பார்த்திபன் கனவு 30-புதினம் - இரண்டாம் பாகம்-அத்தியாயம் 20- சக்கரவர்த்தி சந்நிதியில்.




மாரப்ப பூபதி போனவுடனே பொன்னன் குதித்துக் கொண்டு குடிசைக்குள் சென்றான். வள்ளியின் கோபத்தை மாற்றுவதற்கு ஒரு வழி கிடைத்தது என்ற எண்ணம் அவனுக்குக் குதூகலம் உண்டாக்கிற்று.

மாரப்பன் சொன்னதையெல்லாம் கொஞ்சம் கைச்சரக்கும் சேர்த்து அவன் வள்ளியிடம் தெரிவித்த போது உண்மையாகவே அவன் எதிர்பார்த்த பலன் கிட்டிற்று. அதாவது வள்ளியின் கோபமெல்லாம் மாரப்பன்மேல் திரும்பிற்று.

"ஓகோ! சக்கரவர்த்தியின் மகளை இவன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்; அதற்கு நீ தூது போகவேண்டுமோ? என்னிடம் மட்டும் அந்த மாதிரி அவன் சொல்லியிருந்தால், தலையிலே ஒரு சட்டி நெருப்பைக் கொட்டியிருப்பேன்; நீ கேட்டுக்கொண்டு சும்மா வந்தாய்!" என்றாள்.

"சும்மாவா வந்தேன்? உனக்கு என்ன தெரியும்? எப்பேர்ப்பட்ட கோபம் அப்போது எனக்கு வந்தது தெரியுமா வள்ளி! அவன் வாளைக் கொண்டே அவன் தலையை வெட்டிப் போடப் பார்த்தேன்; புங்கமரம் நடுவிலே நின்று தடுத்து விட்டது!" என்றான்.

"ஆமாம், நீ வாய்வெட்டுத்தான் வெட்டுவாய்! வாள் வெட்டுக்கு உன் கையிலே சக்தி இருக்கிறதா!" என்றாள் வள்ளி.

பொன்னன் "இங்கே வா! நான் சொல்லுகிறது நிஜமா, இல்லையா? என்று காட்டுகிறேன்" என்று சொல்லி அவள் கையைப் பிடித்து கரகரவென்று இழுத்துக் கொண்டு போனான். புங்க மரத்தில் கத்தி வெட்டு ஆழமாய்ப் பதிந்திருந்ததைக் காட்டினான்.

அதைப் பார்த்ததும் வள்ளி முகம் மலர்ந்தது. "இந்த வெட்டை மரத்தில் ஏன் போட்டாய்? பாவம் பச்சை மரம்! அவன் மேலேயே போடுகிறதுதானே" என்றாள்.

"இருக்கட்டும்; ஒரு காலம் வரும். அப்போது போடாமலா போகிறேன்!" என்றான் பொன்னன்.

பிறகு, இருவரும் மேலே என்ன செய்வதென்று வெகு நேரம் யோசித்தார்கள்.

மாரப்ப பூபதி எவ்வளவு துர்நடத்தையுள்ளவன் என்பதைச் சக்கரவர்த்திக்கு எப்படியாவது தெரிவித்துவிட வேண்டுமென்று அவர்கள் முடிவு செய்தார்கள். ஆனால் எவ்விதம் தெரிவிப்பது?

"நீதான் அன்றைக்குச் சக்கரவர்த்திக்குக் கும்பிடு போட்டுக் காலில் விழுந்தாயே! அவரை உறையூரில் போய்ப் பார்த்து எல்லாவற்றையும் சொல்லிவிடேன்" என்றாள் வள்ளி.

"நான் கலகத்தில் சம்பந்தப்பட்டவன் என்று உறையூரில் எல்லாருக்கும் தெரியுமே! உறையூருக்குள் என்னைப் போகவிடவே மாட்டார்கள். அதிலும் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமென்று சொன்னால் சந்தேகப்பட்டுக் காராக்கிரகத்தில் பிடித்துப் போட்டு விடுவார்கள்" என்று பொன்னன் சொன்னான்.

"அப்படியானால் நான் போய்விட்டு வரட்டுமா?" என்றாள் வள்ளி.

"நீ எப்படிச் சக்கரவர்த்தியைப் பார்ப்பாய்? உன்னை யார் விடுவார்கள்?"

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது குடிசையின் வாசலில் குதிரைகள் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

"யார் இப்போது குதிரைமேல் வந்திருக்க முடியும்?" என யோசித்துக் கொண்டே வள்ளியும் பொன்னனும் வெளியில் வந்தார்கள். பல்லவ வீரர்கள் ஐந்தாறு பேர் வந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களுக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.

வந்த வீரர்களின் தலைவன், "ஓடக்காரா! உன்னைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை, மரியாதையாய் உடனே புறப்பட்டு வருகிறாயா? விலங்கு பூட்டச் சொல்லட்டுமா?" என்றான்.

பொன்னன் கலவரமடைந்த முகத்துடன் வள்ளியைப் பார்த்தான். வள்ளி துணிச்சலுடன் வீரர் தலைவனை நோக்கி,"சோழ நாட்டில் மரியாதைக்கு எப்போதும் குறைச்சல் இல்லை ஐயா! நீங்கள் பிறந்த ஊரில் தான் மரியாதைக்குப் பஞ்சம் போலிருக்கிறது!" என்றாள்.

"ஓகோ! நீதான் வாயாடி வள்ளியா? உன்னையுந்தான் கொண்டுவரச் சொன்னார், சக்கரவர்த்தி!"

"ஆகா! வருகிறேன். உங்கள் சக்கரவர்த்தியை எனக்குந் தான் பார்க்க வேண்டும். பார்த்து "உறையூரிலிருந்து காஞ்சிக்குப் போகும்போது கொஞ்சம் மரியாதை வாங்கிக் கொண்டு போங்கள்!" என்றும் சொல்ல வேண்டும் என்றாள்.

சக்கரவர்த்தியின் விஜயத்தை முன்னிட்டு உறையூர் வீதிகள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த போது பொன்னனுக்கும் வள்ளிக்கும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. முன் தடவை உறையூர் இவ்வளவு அலங்காரத்துடன் காட்சியளித்தது, பார்த்திப மகாராஜா போருக்குக் கிளம்பிய சமயத்தில்தான். ஆகா அதையெல்லாம் சோழநாட்டு ஜனங்கள் அடியோடு மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது! பார்த்திப மகாராஜாவின் மரணத்துக்குக் காரணமான நரசிம்ம சக்கரவர்த்தியின் விஜயத்துக்காக இப்படியெல்லாம் நகரலங்காரம் செய்திருக்கிறார்களே! இது என்ன அவமானம்? சோழ நாட்டுக்கு என்ன கதி நேர்ந்துவிட்டது? அருள்மொழி ராணி இப்போது உறையூருக்கு வந்து இந்தக் கோலாகலங்களையெல்லாம் பார்த்தால் மனம் சகிப்பாரா? இவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் வள்ளியும் சக்கரவர்த்திக்கென்று புதிதாக அமைக்கப்பட்டிருந்த அரண்மனையை அடைந்தார்கள்.

அந்த அரண்மனையில் பெருமிதமும், அதில் காணப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளும் அவர்களைப் பிரமிக்கச் செய்தன; அவர்களின் ஆத்திரத்தையும் அதிகப்படுத்தின. சோழ மன்னன் அமர்ந்து ஆட்சி செலுத்த வேண்டிய இடத்தில் வெளியூரான் வந்தல்லவா இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்கிறான்? அரண்மனைக்குள் அவர்கள் ஒரு அறையில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார்கள். அதற்கு அடுத்த அறையில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. கம்பீரமான ஒரு ஆண் குரல் அதிகமாகக் கேட்டது. ஒரு இளம் பெண்ணின் இனிய குரலும், சிரிப்பின் ஒலியும் இடையிடையே கேட்டன. ஈனஸ்வரத்தில் இன்னொரு ஆடவன் குரலும் கேட்டது. அது மாரப்ப பூபதியின் குரல் மாதிரி இருக்கவே பொன்னன் திடுக்கிட்டான்.

சக்கரவர்த்திக்கு விரோதமான சதியாலோசனையில் கலந்து கொண்டதன் பொருட்டு விசாரிப்பதற்காகத்தான் சக்கரவர்த்தி தங்களை அழைத்து வரச் செய்திருக்க வேண்டும் என்று, பொன்னனும் வள்ளியும் கிளம்பும்போது ஊகித்தார்கள். விசாரணையின்போது தைரியமாக மறுமொழி சொல்லி, சக்கரவர்த்திக்குப் பொன்னன் கும்பிட்ட அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். மாரப்ப பூபதியின் ஈனக் குரலிலிருந்து தாங்கள் ஊகித்தது சரிதான் என்று அவர்களுக்குப்பட்டது. அப்போது வள்ளி பொன்னன் காதோடு ஏதோ சொன்னாள்.

அவள் சொல்லி முடிப்பதற்குள், உள்ளேயிருந்து கம்பீரமான குரல் "எங்கே? அந்த ஓடக்காரனைக் கொண்டு வா" என்று கட்டளையிட்டது.

பொன்னனையும் வள்ளியையும் அடுத்த அறைக்குள் கொண்டு போனார்கள். அங்கே நவரத்தினகச்சிதமான சிங்காதனத்தில் சக்கரவர்த்தி கம்பீரத் தோற்றத்துடன் வீற்றிருப்பதையும் அவருக்கு அருகில் குந்தவி தேவி சாய்ந்து கொண்டு நிற்பதையும், எதிரே மாரப்பன் குனிந்த தலையுடனும் நடுங்கிய உடம்புடனும் எண்சாணுடம்பும் ஒரு சாணாய்க்குறுகி நிற்பதையும், வள்ளியும் பொன்னனும் போகும் போதே பார்த்துக் கொண்டார்கள். சக்கரவர்த்தியின் எதிரில் போய் நின்ற பிறகு அவர்களால் தலை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. சக்கரவர்த்தியின் முகத்தில் பொங்கிய தேஜஸானது அப்படிக் கண்களைக் கூசச் செய்து அவர்களுக்கு அடக்க ஒடுக்கத்தை அளித்தது.

மாமல்ல சக்கரவர்த்தி இடி முழக்கம் போன்ற குரலில் சொன்னார்: "ஓகோ! இவன்தானா? தோணித் துறையில் அன்றைக்குப் பார்த்தோமே? வெகு சாதுவைப்போல் வேஷம் போட்டு நடித்தான்! நல்லது, நல்லது! படகு தள்ளுகிறவன் கூடப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகச் சதி செய்வதென்று ஏற்பட்டுவிட்டால், அப்புறம் கேட்பானேன்? அழகுதான்!"

இவ்விதம் சக்கரவர்த்தி சொன்னபோது, பொன்னனும் வள்ளியும் அடியோடு தைரியத்தை இழந்துவிட்டார்கள். அவர்களுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. தோணித்துறையில் இனிய வார்த்தை பேசிய சக்கரவர்த்திக்கும், இங்கே நெருப்புப் பொறி பறக்கும்படி பேசும் சக்கரவர்த்திக்கும் காணப்பட்ட வித்தியாசம் அவர்களைத் திகைக்கச் செய்தது.

சக்கரவர்த்தி மேலும் சொன்னார்: "இருக்கட்டும், உங்களைப் பின்னால் விசாரித்துக் கொள்ளுகிறேன். ஓடக்காரா! நான் இப்போது கேட்பதற்கு மறுமொழி சொல்லு. ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாய்? நிமிர்ந்து என்னைப் பார்த்து, உண்மையைச் சொல்லு. நமது சாம்ராஜ்யத்துக்கு விரோதமாகக் கலகம் செய்யும்படி விக்கிரம இளவரசரை முக்கியமாகத் தூண்டிவிட்டது யார்....?"

பொன்னன் பளிச்சென்று நிமிர்ந்து பார்த்து "பிரபோ! இதோ உங்கள் முன்னால் நிற்கிறாரே, இந்த மாரப்ப பூபதிதான்!" என்றான்.

தொடரும் 

நன்றி : http://priyanthandotscrapbook.blogspot.fr







Comments