ஊடகங்களின் நாயகர்கள் யார்?-கட்டுரை.


ஊடகங்களின் நாயகர்கள் யார்?


புலம் பெயர் நாடுகளில் இருக்கும் ஊடகங்கள், அமைப்புகள் பற்றி எனக்கு ஓர் தெளிவான பார்வை உள்ளது. அதை எனக்கு ஏற்படுத்தியது ,ஏறத்தாழப் பத்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ( 2005 அல்லது 06) நண்பர் சாத்திரியின் "ஐரோப்பிய அவலங்கள்" தொடர் நாடகமே. அந்த நாடகம் ,பலரின் பித்தலாட்டங்களை சாடி நின்றது. ஐரோப்பிய அவலங்கள் தொடர்நாடகம் ஏறத்தாள 13 அங்கங்களைக் கொண்டு அன்றைய காலகட்டத்தில் யாழ் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதில் சாத்திரியின் இன்னொரு முகம் வெளிப்பட்டது. அதாவது தான் ஓர் சிறந்த நாடகாசிரியர் என்பதனை அது வாசகர்களுக்கு காட்டியது. அதற்கு அப்பொழுது அவர் ஓர் ஊடகவியலாளராக கொடுத்த விலைகள் அதிகம். அன்று "ஐரோப்பிய அவலங்கள்" எதிர்வு கூறிய விடயங்கள், இன்று எமது கண்முன்னே விரிகின்றன. காலத்தின் கோலத்தால் ஐரோப்பிய அவலங்கள் தொடர் நாடகத்தின் சேர்வர் இன்று யாருடமே இல்லை. அந்த சேவர்கள் சிலரால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதா?? என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அந்தவகையில் புலம்பெயர் ஊடகங்களின் சித்துவிளையாட்டுக்கள் பற்றி இன்று வாசிக்க கிடைத்தது. இது சிலருக்கு கசக்கலாம் ஆனால் புலம் பெயர் நாடுகளில் அதிக காலம் இருந்தவர்களுக்கு இதன் உண்மை நிலைகள் கட்டாயம் தெரிந்திருக்கும். வாசகர்களுக்காக நான் யாழ் இணையத்தில் வாசித்த பகுதி இது . நான் இப்பொழுது யாழ் இணையத்தில் எழுதாவிட்டாலும், இப்பொழுதும் அதன் வாசகன் தான். இதை வெளியிட்ட யாழ் இணையத்திற்கும் மிக்க நன்றி.

நேசமுடன் கோமகன்

0000000000000000000000000000000000

இவ் ஈட்டி குறிப்பிட்ட சில நபர்களின் பெயர்களை சுட்டிக் காட்டி வருகின்றது. இப்பத்தியாளர் தனிப்பட்ட ரீதியில் யாரையும் தாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவராயினும் அவரது உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தும் போது இவ்வாறு பெயர்கள் சுட்டிக்காட்டப்படுவது தவிர்க்க வியலாதது என்பதனை எழுநா ஏற்றுக் கொள்கின்றது. எனினும் இவ் ஈட்டி தொடர்பில் உங்கள் மறுப்புக்கள், மாற்றுக் கருத்துக்கள் ஏதுமிருப்பின் எழுதுங்கள்.

தற்போது ஐரோப்பாவிலும் சரி இலங்கையில் அதாவது கொழும்புத் தமிழ் ஊடகங்களிலும் சரி நாயகர்களாக விளங்குபவர்கள் ஊடகங்களின் அறிவிப்பாளர்களே. தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் எமக்குள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அளவுக்கு அறிவிப்பாளர்கள் எம்மவர் மனங்களின் கனவு நாயகனாக , கனவு நாயகியாக மாறியுள்ளார்கள். ஒரு வகையில் மகிழ்ச்சிக்குரிய விடயமே. எனினும் இந்த நாயகர்களினதும் , நாயகிகளினதும் திறமையால் இந்தநிலையை அடைந்திருந்தால் பாராட்டலாம் , வரவேற்கலாம். ஆனால் இவர்கள் எப்படி இந்தளவுக்கு வளர்ந்தார்கள் என்று பார்த்தால், அனேகமாக பந்தம்தான் இத்தனை உயர்ச்சிக்குக் காரணமாகிறது. அல்லது ஐரோப்பா வந்தவுடன் பெரிய புழுகு மூட்டையை அவிழ்த்து விடுவார்கள். அது யாதெனில் "நான் றேடியோ சிலோனில் வேலை செய்தேன் , சக்தி ரீவியில் வேலைசெய்தேன் , அல்லது சக்தி றேடியோவில் வேலை செய்தேன், அல்லது போனால் சூரியனில் வேலை செய்தேன் என்று மூட்டையை அவிழ்க்க எங்களது ஊடகங்களும் ஓடிப்போய் புழுகு கூட்டத்தின் காலே கதியென்று விழுந்து விடுவார்கள். பின்னர் வானலைகளில் வந்து தங்கள் புகழ்பாடநேயர்களெல்லாம் அப்படியே கரைந்து விடுவார்கள்.

இப்படித்தான் தேசிய வானொலி ஐபீசி ஆரம்பமான பொழுது எஸ்.கே.ராஜன் என்ற அறிவிப்பாளர் ஒருவர் வந்து புழுகியிருக்கிறார் தான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியதாக. ஆனால் ராஜன் கூறிய காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஒருவரும் அங்கு பணி புரிந்துள்ளார். ஆனால் அவரும் ராஜனைக் காட்டிக் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு பிரச்சனை வந்தபோது உண்மையாகவே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரிந்து ஐபீசியில் பணிபுரிந்தவரால் ராஜனின் பொய் வெளிவந்தது. ஆனால் அது அப்படியே மூடி மறைக்கப் பட்டு விட்டது. எஸ்.கே.ராஜன் என்கின்ற அறிவிப்பாளர் யாழ் மணிக்குரல் சேவையில் கடமையாற்றியவர் என்பது பலருக்குத் தெரிந்த விடயம். எஸ்.கே.ராஜனுக்கு நேயர்களுடன் கதைக்கத் தெரியாது , நிகழ்ச்சியை நேயர்களுக்கு ஏற்ப வழங்கத் தெரியாது என்பது பலரது கருத்து. அது ராஜனுக்குத் தெரியுமோ தெரியாது. அவரது நிகழ்ச்சிகளைக் கேட்போருக்கு அது புரியும். தனக்குப் பிடித்த நேயர்களென்றால் ராஜன் அவர்களைத் தூக்கிப் பிடிப்பார். தனக்குப் பிடிக்காத அல்லது , தனது நிகழ்ச்சிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக் காட்டிய ஒருவர் அவரது நிகழ்ச்சியில் வந்தாலோ அவர்களை மதிக்க மாட்டார். ஒரு இரவு ஐபீசியில் நீங்களும் பாடலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நீங்களும் பாடலாம் நிகழ்ச்சி JAFFNA ஸ்ரோர் ஆதரவில் நடந்து கொண்டிருந்தது. நீங்களும் பாடலாம் என்பதன் பொருள் நீயும் பாடலாம் , நானும் பாடலாம் , யாரும் பாலடாம் என்றே யாவரும் கருதுவர். ஆனால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலர் ராஜன் எதிர் பார்த்த சுருதிச் சுத்தமோ , குரல் இனிமையோ கொண்டிருக்கவில்லை. அப்படியான சிலரை உடனடியாக ராஜன் நிறுத்தி பாடுபவர்கள் மட்டும் வாருங்கள் நான் பாடுபவர்களை மட்டும்தான் அழைக்கிறேன் என்றார். இந்த வார்த்தைகள் அந்த நேயர்களை எந்தளவுக்கு மனவேதனைப் படுத்தியிருக்கும் என்பதை ராஜன் நினைத்துப் பார்க்கவில்லை.

ஆனால் இதில் வேதனை என்னவென்றால் அந்த நிழக்ச்சியில் பாட வந்து ராஜனிடம் அடி விழும் வார்த்தைகளை வாங்கிய நேயர்கள் வேலை தவிர்ந்து மற்ற நேரமெல்லாம் இந்த ஊடகங்களே தங்களது உலகம் என வாழும் அறியாமை மனிதர்கள். பாவம் அவர்கள். அதுவும் இந்தநாடுகளில் வேலைவேலையென ஓடிவிட்டு கிடைக்கும் நேரத்தை இனிமையாக்க நினைப்போருக்கு இந்த ஊடக நாயகர்கள் கொடுக்கும் இனிமை இதுதான். சிலவேளை இக்கட்டுரையை ராஜன் வாசிக்க நேர்ந்தால் யாரிவர் என்னை இப்படி எழுதியது எனக் கொதிப்பார். தயவு செய்து ராஜன் இதனை வாசிக்க நேர்ந்தால் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். இன்னுமொரு சம்பவம் ஒரு விளம்பரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து சினிமாப்பாடல் சிடிக்களையும் இங்கு பெற்றுக் கொள்ளலாம் வரிசையில் அரிசி , பருப்பு என எல்லாம் சொல்லப் பட்டது ஆனால் அந்த விளம்பரத்துக்காகப் போடப் பட்ட பாடல் விடுதலைப்பாடல். விடுதலைப் பாடலுக்குத் தொடர்பேயில்லாத ஒரு விளம்பரத்துக்கு ஏன் விடுதலைப் பாடல் போட்டீர்கள் அதற்குப் பொருத்தமான வேறுபாடலைப் போட்டிருக்கலாம் என நேயர் ஒருவரால் சொல்லப்பட்ட போது அந்த நேயரை ராஜன் அவமானப்படுத்திப் பேசியது மட்டுமல்ல , உங்களுக் கெல்லாம் கனக்கத் தெரியுமா ? நாங்கள் எத்தனை இடங்களைத் தாண்டி வந்தனாங்களெண்டு தெரியுமா ? என்றெல்லாம் தனது அருமை பெருமைகளை யெல்லாம் சொல்லி அந்த நேயரை வானொலியின் பக்கமே போகாது செய்தவர். விமர்சனங்கள்தான் இலக்கியவாதியை , கலைஞனை வளர்ப்பது. ஆனால் விமர்சனங்கள் தங்களது தகுதிக்கு தேவையில்லை யென்று தான்தோன்றித் தனமாக எழுந்துள்ள இப்படியான கலைஞர்களிடம் இருப்பது திறமையா ? தலைக்கனமா ? துள்ளிற மாடு பொதிசுமக்கும் எனும் பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

அதே ஊடகத்திலிருந்து இன்னொருவர் கலா புவனேந்திரன். இவரை ஆரம்பத்தில் ஐபீசியில் அனேகமான அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிக்குப் பொருத்தமில்லையென்று தள்ளி வைத்திருக்க எப்படியோ நிகழ்ச்சியொன்றில் கால்வைத்தார். அதன் பின்னர் செய்தி வாசிப்புக்கும் வந்து. தற்போது பலநிகழ்ச்சிகளின் நாயகியாகயும் அனேகமாக செய்தியும் அவரிடமே. செய்தி வாசிப்பதற்கு சிலரால்தான் முடியும். சுத்தமாக சொல்லை உச்சரித்து , நிகழ்ச்சிக்கு பாவங்கள் காட்டுவது போலன்றி , உணர்வுக் கொட்டலாகவோ இன்றி இருக்க வேண்டும். நேயர்களுக்கு செய்தி சென்றடைய வேண்டுமேயன்றி செய்தி வாசிப்பாளரிடம் நேயர் லயித்து விடக் கூடாது. ஆனால் கலாபுவனேந்திரனின் செய்தி வாசிப்பு தாயகம் வரையும் போகிறது. உச்சரிப்புகள் அதிகம் விழுங்கப் பட்டு , சொற்பிழைகள் , உணர்ச்சி பாவ வெளிப்பாடுகளே செய்தியில் வருகிறது. அனைத்துலக ஒலிபரப்பு என்பதை கலாவின் உச்சரிப்பில் அணைத்துளக ஒளிபரப்பு என்றுதான் வருகிறது. கலாவிடம் திறமை இருக்கிறது. நாடகத்துக்கு ஏற்ற திறமையிருக்கிறது. ஆனால் செய்திக்கோ நல்லதொரு நிகழ்ச்சிக்கோவுரிய எந்தத் திறமையும் இல்லை.

அக்கினி என்றதொரு பெண்ணிய நிகழ்ச்சியை நடாத்துகிறார். அக்கினி என்பதை அக்ணி என்றுதான் வருடக் கணக்காக உச்சரித்து வருகிறார். இந்தப் பெண்ணியத்தில் கலாவுக்கு உரிய விழிப்பு எத்தனையளவு தெளிவென்று பார்த்தால் பூச்சியமே விடையாகிறது. இப்படித்தான் ஒருதரம் நிகழ்ச்சியில் புலவர் சிவநாதன் என்பவரிடம் கலா பெண்ணியம் தொடர்பாக செவ்வியொன்று எடுத்துப் போட்டது. ஆனால் அந்தப்புலமைவாதி பச்சையாக பெண்ணியவாதிகளையே தனது திறமை மூலம் கொச்சையாயும் , பச்சையாயும் சொல்ல அதைக் கலா அப்படியே வானலையில் போட்டுவிட பலரிடமிருந்து சர்ச்சை கிழம்பி கலாவைப் பலர் கேள்வி கேட்க கலா அவர்களுக்குச் சொன்ன பதில் புலவரெண்டு ஏதோ நல்லது சொல்லுதெண்டு போட்டுட்டன் அந்தாள் பச்சையாப் பேசியிருக்கெண்டு எனக்கு விளங்கேல்லை என்று சொன்னது. ஒரு நிகழ்ச்சியைச் செய்ய வரும்போது அந்த நிகழ்ச்சியில் வருகின்ற குறை நிறைகள் , தரம் எல்லாவற்றையும் தானே புரிந்து வைத்து அதற்கேற்பவே தனது நிகழ்ச்சியைத் தரவேண்டும். அதுதான் அந்த நிகழ்ச்சியையும் , அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளரையும் முன்னேற்றும். தனக்கெடாச் சிங்களம் தன்பிடரிக்குச் சேதமாம்'' புரியுமா கலாவுக்கு ? இது காலாவுக்கு மட்டுமல்ல அனைத்து ஊடகங்களில் இருக்கும் அனைத்து அறிவிப்பாளருக்கும்தான்.

காலையில் தேடிவரும் தென்றலென்றதொரு நிகழ்ச்சி ஐபீசியில் வருகிறது. அதில் நேயர்களின் பெயரில் அறிவிப்பாளரின் தேர்வில் பாடல் கேட்பது. காலையில் தொலைபேசியெடுத்து நேயர்கள் தங்களது பெயர்களைச் சொல்ல பாடல் ஒலிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியை அனேகமாக ஒலிபரப்பும் பராபிரபா செய்யும் கு------த்தனம் ஒன்று அடிக்கடி பலரை ஆத்திரமடையவும் அதேசமயம் அனுதாபப் படவும் வைக்கிறது. யாரேனும் தெரிந்தவர்களின் அல்லது அவரது நண்பர்களின் நண்பர்களின் தொலைபேசியிலக்கத்தை எடுத்து காலையில் எழுப்பி வைத்து அறுப்பது. சிலர் இரவு வேலைக்குப் போய்விட்டு வந்து படுத்திருப்பார்கள் , சிலர் அப்போதுதான் வேலைக்குப் புறப்படுவோராக இருக்கும் தான் யாரென்பதைச் சொல்லாமல் ஏதோ வேண்டிய ஒருவர் போலக் கதைப்பர். தேவையில்லா அரட்டையாக , வம்பாக இருக்கும். சிலர் தமக்கு வேண்டியவர் என நினைத்து தனிப்படக்கதைக்க வேண்டிய விடயங்களைக் கூடக் கதைத்து விடுவார்கள். இறுதியில்தான் ஐபீசியில் இருந்து கதைக்கிறேன் பராபிரபா என்று சொன்னவுடன் தொலைபேசித் தொடர்பில் நிற்பவர் திகைத்துப் போவார். இது தேவையா ? இப்படி ஏன் கு-----த்தனம் செய்ய வேண்டும் ? தனது திறமையையை வெளிக் காட்டுவதாக நினைத்து தனது நல்ல திறன்களையே முட்டாள்த் தனமாக்குவதேன்?

அடுத்து சிலர் தாயகம் தாயகம் என்று வானலையில் வந்து நின்று முழங்குவார்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சி கேட்கநேர்ந்தது. அதுவும் ஐபீசியில்தான் நிகழ்ச்சியின் பெயர் நினைவில் இல்லை. கௌசி ரவிசங்கரும் , எஸ்.கே.ராஜனும் செய்தார்கள். புலம்பெயர்ந்த யாருக்குமே தாயகப்பற்றோ கடமையுணர்வோ இல்லையென்பது போலவும் புலம்பெயர்ந்தோர் எல்லாம் சுயநலவாதிகள் என்பது போலவும் இருவரும் கதைத்துக் கொண்டார்கள் வானலையில். தெரியாமல்தான் கேட்கிறோம் இந்தக் கௌசியும் , ராஜனும் நாட்டுக்காக தங்களது பணத்தில் அதாவது தங்களது உழைப்பில் எத்தனை சதத்தைக் கொடுத்திருக்கிறார்கள்? தாயகத்துக்குப் போய்வந்தவுடனும் இவர்கள்தான் தலைவரின் ஆணையின் பேரில் அனுப்பப் பட்டிருப்பது போன்றதொரு நினைவும் , தாங்களே தேசபக்தி மிகுந்தவர்கள் என்ற திமிரும் இவர்களுக்குள் ஏனோ வந்து விடுகிறது !?! ராஜனின் திமிர்க்குணம் அதாவது நேயர்களை தமக்குப் பிடித்தவர்களைத் தூக்கி வைத்து வணங்குவது கௌசி ரவிசங்கருக்கும் தொற்றியுள்ளது. இந்தத் தொற்று நோய் கௌசியிடம்இருக்கும் திறமையை அழித்து விடும்.

இன்னொருவர் சந்திரா ரவீந்திரன். இவரது சகோதரர்கள் இருவர் மாவீhர்கள். அதனையே சொல்லிச் சொல்லி தன்னையும் தனது குடும்பத்தையும் ஐபீசிக்குள் வெற்றிக்கொடி நாட்டியுள்ள அறிவிப்பாளர். இவர் ஒரு எழுத்தாளர். அந்தக் காரணத்தைக் காட்டியே இரவி அருணாசலத்தால் ஐபீசிக்குள் அறிமுகப் படுத்தப் பட்டவர். இவரிடம் திறமையிருக்கிறது. ஆனால் அதை நல்ல விதமாகப் பயன்படுத்தத் தெரியாது தத்தளிக்கிறார். இவரது நிகழ்ச்சி ஐபீசி நேயர்களுக்கு என்றுதான் சொல்லப் படுகிறது. ஆனால் இவர் செய்யும் அத்தனை நிகழ்ச்சிகளும் இவரது அக்கா சந்திரவதனா , அத்தான் செல்வகுமாரன் , அண்ணன் தீட்சண்யன் , சந்திரா ரவீந்திரனுக்காகவுமே நடாத்தப் படுகிறது. இவரது நிகழ்ச்சியில் மூனாவைத்தவிர ஒருவரும் நாடகம் எழுத முடியாது. ஏனென்றால் மற்றவர்கள் யாரிடமும் நாடகம் எழுதும் திறமையில்லை யென்பது இவரது கருத்து. தான் ஒரு எழுத்தாளர் தனக்குத்தான் இலக்கியமே சேவகம் செய்கிறது என்ற கோட்பாடு கொண்ட அறிவிப்பாளர். இவரை போற்றிப் பாடினால் தன்னுடன் சேர்ப்பார். அதாவது அவர்களது சுயவிளம்பரம் செய்ய முன் வருவோரை மட்டுமே நண்பர்க ளாக்குவார்கள். மற்றவர் எல்லோரும் தேசத்துரோகிகள். நாகரீகமாக கதைக்க எழுதத் தெரியாதவர்கள். இந்தச் சந்திரா ரவீந்திரன் தாயகத்துக்கே திரும்ப மாட்டேன் என்கிற லட்சியத்துடன் லண்டனே சொர்க்கம் என வாழுபவர். ஏசி இல்லாமல் காறில் ஏறமாட்டாதவர். இவர்கள்தான் தேசத்தை நேசிக்கும் அறிவிப்பாளர்கள். மாவீரர்கள் எங்கள் மண்ணின் சொத்து மாவீரர் குடும்பங்கள் போற்றப்பட வேண்டியவர்கள். மதிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அந்தத் தியாகங்களைச் சொல்லியே தங்களது பெயரை நிலை நாட்டுபவர்களை எப்படி மதிக்க முடியும் ? போற்ற முடியும் ? அந்தப் புனிதமானவர்களே இந்தப் புல்லுருவிகளை மன்னிக்க மாட்டார்கள்.

கே.வி.நந்தன். இவர்பாணி இன்னொருபாணி. இங்குள்ள எல்லா ஊடகத்துப் புத்திஜீவிகளை ஏப்பம் விட்ட சாதுரியன். பஞ்சாயத்து என்றதொரு நிகழ்ச்சி இவரது சீதனம். பஞ்சாயத்தில் விவாதத்துக்கு எடுக்கப்படும் தலைப்புகள் நந்தனின் தலையில் என்ன இருக்கிறது என்பதைச் சிந்திக்க வைக்கும். அத்தனை பிற்போக்குத்தனமான விவாதங்களும் , கருத்துக்களும். இன்று புலம்பெயர் நாடுகளில் பெண்கள் ஓரளவு தம்மைப்பற்றிச் சிந்திப்பவர்களாக , பெண்ணியச் சிந்தனையுள்ளவர்களா , உலகைப் பார்ப்பவர்களாக வளர்ந்துள்ளார்கள். ஆனால் நந்தனின் விவாதத் தலைப்புகள் அத்தனையும் கே.பாக்கியராஜ் அவர்களின் பிற்போக்குத்தனம் மிகுந்துள்ளது. தேவையா பஞ்சாயத்து ? இங்குள்ள எத்தனையோ பிரச்சனைகளுக்கு யதார்த்தமான தீர்வுகள் தேவைப்படும் இக்காலத்தில் பஞ்சாயத்து என்று சொல்லி ஆண் பெண் மோதலை வளர்த்துவிடும் சாதுரியம் ஏனோ ?

நான்தான் நான்தானென்று அரட்டையரங்கு செய்து திரிந்த விசுவுக்கு அண்மையில் நடந்தது அறிவோம்தானே. நந்தனுக்கும் அதுதான் கதியோ தெரியாது. தனது திறமையை நல்ல விடயங்களுக்காகப் பயன்படுத்தினால் நந்தனுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. பந்தம் பிடித்து ஊடகத்தினுள் நுளையும் ஆட்களால் உண்மையான திறமையாளர்கள், நேர்மையாக ஊடகத்தின் பலத்தை உணர்ந்து , ஒரு ஊடகவியலாளனுக்குரிய கடமையைச் செய்ய வரும் நல்லவர்கள், ஊடக உள்வீட்டுச் சதியால் எப்படியும் வெளியேற்றப் பட்டு விடுவார்கள். அல்லது குறிப்பிட்ட நபர்மீது ஏதாவது குற்றத்தையாவது சுமத்தி வெளியேற்றி விடுவார்கள். தற்போது ஓரு ஊடகத்தில் நிலைப்பதானால் ஒன்றில் அந்த நிர்வாகம் சொல்லும் எல்லாவற்றுக்கும் ஆமாப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் , இல்லது நிர்வாக உரிமையாளருக்கு வேண்டியவராக , இல்லது நிர்வாகிக்கு பிரியமான அறிவிப்பாளருக்கு வால் பிடித்தால் மட்டுமே நிலைக்க முடியும்.

இப்படித்தான் ஊடக உள்வீட்டுச் சதிசெய்து ஐபீசியில் பல திறமையானவர்களை வெளியேற்றி வீணான பழிக்கும் பலரை உள்ளாக்கிய இரவி அருணாசலம் இன்று ஆடி , அடங்கி , ஒடுங்கிப் போயிருக்கிறார். எந்தச்சதி எப்படியிருப்பினும் காலம் இந்தத் துரோகத்தனங்களை தண்டித்தே தீரும்.தமிழ் அலையென்றொரு கூட்டம் குகநாதனின் தலைமையில் பெரும் எடுப்பில் மக்களின் பணத்தைத் தனது வானொலிக்காகவும் தொலைக் காட்சிக்காகவும் கொட்டுவித்துக் கூத்தாடுகிறது.

முன்பொரு காலம் குகநாதன்தான் ஐரோப்பியத் தமிழர்களின் தலைவர் பிரபாகரனாய் இருந்தவர். இவரது தமிழ் அலையில் ஏ.எஸ்.ராஜா என்றொரு நாயகன் அந்த நாயகனது மச்சான் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த கப்டன்.லோலோ. அந்தவீரனின் பெயரைச்சொல்லித் தனது பெயரை பிரபலமாக்கியவர். கே.எஸ்.ராஜா தானே என்றதொரு இறுமாப்பு இவருக்கு. விளம்பரம் ஒரு கடை விளம்பரமென்றால் தொடர்புத் தொலைபேசியிலக்கம் சொல்லுவார் உதாரணத்துக்கு ஆச்சிதுணையென்றால் கல்லோ ஆச்சிதுணை என்றே சொல்வார். விளம்பரத்தைக் கேட்போருக்கு ராஜாவின் அறியாமை தெளிவாகப்புலப்படும். ராஜாவுக்கென்று ஒரு மகளீர் கூட்டமே உண்டு. நண்பனொருவன் சொன்னான் எங்கடை பெண்களுக்கு ஏ.எஸ்.ராஜாவெண்டா ------------------------------ அந்த அளவுக்கு வளியும் ஒரு கூட்டம். ராஜாண்ணா என்றால் பலருக்கு உயிரே உருகும். தமிழ் அலைக்குள் ஒரு தர்சன். இவரது தம்பியார் போராளியாம். அவரது பெயர் தர்சனாம். அந்தப்பெயரைத் தனதாக்கி ஊடகத்துக்குள் வந்தவர். நல்ல குரல் வளம் உண்டு. விவாத நிகழ்ச்சிகளை நடாத்த தகுதியாக சாதுரியம் வெட்டிப்பேசும் திறம் எல்லாம் இருக்கிறது. தன்னைவிட்டால் யாருமே இல்லையென்ற தலைக்கனம் அதிகம். இதனால் பலநேயர்களை இழந்துள்ளார்.

குகநாதன் சனத்தை ஏமாற்றி பணத்தை வாங்கி ஊடகம் என்ற பெயரில் அழிக்கிறார். இதற்கு உடந்தையாக எங்களது சனமும் சிலதுகள் வட்டிக்கும் காசெடுத்துக் குடுத்து குநநாதண்ணாவே கோவில் என்று வாழ்கிறது. இப்போ ரீவியும் தொடங்கி தமிழன்ரை பணத்தை வெள்ளையனுக்குத் தாரை வார்க்கிறார். ரீபீசியென்றொரு கூட்டம் கொஞ்சக்காலம் எங்களையெல்லாம் ஆட்டிப்படைத்தது. 

மேற்சொன்னவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக வன்னியுடன் நேரடித்தொடர்பு , தலைவருடன் நேரடிப்பேச்சு , அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனுடன் தொடர்பு , புலிகளின் குரலுடன் நேரடித்தொடர்பு என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி பெரும் முழக்கமிட்டது. ராம்ராஜ் ஜெயக்குமார் தலைமையில். ரீபீசி என்றால் புலிகள் புலிகள் என்றால் ரீபீசி என்று இருந்ததும். பிரச்சாரம் செய்ததும் ஒருகாலம். பின்னர் ரீபீசிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கையொன்றின் மூலம் தெரியப்படுத்திய பின்னர். அடங்கிப்போன ரீபீசி. ஆடி , அடங்கி , ஒடுங்கி அஸ்ராவிற்குப் பலலட்சம் பவுண்ஸ்களை தாரைவார்த்ததும் மறக்க முடியாது. இப்போது ஈருயிர் ஓருடலாக இருந்த ராம்ராஜ் , ஜெயக்குமார் எப்படிப்பிரிந்தார்கள் யூபீசியாகவும் , ஈரீபீசியாகவும் ?புலிகளுக்குத்தான் ஆதரவாகவும் அதனை ராம்ராஜ் எதிர்த்ததால் பிரிந்துபோனதாகவும் ஜெயக்குமாரும் , ஜெயக்குமார் தமக்குத் துரோகம் செய்து விட்டதால்தான் தாம் பிரிந்து விட்டதாகவும் ராம்ராஜ்ஜ}ம் சொல்லிக்கொண்டு இரண்டு பிரிவாக இரண்டு ஊடகம் ஆரம்பமாகி யிருக்கிறது. ஆனால்ஒருவரை ஒருவர் ஏமாற்றுவதாக இருவரும் ஏமாளிகளாகி விட்டார்கள் என்பது நிதர்சனம்.

தமிழீழத்தை நேசிப்பதுபோலவும் , தமிழின விடுதலையை நேசிப்பதுபோலவும் சொல்லிக்கொண்டு தமிழர்களை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இவரது போலியைப் பலர் கிழித்தும் இன்னும் திமிர் தீராது ஆடுகிறார்.இவரது யூபீசியில் தற்போது புதியதொரு அறிவிப்பாளர் புகுந்துள்ளார். சிவாந்தி என்கின்ற அறிவிப்பாளர். சிவாந்தியை ஐபீசி வளர்த்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அந்து நன்றியையும் மறந்து இன்று ராம்ராஜ்ஜின் விசுவாசியாகியுள்ளார். ஐபீசியில் இருந்தபோது ஐபீசியின் தரத்தை அழித்துக் கொண்டிருப்பவர்கள் சிலரின் தன்மை போட்டி , பொறாமையாக இருக்க சிவாந்தியோ இன்னொரு வழியில் கையாண்டார். அது யாதெனில் நேயர்களை அணுகும் முறை. ஒரு ஊடகவியலாளருக்கான தன்மைகள் அத்தனையையும் தூக்கியெறிந்துவிட்டு அரட்டையாக , அதிகம் இரட்டையர்த்தம் தொனிக்கும் கதைகளுமாக ஒரு அருவருப்புத் தன்மையை உண்டுபண்ணத்தக்க விதமாக சிவாந்தியின் அறிவிப்புத்திறன் இருந்தது. அதைவிட தற்போது யூபிசியல் சிவாந்தியின் அறிவிப்பும் , அசிங்கம்மிகுந்த இரட்டை அர்த்தம் தொனிக்கும் பேச்சுகளும் கேட்போரை வெறுப்படையச் செய்யும் வகையில் அமைந்துள்ளது. 20.10.02 (ஞாயிறு) மாலை நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் இன்னுமொரு பெண்அறிவிப்பாளருடன் சேர்ந்து நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருந்தார். அனேகம் ஆண்நேயர்கள்தான் வந்தார்கள். கடிக்கேள்வியென்றும் ஒன்றைக் கேட்டார். கடிக்கேள்விக்கான பதில் சிவாந்தியை அடித்துத்துரத்து எனுமளவிற்கு இருந்தது. வந்து கதைத்த அத்தனை பேருடனும் சிவாந்தி கதைத்து அந்த வார்த்தைப் பிரயோகங்களும் , கதையும் உண்மையியேலே எங்களுக்கு ஊடகங்களே தேவையா எனுமளவிற்கு இருந்தது. அந்த அளவுக்கு கேவலாமாகவும் , கீழ்த்தரமாகவும் , சகிப்பின் எல்லையைக் கொன்று விட்டிருந்தது.

இது யூபிசியானாலும் சரி ஈரீபீசியானாலும் சரி ஒரேதரத்தில்தான் இருக்கிறது. இவ்விரண்டு ஊடகத்திலும் அறிவிப்பாளராகவிருக்கும் முக்கால்வாசிப்பேரும் ஊடகத்திற்கு உதவாத ஊடகவியலாளர்களாகவே இருக்கிறார்கள். நேயர்களைக் கவரவேண்டும் என்பதற்காக இப்படிக் கீழ்த்தரமான அறிவிப்பாளர்களாக இருக்க வேண்டுமா ?இன்று எமக்காக , எமது மக்களுக்காக இந்த ஊடகங்கள் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இங்கு அதிகரித்துள்ள தற்கொலைகள் , மனநோயாளர்கள் அதிகரிப்பு , மனமணமுறிவுகள் , வன்முறையாளர்கள் உருவாக்கம் , கோஸ்டி மோதல்கள் என எமது சமூகம் ஒரு ஆரோக்கியமற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த அவலநிலையை அகற்ற , இந்த நிலைதொடராது இருக்க ஊடகங்களே குரல் கொடுங்கள்!!! எமது இளைய சமூகத்தை எமது அடையாளங்களுடன் மீட்க உதவுங்கள். எங்களது தாயகம் , அதற்காக எங்களது தேசம் கொடுத்துள்ள விலைகளை உங்கள் கவனத்தில் எடுங்கள். தென்னிந்திய சினிமாவுக்காக வக்காளத்து வாங்குவதை நிறுத்துங்கள். எங்களுக்கான தமிழருக்கான ஊடகமாக மாறுங்கள். வியாபார ஊடகங்களாக , எங்களது தேசியவிடுதலைப் போராட்டத்தை விற்பவர்களாக யாருக்கோவெல்லாம் யால்ரா அடிப்பவர்களாக இருப்பதிலிருந்து வெளிவாருங்கள். எங்களுக்கான ஊடகங்களாகுங்கள்!! குறிப்பிட்ட சிலருக்காக , சிலரது புகழுக்காக ஊடகங்களைப் பயன் படுத்தாதீர்கள். ஊடகம் என்பது மாபெரும் சக்தி. அந்த சக்தியை எமக்காகப்பயன்படுத்துங்கள்.

தற்போது ஐரோப்பாவில் இயங்கும் ஊடகங்களில் ஐபீசி இந்த சக்தியைப் பெறக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கிறது. ஐபீசி வாயளவில் தேசியவானொலி என்று சொல்வதைவிட தேசியவானொலி என்பதனை உண்மையாக நிலைப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட சிலருக்கான ஊடகமாக இல்லாமல் உலகத் தமிழருக்கான ஊடகமாக வேண்டும். அதுவே எமது தேசத்துக்கான பெரும் கடமையைப் பலர் செய்வதற்கும் உதவும்.முகமன்களும் , வெறும்வாய்வீரமும் ஒருபோதும் ஊடகங்களை அதன் தனித்துவத்துடன் இயங்க விடாது. புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டும். புரியுமா ? புரியவேண்டும். எங்களில் ஒருபழக்கம் தவறுகளைக் காணுமிடத்தில் அமைதியாய் போவது அல்லது எமக்கெதற்கு வம்பு என ஒதுங்குவது அல்லது அக்கறையீனம். இப்படி ஒதுங்கிய பலரது அனுபவங்களின் வாக்கு மூலங்களே இன்றைய ஈட்டியாய் பாய்கிறது. பலரது குமுறல்களை ஈட்டியாக வடித்துள்ளேன். இது யார்மீதானதுமான போட்டியோ , பொறாமையோ அல்ல. ஊடகங்கள் திருந்த வேண்டும். ஊடகங்கள் ஊடகங்களா மாறவேண்டும் எனும் நல்நோக்கோடுதான் எழுநா ஊடாக வருகிறது

ஒரு விடுதலைப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்வதில் மக்கள் தொடர்பு சாதனங்கள் வகிக்கும் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 

- தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

ஊடகங்களின் நாயகர்கள் யார்? தாயகனின் பதில்

எழுநாவில் ஈட்டிப்பகுதியில் வெளியான ஊடகங்களின் நாயகர்கள் யார் என்ற கட்டுரை தொடர்பாக பல வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததை நீங்கள் அறிவீர்கள். இறுதியில் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் மெய், பொய் நிலையினை எழுநா அறிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழலில் அதனை வெளியிட்டது தவறு என்னும் கருத்தில் உள்ள நியாயத்தன்மையை ஏற்றுக்கொண்டு அக்கட்டுரையை எழுநா நீக்கியிருந்தது. இந்நிலையில் குறித்த அக்கட்டுரைக்கான மறுப்புக்களுக்கு, தனது பதிலினை அவ் ஊடகத்திற்கு எழுதுவதற்கான உரிமையினை கட்டுரையாளர் கொண்டுள்ளார் என்பதனாலும் அதனை வெளியிடுவதற்கான கடமையை அவ் ஊடகம் கொண்டுள்ளது என்பதனாலும் கட்டுரையாளரது பதில் இங்கே தரப்படுகின்றது. விடுதலை என்ற பொது நோக்கில் நாமெல்லோரும் இணைந்து நிற்போம்.

எழுநா நண்பர்களுக்கும் மற்றும் எனது கட்டுரைக்கான கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் வணக்கம்.நண்பர்களே ஊடகங்கள் பற்றிய கட்டுரையை எழுதியதன் நோக்கம் யாரையும் தூற்றவோ அல்லது துதிபாடவோ அல்லது யார்மீதான காழ்ப்புணர்விலோ எழுதவில்லை என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். இங்கு நடக்கின்ற சீர்கேடுகளைத்தான் திருத்தச் சொல்லி எழுதியுள்ளேன். அதுவும் ஏன் ஐபீசியை எழுதியுள்ளீர் எனக்கேட்டுள்ள நண்பர்களே கவனியுங்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும் எனும் நல்ல நோக்கிலேயே எழுதப்பட்டது. இந்தக்கட்டுரையை வெளிவந்த பின்னர் ஐபீசியைக்கவனித்துப் பாருங்கள். அக்ணி அக்கினி என்று சரியாக உச்சரிக்கப்படுகிறது. அணைத்துளகம் அனைத்துலகமாக உச்சரிக்கப்படுகிறது. ஐபீசியை கஸ்ரப்பட்டு வளர்த்துவிட்டவர் திரு.தாசீசியஸ் அவர்கள். அவருடன் இணைந்து சில அறிவிப்பாளர்களும் இரவு , பகல் , தங்கள் சொந்த வாழ்க்கையை , குடும்பம் , குழந்தை என்ற வட்டத்தையே விட்டு அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்கள் அவர்களின் அந்த உழைப்புத்தான் இன்று ஐபீசியை இந்தளவுக்கு வளர்த்துள்ளது. அப்படி வளர்க்கப்பட்ட ஊடகத்தை சிலரது சுயநலம் சீரழிக்கக்கூடாது என்றே விரும்புகிறோம்.தனித்து ஐபீசியை மட்டும் நான் சொல்லவில்லை. அனைத்து ஊடகங்களையுமே சொன்னேன். மற்ற 3 ஊடகங்களையும் போல் ஐபீசியும் இருக்கக்கூடாது. பத்தோடு பதினொன்றாக ஐபீசியும் இருக்கக்கூடாது. அது நல்ல , சிறந்த ஊடகமாக வரவேண்டும் என்பதே என் விருப்பமும் , எல்லாத் தமிழரின் விருப்பமும்.தனித்தனியாக சொல்லிக் களைத்துத்தான் தனித்தனிப்பெயராக சுட்டிக்காட்ட வேண்டிய வேதனைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இக்கட்டுரையை வாசித்த 17 சமூக அக்கறையுள்ளவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு சொன்னார்கள். நாங்களெல்லாம் சொல்லிக்களைத்து விட்டோம். அதனால் அமைதியாய் இருக்கிறோம். உமது எழுத்து இவர்களை மாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இல்லை என்றார்கள். ஐபீசி தமிழர்களின் தேசிய வானொலி அந்த வானொலி தனது தனித்தன்மையை இழக்கக்கூடாது. அது என்றும் வாழவேண்டும். உலகத்தமிழரின் குரலாக இயங்க வேண்டும்.

உண்மைகளைப புதைத்து போலிகளை வாழவைக்கும் காலத்தில்தானே நீங்களெல்லாம் இருக்கிறீர்கள் ஏற்றுக்கொள்கிறேன். ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறலாமென்ற தத்துவத்தை வாழ்வாக்கியிருக்கும் அன்பர்களே ! தேசம் தேசெமென்று சொல்லி தேசியத்தையே விற்கும் உங்கள் போன்ற போலிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் தேசத்தலைவரும் , அவருடன் இணைந்து போராடும் அந்த மறவர்களையும் உங்களது பக்கம் சேர்த்துப் பேசவராதீர்கள். உங்களுக்கு விசுவாசமாய் எங்கள் சமூகத்துக்கு விசுவாசமாய் பேசுங்கள். அதுதான் சமூகம்மீதான பிரியம். பணத்துக்கு எழுதுவதும் , பணத்துக்கு அறிவிப்பதும் , பணத்துக்கு விமர்சகர்களாவதும் ஒன்றும் பெரியவிடயமல்ல. இவையெல்லாம் சுயநலம்தான்.இறுதியாக எழுநா நண்பர்களுக்கு ! எனது கட்டுரை போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேர்ந்து விட்டது. பெரியதொரு சாக்கடையிலிருந்து உரியவர்களே ஓரளவு எழுந்துவர உதவியமைக்கு நன்றிகள். எழுநாவை சூழ்ந்திருக்கும் என்னினிய தோழர்களே..உங்கள் தொண்டு மிக நெடிது.வாழ்வீர்.புதிய தொரு வரலாறு உமக்காகும்.எழுநாவால் எழுச்சியுறும் உலகு. நாளையிங்கு அழுவோரிலை என்னுமோர் அழகுடையஉலகைச் செய்! உயர்.களக்கவிஞர் புதுவைஇரத்தினதுரையின் வாழ்த்தோடு பிறந்தது எழுநா. அது அந்தக்கவிஞனின் மொழிபோல் எழுச்சியுறும்.

நேசமுள்ள லண்டனிலிருந்து தாயகன்.
Comments