக்கு இலட்சணமான பெட்டையென்றால் இதுவரை எத்தனை பொடியள் பக்கத்திலயிருந்து இந்த அக்சனுகளை போட்டிருப்பினம்.

கடைசியில உயிரைப் பணயம் வைக்கிற மாதிரி ஒரு ஐடியா வந்தது. என்ர அகராதியில இதெல்லாம் இதுவரை இருக்கவில்லை. இப்பதான் ஆரம்பிக்குது. முந்தி மாதிரி இப்ப இல்லைத்தானே. கலாச்சார சீரழிவு சம்பந்தமாக நடுக்கம் தாற செய்திகளும் வாறதில்லை. உதயன் பேப்பரில மட்டும் கசூரினா பீச்சில நடக்கும் கலாச்சார சீரழிவுகளினால் மக்கள் விசனம் என்பது மாதிரி வரும். முந்தி மாதிரியில்லாமல் இப்ப எங்கட ஆக்கள் விசனமடையிறதோடயே நிறுத்திக் கொண்டுவிடுகினம்.

பெட்டையிட்ட மெல்ல கதை குடுத்தன். பெட்டை ஆரம்பத்தில எல்லாத்திற்கும் சிரித்தது. பிறகுதான் பதில் சொன்னது. என்ர ஐடியாவும் நன்றாக வேலை செய்தது. நானும் ஏதோ பெரிதாக நினைச்சிருந்தன். நினைத்தது மாதிரி ஒன்றுமிருக்கவில்லை. நான் போட்ட அடித்தளமிதுதான்.

“ஹலோ.. மாவிட்டபுரம் கன தூரமோ?..”

சிரித்தாள். பிறகு, “இல்ல .. பக்கத்திலதான்..”
“பக்கத்திலயென்று?..”

சிரித்தாள். “ ம்.. எனக்கு சரியா சொல்லத் தெரியேலை… ஒரு பத்து பன்னிரண்டு கிலோமீற்றர் வரும்..”

“ஓ.. ம்.. அதுசரி..போறதுக்கிடையில ஏதாவது பிரச்சனை வருமே?..”

“பிரச்சனையென்று?..”

“அதுதான் ஆமிச் செக்கிங்…கிக்கிங்..”

“ஒரு இடத்தில ஐ.சி பார்ப்பினம்… அவ்வளவுதான்..”

“பிரச்சினையில்லைத்தானே..”

“ஐயோ இல்லை…நீங்க அங்க வாறது பெஸ்ற் ரைமா?..”

“ம்..”

“நான் மாவிட்டபுரத்தில இறக்கிவிடுறன்..”

“தாங்ஸ்;.. அதுசரி.. உங்கட பேரை இன்னும் சொல்லயில்லை..”

இந்த அத்திவாரத்திலயிருந்து மளமளவென கட்டடம் கட்டத் தொடங்கினேன். வேகமென்றால் சொல்லி வேலையில்லை. கட்டடம் இரண்டாவது மாடிக்கு போக அவள் என்னோட நெருங்கியிருந்து கொண்டு என்ர காதுக்குள்ள குசுகுசுத்துக் கதைக்கத் தொடங்கினாள். என்ர ரெலிபோனை வாங்கி செக் பண்ணினாள். நானும் அவளின்ர ரெலிபோனை செக் பண்ணினன்.

கட்டடம் மூன்றாவது மாடிக்கு வர அவள் இடையிடையே என்ர தோளில சாய்ந்து இருந்த மாதிரியிருந்தது. எனக்கு ஒரு சின்ன சங்கடமாகவுமிருந்ததுதான். பஸ்சுக்குள்ள கன பேரிருக்கினம். என்ன நினைப்பினம். பிறகும் பார்த்தன், இந்த மாதிரிச் சந்தர்ப்பங்கள் எப்பொழுதும் வராது. பஸ்சில இருக்கிறதெல்லாம் தெரியாத ஆக்கள்தானே. நானும் அவளின்ர கையை பிடிச்சன்.

அவள் என்ர தோளில சாய்ந்திருந்ததினால் காற்றடிக்கும் போது அவளது தலைமுடி என்ர முகத்தில படர்ந்தது. உண்மையில் அது அற்புதமான பொழுதாகயிருந்தது. அவளின்ர கூந்தல் நல்ல வாசம் வேறு. அந்த நேரத்திலயும் எனக்கு பாண்டிய மன்னன்தான் ஞாபகத்திற்கு வந்தான். இப்ப யோசிக்க, அந்த மனுசனுக்கு வந்த சந்தேகத்தில ஒரு பிழை சொல்ல ஏலாமல் கிடக்குது.

நான் அவளிட்டக் கேட்டன் “ உம்மட கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமிருக்குதா..” என. அவள் ஐந்து நிமிடத்திற்கு குறையாத நேரம் விழுந்து விழுந்து சிரித்தாள். தான் இன்று காலையில்தான் நடிகை அனுஸ்க்கா விளம்பரம் செய்யும் சம்போ வைத்து முழுகியதாகவும், இல்லாவிட்டால் விசயம் தெரிந்திருக்குமெனவும் சொன்னாள்.
கட்டடம் இன்னும் கொஞ்சம் வளர, ரெலிபோன் நம்பருகளை பரிமாறிக் கொண்டோம். நம்பரை தந்துவிட்டு. “நைற்றில கோல் பண்ணுங்க..” என்றாள். கன சினிமாவில இப்பிடியான சீனுகளை பார்த்திருக்கிறன். இரண்டு பேரும் கட்டிலில படுத்திருந்து ரெலிபொனை காதுக்கள்ள வைச்சு குசுகுசுக்கிற சீனுகள் இனிமேல் என்ர வாழ்க்ககையிலயும் ஓடப் போகுது.

எங்கட சீற்றுக்குப் பக்கத்தில நிற்கிற ஒரு பொடியன் வைச்ச கண் எடுக்காமல் எங்களயே பார்த்துக் கொண்டிருக்கிறான். எனக்கு கொஞ்சம் சங்கடமாயுமிருந்தது. என்ர பிடியிலயிருந்து அவளின்ர கையை விடுவிச்சிட்டன். அவள் என்ர காதுக்குள்ள முணுமுணுத்தாள்- “நாறின மீனை பூனை பார்த்த மாதிரி ஒரு குரங்கு பார்த்துக் கொண்டு நிக்குது.. என்ன பிறப்புக்களோ.. ச்சா.. கொஞ்சமும் டீசண்ட்டில்லாமல்..”
அவனும் என்ர ரைப் பொடியன்தானோ என்னவோ. தமிழ் பண்பாட்டை காப்பாற்ற முயல்கிறானோ தெரியாது.

நானும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்து பார்த்தன். அவன் விட்டுக் குடுக்கிற மாதிரித் தெரியவில்லை. நானும் கனநேரம் விட்டுக் குடுத்துக் கொண்டு இருக்க ஏலாது. இந்தப் பயணமே பன்னிரண்டு கிலோமீற்றர்தூரப் பயணம்தான். இதுகளை யோசிச்சு சரிவராதென திரும்பவும் அவளின்ர காதுக்குள்ள குசுகுசுக்கத் தொடங்கினன்.
இடையில ஆமிக்காரர் அடையாள அட்டை செக் பண்ணிச்சினம். இறங்கிப் போகேக்க சொன்னாள் - “நீங்க என்னைவிட சரியான உயரம்..” - அவள் எதிர்காலத்தில மாலைமாற்றும்போது எற்படும் சிரமங்களை யோசிச்சிருக்கலாம்.

அடையாளஅட்டை பரிசோதித்த ஆமிக்காரன் ஒரு பொடித்தரவளி. ஒரு ரொமான்ஸ் சிரிப்போடு கேட்டான்- “கேர்ள் பிரண்ட்டா..”
நான் தலையாட்டினன். அவன் என்னைப் பார்த்து கண்ணடிச்சான்.
திரும்பவும் பஸ்சேறி கொஞ்ச தூரம் போனதும் நான் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. இவ்வளவு சனத்துக்குள்ளயும் முத்தம் குடுத்து பிரியிற அளவு துணிவு என்னட்டயிருக்கவில்லை. இரவு கட்டாயம் போன் பண்ணுவன் என்ற வாக்குறுதி கொடுத்து இறங்கினன்.

பஸ்சை விட்டு இறங்கியதும், அவள் யன்னலுக்குள்ளால் எட்டிப் பார்த்து கையசைத்தாள். நான் கண்ணடிச்சன். அவள் தொலைபேசியை எடுத்துக் காட்டினாள்.

பஸ் போய்விட்டது. அவளுக்கு உடனடியாகவே அழைப்பு ஏற்படுத்த வேண்டும் போலிருந்தது. இரவு அழைப்பை ஏற்படுத்துவதாக சொல்லியிருந்தாலும், நான் உடனடியாகவே போன் பண்ணுவேனென அவளும் எதிர்பார்த்திருக்கலாம். அப்போது கொஞ்சம் பலமாக காற்று வீசியது. கண்களை மூடினேன். காற்று முகத்தை வருடியபடி கடப்பது, அவளது கூந்தல் முகத்தில படர்வது போலிருந்தது.

ஏனோ தெரியவில்லை, அந்த பேரூந்துதரிப்பிட பொடியன் என்னைப் பார்த்து சங்கடப்பட்டிருக்க தேவையில்லையென்று அப்போது பட்டது. யாரையும் பற்றி கவலைப்படாமல் அவன் அவளை முத்தமிட்டிருக்க வேண்டும். மிக நீண்ட நேரம். கன்னத்திலல்ல. உதட்டில்.

நன்றி : http://yokarnan.blogspot.fr/2011/06/blog-post_4490.html

Comments