வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-கவிதை - கருணாகரன்.




முதற்காட்சி

1.

பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல்
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம்
பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை

2.

நாட்களை மூடி காலங்களை மூடி
மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது
நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம்.
போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர
வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை
“எங்கேயுன் பிள்ளை? கொண்டு வா போர்க்களத்துக்கு“
என்ற கட்டளை யுத்தத்தின் பரிசாக அளிக்கப்பட்டது ஒவ்வொரு வீட்டுக்கும்
“எங்கேயுன் தலை? கொடு இந்தக் கொலைக் களத்துக்கு“
என்ற சொல் அரச கட்டளையாக்கப்பட்டது

“கருணையிலான யுத்தம் இது“ என்றது அரசு
“மக்களைக் காக்கும் மனிதநேய நடவடிக்கை“ என்று அதை
அமைச்சரொருவர் மொழிபெயர்த்தார்.

“விடுதலைக்கான யுத்தம் என்றது இயக்கம்“
“சுதந்திரப் போராட்டம் இப்படித்தானிருக்கும்“ என்று விளக்கமளித்தனர் போராளிகள்.
“தலைகளைக் கொடுப்பதற்கும் விலைகளற்றுப்போவதற்கும்
உயிரும் மயிரும் ஒன்றா?“ எனக் கேட்டாள் ஒரு கிழவி
“சரியான கேள்விதான் அது“ என்றனர் கஞ்சிக்கு வரிசையாக நின்றோர்.

காடு கடந்து, வெளி கடந்து, முறிந்து சிதைந்த தென்னந்தோப்புகள் கடந்து,
களப்புகள் கடந்து, அழிந்த கொண்டிருந்த ஊர்களைக் கடந்து,
நந்திக் கடலுக்கும் இந்து சமூத்திரத்திற்குமிடையில்
ஒரு மெல்லிய கோடாக ஒடுங்கி நீண்டிருந்த
கடற்கரையில் ஒதுங்கினோம்.
அங்கே காயங்களைப் பெருக்கும் நாட்களுக்கிடையில்

“ஒரு துளி விசத்திலும்
அமுதத்தைக் கடைந்தெடுப்பேன்“ என்றார் மதகுரு
“அந்த அமுதத்தில் ஒரு மரம் துளிர்த்து
நிழலும் கனியும் தரும்“ என்றான் ஒரு போ ரபிமானி.
சிதறிய பிணங்கள் சிரித்தன அச் சொல் கேட்டு.

3.

சாவாடை நிரம்பிய தேவாலயத்தில்
பிணங்களுக்குச் சாட்சியமளித்துக் கொண்டிருந்தனர் குருவானவர்கள்.
அத்தனை குருவானவருக்கும் சேவகம் செய்து கொண்டிருந்தாள்
ஒரேயொரு முதிய கன்னியாஸ்திரி.
தேவாலய வளாகத்தில் ஒரு புறாவும் இல்லை
சனங்கள் ஆண்டவரிடம், குருவானவரிடம், கன்னியாஸ்திரியிடம் மன்றாடினர்
வளாகத்தில் நிறைந்திருந்த எண்ணூற்றிச் சொச்சம் பிள்ளைகளையும் காத்தருளும்படி
மூன்றாவது முறையும் மறுதலித்தனர் குருக்கள்.
அபாயம் எல்லாத்தலைகளையும் சூழ்ந்திருந்தது எக்கணத்திலும்
மலையைச் சுற்றிய பாம்பு கடலையும் குடிக்கத் துடித்தது.

4.

யாரை விசுவாசிப்பது என்று தெரியாத சனங்கள்
பதுங்கு குழிகளுக்குள் உறைந்திருந்தனர்
எதை ஏற்றுக்கொள்வது என்று தெரியாதோர்
சாவின் பின்னால் சென்றனர்.
பிணவாடையும் மலவாடையும் கன்னத்திலறைந்தன
எல்லோரிடமும் இருந்த எண்ணூறாயிரத்து நானூற்று முப்பத்திநாலு கேள்விகளுக்கும்
ஒருவரிடமும் இல்லை ஒரு பதிலும்.

ஆற்றலுள்ளோரை அழைத்துச் சென்றன பாதைகள்
அவர்களுக்கே கடல் வழிதிறந்தது.
அவர்களுக்கே காடுகள் வழிகாட்டின
அவர்களுக்கே நட்சத்திரங்கள் துணை நின்றன
மற்றவரெல்லாம் பதுங்கு குழியை நெருங்கி வந்த
சாவின் நிழலில் ஆழந்துறங்கினர் உக்கி.
பொறிக்கிடங்காகிய பாதுகாப்பு வலயத்தில் மரண முத்திரை சிரித்தது.
குருட்டு உலகத்தின் இதயக் கதவுகளை
இந்த மாதிரியான போது இறுகச் சாத்தித்தான் வைத்திருக்கிறாள்
கொடிய சூனியக்காரி

புள்ளிவிவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தனர் ஐ.நாவின் அதிகாரிகள்
அறிக்கைகளைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தார் சமாதானத் தூதுவர்
வரலாற்றுக் குறிப்புகளைப் பின்னாளில் எழுதவேண்டும் எனத்
தகவல்களைத் திரட்டினார் ஆய்வாளர்
“ஒவ்வொரு சாவும் செய்திகளே“ என்று சொல்லி எழுதித்தள்ளினர் பத்திரிகையாளர்
ஒவ்வொரு சாவுக்கும் விளக்கமளித்தனர் போர்ப்பிரபுக்கள்.
மரணப்பாம்பு விழுங்கிக் கொண்டிருந்தது அகதிச் சனங்களை.

5.

பிணவாடை எழுந்து மலவாடையை மூடிற்று
மலவாடை எழுந்து பிணவாடையை மூடிற்று
அந்தக் கடலோரத்தில் கடல் வாசம் வீசவில்லை
மீன் வாசமும் வீசவில்லை.
புதைகுழிகள் எழுந்த சனங்களையும் இருந்த சனங்களையும் மூடின.
சந்தையில்லைக் கடைகளில்லைக் கோயிலில்லை
பள்ளியில்லைப் பாடங்களுமில்லை பாட்டும் கூத்துமில்லை
தெருவில்லை கூடிக்களிக்க ஆட்களில்லை
புணர்ச்சியில்லைக் காதலில்லை உப்பும் புளியுமில்லை….
எழுந்து வந்த சூரியனின் உடலெங்கும் இரத்தம்
துக்கந்தாழாச் சூரியன் வீழ்ந்த இடமும் இரத்தம்
கண்ணீர் பெருகி வீழ்ந்த கடலும் இரத்தம்.

6.

காலையில் பிணங்கள்
மாலையில் பிணங்கள்
இரவில் பிணங்கள்
காலையில் இரத்தம்
மாலையில் இரத்தம்
இரவில் இரத்தம்

சிதறிய பிணங்களைக் கூட்டியள்ளிக் குழியிற் புதைக்க
பிணங்களாலும் புதைகுழிகளாலும் நிறைந்தது “மாத்தளன்“ மணற்பரப்பு
அத்தனைக்கும் சாட்சியாகினர் குருவானவரும் விசுவாசிகளும்.

7.

“உன்னுடைய வெள்ளாடையைக் களைந்து விடு“ என்று
தலைமைக்குருவானவரைப் பார்த்துக் கேட்டாள் ஒரு தாய்
அக்கணத்திலே தேவாலய வளவினுள்
அரசியல் விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன
வெண்ணிற ஆடையோடு கரியதொரு நிழல் வந்து முத்தமிடுவதாக
முந்திய இரவு கண்ட கனவைச் சொன்ன இளைய பாதிரியார்
“போரின் தோல்வி நெருங்குகிறதே?!“ என்று கலங்கினார்.
“நீ போர் வீரனா களத்தில் கொல்லப்படுவதற்கு?“ என்று கேட்டார்
இன்னொரு பாதிரி கேலியோடு.
“சத்தமிடாதே, போர் நம்மை நெருங்குகிறது“ என்றார் இன்னொரு முதிய பாதிரி.
“இல்லை, போரை நாமே நெருங்கினோம்“ என்றார் இளைய பாதிரியார்.
அந்த வாளாகத்தைச் சுற்றி கலங்கிய விழிகளோடு பல்லாயிரம் சனங்கள்
செபமாலை மாதாவின் கால்களிலே கண்ணீர் விட்டனர்
ஒரு கோப்பை கஞ்சிக்காகவும்
இன்னும் பொத்திக் காத்திட முடியாப் பிள்ளைகளுக்காகவும்
போக்கிடமின்றிய விதியைக் கரைத்து வழியேற்றுமாறும் மன்றாடினர் மரியாளிடம்.

பால்மாவும் அரிசியும் கோதுமையும் பொதியிடப்பட்ட மீனும் நிரம்பிய பதுங்கு குழிகளில்
குருவானவர்கள் இருளோடு இருளாகப் பதுங்கியிருந்தனர்.
அவர்களில் யாரும் புசைக்குச் செல்லவில்லை
யாரும் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்யவுமில்லை
பதிலாக யுத்தத்தின் விண்ணானங்களைப் பற்றிப் பேசிக் களித்தனர் பொழுதெல்லாம்
அன்பும் கருணையும் அமைதியும் சமாதானமும் செத்துக் கிடந்தன கால்களிடையே.

8.

மரண தண்டனை பற்றிய எச்சரிக்கை
முள்வேலிகளை நிறுத்தியது கடலோடிகளின் முன்னால்.
ஒரு படகும் தப்பிச் செல்ல முடியாதென்று
கரை நீளம் கொத்தித் துளையிடப்பட்டிருந்தன.
விரிந்த கடலும் வானிலே எழுந்த நட்சத்திரமும்
அழைத்த போதும் யாரும் செல்லத் துணியவில்லை
அந்தச் சாவரங்கிலிருந்து.
திசைகளற்ற கடலோடிகள் மணலிற் புதைந்தனர்
தப்பிச் சென்றோரும் கடலிற் புதைந்தனர்.

9.

ஒரு மருத்துவன் புண்ணுக்கு மருந்திட்டான்
இன்னொரு மருத்துவன் புண்ணைத் தோண்டினான்
காயங்களின் பெருவெளியில் ஊனமும் ஈனமும் பெருகிச் சென்றது
நாய்களுமில்லை எதையும் சுத்தப்படுத்துவதற்கு…
பள்ளிக்கூடங்களை மருத்துவமனையாக்கி
மருத்துவ மனைகளைக் கொலைக்கூடங்களாக்கி,
மணல்வெளியைப் புதைகுழிகளாக்கி
வீடுகளை அகதி நிலமாக்கி,
கடற்கரையைக் மலக்காடாக்கி
கண்ணீரை ஏந்தி நின்ற சனங்களை ஏளனம் செய்தனர் யுத்தப் பிரபுக்கள்.

10.

“புசையுமில்லைத் தேவாரமும் இல்லை
புப்பறிக்க வொரு மரமும் இல்லை
தின்பதற்கு காய்கறியும் இல்லை
சீழ்ப்பிடித்த வாழ்விலே பழமொன்றைக் கண்டு பல நாளானதே
கோயிலுமில்லை தெய்வமுமில்லை
கொண்டாட்டமுமில்லை விருந்துமில்லை
குந்தியிருப்பதற்கொரு பொழுதுமில்லை
பேயளைந்த வாழ்விலே உயிரொன்றைக் காக்க விதியில்லையே!“
என்ற புலம்பல் கேட்டது அருகிருந்த அகதிக் கூடாரத்தினுள்ளே…

11.

இரவே நிறத்தை மாற்று பகலே வழியை மாற்று
காற்றே குணத்தை மாற்று கடலே நிறத்தை மாற்று
நிலமே எம்மையெல்லாம் உள்ளிழுத்துக் காப்பாற்று.
போர் வெறியோடும் வெற்றிக் கனவோடும் மோதும் படைகளுக்குத் தேவை
சனங்களின் தலைகள்.
சனங்களின் தலைகளுக்காகவே போரும் வெற்றியும்
ஒருவன் இறந்த தலைகளை எண்ணுகிறான்
இன்னொருவன் உயிரோடு வந்த தலைகளை எண்ணுகிறான்
புள்ளிவிவரங்களால் தங்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.
புள்ளிவிவரங்களே வெற்றிக்கான முதலீடு?!
சனங்களின் புள்ளிவிவரங்கள் இரத்தத்தில் உறைகின்றன
வரலாற்றில் படிகிறது இரத்தக் கறை.

12.

எவ்வளவுதான் வாழ்ந்தபோதும் தெரியவில்லை
போர்ப்பிராந்தியத்தில்
ஒரு பகலை எப்படி வெல்வதென்று
ஒரு இரவை எப்படிக் கடப்பதென்று
ஒரு காலையை எப்படி எதிர்கொள்வதென்று

மாலையில் பீரங்கிகள் முழங்கின
காலையில் பீரங்கிகள் முழங்கின
இரவில் பீரங்கிகள் முழங்கின
இதற்கிடையில் எப்படி வாழ்வதென்று தெரியவில்லை ஒருவருக்கும்
நெருப்புக்கு அடியில் கிடந்தனர் எல்லோரும்.
தீயெழுந்து ஆடியது பெருநடனத்தை.
கையிலே தூக்கிய பிள்ளையிலிருந்து இரத்தம் ஒழுகியது
அவளுட்டிய பால் அப்படிச் சிந்தியது.
சாவுக்கு உயிரைப் பரிசளிக்கும் ஒரு நிகழ்ச்சியில்
தவறாமல் எல்லோரும் பங்கெடுத்தோம்.
மனைவியின் தாலியைப் பிள்ளைக்கு அணிவித்தான் ஒரு தந்தை
பிள்ளையைக் காப்பதற்கும் போர்க்களத்தில் இருந்து அவளை மீட்பதற்குமாக.
ஒரு தாயாக, தந்தைக்கே மனைவியாகத் தோன்றினாள் மகள்.
யாருடையவோ பிள்ளையை ஏந்தித் தானே தாயென்றாள் ஒரு கன்னி
வழியில் வந்த முகமறியா ஒருவனோடு சேர்ந்திருந்தாள் ஒருத்தி
சாவரங்காகிய போர்க்களத்தில்
ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்கள் உதிர்ந்து கொண்டேயிருந்தன.
தனித்திருந்த இளையோரெல்லாம் போருக்கே என்று நாட்டின் விதியுரைத்தபோது
இப்படி நாடகங்கள் ஆயிரம் உருவாகின.
உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது.

13.

சடங்குகளும் இறுதி மரியாதையுமில்லாத
பிணப் புதையலைச் செய்து களைத்தேன்
காட்டில் சேர்த்து வைக்கப்பட்டிருந்த சாவுடல்களில்
தெரிந்த முகங்களைத் தேடி அலுத்தேன்
“இனி எங்கே செல்ல?“ என்று கேட்டவருக்குப்
பதில் சொல்ல முடியாமற் தவித்த வீரரைப் பார்த்துச் சிரித்தேன்.
“நடந்து வந்த பாதை
நமது காலடியிலேயே முடிந்து போயிற்றுப் போ“
என்று சொன்னவரைக் கண்டு அழுதேன்.

14.

“அந்தக் காலம் ஒரு புண்ணாயிற்று
அதை மருந்திட்டுக் காப்பதற்கு யாருளர்?“ என்று தேடினர் ஞானிகள்
“சிரிப்பென்றால் என்ன அம்மா?“ என்றது குழந்தை
அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது அப்படியொன்று இருந்ததென்று
ஆனால், அவள் சிரிக்க மறந்திருந்தாள்
எவ்வளவோ முயன்றபோதும் அவளிடம் ஒரு சிறு மலரும் முகிழ்க்கவில்லை.

15.

மழையடித்தது வெயில் எறித்தது
மழையடித்ததா? வெயில் எறித்ததா?
அகதிப் பிராந்தியத்தில்
ஓயாது வீசிக்கொண்டிருந்த புயலில் சிக்கிய தோணியை
மீட்பதற்கென்று தூர தேசத்திலிருந்து
நல்லாயன் வருவார் என்று சொன்னார்கள்.
சொன்னவரைக் காணவில்லை என்றபோது சொன்னார்கள்,
“சிங்கத்தின் குகையில் புலி உறங்கப் போயிருக்கு“ என்று.

16.

தென்னாசியாவின் மிகப் பெரும் சேரி
தென்னாசியாவின் மிகப்பெரிய சிறைக் கூடம்
தென்னாசியாவின் மிகப்பெரிய கொலைக்களம்
நானிருக்கும் இந்த மலக்கரை என்று
மணலில் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி
வெட்ட வெளியிற் சனங்கள் நின்றனர்
பதுங்குகுழியில் தலைவர்கள் இருந்தனர்
பதுங்கு குழியில் மதகுருக்கள் இருந்தனர்
பதுங்குகுழியில் அதிகாரிகள் இருந்தனர்
பதுங்கு குழியில் தளபதிகள் இருந்தனர்.
பிணக்காட்டிடையும் மலக்காட்டிடையும்
முள்ளேறிக் கிடந்து உழலும் மனிதரைக் காப்பதற்கு
ஒரு மீட்பரும் வரவில்லை.

இரண்டாம் காட்சி

“உன்னுடைய தலையை நெருப்புக்குள் ஏன் வைத்தாய்?“ என்று கேட்டான் படையதிகாரி
அவனே ஒரு தீச்சட்டியை வைத்திருந்தான்.
நாங்கள் ஒரு சேரியிலிருந்து இன்னொரு சேரிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்தோம்
தென்னாசியாவின் மிகப் பெரிய சேரி
தென்னாசியாவின் மிகப்பெரிய சிறைக் கூடம்
தென்னாசியாவின் மிகப்பெரிய வதை கூடம்
நானிருக்கும் இந்த மலக்குழியருகு என்று
மணலில் எழுதிக் கொண்டிருந்தாள் ஒரு சிறுமி
மிஞ்சியவரின் கைகளிலெல்லாம் துயரப்பொதியே யிருந்தது.

௦௦௦௦௦௦

கவிஞர் கருணாகரனின் ” ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள் ” தொகுதியிலிருந்து இக்கவிதை பதிவேற்றப்பட்டுள்ளது.

நன்றி: http://eathuvarai.net/?p=2651

Comments