ஆட்டிசம் – சிகிச்சை முறைகள் – பாகம் 2
படங்கள் மூலம் தொடர்பு கொள்ளுதல் – Picture Exchange Communication System (PECS):
மொழியைப் பயன்படுத்த முடியாது போகிற நிலையில் ஆட்டிசக் குழந்தைகளின் தேவைகளையும், எண்ணங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ள இன்னொரு வழி இந்த பட அட்டைகளைக் கொண்டு பேசுதல். பிரமிட் என்கிற கல்வி தொடர்பான பொருட்கள் தயாரிப்பாளர்களின்(Pyramid Educational Products) பிராண்ட்தான் பெக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பட அட்டை முறையாகும்.
முதலில் குழந்தைக்கு மிகவும் பிடித்த பொருட்களின் படங்களை எடுத்துக் கொண்டு இந்த பயிற்சியை ஆரம்பிக்க வேண்டும். குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் பொம்மையின் படம் கொண்ட அட்டையை கொண்டுவந்து தந்தால் அந்த பொம்மையை குழந்தைக்கு விளையாடக் கொடுப்பது என்று முதலில் பழக்கலாம். எனவே நமக்கு வேண்டிய பொருளின் படம் கொண்ட அட்டையை எடுத்து தந்தால், நமக்கு அந்தப் பொருள் கிடைக்கும் என்ற புரிதலை குழந்தையிடம் கொண்டு வருகிறோம். பிறகு ஒவ்வொரு பொருளையாக இப்படி கேட்க வைக்கலாம். மெல்ல மெல்ல மொழியின் பயன்பாடுகளை குழந்தை உணர்ந்து கொள்ள இந்த முறை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இந்த பயிற்சியைப் பெற்று தங்கள் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ளும் குழந்தைகள் நாளடைவில் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள் என்பது நமக்கு கூடுதல் அனுகூலமாகும்.
உடல் நலச் சிக்கல்கள்:
இது போன்ற அடிப்படைப் பயிற்சிகள் தவிர மேலதிகமாக இக்குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் இருக்கக் கூடும். பெரும்பாலும் இவர்களை பாதிக்கக் கூடிய இருவகை உடல்நலச் சிக்கல்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
நரம்பியல் சிக்கல்கள் – குறிப்பாக வலிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஜீரணக் குறைபாடுகள் – அஜீர்ணம், வயிற்றுப் போக்கு போன்றவை.
இவ்விரு குறைபாடுகளுக்கும் முறையே நரம்பியல் மற்றும் குடலியல் நிபுணர்களிடம் சிகிச்சை பெறுதல் அவசியம். அதிலும் ஆட்டிசம் உறுதிப்படுத்தப் பட்டதுமே ஒரு நரம்பியல் நிபுணரை கலந்தாலோசித்து EEG எடுத்து மூளை மற்றும் நரம்புகளின் நிலையைப் பரிசோதித்துக் கொள்வதும், தேவையான மருத்துவ உதவிகளை எடுத்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும்.
வேறு சிகிச்சை முறைகள்:
இந்த அடிப்படை சிகிச்சை முறைகள் தவிர்த்து மேலதிகமாக வேறு சில சிகிச்சை முறைகளும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு கூடுதல் பலனளிக்கக் கூடும். ஆனால் மேற்சொன்ன சிகிச்சை முறைகளோடு சேர்த்து மட்டுமே இனி சொல்லப் போகும் சிகிச்சை முறைகளை முயற்சிக்க வேண்டும்.
இசை சிகிச்சை
நடன சிகிச்சை
யோகா
இசை, நடனம், யோகா போன்ற பயிற்சிகள் இக்குழந்தைகளின் கவனக் குவிப்பை அதிகரிக்கவும், ஹைப்பர் ஆக்டிவிட்டியை குறைக்கவும் பயன்படுகின்றன. இந்தக் கலைகள் குழந்தைகளின் மனதையும் உடலையும் ஒரு நேர்கோட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம் ஆட்டிசக் குழந்தைகளின் நடவடிக்கைகள் சீராக்கம் பெறுகின்றன.
(தொடரும்)
நன்றி: http://216.185.103.157/~balabhar/blog/?p=1258
Comments
Post a Comment