பார்த்திபன் கனவு 29-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 19- மாரப்பனின் மனோரதம்.






மாரப்ப பூபதி பொன்னனின் குடிசைக் கதவைத் திறந்தபோது, வள்ளி பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தாள்:-

"மானம் போன பிறகு உயிரை வைத்துக் கொண்டு இருந்து என்ன பிரயோஜனம்? நம்ம தேசத்துக்கும் நம்ம மகாராஜாவுக்கும் துரோகம் செய்து விட்டு அப்புறம் பிராணனை வைத்துக் கொண்டு இருக்கிறதாயிருந்தால், உனக்கும் அந்தக் கேடுகெட்ட மாரப்பனுக்கும் என்ன வித்தியாசம்?"

இதைக் கேட்டதும் அவனுடைய முகம் கோபத்தினால் சிவந்தது. வாசற்படியிலேயே சிறிது நேரம் அசையாமல் நின்றான். பிறகு என்ன தோன்றிற்றோ என்னவோ, அவனுடைய முகத்தில் ஒருவிதமான மலர்ச்சி உண்டாயிற்று. புன்னகையுடன் "என்ன வள்ளி! என் தலையையும் சேர்த்து உருட்டுகிறாய்? என்ன சமாசாரம்? என்னோடு பொன்னனையும் சேர்க்கும் படியாக அவன் அப்படி என்ன பாதகம் செய்துவிட்டான்?" என்றான்.

அடுப்பு வேலையைப் பார்த்தபடி பொன்னன்தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டு தலை நிமிராமல் முதலில் பேசிய வள்ளி வேற்றுக் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டுப் பார்த்தாள். மாரப்பன் என்று அறிந்ததும், அவளுக்குக் கொஞ்சம் திகைப்பாய்த்தானிருந்தது. ஆனாலும் சீக்கிரத்தில் சமாளித்துக் கொண்டு "உங்கள் தலையை உருட்டுவதற்கு என்னால் முடியுமா, ஐயா? அதற்கு எந்த உண்மையான வீரம் படைத்த ஆண் பிள்ளை பிறந்திருக்கிறானோ?" என்றாள்.

இதில் பிற்பகுதியை மெல்லிய குரலில் சொன்னபடியால் மாரப்பன் காதில் நன்றாக விழவில்லை.

"என்ன சொன்னாய் வள்ளி?" என்றான்.

இதற்குள் பொன்னன் வெளியிலிருந்து வரவே, மாரப்பன் அவனைப் பார்த்து, "பொன்னா! உன்னோடு ஒரு சமாச்சாரம் பேச வேண்டும், வா" என்று கூறி அவனை வெளியில் அழைத்துப் போனான்.

இருவரும் நதிக் கரைக்குச் சென்று மரத்தடியில் உட்கார்ந்தார்கள். "பொன்னா! நீ எனக்கு ஒரு பெரிய உபகாரம் செய்திருக்கிறாய். அதற்காக என்றைக்காவது ஒரு நாள் நான் உனக்கு நன்றி செலுத்தியாக வேண்டும்" என்றான் மாரப்பன்.

"நானா ஐயா? உங்களுக்கு அப்படியொன்றும் செய்ததாகத் தெரியவில்லையே?"

"உனக்குத் தெரியாமலே செய்திருக்கிறாய், பொன்னா!"

"ஐயையோ! அப்படியானால், அதை வள்ளியிடம் மட்டும் சொல்லி விடாதீர்கள். அவள் என்னை இலேசில் விட மாட்டாள்!" என்றான் பொன்னன்.

மாரப்பன் சிரித்துக் கொண்டே, "அதுதான் பொன்னா! அதுதான்! வள்ளியை நீ கல்யாணம் செய்து கொண்டாயே, அதுதான் நீ எனக்குச் செய்த பெரிய உபகாரம். ஒரு காலத்தில் அவளை நான் கல்யாணம் செய்து கொள்ளலாமென்ற சபலம் இருந்தது. அப்படி நடந்திருந்தால், என்னை என்ன பாடு படுத்தியிருப்பாளோ?"

"ஆமாம் எஜமான் ஆமாம்! தங்களுடைய சாதுக் குணத்துக்கும் வள்ளியின் சண்டைக் குணத்துக்கும் ஒத்துக் கொள்ளாதுதான். சண்டை என்று கேட்டாலே தங்களுக்குச் சுரம் வந்துவிடும் என்பதுதான் உலகமெல்லாம் அறிந்த விஷயமாயிற்றே!" என்றான் பொன்னன்.

"என்ன சொன்னாய்?" என்று மாரப்பன் கத்தியை உருவினான்.

"ஓகோ! கத்தியைக் கூட கொண்டு வந்திருக்கிறீர்களா? நிஜக் கத்திதானே? கொஞ்சம் இருங்கள் வள்ளியைக் கூப்பிடுகிறேன். உங்கள் உறையில் உள்ள கத்தி நிஜக் கத்தியல்ல - மரக் கத்தி என்று அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்!" என்று கூறிவிட்டுப் பொன்னன் எழுந்திருந்தான்.

மாரப்பன் கத்தியைப் பக்கத்தில் தரையில் வைத்து விட்டு, "வேண்டாம், பொன்னா! உட்கார், புருஷர்களின் காரியத்தில் பெண் பிள்ளைகளைக் கூப்பிடக்கூடாது. அவர்கள் வந்தால் விபரீதந்தான். பார்! விக்கிரமனை சோழ தேசத்துக்கு ராஜாவாக்க நாம் பெருமுயற்சி செய்தோமே? அது பலித்ததா? நமது ஆலோசனைகளில் அருள்மொழி ராணியைச் சேர்த்துக் கொண்டதால் தானே, காரியம் கெட்டுப் போயிற்று?" என்றான்.

"அப்படியா? மகாராணி என்ன செய்தார்கள் காரியத்தைக் கெடுப்பதற்கு? அவர் தான் இங்கே இளவரசரையும் கிளப்பி விட்டுவிட்டு, அங்கே அச்சுதவர்மரிடமும் போய்ச் சொல்லிக் கொடுத்தாரா? பிள்ளைமேல் அவருக்கு என்ன அவ்வளவு விரோதம்?"

"இல்லை, பொன்னா! ராணி யாரோ ஒரு சிவனடியாரை நம்பி, அவரிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள். அந்த வேஷதாரியை நம்ப வேண்டாமென்று நான் எவ்வளவோ சொன்னேன். கேட்டால்தானே! உண்மையில் அந்தக் கபட சந்நியாசி பல்லவ சக்கரவர்த்தியின் ஒற்றன்! எல்லாவற்றையும் போய்ச் சொல்லிவிட்டான்!" இதைக் கேட்டதும் பொன்னனுக்கு ஏற்கெனவே அந்தச் சிவனடியார் மேல் ஏற்பட்டிருந்த சந்தேகம் கொஞ்சம் பலப்பட்டது.

ஒருவேளை அவருடைய வேலையாகவே இருந்தாலும் இருக்கலாம். நாம் அனாவசியமாய் மாரப்ப பூபதியைச் சந்தேகித்தோமே? என்று சிறிது வெட்கமடைந்தான்.

"சிவனடியாராயிருந்தாலும் சரி, என்றைக்காவது ஒரு நாள் உண்மை தெரியப் போகிறது, அப்போது துரோகம் செய்தவனை...." என்று பொன்னன் பல்லை நரநரவென்று கடித்த வண்ணம், மாரப்பனுக்குப் பக்கத்தில் தரையில் கிடந்த கத்தியைச் சட்டென்று எடுத்து ஒரு சுழற்றிச் சுழற்றி அருகேயிருந்த ஒரு புங்கமரத்தில் ஒரு போடு போட்டான். வைரம் பாய்ந்த அந்த அடி மரத்தில் கத்தி மிக ஆழமாய்ப் பதிந்தது!

மாரப்பனுடைய உடம்பு பாதாதி கேசம் ஒரு கணநேரம் வெடவெட வென்று நடுங்கிற்று. எனினும் பொன்னன் தன்னைத் திரும்பிப் பார்ப்பதற்குள் ஒருவாறு சமாளித்துக் கொண்டான்.

"பழைய கதையை இனிமேல் மறந்துவிடு, பொன்னா! இளவரசர் என்னவோ இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. நம்முடைய காரியத்தை நாம் பார்க்க வேண்டியது தான்."

"நம்முடைய காரியம் என்ன இருக்கிறது இனிமேல் எல்லாந்தான் போய்விட்டதே!"

"எல்லாம் போய்விடவில்லை. நானும் நீயும் இருக்கிற வரையில் எல்லாம் போய்விடாது. ஆனால் யுக்தியை மாற்றிக் கொள்ள வேண்டும். சண்டையினால் முடியாத காரியத்தைச் சமாதானத்தினால் முடித்துக் கொள்ள வேண்டும். நீ கெட்டிக்காரன் பொன்னா! நான் எல்லாம் கேள்விப்பட்டேன். சக்கரவர்த்தி இந்த வழியாகப் போன போது உன்னை அழைத்துப் பேசினாராம். நீயும் அவருக்குப் பணிந்தாயாம் இதுதான் சரியான யுக்தி. பெண் பிள்ளை பேச்சைக் கேட்காதே. வள்ளி ஏதாவது உளறிக் கொண்டுதானிருப்பாள். நீ மாத்திரம் எனக்குக் கொஞ்சம் ஒத்தாசை செய்தாயானால், சோழ நாட்டை காப்பாற்றலாம். விக்கிரமன் ஒருவேளை திரும்பிவந்தால், இராஜ்யத்தை அவனிடம் ஒப்படைக்கலாம். இராஜ்யம் அடியோடு கையை விட்டுப் போய்விட்டால், அப்புறம் திரும்பி வராதல்லவா?"

ஆரம்பத்தில் மாரப்பனின் பேச்சு பொன்னனுக்கு வேப்பங்காயாக இருந்தது. விக்கிரமனுக்கு இராஜ்யத்தை திருப்பிக் கொடுப்பது பற்றி பிரஸ்தாபித்ததும், பழைய சேனாதிபதி, சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்குமோ? என்று பொன்னனுக்கு யோசனை உண்டாயிற்று.

"நான் என்ன ஒத்தாசை செய்ய முடியும்?" என்று அவன் கேட்டான்.

"பிரமாதமாக ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. சக்கரவர்த்தியின் மகள் குந்தவிதேவி, அருள்மொழி ராணியைப் பார்க்க வரப்போவதாகப் பிரஸ்தாபம். நீ தானே படகு விடுவாய்? சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் என்னைப் பற்றிப் பேசு, உனக்குதான் தெரியுமே. பொன்னா! வள்ளியின் பாட்டன் ஜோசியம் சொல்லியிருக்கிறான் அல்லவா? எல்லாம் அந்த ஜோசியம் பலிப்பதற்கு ஏற்றபடியே நடந்து வருகிறது. இல்லாவிட்டால், குந்தவிதேவி இப்போது இங்கே வர வேண்டிய காரணமேயில்லை. பார்!" என்றான்.

குந்தவிதேவியை விக்கிரமன் மணந்துகொள்ள வேண்டுமென்னும் அருள்மொழி ராணியின் பழைய விருப்பம் பொன்னனுக்கு ஞாபகம் இருந்தது. எனவே, மாரப்பன் மேற்கண்டவாறு பேசியதும், பொன்னனுக்கு அவனிடமிருந்த வெறுப்பெல்லாம் திரும்பி வந்துவிட்டது; உள்ளுக்குள் கோபம் பொங்கிற்று. ஆயினும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், "அதற்கென்ன? சமயம் நேர்ந்தால் கட்டாயம் உங்களைப் பற்றிக் குந்தவிதேவியிடம் பேசுகிறேன்" என்றான்.

"நீ செய்யும் உதவியை மறக்கமாட்டேன். பொன்னா! சக்கரவர்த்தி என்னைக் கூப்பிட்டிருக்கிறார். நாளைக்குப் பார்க்கப் போகிறேன். சேனாதிபதி வேலையை இப்போது எனக்குக் கொடுக்கப் போகிறார். பிறகு சோழ இராஜ்யமே என் கைக்குள் வருவதற்கு அதிக நாளாகாது. அப்போது உன்னைக் கவனித்துக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டே மாரப்பன் குதிரை மீதேறி அதைக் தட்டி விட்டான்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr



Comments